153 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
இடியெனத் தலையில் இறங்கிய பாரங்களை எல்லாம்,
இரத்தம் கொதிக்க தூற்றியும் இன்முகத்துடன் தாங்கியும்,
இருகொள்ளி பாம்பெனக் கையாண்ட இயமானின் முயற்சிகள்,
இன்பங்களை நல்கியதா; இன்னல்களை கூட்டியதா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 24…
சென்னை, இந்தியா
சாரதாவின் உடல்நிலை அவர்கள் எதிர்பார்த்ததை விட மோசமாக இருந்தது.
மருத்துவப் பரிசோதனைகளில், சாரதாவுக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும், மேற்கொண்டு சிகிச்சைகள் அளிப்பதைப் பற்றி கலந்துபேச, மருத்துவர் அவர்கள் வருகைக்காகக் காத்திருப்பதாகவும் சாரதாவின் தோழி கூறக் கேட்ட காயத்ரி அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
“பதறாதே மா! அட்டாக் வந்திருக்குறது சாரதாவுக்குத் தெரியாது. மயக்கம் தெளிஞ்சதிலிருந்து சாதாரணமா தான் பேசிட்டு இருக்கா.” தேற்றியவர், அவர்களை சாரதாவை அனுமதித்திருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.
அன்னையின் வெளிர்ந்த முகம், ஒட்டிப்போன கன்னங்கள், இடதுகையில் குத்தப்பட்டிருந்த ஐ.வி ஊசி, இதயத்துடிப்பை கண்காணிக்கும் மானிடர் என அனைத்தையும் பார்த்த காயத்ரிக்குக் கண்ணில் நீர்கட்டிக்கொண்டது.
“அம்மா!!!” அவர் கழுத்தில் புதைத்துக் கதறினாள்.
“எனக்கொண்ணுமில்ல டா. ரெண்டு நாள் விரதமிருந்ததுல….” என விளக்கம் கூறத் தொடங்கியவரின் விழிகள் விக்ரமின் இறுகிய முகத்தைக் கண்டதும்,
“நான் நல்லா இருக்கேன் மாப்பிள்ளை; டிஸ்சார்ஜ் பண்ணிருந்தா நானே வந்திருப்பேன். நீங்க ஏன் இவ்வளவு தூரம் வந்தீங்க?” தனக்கு ஒன்றுமில்லை என்பதை வார்த்தைக்கு வார்த்தை அழுத்திக் கூறி நினைவூட்டிக் கொண்டிருந்தார்.
எதற்கும் அசராத மாமியாரின் வைராக்கியத்தைப் பற்றி அவன் அறிந்திருக்கவே செய்தான்.
“உங்களுக்கு ஒண்ணுமில்லன்னு தெரியும் அத்தை. நீங்க ‘சென்னைக்கு’ வந்திருக்குறதா தெரிஞ்சதும், எங்களுக்கும் நம்ம வீட்டுல வந்து தங்க ஆசையா இருந்துது.” அவனும் அவருக்கு இணையாக ‘சென்னை’ என்ற வார்த்தையை அழுத்திக் கூறி பொடிவைத்துப் பேச, அவர் கப்சுப் என்றானார்.
மற்ற பொதுவான விஷயங்களைப் பேசி விடைப்பெற்ற சாரதாவின் தோழிக்கு நன்றிகூறி வழியனுப்பிய காயத்ரியும் விக்ரமும் மருத்துவரைச் சந்தித்தனர்.
அறுவை சிகிச்சை செய்யவேண்டிய அளவுக்கு அபாயமில்லை என்றபோதும், கண்டிப்பான உணவுமுறை பழக்கங்கள், உடற்பயிற்சி, மருந்து மாத்திரைகள் மூலம் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம் என விவரங்களைப் பகிர்ந்தவர், இரண்டு நாட்கள் மருத்துவக் கண்காணிப்புகுப் பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் எனக் கூறினார்.
தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என காயத்ரி நிம்மதி பெருமூச்சுவிட்டு எழ, மாமியாரை இன்னும் இரண்டு நாட்கள் கூடுதலாக மருத்துவமனையில் வைத்துப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டு மருத்துவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினான் விக்ரம்.
ராக்கேட் வேகத்தில் எகிறும் மருத்துவமனை செலவுகளில் இது அவசியமா என நச்சரித்த மனையாளை மருத்துவமனையின் உணவுக்கூடத்திற்கு இழுத்துச் சென்ற விக்ரம், அவளுக்குப் பருக பழச்சாறு வாங்கித் தந்த பின்னே பதிலுரைத்தான்.
“பம்பாயில் மழை இன்னும் விடாம பெஞ்சிட்டு இருக்கு; என்னால நாளை மறுநாள் தான் கிளம்ப முடியும். அத்தைக்கு ஒண்ணுமில்லேனாலும், இன்னும் ரெண்டு நாளைக்கு அவங்க ஹாஸ்படில்ல இருந்தா நான் கொஞ்சம் நிம்மதியா போயிட்டு வருவேன்.” என்றான்.
கணவரின் அக்கறையில் உள்ளுக்குள் நெகிழ்ந்தாள் எனினும், அதைக் காட்டிக்கொள்ளாமல் “எங்கமேல நம்பிக்கை இல்லையா விக்கிப்பா?” எனக் குழைந்தாள்.
“சத்தியமா இல்ல!” அழுத்தம் திருத்தமாகவே பதிலளித்தான் விக்ரம்.
“ம்க்கும்…” கழுத்தை நொடித்தவளின் அலைபேசி அலறியது.
“காயத்ரி! நீ கேட்ட ப்ளூ பேக்கட் ஆவின் பால் கிடைக்கல; க்ரீன் மேஜிக்தான் இருக்காம். வாங்கவா?” சென்னையில் தங்கள் வீட்டிற்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்மணி தான் கடையிலிருந்து அழைத்திருந்தாள்.
குறிப்பிட்ட ரகப் பால் தவிர வேறு எதுவும் யாதவனுக்கு ஒவ்வாது என்று அறிந்திருந்த காயத்ரி, வேண்டாம் என்று கூறி, கூடவே முன்பு பேசும்போது வாங்கச்சொல்லிக் கேட்டிருந்த பொருட்களையும் நினைவூட்டி அழைப்பைத் துண்டித்தாள்.
“விக்கிப்பா! நீங்க ஏர்போர்ட் போகுற வழியில் ஒரு லிட்டர் ப்ளூ பேக்கட் ஆவின் பால் வாங்கிக்கோங்க; அப்புறம் குழந்தைகளுக்குச் சத்து மாவு கஞ்சி அரைச்சு தரச்சொல்லி நம்ம மெஸ் மாமிகிட்ட கேட்டிருந்தேன். அதையும் போகுற வழியில் வாங்கிக்கோங்க.
எந்தப் பாத்திரமா இருந்தாலும் கீர்த்தனாவை ஒருமுறை அலம்பி எடுத்துக்கச் சொல்லுங்க….
ஹான்…அந்த மாதிரி…..” அவள் வேலை சொல்லிக்கொண்டே போக,
“நீயே கீர்த்தனாவை ஏர்போர்ட்லேந்து பிக் அப் பண்ணிட்டு, வீட்டுக்கு அழைச்சிட்டுப் போ. எப்படியும் நீங்க வீட்டுக்குப்போக ஒன்பது மணியாகிடும். அதுக்குமேல ஹாஸ்பிடல் கிளம்பி வரவேண்டாம்.
நாளைக்கு வந்தால் போதும். எக்காரணத்துக்குக் கொண்டும் குழந்தைகளை அழைச்சிட்டு வராதீங்க. ஒருத்தர் மாத்தி ஒருத்தர் ட்ர்ன் எடுத்துட்டு வாங்க.” என்று திட்டத்தை மாற்றினான்.
“நாங்க கூட்டணி சேர்ந்தா உங்க தலையை உருட்டுவோமே! பரவாயில்லையா?” அவள் கண்சிமிட்டி நக்கல் செய்ய,
“நீ அடுக்குற வேலைக்கு அதுவே பரவாயில்ல…” அவனும் ஏட்டிக்குப் போட்டி இடித்துக்காட்டினான்.
விளையாட்டாகச் சொன்னாலும் அவளுக்கும் அதுதான் சரியெனப் பட்டது.
அதுவும் ரிஷியைப் பற்றிய கவலையில் மூழ்கியிருக்கும் கீர்த்தனாவின் மனநிலை புரியாமல் விக்ரம் சிடுசிடுக்கவும் வாய்ப்புண்டு என யூகித்தாள். கன்னக்குழிகள் பள்ளமாகப் பழச்சாறை உறியும் கணவனின் முகத்தைக் கண்டவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.
“முசுடு விக்கிப்பா!” செல்லமாக அவன் கன்னத்தில் கிள்ளியபடி புறப்படலாம் என்றாள்.
அறைக்குத் திரும்பியவள் அன்னையிடம் சில மணி நேரம் பேசிவிட்டு விமான நிலையத்திற்குக் கிளம்ப, ஓய்வறைக்குப் போக வேண்டுமெனக் கூறினார் சாரதா.
காயத்ரி அவரைக் கைத்தாங்கலாய் பிடித்து அழைத்துச் சென்று வருவதைக் கவனித்த விக்ரம், அடுத்தமுறை யார் உதவுவார்கள் என யோசிக்க, “காயுமா! நானே வீட்டுக்குப் போயிட்டு வரேன்.” என அறிவித்தான்.
“இல்ல விக்கிப்பா. குழந்தைகளைப் பார்த்து ஒருவாரம் ஆகுது. கண்ணுலே நிக்குறாங்க. நானே போயிட்டு வரேன்.” மறுப்புச் சொல்லிக்கொண்டே பயணப்பைகளுடன் வெளியேறினாள் காயத்ரி.
‘மக்குப் பொண்டாட்டி!’ மனத்தில் ஏசிக்கொண்டே அவளைப் பின்தொடர்ந்தவன், “காயுமா! அத்தைக்கு மறுபடியும் பாத்ரூம் போகணும்னா யார் உதவுவாங்க; அதுக்குத்தான் சொல்றேன். நீ இங்கேயே இரு.” தெளிவுபடுத்தினான்.
இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்ற ரீதியில் அவனை மேலும் கீழுமாக ஏறிட்டு முன்னே நடந்தாள்.
சிந்தனையில் கரைந்தவனாக மெதுவாக நடந்து வரும் கணவனின் சங்கடத்தை உணர்ந்தவள், “அம்மா ஸ்தானத்துல இருக்குற அத்தைக்கு மருமகன் உதவி செய்யறதுல தப்பில்ல.” நேரடியாகவே பதிலளித்தாள்.
அப்போதும் அவன் முகத்தில் அத்தனை குழப்பம்.
“அப்படியே உங்களுக்குச் சங்கடமா இருந்தால் நர்ஸ்ஸை கூப்பிடுங்க விக்கிப்பா; அவங்க வந்து பார்த்துப்பாங்க.” மறுயோசனை சொல்லி, இரவு அழைப்பதாகக் கூறி புறப்பட்டாள்.
சரியெனத் தலையசைத்துவிட்டு அறைக்குத் திரும்பியவன் சிறிது நேரம் அங்கமர்ந்தவாறு மடிக்கணினியில் தன் அலுவல் வேலைகளைச் செய்துகொண்டிருந்தான். இரவு உணவு வந்ததும் அதை சாரதாவுக்குப் பரிமாறிவிட்டு,
“அத்தை! நான் காரிடாரில் படுத்துக்குறேன்.ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வந்து பாத்துக்கறேன்.” என்று வாசலுக்கு நகர்ந்தான்.
“அதான் ரூமுக்குள்ளேயே அட்டென்டர் பெட் இருக்கே மாப்பிள்ளை. இங்கேயே படுத்துக்கோங்க.” தடுத்தார் சாரதா.
“அதுக்கில்ல அத்தை! எனக்கு ஆஃபீஸ் வேலை நிறைய இருக்கு. லைட் போட்டா உங்களுக்கு அசௌகரியமா இருக்கும். உங்களுக்கு ஏதாவது வேணும்னா, அந்த பெல் அடிங்க.” அவர் வலதுபுறத்தில் கைக்கெட்டும் தூரத்திலிருந்த அழைப்பு மணியைச் சுட்டிக்காட்டினான்.
அவன் கண்களைச் சுற்றி படர்ந்திருந்த கருவளையமே நெடுந்தூரப் பயணத்தால் எத்தனை அயர்ந்து போயிருக்கிறான் என்று காட்டிக்கொடுத்தது. ஏ.சி வசதியில்லாத காரிடாரில் கொசுக்கடிக்கு மத்தியில், அதுவும் நாற்காலியில் உட்கார்ந்தபடி உறங்குவது சாத்தியமே இல்லை என அறிந்தவர்,
“இல்ல மாப்பிள்ளை. லைட் வெளிச்சமெல்லாம் எனக்குத் தொந்தரவா இருக்காது. அதுவும் மருந்தின் வீரியத்துல கண்ண மூடினதும் தூக்கம் வந்துடும்.” மென்னகையுடன் கூறினார்.
அதற்கு மேலும் மறுப்புச் சொல்ல மனமில்லாதவன், தேவைப்பட்டால் செவிலியரை அழைத்துக் கொள்ளலாம் எனத் தீர்மானித்து அங்கேயே அமர்ந்துகொண்டான்.
அரைமணி நேரத்துக்கொரு முறை செவிலயர் வந்து மருந்து மாத்திரிகளை வாங்கித்தரச் சொல்ல, பரிசோதனைகள் செய்ய எனத் தொந்தரவு செய்ய, கண்ணசருவதும் விழிப்பதுமெனத் துவண்டுபோனார் சாரதா.
இதற்கிடையில் கீர்த்தனாவும் குழந்தைகளும் பத்திரமாக வந்துவிட்டனர் என காயத்ரி காணொளியில் அழைக்க, அவர்களுடன் பேச இரவு பத்து மணியைத் தொட்டிருந்தது.
“எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்குன்னு தெரியும் மாப்பிள்ளை.” உறங்கும் முன் உட்கொள்ள வேண்டிய மருந்துகளைத் தர வந்த செவிலியர் வெளியேற, மெல்லமாகப் பேச்சுக்கொடுத்தார் சாரதா.
“உங்களுக்குச் சாதாரண மயக்கம்தான் அத்தை.” விக்ரமின் குரல் தழுதழுத்தது.
“சாதாரண மயக்கத்துக்கு யாரும் இருபத்துநாலு மணி நேரம் ஈ.சி.ஜி மிஷின் வச்சு கண்காணிக்கமாட்டாங்க மாப்பிள்ளை.” இடைவிடாமல் மெட்டிட்டுக் கொண்டிருந்த அந்தக் கருவியைச் சுட்டிக்காட்டியவரின் இதழ்கள் விரக்தியில் விரிந்தன.
“இப்போ தலைவலி ஜலதோஷம்னு வந்தாலே இதையெல்லாம் அடிப்படை பரிசோதைன்னு சொல்லி செய்யறாங்க அத்தை.” என்றான் சமாளிப்பாக.
“சரி! நீங்க சொல்லற மாதிரியே வச்சுக்கிட்டாலும், எதுக்கு கலர் கலரா இவ்வளவு மாத்திரைகள் தராங்க?” என மடக்கினார்.
“இதெல்லாம் ஊட்டச்சத்து மாத்திரை அத்தை.” அசராமல் பதிலுரைத்தவன், “கண்டதையும் யோசிக்காம தூங்குங்க. எனக்கு ஆபிஸ்லேந்து கால் வருது” என்று வெளியே நழுவினான்.
உறங்கியிருப்பார் என யூகித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் வந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கண்கள் அகல விழித்திருந்தவர், “பயப்படாதீங்க மாப்பிள்ளை. உதவிக்கு யாருமில்லாம குற்றுயிரும் குலையுயிருமா என் புருஷனை ஹாஸ்படல்ல சேர்த்தப்போதே எனக்கு எதுவும் ஆகல. இந்தச் சாதாரண மாரடைப்பு என்னை என்னப் பண்ணிடப்போகுது?” என்றார் தன்னம்பிக்கை தூக்கலாக.
“அவ்வளவு மனத்திடம் இருக்குற நீங்க ஏன் அத்தை தொட்டதுக்கெல்லாம் ஆகாத்தியம் பண்ணும் கீர்த்தி பேச்சை கேட்டு மயங்கி விழுந்தீங்க?” மனத்தில் உதித்த கேள்வியை வெளிப்படையாகவே கேட்டான்.
அவர் பதில்சொல்ல முடியாமல் கண்களை மூடிக்கொள்ள,
“தத்தெடுத்துக்கறது ஒண்ணும் அவ்வளவு பெரிய குத்தமில்ல அத்தை.” எரிச்சல் மேலோங்கினாலும் மென்மையாகவே எடுத்துச்சொன்னான்.
இறுக மூடிய அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு திடுக்கிட்ட விக்ரம், “சரி விடுங்க அத்தை! நாம இதைப்பற்றி அப்புறம் பேசுவோம்.” கண்களை மிருதுவாகத் துடைத்துவிட்டு அவரை உறங்குமாறு கூறி இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“இல்ல மாப்பிள்ளை. கீர்த்தனா சொன்னதைக் கேட்டு நான் மயங்கி விழல. இன்னும் சொல்லப்போனா, அவ என்ன பேசினான்னு கூட என் காதுல விழல. ஜோசியர் சொன்னதை நெனச்சுட்டே ஃபோன் எடுத்தேன். அதனாலதான் மயங்கி விழுந்தேன்.” உண்மையை உடைத்தார்.
ஜோசியம் என்றதும் விக்ரமின் முகத்தில் அதிருப்தி குடிகொள்ள, சாரதாவே முன்வந்து அனைத்தையும் ஒப்பித்தார்.
“ராமேஷ்வரம் போகச்சொன்ன அந்த சித்தர் வேறொரு விஷயத்தையும் சொன்னாரு.
பெத்தவங்க நாங்க ஒரு ஜீவனுக்குப் பட்டினி போட்ட பாவத்தின் விளைவுதான் காயத்ரிக்குப் புத்திர ஸ்தானத்துல தோஷமிருக்காம்.
நாங்க அந்த மாதிரி எந்தத் தப்பும் மனசறிஞ்சு செஞ்சதில்ல. அதான் குடும்ப ஜோசியரை பார்த்து, அது என்ன ஏதுன்னு விசாரிச்சு பரிகாரம் கேட்டுட்டுப் போகலாம்னு சென்னைக்கு வந்தேன்.”
அப்போதும் அவன் எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.
விஷயத்தைக் கேட்ட ஜோசியர், பட்டினி போடுவது என்பது சர்வ ஜீவராசிகளுக்கு உணவு அளிக்காமல் விடுவது மட்டுமில்லை என்றும், வழிவழியாகச் செய்துவரும் குலதெய்வ வழிபாடுகளைப் புறக்கணிப்பதும், குடும்பத்தில் இறந்துபோனவர்களுக்கு முறையான திதி கொடுக்காமல் அலட்சியம் செய்வதையும் உள்ளடக்கும் எனக் கூறியதாக எடுத்துரைத்தவர்,
“எல்லாம் சரியாத்தானே செஞ்சிட்டு இருக்கோம்னு யோசிச்சிட்டு இருக்கும்போது தான் ரிஷியோட கூடப்பிறந்த குழந்தையை நிர்க்கதியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு நினைவுக்கு வந்துது.”
‘இது என்ன புதுப் பிரச்சனை!’ விக்ரம் மனத்தில் அசைபோட, சாரதா தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தார்.
நீர்மத் திசுவழற்சி (Cystic Fibrosis) நோயுடன் பிறந்ததால் அக்குழந்தை இறந்தே பிறந்தது என தன்னிடம் அறிவித்த கணவர், மருத்துவர்கள் அந்தச் சிசுவின் உடலை ஆராய்ச்சிக்கு உபயோகிக்கக் கேட்டச் சூழ்நிலையையும் விவரித்து,
“எனக்கு அதில் துளிக்கூடச் சம்மதமில்ல. ஆனால் காயத்ரியின் அப்பாதான் ஒற்றைக் காலில் நின்னாரு.
எண்பதுகளின் பிற்பகுதியில் அது ரொம்ப அரிய வகையான நோய். பத்தாயிரம் பேருல ஒருத்தருக்குத் தான் வந்துது. (Recessive Genetic Disorders) பின்னடைவு மரபணு கோளாறுகளால் ஏற்படுறதுன்னு தவிர, அதைத் தடுக்கவோ குணப்படுத்தவோ எந்தத் தீர்வும் இல்லாத காலம்.
நம்ம மகள் உடலை வச்சு செய்யற ஆராய்ச்சி மூலமா, இந்த நோய்க்குத் தீர்வு கிடைச்சா, அவ இந்த உலகத்துக்கு ஏதோ நல்லது செய்ய பிறவி எடுத்திருக்கான்னு நம்ம மனசைத் தேத்திக்கலாம் எனக்கு மூளைச்சலவை செஞ்சி சம்மதிக்க வச்சாரு.
ஆராய்ச்சிக்கு ஒத்துக்கிட்ட எங்களுக்கு ஹாஸ்பிடல் நிர்வாகம் நஷ்டயீடு தந்தாங்க. நான் வேண்டாம்னு சொல்லியும், என் புருஷன் அதை வாங்கினதோடு மட்டுமில்லாம, அதை காயத்ரி படிப்புக்குச் செலவழிச்சாரு…” என்றவருக்கு அன்று அவர்கள் கழுத்தை நெரித்த பணத்தேவைகள் பசுமரத்தாணியாய் கண்முன் நிழலாட விரக்தியில் தலையைச் சிலுப்பிக்கொண்டவர்,
“அந்தக் குழந்தையை முறையா வழி அனுப்பியும் வைக்காம, இத்தனை வருஷம் திதியும் கொடுக்காம பட்டினி போட்டிருக்கறதுனால அந்த ஆத்மா, தலைச்சன்பிள்ளையான காயத்ரி மேலத் தன் கோபத்தைக் காட்டியிருக்குன்னு ஜோசியர் சொன்னாரு.” நீண்ட விளக்கம் தந்தார்.
கண்டதையும் கேட்டு குழம்பியிருக்கிறார் என்று தீர்க்கமாக நம்பிய விக்ரம்,
“நீங்களும் மாமாவும் நல்லெண்ணத்துல தான் செயல்பட்டிருக்கீங்க அத்தை. மனசைப் போட்டு குழப்பிக்காம ஓய்வெடுங்க.” பேச்சைக் கத்தரித்தான்.
“இல்ல மாப்பிள்ளை! ஜோசியர் சொன்னதை அப்படியெல்லாம் அலட்சியப் படுத்தக் கூடாது. இதுவரைக்கும் செய்யலேனாலும், இனிமேலாவது அந்த ஆத்மாவுக்கு முறையா திதி கொடுக்கணும். நீங்கதான் ரிஷிகிட்ட எடுத்துச் சொல்லிப் புரியவைக்கணும்.” கண்ணீரில் கரைந்தார் அவர்.
உடன்பிறந்தவள் பற்றி பேசினாலே ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிக்கும் ரிஷியின் குணமறிந்தவன் மௌனம் காக்க,
காயத்ரி மண்டலப் பூஜை ஒன்றை பூர்த்திச் செய்து, பூஜை செய்த பொருட்களை ராமேஷ்வரத்தில் கரைத்து, 22 தீர்த்தங்களில் நீராடிவிட்டு வரவேண்டும் எனவும் விவரித்தார்.
விரதம், பரிகாரம் என உடலாலும் உள்ளத்தாலும் உடைந்துபோன மனையாளை இப்போது தான் ஓரளவிற்கு மீட்டெடுத்துள்ளேன் என மனத்தில் அசைபோட்ட விக்ரமின் இரத்தம் கொதித்தது.“
என் காயத்ரிக்கு எந்தத் தோஷமும் இல்ல.” பொங்கிய சினத்தை அடக்கியபடி உரைத்தான்.
“இல்ல மாப்பிள்ளை; ஜோசியர் வாக்கு தெய்வத்தோட வாக்குக்குச் சமமானது. அவர் சொன்னமாதிரி பரிகாரம் செஞ்சிட்டா எல்லாம் சரியாயிடும்.” அவரும் பிடிவாதமாகவே உரைத்தார்.
“என்ன பெரிய வாக்கு. அந்த ஆளு காயத்ரி ஜாதகத்தை எத்தனைமுறை பார்த்திருப்பாரு. அப்போ எல்லாம் கண்டுபிடிக்காத விஷயத்தை இப்போ சொல்றாருன்னா, நீங்க புரிஞ்சுக்க வேண்டாமா அத்தை…
…நீங்க சொன்னதையே திருப்பிப் போட்டுப் பேசி உங்களை ஏமாத்துறாருன்னு.” பொறுமையிழந்து கொந்தளித்தான் விக்ரம்.
ரிஷிக்கு மேல் முரடு பிடிக்கும் மாப்பிள்ளையிடம் எப்படிப் பேசி புரியவைப்பது எனக் குமுறியவரின் இதயம் படபடக்க, அது அந்த மருத்துவக் கருவியில் பிரதிபலித்தது.
சூழ்நிலை புரியாமல் உணர்ச்சிவசப்படுகிறோமே என நொந்துகொண்டவன், “ப்ளீஸ் அத்தை! புரிஞ்சுக்கோங்க. காயத்ரிக்கும் எனக்கும் மனசளவுல எந்தக் குறையுமில்ல.
யாதவன் யாழினி எங்களை வாய் நிறைய விக்கிப்பா, காயுமான்னு கூப்பிடறுதும், அதைப் பெருந்தன்மையா ரசிக்குற ரிஷி கிர்த்தனா அன்புக்கும் எதுவுமே ஈடாகாது.” அவர் கரங்களை ஆதுரமாய் வருடித் தந்தபடி,
“நீங்களும் மாமாவும் சேர்த்து வச்சிருக்க புண்ணியத்தாலதான் நாங்க நாலுபேரும் இவ்வளவு ஒத்துமையா இருக்கோம்.” நேர்மறையாகச் சிந்திக்கச் சொல்லி அறிவுறுத்தினான்.
“புரியுது மாப்பிள்ளை; இருந்தாலும் முறையா பரிகாரம் செஞ்சா உங்களுக்குன்னு ஒரு குழந்தை…..” சாரதா அதையே சொல்லிக் கடுப்பேத்த,
எவ்வளவு சொல்லியும் புரிந்துகொள்ள மறுக்கிறாரே எனச் சலிப்புத் தட்டியது அவனுக்கு.
“இது எனக்கும் காயத்ரிக்குமான தனிப்பட்ட பிரச்சனை அத்தை. உங்களுக்கும் ரிஷிக்கும் உடம்பு தேறினதுக்கு அப்புறம் நாங்க ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கப் போறோம். இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க; எதையும் யார்கிட்டயும் சொல்லி குழப்பாதீங்க.” கட்டளையாக உரைத்தான்.
கர்மவினையின் பலன்கள் கண்முன் விரிய,
கடந்தகால ஞாபகங்களில் கரைகிறாள் பாவை;
கட்டியவன் கட்டிக்காத்த ரகசியங்கள் உடைய,
கயவனெனக் கரைத்துக் கொட்டுவாளா நாளை – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….


Please Comment Here