ஓம் ஸ்ரீ சாயிராம்
162 hits
மறப்போம் மன்னிப்போம்; மனமொத்து வாழ்வோம்,
மதுரமாய்ப் பேசி மலையிறங்கிய பாவைகள்,
மதுரை மல்லிகை சூடி மகிழ்ந்தார்களா – இல்லை
மல்லுக்கு நின்று ஓய்ந்தார்களா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 11…
மதுரை, இந்தியா
விடிந்தும் விடியாத ஏகாந்த வேளையில் அந்தப் பாரம்பரிய வீட்டைச் சுற்றி நடைப்பயின்ற ஜோடிகள், இனம் புரியாத இன்பத்தில் மிதந்தனர் .
குருவிக்கூடென அடுக்கு மாடி கட்டிடத்திலும், கச்சிதமான வில்லாவிலும் வசித்து வந்த இருவருக்கும், கண்களுக்குக் குளிமையான பூந்தோட்டம், அதில் நடுநாயகமாக வீற்றிருக்கும் கிருஷ்ணதுளசியின் மாடம், கிணற்றடி, வீட்டைச் சுற்றி நெடுநெடுவென வளர்ந்திருக்கும் தென்னை, வேப்பம், மா மரங்கள் சூழ, தனி வீட்டில் தங்குவது புதிய அனுபவம் தந்தது.
சென்னைக்குத் திரும்பிய விக்ரமுக்கும் காயத்ரிக்கும், மூச்சுவிடவும் நேரமில்லாத அளவிற்கு மதுரையில் வேலைகள் வரிசைக்கட்டி நின்றன. பரிச்சயமில்லாத ஊரில் ஒரு வாரத்திற்குள் புது வீட்டில் குடியேறி, வேலையிலும் சேரவேண்டும் என்ற நெருக்கடியுடன் மதுரைக்கு வந்தவர்கள், ரங்கவாணி ஹோம்ஸ் உரிமையாளர் சத்யநாராயணனை நேரில் சந்தித்ததும் அனைத்தும் தலைகீழாக மாறியிருந்தது.
தொழில் ரீதியான பேச்சு வார்த்தைகளுக்கு இடையில், தம்பதிகள் அவர்கள் லண்டன் பயணத்தைப் பற்றி பகிர்ந்து புகைப்படங்களைக் காட்ட, சத்யநாராயணன் தான் கீர்த்தனாவின் தோழி கேத்தரினின் மாமனார் எனத் தெரியவந்தது.
மகன் மருமகளின் நண்பர்கள் என்று அறிந்த சத்யநாராயணன் அவர்களுக்கு ராஜ உபச்சாரம் செய்தார்.
ரங்கவாணி ஹோம்ஸ் எழுப்பியிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்றிலேயே அண்ணன் தங்கை அருகருகில் வசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஒவ்வொரு தளத்திலும் எதிரெதிரே இரண்டு வீடுகள் என வடிவமைக்கப்பட்டிருந்த அந்த ஐந்து மாடிக் குடியிருப்புப் பகுதியில், முதல் தளத்திலிருந்த இரண்டு வீடுகளையும் எடுத்துக்கொள்ளச் சொன்னார். தங்கையின் வேண்டுகோளை நினைவுகூர்ந்த விக்ரம், முதலில் ஒரு வீடும், ரிஷிகுமார் இந்தியாவிற்கே நிரந்தரமாக வந்த பிறகு மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூற, அவரும் மனமுவந்து சம்மதித்தார்.
இரு நிறுவனங்களுக்கும் வேலை செய்ய விரும்பிய காயத்ரியின் கோரிக்கையையும் நிறைவேற்றி, அதற்கு உண்டான உதவிகளையும் அவரே முன்வந்து செய்துகொடுத்தார்.
புது வீட்டில் குடியேறும்வரை தங்கள் வீட்டில்தான் தங்கவேண்டுமென அன்புக்கட்டளையும் போட, சென்னைவாசிகள் மதுரை மண்ணின் வாசத்தை நுகர்ந்தபடி உல்லாசமாய் கைகோர்த்து நடைப்பயின்று கொண்டிருந்தனர்.
“இன்னும் நாலு சுற்று நடக்கலாம் விக்கிபா. மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு.” அவன் புஜத்தில் சாய்ந்து குழைந்தாள் காயத்ரி.
“எனக்கும் ஆசையாத்தான் மா இருக்கு. ஆபீஸுக்குக் கிளம்புணுமே.” சலிப்பாக உரைத்து அவள் நெற்றியில் முட்டினான் விக்ரம்.
“இன்னைக்கு ஒரு நாள் லீவு கேளுங்க. மீனாட்சி அம்மனை தரிசிச்சிட்டு, அப்படியே ஊர் சுற்றி பார்த்துட்டு வரலாமே.” கொஞ்சினாள் அவள்.
“அது சரி! வேலைக்குச் சேர வந்த நம்மளுக்கு, வீட்டுல தங்க இடமும் கொடுத்து, மூணு வேளை சாப்பாடும் போட்டு ராஜபோகமா கவனிச்சுக்குற முதலாளிகிட்ட முதல் நாளே லீவு கேட்கணுமா?” என்றான் விக்ரம் நக்கலாக.
கடமை உணர்ச்சிக்குப் பெயர்போனவன் என அறிந்தவள், “சரி! சரி! இன்னும் ஒரே ஒரு சுற்று நடந்துபோய் அந்தக் கிணத்துல எவ்வளவு தண்ணி இருக்குன்னாவது பார்த்துட்டு வரலாம்!” காயத்ரி கண்களைச் சுருக்க,
“எதுக்கு? என்னை அப்படியே தள்ளிவிடவா?” நமுட்டுச் சிரிப்புடன் வம்பு வளர்த்தான் அவன்.
முறைப்பு ஒன்றை பதிலாய் தந்தவள், அவனைத் தரதரவென இழுக்க,
“ஈஸ்வரா!!!!!” முன்வாசலில் இருந்து எழும்பிய கூக்குரல் அவர்கள் கவனத்தைக் கலைத்தது.
பதறியடித்து முன்வாசலுக்கு வேகநடை இட்டவர்களின் முகம் அந்த வீட்டுச் சில்வண்டின் குறும்பைக் கண்டு புன்னகையில் மலர்ந்தது.
“ஈஸ்வரா! அந்த மாங்காயை அடிச்சுத்தா!” பச்சைப்பசேலென காற்றில் அசைந்தாடிய காய்களை, தன் குட்டி ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டி, எம்பி எம்பி குதித்து, மழலை மாறாத கீச்சுக்குரலில் தந்தையிடம் அக்கப்போர் செய்து கொண்டிருந்தான் ஆறு வயது பூர்த்தியான சிறுவன் சிவா.
கூர்முனை கொண்ட கொக்கியுடன் கூடிய நீளமான கம்பம் ஒன்றை அந்த மாமரத்தின் இடுக்கில் இடவலமாகச் சுழலவிட்டு, “இதுவா! அதுவா!” எனக் கேட்டு, அவன் தந்தை விஸ்வேஷ்வரனும் அவனுக்கு இணையாகப் பதில் சொல்லிக்கொண்டிருக்க, அதை ரசித்தபடி திண்ணையில் அமர்ந்தனர் விக்ரமும், காயத்ரியும்.
அச்சமயம், காக்கைகளுக்கு உணவு எடுத்துவந்த சிவாவின் அன்னை ஷிவானி,
“அப்பாவை பேரு சொல்லிக் கூப்பிடாதேன்னு உனக்கு எத்தனைமுறை சொல்றது!” என மகனின் பின்முதுகில் இரண்டு அடிகள் கொடுத்து, பருப்பும் நெய்யும் கலந்த சாதத்தைத் தரையில் பரப்பினாள்.
இருபதுக்கும் மேலான காகங்கள் இமைப்பொழுதில் தரையில் சூழ்ந்து முட்டிமோதி உண்ண, காக்கைகளுக்கு நடுவில் முட்டியிட்டு அமர்ந்தான் சிவா.
“என்னடா சொக்கா? இன்னைக்காவது ஷிவானிகுட்டி அளவா உப்பு போட்டிருக்காளா?” எனக் காக்கைகளின் தலையைத் தடவிய சிறுவன், தன்னையே முறைத்துக்கொண்டிருக்கும் அன்னையை குறும்பாக ஏறிட்டு,
“கூப்பிடத் தானே ஷிவானிகுட்டி பேரு வச்சிருக்காங்க!” கிளுகிளுவெனச் சிரித்தான்.
ஷிவானியின் சுருங்கிய முகம் கணவர் பக்கம் திரும்பியது.
மனைவியின் முகபாவனைகளை காதலாய் ரசித்த விஸ்வேஷ்வரன், “விடுமா! நீதான் பேரு சொல்லிக் கூப்பிடாம, சீனியர் ஜூனியர்ன்ற; அவனாவது சொல்லட்டுமே!” மகனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு சொல்ல,
“அப்படிச் சொல்லு ஈஸ்வரா!!!” துள்ளலாய் தந்தைக்கு ஹை ஃபை தந்து அன்னையை வெறுப்பேற்றினான் சிவா.
அவன் குறும்பில் மயங்கி காயத்ரியும் விக்ரமும் வாய்விட்டுச் சிரிக்க,
“சதாசிவம்னு இவனுக்குத் என் தாத்தாவோட பேரு வச்சிட்டு, எப்படிப் பேரு சொல்லிக் கூப்பிட முடியும்னு சொல்லுங்க?” முகம் சுருக்கினாள் ஷிவானி.
“இவனுக்குத் தாத்தா பேரு வச்சிருக்க சரி. என்னைப் பேரு சொல்லிக் கூப்பிட என்ன கஷ்டமாம்?” விஸ்வேஷ்வரன் மனையாளின் தோள் சுற்றி அரவணைக்க,
“எனக்கு உங்களை இப்படிக் கூப்பிடத்தான் பிடிச்சிருக்கு!” கணவன் கைவளையத்தில் சிணுங்கினாள் ஷிவானி.
“சிவா!!!!!! எத்தனை மாங்காய் பறிச்ச!!!!!” என்ற மற்றொரு சில்வண்டின் சப்தத்தில் நால்வரின் கவனமும் துளசிமாடம் பக்கம் திரும்பியது.
ஷிவானியின் அம்மா மாதவி தான், காணொளி அழைப்பில் இணைந்திருந்த மகன் வழி பேத்தி “ஆன்னா என்னும் அன்னபூரணி” யின் முகத்தை கைப்பேசியின் திரையில் காட்டியபடி அவர்களை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்.
அவள் கீச்சுக்குரல் கேட்ட மறுநொடியே, தந்தை கையிலிருந்து குதித்து பாட்டியிடம் ஒட்டிக்கொண்ட சிவா,
“பறிக்கல பூரணி. ஈஸ்வரன் தான் குறி வச்சி அடிச்சுக் கொடுத்தார். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!” மாங்காயைக் கடித்து மென்று வெறுப்பேற்றினான்.
“என்னை ஏன்டா மாட்டிவிடுற?” மகனிடம் முணுமுணுத்த விஸ்வேஷ்வரன், “அவன் உன்னைச் சீண்டுறான் கண்ணம்மா. மாமா ஏணிமேல ஏறி, உன் மாமரத்துக்கு வலிக்காத மாதிரி மெதுவா பறிச்சேன் மா.”சமாளிக்க,
அங்கிருந்த அனைவரும் கலகலவெனச் சிரித்தனர்.
அந்தச் சிரிப்பொலியிலேயே மாமன் சொல்வது அனைத்தும் பொய் எனக் கண்டுகொண்டாள் குழந்தை. உடனே அங்கு வரவேண்டுமென அவள் ஆர்ப்பாட்டம் செய்ய,
அதில் குஷியான சிவா, “உடனே கிளம்பி வா. இல்லேன்னா எல்லா மாங்காயையும் பறிச்சிடுவேன்.” வேண்டுமென்றே சீண்டி அழவிட்டான்.
சேட்டை செய்யும் சிவாவை மடியில் அமர்த்திக்கொண்ட விக்ரம்,
“செல்லக்குட்டி, விக்கிமாமா இங்க வந்திருக்கறதே உன் மாமரத்தைப் பத்திரமா பார்த்துக்கத் தான். சிவா ஏதாவது குறும்பு செஞ்சான்னா, அவனுக்கு டைம் அவுட் கொடுத்துடறேன்?” என்றான் தன்மையாக.
லண்டனில் அவர்களுடன் சகஜமாகப் பழகியிருந்ததால், விக்ரம் சொன்னதை உடனே ஏற்றாள் குழந்தை.
“சரி விக்கிமாமா! நீங்க என் மாமரத்தைப் பத்திரமா பார்த்துக்கோங்க; நான் இங்க யாதவனையும் யாழினியையும் பத்திரமா பார்த்துக்கறேன்.” சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்தினாள்.
குழந்தை சமாதானமானதில் பெருமூச்சுவிட்ட குடும்பத்தினர் மற்ற விஷயங்களைப் பற்றி அளவளாவிய பின் அழைப்பைத் துண்டித்தனர்.
“மாமா! நீங்க எனக்கு டைம் அவுட் கொடுப்பீங்களா?” பள்ளியில் ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனைகளை நினைவவூட்டிக்கொண்ட சிவா வினவ,
குழந்தையின் பயம் கலந்த முகத்தை ரசித்த விக்ரம், “நீ ஆன்னாவை சீண்டினால் டைம் அவுட் கொடுப்பேன்” என்றான்.
“மாங்காய் பறிக்கறேன்னு சீண்டினால் தானே அவ இங்கே வந்து என்னோட விளையாடுவா.” அவன் இன்னும் அப்பாவியாக விளக்க,
உதடுவரை வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட விக்ரம், “ஊருக்கு வான்னு நேரடியா கூப்பிடறத விட்டுட்டு, சீண்டினா சரியா?” என்றான் கண்டிப்பாக.
“ம்ஹூம்….” பலமாகத் தலையாட்டினான் குழந்தை.
“குட் பாய். ஸ்கூல் லீவ் விட்டதும் அவ உன்னோட விளையாட வருவா. அதுவரைக்கும் நான் உன்னோட தினமும் விளையாடுறேன்.” விக்ரம் சொன்னதுதான் தாமதம்.
“உங்களுக்கு லெகோஸ் பிடிக்குமா? ஸ்விம் பண்ணுவீங்களா? கிரிக்கெட் விளையாட தெரியுமா? பேட் & பால் எடுத்துட்டு வரட்டுமா?” கண்களில் ஆர்வம் மின்ன கேள்விகளை அடுக்கினான் சிவா.
“விக்ரம் மாமாவுக்கு எல்லாம் தெரியும். பாட்டி உனக்குப் பிடிச்ச பூரியும் கிழங்கும் பண்ணிருக்கேன். சாப்பிட்டு வந்து விளையாடலாம்.” அறிவித்த மாதவி, குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, அனைவரையும் காலை உணவு அருந்த வரச்சொல்லி அழைத்தார்.
“சிவா கேக்குறதுல என்ன தப்பு. குழந்தைங்க ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்பப் பாசமா இருக்காங்களே; அவங்களை இந்தியாவுக்கே நிரந்தரமா வரச் சொல்லலாமே;” உணவு மேஜையில் அமர்ந்தபடி காயத்ரி வினவ,
என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் அசடுவழிந்தாள் ஷிவானி.
“நல்லா சொன்னீங்க போங்க!” கலகலவெனச் சிரித்த விஸ்வேஷ்வரன்,
“பேருக்குத் தான் இரட்டையர்கள். அண்ணனுக்கும் தங்கைக்கும் ஏணி வச்சாலும் எட்டாது. சாரங்கன் லண்டனை விட்டு வரமாட்டான்; இந்த அம்மணி மதுரையை விட்டு நகுரமாட்டா; அவ்வளவு ஏன், இந்த வீட்டை விட்டே வரமாட்டா.” அவர்கள் பசுமையான ஊடல் முதல் காதல் வரை அனைத்தையும் சொல்ல, மாப்பிள்ளையுடன் இணைந்துகொண்ட சத்யநாராயணனும் மாதவியும் மகளின் அலப்பறைகளைக் கூறினர்.
பதிலுக்கு, காயத்ரியும் விக்ரமும் தங்கள் கலாட்டா கல்யாண நிகழ்வுகளைப் பகிர்ந்துகொள்ள அவ்விடமே சிரிப்பொலியில் நிரம்பியது.
உண்டு முடித்தகையோடு சிவா, விக்ரமை விளையாட அழைத்தான். தான் தாத்தாவுடன் அலுவலகம் புறப்பட வேண்டுமென விக்ரம் குழந்தைக்கு மென்மையாக புரியவைக்க, சிவாவின் கெஞ்சல்களும் கொஞ்சல்களும் சத்யநாராயணன் பக்கம் திரும்பியது.
பேரனின் அன்பில் தோற்றவர், விக்ரமும் காயத்ரியும் மதியத்துக்கு மேல் வந்தால் போதுமென்று கூறி அலுவலகத்திற்குப் புறப்பட்டார்.
தாத்தாவுக்கு ஆயிரம் முத்தங்களை வாரி இறைத்த சிவா, விக்ரமை முன்வாசலுக்கு இழுத்துச் சென்றான்.
மாமரத்தின் நிழலில் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்தபடி விஸ்வேஷ்வரன் தன் எஸ்டேட் வேலைகளைக் கவனிக்க, அடுப்படியில் மாதவிக்கு உதவிமுடித்த பெண்களும் முன்வாசலுக்கு வந்தனர்.
குழந்தையுடன் கிரிக்கெட் விளையாடிய களைப்பில் விக்ரமும் அவர்கள் அருகில் வந்து அமர, உற்சாகம் குறையாத சிவாவோ லெகோஸ் டப்பாவை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வந்து மொத்தமாகக் கவுத்தான். சிவப்பு, மஞ்சள், நீலம் என ஆயிரக்கணக்கான பாகங்கள் சலசலப்புடன் விழுந்தன.
“மாமாவுக்குக் கொஞ்சம் பிரேக் கொடு ஜூனியர்.” அன்னையின் அறிவுரையை அவன் காது கொடுத்தும் கேட்கவில்லை.
குழந்தையின் அன்பில் கரைந்த விக்ரமும் வீடு, கார், நாய், பூனை, என வகைவகையாகச் செய்துகாட்ட, சிவாவின் உற்சாகம் பன்மடங்கானது.
குழந்தையுடன் ஒன்றி விளையாடும் கணவரைக் கண்ட காயத்ரியின் மனம் கனத்தது.
“குழந்தைங்கன்னா விக்ரமுக்கு கொள்ளை இஷ்டம். அவருக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கொடுக்கக் கூட முடியாத பாவி நான். ” காயத்ரி தன்போக்கில் புலம்ப,
அது ஷிவானிக்குக் கேட்டதோ இல்லையோ, விக்ரமின் செவிகளில் துல்லியமாக விழுந்தது.
அவன் பார்வையால் சுட்டெரிக்க, அதைக் கண்டுகொண்ட ஷிவானி, “மனச தளரவிடாதீங்க காயத்ரி. நீங்க முதல்ல செட்டில் ஆகுங்க. எனக்குத் தெரிஞ்ச மருத்தவர்கிட்ட அழைச்சிட்டுப் போகுறேன். ரொம்பக் கைராசிக்காரர்.” என்றாள் பரிவுடன்.
மறுபடியும் மனையாள் சிகிச்சை என்ற மாயவலையில் சிக்கிவிடுவாளோ என அஞ்சினான் விக்ரம். சிவாவிடம் சில பொம்மைகள் செய்யச் சொல்லி அவன் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டு,
“சிகிச்சை எதுவும் வேண்டாம்ங்க. ஏற்கனவே எல்லாத்தையும் முயற்சி செஞ்சு பார்த்துட்டோம். உடலாலும் உள்ளத்தாலும் நொந்ததுதான் மிச்சம்.” விரக்தியாகக் குறுக்கிட்டான்.
“இல்ல விக்ரம். நான் அழைச்சிட்டுப் போகுறேன்னு சொல்றது எனக்கு ரொம்பப் பரிச்சயமான சித்த மருத்துவர்கிட்ட. அனுபவத்திலும் கைதேர்ந்தவர்.” அழுத்திக்கூறினாள் ஷிவானி.
“இல்லீங்க. நாங்க பார்க்காத டாக்டரே இல்ல; கத்துக்குட்டி டாக்டர்கள் எங்களைப் பகடைக்காயா வச்சு தொழில் கத்துக்குறாங்கன்னா, அனுபவத்திற்கப் பெயர்போனவர்கள் எங்களுக்குப் பிள்ளை பிறக்க வழியில்லன்னு தெரிஞ்சும், இந்தச் சிகிச்சை பலனளிக்கும், அது சரியாவரும்னு தேனொழுகப் பேசி பணம் பிடுங்குறாங்க.” வலியோடு உரைத்தான்.
“உங்க ஆதங்கம் புரியுது விக்ரம். ஆனால் ஷிவானி குறிப்பிடுற சித்த மருத்துவர் நாடித் துடிப்பை வச்சே பிரச்சனை என்னன்னு கண்டுபிடிச்சிடுவாரு. அவர் சிகிச்சையும் வித்தியாசமானது. மருந்து மாத்திரைன்னு எதுவுமே இல்ல. உணவே மருந்துன்னு நம்புறவர். நம்ம அன்றாட பழக்க வழக்கம், உணவு முறைகள் இதுல சில மாற்றங்கள் செஞ்சுத் தருவாரு.
மூலிகைத் தோட்டத்தில் முதலீடு செய்யும் ஆராய்ச்சியில்தான் அவரைச் சந்திச்சோம்.” விஸ்வேஷ்வரன் நீண்ட விளக்கம் தந்து நம்பிக்கையூட்ட,
“என்னை உடனே அழைச்சிட்டுப் போங்க ஷிவானி.” படபடத்தாள் காயத்ரி.
“ம்ஹூம்! வேண்டாம் ஷிவானி. எங்களுக்குப் பிள்ளைவரம்னு ஒண்ணு இருந்தால் கடவுள் அனுக்கிரகம் செய்வாரு.” திட்டவட்டமாக மறுத்தான் விக்ரம்.
“தெய்வம் மனுஷ்ய ரூபேணன்னு சொல்லுவாங்க விக்கிபா. அது ஏன் உங்களுக்குப் புரிய மாட்டேங்குது?” எகிறினாள் காயத்ரி.
அச்சமயம் “காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா..” என விக்ரமின் கைப்பேசி சிணுங்க,
“சொல்லுடா ரிஷி!” எனப் பூரிப்பு மின்ன அழைப்பை ஏற்றவன் அங்கிருந்து நகர்ந்தான்.
“அவருக்கு உங்கமேல அளவுகடந்த காதல் காயத்ரி. அந்த ரிங்க்டோன்ல அவர் முகம் அப்படியே ஆயிரம் வாட்ஸ் பல்ப் மாதிரி பளிச்சுன்னு மின்னித்து.” ஷிவானி கிசுகிசுக்க,
“இல்லன்னு யார் சொன்னா! அதுதானே பிரச்சனை!” நடைப்பயின்றபடி பேசிக்கொண்டிருக்கும் கணவனின் அழகை உளமாற ரசித்தவள், “அவரை நான் சமாதானம் செஞ்சிக்குறேன் ஷிவானி. என்னை சித்த மருத்துவர்கிட்ட அழைச்சிட்டுப் போங்க ப்ளீஸ்.” என்றாள் கெஞ்சலாக.
ஷிவானியின் உபயத்தால், அந்த வாரயிறுதியிலேயே சித்த மருத்துவரைச் சந்தித்த காயத்ரி, வகைவகையான சூரணங்களுடன் தான் திரும்பி வந்தாள்.
குழந்தைபேறு சார்ந்த சிகிச்சைகளைத் தொடங்கும் முன், உடல் எடை, இரத்த அழுத்தம், சித்த மருந்துகளை எடுத்துக்கொள்ள ஏதுவாக ஜீரண சக்தி என அடிப்படை விஷயங்களைச் சரிசெய்ய வேண்டுமெனக் கூறி, அதற்காக உணவில் சேர்க்கக்கூடிய சேர்க்கக்கூடாத பண்டங்கள், உடற் பயிற்சிகள், போஷாக்கு தரும் சூரணங்கள் என ஒரு பட்டியலே தந்திருந்தார் அந்தச் சித்த மருத்துவர்.
எதிர்த்துப் பேசினால் வாக்குவாதம்; அனுசரித்துப் போனால் வாயில் சூரணம் என்றானது விக்ரமின் நிலை.
பிள்ளைவரம் இல்லாத ஏக்கத்தில் தவிக்கும் மனைவியின் நிலைமையைக் கருத்தில்கொண்டவன், முடிந்தவரை அவள் மனம்கோணாமல் பேசிப்புரியவைத்தும், பெரும்பாலான நேரங்களில் அமைதியாகவும் இருந்தான்.
அவன் சூழ்நிலை அறிந்த சத்யநாராயணனும், ஹரியும் தங்களால் முடிந்த அளவிற்கு காயத்ரியின் கவனத்தை அலுவல் வேலைகளில் திருப்ப, இரண்டு மாதங்கள் கடந்திருந்தது.
இதற்கிடையில் ரிஷிகுமாரைப் பிரிந்திருக்க மனமில்லாமல் இதோ அதோ என ஏதேதோ காரணங்கள் சொல்லித் தட்டிக்கழித்த கீர்த்தனா, சாரதாவின் விசா காலாவதியாகும் நாள் நெருங்க, வேறுவழியின்றி இந்தியாவிற்குப் புறப்பட்டாள்.
கருவுறாமை சிகிச்சைகளில் ஊறிப்போயிருந்த மனையாளுக்கு, யாதவன் யாழினியின் வருகை ஒரு மாறுதலை அளிக்கும் என்று யூகித்தான் விக்ரம். அவன் நம்பிக்கை வீண்போகாதவாறு, காயத்ரியும் குழந்தைகளுடன் ஐக்கியமாகவே செய்தாள். ஆனால் அதே சமயத்தில், பெண்களின் கூட்டணியில், காயத்ரியின் சிகிச்சை சார்ந்த இலவச அறிவுறைகளும் கவனிப்புகளும் கூடியது.
இதைச் செய்தால் எளிதில் கருத்தரிக்கலாம், அதைச் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும் எனப் பொழுதுக்கும் மகளின் ஆரோக்கியத்தில் கவனமாய் சாரதா ஒருபுறம்; இணையதளத்தில் கொட்டிக்கிடந்த கருவுறாமை சிகிச்சைகள் பற்றிய தகவல்களைப் படித்துத் தானும் குழம்பி, காயத்ரியையும் குழப்பிய கீர்த்தனா மறுபுறம்; என இருவருமாய் விக்ரமின் பொறுமையைச் சோதித்தனர் என்று தான் சொல்லவேண்டும்.
அன்று அலுவல் வேலைகளில் மூழ்கிய காயத்ரி, விக்ரமை வீட்டிற்குப் புறப்படச் சொல்லிக் கூற, தங்கையிடமும் மாமியாரிடமும் மனம்விட்டுப் பேச இதைவிட வேறு சந்தர்ப்பம் அமையாது என யோசித்தவன் உடனே கிளம்பினான்.
வாசற்கதவு அருகில் விக்ரமைக் கண்டுகொண்ட யாதவனும் யாழினியும் அவனிடம் ஏறிக்கொள்ள வேண்டுமெனப் பரபரத்தனர். கை கால்களைச் சுத்தம் செய்துகொண்டு வந்தவன் அவர்களை ஒரு சேரத் தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி,
“கீர்த்தி! உங்க ரெண்டுபேர் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” எனத் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
அச்சமயம் ரிஷிகுமார் காணொளி அழைப்பில் வர,
“உனக்கு நூறாயுசு ரிஷி.” இரண்டு பேருடனும் பேச வேண்டுமென்ற அண்ணனின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்ட பேதை, திரையை விக்ரம் பக்கம் திருப்பினாள்.
ரிஷிகுமாரின் திடீர் தரிசனத்தில் திடுக்கிட்ட விக்ரம், விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா எனத் தயங்க,
“ரித்தி ஏதாவது பிரச்சனை பண்ணறாளா மாமா?” இறுகிய குரலில் வினவினான் ரிஷிகுமார்.
உள்ளதை உள்ளபடி சொன்னால் அவர்களுக்குள் மனஸ்தாபம் வரக்கூடுமோ என அஞ்சிய விக்ரம், “இல்ல இல்ல டா. இது காயத்ரி பற்றி. சித்த மருத்துவச் சிகிச்சை அது இதுன்னு உடம்பை வருத்திக்குறா டா.” மனம் நொந்து பேச,
இவர்கள் பேக்சைக் கேட்டுக்கொண்டிருந்த சாரதா, “கவலைப் படாதீங்க மாப்பிள்ளை. சித்த மருத்துவச் சிகிச்சை கைமேல பலன் தரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.” நம்பிக்கை ததும்ப பேசினார்.
“இல்ல அத்தை! நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தைத் தெளிவா புரிஞ்சுக்கணும். எங்களுக்குக் குழந்தை பிறக்குறதுக்கு நூற்றில் இரண்டு சதவீதம் தான் வாய்ப்பிருக்குன்னு டாக்டர்ஸ் தெளிவா சொல்லிட்டாங்க.
சண்டைப் போட்டு மேலும் அவ மனசுடைக்க வேண்டாம்னுதான் அவ போக்குலயே விடுறேனே தவிர, எனக்கு காயத்ரி செய்யறது எதிலும் உடன்பாடில்லை.
நீங்களும் அவ மனசுல வீண் நம்பிக்கை வளர்க்காதீங்க; முடிஞ்சா அவளுடைய கவனத்தை வேற விஷயங்களில் திருப்பி, அவ எப்பவும் சந்தோஷமா இருக்குறா மாதிரி பார்த்துக்கோங்க.” மனத்தை அரித்துக்கொண்டிருந்த அத்தனை நெருடல்களையும் தன்னையும் மீறி உரைத்தவன் கண்கலங்கி நின்றான்.
விக்ரமின் உள்ளத்தை அறிந்த சாரதா உறைந்துபோக, வருத்தங்களை மறைத்து சுதாரித்திக்கொண்ட கீர்த்தனா,
“அட! நீயே உடைஞ்சு போனா என்ன அர்த்தம் அண்ணா; அண்ணியை நல்லபடியா பார்த்துக்கறது எங்க பொறுப்பு.” விறுவிறுவென அவன் கண்களைத் துடைத்துவிட்டு,
“என்ன சாருமா உம்முன்னு இருக்கீங்க. என் மருமகள், ‘நாத்தனார் பவர்’ என்னன்னு காட்டுவான்னு அண்ணனுக்கு எடுத்துச் சொல்லுங்க.” இலகுவாய்ப் பேசி மாமியாரின் மனவோட்டத்தையும் திசைதிருப்பினாள்.
மெல்லிய புன்னகையுடன் கீர்த்தனாவின் கன்னத்தை வருடினார் சாரதா.
காணொளி அழைப்பில் இணைந்திருந்த ரிஷி, “ரித்திமா. ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யறது இருக்கட்டும். மதுரைக்குக் கிளம்பி வந்தது நல்லதுக்குன்னு புரிஞ்சு, நீயும் சந்தோஷமா இருக்கணும்.” அன்றாடம் அவள் செய்து வந்த கலாட்டாக்களை நினைவூட்டி அறிவுறுத்தி, அவளை அண்ணன் சொல்படி நடக்கச் சொல்ல, பெரும்பாரம் குறைந்தது போல உணர்ந்தான் விக்ரம்.
வினையின் பயனை விரும்பி ஏற்கிறான் அவன்;
விமோசனம் தேடி விசனப்படுகிறாள் அவள்;
விதியின் விளையாட்டில் வெல்லப் போவது,
விட்டுப் பிடித்து உருகும் வயவனின் கனிவா – இல்லை
விடாப்பிடியாக மறுகும் மங்கையின் காதலா- மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…
பின்குறிப்பு:
எனது மூன்றாம் நெடுநாவலான “நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்” கதை படித்த வாசகர்கள், இந்த அத்தியாயத்தில் Guest Appearance தரும் சத்யநாரயணன், மாதவி, ஷிவானி, விஸ்வேஷ்வரன், சாரங்கன், கேத்தரின் கதாபாத்திரங்களைக் கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
“நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்” கதையின் Epilogueஆகவும் எடுத்துக்கொள்ளும் விதமாக, இந்த அத்தியாயத்தில் அவர்கள் வரும் காட்சியை வடிமைக்க முயற்சி செய்துள்ளேன்.
என்னுடைய இந்தத் தாழ்மையான முயற்சி பற்றிய உங்கள் கண்ணோட்டத்தை என்னுடன் பகிர்ந்துகொண்டு ஊக்குவிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here