144 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
உவப்புடன் காத்திருக்கும் உடன் பிறந்தவளும்,
உடும்புப் பிடியாக மறுக்கும் உயிர்த் துணைவியும்,
உயிரில் மெய்யாகி உறவு பாராட்டி உச்சிகுளிர,
உத்தமன் அவன் தொடுத்த நேச வேள்வியில்,
உடைந்தது உண்மைகளா! உள்ளங்களா! -மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 26…
புது டெல்லி, இந்தியா.
அவர்கள் எந்த நேரமும் வந்துவிடுவார்கள் எனக் கடிகாரத்தில் ஒரு கண்ணும், சமையலில் ஒரு கண்ணுமாய், காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பரபரப்பாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் சாதனா. மனைவியை ரசனையாகப் பார்த்த வண்ணம் உணவு மேஜையில் அமர்ந்து தேநீரைப் பருகிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.
வெங்காயத்தின் உபயத்தால் கசிந்த கண்ணீரைத் துடைத்துக்கொள்ள, முந்தானையை இழுக்கிறேன் என்ற பெயரில் மொத்த புடவையையும் உருவித் தடுமாறும் மனையாளின் செயலில் தன்னையும் மறந்து பக்கென்று சிரித்துவிட்டான்.
“கஷ்டப்படுறேன்னு தெரியுதுல! வெங்கயாத்தை நறுக்கிக் கொடுத்தா தான் என்னவாம்?” கழுத்தை நொடித்தபடி புடவையின் மடிப்புகளை சுருட்டி இழுத்துச் சொருகிக்கொண்டாள் சாதனா.
“உனக்குத் தான் புடவை கட்டிப் பழக்கமில்லல. எப்பவும் போல ட்ராக்ஸ் டீஷர்ட் போட்டுக்க வேண்டியதுதானே. உன் தம்பி என்ன குறையா சொல்லப்போறான்.” புடவை கட்டிக்கொள்கிறேன் என்ற பெயரில் காலையிலிருந்து அவள் செய்த அலப்பறைகளை இடித்துக்காட்டி நகைத்தான்.
உண்மைதான் என ஆமோதிப்பாய் தலையசைத்தவளின் விரல்கள் தன்னிச்சையாக அந்த லேவேண்டர் டஸ்ஸர் சில்கை வருடியது. தம்பி அவர்களுக்காக மெனெக்கெட்டு ஆன்லைனில் வாங்கி அனுப்பிய தீபாவளி பரிசாச்சே அது.
“என் தம்பி பூரிச்சுப் போகப்போறான் பாருடா.” கண்சிமிட்டியவள் அவன் மூக்கின் நுனியை உரச,
“கை அலம்பிட்டு தொடுமா…” கண்களைத் தேய்த்துக்கொண்டவன், “என்னுடைய டாம் பாய் அக்கா எங்கன்னு அவன் தேடாமல் இருந்தால் சரி.” குலுங்கிச் சிரித்தான்.
“பஃபூன் மாதிரி இருக்கேனா டா. இந்தப் புடவை, பூ எல்லாம் எனக்கு செட் ஆகலையா?” கண்கள் சுருக்கினாள் அவள்.
“எல்லாம் என் குட்டித் தங்கம் செய்யற மேஜிக்.” என்றவன் அவள் மூட்டையாகச் சுருட்டிக்கொண்டிருந்த புடவையின் கொசுவத்திற்குப் பின் மறைந்திருந்த வயிற்றை வருடியபடி புன்னகைத்தான்.
அதில் பெண்ணவளுக்கு வெட்கம் அப்பிக்கொள்ள, “நீ ஹாப்பியா இருக்கீயாடா?” என அவன் மார்பில் தலைசாய்த்தாள்.
அவள் பட்டான கேசத்தைக் கோதியவனின் சிந்தனை அந்த மல்லிகைப்பூவின் வாசத்தில் கரைந்தது.
தலைமுடி கழுத்தை தாண்டி வளர்ந்தாலும் போதும்; மறுகணமே பாய் கட் செய்துகொண்டுவிடும் மனையாள், கருவுற்ற நாள் தொட்டே புடவை சுடிதார் என மணிக்கணக்காகக் கண்ணாடி முன் நின்று சீவி சிங்காரிப்பதை எண்ணி பூரித்தான்.
தாய்மை செய்யும் மாயாஜாலத்தில் நெகிழ்ந்தவன், ஐந்து மாதங்களுக்கு முன் மலேசியாவின் பத்து மலை முருகன் சன்னிதானத்தில் அவர்கள் பேசிக்கொண்டதை நினைவுகூர்ந்தான்.
“நம்ம வாழ்க்கை பற்றி உன்னை கேட்காம ஒரு முடிவு எடுத்திருக்கேன் டா.” நெளிந்து குழைந்தாள் சாதனா.
“நம்ம வாழ்க்கைன்னு சொல்லிட்டு, உன்னை என்னைன்னு பிரிச்சு பேசுற. நம்ம என்ன செய்யப்போறோம்னு சொல்லு?” நெற்றிமுட்டியவனின் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப்போன பேதை, காதல், நாணம், ஆசை, ஏக்கம், பெருமிதம் என உணர்வுகளின் கலவையாய். “அது…அது…நமக்குன்னு ஒரு குழந்தை பெத்துக்கலாம்னு நினைக்குறேன்.” வாஞ்சையாகக் கேட்டிருந்தாள்.
தன்னை இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய பொக்கிஷமான தருணம் அல்லவா எது எனப் பூரித்தவன் நினைவலையில் தத்தளிக்க,
“என்னடா! எதுவுமே பேச மாட்டேன்ற. நீ ஹாப்பி தானே.” எனச் சிணுங்கினாள்.
“ம்ம்…ரொம்ப ஹாப்பி சனா?” உருகினான் அவன்.
அதை அவன் வாய்விட்டுச் சொன்னால்தான் அவளுக்குப் புரியும் என்றில்லை.
குழந்தை குடும்பம் என்று வாழ அவனுக்கு மலையளவு ஆசை இருக்கிறது என்று தெரிந்திருந்தபோதும், தங்கள் குழந்தைகளும் தங்களைப் போல உறவுகளின்றி வாழக்கூடாது என யோசித்தவள் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.
தங்கள் இருவரின் நட்பை உயர்வாகக் கருதியவன் அவள் விருப்பமே தன் விருப்பம் எனக் கூறியதோடு மட்டுமில்லாமல், அதே மனவுறுதியுடன் வாழ்ந்தும் காட்டினான்.
ஆனால் பெண்ணவளின் மனவுறுதியோ ரிஷிகுமாரின் சகோதரப் பாசத்தில் ஆட்டம் கண்டிருந்தது. மாமன், அத்தை, பெரியம்மா, பெரியப்பா என தன் குழந்தைக்கு உறவுகள் இருப்பதை எண்ணியவளுக்கு ஆசை துளிர்விட்டது. அதுவும் யாதவன் யாழினியுடன் காணொளியில் பேசிப் பழகியவளின் குழந்தை ஆசை விஷ்வரூபம் எடுத்திருந்தது என்று தான் சொல்லவேண்டும்.
குழந்தை வேண்டாம் என்று நிபந்தனையிட்ட போதும் சரி; குழந்தை வேண்டுமென்று கேட்டப் போதும் சரி; எந்த எதிர்கேள்வியும் இல்லாமல், உன் விருப்பமே என் விருப்பம் என்று மனமகிழ்ந்து கூறியவன் ஆச்சே ‘என்னவன்!’ என்று நினைத்தவளின் கண்கள் தன்னிச்சையாகப் பனித்தன.
சட்டையில் ஊறிய கண்ணீர் துளிகளில் திடுக்கிட்டவன், “ஹேய் என்ன ஆச்சு சனா? ஏன் அழற?” பதறினான்.
“நான் எதுக்கு அழப்போறேன்? வெங்காய நெடியில் கண்ணு எரியுது.” சமாளித்து கண்களைத் துடைத்துக்கொண்டவள், “அச்சோ அவங்க வர நேரமாச்சு. வடையும் அப்பளமும் பொறிக்கணும்.” என வேகநடையிட்டாள்.
காலையிலிருந்து ஓடியாடும் மனையாளை வலுக்கட்டாயமாக உணவு மேஜையில் அமரவைத்து உண்ண ஆப்பிள் நறுக்கித் தந்த சந்தோஷ், தானே வடை போட்டு எடுப்பதாகக் கூறி களத்தில் இறங்கினான்.
இரண்டு துண்டுகள் கூடச் சாப்பிட்டிருக்க மாட்டாள். குமட்டிக்கொண்டு வர, ஓய்வறையை நோக்கி ஓடினாள்.
“அப்பா எவ்வளவு ஆசையா ஆப்பிள் கட் பண்ணிக் கொடுத்தாரு. அதைச் சாப்பிட உங்களுக்கு என்ன கஷ்டம் குட்டி பாஸ்?” என வயிற்றை வருடியபடி செல்லம் கொஞ்சிக்கொண்டே தன்னருகில் வந்த மனையாளை ரசனையாய் பார்த்துப் புன்னகைத்தான் சந்தோஷ்.
“என்னடா அப்படிப் பாக்குற? வடை கருகிடப் போகுது. நானே கொஞ்சமா தான் மாவு அரைச்சிருக்கேன்.” வெட்கத்தை மறைக்கிறேன் என்ற பெயரில் பிடுங்காத குறையாக அவனிடமிருந்து கரண்டியைப் பறித்தாள்.
கரண்டி மனையாளின் கைகளுக்கு மாறிய பின்னும் பூரிப்பு குறையாமல் அவளையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான் சந்தோஷ்.
வடைகளை இருமுறை கிளறிவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து அவன் பக்கம் திரும்பியவள்,
“ம்ப்ச்…வச்ச கண்ணு வாங்காம பார்த்து கொல்லாத டா. நான் வேணும்னா எப்பவும்போல ட்ராக்ஸ் டீஷர்ட் போட்டுக்கட்டுமா?” அவன் காந்தக் கண்களை எதிர்கொள்ள முடியாமல், புடவையைச் சரிசெய்துகொண்டாள்.
வேட்டியை மடித்துக் கட்டுவதைப் போல அவள் செய்யும் பாவனைகளை கண்டு உரக்கச் சிரித்தவன்,
“அடியேய்! புடவை எல்லாம் சரியாத் தான் கட்டியிருக்க.” அவள் கரங்களைத் தன் கரத்தில் அடைத்துக்கொண்டு,
“இப்போ எல்லாம் எங்க மேடம் ஒரு மார்க்கமா நடந்துக்குறீங்க… பேசுறீங்க….” அவன் காதலாய் மொழியவும், அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது.
“அவங்க வந்துட்டாங்க போல…” பரபரத்தவள், பொன்னிறமாய் பொரிந்திருந்த வடைகளை வடிக்கும் அவசரத்தில் கையில் சுட்டுக்கொண்டாள்.
“பதறாம போய் கதவைத் திற. நான் மிச்சத்தைப் போட்டு எடுக்கறேன்.” அவளை ஆசுவாசப்படுத்தி கரண்டியை வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொண்டான் சந்தோஷ்.
வெகுநாட்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்ட இரட்டையர்கள் இருவரின் முகத்திலும் பூரிப்பைத் தாண்டி ஆச்சரியமும் வியப்பும் மின்னியது.
ஜீன்ஸ் டீஷர்ட்டில், பாய் கட்டில் ஆஜானுபாகுவாக வலம் வந்த சகோதரி இன்று இடுப்புவரை வளர்ந்த முடியை பின்னி பூச்சுடி, புடவையில் நெளிவதைக் கண்டவன் அப்படியே உறைந்து நின்றான்.
தந்தையின் இருபுறமும் கைகோத்து நின்று தன்னை கேள்வியாய் ஏறிடும் குழந்தைகளை முதன் முதலாய் நேரில் கண்டவளின் மனம் அவர்களை அள்ளிக்கொஞ்ச துடிதுடிக்க, விழிகளோ மற்றவர்களின் தரிசனத்தைத் தேடி அலைந்தது.
“மத்தவங்க எல்லாரும் எங்கடா?”
அதில் சுயத்திற்கு வந்தவன், “உங்க அத்தையைப் பாருங்க டா குட்டீஸ்! வந்திருக்கும் உங்களை உள்ளக் கூப்பிடாம, வராதவங்கள பற்றி விசாரிச்சு வழிமறிக்குறாங்க.” குழந்தைகளிடம் புகார் வாசிப்பதுபோல, சகோதரிக்குப் பதிலளித்தான் ரிஷிகுமார்.
இன்பதிர்ச்சி தரும் கீர்த்தனாவின் சுபாவம் அறிந்த சாதனா, “உங்க அம்மாவுக்கு மட்டும்தான் சர்ப்ரைஸ் பண்ண தெரியுமா. அத்தையும் ஒரு பிக் சர்ப்ரைஸ் கொடுக்கப்போறேன்.” உதட்டில் பூத்த நமுட்டுச் சிரிப்புடன் இரு குழந்தைகளின் பிஞ்சு விரல்களில் விரல் கோத்து உள்ளே அழைத்துச் சென்றாள்.
“ஆமாம் ரிஷி! உன் சிஸ்டர் இன்னைக்கு சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் பண்ண காத்திருக்கா! இந்தா முதல் சர்ப்ரைஸ்!” தமாஷ் செய்து அவன் வாயில் மெதுவடையைத் திணித்த சந்தோஷ், குழந்தைகளுக்கும் ஊட்டிவிட்டு செல்லம் கொஞ்சினான்.
கணவன் கையிலிருந்த வடையைப் பிடுங்கிய சாதனா, “இது என்னடா சந்தோஷ்! இவ்வளவு பெருசு பெருசா போட்டிருக்கு?” குறைப்பட,
“மெது வடைன்ற பேருல நீ போடுற போண்டாக்கு இது எவ்வளவோ பெட்டர்.” விஷ்ணுவின் சக்கரம் போல ஆள்காட்டி விரலில் நுழைத்துச் சுழற்றிக்காட்டி ஜம்பமடித்தான் சந்தோஷ்.
குழந்தைகள் இருவரும் குதூகலத்துடன் கைதட்டி சிரிக்க, கேலி செய்யும் கணவனின் கன்னத்தைக் கிள்ளியவள், “சரி! சரி! நான் குட்டீஸ்க்கு ஊட்டிவிடுறேன். நீங்க ரெண்டு பேரும் முதல்ல சாப்பிடுங்க. அவங்க வந்ததும் பரிமாற வசதியா இருக்கும்.” கூறிக்கொண்டே சமையலறைக்கு நகர்ந்தாள்.
அவர்கள் வரமாட்டார்கள் என்பதை எப்படிச் சொல்வது எனத் தவித்த ரிஷிகுமார் வார்த்தைகளைத் தேட, மனையாளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்ட சந்தோஷ், அவளையும் அவர்களோடு சாப்பிடச்சொல்லி இழுத்துப் பிடித்து அமரவைத்தான்.
குழந்தைகளைத் தன் இருப்பக்கத்திலும் உட்கார வைத்துக்கொண்டு கதை சொல்லியபடி சாதனா அவர்களுக்கு ஊட்டிவிட, ஆசையாய் தன் கைப்பேசியில் பத்திரப்படுத்திக்கொண்டான் சந்தோஷ்.
மேத்தி பராத்தா, மலாய் கோஃப்தா, பிஸிபேலா பாத், வெஜிடபுள் ரைத்தா, தம் ஆலு, எனத் தட்டில் இடமில்லாத அளவிற்குப் பரிமாறும் தமக்கை மாமனின் அன்பில் ரிஷிகுமாரின் குற்றவுணர்வு பன்மடங்கானது.
பசி வயிற்றைக் கிள்ளியபோதும் உணவு தொண்டைக் குழியில் இறங்க மறுத்தது அவனுக்கு.
இதற்கிடையில் சாதனா ஊட்டுகிறாள் என்ற குதூகலத்தில் துள்ளிய யாதவனும் யாழினியும், கையில் வைத்திருந்த அப்பளத்தைக் கடித்துக் காட்டி, “ப்பா….ப்பா..” எனப் பல் இளிக்க, ரிஷிகுமாரின் கண்கள் தன்னையும் மீறி குளமாகின.
“ஏய்! என்னடா கண்ணு கலங்குற! மிளகாய் கடிச்சுட்டீயா?” சாதனா வினவ,
“அப்போவே சொன்னேன்ல. பச்சை மிளகாயை அரைச்சுப் போடுன்னு” என்ற சந்தோஷ், “ஸ்வீட் லஸ்ஸி குடி ரிஷி; காரம் அடங்கிடும்;” எனக் கண்ணாடி குவளையில் மோர் ஊற்ற,
அவர்கள் உபசரிப்பில் அவன் குற்றவுணர்வு கூடியதுதான் மிச்சம்.
டெல்லி வரை அழைத்து வந்திருக்கும் குடும்பத்தினரை இங்கே அழைத்து வரமுடியவில்லையே என்ற பரிதவிப்பு.
என்ன செய்தும் கீர்த்தனாவின் மனத்தை மாற்ற முடியவில்லையே என்ற விரக்தி.
ஆசை ஆசையாக ஏற்பாடுகளைச் செய்திருக்கும் சகோதரியிடம் வந்ததும் வராததுமாய் பொய் சொல்லிவிட்டோமே என்ற வேதனை.
அன்றைய பொழுதை ஏதாவது காரணம் சொல்லி கடந்துவிட்டால் போதுமென்ற மனநிலையில் தான் வந்திருந்தான் ரிஷிகுமார். ஆனால் சகோதரியின் ஒவ்வோரு செயலிலும் அவள் எதிர்பார்ப்புகள் பிரதிபலிக்க, உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவதே நலம் என உணர்ந்தவன் அவள் உண்டு முடிக்க காத்திருந்தான்.
“அவங்க யாரும் வர மாட்டாங்க சாதனா.” ரிஷிகுமார் மென்று விழுங்க,
“ஏன்டா? அவங்களும் உன்னோட டெல்லி வந்திருக்குறதா தானே சொன்ன?” பேதையின் குரல் சரிந்தது.
“ம்ம்…டெல்லிக்கு வந்திருக்காங்க. ஆனால் உன்னைச் சந்திக்க வரமாட்டாங்க.” என்றவன், சாரதாவிடமிருந்து எதையும் மறைக்கக் கூடாது என்ற கீர்த்தனாவின் கொள்கையை விவரித்து,
“மன்னிச்சிரு சாதானா. டெல்லிக்கு டூர் போகலாம்னு பொய் சொல்லித்தான் எல்லாரையும் அழைச்சிட்டு வந்திருக்கேன். இன்னைக்குக் காலையில உங்க வீட்டுக்குக் கிளம்புற வரை கீர்த்தனாகிட்ட கெஞ்சியும் அவ பிடிக்கொடுக்கவே இல்ல.”மனையாளின் பிடிவாதத்தை ஆற்றாமையுடன் பகிர்ந்தான்.
“விக்ரம் காயத்ரிகிட்ட மட்டுமாவது சொல்லி அழைச்சிட்டு வந்திருக்கலாமே.” ஏமாற்றத்தை மறைத்து வினவினாள் சாதனா.
“ம்ஹூம்! அதை மட்டும் என்னால செய்யவே முடியாது. ரித்திக்குத் தெரியாத ஒரு விஷயத்தை வீட்டுல வேற யாருகிட்டயும் சொல்லமாட்டேன்.” அதற்கும் பதிலைத் தயாராகத் தான் வைத்திருந்தான் ரிஷிகுமார்.
மனையாளுக்குச் சப்பைக்கட்டும் அவன் பேச்சில் சந்தோஷுக்கு எரிச்சல் மண்டியது.
“நீ அவ்வளவு நல்லவன்னா, உன் குழந்தைகளை மட்டும் ஏன் அழைச்சிட்டு வந்திருக்க?” ஏளனமாகக் கேட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“நீங்க கேக்குறது நியாயம் தான் சந்தோஷ். குழந்தைகள் மூலமாவது நான் யாரை சந்திச்சிட்டு வந்தேன்னு தெரிஞ்சுக்க ரித்தி விரும்புவான்னு ஒரு நப்பாசை.”
அவன் அர்த்தமற்ற வியாக்கியானத்தில் கடுப்பான சந்தோஷ், “அப்போ மட்டும் உன் பொண்டாட்டி உன் அம்மாகிட்ட உண்மையைச் சொல்லாம இருப்பாளா?” என்று எகிறினான்.
“உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம், அம்மாவின் உடல்நிலையை மனசுல வச்சுக்கிட்டாவது பக்குவமா நடந்துப்பான்னு நம்புறேன்.” பொறுமையாகவே பதிலளித்தான் ரிஷிகுமார்.
“அந்தப் பக்குவம் நீ நேரடியா சொல்லும்போது உன் பொண்டாட்டிக்கு வராதா?” விடாமல் வாதாடினான் சந்தோஷ்.
மூன்றாம் மனிதரிடம் பேசுவதுபோல, உன் குழந்தைகள், உன் மனைவி என வார்த்தைக்கு வார்த்தை அந்நியப்படுத்தும் சந்தோஷின் குத்தல் பேச்சில் துடிதுடித்துப் போனான் ரிஷிகுமார்.
“ப்ளீஸ் சந்தோஷ். என்னை வார்த்தையால் வதைக்காதீங்க. ரித்திகிட்ட உண்மையைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் படும் அவஸ்தை எனக்கு மட்டும்தான் தெரியும்.” அழாத குறையாகக் கையெடுத்து கும்பிட்டான்.
அப்போதும் சந்தோஷின் ஆத்திரம் அடங்கவில்லை.
“உன் பேச்சை நம்பி உன் அக்கா எத்தனை விஷயங்கள் பிளான் பண்ணிருக்கா தெரியுமா?” சந்தோஷ் வீடே அதிரும் அளவிற்கு உறும, அதில் பீதியடைந்த குழந்தைகள் பெரும் கேவலுடன் ரிஷிகுமாரின் கால்களை இறுக பற்றிக்கொண்டனர்.
ரிஷிகுமார் குழந்தைகளைச் சமாதானம் செய்ய,
“அமைதியா இரு சந்தோஷ். அவனே ரொம்பக் குழம்பிப் போயிருக்கான்.” கணவனின் கரத்தில் அழுத்தம் தந்து எதையும் சொல்லவேண்டாம் எனத் தடுத்தபடி குழந்தைகளிடம் கொஞ்சிப்பேசி அவர்களை விருந்தாளிகள் அறைக்கு அழைத்துச் சென்றாள் சாதனா.
சந்தோஷின் பாராமுகத்தில் அங்கு நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் ரிஷிகுமாருக்குத் தீயின் மேல் நிற்பது போல இருந்தது.
“உன்னுடைய ஆதங்கம் எனக்குப் புரியுது சந்தோஷ். யார் உங்களோட உறவாடினாலும் இல்லேனாலும், எனக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். உனக்கு நான் இப்படி ரகசியமா உறவாடுறதுல இஷ்டமில்லேன்னா சொல்லு…” தயங்கியவன், “உன் முடிவை மனசார ஏத்துக்கறேன்.” பெரும் சிரமத்துடன் உரைத்தான்.
சந்தோஷ் எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததிலேயே அவன் மனத்தைப் படித்தான் ரிஷிகுமார்.
வாய்க்கொள்ளா புன்னகையுடன் அவனிடம் ஓடிவந்த குழந்தைகள்,
“சன்மா தந்தா!”
“கிஃப்ட் ரிஷிப்பா.”
சாதனா தந்த பரிசுப்பொருட்களைக் காட்டி ஆரவாரம் செய்ய,
“நீ எங்களுக்காக நிறைய ஏற்பாடுகள் செஞ்சு வச்சிருக்கன்னு தெரியுது சாதனா. ஐம் ரியலி சாரி.” மனமுடைந்தான் ரிஷிகுமார்.
“டேய்! எதைப் பற்றியும் யோசிக்காம கிளம்பு டா.” சர்வ சாதாரணமாகப் பேசித் தேற்றினாள் சாதனா.
“சந்தோஷ்….” என்றவனின் விழிகள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கதவைத் தழுவ,
“அவனுக்கும் உன்னை மாதிரி பொண்டாட்டி மேல ஓவர் லவ் டா. கொஞ்ச நேரத்தில் சரியாயிடுவான்.” எனக் கண்சிமிட்டினாள்.
சிரிக்கும் மனநிலையில் இல்லை என்ற போதும், தன்னை தேற்ற மெனக்கெடும் சகோதரியின் அன்பில் நெக்குருகிப் போனவன், மென்னகையுடன் தலையசைத்துவிட்டு புறப்பட்டான்.
தம்பியிடம் கம்பீரமாகப் பேசி வழியனுப்பி வைத்தவளின் வீராப்பு எல்லாம், கணவனின் அழுத்தமான பார்வையில் விழி நீராய் பெருக்கெடுத்தது.
“அப்படிப் பார்க்காத சந்தோஷ். இந்த நிலைமையில் நம்ம குழந்தையைப் பற்றி அவன்கிட்ட சொல்ல மனசுவரல டா.” என்று விசும்பினாள்.
“இப்போ மட்டுமா? எப்பவுமேவா?” உள்ளதை உள்ளபடி சொல் பெண்ணே என்ற அதிகாரம் அவன் தோரணையில் தொக்கி நின்றது.
“நம்ம குழந்தை எந்தக் காரணத்துக்கொண்டும் அநாதையா வளரக்கூடாது. அதுக்கு என்ன செய்யலாம்னு யோசிக்க எனக்கு அவகாசம் கொடுடா.” என்றவள் அவன் மார்பில் சாய்ந்தாள்.
மனசஞ்சலத்தில் உழலும் மனைவியைன் தலையில் ஆதுரமாய் வருடியவன் அதற்குமேல் எதுவும் கேட்டு நச்சரிக்கவில்லை. அவளை ஓய்வெடுக்குமாறு வற்புறுத்தி உறங்கவைத்தான்.
அயர்ச்சியின் மிகுதியில் தன்னையும் அறியாதவளாய் கண்ணசர்ந்தாள் பெண். மனைவியின் பளிங்கு முகத்தைப் பார்க்க பார்க்க, தம்பியிடம் இந்த நற்செய்தியைப் பகிர வேண்டுமென எத்தனை ஆசையாகத் தவம் கிடந்தாள் என்ற நினைவு வந்து வாட்டியெடுத்த சந்தோஷுக்கு, ரிஷிகுமாரின் சட்டையப் பிடித்து கேள்வி கேட்க வேண்டுமென கோபம் தலைக்கேறியது.
மனையாளின் விருப்பத்தை மீறி அவனிடம் உண்மைகளைச் சொல்லி சண்டையிடுவது சரியா எனக் குறுக்கிட்ட மனசாட்சிகுப் பணியவும் மறுத்தது அவன் ஆத்திரம்.
‘என் தேவதை இங்கு சுக்குநூறாகிப் போக, நான் ஏன் மற்றவர்களின் மனவுளைச்சலைப் பற்றி கவலைப்பட வேண்டும்!’ சுயலநலமாக மட்டுமே சிந்திக்க முடிந்தது அவனால்.
சந்தோஷின் அழைப்பைக் கண்டுகொண்ட ரிஷிகுமாரின் உதட்டில் சின்னதொரு புன்னகை அரும்பியது. செலுத்திக்கொண்டிருந்த காரை ஓரம்கட்டி அழைப்பை ஏற்றவன்,
“உன் வருத்தம் எனக்குப் புரியுது சந்தோஷ்…” இலகுவாய்ப் பேச,
“ச்சீ! வாயை மூடு டா.நான் ஒண்ணும் உன்னோட வீணாப்போன விளக்கங்களைக் கேட்க ஃபோன் பண்ணல. உன் வார்த்தைகளை நம்பி என் சனா எவ்வளவு பெரிய முடிவெடுத்திருக்கான்னு உனக்குத் தெரியுமா?” எகிறியவன், தேக்கிவைத்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்தான்.
மறுமுனையில் கேட்டவனுக்குப் பேரதிர்ச்சிக்கு மேல் பேரதிர்ச்சி.
“சந்தோஷ்! எனக்கு சாதனாவை உடனே பார்க்கணும். நான் இப்பவே கிளம்பி வரேன்.” துக்கம் தொண்டையை அடைக்க கெஞ்சினான் ரிஷிகுமார்.
“உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க? வேணும்னா உறவாடுறதுக்கும் வேண்டாம்னா வெட்டிவிடுறதுக்கும் என் சாதானா உனக்கு கிள்ளுக்கீரையா. இனி அக்கா தம்பின்னு ஏதாவது சொந்தம் கொண்டாடிட்டு எங்க வீட்டுப் பக்கம் வந்தேனா, உன் காலை உடைச்சிடுவேன் ஜாக்கிரதை.” கர்ஜித்து அழைப்பைத் துண்டித்தான் சந்தோஷ்.
உள்ளதை உள்ளபடி சொல்லாமல் – பிள்ளைத்தாய்ச்சி
உள்ளத்து ஆசைகளைப் பூட்டிவைத்தது தான் நியாயமா;
ஊழ்த்துணையின்* உணர்வுகளை மறைத்து – பின்னவன்
ஊமை நாடகம் ஆடியது தான் பாவமா-மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…
*மனைவி


Please Comment Here