147 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
ஆகாயக் கோட்டையில் உருகித் திளைத்த அவன்,
ஆதாரங்களைக் கண்டு மிரண்டானா – இல்லை
ஆசாபாசங்கள் ஏதுமில்லை உதறித் தள்ளிய அவள்,
ஆகாசப்புளுகன் நீ என எள்ளி நகைத்தாளா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம்17…
விடிந்தும் விடியாமல் மஞ்சரி இடமிருந்து அழைப்பு வர, கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனான் ரிஷிகுமார். அவன் கேட்டிருந்த மருத்துவ அறிக்கை தயாராக உள்ளது என்பதைத் தாண்டி வேறெந்த தகவலும் தராமல் நேரில் வரச்சொன்னாள் மஞ்சரி.
ரிஷிகுமாரின் மனம் நோகாதபடி எடுத்துச்சொல்ல வேண்டுமென்ற அக்கறையில் மஞ்சரி பார்த்துப் பார்த்து வார்த்தைகளைக் கோர்த்துப் பேச, ரிஷிகுமாரோ அறையின் மூலை முடுக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“நான் எவ்வளவு முக்கியமான விஷயம் சொல்லிட்டு இருக்கேன். நீ என்னடான்னா ரூமை அளந்துட்டிருக்க!” பொறுமையிழந்து கத்தினாள் மஞ்சரி.
“அதுக்கில்ல! கேமரா ஏதாவது வச்சு நீங்களும் உங்க ஃப்ரெண்டும் என்னைக் கலாய்க்குறீங்களோன்னு தோணுது.” பதிலளித்தவன் உடம்பை வளைத்து பார்வையைச் சுழலவிட,
“பீ சீரியஸ் ரிஷி! இதைப் பார்த்தால் உனக்கு விளையாட்டு மாதிரி தெரியுதா?” முகத்தில் இடிக்காத குறையாக மடிக்கணினியை அவனருகில் தள்ளினாள்.
சிவந்த அவள் கண்களே சூழ்நிலையின் தீவிரத்தை உணர்த்தியது.
“அது….இறந்தே பிறந்த மகளை எங்க அம்மா கண்ணால பார்த்திருக்காங்க….அவ…அவ இடது கையில் சீரக வடிவத்தில் மச்சம் இருந்துதுன்னு…..” பேய் அறைந்தாற்போல் அவன் பினாத்த,
“சபாஷ்! இதைத்தான் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சொல்லுவாங்க.” உரக்கச் சிரித்தவள், “நீ சொல்ற சீரக வடிவ மச்சம் சாதனா கையில் இருக்கு.” அழுத்தமாய்க் கூறி,
‘இதற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறாய்?’ என்ற ரீதியில் மார்புக்குக் குறுக்கே கைகளைக் கட்டியபடி அவனை ஏறிட்டாள்.
பெற்ற பிள்ளையை நிர்க்கதியாக விட்டுச்செல்லும் அளவிற்குத் தன் பெற்றவர்கள் கல்நெஞ்சக்காரர்கள் இல்லையே என அவன் உள்ளுக்குள் குமுற,
“லுக் ஹியர் ரிஷி. ஒரு மச்சத்தை வச்சு சாதனா உன் உடன்பிறப்புன்னு முடிவுகட்ட நான் ஒண்ணும் முட்டாள் இல்ல. உங்க ரெண்டு பேருடைய பிள்ட் சாம்பிள்ஸ்ல எல்லாம் தெள்ளத் தெளிவா இருக்கு.” பரிசோதனையில் கண்டறிந்த ஆதாரங்களை அவனுக்குப் புரியும் வகையில் நிதானமாக விவரித்தாள்.
கால்மணி நேரமாக அவள் பாடமெடுத்தும் அவனால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“இல்ல இல்ல! எங்கேயோ தப்பு நடந்திருக்கு.” தலைமுடியை அழுந்த கோதி கத்தினான் ரிஷிகுமார்.
“இப்படி உணர்ச்சிவசப்படுறதுனால ஒரு பிரயோஜனமும் இல்ல ரிஷி. அடுத்து என்ன பண்ணலாம்னு நிதானமா யோசி!” அவன் தோளினில் ஆதரவாய்த் தட்டிக்கொடுத்தாள் மஞ்சரி.
“இப்போ நான் என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க.” கேட்டவனின் கண்கள் தன்னையும் அறியாமல் குளமாகியது.
“சாதனாவை சகோதரியா ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன் இஷ்டம். ஆனால் எடுக்கும் முடிவிலிருந்து எக்காரணத்துக்கொண்டும் பின்வாங்கக் கூடாது.” தீவிரக்குரலில் உரைத்தாள் அவள்.
அவன் புரியாமல் விழிக்க, மஞ்சரியே மேலும் பேசினாள்.
“உண்மைகளை உடைக்கும் பட்சத்தில் அவளை யார் முன்னாலையும் எதுக்கும் விட்டுத்தரக்கூடாது. எத்தனைபேர் எதிர்த்தாலும், என் சகோதரின்னு சொல்லற மனதைரியம் இருந்தால் மட்டுமே இந்த ரகசியம் இந்த ரூமை விட்டுப் போகணும்.
இல்லேன்னா இங்கேயே குழி தோண்டி புதைச்சிட்டுக் கிளம்பு. எங்க தோழிக்கு நாங்க இருக்கோம்.” என்றாள் கறாராக.
சகோதரி எனத் தெரிந்த பின்னும் உறவாடாமல் செல்வது நியாயமா என்று துடித்துடித்த அதே மனம்தான் பெற்றவர்களைப் பாவிகளாக நினைக்கக் கூட மறுத்தது. குழப்பத்தில் எடுக்கும் முடிவு சரிவராது எனக் கூறி ஒரு வாரம் அவகாசம் கேட்டான் ரிஷிகுமார்.
“நான் சொல்றது உனக்குப் புரியுதா இல்லையா.” கண்களை உருட்டினாள் மஞ்சரி.
“ப்ளீஸ் கோபப்படாதீங்க. அக்காகிட்ட பேசினால் உண்மைகள் புலப்படும்னு தோணுது.” மென்மையாகவே பேசினான் ரிஷிகுமார்.
தோழியின் மன நிம்மதியே பிரதானமென எண்ணிய மஞ்சரிக்கு அவன் யோசனையில் உடன்பாடில்லை.
“உனக்கு என்ன தெரியணும்னு சொல்லு. சாதனா அந்த மருத்துவமனையிலிருந்து காப்பகத்திற்கு வந்தவரை எல்லா விவரமும் என்கிட்ட இருக்கு.” அவன் சந்தேகங்களைத் தீர்க்க முன்வந்தாள்.
அவனும் அரைமனதாகத் தலையசைக்க, கணினியில் சேமித்து வைத்திருந்த ஆவணங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் காட்டினாள்.
சாதனாவின் பிறப்புச் சான்றிதழைத் தன்னுடையதுடன் ஒப்பிட்டுப் பார்த்தவன், பிறந்த தேதி, பெற்றவர்களின் பெயர்கள், வீட்டு விலாசம், மருத்துவமனையின் விவரம், கையொப்பமிட்ட அதிகாரியின் பெயர் வரை அனைத்தும் அச்சு அசலாக இருப்பதைக் கண்டான்.
இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் அளவிற்கு வசதி இல்லாததனால், தெளிந்த மனத்துடனும் சுயமான சிந்தனையுடனும் பெண் குழந்தையைத் தத்துக்கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தந்தையே கையொப்பமிட்டிருந்த வாக்குமூலத்தைப் பார்த்த ரிஷிக்கு உலகமே இருண்டது.
இரக்கமற்ற பெண் சிசுக்கொலைகளைக் கருத்தில் கொண்டிருந்த மருத்துவமனை, பெற்ற பிள்ளையை வளர்க்க விருப்பமில்லாத தந்தையின் மனநிலையைச் சுட்டிக்காட்டி, அக்குழந்தையை முறையாகவும் பாதுகாப்பான இடத்திலும் தத்துக்கொடுக்க, காப்பகத்தின் உதவியை நாடியதாக விவரித்த அத்தாட்சி பத்திரமும், காப்பகத்தில் சாதனாவை சேர்த்துக்கொண்டதற்கான ஆவணங்களையும் காட்டி,
“அவளுக்கு வேலை கிடைச்சு காப்பகத்திலிருந்து வெளிய வரப்ப இதையெல்லாம் கொடுத்தாங்க. மகளே வேண்டாம்னு உதறித் தள்ளிட்டுப் போனவங்கள தேடிச் சொந்தம் கொண்டாட விருப்பமில்ல தீர்மானமா சொல்லிட்டா.” நீண்ட விளக்கம் தந்தாள்.
எங்கும் எதிலும் அம்மாவின் கையொப்பமோ வாக்குமூலமோ இல்லாததைக் கண்டவனின் கோபமெல்லாம் அப்பாவிம் பக்கம் திரும்பியது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற கணக்காகத் தன் இளம்வயதின் கசப்பான நிகழ்வுகள் எல்லாம் பசுமரத்தாணி நினைவுகளாக அவன் மனத்தை வண்டாய்க் குடைந்தது.
சேமிப்பு என்று எதுவுமே இல்லாமல் வரவுக்கும் செலவுக்கும் இழுத்துப் பிடித்த அப்பாவின் நிதி நிர்வாகம்; தன்னை ஆண் வாரிசு என ஒஸத்தியாகவும், காயத்ரியைப் பெண்பிள்ளை என மட்டம்தட்டிய அத்தையும் பாட்டியும் எனக் காட்சிகள் பேரலையாய் எழும்ப, அதனால் தான் அப்பா இப்படிவொரு கொடூரமான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டாரா எனத் தோன்றியது.
அதே சமயத்தில் தன்னையும் அக்காவையும் கண்ணும் கருத்துமாகப் பேணிக்காத்த அப்பாவின் அன்பும் பாசமும் கண்முன் விரிய, அவரை குற்றவாளியாகவும் நினைக்க முடியவில்லை.
“இல்ல! எனக்கு என் அப்பாவைப்பற்றி தெரியும். அவர் ஒருபோதும் இப்படிச் செஞ்சிருக்க மாட்டாரு.” கதறி அழுதான் அவன்.
“அப்போ இதெல்லாம் உண்மை இல்லன்னு சொல்றீயா? இதுக்கு மேல என்ன ஆதாரம் வேணும்டா.” எரிச்சல் மேலோங்கியது மஞ்சரியின் குரலில்.
குழம்பித் தவித்த அவன் மனம் மீண்டும் அப்பாவின் நற்குணத்தைச் சந்தேகிக்க,
“அப்பாதான் சாதனாவைத் தலைமுழுகு நெனச்சாருன்ற உண்மையை அம்மாகிட்ட எப்படிச் சொல்ல. அவங்க மனசு உடைஞ்சிடுவாங்களே…” முகத்தை இரண்டு கைகளிலும் புதைத்துக்கொண்டான்.
இரண்டுங்கெட்டான் மனநிலையில் தத்தளிக்கும் இவன் தெளிவாக முடிவெடுக்கும் வரை, அவன் நிழல் கூடத் தோழியின் பக்கம் விழக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மஞ்சரி.
“எவ்வளவு நேரம் வேணும்னாலும் யோசி. ஆனால் தெளிவான முடிவெடுத்துட்டுத்தான் இந்த இடத்தை விட்டு நகுருற.” பிணைக்கைதியாய் அவனை ஒரு ஊழியரின் கண்பார்வையில் விட்டுவிட்டு, தன் பணிகளை கவனிக்க நகர்ந்தாள்.
மதியம் திரும்பி வந்தவள் அவன் முகத்தைப் பார்த்தே ஓரளவிற்குத் தெளிந்திருக்கிறான் எனப் புரிந்துகொண்டாள். அவனை வலுக்கட்டாயமாக உணவருந்த அழைத்துச் சென்றாள்.
தனக்குத் தெரிந்த விஷயங்கள், கண்முன்னே இருந்த ஆதாரங்கள், சாதனா உட்பட அனைவரின் உணர்வுகள் என அனைத்தையும் நிதானமாக அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறி விளக்கினான் ரிஷிகுமார்.
அதைக் கேட்டவளுக்கும் அளவுகடந்த சந்தோஷம். ரிஷிகுமார் மீது நம்பிக்கை வந்தவளாய் சாதனாவைப் பார்த்துப் பேசலாம் என்றாள்.
மஞ்சரி ரிஷிகுமார் இருவரும் ஒரே சமயத்தில் வாசலில் வந்து நிற்க, சற்று விசித்திரமாகவே இருந்தது சாதனாவுக்கு.
“நீங்கதான் என் கூடப்பிறந்த இரட்டைச் சகோதரி.” ரிஷியும் எடுத்த எடுப்பிலேயே உருக,
“அடேய்! என்னை அழவைக்க இப்படியெல்லாம் பொய் சொல்வீயா!” வெடித்துச் சிரித்தாள் அவள்.
அதை ரசிக்கும் மனநிலையில் இல்லாத ரிஷி பொறுமையாகவே பேசினான்.
‘புலி வருது புலி வருது’ என்ற ரீதியில், ரிஷியின் குறும்புகளுக்குப் பழகிப்போயிருந்தவள், விடாமல் அவனுடன் ஏட்டிக்குப் போட்டி பேசி வாயடிக்க,
“அவன் சொல்றது உண்மைதான் சாதனா!” இடைபுகுந்த மஞ்சரி, நடந்த அனைத்தையும் நிதானமாக விளக்கி, கொண்டுவந்திருந்த ஆதாரங்களையும் காட்டினாள்.
விவரங்களை உள்வாங்கியவள் பொங்கித் ததும்பிய உணர்வுகளை மறைத்து, “சரி! இப்போ அதுக்கு என்ன?” ஆழ்ந்த ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தாள்.
அவள் கதறி அழும் ரகமில்லை என மஞ்சரி அறிந்திருந்தாள். ஆனால் பட்டும்படாமல் நழுவிய தோழியின் மனநலனில் அக்கறை கொண்டவள்,
“என்ன சாதனா இப்படிச் சொல்ற. உனக்கு இதுல சந்தோஷமே இல்லையா?” வினவினாள் யாசிக்கும் குரலில்.
“ஹாஹா!” உரக்கச் சிரித்து ரிஷிகுமாரை ஏறிட்டவள், “உங்க தயவு இல்லாம பாதி வாழ்க்கையை ஓட்டின எனக்கு, மீதி வாழ்க்கையை ஓட்டத் தெரியாதா மிஸ்டர்.ரிஷிகுமார்?” ஏளனமாக உரைத்தாள்.
ரிஷிகுமாரின் முகம் அவமானத்தில் சுருங்கியது.
“உங்க அம்மா அப்பா செஞ்ச தப்புக்கு இவன் என்ன செய்வான் சாதனா? உண்மைகள் தெரிஞ்சதும் எப்படித் துடிதுடிச்சுப் போனான் தெரியுமா?” ரிஷிகுமாருக்குப் பரிந்தாள் மஞ்சரி.
“ஓ அப்படியா!” கண்கள் விரிய இளக்காரமாகக் கேட்டவள், “சரி வாடா! என்னை இப்பவே அம்மாகிட்ட அழைச்சிட்டுப் போ. என் கூடப்பிறந்தவளை ஏன் நிர்க்கதியா விட்டுட்டுப்போனீங்கன்னு எனக்காகச் சண்டைபோட்டு நியாயம் கேளு.” என்று அவன் வலது கரத்தை இழுத்தாள்.
“மேடம்….சா…சா..த…னா…அது வந்து…” அவள் பிடியிலிருந்து விலக எத்தனித்தான்.
“பார்த்தீயாடி! உடன்பிறப்பு எனக்காக எப்படித் துடிதுடிக்குறான்னு!” எகிறியவள்,
“எல்லாம் வெறும் வெளிவேஷம்!” என முணுமுணுத்தாள்.
எச்சில் கூட்டி விழுங்கி தைரியத்தை வரவழைத்து, “அப்படியில்ல சாதனா! நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளேன்.” உரிமையுடன் ஒருமையில் அழைத்துக் கெஞ்சினான்.
“நீ எந்த விளக்கமும் தரவேண்டாம் ரிஷி. ஜஸ்ட் கெட் அவுட் ஆஃப் மை சைட்!’ உறுமி தொப்பென்று கட்டிலில் அமர்ந்தவள், முகத்தை இருகைகளிலும் புதைத்துக்கொண்டாள்.
என்ன செய்வதென்று புரியாமல் ரிஷிகுமார் விழிக்க, நம்பிக்கை இழக்க வேண்டாமென அவனுக்குக் கண்ணசைத்த மஞ்சரி, தோழியின் அருகிலமர்ந்து அவள் தோளினை ஆதுரமாய் வருடினாள்.
“நானும் உன்னை மாதிரிதான் விஷயம் தெரிஞ்சதும் பொங்கினேன். ஆனால் அவன் சொன்னத முழுசா கேட்டதுக்கு அப்புறம், அவன் பக்கமும் நியாயம் இருக்குன்னு தோணித்து. நீயும் எனக்காக அவன் சொல்றத ஒரே ஒருமுறை காது கொடுத்துக் கேளு.” தன்மையாகப் பேசினாள்.
“சரி சொல்லச்சொல்லு!” வேண்டாவெறுப்பாக ரிஷியைப் பார்த்து உறுமினாள் சாதனா.
இமைக்கும் நொடியில் அவள் காலடியில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் கரங்களை வலுக்கட்டாயமாகத் தன் உள்ளங்கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
“உன்னை நிர்க்கதியா விட்டதுல அம்மாவுக்கும் உடந்தை இருகுன்னு நீ எந்த அளவுக்கு நம்புறீயோ, அதே அளவுக்கு அம்மாமேல தப்பில்லன்னு நான் நம்புறேன் சாதனா. இத்தனை வருஷமா, நம்ம பிறந்தநாள் அன்னைக்குப் பச்சைத் தண்ணீர் கூடப் பல்லுல படாம உன்னை நெனச்சு அழுது அழுது பட்டினியா இருந்திருக்காங்க தெரியுமா.” அன்னையின் பிடிவாதத்தால், தன் ஒவ்வொரு பிறந்தநாளையும் விரக்தியில் கழித்த நிலையை விவரித்தவன்,
“உன்னை முதல் முதலா சந்திச்ச அன்னைக்குக் காலையில் தான், ரித்தி யாழினியை காரணம் காட்டி அவங்கள கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சா.” என்றும் மாறாத அன்னையின் பாசத்தை விளக்கினான்.
அப்போதும் அவள் எந்த எதிர்வினையும் காட்டவில்லை.
தான் பார்த்து வளர்ந்த அப்பா கெட்டவர் இல்லை என மனசாட்சி உறுத்தியபோதும் சாட்சிகள் கண்முன்னே நர்த்தனமாட, மனத்தைக் கல்லாக்கிக்கொண்ட ரிஷிகுமார்,
“அப்பா விஷயத்தில் நான் உன்னை நம்புறேன் சாதனா. ஆனால் அம்மா கண்டிப்பா அப்படியில்ல. அப்பா தனக்கு இப்படியொரு துரோகம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சா, அவங்க உயிரையே விட்டுடுவாங்க. அந்தமாதிரி ஏதாவது ஏடாகூடமா ஆச்சுன்னா, ஏன்தான் உண்மைகளைச் சொன்னோம்னு காலத்துக்கும் குற்றவுணர்ச்சியா இருக்கும்.” தன் தர்மசங்கடத்தை எடுத்துரைத்தான்.
“உடன்பிறப்பு புலம்புறத பார்த்தால், கள்ளக்காதல் மாதிரி, இவனைக் கள்ளச்சகோதரன்னு கூப்பிட்டு ரகசியமா உறவாடணும் போலவே மஞ்சரி!” கேலியாகச் சிரித்தாள் சாதனா.
“கடவுளே! ஏன் என்னை வார்த்தையால கொல்லற?” நொந்தவன்,
“அம்மா காதுக்குப் போகவேண்டாம்னு தான் சொல்றேன். அவங்கள பொறுத்தவரைக்கும், இறந்த குழந்தை இறந்ததாகவே இருக்கட்டும்.
ஆனால் அக்கா, மாமா, ரித்தி கிட்ட சொல்ல எனக்கு எந்தத் தயக்கமுமில்ல. நம்ம தலைமுறையும் நம்ம சங்கதிகளும் எந்த நிர்ப்பந்தமும் இல்லாம உறவாடலாமே. ப்ளீஸ் சரின்னு சொல்லு சாதனா.” காலில் விழாத குறையாகக் கெஞ்சினான்.
அப்போதும் அவள் அமைதிகாக்க, “அவன் நிலைமையிலிருந்தும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு சாதனா.” தூதுப்புறாவாக ரிஷிகுமாருக்கு வக்காலத்து வாங்கினாள் மஞ்சரி.
தோழிக்கு முறைப்பையே பரிசாகத் தந்தாள் சாதனா.
“உன்னை எப்படியாவது குடும்பத்துக்குள்ள அழைச்சிட்டுப் போகணும்னு அவன் தேம்பி தேம்பி அழுதான் தெரியுமா?” மஞ்சரி விடாமல் பேச,
அழுகை என்ற வார்த்தையைக் கேட்டதும், முன்தினம் அவர்களிடையே நடந்த வாக்குவாதத்தை நினைவுகூர்ந்தாள்.
“அழுதையா! முடிஞ்சா என்னை அழவச்சுப் பாருங்கன்னு தானே சொன்னேன்!” இருவரையும் கலாய்த்துச் சிரித்தாள்.
அவள் கேலியும் கிண்டலும் அவனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை.
“நான் தோத்ததாகவே இருக்கட்டும். என் கூடப்பிறந்தவ கிட்ட தோத்ததுல எனக்கு எந்த அவமானமும் இல்ல.” சிறுபிள்ளையாகச் சிணுங்கியவன், “என் திட்டத்திற்கு ஓகே சொல்லு சாதனா…ப்ளீஸ்!” என்றான் கண்களைச் சுருக்கி.
ரிஷிகுமாரின் அந்தப் புது அவதாரம் அவள் பிடிவாதத்தை அசைக்கவே செய்தது. ஆனாலும் ஒத்துக்கொள்ள விடாமல் தன்மானம் குறுக்கே நின்றது.
“என்னம்மோ பண்ணுடா!” பொத்தாம் பொதுவாகப் பதிலுரைத்து அவள் நகர,
“இப்படிச் சொன்னா எப்படி?” வழிமறித்தான் அவன்.
“அதான் உன் இஷ்டம்னு சொல்லிட்டேன்ல. இன்னும் என்னடா செய்யணும்.” அதட்டியவள், “சரியான இம்சை!”, மேஜையிலிருந்த செயற்கை பூச்செடியின் பூக்களை வருடியபடி முணுமுணுத்தாள்.
அவள் மனதார சம்மதிக்க வேண்டுமென எண்ணியவன் முகத்தைத் தொங்கப்போட்டு வருந்தினான். ஆனால் தோழியின் சுபாவத்தை அறிந்த மஞ்சரியின் முகத்தில் புன்முறுவல் மலர்ந்தது.
“உங்க மேடம் உன்னை வார்த்தைக்கு வார்த்தை டா போட்டு பேசுறப்பவே அவங்க மனசு மாறிட்டாங்கன்னு உனக்குப் புரியலையா ரிஷி!” செல்லமாக அவன் தலையில் தட்டி கண்சிமிட்டினாள்.
‘இவள் ஒருத்திப்போதும், என் கூட்டை உடைக்க!’, எள்ளும் கொள்ளுமாய் தோழியைப் பார்வையால் கடுகடுத்தாள் சாதனா.
அவ்வளவுதான்! ரிஷியின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பளிச்சிட்டது.
“சாதனா! சாதனா! நம்ம ரெண்டுபேருக்கும் ஒரே மாதிரி ஸ்கெட்யூல் போட்டுத் தரச் சொல்லி சிபாரிசு செய்யறீயா. எனக்கு எப்பவுமே உன் கூடச் சேர்ந்து பறக்கணும்னு ஆசையா இருக்கு.” அவள் கையைப் பிடித்து குழந்தைபோல கொஞ்சினான்.
“அடுத்த மாசம் என் புருஷனோட விமானப் படையில் சேரலாம்னு இருக்கேன். நீயும் உன் ஆசை மனைவியை விட்டுட்டு எங்கக்கூட போர்முனைக்கு வரீயா?” வம்புக்கு இழுத்தாள் அவள்.
“தேவைப்பட்டால் வருவேன்!” அவனும் சலிக்காமல் சொல்லி அசடுவழிய,
“உன்னைக் கள்ளச்சகோதரன்னு சொன்னதுல தப்பே இல்லடா!” தன்னையும் மறந்தவளாக, அவன் தலைகோதி சிரித்தாள் சாதனா.
ஆவேசத்திலும் ஆற்றாமையிலும் பொங்கிய உள்ளங்கள்,
ஆதி காரணம் அதை அரைமனத்துடன் ஜீரணித்து,
ஆடு பகை குட்டி உறவு எனச் சொந்தம் கொண்டாடுவது,
ஆயுசுக்கும் நீடித்து நிலைக்குமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….


Please Comment Here