ஓம் ஸ்ரீ சாயிராம்
497 hits
பிள்ளைகளின் பிடிவாதத்தால் பரிதவித்த பாவை,
பகிரங்கமாய் ஏசி மனமுடைந்து போக,
பாசம் கொண்ட மகன் மனம்திறந்து பேசி,
பிரச்சனைகளைத் தீர்த்தானா? பகைகளை வளர்த்தானா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 02…
மகளின் வாழ்க்கையை எண்ணி வருந்திய சாரதா, பிராயணம் முடிந்து இத்தாலியில் இளைப்பாறிக் கொண்டிருந்த மகன் ரிஷிகுமாரை அழைத்தார். பேச்சுவார்த்தை வழக்கம்போல முடிவே இல்லாமல் நீடிக்க,
“உன்னை இவ்வளவு சுயநலவாதியா வளர்க்கவா, நான் இத்தனை வருஷம் கஷ்டப்பட்டேன். அப்படி என்னடா உனக்குக் கல்யாணத்துல அவ்வளவு வெறுப்பு?அக்கா வாழ்க்கையைப் பற்றி யோசிச்சு பாரு ரிஷி.” மனம் நொந்து பேசினார்.
“நீ அனுபவித்த கஷ்டம் கண்கூடா பாத்ததுனால தான்மா கல்யாணம் வேணாம்னு சொல்றேன்!” உடைந்தவன்,
விமானியின் வாழ்க்கையில் உள்ள ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி, எதிர்பார்க்காத நேரத்தில் தனக்கு ஒரு விபத்து நேர்ந்தால், அதன் விளைவுகளை மனைவியாக வரப்போகிறவள் சுமக்க வேண்டுமென்றும், அப்படியொரு தண்டனையை எந்தவொரு பெண்ணுக்கும் கொடுக்க விரும்பவில்லை என்றும் விளக்கினான். மேலும், பிடித்த வேலையில் இருப்பதால் தனக்கு எந்தக் குறையும் இல்லை என்றும் தன்மையாகத் தெளிவுபடுத்தினான்.
தந்தையின் அகால மரணம் அவன் மனத்தில் ஆழமாகப் பதிந்திருப்பதைக் கண்டறிந்த சாரதாவுக்குப் பேரதிர்ச்சி. கீர்த்தனாவின் உறுதியை நேரில் பார்த்தவருக்கு, அவள் மட்டும்தான் ரிஷி மனத்தில் பூதாகரமாய் வளர்ந்திருக்கும் வாழ்க்கை பற்றிய வீண் பயத்தை அகற்றமுடியும் என்றும் தோன்றியது.
“சரிடா ரிஷி! இந்தக் காரணத்தை நீயே கீர்த்தனாகிட்ட பக்குவமா எடுத்துச் சொல்லிடு; அந்தப் பொண்ணு மனசு மாறினால், உன் அக்காவோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” அவன் போக்கிலேயே சாரதா பேச,
கீர்த்தனாவை நேரில் சந்திக்கச் சம்மதம் தெரிவித்தான் ரிஷிகுமார்.
தொடர்ந்து வந்த நாட்களில் காயத்ரி வழக்கம்போல அலுவலகம் சென்றுவந்த போதும், விக்ரமிடம் பேசுவதைத் தவிர்த்தாள். கீர்த்தனாவிடம் அப்படி என்ன குறை கண்டுவிட்டார்கள் இவர்கள் என்று நினைத்தவனும் பதிலுக்கு வெறுப்பைக் காட்டினான்.
வீட்டிலேயும் அக்கா தம்பி இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவியது.
இல்லற வாழ்க்கை விரும்பும் அக்காவிடம், தன் கண்ணோட்டத்தைக் கூறி பயமுறுத்த விரும்பாதவன் உண்மை காரணங்களை மறைத்தான். தெளிவான காரணங்களைச் சொல்லாமல் திருமணத்தைத் தவிர்க்கும் தம்பியின் போக்கு காயத்ரியின் மனத்தைப் புண்படுத்தியது.
இரண்டு நாட்களில் கீர்த்தனா லண்டன் கிளம்புவதாகச் சாரதா மகனுக்கு நினைவூட்ட, ரிஷி அவளை அழைத்தான்.
பேச மறுத்தவனின் குரல் கேட்டதும், கீர்த்தனாவின் முகம் ஜொலித்தது. சந்தித்துப்பேச ஏதுவாக பூங்கா, கடற்கரை என்று அவள் அடுக்க,
“அதெல்லாம் வேண்டாம்! உங்க வீட்டுக்கு வந்து பேசட்டுமா! முடிந்தால் தனியாக…” என்று சிடுசிடுத்தான்.
பெண்ணவளும் முழுமனதுடன் சம்மதம் தெரிவித்தாள்.
மனத்தைக் கவர்ந்தவனை நேரில் கண்டவளின் கன்னங்கள் நாணத்தில் சிவந்தன. ஆனால் திருமணத்திற்கு மறுப்பு சொல்லும் எண்ணத்துடன் வந்தவனோ அவள் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை.
மிஸ்…மிஸ் அவள் பெயரையும் மறந்திருந்தான்.
“ரி…” தொடங்கியவள், இடைநிறுத்தி, “கீர்த்தனா!” என்றாள்.
“ஹான் கீர்த்தனா! உங்களை மட்டுமில்ல, எனக்கு யாரையும் கல்யாணம் செய்துக்க விருப்பமில்ல!” அவன் கூறியதும்,
“ஆண்மை கோளாறோ!” மனத்தில் கிளம்பிய சந்தேகத்தை வாய்விட்டு கேட்டேவிட்டாள்.
‘இப்படியும் ஒருத்தியா!’ யோசித்தவன் மென்னகையுடன் மறுப்பாய் தலையசைத்தான்.
விமானியாகப் பணிபுரியும் தன் உயிருக்கு ஏற்படும் ஆபத்து, சராசரி மனிதர்களைக் காட்டிலும் அதிகம் என்பதால் திருமணம் பந்தத்தில் தனக்கு நாட்டமில்லை என்றான்.
“என்னம்மோ நாட்டுக்காகச் சேவை செய்யும் ராணுவ வீரன் மாதிரி பேசுறீங்க!” கிண்டலாகச் சிரித்தாள் கீர்த்தனா.
அவள் எள்ளல் பேச்சில் கடுப்படைந்தவன், “சண்டைக்குப் போனாலும் சுற்றுலாவுக்குப் போனாலும் விமானம் ஆகாயத்தில் தான் பறக்கும். அதைச் செலுத்துறவங்க உயிருக்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்!” நிதர்சனத்தை உரைத்தான்.
அப்போதும் சலிக்காமல் தர்க்கம் செய்து சீண்டினாள்.
“அப்படின்னா ஆகாயத்தில் பறந்தாலும், சாலையில் உருண்டாலும் தண்ணீரில் நீந்தினாலும் இறப்பதுதான் விதியென்றால் அதை யாராலும் தடுக்கமுடியாது. உங்க பயம் அர்த்தமில்லாதது ரிஷிகுமார்!”
“இறப்பது இயற்கையானதுதான்!” தொடங்கியவன், நிறைவான வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்த பிறகு இறப்பதில் தவறில்லை என்றும், எதிர்பாராத நேரத்தில் நாம் நேசித்தவர்கள் நம்மைவிட்டு பிரிவது கொடுமை என்றும் வித்தியாசத்தை அழுத்திக் கூறினான்.
இன்றைய பொழுதின் இனிமைகளை ரசிக்காமல், நாளைய சிந்தனையில் வீண் மனவுளைச்சல் கொள்ளும் இப்படி ஒரு ரிஷியைச் சந்திப்பாள் என்று கனவிலும் நினைக்காதவள்,
“மரணபயம்தான் உங்களுக்குப் பிரச்சனைன்னா, நான் வேணும்னா எமதர்மராஜா கிட்ட சொல்லி உங்களுக்குச் சாகாவரம் வாங்கித்தரட்டுமா?” எகத்தாளமாகக் கேட்டு கண்சிமிட்டினாள்.
“மிஸ்.கீர்த்தனா! கண்டதும் காதலா?” புருவங்களை உயர்த்தினான் அவன்.
“ஏன் இருக்கக் கூடாதா?” பதிலுக்கு ஒற்றைப் புருவம் உயர்த்திக் கேட்டு, வியப்பில் ஆழ்த்தினாள் அவள்.
“படித்தப் பெண்தானே நீங்க?” பற்களை நறநறத்தான்.
“அப்போ பத்து நிமிடம் பேசிப் பழகிய உங்க அக்காவுக்கும், என் அண்ணாவுக்கும் காதல் வந்திருக்கே; அவங்க படிச்சவங்க இல்லையா?” ஏட்டிக்குப்போட்டி வாதாடினாள்.
தன் மனதில் உள்ள நெருடலை சொல்லும்வரை இப்படித்தான் அடம்பிடிப்பாள் என்று புரிந்துகொண்டான் ரிஷிகுமார்.
தந்தை விபத்தில் இறந்தபின், அன்னை சந்தித்த சவால்கள் இன்னும் கண்முன் பசுமரத்தாணியாக இருப்பதைத் தாழ்ந்த குரலில் விளக்கினான். இளம்வயதில் தந்தையை இழந்து தானும் தன் குடும்பத்தினரும் பட்ட சிரமங்களைப் பார்த்து எடுத்த முடிவு என்றவன்,
“ப்ளீஸ் கீர்த்தனா! என் மனநிலையைப் புரிஞ்சுக்கோங்க! உங்க அண்ணனுக்கும் புரிய வெச்சு, என்னோட அக்காவைக் கல்யாணம் செய்துக்க சொல்லுங்க!” கெஞ்சலாகக் கேட்டான்.
“ம்ம்…சரி!” மென்மையாகத் தலையசைத்தவள், இரண்டு நிமிடத்தில் வருவதாகச் சொல்லி ஒரு நாட்குறிப்பை எடுத்து வந்தாள்.
அதை அவனிடம் நீட்டி, “உங்க அப்பாவோட மரணம்தான் எனக்கும், உங்க மேல காதல் மலர காரணமா இருந்துது ரிஷி!” என்றாள்.
காலத்தால் பழுப்படைந்த அந்த நாட்குறிப்பின் முதல் பக்கம் திறந்ததுமே, அவனுக்கு அத்தனையும் விளங்கியது.
“அன்புள்ள ரித்தி,
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்!
இப்படிக்கு ரிஷி!”
நெளிவுசுளிவாகப் பதிந்திருந்த தன் கையெழுத்தைக் கண்டுகொண்டவன்,
“ரித்தி!” கேள்வியாக அவளை நோக்கினான்.
“ம்ம்!” மூடித்திறந்த அவள் இமைகளின் இடையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
ஐந்தாம் வகுப்பில் எடுத்த புகைப்படம் பார்த்து அவளுக்கும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பரிசளித்த நாட்குறிப்பு பார்த்து அவனுக்கும், பள்ளிப்பருவத்தின் பசுமையான நினைவுகள் பசுமரத்தாணியாக கண்முன் தோன்றியது.
அன்று…
“பாருங்க பா! ரித்திக்கு நான் கொடுத்த பரிசு பிடிக்கலையாம்.” வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்த அப்பாவிடம் புலம்பியபடி, அழுதுக்கொண்டே உடன் நடக்கும் தோழியைச் சுட்டிக்காட்டினான்.
“எனக்கு ஹீரோபென் வேணும்னு தானே Santa கிட்ட கேட்டேன். டைரி கேக்கலியே!” முணுமுணுத்தாள் கீர்த்தனா.
பள்ளிக்கூடத்தில், மாணவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசுகள் பரிமாறிக்கொள்ள ஏதுவாக “கிறிஸ்மாம்” விளையாட ஏற்பாடு செய்திருந்தார் ஆசிரியர். பிள்ளைகள் துருப்பு சீட்டில் தங்களுக்குப் பிடித்தப் பரிசுகளின் பெயர்களை எழுதினர். அவற்றை ஒரு ஜாடியில் போட்டு பிள்ளைகளை அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொன்னார் ஆசிரியர்.
ரிஷியிடம், கீர்த்தனா எழுதிய சீட்டு வர, அதில் அவள் தனக்கு ஒரு ஹீரோபென் வேண்டுமென்று எழுதியிருந்தாள். ரிஷியும் அதை வாங்கித்தருமாறு தந்தையைத் தொல்லை செய்தான்.
அன்றாட தேவைகளுக்குப் பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவருக்கு, பள்ளிகள் இதைப்போன்ற யுக்திகளில், பெற்றோருக்கு வீண் செலவு வைப்பதாகத் தோன்றியது. அவன் கேட்ட எழுதுகோலின் விலை அதிகம் என நினைத்தவர், அலுவலகத்தில் புத்தாண்டு பரிசாகப் பெற்ற நாட்குறிப்பை அவளுக்கு தரும்படி ரிஷியிடம் வலியுறுத்தினார்.
வேண்டாவெறுப்பாக அவன் அதை கீர்த்தனாவிடம் தர, அவளோ அழுது ரகளை செய்திருந்தாள்.
விசும்பும் குழந்தையை மைதானத்தின் புல்தரையில் அமர்த்தி அருகில் அமர்ந்தவர், அவள் வாடிய முகத்தை கையில் ஏந்தி,
“என்னைப் பாருமா!” மென்மையாக அழைத்து,
“நமக்காக ஆசையா ஒருத்தர் தரும் எந்தப் பரிசுப்பொருளும் உயர்ந்தது. நீ கேட்ட ஹீரோபென் காட்டிலும், இந்த டைரி இன்னும் சிறப்பானது. உன்னோட சின்ன சின்ன சந்தோஷங்களை இதில் எழுதி வெச்சுக்க பழகு. நாளிடைவில் மறந்துப்போகும் நினைவுகள் கூட இதில் நிரந்தரமா இருக்கும்.
அவ்வளவு ஏன்! நம்ம நேசித்த மனிதர்கள் நம்மளவிட்டு ரொம்பத் தூரம் போயிடுவாங்க; ஆனா அவர்களின் நினைவுகளைச் சுமக்கும் இந்த டைரி, அவங்க நம்ம பக்கத்துல இருக்கும் உணர்வைத் தரும்.” என்றவர்,
பிள்ளைகளுக்குப் புரியும் விதத்தில், ஆன் பிராங்கின் டைரி (The Diary of Anne Frank) பற்றி விவரித்து அது எப்படிச் சரித்திரத்தில் இடம்பெற்றது என்றும் எடுத்துரைத்தார்.
ஹீரோபென் மட்டுமே சிந்தனையில் நிறைந்திருக்க, அவரின் அறிவுரைகளைப் பொருட்படுத்தாமல் வீட்டிற்குப் புறப்பட்டாள் கீர்த்தனா.
விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிக்குத் திரும்பியவள், ஒரு வாரத்திற்கு மேலும் ரிஷிகுமார் பள்ளிக்கு வராததைக் கவனித்தாள். அவன் தந்தை விபத்தில் இறந்ததால், அவன் பள்ளியிலிருந்து டி.சி வாங்கிக்கொண்டு சென்றதாக அறிந்தவளுக்கு, ஏனோ நண்பனின் ஞாபகம் வாட்டியெடுத்தது.
‘க’வில் தொடங்கும் சொற்கள் அனைத்தையும் , ‘த’ என்று உச்சரிக்கும் அவளை நண்பர்கள் கேலி செய்தபோது, ‘ரிஷிகுமார்’ என்ற தன் பெயரை ‘ரிஷி’ எனச் சுருக்குவது போல, ‘கீர்த்தனா’ என்ற அவள் பெயரை ‘ரித்தி’ எனச் சுருக்கலாம் எனத் தனக்காக முதன்முதலில் பரிந்துப் பேசியவன் அவன்தானே.
நேசித்தவர்கள் வெகுதூரம் விட்டுச்சென்றாலும், நாட்குறிப்பின் நினைவுகள் அவர்களை அருகிலேயே இருக்கவைக்கும் என்று அவன் தந்தை சொன்ன அறிவுரையை நினைவுகூர்ந்தாள். ரிஷியுடன் கழித்த பசுமையான நினைவுகளை அந்த நாட்குறிப்பில் நிரப்பினாள். அன்றிலிருந்து கற்பனையில் அவனுடன் கதைக்கப் பழகியவள், அந்த உரையாடல்களையும் எழுத, நாட்குறிப்பு எழுதும் பழக்கமும் அவளுக்கு வாடிக்கையானது.
இன்று….
ரித்தி-ரிஷி என்று ஒவ்வொரு பக்கத்திலும் கையொப்பம் இட்டிருப்பதைக் கண்டவன் கீர்த்தனாவை கேள்வியாகப் பார்க்க, சமீபத்தில் எழுதிய நாட்குறிப்பு ஒன்றை காட்டினாள்.
“இன்னுமா அப்படி எழுதற!” வியந்தான்.
“எப்பவுமே அப்படித்தான் எழுதுவேன் ரிஷி!” பதில் உரைத்தவள்,
“உன் அப்பாவின் மறைவு, நம்ம ரெண்டு பேரு மனசுலயும், பசுமரத்தாணியா பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கு டா! நீ எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயத்தோடு, நிகழ்காலத்தைக் கடக்கற; நான் கடந்தகாலத்தின் பசுமையான நினைவுகளே போதும்ன்ற மனநிறைவோடு நிகழ்காலத்தைக் கடக்கறேன்.” பெருமூச்சுவிட்டவள், அவன் கைவிரல்களைக் கோர்த்து,
“நல்லதே நடக்கும்ன்ற நம்பிக்கையோட நாம நிகழ்காலத்தைச் சேர்ந்து வாழலாமே ரிஷி!” யாசிக்கும் குரலில் கெஞ்சினாள்.
தடுமாற்றத்தில் தத்தளித்தவன் மௌனம் காக்க, அவனை வற்புறுத்துவதில் அர்த்தமில்லை என நினைத்தவள்,
“சரி! உனக்குப் பிடிச்ச வாழ்க்கையை நீ வாழு டா! அண்ணா-அண்ணி திருமணம் நல்லபடியா நடக்கும்; அதுக்கு நான் பொறுப்பு. காயத்ரி அண்ணிகிட்ட சொல்லிடு.” விட்டுக்கொடுத்தாள்.
ஊசலாடியவனின் மனம், பெண் அவளின் அன்பில் விழ, “ஹீரோபென் வாங்கித்தரட்டுமா?” பனித்த கண்களோடு வினவினான்.
“ஹீரோ தான் பெண்ணைத் தேடி வந்துட்டானே! வேணும்னா பார்க்கர் பென் வாங்கித்தா!” குளமான கண்களுடன் புன்னகைத்தவள், அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
மகனின் மனமாற்றத்தைப் பற்றி அறிந்து நெகிழ்ந்த சாரதாவிடம், அவர்களின் பள்ளிப்பருவ நட்பை பற்றியும் விளக்கினாள் கீர்த்தனா. கணவரின் அறிவுரையை ஆழமாக உள்வாங்கிய கீர்த்தனா மேலிருந்த மதிப்பு பன்மடங்காகப் பெருகியது அவருக்கு.
விளையாட்டுப் பெண் என்று நினைத்த அண்ணனோ, தங்கையின் ஆத்மார்த்தமான தோழமையைக் கேட்டுப் பேச்சற்றுப் போனான்.
தம்பியின் மனத்தில் இத்தனை மனப்போராட்டங்களா என்று காயத்ரியின் மனம் ரிஷிகுமாருக்காக வருந்திய போதும், விக்ரம் மேலிருந்த கோபம் மட்டும் துளியும் குறையவில்லை.
“மன்னிச்சிரு அக்கா! என்னோட பிடிவாதத்தால தானே உங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம்.” ரிஷி பழியைச் சுமக்க,
“இல்ல அண்ணி! நான் உங்க எல்லார் கிட்டயும் வெளிப்படையா பேசியிருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. தப்பு என்னுடையது தான்.” வருந்தினாள் கீர்த்தனா.
“நம்ம கல்யாணம் நடக்காதுன்னு சொன்னது தப்புதான் காயத்ரி! ஆனா, என் நிலைமையிலிருந்தும் கொஞ்சம் யோசிச்சு பாரு!” என்ற விக்ரம்,
தங்கை விரும்பும் வாழ்க்கையை அமைத்து தரவும் முடியாமல், ரிஷியுடன் மச்சான் என்று உண்மையாக உறவாடவும் முடியாமல் திண்டாடுவதற்கு, விலகிவிடுவதே அனைவருக்கும் நல்லது என்று யோசித்ததாகச் சொன்னான்.
மூவரும் மாறி மாறி கெஞ்சினார்கள்.
“அப்போ உங்க தங்கை ரிஷியை விரும்பறேன்னு நம்ம திருமணத்துக்கு அப்புறம் சொல்லி, ரிஷி அதை மறுத்து, நானும் என் தம்பிக்குப் பரிஞ்சு பேசியிருந்தா, என்னை விவாகரத்து செஞ்சிருப்பீங்களா விக்ரம்?” அதுவரை எந்த எதிர்வினையும் காட்டாமல் சிலையாக நின்ற காயத்ரி, படபடவென்று பொரிந்தாள்.
“இது என்ன அசட்டுத்தனமான பேச்சு?” சாரதா கண்டிக்க,
“அவள் கேக்குறது நியாயம்தான் அத்தை.” இடைபுகுந்த விக்ரம், முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருகும் பாவைக்குப் பொறுமையாகவே பதிலளித்தான்.
“அப்படியொரு நிலைமை வந்திருந்தா, என் தங்கையின் சார்பாக, நானே என் மச்சான்கிட்ட பேசி சம்மதம் வாங்கியிருப்பேன். அவன் சம்மதிக்காமல் போகும் பட்சத்தில், என் தங்கைக்கு என்னடா குறைச்சல்னு அவன் சட்டையைப் பிடிச்சு கேள்வி கேட்டு உரிமையா சண்டைப் போட்டிருப்பேனே தவிர, உன்னைத் தூது அனுப்பி இருக்கமாட்டேன்.” என அவன் அசராமல் பதிலளிக்க,
“அப்படிச் சொல்லுங்க மாமா!” என விக்ரம் கரத்தோடு கரம் அடித்துச் சிரித்தான் ரிஷிகுமார்.
ஆண்கள் செய்த அலப்பறையில் காயத்ரியின் கோபம் அதிகரித்தது தான் மிச்சம். விட்டால் எரித்துவிடுவாள் போல இருந்தது அவளது சிவந்த கண்கள்.
கீர்த்தனாவுக்கும் ஆண்கள் இருவரின் அலப்பறைகள் சற்று அதிகமாகவே தோன்ற,
“எல்லாத்துக்கும் நீதான்டா காரணம். நான் கேட்டவுடனே என்கிட்ட பேசியிருந்தா, இவ்வளவு பிரச்சனை வந்திருக்குமா?” என ரிஷிகுமாரின் காதைத் திருகினாள்.
“ஆ வலிக்குது டி!” போலியாக அலறியவன், “மாமா என்னைக் காப்பாத்துங்க!” விக்ரமை உதவிக்கு அழைத்தான்.
“பழகிக்கோ மச்சான். நீ பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.” கேலி செய்த விக்ரமின் விழிகள் தன்னவளின் முகத்தையே ஏக்கத்துடன் தழுவிக் கிடந்தது.
“ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது டி!” அசையாது நிற்கும் மகளைக் கண்டித்தார் சாரதா.
ஆத்மார்த்தமான மன்னிப்புகள், குழந்தைத்தனமான குறும்புகள், அம்மாவின் கண்டிப்புகள் எதிலும் அவள் மனம் இளகவில்லை. எவருடைய பேச்சையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அலைபேசியை விரல்களால் வருடினாள்.
“காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா!
கேட்கும்வரம் கிடைக்கும்வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா!”
என விக்ரம் அலைபேசி இசைக்க, திடீரென்று ஒலித்த அந்தப் பாடலின் ஒலியை குறைக்கமுடியாமல் அசடுவழிந்தான் அவன்.
தன் அலைபேசியைச் செவிக்கு அருகில் பிடித்துக் கொண்டவள், “விலகிப்போக நினைத்தவர், ஏன் இன்னும் அதே ரிங்க்டோன் வெச்சிருக்கீங்க?” இறுகிய முகத்துடன் அதிகாரமாய் கேட்டாள்.
“டேய் அண்ணா! இதுதான் உன்னோட தங்கை பாசமா?” கீர்த்தனா பொய்கோபத்துடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்க, காதல் மயக்கத்தில் மிதந்தவனோ தன்னவளை இமைக்காமல் பார்த்த வண்ணம் நின்றான்.
கோபத்தில் அன்று அவன் உதடுகள் உச்சரித்த சொற்கள் யாவும் மனத்திலிருந்து உதிக்கவில்லை என்றும், அவனிருந்த தர்மசங்கடமான சூழ்நிலையை உணர்ந்தவளும் மென்சிரிப்புடன் தன் காதலை விழிகளில் தூது அனுப்பினாள்.
பிள்ளைகள் வாழ்க்கை நல்லபடியாக அமைந்ததை எண்ணி நெகிழ்ந்த சாரதா, நிழற்படத்தில் உறைந்த கணவரிடம் நன்றிகூற,
‘பேரப்பிள்ளையாக மறுஜென்மம் எடுத்து விரைவில் உன்னிடம் வருகிறேன்!’ சொல்வதுபோல அவரும் புன்னகைத்தார்.
நங்கை அவள் நெடுநாள் ஆசை இனிதே நிறைவேற,
நெஞ்சம் நிறைந்தவன் மடிசாய்ந்தும்,
நிலவின் ஒளியில் கதைப்பேசியும்,
நீடுழி வாழ காலம் வழிவகுக்குமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!


Please Comment Here