ஓம் ஸ்ரீ சாயிராம்
169 hits
இவள் என் ஏவாள் மார்பைத் தட்டிக் கொண்டான் அவன்;
இடம் பொருள் ஏவல் மறந்தாய்த் தூற்றினாள் அவள்;
இலக்குகள் பல நிறைந்த இதய வேள்வியில் – இறுதியில் வென்றது
இல்லற தர்மமா; தொழில் தர்மமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 15..
“மொண்ட்கோல்பியர் பிரதர்ஸ்க்கு பறவைகள் மாதிரி வானத்துல உயர பறக்கணும்னு ரொம்ப ஆசையாம். ஆனால் இறக்கை இல்லாம வேற எப்படிப் பறக்கறதுன்னு யோசிச்சவங்களுக்கு, காத்துல பறக்கும் புகையைப் பார்த்ததும் ஒரு ஐடியா வந்துதாம்.”
இரட்டையர்களுக்கு வெப்பக்காற்று பலூன் கண்டுபித்த கதையை சொல்லிக்கொண்டே, பலூனில் ஒரு மூங்கில் கூடையை இணைத்த ரிஷிகுமார்,
“இப்போ இதுல யாரெல்லாம் பறக்கப்போறாங்க?” என இராகமாய் வினவினான்.
“க்வா..து…து” எனத் துள்ளிய யாழினி, தன் கையில் வைத்திருந்த வாத்து பொம்மையையும், ஆடு பொம்மையையும் அந்தக் கூடையில் வைக்க,
“ஊஊஊஊஊ…” என இசைத்தபடி சேவல் பொம்மையை நுழைத்தான் யாதவன்.
“வெரி குட்!” இப்ப நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் பறக்க விடலாமா?” என ரிஷி பலூனை உயரப் பிடித்துக்கொள்ள, பிள்ளைகள் இருவரும் கைதட்டி ஆரவாரம் செய்து குதித்தனர்.
அச்சமயம் பணியிலிருந்து திரும்பிய விக்ரம், தங்கள் வீட்டுச் சாவியை வாங்க அங்கு வந்திருந்தான்.
“அடேய் ரிஷி! ப்ளேன், ஹெலிகாப்டர் இதைத் தவிர உனக்கு வேறெதுவுமே தெரியாதா டா?” கேலியாகச் சிரிக்க,
“இந்தக் கதைக்கு என்ன குறைச்சல் மாம்ஸ். உங்க பொண்டாட்டி சொல்ற பாட்டி வடை சுட்ட கதைக்கு இது எவ்வளவோ பெட்டர்.” சலிக்காமல் பலூனைப் பறக்கவிட்டு, பிள்ளைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தான்.
“அக்காவும் தம்பியும் அப்டேட் ஆகுங்க டா!” தலையில் அடித்துக்கொண்ட விக்ரம், “யாரெல்லாம் விக்கிப்பாவோட பெப்பா பிக் பார்க்க வரப்போறீங்க?” அழைக்க, இரட்டையர்கள் இருவரும் நான் நீ எனப் போட்டிப்போட்டு அவன்மேல் ஏறிக்கொண்டனர்.
அலுவல் பையை ஓரம்கட்டிவிட்டு, குழந்தைகளை இருபுறம் அமர்த்திக்கொண்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான் விக்ரம்.
“எந்த பெப்பா பிக் எபிசோட் பார்க்கலாம்?” குழந்தைகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியபடி திரையை முன்னும் பின்னுமாக ஓட்டும் மாமனை கண்கொட்டாமல் பார்த்த ரிஷிகுமார், “மாம்ஸ்! கிட்ஸ் கார்டூன் கரைச்சு குடிச்சிருக்கீங்க போலவே!” என்றான் பிரம்மிப்பாக.
“இப்போ பாரு!” பெருமிதம் பொங்க விக்ரமும் ஒரு காணொளி பதிவை தேர்வு செய்தான்.
‘டின்…டின்…டின்’ என்ற இசையுடன், ‘தி பலூன் ரைட்’ என்ற அப்பதிவில் மிருகங்கள் ஒரு வெப்பக்காற்று பலூனில் உல்லாசமாய் பறப்பதுபோல காட்சி வர, ரிஷிகுமார் வெடித்துச் சிரித்தான்.
“சரி! சரி! எனக்கு நேரம் சரியில்லை. வீட்டுச் சாவியைக் கொடு! நான் கிளம்புறேன்!” அசடுவழிந்து விக்ரம் புறப்பட,
குழந்தைகளுக்கு நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை எடுத்துவந்த கீர்த்தனா, “எப்ப ‘ண்ணா வந்த? அண்ணி எங்க? என வழிமறித்தாள்.
காயத்ரி வாசலில் காய்கறிகள் வாங்கிக்கொண்டிருப்பதாகப் பதிலளித்தவன், வீட்டுச்சாவியைக் கேட்டு நழுவ, ரிஷியோ அவனை விடுவதாக இல்லை.
அவன் சற்றுமுன் செய்த அலப்பறைகளை கீர்த்தனாவிடம் ஒன்றுவிடாமல் கூறி வயிறுகுலுங்க சிரித்தான்.
“மாமனும் மச்சானும் எந்தக் காலத்துல இருக்கீங்க?” இருவரையும் சேர்த்து கலாய்த்த கீர்த்தனா, தொலைக்காட்ச்சிப் பெட்டியில், குத்துப்பாட்டு ஒன்றை ஒலிக்கவிட்டாள்.
மறுகணமே இரண்டு வாண்டுகளும் தையத்தக்காவெனக் குதிக்க ஆரம்பித்துவிட்டனர். கண்களைச் சுருக்கியும், நாக்கை துருத்தியும் இடுப்பை வளைத்தும் எனப் பிள்ளைகள் செய்யும் அட்டகாசம் போதாதென்று, கீர்த்தனாவும் சேர்ந்து குத்தாட்டம் ஆட, ரிஷியின் முகத்தில் ஈ ஆடவில்லை.
காதைத் துளைத்த பாட்டொலியின் சத்தத்தில் வரவேற்பறைக்கு ஓடிவந்த சாரதா ஒலியைக் குறைக்க, வாண்டுகள் இருவரும் அவளிடம் சண்டைக்கு நின்றனர்.
“வால்யூம் ஏன் குறைக்குறீங்க சாருமா?” கீர்த்தனாவும் அவர்களுக்கு இணையாக முகம் சுருக்கினாள்.
“குழந்தைகளுக்குப் புரியுதோ இல்லையோ, நல்ல விஷயங்களைச் சொல்லித்தரணும்னு சொல்லிருக்கேனா இல்லையா?” மருமகளைக் கண்டித்தவர், சிணுங்கும் குழந்தைகளைத் தன் எதிரில் அமரவைத்து,
“யாது கண்ணா! அ சொல்லு!” என இசைப்பாட, அவனும் கிளிப்பிள்ளை போல பவ்வியமாக மொழிந்தான்.
“யாழிகுட்டி! அடுத்து என்ன வரும்?”
“ஆஆஆஆஆ….” ஆலாபனையே செய்தாள் அவர் செல்லப்பேத்தி.
அதன் பிறகு ‘இ’ என யாதவனும், “ஈஈஈஈஈஈஈஈஈ” எனப் புதிதாய் முளைத்தப் பற்களைக் காட்டி இளித்தபடி யாழினியும், வரிசைக்கட்டி உயிர் எழுத்துக்களை மழலையில் மொழிந்து, கடைசியில் “அக்குகுகுகுகுகு” என ஒரு சேர இசைத்தனர்.
அச்சமயம் இருகைகளிலும் பை நிறைய காய்கறிகளுடன் வாசலில் வந்து நின்ற காயத்ரியைக் கண்ட பிள்ளைகள், ‘மம்மா! மம்மா!’ என ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பாய்ந்தோடினர்.
“அத்தை குளிச்சிட்டு வந்து தூக்கிக்கிறேன் டா செல்லங்களா!” அவள் தொட்டும் தொடாமலும் கொஞ்ச, அவர்களோ, அந்தக் க்ஷணமே தூக்கிக்கொள்ள வேண்டுமென நச்சரித்து அவள்மேல் ஏறியும் கொண்டனர்.
“பசங்க ஆசையா கூப்பிடுறாங்கல. கொஞ்ச நேரம் விளையாடிட்டு அப்புறம் போய் குளியேன்டி!” சாரதா கண்டிக்க,
“உங்கள வீட்டுச் சாவியைத் தானே வாங்கிட்டு வரச்சொன்னேன்.” அம்மாவிடம் பேசாமல் விக்ரமிடம் சிடுசிடுத்தாள் காயத்ரி.
“வந்ததும் வராததுமா மாப்பிள்ளையை ஏன்டி திட்டுற. உனக்கு உடம்பக்கு ஏதும் முடியலையா? ஆபிஸ்ல வேலை ஜாஸ்தியா?” சாரதா படபடவெனக் கேள்விகளை அடுக்க,
“மகன் வீடு செட் பண்ணதும் பெட்டி படுக்கைகளையெல்லாம் தூக்கிட்டு கிளம்பின உன்கிட்ட எனக்கு என்ன பேச்சு? சாவியைக் கொடு; நான் கிளம்புறேன்” கழுத்தை நொடித்தாள் காயத்ரி.
இந்தியாவில் வேலை நிரந்தரமானதுமே, முன்பே திட்டமிட்டிருந்தபடி எதிர் வீட்டில் குடியேறியிருந்தான் ரிஷிகுமார்.
கடந்த ஒருமாத காலமாக இளையவர்கள் இங்கும் அங்குமாய் மாறிமாறி இருக்க, சாரதா மட்டும் பூஜை புனஸ்காரம், சமையல் என அனைத்தையும் மகன் வீட்டில் இருந்தபடியே செய்து, பதார்த்தங்களை மட்டும் மகளுக்கு அனுப்பிவைத்தார். அதில் காயத்ரியின் கோபம் தலைக்கேறி போயிருந்தது.
“இதுதான் காரணமா!” தலையைச் சிலுப்பிக்கொண்ட சாரதா, “நீயும் மாப்பிள்ளையும் வேலைக்குப் போனதுக்கு அப்புறம், நான்மட்டும் அங்கே தனியா உட்கார்ந்துட்டு என்ன செய்யப் போறேன்னு தான்….” முடிக்கும் முன்,
“சமாளிக்காதே மா. இவங்க போன வாரம் காஷ்மீர் போனப்ப கூட, வீம்புக்குன்னா தனியாத்தானே இருந்த.” எகிறினாள் காயத்ரி.
“மாப்பிள்ளைக்கு காயத்ரி மந்திரத்தோட தனிக்குடித்தனம் நடத்த ஆசைன்னு சொன்னாங்க. அதான்……” சாரதா கிண்டலாய் கண்சிமிட்ட,
அவரிடமிருந்து இப்படிவொரு காரணம் வருமெனச் சற்றும் எதிர்பார்க்காத காயத்ரிக்கும் விக்ரமுக்கும் தூக்கிவாரிப்போட்டது.
“ரித்திக்குத் தெரிஞ்சா ஊருக்கே தெரிஞ்சா மாதிரின்னு உனக்குத் தெரியாதா ‘க்கா!” இடைபுகுந்த ரிஷி, குழந்தைகளின் விருப்புவெறுப்புகளைப் பற்றி பெருமையடித்த அண்ணன் தங்கை கூட்டணியை விவரித்து,
“இதுல நீயும் நானும் அப்டேட் ஆகணும்னு வேற நக்கல் பண்ணறாங்க ‘க்கா.” அப்பாவியாகக் குழைந்தான்.
“யாது யாழிக்கு டிவி பாக்குற பழக்கம் வந்ததே அவங்க ரெண்டு பேராலத்தான் டா.” இருவரையும் அதட்டலாகப் பார்த்தவள்,
இந்தமுறையாவது பத்து நாள் சேர்ந்தா மாதிரி லீவ் போட்டுட்டு வந்திருக்கலாம்ல ரிஷி. குழந்தைகள் வேகவேகமா வளருற இந்தப் பருவம், நீ கேட்டாலும் திரும்ப வராதுடா.” ஆற்றாமையுடன் உரைத்து குழந்தைகள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
“பத்து நாள் என்னக்கா. இனி அடுத்த வேலை கிடைக்குற வரை, என் செல்லக் குட்டீஸோட தான் இருக்கப்போறேன்.” பூரிப்பு மின்ன பதிலளித்தவன், குழந்தைகளுடன் சேர்த்து அக்காவையும் அணைத்துக்கொண்டான்.
“அடுத்த வேலையா? அடுத்த ஸ்கெட்யூல் வியாழக்கிழமை போட்டிருக்குறதுனால தான் சீக்கிரம் கிளம்பி வந்துடீங்கன்னு கீர்த்தி சொன்னா.” குறுக்கிட்ட விக்ரம் தங்கையை ஏறிட,
அவளோ கண்களைத் தரை பார்க்கத் தாழ்த்திக்கொண்டாள்.
மனையாள் மழுப்பியிருக்கிறாள் என நொடியில் உணர்ந்தான் ரிஷிகுமார்.
“அப்படியா சொன்னாஆஆஆ? நீட்டிமுழக்கியவன், “அம்மணியால குழந்தைகளைப் பிரிஞ்சு இருக்க முடியலன்னுதான் சீக்கிரம் கிளம்பி வந்துட்டோம் மாம்ஸ்!” உண்மைகளை உடைத்தான்.
“தத்துக்கொடுக்குற மூஞ்சியைப் பாரு!” காயத்ரி தன் பங்குக்கு முறைக்க,
“அண்ணி…..” பொளபொளவெனக் கண்ணீர் வடித்தாள் கீர்த்தனா.
“காயத்ரி!!!!” குரலை உயர்த்தினான் விக்ரம்.
“என்னை மிரட்டுறது விட்டுட்டு, உங்க மச்சான்கிட்ட என்ன நடந்துதுன்னு கேளுங்க?” கணவனுக்கு இணையாக எகிறியவள், குழந்தைகளை இறக்கிவிட்டு அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டாள்.
விக்ரமின் பார்வை ரிஷிகுமார் பக்கம் திரும்ப தன் பிறந்தநாள் அன்று நடந்த அனைத்தையும் மடமடவென ஒப்பித்தான்.
“என்ன கீர்த்தி இதெல்லாம்! அன்பை வெளிப்படுத்தணும் தான்; அதுக்குன்னு இடம் பொருள் பார்க்காம இப்படித்தான் குழந்தைத்தனமா நடந்துப்பீயா?” காயத்ரி கண்டிக்க,
“காயத்ரி சொல்றது சரிதான் கீர்த்தி. எல்லா விஷயத்துலையும் நீ அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்படுறது தான் பிரச்சனையே.” விக்ரமும் ஒத்தூதினான்.
அண்ணன் அண்ணி என எல்லாரும் இடித்துக்காட்ட பேதையின் கண்கள் குளமாகின.
“ம்ப்ச். விடுங்க மாமா. இந்த வேலை இல்லேன்னா வேற வேலை கிடைக்கப்போகுது.” ரிஷி சர்வசாதாரணமாகக் கூற,
“நீயும் விளையாடதே ரிஷி. மாசத்துக்கு ஒரு வேலை மாத்திக்க நீ ஒண்ணும் தனிக்கட்டை கிடையாது. குழந்தைகளோட எதிர்காலத்தை மனசுல வச்சிட்டு பொறுப்பா நடந்துக்கோ.” கறாராக உரைத்தாள் காயத்ரி.
அப்போதும் அவன் அசரவில்லை.
“அதே தான் ‘க்கா நானும் சொல்றேன். நான் ஒண்ணும் தனிக்கட்டை கிடையாது. எனக்கு வேலை போச்சுன்னா, என் ரித்தி சம்பாதிச்சு எங்களை காப்பாத்துவா. நான் வீட்டுல இருந்தபடி என் செல்ல குட்டீஸை பார்த்துப்பேன்.” காயத்ரி வாங்கிவந்திருந்த காய்கறி பைகளை பிரித்து மேய்ந்து விளையாடும் பிள்ளைகளின் உச்சி முகர்ந்தவன் மனையாளை தோளோடு வளைத்துக்கொண்டான்.
“நீ ஒண்ணும் என்னை தாஜாபண்ண வேண்டாம். உனக்கு ஏற்பட்ட அவமானம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு தானே அண்ணன் அண்ணிகிட்ட சொல்லாம இருந்தேன். பெரிய இவன் மாதிரி போட்டுக்கொடுத்துட்டு…” உதடுகள் முறுக்கிக் கொண்டாலும், அவன் தோளோடு தோள் ஒட்டிக்கொண்டு சிணுங்கினாள் கீர்த்தனா.
“புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேருக்கும் பொறுப்பே இல்ல. நீங்க வாங்க விக்கிபா. நாம கிளம்பலாம்.” எனப் பெருமூச்சுவிட்ட காயத்ரி சிதறிக்கிடந்த காய்கறிகளைப் பைக்குள் போட,
“மம்மாஆஆஆ” யாதவன் அவள் மடியில் ஏறிக்கொண்டான்.
“அத்தை குளிச்சிட்டு வந்துடுறேன் தங்கம்.” அவள் குழந்தைக்கு நல்லவிதமாய் சொல்லி இறக்கிவிட,
சற்றுமுன் காயத்ரி சொன்னதை நினைவுகூர்ந்த கீர்த்தனா, அவளருகில் ஓடிச்சென்று, “அண்ணி! உங்க மனசு நோகும்படி நடந்துகுறேனா…” என வழியை மறித்தாள்.
“அடிப்போடி. உனக்கு வேற வேலையில்ல!” நமுட்டுச் சிரிப்புடன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு, யாதவனையும் யாழினையும் தூக்கிக்கொண்டே நகர்ந்தாள்.
புதுடெல்லி, இந்தியா
“…. உன் மனசு நோகும்படி நடந்துக்குறேனா டா?” ஒரு மாதத்திற்குப் பின் வீடு திரும்பிய கணவனை வாசலிலேயே மடக்கினாள் சாதனா.
“அடிப்போடி. உனக்கு வேற வேலையில்ல!” திடிர் திடீரென கவலையில் தோய்ந்துவிடும் மனைவியின் சுபாவத்தை அறிந்த சந்தோஷ் கண்டும் காணாமல் அவள் பருகிக்கொண்டிருந்த தேநீர் குவளையை உரிமையோடு பிடுங்கிக்கொண்டு நகுர,
“ஆமாம் இல்லைன்னு ஒரு பதில் சொல்லுடா!” அதட்டிக்கொண்டே அவனைப் பின்தொடர்ந்தாள்.
“இல்லை!” ஒற்றை வார்த்தையில் பதிலளித்தவன், ஒரே மடக்காக மீதி தேநீரைக் குடித்து, “இன்னொரு கப் கிடைக்குமா?” காலி குவளையை அவள் கையில் திணித்து நமுட்டாகச் சிரித்தான்.
அதை மேஜையில் ஓங்கி வைத்தவள், “நான் உன்னை அதட்டி கேக்குறதுனால தானே இல்லன்னு சொல்ற…” இடைநிறுத்தி யோசித்தவள், முன்னே செல்லும் அவனை வழிமறித்து,
“…இல்ல என் மனசு கஷ்டப்படக்கூடாதுன்னு பொய் சொல்றீயா!” தானே கேள்வி தானே பதிலெனப் புலம்பினாள்.
“அடியேய்! உனக்கு என்ன ஆச்சு!” வாடிய அவள் முகத்தை நிமிர்த்தியவன், “நீ எதையோ மனசுல வச்சிட்டு பேசினேன்னா எனக்கு எப்படிமா புரியும்?” கனிவாகவே கேட்டான்.
ஒரு வாரமாகத் தன் மனத்தை அரித்த கீர்த்தனாவின் கேள்விகளையும், அந்த வாக்குவாதங்களுக்கு மூலக்காரணமாக இருந்த நிகழ்வுகளையும் விவரமாகச் சொன்னவள்,
“இப்போ சொல்லுடா! நாம எந்த விசேஷத்தையும் கொண்டாட மாட்டேன்றோம்னு உனக்கு ஏதாவது வருத்தமா?” என்று வினவினாள்.
“வருத்தம்னு சொன்னால் என்ன செய்வ?” கேள்வியை அவளிடமே திருப்பினான்.
“சந்தோஷ்!!!!” சாதனா பதற,
“சும்மா சொல்லுமா. வருத்தம்னு சொன்னால் என்ன செய்வ?” மென்மையாக அவள் கன்னத்தை வருடினான்.
“உனக்காக என் மனச மாத்திப்பேன்.” சிறிதும் தயக்கமின்றி அவள் சொல்ல,
தனக்காக எதுவும் செய்வாள் என்று அறிந்தவனும், “எனக்கு எந்தவித வருத்தமும் இல்ல!” தன் தீர்ப்பை உரைத்தான்.
“அப்போ ஏன்டா அப்படிக் கேட்ட?” அழாத குறையாக அவன் சட்டையை உலுக்கினாள் மங்கை.
“நீ மட்டும் பதில் தெரிஞ்ச கேள்வியைக் கேட்டு என்னைக் கொடுமை படுத்தலாமா? அதான் சீண்டினேன்.” மென்னகையுடன் அவள் நெற்றியில் முட்டியவன், “ரொம்பப் பசிக்குது மா. உன் கையால ரொட்டி பாஜி சாப்பிட்டு ஒரு மாசமாச்சு டி.” புருவங்களைச் சுளித்துக் கெஞ்ச,
“சரி! சரி! குளிச்சிட்டு வா.” என்றாள் வெட்கப் புன்னகையுடன்.
தக்காளி சூப், ரொட்டி, குடைமிளகாயும் தக்காளியும் சேர்த்த பாஜி, ராஜ்மா சாவல், ஸ்வீட் லச்சி, ஆவக்காய் ஊறுகாய், மாம்பழ ஸ்ரீக்கண்ட் என விருந்தே சமைத்த வைத்திருந்தாள் அவள்.
எப்போதும் போல பால்கனியின் திறந்த வெளியில் பாய் விரித்து, தங்களுக்கு ப்ரியமான 90ஸ் மெல்லிசை ஒலிக்கவிட்டபடி, ராந்தல் விளக்கின் ஒளியில் உணவைப் புசித்தனர்.
“மன்னிச்சிரு டா! அந்தப் பொண்ணு பேசினதுல கொஞ்சம் குழம்பிட்டேன்!” தட்டில் ஓடிய மசாலாவில் ரொட்டியைக் குழப்பிக்கொண்டே உரைத்தாள் சாதனா.
இன்னும் அப்பெண்ணின் குத்தல் பேச்சையே நினைத்து வருந்துகிறாள் என்று மனையாளின் ஆழ்மனத்தைப் படித்தவன், அவள் தட்டில் இருந்ததையும் தன் தட்டுக்கு மாற்றிக்கொண்டு, ரொட்டித் துண்டை பாஜியுடன் சேர்த்து ஊட்டிவிட்டான்.
மென்றுவிழுங்கச் சிரமப்படும் மனையாளின் முகமே அவள் மனபாரத்தைச் சொல்லாமல் சொன்னது.
“நான் ஒண்ணு சொன்னா கோபப்படமாட்டியே!” மெல்லமாகப் பேச்சுக்கொடுத்தான்.
“ம்ஹூம் சொல்லு!” வாயிலிருந்த உணவை முழுங்காமல், உப்பிய கன்னங்களுடன் சிறு பிள்ளையைப்போல இடவலமாகத் தலையசைத்தாள்.
“உன்னை மாதிரியே அவங்களுக்கும் புருஷன்னா கண்மூடித்தனமான காதல் போல!” என்றான் உதடு பிரியாத புன்னகையுடன்.
கிண்டலா, அக்கறையா எனப் பிரித்தறிய முடியாத கணவனின் தோரணையில் சிரிக்கவா, முறைக்கவா என அவள் முகம் அஷ்டகோணலில் வளைந்தது.
அதையும் ரசிக்க மறக்கவில்லை அவன்.
“வேலை நேரத்தில் அதுவும் அப்ரைசலுக்கு வந்த இடத்தில், அவங்க பிறந்தநாள் கொண்டாட நெனச்சது தப்பு. அதைத் தட்டிக்கேட்ட உன் கண்டிப்பும் சரிதான்.
ஆனால் சாயங்காலம் அவங்க பிறந்தநாள் கொண்டாடின இடத்துல நீ நடந்துகிட்ட விதம் ரொம்பத் தப்பு.” அவள் மனம் கோணாதபடி மென்மையிலும் மென்மையாகச் சுட்டிக்காட்டினான்.
அதைக்கூட அவளால் தாங்கமுடியவில்லை.
“எல்லாம் தெரிஞ்ச நீயே என்னைக் குறைசொல்றீயே!” கண்ணில் நீர் கட்டிக்கொண்டது அவளுக்கு.
“உன்னை குறை சொல்லலமா.” அவள் கண்களை ஆதுரமாய் துடைத்துவிட்டவன், “கொஞ்சம் நிதானமா யோசிச்சுப் பாரு! எந்த விழாவையும் ஆடம்பரமா கொண்டாடக் கூடாதுன்றது நம்ம கொள்கை. ஆனால் அறிமுகமில்லாத உன்னைப் பற்றியும் உன் கொள்கைகள் பற்றியும் அவங்களுக்கு எப்படித் தெரியும்.
ஏதோ ஆசையில் அவங்க விழாவுக்கு ஏற்பாடு செய்துட்டாங்க. அதுவும் ஃப்ரி டைம்லதான். உனக்குக் கொண்டாட விருப்பமில்லேன்னா, யார் மனசையும் நோகடிக்காம, தன்மையா மறுப்பு சொல்லிட்டு வெளியே வந்திருக்கலாம்ல….” சிந்திக்கச் சொன்னான்.
“அது…அந்த நிமிஷம் வந்த கோபத்துல…” அவள் திக்கித்திணற,
“ஹான்! அந்தக் கோபம்தான் வேண்டாம்னு சொல்றேன்.” தொட்டதுக்கு எல்லாம் மூக்குக்கு மேல் கோபம் கொள்ளும் அவள் சுபாவத்தை மென்மையாக நினைவூட்டி, அவள் மூக்கின் நுனியை உரசினான்.
கணவனின் மிருதுவான பேச்சில் தன் தவறை உணர்ந்தவள், “சரி! இனிமே அப்படி நடந்துக்கமாட்டேன்.” எனக் குழைந்தாள்.
“இனிமேல் கதையை விடு! முதல்ல இதுக்கு அவர்கிட்ட மன்னிப்புக் கேளு!” அழுத்திக் கூறி மேலும் ஒரு ரொட்டித் துண்டை ஊட்டினான்.
சரி என உளமாற தலையசைத்தவள், “கூடவே அவருடைய அப்ரைசல் ரிப்போர்ட்டையும் நல்லவிதமாவே கொடுக்கறேன் போதுமா?” எனக் கண்சிமிட்டினாள்.
“அது உன் பணி சார்ந்த விஷயம். அதில் தலையிட எனக்கு உரிமையில்ல. உனக்கு எது சரின்னு தோணுதோ, அதையே செய்.” அறிவுறுத்தியவன்,
இனி அலுவல் பேச்சுகளுக்கு இடமில்லை என்று சொல்லும் விதமாக, மெல்லிசையின் ஒலியைக் கூட்ட, இருவரும் மீதி உணவை அவர்கள் பானியில் இசையில் மூழ்கியபடி உண்டு மகிழ்ந்தனர்.
கரைப்பார் கரைத்ததில் குழப்பங்கள் தீர்ந்தது;
கரிசன மொழிகளில் காதலும் கூடியது;
கணப்பொழுதில் கரும்பென தித்தித்த பெண்ணுள்ளம்,
கண்ணியன் அவன் கலைநயத்தைப் பறைசாற்றியதா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here