157 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
பூச்சாண்டி காட்டியும், காதில் பூ சுற்றியும்,
பூசிமெழுகி காலத்தைக் கடத்திய நாயகன் – இன்று
பூச்சூட்டல் காண விழையும் பாவை அவளின்,
பூட்டிவைத்த ஆசைகளை நிறைவேற்றும் வேகத்தில்,
பூஞ்சாரலில் நனைந்தானா; பூகம்பத்தில் சிக்கினானா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 27…
சாதனா கருவுற்றிருக்கும் நற்செய்தி கேட்டறிந்த ரிஷிகுமாருக்குக் கைகால் ஓடவில்லை. வெறுத்துப் பேசிய சந்தோஷின் உறுமல்களையும் மீறி சாதனாவின் வீட்டை நோக்கி வண்டியை வேகமாகச் செலுத்தினான்.
சட்டென கூடிய வேகத்தில் கையில் வைத்திருந்த பொம்மையை தவறவிட்ட யாதவன், “ப்பா…ப்பா…ஆன பொம்மை…” அழத்தொடங்க,
‘கடவுளே! குழந்தைகளை வச்சுட்டு எவ்வளவு கவனக் குறைவா வண்டி ஓட்டுறேன்.’ தன் முட்டாள்தனத்தை எண்ணி தலையில் அடித்துக்கொண்ட ரிஷி வண்டியை ஓரம்கட்டினான்.
யாதவனைச் சமாதானப்படுத்தி தன்னையும் சமன்படுத்திக்கொண்டவன், குழந்தைகளை தங்கும் விடுதியில் விட்டுவிட்டு, சாதனா வீட்டிற்குச் செல்வது நல்லது என யோசித்தான். கவனம் சிதறாமல் வண்டியை ஓட்ட வேண்டுமென்று எண்ணியவனின் சிந்தனை மட்டும் கட்டுக்கடங்காமல் ஓடியது.
‘திரும்பிச் சென்று பரஸ்பரமாகப் பழகினால் மட்டும், உன்னால் அவள் தேவைகளைத் தனியாளாகச் சமாளிக்க முடியுமா?’ என அவன் மனசாட்சி ஏளனம் செய்தது.
ஒரு சகோதரனாக அவளைப் பார்த்துக்கொள்ள முடியும்தான்!
பிரசவம் முதல் கைக்குழந்தையைக் கையாளுவது வரை அனைத்தையும் கூடத் தனியாளாகச் சமாளிக்கும் அனுபவத்தையும் தன் இரட்டையர்கள் மூலமாகப் பெற்றிருந்தான் தான்!
ஆனால் அவள் எதிர்பார்ப்பது அது மட்டுமல்லவே! அக்கா, மாமா, நாத்தனார் சொந்தங்கள் சூழ வாழ விரும்புகிறாளே!
தமக்கையின் ஆசையை நிறைவேற்ற வழித் தேடித் தோற்றவனாக விடுதியை வந்தடைந்தான்.
அறையில் கீர்த்தனா இல்லை எனக் கண்டுகொண்டவன், விக்ரமும் காயத்ரியும் தங்கியிருந்த விடுதி அறைக்கு ஓடினான். இருப்புக்கொள்ளாமல் அவன் அழைப்பு மணியை ஒலிக்கவிட்ட வேகத்தில், தூக்கம் கலைந்து எழுந்த விக்ரம் அடித்துப் பிடித்து வந்து கதவைத் திறந்தான்.
“ஒரு முறை பெல் அடிச்சா பத்தாதா?” சிடுசிடுக்கும் மாமனையும் பொருட்படுத்தாமல், கீர்த்தனாவைத் தேடினான்.
“அவங்க ரெண்டுபேரும் ஷாப்பிங்க் போயிருக்காங்க டா.” முன்வந்து பதிலளித்த விக்ரம், “அது சரி, நீ சந்திக்கப் போனவங்க வீட்டுல இல்லையா? இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்துட்ட?” அக்கறையாக வினவ,
அப்போதும் ரிஷிகுமாரிடமிருந்து பதிலேதும் இல்லை.
மாறாக “விக்கிப்பா! விக்கிப்பா!” எனப் போட்டிப்போட்டு அழைத்துப் பரிசுப் பொருட்களை எடுத்துக் காட்டி துள்ளிய குழந்தைகளின் உற்சாகம் அவன் கேள்விக்குப் பதில் சொன்னது.
குழந்தைகள் இருவரையும் ஒன்று சேர அள்ளித் தூக்கி முத்தமிட்டவன், “அட! குட்டீஸ் ரெண்டு பேரும் குட் ஜாப் பண்ணீங்களா. அதான் அங்கிள் உங்களுக்கு கலரிங் செட், டாய்ஸ் எல்லாம் தந்திருக்காங்களா?” என அவன் கொஞ்சிப் பேச,
“அங்கிள் இல்ல…சன்மா தந்தா” யாழினி மழலையில் மொழிய, சாதனாவைத் தான் அவ்வாறு குறிப்பிடுகிறாள் என விக்ரமுக்கு விளங்கவில்லை.
“அப்படியா! வாவ்! வேற என்ன செஞ்சீங்க?” செல்லம் கொஞ்சி கதையளந்தபடி அவர்களை மெத்தையில் இறக்கிவிட்டான் விக்ரம்.
அங்கு விளையாடியதை ஒப்பிக்கும் குழந்தைகளின் கள்ளங்கபடம் இல்லாத கீச்சுக்குரல் ரிஷிகுமாரின் இதயத்தைக் குத்திக்கிழித்தது.
“மாமாஆஆஆஆ…” என அலறிக்கொண்டே சோஃபாவில் தொப்பென விழுந்தவன் உடல் குலுங்க விக்கி அழுதான். அவன் உள்ளத்தைப் பிய்த்துத் தின்ற கவலையெல்லாம் அந்தக் கதறலில் சிதறியது.
அவனருகில் பதறியடித்து ஓடி வந்த விக்ரம், “ரிஷி! என்னடா ஆச்சு உனக்கு. உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? ஹாஸ்பிடல் போலாமா…” பேச்சுக்கொடுத்தவாறு அவன் பின்முதுகை வருடினான்.
வியர்வை பூத்து ஜில்லென்றான ரிஷியின் உடல்வெட்பம் விக்ரமை பயமுறுத்தியது. அவனைக் கைத்தாங்கலாய்ப் பிடித்துக்கொண்டு சாய்வாக அமரவைக்க முயன்றான்.
ஆனால் கரங்களுக்குள் முகத்தை இறுக்கமாகப் புதைத்துக் கொண்டிருந்தவனோ நிமிர மறுத்தத்தோடு, “நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் மாமா.” கழுத்து நரம்புகள் புடைக்க கதறினான்.
தந்தையின் விநோதமான செயலில் திடுக்கிட்ட குழந்தைகள், “ரிஷிப்பா…..விக்கிப்பா…” மாறிமாறி முனகிக்கொண்டே அருகில் வரலாமா வேண்டாமா என முன்வைத்த காலை பின்வைப்பதுமாகக் குழம்பித் தவித்தனர்.
மன அழுத்தத்தில் அழுகிறான் என உறுதி செய்துகொண்ட விக்ரம், “கன்ட்ரோல் யுர்செல்ஃப் ரிஷி. யாது. யாழினி பயப்படுறாங்கடா.” அவன் செவிமடலில் ஓதி, நடுங்கி நிற்கும் குழந்தைகளின் தலைகோதி,
“ரிஷிப்பாக்குத் தொப்ப வலிக்குதாம் தங்கம். நான் மருந்து தந்துட்டு வந்து உங்களோட விளையாடுறேன். அதுவரைக்கும் நீங்க அங்கிள் தந்த கலரிங்க் புக்ல கலர் பண்ணிட்டு இருங்க.” முத்தமிட்டான்.
“அங்கிள் இல்ல விக்கிப்பா. சன்மா இஸ் ய க்ரள்” யாழினி பிஞ்சுக் கரங்களை ஆட்டி ஆட்டி கிளுகிளுக்க,
குழந்தையின் வசீகரிக்கும் குரலில் நெகிழ்ந்த விக்ரம், “சாரி டா யாழிகுட்டி! ஆன்ட்டி தந்த கலரிங்க் புக்.” திருத்திச்சொல்லி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
குதூகலமான யாழினி, விக்ரம் மேல் ஏறிக்கொண்டு ‘சன்மா’ புராணம் பாட, அதைக் கேட்டுக்கொண்டிருந்த ரிஷியின் விசும்பல்கள் கூடியது.
குழந்தைகளின் கவனத்தை விளையாட்டில் திருப்பியவன், ரிஷி அருகில் வேக நடையிட்டான்.
“என்னடா ஆச்சு உனக்கு?” இம்முறை சற்று அழுத்தமாகவே கேட்டு, அதே வேகத்தில் அவனை வலுக்கட்டாயமாக பால்கனிக்கு இழுத்துச்சென்றான்.
மீண்டும் அவன் முகத்தைத் தொங்கப்போட்டு அழ, “இப்போ நீ வாய்திறந்து பேசப்போறீயா, இல்ல கீர்த்தனாவுக்கு ஃபோன் பண்ணட்டுமா?” பொறுமையிழந்தான் விக்ரம்.
கீர்த்தனாவின் பெயர் காதில் விழுந்ததில் தான் செய்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் எனப் புத்திக்கு உரைத்தது ரிஷிகுமாருக்கு.
“ரிஷி! உனக்கு இன்னும் ஒரே நிமிஷம்தான் அவகாசம்.” விக்ரம் குரலை உயர்த்த,
உள்ளதை உள்ளபடி சொல்லலாமா அல்லது சமாளிக்கலாமா என அதிவேகத்தில் சுழன்று குழப்பிய மனத்தையும் புத்தியையும் ஒருநிலைப்படுத்தி,
“மாமா! அன்னைக்குக் காப்பகத்தில் என் நண்பர்களைச் சந்திச்சீங்களே. ஞாபகம் இருக்கா?” கம்மிய குரலில் வினவினான்.
“ம்ம்…உன்னோட வேலை செய்யறவங்கன்னு சொன்னீயே…” புருவங்களைச் சுருக்கி யோசித்தவன், அவர்கள் பெயர் நினைவில் வராமல் போக, அவங்களுக்கு என்ன இப்போ?” என்றான்.
மீண்டும் ரிஷிக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
“என்னை மன்னிச்சிருங்க மாமா! நீங்க நினைக்குறா மாதிரி சாதனா எனக்கு ப்ரெண்ட் மட்டுமில்ல…அவன் என் கூடப் பிறந்த ட்வின் சிஸ்டர்.” விக்ரமின் கண் பார்த்துப் பேசமுடியாமல் தலைகுனிந்தான்.
“என்னடா சொல்ற?” கொந்தளித்தவன் அவன் தோள்பட்டையை உலுக்கினான்.
“ப்ளீஸ் மாமா! நடந்த எல்லாத்தையும் ஒண்ணுவிடாம சொல்லிடறேன். ஆனால் நீங்க இதை எக்காரணத்துக்கொண்டும் ரித்திகிட்ட சொல்லக்கூடாது. இதை எல்லாம் அம்மாவால தாங்கிக்கவே முடியாது.” புதிர்மேல் புதிர்போட,
அவனுக்குப் பேச சந்தர்ப்பம் தந்தால் தான் பிரச்சனைகளின் வீரியம் புரியுமெனச் சிந்தித்த விக்ரம்,
“கீர்த்தி காதுக்குப் போகாம பார்த்துக்கலாம். என்ன நடந்துதுன்னு சொல்லுடா?” நம்பிக்கையூட்டினான்.
மாமனின் கனிவான தோரணையில், நிம்மதி உணர்ந்தவன், பெருமூச்சுடன் கண்களைத் துடைத்துக் கொண்டு, சாதனாவைச் சந்தித்த நாள் முதல் அவள் கருவுற்றிருக்கும் செய்தி வரை அனைத்தையும் மனம் திறந்து பகிர்ந்தான்.
“இத்தனை நடந்திருந்தபோதும் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் மழுப்பி இருக்கிறானே என்ற வருத்தம் விக்ரமின் முகத்தில் அப்பட்டமாகப் பிரதிபலித்தது.
அதைக் கண்டுகொண்ட ரிஷிகுமார், “எப்பவுமே ரித்திதானே என் பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ணறா. இந்த முறை ஒரு சேஞ்சுக்கு நான் அவ பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ண நெனச்சேன்.
சாதனாவை அவ முன்னாடி நிறுத்தி, இந்தா உன் பர்த்டே கிஃப்ட்! உனக்குச் செல்லம் கொடுத்து உன்னை தலையில் தூக்கி வச்சு கொஞ்ச ஒரு நாத்தனார் இல்ல; ரெண்டு பேரு இருக்காங்கன்னு சொல்ல நெனச்சேன். ” இமைகள் படபடக்க பதிலுரைத்தான்.
வெள்ளந்தியாகப் பேசி அசடுவழியும் மச்சானின் திட்டத்தை மனக்கண்ணில் அசைபோட்ட விக்ரம் அந்த அழுத்தமான சூழலையும் மறந்து பக்கென்று சிரித்து, “நல்லா தானே பிளான் போட்டிருக்க. அப்படியே செஞ்சிருக்க வேண்டியதுதானே டா.” கிண்டல் செய்தான்.
“எங்க மாம்ஸ்! அதுக்குள்ளத் தான் உங்க தங்கை அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சு வீட்டையே ரெண்டாக்கிட்டாளே.” ரிஷிகுமார் புகார் வாசிக்க,
“அவ என்னடா செஞ்சா?” புரியாமல் விழித்தான் விக்ரம்.
தனக்கு விபத்து நேர்ந்தபோது அவள் செய்த அமர்க்களங்களை நினைவூட்டிய ரிஷிகுமார், “அம்மாக்குத் தெரியக்கூடாதுன்னு நினைக்குற எந்த விஷயத்தையும் என் காதுல போடாதன்னு பத்திரம் பதிவு செஞ்சுத் தராத குறையா டைரியில் எழுதி தந்துட்டா மாமா.” என்றான் சலிப்பாக.
தொட்டதுக்கெல்லாம் பிங்கி பிராமிஸ் செய்யும் சிறுவர்களாக, நாட்குறிப்பில் எழுதும் அவர்களின் சுபாவம் அவனுக்கும் தெரியுமே.
“போங்கடா! நீங்களும் உங்க வீணாப்போன டைரி பழக்கமும்.” உதடு பிரிக்காத புன்னகையுடன் விக்ரம் கேலி செய்ய,
“கிண்டல் பண்ணாம சாதனாவோட ஆசையை நிறவேற்ற வழி சொல்லுங்க மாமா.” எனக் கண்களைச் சுருக்கினான்.
சற்றுமுன் அழுது ஆர்ப்பாட்டம் செய்தவன் இவன் தானா என்று எண்ணியவாறே ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினான் விக்ரம்.
உண்மையிலேயே மாமனிடம் அனைத்தையும் ஒப்பித்ததில், தந்தை அரவணைப்பில் நடைப்பயிலும் சிறுபிள்ளை போலத்தான் கவலைகளை மறந்திருந்தான் ரிஷிகுமார்.
ரிஷி சொன்னவற்றை அசைபோட்டவனுக்கு அன்று சாரதா மருத்துவமனையில் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வந்தது. தன்னுடைய வற்புறுத்தலால், ஜோசியர் சொன்ன பரிகாரங்களைச் செய்ய முடியாமல் தவிக்கும் அவர் மனத்திற்கு, சாதனாவின் வருகை நிச்சயம் ஆறுதலை அளிக்கும் என்று நம்பினான்.
“அம்மா தைரியமா தான் இருக்காங்க ரிஷி. இன்னும் சொல்லப்போனால் மகள் உயிரோடு இருக்கான்னு தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப்படுவாங்க டா.” திடமாகப் பேசினான்.
“நீங்க ஒரு விஷயத்தை மறந்துட்டுப் பேசுறீங்க மாமா. சாதனா உயிரோட இருக்கும்போதே அப்பா அவ இறந்தே பிறந்தான்னு அம்மாகிட்ட பொய் சொல்லியிருக்காரு. போதாக்குறைக்கு கைநீட்டி பணம் வேற வாங்கியிருக்காரு.
புருஷன் தனக்கு இப்படியொரு துரோகத்தைச் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சா அதை அம்மா எப்படித் தாங்குவாங்க?” சிந்திக்கச் சொன்னான்.
சொல்லப்பட்ட காரணங்கள் வெவ்வேறு என்றாலும், பொய் உரைத்திருப்பதும், பணம் கைமாற்றப்பட்டிருப்பதும் தெள்ளத் தெளிவாக விளங்கியது. இருக்கும் பிரச்சனைகளில் நடந்து முடிந்ததைப் பற்றி ஆராய்ந்து எது சரி? எது தவறு? எனக் கண்டறிவதை விட, இனி என்ன செய்யலாம் என்று திட்டமிடுவது தான் உத்தமம் எனப் புரிந்தபோதும் அவனுக்கு அடுத்தென்ன செய்வதென விளங்கவில்லை.
இதற்கிடையில் அரைமணி நேரமாகப் பொறுமையாக வண்ணம் தீட்டிக்கொண்டிருந்த குழந்தைகள் அவர்களைத் தேடி பால்கனிக்கு வந்தனர்.
இங்கும் அங்குமாக இடியாப்ப சிக்கலைப் போல கைக்கு வந்த இடத்தில் எல்லாம், கிறுக்கித் தள்ளிய ஓவியத்தை விக்ரமிடம் பூரிப்பு மின்ன நீட்டிய குழந்தைகள், அவன் பாராட்டுகளுக்காகத் தவிப்புடன் நின்றனர்.
“ஜோர்ரா கலர் அடிச்சிருக்கீங்க தங்கங்களா.” குழந்தைகளின் கைகுலுக்கிய விக்ரம் படத்திலுள்ள பொருட்களைச் சுட்டிக்காட்டி கேள்விகளை அடுக்க,
“நாம எல்லாரும் வருவோம்னு அவ எவ்வளவு ஆசையா ஏற்பாடுகள் செஞ்சியிருந்தா தெரியுமா?” ரிஷிகுமார் கண்கலங்க,
“ரிஷியியியி!” அடிக்குரலில் அழுத்தமாக அதட்டிய விக்ரம், குழந்தைகள் இருவரையும் வேறொரு படத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டுவருமாறு கூறி உள்ளே அனுப்பிவைத்தான்.
அவர்கள் பத்திரமாக மெத்தையில் ஏறிக்கொண்டார்களா என உறுதி செய்துகொண்டவன், “இப்படியே நீ தொட்டதுக்கெல்லாம் உணர்சிவசப்பட்டுட்டு இருந்தீனா… நாம எதுவும் வாய்திறந்து சொல்லவேண்டாம்… கீர்த்தனாவே எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவா!” கண்களை உருட்டி எச்சரித்தான்.
அப்போது தான் அவனுக்கு, குழந்தைகளை விடுதியில் விட்டுவிட்டு சாதனாவைச் சந்தித்து வர எண்ணியது நினைவுக்கு வந்தது.
விறுவிறுவெனக் கண்களைத் துடைத்துக்கொண்டவன், “மாமா! ரித்தி வரதுக்குள்ள நான் சாதனாவை பார்த்துட்டு வந்துடுறேன். அவ அதுக்குள்ள வந்துட்டான்னா, நீங்க கொஞ்சம் சமாளிச்சிக்குறீங்களா.” என எழுந்தான்.
“நில்லுடா!” அதட்டிய விக்ரம், “இப்படியே எத்தனை நாளுக்குக் கண்ணாமூச்சி ஆடுறதா உத்தேசம்.” அழுத்தமாக வினவினான்.
“வேறென்னெ செய்யச் சொல்றீங்க மாமா. ரித்தி புரிஞ்சுக்க மாட்டேன்றாளே!” என நொந்துகொண்டான்.
“அவளை விடு. புத்திமதி சொல்லி சொல்லி நானும் அலுத்துப்போயிட்டேன்.” எனச் சலித்துக்கொண்ட விக்ரம்,
“இப்போதைக்கு இந்த விஷயத்தை கொஞ்சம் ஆறப்போடு ரிஷி. நாம ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள கட்டாயம் அவங்கள நேரில் சந்திச்சுப் பேசிட்டு வரலாம்.” என நம்பிக்கையூட்டினான்.
“நீங்களும் என் கூட வரீங்களா?” ரிஷிகுமார் வாயைப்பிளக்க, அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் அறைக்குள் நகர்ந்த விக்ரம், குழந்தைகளுடன் ஐக்கியமானான்.
ஆவேசத்தில் அலறியவனை ஆதுரத்துடன் கையாண்டு,
ஆர்ப்பாட்டங்களும் ஆரவாரங்களும் ஒன்றுக்கும் உதவாதென,
ஆற அமர போதித்து, ஆகும் வழியைக் கண்டறிந்த,
ஆடவனின் திடீர் விஜயத்தில் மகிழ்ந்தாளா தாரகை – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here