34 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
பள்ளிப்பருவத்தில், முதல் ராங்க் வாங்க வேண்டுமென்ற உத்வேகத்துடன் போட்டியிட்டும், சேட்டைகள் பல செய்தும், ஏட்டிக்குப் போட்டி சண்டியிட்டும் நம்முடன் படிக்கும் சக மாணவர்களைப் பற்றிய அபிப்பிராயம் நம் மனத்தில் காலத்திற்கும் நிலைத்து நிற்குமா, காலப்போக்கில் மாறுமா என்று நான் அடிக்கடி யோசித்தது உண்டு.
என் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில், அழகிய மிக மிக எதார்த்தமான கதை தந்த ஆத்தருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்ற கர்வத்துடன் சுற்றித் திரியும் நம் ஆல்-இன்-ஆல் அழகு ராஜா “கிருஷ்ணா”வின் வாழ்க்கையில் ஒரு எதிர்பாராத சறுக்கல் ஏற்பட்டு, அதில் அவன் அன்பே பிரதானம் என்று மனம் தெளிந்து “சாருமதி” பின் சுற்றி, அவள் காதலை வெல்கிறான் என்ற கதைக்கரு வழக்கமான ஒன்றாக இருந்தாலும், அதை நீங்கள் கையாண்ட விதம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது.
காரணம், ஜென்ம விரோதி என்னும் அளவிற்கு, சாருமதியின் உணர்வுகளை வார்த்தைகளால் வதைத்த கிருஷ்ணா மனம் தெளிந்ததும் சரி; அவள்மேல் காதல் மலர்ந்த தருணமும் சரி; அத்தகையது!!!
யாரும் அவனுக்கு அறிவுரைகள் சொல்லவில்லை; மங்கை அவள் புறத்தோற்றத்தில் அவன் மனம் விழவும் இல்லை; பரிதாபம் இல்லை; நன்றிக்கடன் இல்லை;
“Choice is yours!” என்று சொல்லுவார்களே, அதைப்போல, வாழ்க்கை தந்த அனுபவப் பாடத்தில் தன் குணங்களைச் சுய அலசல் செய்து, ஆராய்ந்து, தெளியும் அவன் மாற்றங்கள் அருமை.
ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி என்ற அகந்தையில் கிருஷ்ணா செய்த காரியங்கள் எல்லாம் எரிச்சலூட்டியதே தவிர, அவனை ஒருபோதும் கெட்டவனாக நினைக்கத் தோன்றவில்லை.
தனாவிடம் அவன் கொண்ட தூய நட்பு, அன்னையிடம் கொண்ட கண்மூடித்தனமான பாசம், தந்தையிடம் காட்டிய மரியாதை…இவை அனைத்திற்கும் மேலாக, தோட்டக்கார தாத்தாவிடம் அவன் கொண்ட அன்பு வாரே வாவ். அவரைப் பெயர் சொல்லி அழைத்தாலும், அவரை உளமார நேசித்து கொண்டாடிய இடங்களில் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான்.
வறுமையிலும் செல்வச் செழிப்பிலும், தன்னிலை மாறாது நிமிர்ந்து நின்ற சாருமதியின் கதாபாத்திரத்தைப் பாராட்ட வார்த்தையே இல்லை. தன்னடக்கமான பெண் என்றாலும், பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய விதத்தில் பேசும் அவள் தெளிவை என்ன நான் சொல்வது.
குறிப்பாக, மூன்றாம் மனிதர்களின் உதவியுடன்தான் மேற்கொண்டு படிக்க வேண்டுமென்ற நிலையிலும் கூட, சாருமதி சிந்தித்துச் செயல்பட்ட விதம் சூப்பர். அவள் முடிவைச் சரியான கோணத்தில் புரிந்துகொண்டு, மனமகிழ்ந்து ஏற்ற பண்ணையாரின் பெருந்தன்மை அதற்கும் ஒருபடி மேல்.
கிருஷ்ணாவின் காதலை மறுத்தபோதும் சரி, அவனைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோதும் சரி, காலப்போக்கில் அவனுடன் காதலாய் வாழத் தொடங்கியபோதும் சரி, தன் குணத்தில் நிலையாய் நின்ற சாருமதியின் பேச்சுகளும் செயல்களும் மெய்சிலிர்க்க வைத்தது.
எலியும் பூனையுமாய் இருந்தவர்களை மனமொத்த தம்பதிகளாக மாற்றிய கதையின் ஒவ்வொரு நகர்வும் மிகவும் எதார்த்தமாக இருந்தது ஆத்தரே.
நட்பிற்கு இலக்கணமாய் கிருஷ்ணா சாரு இருவரின் தோழமைகள் அனைவரின் கதாபாத்திரங்களும் அத்தனை அருமை.
தனா:
கடற்கரை காட்சியில், கிருஷ்ணாவின் காதலை பற்றி அறிந்தபோதும், தன்னுடைய காதல் விவகாரம் சாருமதிக்கும் தெரியும் என்று அறிந்தபோதும், தனா கொடுத்த ரியாக்ஷன்கள் சூப்பரோ சூப்பர்.
ஹேமா:
சாருமதியை எங்கும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காத வரமாக வந்த தோழி அவள் துள்ளல் பேச்சும், குறும்புகளும் அசத்தல். அதிரடி என்ட்ரி தந்து, நம்ம ஆல்-இன்-ஆல் அழகு ராஜா “கிருஷ்ணா”வையே கதிகலங்க வைத்த இடம் மிகவும் ரசித்துப் படித்தேன்.
அவள் அண்ணன் பிரவீன் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்தாலும், அவன் வெளிப்படையான பேச்சிலும், நிதானமான குணத்திலும் மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டான்.
(முடிந்தால் இந்த அண்ணன் தங்கை கூட்டணிக்குத் தனிக்கதை தாருங்கள் ஆத்தரே.)
தேன்மொழி:
மற்றுமொரு வரமாய் சாருமதி வாழ்வில் வந்தவள் என்று சொல்லலாம். திருமணம் கல்விக்குத் தடையில்லை என்று சொல்லும் விதமாக அவள் கதாபாத்திரத்தைச் சித்தரித்த உங்கள் எண்ணம் அழகு.
சாருமதியின் அம்மா, உடன் பிறந்தவர்கள் அனைவரின் பங்கும் அழகு. அறிமுகம் செய்த ஒவ்வொருவர் மூலமும் ஒரு வாழ்க்கைப் பாடம் சொன்ன உங்கள் எண்ணம், மிகவும் ரசனையாகவும் சிந்திக்கத் தூண்டுவதாகவும் இருந்தது.
கிருஷ்ணாவின் அப்பா வந்த காட்சிகள் அனைத்தும் சூப்பர் என்றாலும், புரிதல் கொண்ட கணவர் ஸ்தானத்தில் அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
படிக்கும் பெண்ணை வேலை வாங்குவதா என்று மனைவியைக் கண்டித்ததும், மகனுக்கு ஹார்லே டேவிட்ஸன் வாங்கித்தரக் கேட்டுக் குழைந்த மனைவியை, இன்முகத்துடன் கையாண்டதும், காதலுடன் மனைவிக்கு முதல் வாய் ஊட்டிவிடுவதும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்…
கிருஷ்ணாவின் அன்னையைத்தான் நல்லவரா கெட்டவரா என்று யூகிக்க முடியாத அளவிற்கு சஸ்பென்ஸ் வைத்துவிட்டீர்கள். அவர் மகனை ‘குட்டா’ என்று அழைத்த இடங்களில் விழுந்த மனம், சாருமதியை ‘குட்ட’ எண்ணி தீட்டிய சதி திட்டங்களில் கொந்தளித்தது.
மகன்மேல் கண்மூடித்தனமான பாசம் கொண்ட தாயாக அவர் செயல்களை நியாயப்படுத்திய உங்கள் அத்தனை விளக்கங்களும் மிகவும் இயல்பாக இருந்தது. சாருமதி மீது வந்த உணர்வு பரிதாபமா காதலா என்று மகனிடம் அவர் கேட்ட கேள்வியும், அதற்கு மகன் தந்த விளக்கமும் அசத்தல்.
ஊர், ஊர் மக்கள், அதைச் சார்ந்த பழக்க வழக்கங்கள் என கிருஷ்ணாவின் தாய் தந்தை இருவரின் குடும்பங்கள் மூலமாக வர்ணித்த உங்கள் பாங்கு சூப்பர். கிருஷ்ணாவின் பாட்டி ஒரு பக்கம் என்றால், கிருஷ்ணாவைத் திருமணம் செய்துகொள்ள மறுத்த சாருமதியின் பதில் கேட்டு கொந்தளித்த ஊர் ஜனங்கள் ரியாக்ஷன் செம்ம.
அதேபோல, கிராமத்தில் உள்ள மருத்துவ சேவைகள் பற்றி நீங்கள் காட்சியமைத்த இடங்களும் அருமை.
Class Topper என்றால் Engineering அல்லது Medicine தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற பொதுவான வழக்கத்தை மாற்றி, தெளிவான தொலைநோக்கு பார்வையுடன் விவசாயம் தேர்ந்தெடுத்ததோடு மட்டுமில்லாமல், அத்துறையில் ஆத்மார்த்தமாக உழைத்த கிருஷ்ணாவுக்கு ஒரு ஓ போடவேண்டும்.
கதையின் முற்பகுதியில் அன்னையைக் கட்டிக்கொண்டும், பிற்பகுதியில் தென்னையைக் கட்டிக்கொண்டும் வலம் வந்த பாசக்கார கிருஷ்ணா வாரே வாவ்தான்.
அறைக்குள் அறை ஏன் கட்டினார்கள் என்று கிருஷ்ணா தந்த விளக்கத்தில், அவன் காதல் மன்னனாகவும் எங்கள் மனத்தில் நிலைத்துவிட்டான்.
உங்கள் படைப்புகளில் இது நான் படிக்கும் இரண்டாவது கதைதான். இதிலும் கல்விக்கும் முக்கியத்துவம் தந்த உங்கள் நோக்கம் உயர்ந்தது. அதேமாதிரி ஒவ்வொரு அத்தியாயத்தையும் காலச்சக்கரத்தின் முன்னும் பின்னும் சென்று நகர்த்தும் உங்கள் தனித்துவம் விறுவிறுப்பைக் கூட்டியது.
சக மனிதர்களைச் சமமாகப் பாவித்து நேசிப்பதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை என்று சொல்லும் விதமாக நிறைந்த குட் ஃபீல் கதை தந்த உங்களுக்கு என் நன்றிகள். தொடரட்டும் உங்கள் எழுத்துப் பயணம் என்றென்றும்.
கதைக்கான அமேசான் லிங்க்:
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்.


Please Comment Here