ஓம் ஸ்ரீ சாயிராம்
205 hits
சில நேரங்களில் வளைந்து கொடுத்தும்,
பல நேரங்களில் வக்கணையாகப் பேசியும்,
பொழுதுக்கும் வாயடித்த பெண்களின் போக்கில்,
சஞ்சலங்கள் தீர்ந்ததா; சந்தேகங்கள் வளர்ந்ததா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 08…
வெம்பிலி, லண்டன்.
புற்றிலிருந்து ஈசலாக வெளியே வந்த பயணிகளின் கூட்டத்தில் அக்கா மாமாவின் தலை தெரிந்த மறுகணமே, தாயின் முகத்தைக் கண்டுகொண்ட சிறுபிள்ளையாக அவர்கள் அருகில் பாய்ந்தோடிக் கட்டியணைத்தான் ரிஷிகுமார்.
“உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா க்கா?” குழந்தையாகவே மாறி காயத்ரியின் கழுத்தில் முகத்தைப் புதைத்துச் சிணுங்கினான்.
“ஓவர் ஆக்டிங்கா இருக்கு ரிஷி. உன் முகத்துக்கு இதுக் கொஞ்சம் கூடப் பொருந்துல.” நமுட்டுச் சிரிப்புடன் அவன் காதைத் திருகினான் விக்ரம்.
“அவருக்கு அவர் தங்கை ஏர்போர்ட்டுக்கு வரலன்ற பொறாமை ‘க்கா.” காயத்ரியின் தோளினை இன்னும் இறுக்கமாக அணைத்து மாமனைச் சீண்டினான் ரிஷிகுமார்.
தம்பியின் கரங்களைத் தளர்த்திய காயத்ரி, “ரெண்டு பேரும் ஓவர் ஆக்டிங்க் பண்ணறத நிறுத்திட்டு கிளம்புங்க.” என இருவரையும் பார்வையால் எரித்து, வெளி வாசலை நோக்கி நடந்தாள்.
தரிப்பிடத்தில் நிறுத்தியிருந்த தன் வண்டி அருகே வந்ததும், ரிஷிகுமாரும் விக்ரமும் பெட்டிகளை ஏற்றிவைக்க, பின் பக்கத்துக் கதவைத் திறந்த காயத்ரியின் நாசியை வருடியது, இரட்டையர்களுக்குப் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு இருக்கையிலிருந்து (Child Safety Seat) வீசிய கைக்குழந்தையின் வாசம்.
கிளுகிளுப்புப் பொம்மைகள், மாற்று உடைகள், போர்வைகள் எனப் பின்னிருக்கை முழுவதிலும் சிதறிக்கிடந்த பொருட்களைக் கண்டவளின் ஏக்கம் கூடியது.
யாதவனின் இருக்கையில் அசைந்தாடிய குரங்கு பொம்மையைத் தன்னிச்சையாக அவள் விரல்கள் வருட, ஆண்கள் இருவரும் அதைக் கண்டுகொண்டனர்.
சட்டென மறுபக்கத்துக் கதவைத் திறந்த ரிஷிகுமார், “இந்தக் ரித்தி இருக்காளே! அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குப் போகணும்னாலும், ஒரு மூட்டை சாமான்களை பேக் பண்ணிப்பா. பாதிக்கு மேல எதையும் உபயோகிக்கவும் மாட்டா; கொண்டு வந்த பொருட்களை வண்டியிலிருந்து எடுத்து வைக்கவும் மாட்டா; சரியான சோம்பேறி!” சலிப்பாகச் சமாளித்து, பரவிக்கிடந்த பொருட்களை நேர்த்தியாக அடுக்கினான்.
“கீர்த்தி எப்பவுமே அப்படித்தான் ரிஷி. வண்டியா வீடான்னு தெரியாத அளவுக்கு அத்தனை சாமான்களையும் காரில் வச்சிருப்பா.” என தன் பங்குக்குப் புலம்பிய விக்ரம்,
“உன் அக்கா வந்ததுக்கு அப்புறம் தான் என் வண்டி வண்டிமாதிரி இருக்கு.” புன்னகை ததும்ப கூறி, மனைவியின் தோள் சுற்றி அணைத்தான்.
மென்னகையுடன் அவர்களை ஏறிட்ட ரிஷிகுமார், “இப்போதைக்குக் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிட்டு இந்தப் பக்கம் உட்காருக்கா.” என்றதும், கணவன் வளைவிலிருந்து அமைதியாக நகர்ந்து வண்டியில் ஏறிக்கொண்டாள் காயத்ரி.
நாட்டு நடப்பு, அரசியல், விளையாட்டு என மாமனுடன் ஊர் வம்பு பேசிக்கொண்டே ரிஷிகுமார் வண்டியைச் செலுத்த,
“ஆமாம்! குழந்தைகளோட பொருட்களை எல்லாம் பார்த்ததும் ஏக்கமா இருந்துது. இப்போ அதுக்கு என்னன்றீங்க?” திடுதிப்பென்று பொங்கியவள், யாழினியின் போர்வையை எடுத்துக் கன்னத்தோடு உரசிக்கொண்டாள்.
ஆண்கள் இருவரும் என்ன சொல்வதென்று புரியாமல் முழிக்க, காயத்ரியே மேலும் பேசினாள்.
“நீங்க ரெண்டுபேரும் பொய் சொல்லி நாடகமாடாம இருந்திருந்தீங்கன்னா, நானும் கீர்த்தியோட சகஜமா உறவாடிருப்பேன்ல.” என்றாள் வருத்தத்துடன்.
அவள் மன அழுத்தத்தின் தீவிரம் உணராத ரிஷிகுமார், “பெண்களுக்கும் ரகசியத்துக்கும் ஏணி வெச்சாலும் எட்டாதுன்னு உனக்குத் தெரியாதா ‘க்கா.” வேடிக்கையாகப் பேசி கலகலவெனச் சிரிக்க, விக்ரமும் அவனுடன் சேர்ந்து கொண்டான்.
“உங்க ரெண்டு பேருக்கும் என்னைப் பார்த்தா இளக்காரமா இருக்குல! பொய் சொல்லியிருக்கோமேன்னு கொஞ்சம் கூட ஃபீல் பண்ணாம, நக்கலா சிரிச்சிட்டு இருக்கீங்க!” சிடுசிடுத்தாள் காயத்ரி.
அவள் புலம்பல்களைச் சற்றும் லட்சியம் செய்யாத ரிஷிகுமார், “அதைவிடு ‘க்கா! இஞ்சிப்புளியும், தக்காளி தொக்கும் எடுத்துட்டு வந்திருக்கீயா?” என உற்சாகம் பொங்க வினவ, அதில் அவள் எரிச்சல் கூடியதுதான் மிச்சம்.
“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாதுன்னு உனக்குத் தெரியாதா டா?” எகிறி, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் காயத்ரி.
“ம்ப்ச்! உன்கிட்ட பொய் சொல்லணும்னு இல்ல ‘க்கா. ரித்தியைச் சமாளிக்கத்தான் நாடகம் ஆடுறோம்னு சொல்லியிருந்தாலும், நீ எங்க திட்டத்துக்குச் சம்மதிச்சிருக்க மாட்ட…அதான்…” வருந்திய ரிஷிகுமார்,
சிகப்பு நிறத்திற்கு மாறிய சமிக்ஞை விளக்கை கடைசி நிமிஷத்தில் கவனிக்க, நிற்கவும் முடியாமல், கடந்து செல்லவும் முடியாமல் தடுமாற, வண்டி ஆட்டம் கண்டது.
அவன் ஓரளவுக்குச் சுதாரித்துக் கொண்டான் எனினும், முன் கண்ணாடியில் முட்டி மீண்டான் விக்ரம்.
அவன் நெற்றியில் தேய்த்துக்கொள்வதைக் கவனித்த ரிஷிகுமார், “மன்னிச்சிருங்க மாமா. அடிப்பட்டிருத்தா?” அக்கறையுடன் வினவ,
“பதறாத டா. லேசாதான் இடிச்சிண்டேன். நீ நிதானமா ஓட்டு!” பதில்சொல்லி, ஆதுரமாய் அவன் தோளில் தட்டிக்கொடுத்து, பெருகி வரும் சாலை நெரிசலைப் பற்றிப் பேச, அவர்கள் கவனம் திசைதிரும்பியது.
ஆண்கள் தன் புலம்பல்களை அலட்சியம் செய்கிறார்களே என எரிச்சல் மேலோங்க,
“நான் சம்மதிப்பேன், சண்டைபோடுவேன்னு நீயா எப்படி ஒரு முடிவுக்கு வருவ ரிஷி?” விட்ட இடத்திலிருந்து கறாராகத் தொடங்கினாள்.
“உனக்காக மட்டுமில்ல ‘க்கா” மெல்லிய சலிப்போடு ரிஷிகுமார் தொடங்க,
மனைவியின் தோரணையில் கடுப்பான விக்ரம், “அதான் எல்லாத்தையும் தெளிவா சொல்லிட்டேனே காயத்ரி. மறுபடியும் ஏன் நடந்து முடிஞ்சதை கிளறுர.” கண்டித்தான்.
“நான் எதையும் கிளறுல விக்கிபா. எதுவா இருந்தாலும் என் முகத்துக்கு நேரே வெளிப்படையா சொல்லியிருக்கலாமேன்னு தான் அவனைக் கேக்குறேன்.” எகிறினாள் அவள்.
“அக்கா…” ரிஷியின் குரல் மொத்தமாய் உடைந்தது.
பேசப் பேச வீண்வாதம் தான் வளரும் என்று உணர்ந்த விக்ரம், “வண்டி ஓட்டும்போது பேசாதே ரிஷி! உங்க பஞ்சாயத்தை வீட்டுக்குப் போனப்பிறகு வச்சுக்கோங்க.” இருவரையும் மிரட்டி, ரிஷிகுமாரின் கைகளில் அழுத்தம் தந்து தடுத்தான்.
இருவரின் விழி பரிமாற்றங்களைக் கண்டுகொண்டாள் காயத்ரி.
“இவதான் லண்டன் வரை வந்துட்டாளேன்ற தலைக்கனத்துல மூணு பேரும் சேர்ந்து எனக்கு எதிரா ஏதாவது சதி வேலை செய்யறீங்கன்னு தெரிஞ்சா போதும்! நான் கண்காணாத இடத்துக்குப் போயிடுவேன்!” தீவிரக் குரலில் உரைத்தாள்.
மனம் திறந்து பேசியப் பிறகும் ஏன் இவளுக்கு இத்தனை அவநம்பிக்கை என விக்ரம் உடைய, வீட்டிற்கு வந்து சேரும்வரை ரிஷியும் மௌனம் காத்தான்.
மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அது.
பிரதான நுழைவாயிலின் கண்ணாடி கதவில் பொருத்தப்பட்டிருந்த கருவியில் ரிஷிகுமார் மின்னனு அட்டை ஒன்றை சொருக, கதவு திறந்தது.
“கீர்த்திகிட்ட ஸ்பேர் ஆக்ஸெஸ் கார்ட் இருக்கு. அதை உங்ககிட்ட தரச் சொல்றேன் மாமா. வெளியே போகும்போது நியாபகமா எடுத்துட்டுப் போங்க.” விளக்கியபடி, முதல் மாடியில் இருந்த தங்கள் இல்லத்திற்கு வழிகாட்டினான்.
தலையசைப்புகளைத் தாண்டி இருவரிடமிருந்தும் வேறு எந்தப் பதிலுமில்லை.
முதலுக்கே மோசமெனக் கவலையில் தோய்ந்தவன் வீட்டுக் கதவைத் திறக்க, அவர்கள் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த கீர்த்தனா,
“வா ‘ண்ணா! வாங்க அண்ணி!” என ஆரவாரம் செய்து அவர்களைக் கட்டியணைத்து முத்தமழையில் நனைத்தாள்.
தலைகோதும் அண்ணணின் ஸ்பரிசத்தில் தேக்கிவைத்த ஏக்கங்கள் விழித்துக்கொள்ள, “உனக்கு உன் கோபம்தான் பெருசா போச்சுல்ல ‘ண்னா. அம்மா அப்பா ஸ்தானத்தில் நீதானே ‘ண்ணா பிரசவ நேரத்தில் என் பக்கத்துலேயே இருந்திருக்கணும்.
குழந்தைகளை நீதான் முதல்ல கையில வாங்கணும்னு நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா.” அண்ணன் மார்பில் முகம் புதைத்த கீர்த்தனா, கண்ணீரும் புன்னகையுமாய் தன் போக்கில் புலம்பிக்கொண்டே போக,
விக்ரமின் கவனமெல்லாம் மனையாள் மீது மட்டும்தான் இருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு தங்கையின் முகத்தை நேரில் கண்ட சந்தோஷத்தை முழுவதுமாக அனுபவிக்க முடியாத அளவிற்கு, மனையாளின் அலட்சியமும் அழுத்தமும் விக்ரமை வாட்டியெடுத்தது.
ஆனால் குழந்தைகளின் தரிசனத்தைப் பெறும் தவிப்பிலிருந்த காயத்ரிக்கோ, கீர்த்தனா பேசியது எதுவுமே காதில் விழவில்லை. வரவேற்பறையில் குழந்தைகளைக் காணாத பெண்ணின் விழிகள் தன்னிச்சையாகச் சுவற்றில் மாற்றியிருந்த வரைப்படங்களை ஆராய்ந்து கொண்டிருந்தது.
அலங்கார பொருட்கள், வரை ஓவியங்கள், திருமணப் புகைப்படங்கள் என்று நிறைந்திருந்த அந்த அறையில், பெயருக்குக் கூடக் குழந்தைகளின் புகைப்படங்கள் இல்லாமல் போக, அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
பதில் கூறமுடியாமல் தவிக்கும் மாமனின் தர்மசங்கடத்தைப் புரிந்துகொண்ட ரிஷிகுமார், “அடியேய்! நான்தான் குழந்தைகளை முதல்ல வாங்கிக்கணும்னு சொன்னீயே!” குறும்பாகக் கேட்டு, கீர்த்தனாவின் தலையில் செல்லமாக அடித்தான்.
“பிரசவ அறையில் நீயும் வெளியில காத்துட்டு இருந்தவங்கள என் அண்ணனும் வாங்கணும்னு நெனச்சேன் டா.” விக்ரம் கைவளையத்தில் பிணைந்து செல்லம் கொஞ்சினாள் கீர்த்தனா.
அச்சமயம் வாசலுக்கு வந்த சாரதா, அவள் பங்குக்கு கீர்த்தனாவின் தலையில் குட்டி, “அப்போ! சாருமா தான் குழந்தைகளை முதல்ல வாங்கிக்கணும்னு என்கிட்ட குழைஞ்சது எல்லாம் எந்தக் கணக்குல சேரும்?” மருமகளின் செவிகளைத் திருகி,
“ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க? பிரயாணம் எல்லாம் சௌகரியமா இருந்துதா?” நலன் விசாரிப்பு கேள்விகளுடன் மகளின் கன்னத்தில் ஆதுரமாய் வருடினார்.
அன்னையின் கேள்விக்குப் பதிலளிக்கும் உற்சாகம் கூட இல்லாமல், சிந்தனையில் கரைந்திருந்தாள் காயத்ரி. மாமியாருக்குப் பணிவுடன் பதிலளித்த விக்ரமின் கவனம் மட்டும் மனையாளையே தழுவி இருந்தது.
அவள் மனத்தை உறுத்தும் சங்கடங்களை அறவே நீக்கும்வரை, இதே நிலவரம்தான் என்று அறிந்தவன்,
தங்கையின் கைகளை வெடுக்கென்று உதறி, “குழந்தைகளைப் பாக்குறதுக்கு முன்னாடி, உன்கிட்ட ஒரு விஷயம் தெளிவுபடுத்தணும் கீர்த்தி!” கணீர் குரலில் அறவித்தான்.
“சொல்லுண்ணா!” பதுமையின் குரல் சரிய,
“நாங்க குழந்தைகளோட அத்தை மாமான்னு உறவாடத் தான் வந்திருக்கோம். தத்துக்கொடுக்கறது அது இதுன்னு ஏதாவது பேசுற எண்ணமிருந்தா, இப்படியே கிளம்பி போயிடுறோம். இத்தனை நாளா உன் உடல்நலத்தை மனசுல வச்சுட்டுதான் நீ சொன்ன எதுக்கும் மறுப்பு சொல்லாம இருந்தேன்.” திடமாக உரைத்தான்.
விக்ரமின் நிபந்தனைகளைக் கேட்ட ரிஷிகுமாருக்கு, கீர்த்தனா தங்கள் மனமாற்றத்தைப் பற்றி அவர்களிடம் எதுவுமே பகிரவில்லை எனத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது.
ரிஷிகுமாரின் கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகுனிந்தவள், “சரி ண்ணா. உன் விருப்பம்தான் என் விருப்பமும். வா குழந்தைகளைப் பார்க்கலாம்.” உதடுகள் தந்தியடிக்கப் பேசி, அவன் கரங்களைப் பற்றினாள்.
சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்ட திருப்தியில், விக்ரம் தங்கையுடன் நகர,
“விக்கிபா!” அழுத்தமான குரலில் அழைத்த காயத்ரி, “குளிச்சிட்டு வந்து குழந்தைகளைப் பார்க்கலாமே!” எனத் தடுத்தாள்.
‘இன்னும் என் மேல் நம்பிக்கை வரவில்லையா!’ எனச் சிந்தித்த விக்ரம் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்.
“இத்தனை தூரம் பிரயாணம் செய்துட்டு வந்திருக்கோம். குழந்தைகளுக்கு எதுவும் இன்ஃபெக்ஷன் ஆகாம இருக்க, குளிச்சிட்டு வரலாம்னு சொன்னேன்.” இலகுவாய்ப் பேசி, கீர்த்தனாவிடம் குளியலறை எங்கே என வினவினாள்.
“உங்க பெட்டிகளை எல்லாம் இந்த ரும்ல வச்சிருக்கேன் க்கா….” ரிஷி கைகாட்ட,
அவனைப் பார்வையால் சுட்டெரித்த மங்கை, விக்ரமுடைய கரத்தைப் பற்றி, அவனை அறைக்குள் இழுத்துச்சென்றாள்.
கட்டில், அலமாறி, பணிமேஜை, நாற்காலி என அத்தியாவசிய பொருட்களுடன் ஒரு தொட்டிலும் இருப்பதைக் கண்ட விக்ரம், அது தங்கையின் வேலையாகத் தான் இருக்கும் எனப் பெருமூச்சுவிட்டபடி,
“காயுமா. இந்தத் தொட்டில் இங்கே எதுக்காக…” மனைவியைச் சமாதானம் செய்ய முற்பட,
அவனைப் பின்னிருந்து வளைத்துக் கட்டியணைத்தாள் காயத்ரி.
“என் விருப்பத்துக்கு மாறா நீங்க எதுவும் செய்ய மாட்டீங்கன்னு எனக்குப் புரியுது விக்கிபா. நீங்க எந்த விளக்கமும் சொல்லவேண்டாம்.” என்று உருகினாள்.
மனையாளின் சொல் செயல் என அனைத்தும் வியப்பைத் தந்தது விக்ரமுக்கு.
அவள் கைவளையத்தில் இருந்து விடுபடாமல் உடம்பை மட்டும் வளைத்து, பேதையின் முகம் பார்க்கத் திரும்பியவன்,
“என்ன ஆச்சு உனக்கு?” மென்னகையுடன் வினவினான்.
“கீர்த்திகிட்ட அவ்வளவு கறாரா பேசுவீங்கன்னு நான் கனவுல கூட நினைக்கல. எனக்காகத்தான் செஞ்சீங்கன்னு புரிஞ்சுது. அதான் உங்களை இறுக அணைச்சு உம்மா தரணும்போல தோணித்து!” இமைகள் குடைசாய முணுமுணுத்தாள்.
அவள் செயலில் நெகிழ்ந்தான் எனினும், தன் எண்ணத்தைத் தெளிவுபடுத்தவும் அதுவே சரியான தருணமென உணர்ந்தான்.
“நாம வந்திருக்குறதே ரெண்டு வாரத்துக்குத்தான் காயுமா. மனஸ்தாபங்களை மறந்து ரெண்டுபேர் கிட்டயும் சந்தோஷமா பேசிப்பழகு; குழந்தைகளை ஆசை தீர கொஞ்சு; உனக்குப் பிடிச்சதை எல்லாம் அம்மா கையால கேட்டு வாங்கி சாப்பிடு;” கெஞ்சாத குறையாக வேண்டியவன் அவள் முகவாயை ஏந்தி,
“மதுரைக்குப் போனதும் குழந்தை விஷயத்தில் நீ சொன்ன மாதிரி, கடவுள் மேல பாரத்தைப்போட்டு, நம்மாலான முயற்சிகளை எடுப்போம். சரியா?” யாசிக்கும் குரலில் உரைத்தான்.
சம்மதமென குளமான கண்களுடன் தலையசைத்தவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.
சில நிமிடங்கள் அமைதியாக அவள் தலைகோதி உச்சி முகிர்ந்தவன், அவர்கள் காத்திருப்பார்கள் என நினைவூட்ட,
“ஃபை மினிட்ஸ் விக்கிபா!” என அவனை இறுக அணைத்துச் சிணுங்கினாள்.
“விளையாடாதே காயுமா!” என்று அவள் நெற்றியில் முட்டியவன், “நேரமாகுது… ஒரு செட் பேன்ட் ஷர்ட் எடுத்துவை. குளிச்சிட்டு வந்துடறேன்.” என்றான்.
“நேரமாகுதுன்னா, ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாமா?” குறும்பாகக் கண்சிமிட்டி அவனை வம்பிழுத்தாள்.
“வந்த வேலையைப் பாருடி!” அவன் செல்லமாக அவள் தலையில் தட்ட,
“வந்தது குளிக்கத்தானே!” உதட்டைச் சுழித்தவள், வேண்டாவெறுப்பாக விலகினாள்.
மனையாளின் காதலில் போதை தலைக்கேறியவன், நமுட்டுச் சிரிப்புடன் குளியலறையைத் தேடி அறையில் கண்ணுக்குத் தென்பட்ட ஒவ்வொரு வெள்ளை கதவையும் திறந்து பார்த்து,
“இந்த ரூம்ல அட்டாச்ட் பாத்ரூம் இல்லப்போல.” எனப் பதற,
அவன் முகபாவனையை ரசித்துச் சிரித்தவள், “சேர்ந்து குளிக்க மாட்டேன்னு சொன்னீங்கல. அதான் பாத்ரூம் மாயமா மறைஞ்சு போச்சு!” ஜீபூம்பா போல விரல்களை குவித்து விரித்து,
“இந்த வீட்டுல எது எது எங்கெங்க இருக்குன்னு போய் உங்க மச்சானை கேட்டுட்டு வாங்க!” நமுட்டுச் சிரிப்புடன் கதவைத் திறந்து வெளியே தள்ளினாள்.
மனைவியின் செயலில் கீழே விழாத குறையாக வரவேற்பறைக்கு வந்தவன், “ரிஷி! அந்த ரூம்ல பாத்ரூம் இல்லையா?” அப்பாவியாக வினவினான்.
“அந்த ரூம்ல பாத்ரூம் இல்லன்னு கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்வளவு நேரமா மாமா?” இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்தபடி கிண்டல் செய்தான்.
“அது…அது…பேசிட்டு இருந்தோம்…” விக்ரம் தலையைச் சொறிந்து அசடுவழிய,
“நேரமாச்சுன்னு சொல்லிட்டு இவன்கிட்ட என்ன வளவளன்னு பேசிட்டு இருக்கீங்க?” கண்களை உருட்டி அதட்டி, துவாலை அவன் கையில் திணித்த காயத்ரி, தம்பியையும் விட்டுவைக்கவில்லை.
“என்னடா என் புருஷனை நிக்க வச்சு கேள்வி கேக்குற?” என அதட்டினாள்.
அத்தனை நேரம் முகம்கொடுத்தும் பேசாத அக்கா, தன்னிடம் உரிமையுடன் சண்டையிட்டதும், ரிஷிக்கு உச்சிகுளிர்ந்து போனது.
“நேரம் போகுறது கூடத் தெரியாத அளவுக்கு மாமா அப்படி என்னக்கா வேலை செஞ்சிட்டு இருந்தாரு.” ரிஷி நீட்டி முழக்கிச் சீண்ட,
“உங்க மச்சான் கேக்குறான்ல சொல்லுங்க விக்கிபா!” எனக் கணவனை கோர்த்துவிட்டாள் காயத்ரி.
விக்ரம் முகத்தில் வெட்கம் அப்பிக்கொண்டது.
“மாப்பிள்ளை! பாத்ரூம் இங்கே இருக்கு.” வலதுபுறமிருந்த மற்றொரு வெள்ளை கதவைச் சுட்டிக்காட்டி, கேலி செய்யும் அக்கா தம்பி இருவரிடமிருந்தும் விக்ரமைக் காப்பாற்றினார் சாரதா.
விட்டால்போதுமென விக்ரம் குளியலறைக்குள் புக, காயத்ரியின் கண்கள் குழந்தைகளின் முகத்தைக் காணும் ஏக்கத்தில் வரவேற்பறையை மீண்டும் வலம்வந்தது. அவர்களைப் பற்றி கேட்க விடாமல் தன்மானம் குறுக்கே நிற்க,
“கீர்த்தி எங்கே மா?” அன்னையிடம் பொத்தாம் பொதுவாகக் கேட்டாள்.
“யாதவனுக்குப் பசியாற்ற போயிருக்கா ‘க்கா. இந்த ரூம்ல தான் இருக்கா. போய் பாக்குறீயா?” ரிஷிகுமார் எதிரில் இருந்த அறையைச் சுட்டிக்காட்ட,
“இருக்கட்டும். அப்புறம் பார்த்துக்கறேன்!” என்றவள் பெட்டியில் இருக்கும் பொருட்களை எடுத்துவைப்பதாகக் கூறி அங்கிருந்து நகர்ந்தாள்.
அக்காவின் கோபம் துளியும் குறையவில்லை என உறுத்திய ரிஷிகுமாருக்கு, அவளைச் சமாதானம் செய்வதைக் காட்டிலும், அவள் கோபத்திற்கு மூலகாரணமாக இருந்து மனையாளிடம் விசாரிப்பதுதான் பிரதானமெனத் தோன்றியது.
“அக்கா மாமாகிட்ட எதுவுமே சொல்லல! அப்படித்தானே?” அறைக் கதவைப் படாரென மூடி படபடவெனப் பொரிந்தான் ரிஷிகுமார்.
அவன் அதிரடி பேச்சில் அவளுக்குத் தூக்கிவாரிப்போட, முலையமுது பருகிக்கொண்டிருந்த யாதவனுக்குப் புரையேறியது.
குழந்தையின் உச்சந்தலையில் தட்டிக்கொடுத்து ஊதிவிட்டவள், “எ…என்ன சொல்லல….” திக்கித் திணறினாள்.
“ நடிக்காதே டி! உன் கண்ணைப் பார்த்தே உன் எண்ணத்தைச் சொல்லிடுவேன் ரித்தி.” ரிஷி சலித்துக்கொள்ள,
“குழந்தை பால் குடிச்சு முடிக்கட்டும்டா. நீ அக்கா மாமவைப் போய் கவனி!” சாக்கு சொல்லி தப்பிக்க முயன்றாள்.
அவனும் விடுவதாக இல்லை. எத்தனை நேரமானாலும் விடை தெரியாமல் போகமாட்டேன் என்னும் ரீதியில் அங்கேயே அமர்ந்தான்.
தந்தையின் வாசம் முகர்ந்த மகள் தூக்கச்சொல்லி சிணுங்க அவளை மடியில் விட்டுக்கொண்டு விளையாட்டு காட்டினான்.
வயிறு நிறைந்ததில் பொக்கைவாய் காட்டி இளித்தச் செல்லப்பிள்ளைக்கு முத்தமிட்டு, அவனைத் தொட்டிலில் விட்டவள், ரிஷி அருகில் வந்து அமர்ந்தாள்.
அவன் தோளினை மென்மையாகப் பற்றி, “ஊருக்கு வரோம்னு அண்ணி திடீர்னு சொன்னதும், அவங்க தத்தெடுக்கும் ஆசையோட வராங்களோன்னு நெனச்சேன் டா. அதான்…” கீர்த்தனா மென்றுவிழுங்க,
“ஓ! அப்போ அவங்க கேட்டிருந்தா, உங்களுக்குப் பொண்ணு வேணுமா, பையன் வேணுமான்னு தாராள பிரபுவா தத்துக்கொடுத்திருப்ப…அப்படித்தானே?” கண்கள் சிவக்க அதட்டினான்.
ஆம் இல்லை என இமைகள் படபடக்க எல்லாத் திசைகளிலும் தலையாட்டினாள் பேதை.
“வாயைத் திறந்து பதில்சொல்லுடி!”
“எப்படியும் நம்ம இந்தியா போயிட்டா எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுலதானே இருக்கப்போகுறோம் ரிஷி. குழந்தைகள் அவங்கள அம்மா அப்பான்னு கூப்பிட்டு உறவாடினாலும் சரி, அத்தை மாமான்னு கூப்பிட்டு உறவாடினாலும் சரி; அவங்க சந்தோஷம்தானே நம்ம சந்தோஷம்.” மெல்லிய குரலில் தன் எண்ணத்தைக் கூறினாள்.
அவனுக்கும் அவர்கள் சந்தோஷம் முக்கியம் என்றாலும், தந்தை என்ற ஸ்தானத்தை விட்டுக்கொடுக்கவும் மனமில்லாமல் தள்ளாடினான்.
“இல்ல ரித்தி. என்னால என் குழந்தைகளை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுத்தர முடியாது. உன் எண்ணம் உன்னதமானதா இருந்தாலும், இந்த விஷயத்தில் நீ என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக்கணும்னு எதிர்பாக்குறேன்.” திடமாகப் பேசி மடியில் கிடந்த மகளை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
அவன் தன் முடிவில் எத்தனை தீவிரமாக இருக்கிறான் என்று அவளும் தெள்ளத்தெளிவாக உணர்ந்தாள். சற்றுமுன் அண்ணனும் தன் எண்ணத்தை உறுதியாகக் கூறிவிட, இதற்குமேல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது சரியில்லை என்று உணர்ந்தாள்.
“மன்னிச்சிரு டா!” அவன் தோள் சாய்ந்து ஆத்மார்த்தமாக வருந்தினாள்.
“உன் மன்னிப்பைத் தூக்கி குப்பையில் போடு!” அவளிடமிருந்து எத்தனித்தான் ரிஷிகுமார்.
காந்தம்போல மறுபடியும் அவன் தோளில் ஒட்டிக்கொண்டவள், “நானே போஸ்ட் பார்டம் டிப்ரஷன்ல இருக்கேன்….” செல்லம் கொஞ்ச,
“அதையே சொல்லி என்னை ஏமாத்தாதே டி!” தர்க்கம் செய்தவன் மறுநொடியே தன் இரும்புக் கரங்களால், அவள் தளிர் உடலை வளைத்து அணைத்தான்.
அதில் சிலிர்த்த பெண்மனத்தில் பட்டாம்பூச்சி பறக்க, “அப்படிச் சொன்னா மட்டும் உடனே சமாதானம் ஆகுற?” பூரிப்புகளை மறைத்துக் குழைந்தாள்.
“அது உண்மையா பொய்யான்னு தெரியாது ரித்தி. ஆனால் நீ அப்படிச் சொல்லும் போது, எனக்கு நீ பிரசவ வலியில் துடிச்ச நிமிடங்கள் கண்முன்னே வந்து வாட்டியெடுக்குது.” என்றவனின் குரலும் சரிய,
“நிஜமாவே சாரி டா.” என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டவளின் காதல் மயக்கத்தைத் தெளிய வைத்தது இரவு ஏழு மணியாகிவிட்டதை உணர்த்திய குக்கூ கடிகாரம்.
“அச்சச்சோ! அண்ணா அண்ணி வந்து எவ்வளவு நேரமாச்சு; ரொம்ப நேரமா குழந்தைகளைக் கண்ணில் காட்டாம இருக்கோம்; தப்பா நெனச்சுக்கப் போறாங்க.” விருட்டென எழுந்தாள்.
அவள் கரத்தைப் பிடித்து தன்பக்கம் இழுத்தவன், “அதெல்லாம் எதுவும் நினைக்கமாட்டாங்க; அந்த ஜோடிப்புறாக்கள் ரொமான்ஸ் பண்ணிட்டு, இப்போதான் குளிக்கவே போயிருக்காங்க.” எனச் சற்றுமுன் அவர்கள் செய்த அலப்பறைகளைக் கூறிச் சிரித்தான் ரிஷிகுமார்.
பகையே ஆனாலும் தத்தெடுக்க மாட்டேன்,
பந்தமே முறிந்தாலும் தடுமாற மாட்டேன்,
பாவை அவள் உதிரத்தில் கலந்த வைராக்கியம்,
பச்சிளம் குழந்தைகளின் தரிசனத்தில் உடையுமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here