ஓம் ஸ்ரீ சாயிராம்
157 hits
மணந்தவன் பொழிந்த வற்றாத காதலும்,
மருமக்கள் மொழிந்த வசீகர விளிப்புகளும்,
மங்கையின் மசக்கை தாகத்தைத் தணித்ததா – மாறாக
மக்கட்பேறு தாபத்தைத் தூண்டிவிட்டதா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 13…
வேலை வேலை என ஓடிய காயத்ரிக்கு ஒத்தாசை செய்கிறேன் என்ற பெயரில், மாமியாரும் மருமகளும் வீட்டு வேலைகளை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள, வாரயிறுதிகளில் மட்டுமே சமையலறை பக்கம் எட்டிப்பார்த்தாள் அவள்.
பூரிக் கிழங்கை விரும்பிச் சாப்பிடும் கணவருக்கு, காலை உணவு சமைப்பதில் ஆயத்தமானவள், உருளைக்கிழங்கு மசாலா செய்துமுடித்து, பூரி திரட்டக் கட்டையைத் தேட, அது கிடைத்தபாடில்லை.
சமையலறையின் மூலைமுடுக்கு ஒன்றுவிடாமல் தேடி ஓய்ந்தவள்,
“கீர்த்தி! பூரிக்கட்டையை அப்படி எங்க தான்டி வச்சிருக்க!” வீடே அதிரும் அளவிற்குக் கத்தினாள்.
கீர்த்தனா ஓடி வந்த வேகத்தில், காணொளி அழைப்பில் இணைந்திருந்த ரிஷிகுமாருக்குத் தான் தலையே சுற்றியது.
“இந்த டிராயர்ல தானே அண்ணி வச்சிருக்கேன்!” ஜம்பமாக உரைத்தவள், அதில் இல்லை என்று கண்டறிந்ததும், “ஒண்ணுத்துக்கு ரெண்டா வாங்கி வச்சா என்னவாம்?” இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி முறைக்கும் அண்ணியிடம் அசடுவழிந்தாள்.
“உனக்கும் உன் மாமியாருக்கும் எடுத்ததை எடுத்த இடத்தில் வெக்குற பழக்கமே இல்ல.” சிடுசிடுத்த காயத்ரி, வரவேற்பறைக்கு வேகநடையிட்டாள்.
யாதவனை மடியில் அமர்த்திக்கொண்டு, உலகம் மறந்து கேலிச்சித்திரத்தில் மூழ்கியிருந்த கணவனை உலுக்கியவள், “பூரிக்கட்டை எங்கன்னே தெரியல விக்கிபா. மசால் தோசை செய்யவா?” என்றாள்.
தோசை என்ற வார்த்தைக் கேட்ட யாதவன், “ம்மா…ம்மா….” என விரல்களை மடித்தும் விரித்தும், ‘தோசை அம்மா தோசை!’ பாடலை மழலையில் மொழிய,
“யாதுகுட்டிக்கு எத்தனை மொறுமொறு நெய் தோசை வேணும்?” அவனைக் கிள்ளி முத்தமிட்டாள் காயத்ரி.
“அண்ணா! யாழினி எங்கே?” கீர்த்தனாவின் விழிகள் வரவேற்பறையை அளந்தது.
“உன்னைத் தானே தேடிட்டுப்போனா…” அலட்டலே இல்லாமல் பதிலுரைத்தான் விக்ரம்.
குழந்தை தன்னிடம் வரவில்லை என்று கீர்த்தனா முழித்த விதத்திலேயே, “யாழினினினி!!!” எனத் தங்கள் படுக்கை அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள் காயத்ரி.
காயத்ரி எதற்காக ஓடுகிறாள் என்ற காரணம் அறிந்த கீர்த்தனாவும், காரணம் அறியாத விக்ரமும் அவளைப் பின்தொடர்ந்தனர்.
இரு கால்களையும் பரப்பி வைத்துக்கொண்டு ஒய்யாரமாய் பால்கனியில் அமர்ந்திருந்தாள் அவர்கள் தாரகை.
பூரிக்கட்டை உட்ப்பட, டம்ளர், ஸ்பூன், கிளுகிளுப்பு, கீர்த்தனாவின் க்ளிப் என அனைத்தையும் கால்களுக்கு இடையில் வைத்திருந்தவள், அவர்கள் வந்ததைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் டம்ளரை கம்பிகளுக்கு இடையே நுழைத்தாள்.
“அடியேய் நிறுத்துடி!” தடுத்த காயத்ரி, அவளைத் தூக்கிக்கொண்டு, “இது என்ன கெட்டப்பழக்கம் யாழிமா?” மெல்லமாக அவள் கையில் அடித்து செல்லம்கொஞ்சினாள்.
கிளுகிளுவெனச் சிரித்து மழுப்பிய யாழினி அவள் கன்னத்தில் முத்தமிட்டு தாஜாபண்ணாள்.
“சேட்டை செய்யறது எல்லாம் உங்க மருமாள்! என்னையும் என் மாமியாரையும் குத்தம் சொல்ல வந்துட்டீங்களே.” கழுத்தை நொடித்த கீர்த்தனா,
திருதிருவென முழிக்கும் அண்ணனை வலிய இழுத்து, பக்கத்து நிலத்தில் காடு கணக்காக வளர்ந்திருந்த புதர் செடிகளைச் சுட்டிக்காட்டி, “நம்ம வீட்டுல காணாமல் போன பொருள் எல்லாம் இதுக்குள்ளத்தான் இருக்கும்!” மகளின் விஷமத்தை விவரித்தாள்.
எங்கோ வைத்துவிட்டோம் என நினைத்த தன் ராசியான பேனா அந்தப் புதையலில் தான் இருக்குமோ என விக்ரமும் உடம்பை வளைத்து அலச,
அவன் மறுப்பக்கம் ஒட்டிக்கொண்ட காயத்ரி, “அப்படியும் உன் அண்ணன் மேலத்தான் தப்பு. குழந்தைகளோட சுபாவம் தெரிஞ்சு பால்கனியில் வலை அடிக்காம….” இடைநிறுத்தியவள்,
“விக்கிபா! யாதவனை தனியா விட்டுட்டு வந்துட்டீங்களே…” பதற,
கீர்த்தனா வாசலுக்குப் பறந்தாள்.
“அவன் சமத்தா கார்டூன் பார்த்துட்டு இருக்கான் மா,” விக்ரம் பொறுமையாகப் பதில்சொல்ல,
“நீங்கதான் மெச்சிக்கணும்.” பெருமூச்சுடன் நகர்ந்தாள் காயத்ரி.
கண்ணுக்குத் தென்பட்ட பொருட்களை எல்லாம் சரமாரியாக வீசி எறிவது யாழினி என்றால், நடைப்பழக ஆரம்பித்த யாதவன், கிடைக்கும் சந்தர்ப்பத்தில் எல்லாம் வாசலுக்கு ஓடிவிடுவான்.
காயத்ரியின் கணிப்பு சரியாகவே இருந்தது.
மேல் தளத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் நான்கினை ஏறியிருந்தான். அதட்டினால் இன்னும் வேகமாக ஏறித் தடுமாறுவான் என அறிந்த கீர்த்தனா, கொஞ்சலாகப் பேச்சுக்கொடுத்தவாறு, அவனருகில் சென்று அலக்காகத் தூக்கினாள்.
அன்னையின் கைச்சிறையில் அகப்பட்ட யாதவன் கீழே விடும்படி திமிறினான்.
“படவா! கீழ விழுந்து தலையை உடைச்சிட்டா உன் பாட்டிக்கு என்ன பதில் சொல்றது?” சலித்தவள் அவன் முதுகில் இரண்டடி போட்டுக் கட்டுக்குள் கொண்டுவர,
அவனோ அழுதுக்கொண்டே விக்ரமிடம் தாவினான். கீர்த்தனாவின் முகம் இறுகியது.
“குழந்தைங்க சேட்டை செய்யறதும் ஒரு தனி அழுகு கீர்த்தி. அதை ரசிக்கறத விட்டுட்டுக் கோபப்படுறீயே!” யாதவனின் முகவாய் குவித்து முத்தமிட்ட காயத்ரி, “உன் அப்பன்தான்டா இதையெல்லாம் மிஸ் பண்ணறான்.” என்றாள்.
பிரபலமான இந்திய விமான நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்த போதும், மாதத்தில் நாலைந்து நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வரும் தன் தம்பியின் பணிச்சுமையை எண்ணி நொந்துக்கொண்டாள் அவள்.
குழந்தைகள் செய்த கலாட்டாவில், கணவனுடன் பேசிக்கொண்டிருந்ததையே முற்றிலும் மறந்திருந்தாள் கீர்த்தனா.
விருட்டெனக் கைப்பேசியை எடுத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனையாள் கைப்பேசியை ரங்கராட்டினமாகச் சுற்றியபோதே அழைப்பைத் துண்டித்திருந்தான் ரிஷிகுமார்.
சோகமே உருவாக நின்றவளின் முகத்தை நிமிர்த்திய காயத்ரி, “பூரி சாப்பிட்டுப் போய் உன் ரொமான்ஸ் கன்டினியூ பண்ணு!” என அழைத்தாள்.
“அவன் ஒண்ணும் அப்படியெல்லாம் ஃபீல் பண்ணல அண்ணி; பேச்சுலர் லைஃப் நல்லாவே எஞ்சாய் பண்ணிட்டு இருக்கான்.” புகார் வாசித்தாள் கீர்த்தனா.
ஏதோ உப்புச்சப்பு இல்லாத ஊடல் என யூகித்த விக்ரம், “உன்னோட இருக்கணும்னு தானே அவன் பிறந்தநாள் அன்னைக்கு லீவ் போட்டுட்டு வரான்.” எனக் கண்டித்தான்.
“நீதான் உன் மச்சானை மெச்சிக்கணும். முந்தின நாள் வந்துட்டு அடுத்த நாள் மதியமே வேலைன்னு பறந்து போகப்போகுறான். இதுக்கு நீ வேற ஜால்ரா.” அண்ணனையும் சேர்த்துக் கரைத்துக்கொட்டினாள்.
தகுதிகாண் பருவகாலத்தில் நினைத்தபோது விடுப்பு எடுக்க இயலாது என்று நினைவூட்டிய விக்ரம், பிறந்தநாள் அன்று வேலைக்குச் செல்வதும் கூட ரிஷிகுமார் வழக்கமாகச் செய்யும் ஒன்றுதானே என மச்சானுக்குப் பரிந்தான்.
“முன்னாடி எல்லாம் நானும் அவனும் மட்டும்தான். பிறந்தநாள் அதுவுமா வெளியூர் போனாலும், வாலு மாதிரி அவனோட ஒட்டிண்டு போயிடுவேன்; இப்போ முடியுமா? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா?” குறைப்பட்டாள்.
கீர்த்தனாவின் மனத்தைப் படித்த காயத்ரியின் இதழோரம் புன்னகை அரும்பியது.
“இப்போ உனக்கென்ன வேணும்? அவன் கூட நாள் பூறா இருக்கணும். அவ்வளவுதானே?” என்றவள்,
“நீயும் அவன்கூட போயிட்டு வா. நான் குழந்தைகளைப் பார்த்துக்கறேன்.” புன்னகை ததும்ப அவள் கன்னத்தில் தட்டிக்கொடுத்தாள்.
அண்ணன் தங்கை இருவரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
“நிஜமாவா அண்ணி!” ஏக்கம் வழிய உறுதிப்படுத்திக் கொண்டாள் கீர்த்தனா.
“நிஜமாதான் டி!” இமைமூடித் திறந்து சிரித்தவள், அவன் பயண விவரங்களைப் பற்றி வினவ, கீர்த்தனாவும் துள்ளலாகப் பதில் கூறிக்கொண்டிருந்தாள்.
“நடக்குறத பேசு காயத்ரி!” விக்ரம் குறுக்கிட,
அண்ணனுக்கு அழகு காட்டிய கீர்த்தனா, “வாங்க அண்ணி! சாப்பிடலாம். எனக்குப் பசிக்குது!” அப்பட்டமாக அவன் பேச்சைத் தடுத்தாள்.
தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் திட்டங்கள் தீட்டிய பெண்களைப் பற்றி சாரதாவிடம் புகார் வாசித்தான் விக்ரம்.
“பிறந்தநாள் அதுவுமா ரிஷி தனியா இருந்தால் எவ்வளவு மனசுடைஞ்சுப் போவான்னு உங்களுக்குத் தெரியாதா சாருமா. வேணும்னா நீங்க அவன்கூட ஊருக்குப் போயிட்டு வரீங்களா?” அன்னை மகனின் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஜாடைமாடையாக நினைவூட்டி சாரதாவின் வாயடைத்தாள் கீர்த்தனா.
அண்ணனின் அடுத்த ஆயுதம் ரிஷிகுமார் என்று அறிந்தவள், இறுகிய அவன் முகத்தை கையில் ஏந்தி, “இதைப்பற்றி உன் மச்சான் கிட்ட சொல்லித்தான் பாரேன். அப்புறம் காயத்ரி மந்திரத்தோட தனிக்குடித்தனம் நடத்தணும்ன்ற உன் கனவு ஆயுசுக்கும் கனவாவே போயிடும்.” என எச்சரித்து நமுட்டாகச் சிரித்தாள்.
ஒன்று விடாமல் அத்தனையும் உளறிக்கொட்டும் மனைவியைப் பார்வையால் மிரட்டினான் விக்ரம்.
அதையும் கண்டுகொண்டாள் அவன் அருமை தங்கை.
“அண்ணியை ஏன்னா முறைக்குற? உன் காதல் பித்துதான் ஊருக்கே தெரியுமே.” எனக் கூறி கலகலவெனச் சிரித்தாள்.
“நீ அவளுக்கு ரொம்பச் செல்லம் கொடுக்கற காயத்ரி!” மொத்த எரிச்சலையும் மனைவியிடம் காட்டினான் விக்ரம்.
“இவளாவது ரகசியம் வச்சுக்குறதாவது. அடுத்த ஒருமணி நேரத்துல ரிஷியையும் தாஜாபண்ணி சம்மதம் வாங்குறாளா இல்லையான்னு பாருங்க!” கீர்த்தனாவின் குணமறிந்த காயத்ரி, அவளைச் செல்லமாகக் கிள்ளியபடி அனைவரையும் உண்ண வருமாறு அழைத்தாள்.
“ஹாப்பி பர்த்டே ரிஷி!” சரியாக நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு, தன்னவனின் செவிகளில் கிசுகிசுத்தாள் கீர்த்தனா.
யாழினியை மார்பிலும், யாதவனை இடதுபக்கம் வளைத்துக்கொண்டும் படுத்திருந்தவனால் இம்மியும் நகுரமுடியவில்லை.
அமைதியாக வாழ்த்தும் மனையாளின் தோரணையில் அவனுக்குக் குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
சர்வதேச விமானங்களை இயக்கி வந்த ரிஷிகுமாரின் திறமையையும் அனுபவத்தையும் கருத்தில் கொண்டிருந்த நிறுவனத்தினர், இந்தியாவின் முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக விமானத்தை இயக்கும் சிறப்பு பணிக்கு அவன் பெயரைச் சிபாரிசு செய்திருந்தனர். அதற்கான செயல்முறை திறனை மதிப்பிட்டுத் தரவிருந்த தலைமை அதிகாரி நேர்காணலுக்குத் தேதி குறிக்க, அவனால் திட்டமிட்டபடி விடுப்பு எடுக்க முடியாமல் போயிருந்தது.
“இந்தமுறை நான் எதையும் வேணும்னே செய்யல ரித்தி.” என்றவன் நெருக்கடியை விவரிக்க,
மறுநாள் அவனுடன் பயணம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரகசியமாகச் செய்திருந்தவளோ, சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்டு, “இட்ஸ் ஓகே டா!” என்றாள்.
“உனக்கு என்மேல கோபமே இல்லையா ரித்தி?” குழம்பித் தவித்தான் அவன்.
“இதுல என்ன இருக்கு ரிஷி. எங்களுக்காகத் தானே ஒண்ணு ஒண்ணுத்தையும் யோசிச்சு யோசிச்சு செய்யற.” என அவன் நெற்றியில் இதழ்கள் பதித்தாள்.
என்றுமில்லாத உற்சாகத்துடன் அதிகாலையில் எழுந்தவனை, மனையாள் குழந்தைகள் அக்கா மாமா என அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் நீராட்ட, அன்னையின் விலகல் அவனுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. சாரதாவுக்கும் அது வசதியாகிப் போயிருந்தது.
அதற்கும் ஒரு முடிவுக்கட்ட எண்ணியிருந்த கீர்த்தனா, ஆஞ்சநேயர் கோவிலுக்குக் கிளம்பிய மாமியாரிடம், தாங்களும் குடும்பத்துடன் வருவதாகக் கூறிப் புறப்பட்டாள்.
மகனின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார் சாரதா. வெண்ணெய் காப்பு, வெற்றிலை மாலை, வடைமாலை, செந்தூரம் என நின்ற கோலத்தில் இருக்கரம் கூப்பி தரிசனம் தந்த ஆஞ்சநேயரை கண்ணீர் மல்க பிரார்தித்து, குடும்பத்தினர் ஒவ்வொருவரின் பெயரையும் நட்சத்திரத்தையும் கூறி அர்ச்சனை செய்தார்.
பிரகாரத்தைச் சுற்றி வந்து மரத்தடியில் அமர்ந்த குடும்பத்தினருக்கு மிளகுவடையைப் பகிர்ந்தளித்தார் சாரதா. தந்தையின் மடியில் இருபுறமும் அமர்ந்த குழந்தைகள் அதைக் குச்சிமிட்டாய் போல சப்பியும், வாயில் குழப்பியும் புசிக்கும் அழகை ரசித்தவள், மகனுக்குக் கேசரியை ஊட்டிவிட்டார்.
எந்த எதிர்வினையும் காட்டாமல் மென்னகையுடன் உண்ணும் ரிஷிகுமாரைப் பார்த்த பெண்கள் இருவருக்கும் ஆச்சரியமே.
அடுத்து அவர் மருமகளுக்கு ஊட்ட, “நான் இன்னைக்கு உண்ணாவிரதம் இருக்கேன் சாருமா.” வலதுகரம் நீட்டி உண்ண மறுத்தாள்.
“எ…என்…என்ன திடீர்னு…” சாரதாவின் குரல் தழுதழுத்தது.
“உங்க உண்ணாவிரதத்துக்கு ஒரு காரணம் இருக்குறா மாதிரி எனக்கும் ஒரு காரணம் இருக்கு.” பவ்வியமாக உரைத்து,
“ரிஷிக்கு ஊருக்குப் புறப்பட நேரமாகுது. வாங்க கிளம்பலாம்.” யாருக்கும் காத்திராமல் வாசலை நோக்கி நடந்தாள்.
‘பெண்புலி பதுங்கியது பாயத்தானோ!’ அசைபோட்டபடி மகிழுந்தை இயக்கினான் ரிஷிகுமார்.
கீர்த்தனாவின் செயலில் ரிஷிகுமாருக்கு உணவு இறங்கவில்லை என்றாலும், இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார், பூசனி ஹல்வா என அக்கா தனக்காகப் பார்த்துப் பார்த்துச் சமைத்திருப்பதை எண்ணி அக்கா மாமா குழந்தைகளுடன் இணைந்து அமைதியாக உண்டான்.
துளியும் பசி தாங்காத மருமகளின் சுபாவம் அறிந்த சாரதாவிற்குத் தான் நெருடலாக இருந்தது.
“எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி விதண்டாவாதம் செய்யறது நியாயமா? ப்ளீஸ் கீர்த்தி. பட்டிணி இருக்காதே டி.” சுற்றம் மறந்து கெஞ்சினார்.
“பின்ன என்ன சாருமா. அதான் உங்க மகளே உங்ககிட்ட வந்துட்டால; இதுக்கு அப்புறமும் நீங்க அடம்பிடிச்சா நியாயமா?” வெடித்தவள், யாழினியின் கையில் இட்லித் துண்டு ஒன்றைத் திணித்து, மாமியாரின் வாயருகில் நீட்டிக் காத்திருந்தாள்.
குழந்தையின் இடது கையில் பளிச்சிட்ட ஜீரக வடிவ மச்சம்; ஆ ஆ என மழலையில் மொழியும் அவள் கீற்றுப் புன்னகை; மருமகளின் ஆதங்கம் என எல்லாம் சேர்ந்து மனத்தைத் துளைக்க, குழந்தையின் கையிலிருந்த இட்லியை உண்டு, அந்தப் பிஞ்சுக்கரங்களை ஆனந்தக் கண்ணீரிலும், முத்தங்களிலும் நனைத்தார்.
மாமியார் மருமகளின் பரிபாஷைகளைக் கண்ட காயத்ரிக்கு அனைத்தும் விளங்கியது. புரியாமல் விழித்த கணவனிடம், பிறகு சொல்கிறேன் என ஜாடைகாட்டி, அம்மாவுக்கும் நாத்தனாருக்கும் பரிமாறினாள்.
மனைவியின் தோள் சுற்றி அரவணைத்த ரிஷிகுமார், “இந்த வருஷத்தோட சர்ப்ரைஸ் கிஃப்ட் இதுதானா?” நெகிழ்ந்து பூரித்தான்.
“இது ஆரம்பம்தான் புருஷா!” நெற்றிமுட்டி கண்சிமிட்டியவள் அவன் வாயில் ஹல்வாவைத் திணிக்க, விருந்து களைக்கட்டியது.
வெள்ளை முழுக்கைச் சட்டை அடர்நீலக் கால்சட்டை அதற்குத் தோதான டை எனப் பணிவுடையில் தயாராகி வந்த ரிஷிகுமார், தன்னவளின் கோலத்தைக் கண்டு பிரமித்தான்.
வெள்ளி ஜரிகை எம்ப்ரோய்டரி வேலைப்பாடுகள் செய்திருந்த இளஞ்சிவப்பு நிற சுடிதாரில் தயாராகி, அவனுக்கு இணையாக ஒரு பெட்டியுடன் காத்திருந்தாள் அவன் சரிபாதி.
“குட்டீஸை பார்த்துக்க இவ்வளவு பேரு இருக்காங்களேன்னு… நீயும் நானும் மட்டும் காஷ்மீர் போகலாம்னு…அது…. உன் பிறந்தநாளை நாம வழக்காம கொண்டாடுறா மாதிரி….” கீர்த்தனா நெளிய,
வருடம்தோறும் விதவிதமாய் இன்பதிர்ச்சி தரும் மனையாளின் அளவுகடந்த காதலை எண்ணியவனின் கண்கள் தன்னிச்சையாகப் பனித்தன.
“அட அட அட! ரோஜா திரைப்படம் பார்ட் டூ பாக்குறா மாதிரியே இல்ல காயுமா!” கிண்டல் செய்தான் விக்ரம்.
அதில் சுதாரித்துக்கொண்ட ரிஷிகுமார் மனையாளை இடுப்போடு சேர்த்து வளைத்து, “எனக்கும் அப்படித்தான் தோணுது மாம்ஸ்! எந்தத் தீவிரவாதி இயக்கத்தோட பிணைக்கைதியா என் பிறந்தநாளைக் கொண்டாட போறேன்னு தெரியல!” கேலி செய்து அவள் நெற்றியில் முட்டினான்.
“கடத்திட்டுப் போகுற அளவுக்கு எல்லாம் நீ வர்த் இல்லடா.” பார்வையால் விழுங்கியபடி ஏட்டிக்குப்போட்டி வாயடித்து அவன் கன்னத்தை நறுக்கென கிள்ளினாள் கீர்த்தனா.
“கிளம்பும்போது இது என்ன அசட்டுத்தனமான பேச்சு.” இருவரையும் கண்டித்த காயத்ரி, அவர்கள் வாய்மேலேயே அடி கொடுக்க,
மனைவியை இன்னும் இறுக்கமாக வளைத்துக்கொண்ட ரிஷிகுமார், “அப்போ ரெண்டு பேரும் ஜோடியா ‘புது வெள்ளை மழைன்னு’ பாடி ஹனிமூன் கொண்டாடிட்டு வரலாமா ரித்திமா?” தன்னவளின் கண்பார்த்து காதலாய் மொழிய, அவளும் வெட்கம் மின்ன தலையசைத்தாள்.
“அநேகமா நாம அடுத்த பேபி சிட்டிங்குக்கு தயாராகணும் போல காயுமா.” நமுட்டாகச் சிரித்தான் விக்ரம்.
கணவனின் கிண்டல் பேச்சில் காயத்ரியின் கரம் தன்னிச்சையாக வயிற்றை வருடிக்கொண்டது. அதை நொடியில் கண்டுகொண்ட விக்ரம், தன் அலட்சியத்தை எண்ணி நொந்து,
“சரி! சரி! நேரமாகுது! கிளம்புங்க.” விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
கீர்த்தனாவின் கண்கள் சாரதாவைத் தேடியது.
அவர்கள் புறப்படுவதைக் கண்டுகொண்டால், குழந்தைகள் ரகளை செய்வார்கள் என அஞ்சிய சாரதா, இருவரையும் தூங்க வைப்பதாகக் கூறி அறைக்கு அழைத்துச் சென்றது அவளுக்கும் தெரியும்தான். அவள் தயாராகும்போதே யாதவன் உறங்கியிருக்க, யாழினியை மடியில் கிடத்தி தாலாட்டிக்கொண்டிருந்தார் சாரதா.
அரை மணி நேரமாகியும் வெளியே வராத மாமியாரின் போக்கில், கீர்த்தனாவுக்கு நெருடலாக இருந்தது. அவரைக் கட்டாயப்படுத்தி உண்ணச் செய்தது அதிகப்பிரசங்கித்தனமோ எனக் குழம்பிய கீர்த்தனா விறுவிறுவென அறைக்குள் நுழைந்தாள்.
ஆழ்ந்து துயில் கொள்ளும் யாழினியை மடியில் வைத்தவாறு சிந்தனையில் கரைந்திருந்தார் சாரதா.
“சாருமா! என்மேல ஏதாவது வருத்தமா?” மெல்லமாக அவள் கன்னங்களை வருடினாள்.
“நீங்க இன்னுமா கிளம்பல?” சாரதா மென்னகையுடன் வினவ,
“உங்களை இந்த நிலையில் விட்டுட்டுப்போக எனக்கு மனசே வரல சாருமா!” இழுத்தாள் கீர்த்தனா.
அவள் எதை எண்ணித் தவிக்கிறாள் என்று நொடியில் உணர்ந்தவர், “அடியேய்! என்னை தங்கத்தட்டில் தாங்கும் என் மருமகள் இருக்கும்போது எனக்கு என்ன கவலை? நீதான் இனி ஒண்ணுக்கு ரெண்டு நாத்தனாரோட மல்லுக்கட்டணும்.” அதட்டலாகக் கூற,
நிம்மதி கொண்ட பேதையின் கண்கள் குளமாகின. தன் சாருமாவை இறுக அணைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள், “ஒரு பேச்சுக்காவது என்னை உங்க மகள்ன்னு சொன்னால்தான் என்னவாம்?” செல்லம் கொஞ்சி இடித்தாள்.
“உன்னை என் மகள்னு ஏத்துக்கிட்டா, அப்புறம் என் மகனுக்கு நான் எங்கேன்னு போய் பொண்ணு பிடிச்சிட்டு வருது?” சாரதா அப்பாவியாகக் கேட்க,
“உங்கள….” கண்களை உருட்டியவள், மீண்டும் தன் சாருமாவின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
திருமணமான நாள்முதல் அவள் சாருமா என்று உருகி குழைவதும், வேண்டுமென்றே சாரதா அவளை மருமகளே என அழுத்திக் கூறி சீண்டுவதும், அவர்களுக்குள் வாடிக்கையாகிப்போன ஒன்று.
“உன் பெரிய நாத்தனாரை விட இந்த அம்மணிக்கு இரண்டு மடங்கா மூக்குக்கு மேல கோபம் வரும் மருமகளே! யாழிகுட்டி எழுந்து ஊரக்கூட்டுறதுக்கு முன்னாடி கிளம்பு!” அவள் காதோரம் கிசுகிசுத்தார்.
மாமியாரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, துயில் கொண்டிருக்கும் இரு பிள்ளைகளின் உச்சி முகிர்ந்தவள், நிறைந்த மனத்துடன் தன்னவன் கைகோர்த்து காஷ்மீருக்குப் புறப்பட்டாள்.
விஷமத்திற்கும் சுட்டித்தனத்திற்கும் பெயர்போன,
வல்லவி அவளின் ரகசியப் பரிபாஷைகளில்,
விமானி அவன் வாயடைத்துப் போனானா – இல்லை
வம்புகள் வளர்த்து விவகாரம் செய்தானா- மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here