138 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
வலி தரும் நினைவுகளை நெஞ்சில் சுமந்து,
வாழ்வதில் யாருக்கு என்ன பயன்!
வருவது வரட்டும் எதிர்கொண்டு வாழலாம்!
வருங்காலத்திற்கு வழிகாட்டிய வல்லவன் தீர்ப்பில்,
வருத்தங்கள் தீர்ந்ததா; வம்புகள் வளர்ந்ததா -மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 25…
ஒரே வாரத்தில் ரிஷியை சென்னைக்கு அழைத்து வந்திருந்தான் விக்ரம்.
வெகுநாட்களுக்குப் பிறகு சொந்த வீட்டில், அதுவும் கூட்டுக் குடும்பமாய் உலா வந்த பெண்கள் பூரிப்பில் மிதந்தனர். தோட்டம், மொட்டைமாடி என அந்த விசாலமான வில்லாவில் ஓடியாடிய குழந்தைகளுக்கும் தலைகால் புரியவில்லை.
அன்று இரவு கலகலப்பாக வம்படித்துக் கொண்டிருந்த குடும்பத்தினரின் மகிழ்ச்சியைக் கண்ட விக்ரம் இன்னும் ஒரு வாரம் சென்னையில் இருந்துவிட்டுச் செல்லலாமா என வினவினான்.
இரண்டு வாரத்தில் கீர்த்தனாவின் பிறந்தநாள்; அதற்கு மறுவாரமே தீபாவளி பண்டிகை; மாதக் கடைசியில் இரு ஜோடிகளின் திருமண நாள் என ஒன்றன் பின் ஒன்றாக விழாக்கள் வரவிருக்க, அதையும் விமர்சியாகக் கொண்டாடிவிட்டே செல்லலாம் என மறுயோசனை சொன்னான் ரிஷிகுமார்.
“அவ்வளவு நாளா…” வாயைப்பிளந்த விக்ரம், “சரி டா! ஆபிஸுல பேசிட்டு என் முடிவைச் சொல்லறேன்.” என்றான்.
“அதெல்லாம் ஹரி சாரும், சத்யா அங்கிளும் சந்தோஷமா சம்மதம் சொல்லுவாங்க.” அதீத நம்பிக்கையுடன் இடைபுகுந்த காயத்ரி, தானே அவர்களிடம் பேசி, அப்படியே வரும் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுப்பு கேட்கப்போவதாகவும் உரைத்தாள்.
“லீவ் எதுக்கு?” விக்ரம் நெற்றி சுருக்க,
“நமக்கெல்லாம் புது ட்ரெஸ் எடுக்க ஷாப்பிங்க் போகத்தான்.” அசால்டாகப் பதில் வந்தது அவளிடமிருந்து.
“அது சரி! போனா போகுதுன்னு அவங்க நமக்கு சென்னையில் இருந்தபடி வேலை செய்ய சலுகைகள் கொடுத்தா, நீ உன் இஷ்டத்துக்கு பிளான் போடுற.” கண்டித்த விக்ரம், எது வேண்டுமானாலும் வாரயிறுதியில் செய்துகொள்ளுமாறு உரைத்தான்.
விடுப்பு கேட்டேத் தீருவேன் என காயத்ரி அடம்பிடிக்க, கூடாது என விக்ரம் நிர்த்தாட்சண்யமாக மறுக்க, இருவரின் வாதம் அளவே இல்லாமல் நீடித்தது.
“எப்போ ஷாப்பிங்க் போனாலும், உனக்கும் மாமாக்கும் என்ன வாங்குறீயோ அதேமாதிரி இன்னொரு செட் வாங்கிட்டு வா ‘க்கா.” குறுக்கிட்டான் ரிஷிகுமார்.
“அடேய்! இதுதான் நீ உன் பொண்டாட்டி பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ணற லட்சணமா?” காயத்ரி கேலிசெய்து சிரிக்க, கீர்த்தனாவும் அழகாய் அசடுவழிந்தாள்.
அவன் புத்தாடை வாங்க எண்ணியது சாதனாவுக்கும் சந்தோஷுக்கும். திட்டமிட்டபடி கீர்த்தனாவின் பிறந்தநாள் அன்று சகோதரியை வீட்டினருக்கு அறிமுகம் செய்துவைத்தால், தீபாவளி பண்டிகையை அக்காக்கள் இருவருடனும் கொண்டாடலாம் என்று கணக்கிட்டான் ரிஷிகுமார்.
எதிர்பார்ப்புகள் மின்னும் மனைவியின் முகத்தைக் கண்டவனுக்குக் குற்றவுணர்ச்சி பெருக, அவளை ஏமாற்ற மனமில்லாமல்,
“ரித்தி அளவுக்கு எல்லாம் மாசக்கணக்கா ரகசியம் காத்து சர்ப்ரைஸ் பண்ண தெரியாது ‘க்கா. எதை என்கிட்ட சொல்லணும், எதை சொல்லக்கூடாதுன்னு ரொம்ப தெளிவா யோசிப்பா. ஆனால் நானோ, அவ கண்ணை உருட்டினா போதும்…மொத்தத்தையும் உளறிடுவேன்…” என்றவனின் மனக்கண்ணில் சாதனாவின் முகம் நிழலாட,
‘உனக்கா சர்ப்ரைஸ் பண்ணத் தெரியாது? மாசக்கணக்கா என்னைப் பற்றி சொல்லாம மறைச்சு வச்சிருக்குறது எல்லாம் எந்தக் கணக்கில் வரும் தம்பி?’ அவள் குரல் இடித்துக்காட்டுவதைப் போல் தோன்றியது.
அதை எண்ணி உள்ளுக்குள் சிரித்துத் தலையைச் சிலுப்பிக்கொண்டவன், “சரி ‘க்கா! ரெண்டு செட் வாங்கிட்டு வா; எனக்குப் பிடிச்ச அதே புடவையை ரித்தியும் செலக்ட் பண்ணறாளான்னு பார்ப்போம்.” குறும்பாய் கண்சிமிட்டி சமாளித்தான்.
“அப்போ இன்னொரு புடவையை என்னடா பண்ணுவ?” காயத்ரி நச்சரிக்க,
“வேற யாருக்குக் கொடுக்கப்போறேன். எல்லாம் என் ஸ்வீட் சிஸ்டருக்குத் தான்.” பொய்யும் இல்லாமல் மெய்யும் இல்லாமல் உரைத்தான்.
“மிச்ச மீதி எல்லாம் எனக்கா?” சண்டைக்கு வந்த அக்காவுடன் அக்கப்போர் செய்துகொண்டிருந்தான் ரிஷிகுமார்.
‘எத்தனை காதல் என்மேல்!’ எனத் துடிதுடித்த கீர்த்தனா, “இந்த விளையாட்டு எல்லாம் வேண்டாம் ரிஷி. உன்னால கடைக்குப் போக முடியாததுனால தான் அண்ணியை வாங்கிட்டு வர சொல்லறன்னு புரியுதுடா. ஆனால் உனக்குப் பிடிச்சதை நான் கரெக்டா கெஸ் பண்ணலேன்னா, எனக்கு மனசுக்கு ஒரு மாதிரி ஆயிடும். அதுவும் பர்த்டே அன்னைக்கு…வேண்டவே வேண்டாம்.” சோகமே உருவாய் மறுத்தாள்.
“சும்மா ஒரு ஜாலிக்குத் தானே டி உன்னைச் சீண்டுறான்.” காயத்ரி தேற்றியும் சமாதானமாகவில்லை அவள்.
“வேண்டாம்னா விட்டுடுங்களேன்!!!” என்றவளின் தோரணையில் ஸ்ருதி கூடியது.
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறாள் என நொடியில் புரிந்துகொண்டான் ரிஷிகுமார்.
“உனக்கு என்ன பிரச்சனை ரித்தி?” அவள் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தினான்.
கணவனின் நேர்கொண்ட பார்வை; அவன் கழுத்தைச் சுற்றியிருந்த கழுத்துப் பட்டை என ஒவ்வொன்றும் அவள் குற்றவுணர்ச்சியைப் பெருக்கியது.
“உனக்கு அடிப்பட்டது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே நான் சாருமாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் ரிஷி.” மனத்தை அழுத்திய விஷயத்தை உடைத்தாள்.
“நெனச்சேன்! நீ இப்படி ஏதாவது செஞ்சிருப்பேன்னு தெரியும்.” எகிறியவன், “விரதமிருந்ததுனால அம்மாக்கு எப்படி அட்டாக் வந்திருக்கும்னு யோசிச்சேன்.” வாய்க்குள்ளே முணுமுணுத்துக்கொண்டான்.
“இல்லடா! நான் சொன்னத கேட்டதுனால சாருமாக்கு அட்டாக் வரல. அவங்க விரதமிருந்ததுனால தான்….” அதுதான் உண்மையென அன்று அண்ணன் சொன்னபோது நம்பியவளுக்கு, இப்போது யோசித்துப் பார்த்தால் அபத்தமாகத் தோன்றியது.
“உண்மையைச் சொல்லுங்க சாருமா. நான் சொன்னத கேட்டு நீங்க மயங்கி விழலதானே. என்மேல பிராமிஸ் பண்ணுங்க சாருமா.” சோஃபாவில் அமர்ந்திருந்த சாரதாவின் காலடியில் மண்டியிட்டு கதறினாள்.
இதுதான் சாக்கு என மாமியார், ஜோசியர் சொன்னதை உடைத்து பிரச்சனைகளை வளர்த்துவிடுவாரோ என அஞ்சிய விக்ரம் அவரையே பதற்றத்துடன் பார்க்க,
“ரெண்டு நாள் சேர்ந்தாற்போல விரதமிருந்ததுனால தான் மயங்கிட்டேன் டா ரிஷி. வந்த இடத்துல இப்படி ஆயிடுத்தேன்ற பயத்துல தான் அட்டாக் வந்துது.” நிதானமாக மகனுக்குப் பதிலளித்தவர், கவலைப்பட வேண்டாமென மாப்பிள்ளைக்குக் கண்ணசைக்கவும் தவறவில்லை.
“நீ என்னைக்குமா உன் மருமகளை விட்டுக்கொடுத்திருக்க!” ரிஷி சிடுசிடுக்க,
“ப்ளீஸ் ரிஷி. நம்பு டா?” கெஞ்சலாக அவனருகே வந்தாள் கீர்த்தனா.
“வேண்டாம் ரித்தி! எதுவும் பேசாதே. எனக்கு வர கோபத்துக்கு ஏதாவது சொல்லிடப்போறேன். என்னைக் கொஞ்சம் தனியா விடு.” என்று உறுமிவிட்டு அறைக்குள் புகுந்தான்.
“விக்ரம் நீங்களாவது அவனுக்கு எடுத்துச் சொல்லுங்களேன்.” காயத்ரி கூற,
“சொல்ல சொல்லக் கேட்காம வீம்புக்குன்னா அவன்கிட்ட மொத்தத்தையும் உளறி வச்சிட்டு, இப்போ குத்துதே குடையுதேன்னு புலம்பினா நான் என்ன செய்ய முடியும்?” தங்கையின் செயலில் விக்ரமுக்கும் கோபம் தலைக்கேறி இருந்தது.
“எல்லாம் உன்னாலத் தான் ‘ண்ணா. அவன் ஊருக்கு வந்த அன்னைக்கே சொல்லியிருந்தா இவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டான்.” மூக்கை உறிஞ்சினாள் கீர்த்தனா.
“அது சரி! உன் நல்லதுக்கு அறிவுறுத்தினா என்னையே குறைசொல்லு!” எரிச்சல் கொண்ட விக்ரமும் அங்கிருந்து நகர,
“விடு கீர்த்தி. இவங்க கோபமெல்லாம் எம்மாத்திரம். மனச போட்டுக் குழப்பிக்காம போய் தூங்கு.” தேற்றினாள் காயத்ரி.
தங்கைக்குப் பரிந்து பேசும் மனையாளின் குரலில் வெடுக்கெனத் திரும்பிய விக்ரம்,
“ஐயோ பாவம்ன்னு உங்களுக்குத் தழைஞ்சு போகுறதுனால தான் ரெண்டுபேரும் இப்படித் தலைக்கு மேல ஏறி ஆடுறீங்க.” இருவரையும் தாளித்துக்கொட்டினான்.
இதற்கிடையில் கைகள் பொம்மையிலும், காதுகள் பெரியவர்கள் வாதத்திலும் எனக் கவனமாக இருந்த குழந்தைகள், பேச்சுச் சத்தம் கூடிக்கொண்டே போக, பாட்டி எனச் செல்லம் கொஞ்சியபடி சாரதாவின் மடியில் ஏறிக்கொண்டனர்.
“என் செல்லக்குட்டிஸ்க்கு தூக்கம் வந்துடுத்தா?” என இருவரையும் ஒருசேர வளைத்து முத்தமிட்ட சாரதா,
“எனக்கென்னவோ இந்தப் பயப்புள்ள நாளைக்கு உன் நட்சத்திர பிறந்தநாள்ன்னு தெரிஞ்சதுனால தான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்ற பேருல இப்படி முறுக்கிட்டுப் போயிருக்கான்னு தோணுது கீர்த்தி.” இரண்டு நாட்களுக்கு முன் தன்னிடம் கீர்த்தனாவின் நட்சத்திர பிறந்தநாளைப் பற்றி விசாரித்ததாக உரைத்தார்.
“அப்படியா மா!” கண்கள் அகல வினவிய காயத்ரி, “யாது யாழிக்குட்டி! நீங்க ரெண்டும் பேரும் இன்னைக்கு அத்தைக் கூடத் தாச்சி தூங்குவீங்களாம்.” எனக் கீர்த்தனாவைப் பார்த்துக் கண்சிமிட்டியபடியே குழந்தைகளைத் தன்னிடம் வரச்சொல்லி கை நீட்டினாள்.
குழந்தைகளும் குஷியாகி ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவளிடம் ஓடினர்.
தன்னவளை அனல் பார்வையால் சுட்டெரித்தான் விக்ரம். ஆனால் பெண்ணவளோ சற்றும் அசரவில்லை.
“அதான் உங்க பேச்சைக் கேட்க மாட்டோம்னு சொல்லிட்டீங்கல்ல!” இரு குழந்தைகளையும் கொஞ்சியபடி தங்கள் அறைக்குள் புகுந்தாள்.
மாமியார் சொன்னது உண்மையா பொய்யா என்று தெரியாதபோதும், அண்ணியின் செயலில் நிம்மதி உணரவே செய்தாள் கீர்த்தனா.
கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினாலே வித்தியாசத்தை உணர்ந்து அழத்தொடங்கிவிடும் பிள்ளைகள் முன் ரிஷியிடம் எப்படிப் பேசிப் புரியவைப்பது என வழி தெரியாமல் தவித்தவளுக்கு அந்தத் தனிமை வரமாய் தோன்றியது.
அறைக்குள் வந்தவள், கண்மூடிப் படுத்திருக்கும் கணவன் உறங்கவில்லை என நொடியில் கண்டுகொண்டாள். அவன் அசௌகரியத்தில் நெளிந்த விதமே, வலி நிவாரணி மருந்தைச் சாப்பிடாமலேயே படுத்திருக்கிறான் எனக் காட்டிக்கொடுத்தது.
“என்மேல இருக்குற கோபத்தை மருந்துமேல காட்டாத டா. பெயின் கில்லர் சாப்பிட்டுத் தூங்கு.” மருந்தை நீட்டினாள்.
…
“மன்னிச்சிரு டா ரிஷி.”
…
“உனக்கு ஆக்சிடென்ட் ஆனதுக்கு அப்புறம் தான் சாருமாகிட்ட சொன்னேன். அதுவரை மூச்சுக்கூட விடல தெரியுமா.”
…
“இந்தப் பிரச்சனைக்கு ஒரு சுலபமானத் தீர்வு சொல்லறேன் ரிஷி. இனி எவ்வளவு முக்கியமான விஷயமா இருந்தாலும், சாருமாகிட்ட சொல்லமுடியாத எந்தவொரு விஷயத்தையும் யாரும் என் கிட்டயும் சொல்லாதீங்க.”
….
“நாளைக்கு என் ஸ்டார் பர்த்டே ரிஷி. நீ தானே வருஷா வருஷம் எனக்கு முதல்ல விஷ் பண்ணுவ. ப்ளீஸ்! என்கிட்டபேசுடா.” கெஞ்சி கெஞ்சி கண்ணீரில் கரைந்தாள்.
மனையாளின் காதலில் பெருக்கெடுத்த கண்ணீரை வெளியேற விடாமல் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்த ரிஷியின் உள்ளமும் பரிதவித்தது.
அவள் தன்மேலுள்ள ப்ரியத்தில்தான் அப்படிச் செய்திருக்கிறாள் என்பது அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆயினும் மனத்திடமும், தன்னம்பிக்கையும் நிறைந்தவளாக, நிமிர்வான பெண்ணாக இருந்தவள் இன்று தொட்டதுக்கெல்லாம் பயம், தயக்கம், தடுமாற்றம் என அஞ்சுவது தன்மேலுள்ள அளவுகடந்த காதலினால் என நினைக்கும்போது, அதை எண்ணி நெகிழவா கூனிக்குறுகவா என அவனுக்கே புலப்படவில்லை.
இன்று ஒரு பொழுதாவது அவளிடம் கண்டிப்புடன் இருந்துவிட்டால், மனம் தெளிவாளோ என நப்பாசை கொண்டவன், பெரும் சிரமத்துடன் அசையாமல் படுத்திருந்தான்.
உன்னை அப்படியெல்லாம் நிம்மதியாக இருக்க விட்டுவிடுவேனா என்று அவன் கைப்பேசி அலறியது. இரண்டு மூன்று நேரங்கள் தொடர்ச்சியாக அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தபோதும் அவன் அசரவில்லை.
நள்ளிரவு நெருங்கும் நிலையில், விடாது அழைப்பது யார் என யோசித்த கீர்த்தனா கைப்பேசியை எடுத்தாள்.
“யாரோ ஆஃபிசர் சாதனான்னு ஒருத்தர் ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க ரிஷி. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது.” நிதானமாகவே உரைத்தாள்.
ஆனால் அதைக் கேட்ட ரிஷிகுமாருக்குத் தான் தூக்கிவாரிப் போட்டது.
தும்பினாலும் அம்மாவிடம் ஒப்பிக்கும் கீர்த்தனாவிடம் சாதனாவை எப்படி அறிமுகம் செய்துவைப்பது என எண்ணும்போதே அவனுக்கு விழி பிதுங்கியது.
“இப்போ நீ எடுத்துப் பேசப்போறீயா? இல்ல நான் எடுத்து உங்க பைலட், பொண்டாட்டி மேல இருக்குற கோபத்துல தூங்குறா மாதிரி நடிச்சிட்டு இருக்காருன்னு போட்டுக்கொடுக்கவா?” அந்தப் பாராமுகத்திலும் அதிகாரம் பறந்தது.
‘இவள் செய்தாலும் செய்வாள்!’ என அவன் மனத்தில் அசைப்போட,
எட்டாவது முறையாக வந்த அழைப்பை சைலென்டில் போட்டவள், “ஹெலோ” என்றாள்.
அவ்வளவுதான்! பதறியடித்து எழுந்தவனின் கழுத்து நரம்புகள் பிசைந்து உயிர்வரை வலித்தது.
“ரித்தி! என்ன செய்யற?” அலறியபடி கைப்பேசியை பிடுங்கியவனுக்கு, அவள் அழைப்பை ஏற்கவில்லை என்று கண்டபின் தான் நிம்மதி பிறந்தது.
“சொல்லுங்க ஆஃபிஸர்.” மென்மையாகப் பேசினான்.
“என்னடா! உன் பொண்டாட்டி பக்கத்துல இருக்காளா?” அவன் தர்மசங்கடம் உணர்ந்தபோதும் வேண்டுமென்றே சீண்டினாள் சாதனா.
“ம்ம்ம்!” அடக்கிவாசித்தவன், அவள் அழைத்த காரணம் கேட்க,
மறுமுனையில் இருந்தவளோ உள்ளம் நிறையும்வரை கலகலவெனச் சிரித்து, “நாளைக்கு கீர்த்தனாவோட ஸ்டார் பர்த்டேன்னு சொன்னீயே. அதான் உனக்கு முன்னாடி முதல் ஆளா விஷ் பண்ணலாம்னு ஃபோன் பண்ணேன்.” வெறுப்பேற்றினாள்.
“அது…அது…..” அவன் பம்ம,
“அது மட்டுமில்ல. நான் சென்னையில் தான் இருக்கேன். நாளைக்கு எங்க எத்தனை மணிக்கு மீட் பண்ணலாம்னு சொல்லுடா.” அறிவித்து அவன் இரத்த அழுத்தத்தை ஏத்தினாள்.
“நிஜமாவா சொல்றீங்க ஆஃபீஸர்.” என அவன் அலறியேவிட்டான்.
தன்னையே வெறித்துப் பார்க்கும் மனையாளின் கருவிழிகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவன் மெல்ல எழுந்து பால்கனிக்கு நடந்தான்.
“என்ன விளையாட்டு இது சாதனா! இப்படிச் சொல்லாம கொள்ளாம சென்னைக்கு வந்திருக்க…” சிடுசிடுத்தவன், நொடிப்பொழுதில் அவள் எத்தனை ஆசையாகத் தன்னை பார்க்க வந்திருப்பாள் எனச் சுதாரித்துக்கொண்டு,
“எங்க இருக்கன்னு சொல்லுமா. நானே நாளைக்கு நேரில் வந்து உன்னைப் பார்க்கறேன்.” தன்மையாக வினவினான்.
“அப்போ கீர்த்தனா? குட்டீஸ்?” என்றவளின் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.
“அழைச்சிட்டு வரேன் சாதனா.” மறுப்புச் சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு.
“உடம்புக்கு முடியாத இந்த நிலைமையிலும் என்னைப் பார்க்க வரேன்னு சொல்லற; உன் சகோதரப் பாசத்துக்கு அளவே இல்லடா.” என மெச்சியவளுக்கு விளையாட்டைத் தொடர முடியவில்லை.
“நான் மூணு மாசம் சார்டர் ட்ரிப்ல சிங்கப்பூர் வந்திருக்கேன்.” உண்மையை உடைத்தாள்.
“அப்படியா?” அதிர்ந்தவனுக்கு உள்ளுக்குள் நிம்மதியாகவே இருந்தது.
காரணம், அந்த மூன்று மாதக் காலத்தில், கட்டாயம் கீர்த்தனாவுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்துவிடலாம் எனப் பெரும் நம்பிக்கை கொண்டான்.
ஆனால் அதை சகோதரனின் ஏமாற்றத்தின் வெளிப்பாடாகக் கருதியவளோ,
“நம்ம சந்திப்பு இப்படித் தள்ளிப்போயிட்டே இருக்குன்னு எனக்கும் வருத்தமாதான் இருக்கு ரிஷி. ஆனால் சந்தோஷுக்கும் அடுத்த ஆறு மாசத்துக்குப் பணி நீடிச்சிருக்காங்க.” அறிவித்தவள், அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சுற்றிய பயணங்கள் என்பதால் அன்றாடம் இல்லை என்றாலும் அவ்வப்போது சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பு உள்ளதனால் பணி நியமனத்திற்குச் சம்மதம் சொல்லிவிட்டதாக விளக்கினாள்.
எவ்வளவு சுயநலமாகச் சிந்தித்திருக்கிறேன் என நொந்துகொண்டவன்,
“நீ சொல்றதும் சரிதான் சாதனா. மனச தளரவிடாதே. எல்லாம் நன்மைக்கேன்னு நெனச்சுப்போம்.” என்றான் ஆறுதலாக.
மனையாளை நேரில் அழைத்துவந்து தான் அறிமுகம் செய்வேன் என்று முதலிலிருந்தே தீர்மானமாக இருந்தவன், இப்படித்தான் சொல்லுவான் என்று அவளுக்கும் தெரிந்திருந்தது.
ஆனால் ஆறு மாசம் காத்திருக்க வேண்டாமெனச் சிந்தித்து, சிறிது மனமிறங்குவான் என்ற நப்பாசையிலேயே அழைத்திருந்தாள்.
தன் ஏமாற்றத்தை மறைத்தவளாக, “அது சரி தம்பி! கழுத்து உடைஞ்சு பெட் ரெஸ்டில் இருக்குறவன், இத்தனை நேரமா ஃபோன் அட்டென்ட் பண்ணாம அப்படி என்ன முக்கியமான வேலை செஞ்சிட்டு இருந்தீங்க.” இலகுவாய் பேச்சை திசைதிருப்பினாள்.
“அது…அது….” அவன் மறுபடியும் திணற,
“அடேய்! பன்னெண்டு மணி ஆக இன்னும் முழுசா அரைமணி நேரம் இருக்குடா! அதுக்குள்ள பார்ட்டி மோடுக்கு போயிட்ட! அதுவும் இந்தக் கழுத்துப்பட்டையோட எப்படிடா…” நீட்டிமுழக்கிக் கலாய்த்தாள்.
“போதும் போதும்! அக்கா மாதிரியா பேசுற.” வெட்கப்புன்னகையுடன் செல்லமாய்க் கண்டித்தவன் அவளிடம் சில நிமிடங்கள் மனம்விட்டுப் பேசிவிட்டு அறைக்குள் திரும்பினான்.
சகோதரியின் கிண்டல் பேச்சோ; ஆறு மாதக் காலம் அவகாசம் இருக்கின்றதே என்ற எண்ணமோ; அவனுக்கே தெரியவில்லை! மௌனவிரதம் கடைப்பிடிக்க எண்ணிய அவன் வீராப்பு எல்லாம் காற்றில் பறந்தது. ஒருக்களித்து உறங்கும் மனையாளின் முகத்தை ரசனையாகப் பார்த்தவன்,
“ரித்திமா தூங்கிட்டையா?” மெல்லமாக அவள் கன்னத்தை வருடினான்.
“ம்ஹூம்…” சிறுபிள்ளையென உதட்டைப் பிதுக்கி தலையாட்டினாள்.
இயல்பிலேயே கொழுகொழுவென இருக்கும் அவள் கன்னம், இன்று அழுது அழுது ஓய்ந்ததில் சற்று அதிகமாகவே உப்பியிருந்தது. அதைக் கண்டவனுக்கு நெஞ்சம் பிசைந்தது.
“ஏன் ரித்தி இப்படி மாறிட்ட; நாம முதல் முதல்ல சந்திச்ச அன்னைக்கு என்ன சொன்னன்னு நினைவு இருக்கா?
மரணபயம்தான் உனக்குப் பிரச்சனைன்னா, நான் வேணும்னா எமதர்மராஜன் கிட்ட பேசி சாகாவரம் வாங்கித்தரட்டுமான்னு கேட்ட என் ரித்தி எங்க போனா?” மனமுடைந்து பேசினான்.
வாய்திறந்து பேசிவிட்டான் என நிம்மதி கொண்ட பெண்மான் ஒரே தாவில் அவனைக் கட்டியணைத்து, “அதெல்லாம் உன்னைக் காதலிக்கறதுக்கு முன்னாடி டா.” தேம்பி அழுதாள்.
கழுத்தைச் சுற்றி அணைத்தவளுக்கும் முறிந்த எலும்பை பற்றிய நினைவில்லை; காயப்பட்டவனும் வலி உணரவில்லை;
பேதையின் கண்மூடித்தனமான காதலில் அவன் உள்ளம்தான் பரிதவித்தது.
“நீ ஒண்ணும் சின்னக் குழந்தை இல்ல ரித்தி. ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா. இப்படியா எடுத்தேன் கவிழ்த்தேன்னு உணர்ச்சிவசப்படுவ.” தோள்சாய்ந்தவளின் பின்முதுகில் வருடியபடி மென்மையாகப் புரியவைத்தான்.
“நான் இப்படித்தான் ரிஷி. சாருமாகிட்ட சொல்ல முடியாத எந்த விஷயத்தையும் என்கிட்ட சொல்லாத.” மீண்டும் வலியுறுத்தினாள்.
“ஆக மொத்தம் நீ உன்னை மாத்திக்க மாட்ட. அப்படித்தானே.” என்றவனின் குரல் இறுகியது.
“ம்ஹூம்.” தீர்க்கமாக மறுத்தாள்.
அவளைக் கண்பார்க்க நிமிர்த்தியவன், “நான் ஒரு முக்கியமான விஷயத்தை உன்கிட்டேந்து மறைச்சு, அது நாளடைவில் உனக்குத் தெரிய வந்துதுன்னா உன் மனசு எவ்வளவு துடிதுடிச்சுப் போகும்னு யோசிச்சுப் பாரு ரித்திமா.” கணவன் மனைவி இருவரும் ஒளிவுமறைவின்றி வாழவேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தான்.
“என்னமோ செகண்ட் சேனல் ஓட்டிண்டு, அதை என்கிட்ட சொல்லமுடியாத மாதிரி இவ்வளவு பிள்ட் அப் பண்ணற.” அவன் நுனி மூக்கைப் பிடித்துக் கிள்ளி கேலியாகச் சிரித்தாள்.
“ரித்தி! பீ சீரியஸ்.” கடிந்துகொண்டான் அவன்.
அப்போதும் அவளிடம் அதே மனவுறுதி. மடமடவென எழுந்துச் சென்று, தங்கள் நாட்குறிப்பில் எதையோ வேகவேகமாக எழுதி அவனிடம் நீட்டினாள்.
‘எப்பேர்ப்பட்ட முக்கியமான விஷயத்தை நீ மறைச்சிருந்தாலும், அது வேறொரு சந்தர்ப்பத்துலயோ, யார் மூலமாவோ தெரிய வந்தாலும், நீ ஏன்டா என்கிட்ட சொல்லாம மறைச்சன்னு நான் உன்னை எந்தக் கேள்வியும் கேட்கமாட்டேன் ரிஷி.’
என்று அந்த நாளின் பக்கத்தில் எழுதி, கையொப்பமிட்டிருந்தாள் அவள்.
நள்ளிரவு 12 மணியானதை அவன் கைப்பேசியின் அலாரம் நினைவூட்ட, தன்னவளுக்குப் புரியவைக்க வேண்டுமென்றாலும், தண்டிப்பதற்கு இது நேரமில்லை என உணர்ந்தவன், உதட்டோரம் பூத்த மெல்லிய சிரிப்புடன் அந்த நாட்குறிப்பை மூடி,
“ஹாப்பி ஸ்டார் பர்த்டே ரித்தி!” அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“அலாரம் வச்சு விஷ் பண்ணற அளவுக்குப் பிளான் பண்ணிட்டு, ஏன்டா இத்தனை நேரம் என்னோட பேசாம இருந்த.” அவன் மார்பில் தஞ்சம் புகுந்து அழுதுத் தீர்த்தாள்.
ஏங்கித் தவித்த மனையாளின் விருப்பங்களை எல்லாம் அவன் நிவர்த்தி செய்ய இரவும் அழகாய் நகர்ந்தது.
தமக்கையின் வருகையை அறிவிக்கும் தருணங்களில்,
தடங்கல்கள் ஒன்றன் பின் ஒன்றாக முளைக்க,
தவித்துப் போனது உள்ளங்கள் இரண்டு;
தவிர்ப்புகளும் தண்டனைகளும் தூசாகிப்போகும்,
தன்னிலை மாறா தாரத்தின் பிடிவாதம் முன்,
தலைவனின் முயற்சிகள் செல்லுபடி ஆனதா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்….


Please Comment Here