167 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
அகவாளன் அவனுக்கு ஓர் அபாயம் என்றதும்,
அலறி அடித்துக்கொண்டும் அழுகையில் கரைந்தும்,
அவசரக்குடுக்கை அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில்,
அவஸ்தைகள் கூடியதா; ஐயங்கள் தெளிந்ததா -மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 23…
தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பான செய்தி உண்மை தகவலா வதந்தியா என்றெல்லாம் அவள் ஆராயவில்லை. விக்ரமுடன் பேசிக்கொண்டிருந்த இணைப்பைத் துண்டித்த மறுகணமே மாமியாரை அழைத்து, அனைத்தையும் ஒப்பித்துவிட்டாள் கீர்த்தனா.
“என்னை மன்னிச்சிடுங்க சாருமா. ரிஷிக்கு எதுவும் ஆகிருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கோங்க சாருமா. எனக்கு என் ரிஷி வேணும் சாருமா.” விசும்பல்களுக்கு இடையே ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தவளின் செவிகளைத் துளைத்தது, மறுமுனையிலிருந்து ஒலித்த பலத்த சப்தம்.
நின்ற இடத்திலேயே மயங்கி சரிந்து விழுந்ததில் கைப்பேசியைத் தவறவிட்டிருந்தார் சாரதா.
“சாருமா…சாருமா… நான் பேசுறது கேக்குதா?” கீர்த்தனா பதற,
“ஏன்மா! உங்களுக்கு என்ன ஆச்சு….கண்ணைத் திறந்து பாருங்க…”
“யாராவது தண்ணி எடுத்துட்டு வாங்க….”
பெண்களின் சலசலப்பு சப்தத்தில், தான் சொன்னதைக் கேட்ட அதிரிச்சியில் மாமியார் மயங்கிவிட்டார் எனப் புரிந்துகொண்டாள் கீர்த்தனா.
கைப்பேசியை யாராவது எடுத்துப் பேசமாட்டார்களா என்ற நப்பாசையில் சாரதாவின் பெயரை ஏலம்விட்டுக் கொண்டிருந்தவளின் முயற்சிகள் யாவும் வீணாகின. தேம்பி அழும் யாதவனையும் பொருட்படுத்தாமல் மணிக்கணக்காய் பித்துப்பிடித்தவள் போல அமர்ந்திருந்தவளின் சிந்தனையைத் தரைவழி தொலைபேசியின் கூக்குரல் கலைத்தது.
அழைப்பது யாரென கவனிக்காமல், “சாருமா! சாருமா! உங்களுக்கு ஒண்ணுமாகலேயே. நீங்க நல்லா தானே இருக்கீங்க?” படபடத்தாள்.
“அத்தைக்கு என்னாச்சு கீர்த்தி?” விக்ரமின் இறுகிய குரலில், பெண்ணவளின் துக்கம் மடை திறந்த வெள்ளமாய்க் கொட்டியது.
கணவனின் கேள்வியில் பதற்றம் கொண்ட காயத்ரி, “அம்மாவுக்கு என்னாச்சு விக்கிப்பா?” அவன் சட்டையை உலுக்க,
மனைவியை அமைதியாக இருக்குமாறு கையசைத்தவன், தங்கையை அதட்டினான்.
“நான் பேசிட்டு இருக்கும்போதே சாருமா மயங்கி விழுந்துட்டாங்க. நடுரோட்டுல விழுந்துட்டாங்களோன்னு பயமா இருக்கு ‘ண்ணா; நிறைய பேர் அவங்கள எழுந்துக்கச் சொல்லி குரல் கொடுத்துட்டு இருந்தாங்க; சுத்தி வண்டி சத்தம் வேற; அவங்க கீழ போட்ட ஃபோன யாருமே எடுக்கல. மூச்சுவிடாமல் அழுது புலம்பினாள்.
“உனக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா கீர்த்தி?” அவன் எறிந்து விழ,
“ப்ளீஸ் ‘ண்ணா. நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல. ஏதாவது பண்ணேன். இங்க யாருமில்லாம எனக்குப் பைத்தியம் பிடிக்குறா மாதிரி இருக்கு ‘ண்ணா.” மொத்தமாக உடைந்தாள் பேதை.
அப்போதுதான் அவள் நிலைமையில் இருந்தும் யோசித்தான் விக்ரம்.
“சரி அழாதே. ரெண்டு பேருக்கும் ஒண்ணுமாயிருக்காது. நான் விசாரிக்குறேன். அதுவரைக்கும் அமைதியா இரு.” அரைமணி நேரத்தில் மீண்டும் அழைப்பதாகக் கூறித் தேற்றினான்.
பதற்றத்துடன் கேள்விகளை அடுக்கிய மனைவியிடம் விவரங்களைப் பகிர்ந்தவன், சாரதாவுடன் சென்றிருக்கும் தோழிகளில் ஒருவரை அழைக்குமாறு கூறினான்.
கீர்த்தனாவுக்கு இணையாகப் பயந்தவள், அவனையே பேசச்சொல்லி அலைபேசியை நீட்டினாள்.
“நல்லவேளை தம்பி; நீங்களே ஃபோன் பண்ணிட்டீங்க; உங்களை எப்படி கான்டேக்ட் பண்ணறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருந்தேன்.” பெருமூச்சுவிட்ட அந்தப் பெண்மணி,
கோவில் வாசலில் கைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த சாரதா நின்ற இடத்திலேயே மயங்கி விழுந்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவசரத்தில் சாலையில் விழுந்த கைப்பேசியை எடுக்க மறந்துவிட்டதாகவும் விவரித்து,
“நானும் உங்க யாருடைய நம்பரையும் சேவ் பண்ணி வச்சுக்கல தம்பி. அதான் எப்படித் தகவல் சொல்றதுன்னு முழிச்சிட்டு இருந்தேன்.” என்றார்.
“பரவாயில்ல மா. அத்தைக்கு இப்போ எப்படி இருக்கு.” மென்மையாக வினவினான் விக்ரம்.
“பயப்படறதுக்கு ஒண்ணுமில்ல தம்பி. ஏகாதசி, சனிக்கிழமைன்னு ரெண்டு நாளா தொடர்ந்து விரதம் இருந்தா. அத்தோட காலையில் கோவிலுக்குக் கிளம்பி வந்ததுல சோர்ந்து போயிட்டா. ட்ரிப்ஸ் ஏத்திட்டு இருக்காங்க. சாயங்காலம் டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க. நான் பார்த்துக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க.” ஆறுதலாகப் பேசினார்.
கீர்த்தனா சொன்ன விஷயம்தான் அவள் மயக்கத்திற்குக் காரணமாக இருந்திருக்குமென யூகித்த விக்ரம், தக்க சமயத்தில் அவர் செய்த உதவிக்கு நன்றிகூறி, தாங்களே வந்து சாரதாவைப் பார்த்துக்கொள்வதாகவும் கூறி மருத்துவமனையின் விலாசத்தைக் கேட்டான்.
அவன் ஆதங்கத்தைப் புரிந்துகொண்டவரும் மறுப்புச் சொல்லாமல் விவரங்களைப் பகிர்ந்தார்.
மருத்துவமனையின் பெயர், தெருப் பெயர் என ஒவ்வொன்றாய் குறித்துக்கொண்டே வந்தவன், “என்னது? சென்னையா? ராமேஷ்வரம் போகுறதாதானே சொன்னீங்க?” எனக் குறுக்கிட்டான்.
“ஆமாம் தம்பி. ராமேஷ்வரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர்ன்னு நாலஞ்சு ஊருக்குப் போயிட்டு வரலாம்னு தானே கிளம்பினோம்?” நினைவூட்டினார்.
சாரதா இதைப்பற்றி வீட்டில் யாரிடமும் மூச்சுக்கூட விடவில்லை என எரிச்சல் கொண்டவன் அப்பெண்மணியிடம் கண்டும் காணாமல் பேசி சமாளித்து, மருத்துவமனை செலவுகள், காப்பீட்டு விவரங்கள் என மற்ற முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து அழைப்பைத் துண்டித்தான்.
“உங்க அம்மா என்ன வேலை செஞ்சிருக்காங்க பாரு காயுமா. ராமேஷ்வரம் போகுறதா சொல்லிட்டு, சென்னை, திருச்சின்னு ஊர் ஊரா அலைஞ்சிட்டு இருக்காங்க.” சலித்துக்கொண்டான் விக்ரம்.
அவன் ‘உங்க அம்மா’ எனச் சொன்னபோதே எந்தளவிற்குக் கோபமாக இருக்கிறான் எனப் புரிந்துகொண்டாள் காயத்ரி. தன்னிடம் மட்டும் சொல்லிவிட்டுத்தான் சென்றிருக்கிறாள் என்ற உண்மையைச் சொல்லலாமா வேண்டாமா என அவள் தடுமாற,
பேந்தப் பேந்த முழிக்கும் அவள் முகபாவனையிலேயே அன்னை மகளின் ரகசியக் கூட்டணியைக் கண்டுகொண்டான் விக்ரம்.
“உனக்கு ஏற்கனவே தெரியும் அப்படித்தானே?” அவன் குரலை உயர்த்த,
“சென்னையில் நம்ம குடும்ப ஜோசியர…. விக்கிப்பா…அது வந்து…நீங்க வேண்டாம்னு சொல்லுவீங்கன்னு தான்…” மென்று விழுங்கினாள் பாவை.
விக்ரமின் முகம் கோபத்தில் சிவக்க, ஆபத்பாந்தவனாக வந்து அவளைக் காப்பாற்றியது கீர்த்தனாவின் குறுஞ்செய்தி. இருப்புக்கொள்ளாதவளாய் அவள் அனுப்பியிருந்த கேள்விகளின் தொடரைப் படித்தவன்,
“மூணு பேரும் சேர்ந்து பாடாய்ப் படுத்துறீங்க டி.” மொத்த கடுப்பையும் மனைவியிடம் காட்டி சிடுசிடுத்தவன் கைப்பேசியை உயிர்ப்பித்தான்.
வீசும் புயலிலும் கடும் மழையிலும் விமானத்தைத் திறம்பட இயக்குவது ரிஷிக்கு ஒன்றும் பெரிதில்லை என அறிந்திருந்தவன், ரிஷியைப் பற்றி அந்தளவிற்குக் கவலைப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும். மேலும் தன் பணியின் அபாயங்களை அறிந்திருந்த ரிஷி, இந்த மாதிரி அவசரக் காலத்தில் தொடர்புகொள்ள ஏதுவாகச் சில முக்கியப்பட்ட மேலதிகாரிகளிடம் விக்ரமை அறிமுகம் செய்துவைத்திருந்தான்.
சரியாகச் சொல்லவேண்டுமென்றால் விக்ரமை மட்டும்தான் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்திருந்தான்.
காரணம், அவர்கள் யாவரும் உயர்ப்பதவியில் பணியாற்றிய அதிகாரிகள் என்பதால், அவசியம் இருந்தாலொழிய அவர்களைத் தொடர்புகொள்ளக் கூடாது என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் தனக்கொரு ஜலதோஷம் என்றாலும் உணர்ச்சிவசப்பட்டு ஊரையே கூட்டும் கீர்த்தனாவுக்கு இந்த நிபந்தனைகள் எல்லாம் கடலில் கலந்த உப்புக்குச் சமம் என அவள் சுபாவத்தை நன்கு அறிந்திருந்ததால் அப்படிச் செய்திருந்தான்.
விபத்தைப் பற்றிய செய்திகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட ஒருமணி நேரமான பின்னும், அதிகாரிகளிடமிருந்து எந்த நேரடியான அழைப்பும் வராததிலேயே, ரிஷிக்குப் பயப்படும் அளவிற்கு எதுவும் நடந்திருக்காது என யூகித்தான் விக்ரம்.
அழைப்பை ஏற்ற ரிஷியின் அதிகாரியும் அதையே சொல்ல, நிம்மதி பெருமூச்செறிந்தவன் உண்மை நிலவரத்தைக் கேட்டறிந்தான்.
“ஓ அப்படியா!…”
….
“ரெண்டு நாளாகுமா?”
….
“சரி! சரி! புரியுது. தாங்கஸ் சார்.”
கணவன் அழைப்பைத் துண்டித்த மறுநொடி, “ரிஷிக்கு என்னாச்சு விக்கிபா. ஹாஸ்பிடல்ல இருக்கானா? எதுக்கு ரெண்டு நாளாகுமா?” கேள்விகளால் தாக்கினாள் காயத்ரி.
பதிலேதும் கூறாமல் மீண்டும் கைப்பேசியுடன் அவன் மெத்தையில் அமர,
“நான் கேட்டுக்கிட்டே இருக்கேன். எனக்குப் பதில் சொல்லாமல் யாருக்கு ஃபோன் பண்ணறீங்க?” பின்தொடர்ந்தாள் அவள்.
ஒரே ரிங்கில் அண்ணனின் அழைப்பை ஏற்ற கீர்த்தனா,
“அண்ணா! சாருமாக்கு என்ன ஆச்சு? ரிஷிகிட்ட பேசினீயா? அவன் எப்படி இருக்கான்? ஏன் நான் ஃபோன் பண்ணா எடுக்கமாட்டேன்றான்?” படபடவென வெடித்தாள்.
“யாருக்கும் எதுவும் ஆகல. தொணதொணன்னு கேள்வி கேட்காம, நான் சொல்றத பொறுமையா கேளு.” தங்கையை அதட்டியவன்,
‘நீயும் தான்!’ என்பதுபோல மனைவிக்குக் கண்ணசைத்தான்.
அளவுக்கு மீறி பெய்த புயல்மழையின் தாக்கத்தால் விமானங்கள் தரையிறங்கும் ஓடுபாதைகள் முழுவதும் வெள்ளக்காடாகி, இரண்டு மணி நேரமாக விமான போக்குவரத்தை முடக்கி சரிசெய்ய முயன்ற போதிலும், விடாமல் கொட்டித் தீர்த்த மழையினால் தண்ணீர் வடிய வடிய நிரம்பிக்கொண்டே இருக்கும் பம்பாய் விமான நிலையத்தின் நிலவரத்தை எடுத்துச்சொன்னவன் ரிஷிகுமார் இயக்கிய விமானத்தைப் பற்றி விவரித்தான்.
நடுவழியில் திசை மாற்றப்பட்டு சுற்றியதில் ரிஷிகுமார் இயக்கிய விமானத்தின் எரிபொருள் அளவு குறைந்து கொண்டே வர, உடனடியாகத் தரையிறங்கியே ஆக வேண்டுமென நிலைமை ஏற்பட்டிருந்தது. புயல் மழையின் வீரியத்தால் ஓடுபாதையில் ஆழமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க, அதில் பல நூறு மைல் வேகத்தில் தரையிறங்கிய விமானம் தள்ளாடி நிலைகுலைந்து, பின்பகுதியில் தீப்பிடித்து, ரிஷி உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்களுக்கு அடிப்பட்டிருப்பதாக மேலதிகாரி கூறியதை விளக்கியவன்,
“லேண்டான அந்த வேகத்துல பேலன்ஸ் போன பிளேனை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில ரிஷிக்கு கழுத்தெலும்பு முறிஞ்சிடுத்தாம். அதுவும் அந்த வலியோடவே அவன் எல்லாரையும் பாதுகாப்பா இறக்கி விட்டுட்டு அப்புறம் தான் சிகிச்சையே எடுத்துக்கிட்டிருக்கான். அதுல அவன் நிலைமை மோசமாக, இப்போ உதடு அசைச்சாலே வலிக்குற அளவுக்கு வலி தீவிரமாயிடுத்தாம். குறைஞ்சது ரெண்டு நாளைக்காவது செடேஷன் தந்து ட்ரிப்ஸ் போட வேண்டியிருக்கும்னு சொல்லியிருக்காங்க.” என்றதும்,
“ஐயோ அண்ணா! எனக்கு அவனை உடனே பார்க்கணும். எங்க இருக்கான்னு சொல்லு.” அழத்தொடங்கிவிட்டாள் கீர்த்தனா.
“ம்ப்ச்…சிந்திச்சு பேசு கீர்த்தி. ரெண்டு குழந்தைகளை வச்சிட்டு கொட்டுற மழையில் அவ்வளவு தூரம் போக முடியுமா?” கடிந்தவன்,
“ரிஷியைப் பார்த்துக்க அங்க அவன் கலீக்ஸ் இருக்காங்க. ரெண்டு வாரத்துக்குள்ள அவனை ஊருக்கு அழைச்சிட்டு வந்துடலாம்னு சொல்லியிருக்காங்க. நீ மறுபடியும் அதிகப்பிரசங்கித்தனம் செஞ்சு குழப்பாதே.” என அடக்கிவைத்தான்.
நிதர்சனம் எனப் புத்திக்கு எட்டியதை மனதளவில் ஏற்கமுடியாமல் பரிதவித்தாள் பாவை.
“சும்மா கோபப்படாதீங்க விக்கிப்பா. அவ நிலைமையிலிருந்தும் யோசிச்சுப் பாருங்க.” கண்டித்த காயத்ரி,
“ஆயிரம்தான் ஃப்ரெண்ட்ஸ் டாக்டர்ஸ் எல்லாரும் இருந்தாலும், அங்க அவன் நம்ம யார் உதவியும் இல்லாமல் எப்படிச் சமாளிப்பான். நீங்க புறப்பட்டு போங்க. நான் மதுரைக்குக் கிளம்புறேன்.” மறுவழி சொன்னாள்.
“அது சரி! அப்போ சென்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகியிருக்கு உன் அம்மா தனியா இருந்தா பரவாயில்லையா?” அழுத்திச்சொல்லி முறைத்தான்.
அதுவரை ரிஷி ரிஷி எனப் புலம்பிக்கொண்டிருந்த கீர்த்தனா, “என்னது சாருமா சென்னை ஹாஸ்பிடல்ல இருக்காங்களா? என்ன சொல்லற ‘ண்ணா? ” பதற,
“உன் நாத்தனார் கேக்குறால்ல….சொல்லு…” மனைவியை கோர்த்துவிட்டான் விக்ரம்.
“அது…அது வந்து கீர்த்தி…எங்களுக்காக அம்மா நம்ம குடும்ப ஜோசியர பார்க்க போயிருக்காங்க…” மென்றுவிழுங்கிய காயத்ரி, கணவனின் அனல்பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திணறினாள்.
தன் சாருமாவுக்கு இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று தான் வேற ஏதேதோ சொல்லி குழப்பிவிட்டோமே என நொந்துகொண்டவள் அழத்தொடங்க,
“உன் சாருமா பசி மயக்கத்துல தான் கீழ விழிந்திருக்காங்க கீர்த்தி. நீ சொன்ன விஷயத்தை முழுசா கேட்டாங்களா இல்லையான்னு கூடத் தெரியாது. நீ வீணா மனச போட்டுக் குழப்பிக்காத.” தீவிரக் குரலில் உரைத்த விக்ரமின் கண்கள் மட்டும் மனையாளை சுட்டெரிக்கத் தவறவில்லை.
“ஆமாம் விக்ரம். என்னால தான் எங்க அம்மாவுக்கு இந்த நிலைமை. இப்போ என்ன பண்ணணும்னு சொல்றீங்க.” காயத்ரியின் பொறுமை எல்லையைக் கடந்தது.
“அண்ணா! என்ன இது….” கீர்த்தனா தட்டிக்கேட்க,
“நீ அவளுக்கு சப்போர்ட் பண்ணாத கீர்த்தி. குழந்தை விஷயத்துல நடக்கறத ஏத்துக்கோங்கன்னு படிச்சுப் படிச்சு சொல்லியும், இப்படி பரிகாரம் சிகிச்சைன்னு வருத்திக்குற அம்மாக்கும் பொண்ணுக்கும் பரிதாபப்பட்டு பட்டு நான்தான் இங்க லூசா போயிட்டிருக்கேன்.” என நொந்துகொண்டான்.
இப்பொழுது தேம்பி தேம்பி அழுவது காயத்ரியின் முறையாயிற்று.
“சாருமாக்கு எதுவும் ஆகாது அண்ணி. நீங்க ரெண்டுபேரும் சென்னை கிளம்புங்க.” எனத் தேற்றிய கீர்த்தனா,
“அண்ணா! நீ சொல்ற மாதிரி, ரிஷியைப் பார்த்துக்க அவன் நண்பர்கள் நிறைய பேர் இருப்பாங்க. அவனுக்கும் ஒண்ணுமாகாது.” கனத்த மனத்தோடு தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.
அச்சமயம் துயில்கலைந்து, கண்ணைக் கசக்கிக்கொண்டே கீர்த்தனாவின் மடியில் அமர்ந்த யாழினி “விக்கிப்பா!” என்று மழலையில் அழைத்ததும் விக்ரமின் மனம் கரையவே செய்தது.
குழந்தையிடம் செல்லம் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தவனின் விழிகள் பெண்கள் இருவரின் வெளிர்ந்த முகத்தைக் கவனிக்க மறக்கவில்லை.
வெறுமையில் பரிதவிக்கும் மனைவிக்கும், தனிமையில் பித்துப்பிடித்தது போல அமர்ந்திருக்கும் தங்கையையும் கண்டவனுக்குக் குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
ஆறுதல் சொல்ல வேண்டிய இடத்தில் சிடுசிடுத்துவிட்டேனே என நொந்துகொண்டான்.
“யாழிகுட்டி, விக்கிப்பாவ பார்க்க சென்னைக்கு வரீயா?” குழந்தையிடம் பேசுவதுபோல பெண்களுக்குச் சமாதானத் தூது அனுப்பினான்.
பெண்கள் இருவரும் அவனை கேள்வியாகப் பார்த்தனர்.
வலதுபுறம் அமர்ந்திருந்த மனையாளை இழுத்துச் சேர்த்து தோளோடு கெட்டியாக அணைத்துக்கொண்டவன், “என்னையும் காயுமாவையும் பார்க்க, நீ அம்மா, யாதுகுட்டி எல்லாரும் சென்னைக்கு வரீங்களா யாழிகுட்டி! அங்க நமக்கு ஒரு பெரிய வீடு இருக்கு. அங்க நாம ஜாலியா விளையாடலாம்….” எனச் சொல்லவும், கீர்த்தனாவின் முகம் பளிச்சிட்டது;
‘உன் கரிசனம் எனக்குத் தேவையில்ல.’ என்ற ரீதியில் அவனிடமிருந்து எத்தனித்தாள் காயத்ரி.
முரடு பிடிக்கும் மனைவியை இழுத்துப் பிடித்துச் சமாதானம் செய்த வண்ணம்,
“கீர்த்தி! சத்யா அங்கிள்கிட்ட பேசிட்டு உங்க மூணு பேருக்கும் ஃப்லைட் டிக்கட் புக் பண்ணறேன். நீ சென்னைக்கு வந்ததும், நீயும் காயத்ரியும் சேர்ந்து அத்தையைப் பார்த்துக்கோங்க. ரிஷியைப் பத்திரமா அழைச்சிட்டு வந்து உன்கிட்ட சேர்க்கறது என் பொறுப்பு.” அந்த நொடி தன் மனத்தில் தோன்றிய திட்டத்தை ஒப்பித்தான் விக்ரம்.
சிற்றலை கணக்காய்ச் சங்கடங்கள் பெருகி வளர,
சண்டைகளும் சமாதானங்களும் பூதாகரமானது இன்று;
சஞ்சல நதியில் குழம்பித் தவிக்கும் உள்ளங்கள்,
சிங்காரச் சென்னை வாசத்தில் தெளியுமா நாளை – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….


Please Comment Here