ஓம் ஸ்ரீ சாயிராம்
163 hits
கானல் நீராகிப்போன காரிகையின் கனவை,
கிரகித்தும் கிரகிக்காமலும் உள்ளங்கள் திண்டாட,
காதும் காதுமாய் அரங்கேறிய ஊமை நாடகங்களை,
கவனிக்க மறந்தாளா; கண்ணீரில் கரைத்தாளா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 12…
விக்ரமின் சொல்லுக்கு இணங்கிய பெண்கள் இருவரும் காயத்ரியின் மனநலனில் கண்ணும் கருத்துமாய் இருந்தனர்.
மகளுக்காக எனப் பார்த்துப்பார்த்துச் சமைத்தபோதும், ஊட்டச்சத்து நிபுணர் போல சொற்பொழியும் தன் இயல்பை குறைத்துக்கொண்டார் சாரதா. சிகிச்சை சார்ந்த இடங்களுக்கு மட்டுமே அண்ணியுடன் சென்றுவந்த கீர்த்தனாவும், கடை வீதியில் சுற்றவேண்டும், குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவேண்டும், புதுப்படத்தைத் திரையரங்கில் முதல் நாள் முதல் காட்சி பார்க்கவேண்டும் எனச் சிறுபிள்ளைபோலச் சிணுங்கி காயத்ரியின் கவனத்தை வேறு விஷயங்களில் திருப்பினாள்.
அன்றும் அப்படித்தான்.
பெண்கள் இருவரும் தாங்கள் வாங்கிவந்த பொருட்களைக் காட்டியபடி, ஊர் சுற்றிய கதைகளை உற்சாகத்தோடு அளவளாவிக் கொண்டிருந்தனர்.
“அண்ணா! இந்தப் புடவை எப்படி இருக்கு?” லேவண்டர் நிற உடலும் அடர் பர்பிள் பார்டருமாய் மின்னிய பட்டுப்புடவையைக் குதூகலத்துடன் விரித்துக் காட்டினாள் கீர்த்தனா.
“பாருங்க விக்கிபா. அவளுக்குத் தினப்படி துணிமணி வாங்கிக்கப்போறேன்னு கடைக்குக் கிளம்பிட்டு, எனக்கு எவ்வளவு விலைகொடுத்து வாங்கிருக்கான்னு?” காயத்ரி செல்லமாக முறைக்க,
“ரொம்ப அழகா இருக்குடா!” தங்கையின் தலைகோதி மெச்சினான் விக்ரம்.
“அப்படிச் சொல்லுண்ணா!” என்று குதித்த கீர்த்தனா, அடுத்த வாரம் வரவிருந்த காயத்ரியின் பிறந்தநாளுக்கு அண்ணன் சார்பில் தேர்ந்தெடுத்தாகக் கூறி மீதி பொருட்களையும் காட்டி கதை அளக்க, மூவருக்கும் சுடச்சுட கிச்சடியும் தேங்காய் சட்னியும் எடுத்துவந்து பரிமாறினார் சாரதா.
மனஸ்தாபங்கள் மறந்து ஒன்றிப்பழகும் பெண்களின் அன்பில் பூரித்த வண்ணம் இரவு உணவை அருந்தியவனுக்கு மனையாளிடம் மனம்விட்டுப் பேச வேண்டுமெனத் தோன்றியது.
“நிறைய சாப்பிட்டுட்டேன் காயுமா. ஒரு வாக் போயிட்டுவரலாமா?” வயிற்றைத் தடவியபடி கண்களைச் சுருக்கினான்.
“நோ வே விக்கிபா. ரொம்ப அசதியா இருக்கு. படுத்தால் தூங்கிடுவேன்.” பெரிய கும்மிடு போட்டாள்.
‘அறிவுக்கொழுந்து!’ செல்லமாக மனதுக்குள் திட்டியவன், “சரி! தூங்குமா. நானும் நாளைக்கு ஃபேஸ் த்ரீ புக் பண்ண வரவங்களுக்கு ப்ரெசென்டேஷன் கொடுக்கணும். அதுக்கு ரெடி பண்ணிட்டுத் தூங்கறேன். அதுக்குள்ள ஜரிச்சிடும்.” என்றான் சமாளிப்பாக.
சரியென தலையசைத்து காயத்ரி நகுர, “அண்ணா! நாம வாக்கிங்க் போகலாமா.” குறுக்கிட்டாள் கீர்த்தனா.
பனிக்காற்றில் வெளியே செல்லக்கூடாது என சாரதா தடைவிதிக்க,
“ப்ளீஸ் சாருமா! உட்கார்ந்து உட்கார்ந்து சாப்பிட்டு எப்படித் தசைப்போட்டிருக்கேன் பாருங்க.” என இடுப்பின் தசைப்பற்றை கிள்ளிப்பிடித்துக் காட்டி, “இப்படியே குண்டா போனேன்னா, அப்புறம் உங்க மகன் என்னை சைட் அடிக்கவே மாட்டான்.” கண்களைச் சுருக்கிப் புலம்பினாள்.
தாஜாபண்ணும் அவள் கன்னத்தைக் கிள்ளிய சாரதா, “நடக்கறத பேசுடி!” எனக் கொஞ்சி, அரை மணி நேரத்தில் வந்துவிட வேண்டுமென கட்டளையிட்டாள்.
நேரத்தைக் கடத்தினால் ரிஷியுடன் சிறிது நேரம் பேசிவிட்டு உறங்கலாம் என்று நினைத்தவள், அண்ணனுடன் கதையளந்தபடி கட்டிடத்தைச் சுற்றி நடைப்பயின்றாள். வேண்டாவெறுப்பாகச் சென்றவனின் உள்ளமோ, அண்ணி புகழாரம் பாடும் தங்கையின் பேச்சில் ஏக்கத்தில் தவித்தது.
ஒருமணி நேரத்திற்குப் பின் அதே ஏக்கத்துடன் தன் அறைக்குள் புகுந்த விக்ரம், உறங்காமல் மடிக்கணினியில் முழ்கியிருக்கும் மனையாளைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.
“நீங்க எப்போ வாக்கிங்க் போயிட்டு வந்து, எப்போ ப்ரெசென்டேஷன்க்கு ரெடி பண்ணறது. அதனாலதான் என் சிறுமூளைக்கு எட்டியதை செஞ்சு வச்சிருக்கேன். ஒருமுறை பார்த்துட்டு, ஏதாவது மாத்தணும்னா சொல்லுங்க.” என்றாள் அலட்டலே இல்லாமல்.
“ரொம்பக் கசகசன்னு இருக்கு காயுமா. அஞ்சே நிமிஷம்! குளிச்சிட்டு வந்து பார்க்கவா?” கிளர்ச்சியுடன் ஓய்வறைக்குள் ஓடினான்.
புத்துணர்வு மின்ன திரும்பி வந்தவன், அவளது நீட்டியிருக்கும் கால்களில் தலைவைத்து படுத்து, “தாங்க்ஸ் காயுமா!” என்றான்.
மணந்த நாள்தொட்டே ஒருவரின் வேலையை மற்றொருவர் பார்த்து உதவிக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்ததால், அவன் பேச்சில் அவள் எந்த வித்தியாசத்தையும் கண்டுகொள்ளவில்லை.
“இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்வாங்களா?” மென்னகையுடன் அவன் சுருள் கேசத்தைக் கலைத்தபடி நெற்றியில் முட்டினாள்.
“இதுக்கில்ல மக்குப் பொண்டாட்டி!” என மடிக்கணினியை மூடிவைத்தவன், “எல்லாரும் மதுரையில் ஒண்ணா இருக்கலாம்னு சொன்னீயே; அதுக்கு தாங்க்ஸ்!” என்றபடி முகம்பார்த்துப் பேச ஏதுவாய் அவள் மடியில் இன்னும் ஒய்யாரமாய் படுத்துக்கொண்டான்.
“ஓ…இதுக்கெல்லாம் தாங்க்ஸ் சொல்வாங்களா!” ஸ்ருதி மாறாமல் கேட்டு, அவன் இருகன்னங்களையும் கிள்ளி மிரட்டினாள்.
“ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டுட்டு லண்டனுக்கு வந்த பொண்டாட்டி, எல்லாரும் ஒண்ணா இருக்கலாம்னு அன்பா சொன்னால், நன்றி சொல்றதுதானே நியாயம்?” எனக் கண்சிமிட்டினான்.
அதைக் கேட்டவளுக்கு என்னமோ போலானது. விரக்தியில் அவள் கண்ணீர் சிந்த,
விருட்டென எழுந்து அமர்ந்தவன், “ஏய் காயுமா! என்ன இது! சின்னப் பிள்ளை மாதிரி அழுதுட்டு… ஜாலியாத்தானே பேசிட்டு இருக்கோம்.” கண்களைத் துடைத்துவிட்டு, அவளைத் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“நிலையான புத்தி இல்லாம மாறிமாறிப் பேசி உங்களுக்கு நிறைய தொந்தரவு தந்துட்டேன் விக்கிபா?” அவள் விசும்பியதுதான் மிச்சம்.
கண்பார்க்க ஏதுவாய் அவள் முகத்தை நிமிர்த்திய விக்ரம், “அப்படின்னா, உனக்கு நம்பிக்கை கொடுக்காத என் செயல்கள்தான் இந்தப் பிரச்சனை பூதாகரமா வளர மூலக்காரணம்.” என்றவன்,
“ப்ளீஸ் காயுமா. அழாதே! இன்னைக்கு நான் வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் நுழையாததுமா, நீயும் கீர்த்தனாவும் என்கிட்ட போட்டிப்போட்டு கதை அளந்ததுல, எனக்குப் பழைய ஞாபகமெல்லாம் வந்துது. அந்தச் சந்தோஷத்தை உன்னோட ஷேர் பண்ணணும் ஆசையா பேசினா…” கெஞ்சலாய் கூற,
மறுகணமே புறங்கையால் கண்களைத் துடைத்துக்கொண்டவள்,
“அதான் நானும் என் நாத்தனாரும் ஒத்துமையா இருக்கோம்னு தெரியுதுல. நாம ஒரே வீட்டில் இருந்தால், நீங்களும் தினம் தினம் உங்க சந்தோஷத்தை என்னோட ஷேர் பண்ணலாமே.” என்றாள் கண்களில் ஏக்கம் ததும்ப.
“ம்ஹூம். அதுமட்டும் வேண்டாம்.” இறுகிய முகத்துடன் அவன் மறுப்பாய் தலையசைக்க,
“நாங்க என்ன செஞ்சு நிரூபிச்சா உங்களுக்கு எங்கமேல நம்பிக்கை வரும்?” முகத்தைத் தொங்கப்போட்டாள் அவள்.
“நம்பிக்கை எல்லாம் லண்டனிலேயே வந்துடுத்து. ஆனால் ஒரே வீடு வேண்டாம். எனக்கு என் பொண்டாட்டியோட தனிக்குடித்தனம் நடத்தத்தான் பிடிச்சிருக்கு.” என அவள் கூர்நாசியை ஒற்றை விரலால் வருடி கண்சிமிட்டினான்.
“இது என்ன விளையாட்டு விக்கிபா.” அவள் எகிற,
“விளையாட்டு இல்லம்மா. ஒரு வருஷம் என் மனைவியோட தனிக்குடித்தனம் நடத்தினதுல வந்த தெளிவு.” என்றான் பீடிகையுடன்.
ஏதோ மனத்தில் வைத்துக்கொண்டுதான் பேசுகிறான் என்று உணர்ந்தவள் அவனை அமைதியாக ஏறிட்டாள்.
“ஆமாம் காயுமா. கல்யாணமான புதுசுல பல் தேய்க்கும் டூத்பேஸ்ட் வாங்குறதுலேந்து வீட்டுக்கு ப்ரிட்ஜ் வாங்குற வரைக்கும் நீயும் கீர்த்தியும் கலந்துபேசி முடிவெடுக்கறீங்கன்னு தான் நெனச்சேன். ஒரு வருஷமா என் மனைவி தனியா நிர்வாகம் பண்ணப்போதான் புரிஞ்சுது, அவ கீர்த்தனாவின் விருப்பு வெறுப்புகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தந்திருக்கான்னு…” அவன் முடிக்கும் முன்,
“ஹாஹா!” என உரக்கச் சிரித்தவள், “உங்களுக்குச் சந்தோஷம் தலைக்கேறிப் போய் அந்நியாயத்துக்குப் பினாத்துறீங்க விக்கிபா.” அவன் செவியைத் திருகினாள்.
“சிரிச்சு மழுப்பாதே டி! உனக்கு வீட்டுச் சுவரில் க்ரீம் கலர் பெயிண்ட் தான் பிடிக்கும். கிச்சனில் கண்ணாடி போர்சிலின் பாத்திரங்கள் உபயோகிக்க அரவே பிடிக்காது. ஒன்லி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்.
டேபுள் மேல கவர் போட்டா பிடிக்காது; சோஃபாவில் கவர் போட்டால் மட்டும்தான் பிடிக்கும். அதையும் மாசத்துக்கு ஒருமுறை துவைச்சு மாத்தணும்.
சந்தன வாசனையுள்ள ஊதுவத்தி தவிர வேறெந்த நறுமணமானலும் உனக்கு ஒற்றைத் தலைவலி உண்டாக்கும்.
எடுத்த பொருள் எடுத்த இடத்துல வெக்கணும்; முக்கியமா ஷோகேஸ்ல வாட்ச், க்ளிப், ஃபோன் சார்ஜர்ன்னு கண்டதையும் வச்சு அதன் அழகைக் கெடுக்கக்கூடாது.” மூச்சுவிடாமல் பேசியவனை இமைக்காமல் பார்த்தாள்.
“என்னடி முறைக்குற; இது போதுமா இல்லை இன்னும் சொல்லட்டுமா?” என்றான் அதிகாரமாக.
கண்ணீரும் சிரிப்புமாய் வேண்டாம் என மறுப்பாய் தலையசைத்தவள், எம்பி அவன் கழுத்தில் கரம் கோர்த்துக் கட்டிக்கொண்டாள்.
“போச்சுடா மறுபடியும் வாட்டர் டேங்க் ஓபன் பண்ணியாச்சா; ” கேலி செய்தபடி அவள் பின்முதுகில் ஆதுரமாய் வருடியவன்
“சரி! இதையும் கேட்டுட்டு மொத்தமா அழு. உன் பிறந்தநாளுக்கு நான் வாங்கித்தரும் பரிசுப்பொருள் சின்னதோ பெருசோ, அதை நானே நேரடியா கடைக்குப் போய் தேர்ந்தெடுத்ததா இருக்கணும். ஆன்லைனில் வாங்கினாலும் அது செல்லுபடி ஆகாது.” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
இத்தனை விஷயங்களைத் துல்லியமாகக் கவனித்திருக்கானே எனப் பிரமித்தவள்,
“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் விக்கிபா. அதுக்காக நான் எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன்னு இல்ல. கீர்த்தனாவும் ரிஷியும் எனக்கு வேறவேற இல்ல. தம்பிக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்யறா மாதிரிதான் கீர்த்தனாவுக்கும் மனசார செய்யறேன். இதுக்காக எல்லாம் தனிக்குடித்தனம் நடத்தணும்னு அவசியமில்ல.” என்றாள்.
அவள் வியாக்கியானத்தில் சலிப்புத்தட்டியது அவனுக்கு.
“உனக்காக யோசிக்குற என்னோட உணர்வுகளைப் புரிஞ்சுக்கவே புரிஞ்சுக்காத. எப்படியோ போ. எனக்குத் தூக்கம் வருது.” என்று நகர்ந்தான்.
அவன் தோரணையிலேயே எத்தனை ஆசையாய் தனக்காக யோசித்திருக்கிறான் என்று உணர்ந்தாள் காயத்ரி.
குரல் கொடுத்தால் ஓடி வந்துவிடும் அளவிற்கு எதிரெதிர் வீட்டில் இருப்பதற்கும், கூட்டுக்குடும்பமாய் ஒரே வீட்டில் இருப்பதற்கும் அதிக வித்தியாசமில்லை எனத் தெளிந்தவள், உறக்கம் வராமல் உறங்குவதுபோலக் கண்களை இறுக மூடி பாவலா செய்யும் கணவனை ரசனையாகப் பார்த்துச் சிரித்தாள்.
அவன் காதருகில் நெருங்கி, “எனக்குத் தனிக்குடித்தனம் ஓகே!” எனக் கிசுகிசுத்து, அவன் முகமெங்கும் முத்தமிட்டாள்.
“என்னடி செய்யற?” அவள் மனமாற்றத்தில் நம்பிக்கை இல்லாதவன் திடமாய் முறைக்க,
“மக்கு விக்கிபா! கணவன் மனைவி யாரும் வாய்வார்த்தையால் தாங்க்ஸ் சொல்லிக்க மாட்டாங்க.” கண்களில் குறும்பு மின்ன கிண்டலும் செய்தாள்.
“முத்தம் மட்டும் போதுமா?” அவனும் அவளுக்கு இணையாக வம்பிழுத்து அவளை வளைத்து அணைத்தான்.
“ம்ஹூம்! மொத்தமா வேணும்; அதுவும் நாம ஹனிமூனுக்கு கோடைக்கானல் போகும் வழியில் மதுரைக்கு வந்தோமே. அந்தப் பசுமையான நினைவுகளை ரீக்ரியேட் பண்ணனும்.” உதட்டைக் கடித்து நீட்டி முழக்கியவளை அண்ணாந்து பார்த்தான் அவன்.
“இத்தனை விஷயங்களை ஞாபகத்தில் வச்சு சொல்ற என் விக்கிபாக்கு, நம்ம ஹனிமூன் நிகழ்வுகளும் மறந்திருக்காதுன்னு நினக்கறேன்.” கண்சிமிட்டினாள்.
மனைவியின் புது அவதாரத்தில் அவன் மெய்மறந்துபோக,
இன்னும் ஏன் தயங்குகிறான் என யோசித்தவள், “நம்ம நாலு பேரும் கோடைக்கானல் போனோம்னு முடிவெடுத்தது கீர்த்தனாவா இருந்தாலும், வழியில் மதுரையில் தங்கி மீனாட்சி அம்மனை தரிசிச்சிட்டுப் போகணும்னு திட்டவட்டமா சொன்னது நான்தான் விக்கிபா.” சுயமாக எடுத்த முடிவு என அழுத்திக்கூறி,
“நீங்க பேசப் பேச மலரும் நினவுகளா எல்லாம் கண்முன்னே விரிஞ்சுது. நம்ம வாழ்க்கையை மறுபடியும் முதலேந்து தொடங்கினா என்னன்னு தோணித்து.” இமைகள் குடைசாய முணுமுணுத்தாள்.
சிகிச்சைகள் என்ற பெயரில் இயந்திரகதியான அவர்கள் தாம்பத்தியம் புத்துயிர் பெற்றது போல உணர்ந்தான் விக்ரம். மனைவியின் எதிர்பார்ப்பில் காதல் மட்டுமே நிறைந்திருக்க அவளை இருகைகளிலும் அள்ளிக்கொண்டாட வேண்டுமென ஆசை தலைக்கேறியது.
“இன்னும் என்ன யோசிக்குறீங்க? அவள் உலுக்கியதில் சுயத்திற்கு வந்தவன், ‘எதுவுமில்லை’ என்ற ரீதியில் வாய்கொள்ளா புன்னகையுடன் தலையசைத்தான்.
“அப்போ, ரீக்ரியேட் பண்ணலாமா?” யாசிக்கும் குரலில் அவள் கேட்க,
“இரு! இதோ வந்துடறேன்!” என அலமாறியை நோக்கி ஓட்டமெடுத்தவன், அதில் நேர்த்தியாக அடுக்கியிருந்த உடைகளில் டிஷ்ர்ட் மற்றும் ட்ராக்ஸ் எடுத்துவந்து அவளிடம் நீட்டினான்.
பேதை புரியாமல் விழித்தாள்.
“நீதானே ரீக்ரியேட் பண்ணலாம்னு சொன்ன?” அவன் குறும்பாய் கண்சிமிட்ட, அனைத்தையும் நினைவுகூர்ந்தவளுக்கு வெட்கம் அப்பிக்கொண்டது.
தேனிலவு பயணத்திற்குத் தேவையான துணிமணிகளை ஒரே பெட்டியில் அடுக்கலாம் என விக்ரம் காதலாய் மொழிய, தன் புடவைகள் கசங்கிவிடும், அவன் டியோடரன்ட் வாசம் தன் துணிகளில் தொற்றிக்கொள்ளும் என உப்புச்சப்பு இல்லாத காரணங்களை எல்லாம் சொல்லி கடுப்பேத்தியிருந்தாள் காயத்ரி.
அவள் துரிதர்ஷ்டம், மதுரை விமான நிலையத்தில் பெட்டி மாறிப்போக, அதை அவர்கள் தங்குமிடத்திற்கு வந்தபின் தான் உணர்ந்தாள். இரவு பதினோரு மணியான நிலையில், பெட்டியை உடனே கண்டுபிடிக்கவும் வழியில்லாமல், கடைவீதிகளுக்கும் போகமுடியாமல், பக்கத்து அறையிலிருந்த கீர்த்தனாவை தொந்தரவு செய்யவும் மனமில்லாமல் கைகளைப் பிசைந்தபடி அவள் அசடுவழிய,
‘ஆண் சாபம் சும்மா விடுமா’ எனக் கேலியுடன், தன் டீஷர்ட் ட்ராக்ஸ் ஒன்றை நீட்டினான் கொடை வள்ளல்.
புடவை மட்டுமே உடுத்திப் பழக்கப்பட்டவள் சங்கோஜத்தில் தத்தளிக்க,
அன்றைய பொழுதிற்கு தன் உடைகளை அணிந்து சமாளித்தால், மறுநாள் காலை அவள் அணிந்துவந்த அதே புடவையை மடிப்புக் கலையாமல் கட்டிக்கொண்டு, காதும் காதும் வைத்ததுபோல கடைக்குச் சென்று புதுப் புடவைகள் வாங்கிவந்து விடலாம் எனச் சீண்டி அவளைத் தன்வழிக்குக் கொண்டுவந்திருந்தான்.
அவன் செய்த சில்மிஷங்களை எல்லாம் நினைவுகூர்ந்தவள்,
“அது…அது…மத்த விஷயமெல்லாம் ஓகே…இது வேண்டாமே ப்ளீஸ்…..” விட்டுவிடு எனக் கெஞ்ச,
“செஞ்சா முழுசா செய்யணும்; இல்லன்னே வேண்டாம்!” பொய்கோபத்துடன் முறுக்கிக்கொண்டான் அவன்.
செல்லச்சண்டைகள் அளவே இல்லாமல் நீடிக்க, அன்று போலவே இன்றும் விக்ரமே இறுதியில் வென்றான். தொளதொளவென டீஷர்ட் ட்ராக்ஸில் நெளிந்து சுளிந்து நின்றவளை உளமாற பருகியவனுக்கு பத்து வயது குறைந்ததுபோல தோன்றியது.
“அடுத்து என்ன செஞ்சேன்னு சொல்லு? விடாக்கண்டனாய் மடக்கினான்.
“விக்கிபா…” அவள் நெளிய,
“சாருமா!!! நீங்க செய்யறது எதுவும் சரியில்ல. உங்களை நம்பித்தானே ஊருக்குக் கிளம்பிவந்தேன்.” கீர்த்தனாவின் குரல் அதிர்ந்தது.
அதில் திடுக்கிட்ட காயத்ரி, வெளியே செல்ல எத்தனித்தாள்.
உணர்ச்சிகளின் பிடியில் மிதந்தவனோ, அது வழக்கமாக மாமியார் மருமகள் சண்டை எனக்கூறி, தன் காரியமே குறி எனக் களத்தில் இறங்கினான்.
சில நிமிடங்களில் குழந்தை அழும் குரலும் கேட்க, ஏதோ சரியில்லை எனப் பதறிய காயத்ரி,
“ரெண்டே நிமிஷம் விக்கிபா! என்ன ஆச்சுன்னு பார்த்துட்டு வந்துடுறேன்!” கதவை நோக்கி தெறித்து ஓடினாள்.
“டிரெஸ் மாத்திட்டுப் போ காயுமா!” விக்ரம் எச்சரிக்கும் முன் யாதவன் அவள் கையில் இருந்தான்.
“என்னடி ஆச்சு உனக்கு. குழந்தையைச் சமாதானப்படுத்தாம அம்மாகிட்ட வாக்குவாதம் பண்ணிட்டு இருக்க!” படபடவெனப் பொரிந்தபடி, வீரிட்டு அழும் குழந்தையின் முதுகில் தட்டி ஆசுவாசப்படுத்தினாள் காயத்ரி.
“நல்லா கேளு காயத்ரி. எனக்கு ஜுரம் அடிக்குது. இன்னைக்கு ஒரு நாள் குழந்தைகளைப் பார்த்துக்கோன்னு சொன்னா, கேட்காம அடம்பிடிக்குறா.” புலம்பிய சாரதா மருமகளை முறைத்தார்.
“நீங்களே சொல்லுங்க அண்ணி. ரெண்டுபேரும் பக்கத்துல ஆளிருந்தால் தான் தூங்கறாங்க. சரி, நடுவில் படுத்துச் சமாதானம் செய்யலாம்னு பார்த்தால், இவன் பத்தே நிமிஷத்துல உருண்டு கீழே விழுந்துடுறான்.
இதுவே ரிஷி இங்கே இருந்திருந்தால் என்னை இப்படித் திண்டாட விட்டிருப்பானா.” கீர்த்தனா அவள் பங்குக்குப் புலம்ப,
“அடியேய்! எனக்கு ஜுரம் இருக்குன்னு சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா?” குரலை உயர்த்தினார் சாரதா.
இவர்களை இப்படியே விட்டால் பஞ்சாயத்தை லண்டன் வரை பரப்புவார்கள் என்று உணர்ந்த காயத்ரி தானே களத்தில் இறங்கினாள்.
அம்மாவுக்குத் திடிரென காய்ச்சல் எப்படி வந்தது என விசாரித்தவள்,
“அம்மாவைத் தொந்தரவு பண்ணாதே; நான் வந்து படுத்துக்கறேன்.” எனத் தோளில் சாய்ந்து சமர்த்தாக விளையாடிக்கொண்டிருக்கும் யாதவனுக்குத் தட்டிக்கொடுத்தபடி, கீர்த்தனாவுடன் நடந்தாள்.
“என்னடி கோலம் இது. ஷர்ட் பேன்ட்டுனு…” சாரதாவின் விளிப்பில் காயத்ரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அத்தனை களேபரத்தில் காயத்ரியின் உடையை கவனிக்காத கீர்த்தனாவும் அவளை மேலிருந்து கீழ்வரை குறுகுறுவெனப் பார்த்தாள்.
எந்த நிலையில் வெளியே வந்திருக்கோம் எனத் தன் அசட்டுத்தனத்தை நினைத்து, கண்களை அழுந்த மூடி பல்லைக் கடித்துக்கொண்டவள்,
“அது….அது குளிர் ஜாஸ்தியா இருக்குன்ன்னு போட்டுட்டேன் மா….” திக்கித்திணறியவள், “யாதவனை நான் எங்க ரூமுக்கு அழைச்சிட்டுப் போறேன் கீர்த்தி. நீ யாழினியை மட்டும் கவனிச்சுக்கோ.” படபடவெனப் பேசி, தன் அறையை நோக்கி நடந்தாள்.
லண்டன் குளிரிலேயே புடவையைத் தவிர வேறெந்த உடையும் அணியாத அண்ணியின் இயல்பு அறிந்தவளுக்கு, அது சுத்தப்பொய் என்று தெள்ளத்தெளிவாகப் புரிந்தது. காயத்ரியின் முகபாவனைகளும் வினோதமாக இருக்க,
“ஆமாம் அண்ணி! அப்பவே தூக்கம் வருதுன்னு சொன்னீங்களே! இன்னுமா தூங்கல?” தெரிந்தும் தெரியாதது போல வினவினாள்.
“அது…அது…உன் அண்ணன்…” காரணம் தேடிய காயத்ரியின் உதடுகள் தந்தியடிக்க,
“ஓ அண்ணன் வரும்வரை தூங்காமல் காத்துட்டு இருந்தீங்களா?” நீட்டி முழக்கி அவளே எடுத்துக்கொடுத்தாள்.
வேகவேகமாகத் தலையசைக்கும் அண்ணியின் வெட்கத்தை ரசித்தவள், யாதவனின் பொருட்களைக் கொடுப்பதாகக் கூறி தன் அறைக்கு அழைத்துச்சென்றாள்.
நாத்தனாரின் குறுக்கு விசாரணையிலிருந்து தப்பிக்க நினைத்தவளோ, பரபரவென்று யாதவனின் பாட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு நழுவ,
“இருங்க அண்ணி. யாதுக்கு மாத்துத்துணி தரேன். அவனுக்கு அண்ணணோட ட்ரெஸ் ரொம்பப் பெருசா இருக்கும்.” அப்பாவியாக உரைத்தாள்.
வசமாக மாட்டிக்கொண்டேனே என காயத்ரி அசடுவழிய,
“எதுக்கும் ஒருமுறைக்கு ரெண்டுமுறை யோசிச்சிட்டு யாதவனை அழைச்சிட்டுப் போங்க. அப்புறம் என் மகனை கரடி அது இதுன்னு கிண்டல் செய்யக்கூடாது….” விடாமல் வம்புசெய்தாள் கீர்த்தனா.
நாணத்தை மறைக்கிறேன் என்ற பெயரில் காயத்ரி குழந்தையின் கழுத்தில் முகம் புதைக்க, அதில் குதூகலமான யாதவன் தனக்குத்தான் விளையாட்டு காட்டுகிறாள் என நினைத்து கலகலவெனச் சிரித்தான்.
“டேய் யாதவா! பேசாமே அம்மாகிட்டயே தூங்கு டா.” கீர்த்தனா இருகரம் நீட்டி அழைக்க, அவனோ காயத்ரியின் தோளில் சாய்ந்துகொண்டு, வரமாட்டேன் எனத் தர்க்கம் செய்தான்.
“ச்சீ போடி வாயாடி!” அவள் கன்னத்தில் செல்லமாகத் தட்டி, சிட்டெனப் பறந்தாள் காயத்ரி.
அசடுவழிந்தபடி அறைக்குள் நுழைந்த மனைவியை நமுட்டுச் சிரிப்புடன் ஏறிட்ட விக்ரம், யாதவனை தூக்கிக்கொண்டு, “என்னடா குட்டிப்பையா. உன் அத்தை அந்நியாயத்துக்கு வெட்கப்படுறா?” எனத் தன் பங்குக்குச் சீண்டினான்.
“ட்ரெஸ் மாத்திட்டுப்போன்னு சொல்லியிருக்கலாம்ல விக்கிபா?” அவள் சிணுங்க,
“அடீங்க! கூப்பிட கூப்பிடக் கேட்காம ஓடிட்டு, கேக்குறா பாரு கேள்வி!” செல்லமாக அவள் தலையில் தட்டினான்.
வெளியே நடந்ததை எல்லாம் விவரித்தவள், “என் கோலத்தைப் பார்த்தே கீர்த்தி புரிஞ்சுகிட்டா விக்கிபா.
ரெண்டு குழந்தையை வச்சிட்டு தனியா கஷ்டப்படுறாளேன்னு எனக்குத்தான் சங்கடமா இருந்துது. அதான் யாதவனைத் தூக்கிட்டு வந்துட்டேன். நாம இன்னொரு நாள் ரீக்ரியேட் பண்ணலாமா?” இமைகள் படபடக்க உரைத்தாள்.
தன் ஆதங்கத்தை மனத்தில் வைத்துக்கொண்டு தான் மனையாள் தயங்கி தயங்கி விளக்கம் சொல்கிறாள் என்று அவனுக்குப் புரியாமல் இல்லை.
“கீர்த்திக்காக செய்யாதேன்னு உன்னைக் கட்டிப்போடலமா. உன்னுடைய விருப்பு வெறுப்புகளையும் அவகிட்ட தயங்காம சொல்லுன்னுதான் சொல்றேன்.” தன் எண்ணத்தைத் தெளிவுபடுத்தியவன்,
“என் காயுமா இன்னைக்கு மாதிரியே இன்னொரு நாள் காதலாய் கேட்பாள்ன்னா, எத்தனை நாளானாலும் காத்திருக்க நான் தயார். எதைப்பற்றியும் யோசிக்காமல், ட்ரெஸ் மாத்திட்டு வா. இந்த வாலுப்பயனை நான் தூங்க வைக்கறேன்.” ஆத்மார்த்தமாக உரைத்து, குழந்தையோடு கட்டிலில் ஐக்கியமானான்.
அவள் உடை மாற்றிக்கொண்டு வருவதற்குள், யாதவன் மாமனின் மார்புக்குள் புகாத குறையாய் தலையைப் புதைத்துக்கொண்டு சுருண்டு படுத்திருந்தான்.
மறுபக்கம் வந்து படுத்தவள், ஒளிர்விளக்கின் வெளிச்சத்தில் தெரிந்த குழந்தையின் உருண்டை தலையையும், கணவனின் கன்னத்துக் குழியையும் கிள்ளி முத்தமிட்டாள். கிள்ளும் அவள் விரல்களைப் பற்றி, குழந்தையோடு சேர்த்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டான் விக்ரம்.
“விக்கிபா! எனக்கு ஒண்ணு தோணுது. சொல்லவா?” மெல்லமாகப் பேச்சுக்கொடுத்தாள்.
“ம்ம்…சொல்லுமா!”
“என்னமோ தெரியல் விக்கிபா. திகட்ட திகட்ட காதலிக்குற கணவனும், அத்தைன்னு வாய்நிறைய கூப்பிட குழந்தைகளும் இருக்குறப்ப ஏன் இல்லாத பிள்ளைப்பேறுக்காக வருந்தி, நீயும் கஷ்டப்பட்டு, சுத்தி இருக்கறவங்களையும் கஷ்டப்படுத்துறன்னு என் மனசாட்சி என்னைத் திட்டுறா மாதிரியே தோணுது.” கண்ணீர் மல்க உரைத்தவள்,
“இந்தச் சித்த மருத்துவ சிகிச்சையை நிறுத்திடவா?” என்று மறுகினாள்.
இதைத்தானே ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன் என மனத்தில் நினைத்தவன், அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல்,
“என் காயத்ரியின் விருப்பம்தான் என் விருப்பமும்!” உளமாற கூறி, பற்றியிருந்த அவள் விரல்களில் முத்தமிட்டான்.
தாம்பத்தியத்தின் ரகசியத்தை உணர்ந்து உருகியும்,
தாலாட்டின் ராகத்தில் உள்ளம் தொலைத்தும்,
தெவிட்டாத தேனாய் இசைக்கும் திருமகளின் – இந்த
தெளிவும் திருப்தியும் நிலைத்து நிற்குமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….


Please Comment Here