163 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
தெளிந்தும் தெளியாமலும் தடுமாறித் தவிக்கிறாள் நாயகி;
புரிந்தும் புரியாமலும் தவிர்த்துத் தண்டிக்கிறான் நாயகன்;
முடிந்தும் முடியாமலும் நீளும் உறவுப் போரில்,
தோற்றும் தோற்காமல் வென்றது யாரோ – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 35…
நாசியைத் துளைத்து உறுத்திய பிஞ்சு விரல்களின் ஸ்பரிசத்தில், பெரும் தும்மல்களுடன் துயில் கலைந்து கண்விழித்தான் ரிஷிகுமார்.
“குழந்தை முகத்துக்கு மேல இப்படியா ஊரே அதிருரா மாதிரி தும்முவ.” அவன்மேல் குப்புறப் படுத்திருந்த குழந்தையை அலேக்காய் அள்ளிக்கொண்டு தன் மார்போடு சேர்த்து அணைத்தவாறு சீண்டினாள் கீர்த்தனா.
காண்பது கனவா நனவா எனக் கண்களைக் கசக்கிக்கொண்டவன்,
“ரித்தி! சாதனாவோட குழந்தை உன்கிட்ட எப்படி…அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டீயா…அம்…அம்மா எங்க….” அலறியடித்து எழுந்து அமர்ந்தான்.
“எழுந்தோமா, குட் மார்னிங்க் சொன்னோமா, ப்ரெஷ் பண்ணோமான்னு இல்லாம, ஊத்தவாயோட உன் மாமா எத்தனை கேள்விகள் கேக்குறார் பாருடா தங்கம். உன் மாமாவை நாலு அடிப் போடலமா?” நமுட்டுச் சிரிப்புடன் குழந்தையின் பிஞ்சுக்கரங்களைக் கொண்டு அவன் கன்னத்தில் அடித்தவள், பதிலேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
அடித்துப் பிடித்துக் காலைக்கடன்களை செய்துமுடித்து, வரவேற்பறைக்கு வந்தவன், ஒன்று கூடி அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் பெண்களின் தரிசனத்தில் விக்கித்து நின்றான்.
“பொண்டாட்டி உன் சொல்பேச்சு கேட்கலேன்னா, தலையில நாலு தட்டுத்தட்டி புத்திமதி சொல்லிப் புரியவைக்கணும். அதைவிட்டுட்டு எனக்கென்ன வந்துதுன்னு கோச்சிட்டு அம்மா வீட்டுக்குப் பறந்துட்டா எல்லாம் சரியாகிடுமா?” முந்தைய நாள் இரவு அவன் செய்த செயலைக் குத்திக்காட்டிய காயத்ரி கண்டிக்க,
“தும்பி ரோஷத்துல இங்க பறந்து வந்தது கூட ஓரளவுக்கு ஏத்துக்கலாம் காயத்ரி. பொண்டாட்டி சக்களத்தி சண்டை போட காத்துட்டு இருக்கான்னு தெரிஞ்சும், அவகிட்ட வெங்காய ஊத்தப்பம் கேட்டான் பாரு… அங்க நிக்குறான் நம்ம உடன்பிறப்பு.” கலாய்த்தாள் சாதனா.
“இஞ்சிப்புளியை மறந்துட்டீயே!” எடுத்துக்கொடுத்த காயத்ரி, சகோதரிக்கு ஹை ஃபை தர, இருவரும் வயிறு குலுங்க சிரித்தனர்.
பெண்களின் கிண்டல் பேச்சுகளை ரசிக்கவா வேண்டாமா என ரிஷிகுமார் பேதலித்து நிற்க, அண்ணியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடக்கிவாசித்த கீர்த்தனாவால் அதற்கு மேலும் பொறுக்க முடியவில்லை.
“நீ கோச்சிட்டுப் போனதுக்கு அப்புறம் சாதனா என்னைத் தேடி வந்தா ரிஷி. உன் தர்மசங்கடமான நிலைமை எனக்குப் புரியவச்சு எனக்குப் புத்திமதி சொன்னாடா. சாருமாகிட்ட எதையும் சொல்லமாட்டேன். ஐ ஏம் ரியலி சாரி.” உதட்டைப் பிதுக்கினாள்.
“இதைத்தானே ரித்தி நானும் உன்கிட்ட மாசக்கணக்கா சொல்லிட்டு இருக்கேன்.” ஆதங்கம் சொட்ட வினவியவனின் விழிகள் சகோதரியை வியப்புடன் ஏறிட்டது.
“தனக்குன்னு வந்தால் தானே மண்டைக்கு உரைக்குது!” உம்மென்று முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு கீர்த்தனா முணுமுணுக்க, அவள் கன்னத்தோடு கன்னம் உரசிக்கொண்ட சாதானா, தம்பியை குறும்பாய் ஏறிட்டாள்.
“புருஷனுக்கு கள்ளத்தொடர்பு இருக்குமோன்னு லைட்டா ஒரு சந்தேகம் வந்ததுக்கே நீயும் உன் அண்ணியும் விவாகரத்துப் பண்ணற அளவுக்குப் போனீங்களே. அப்படியிருக்க பெத்த பிள்ளையை பிரிச்சுவச்ச புருஷனைப் பற்றி தெரிஞ்சா உன் சாருமா மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சுப் பாரு ரி…த்….தி… ன்னு புரியுற விதத்தில் எடுத்துச் சொன்னேன்.” கிண்டலும் பெருமிதமும் கலந்த தோணியில் கூறி கண்சிமிட்டினாள்.
கீர்த்தனாவும் ஆமோதிப்பாய் தலையசைக்க, மகிழ்ச்சியில் மிதந்தவன் மனையாளை ஆரத்தழுவி கன்னத்தில் முத்தமிட்டான்.
“ம்ம்ம்… ம்ம்ம்…!” தொண்டையைச் செருமிக்கொண்டு மடியில் கிடந்த குழந்தையைக் கண்பார்க்க நிமிர்த்திய காயத்ரி, “அத்தையும் மாமாவும் உன்னைச் சீராட்டிப் பாரட்டட்டுமேன்ற நல்லெண்ணத்துல உன் பெரியப்பா தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சு பாட்டியையும் குட்டீஸையும் கோவிலுக்கு அழைச்சிட்டுப் போயிருக்காரு. இவங்க என்னடான்னா ரொமான்ஸ் மோடுக்குத் தாவிட்டாங்க.” பெருமூச்செறிந்தவள், “வாடா கண்ணா! நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்.” பொய்கோபத்துடன் எழுந்தாள்.
அப்போது தான் சாரதாவும் குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பதைக் கவனித்தான் ரிஷிகுமார்.
அசடுவழிந்தபடி அக்காளின் கரங்களில் தவழ்ந்த மருமானைத் தூக்கி ஆசைத் தீர முத்தமிட்டான்.
தவத்தின் பலனைப் பெற்றுவிட்டதாய் சாதனா கண்கலங்கி நிற்க, அவளையும் உரிமையாகத் தோளோடு சேர்த்து அரவணைத்துக் கொண்டான் ரிஷிகுமார்.
இரவோடு இரவாக ரகசிய கூட்டணி மாநாடு நடத்திய பெண்கள் அதைப்பற்றி விவரித்துக்கொண்டே அவனுக்கு ராஜ உபச்சாரம் செய்தனர். கீர்த்தனா வெங்காய ஊத்தப்பம் செய்து பரிமாற, காயத்ரி அதை அவனுக்கு இஞ்சிப்புளியுடன் சேர்த்து ஊட்டிவிட, சாதனா அவனுக்கு இணையாக ஆ வென வாய்திறந்து உணவைப் புசிக்க எனச் செல்லச்சண்டைகளும், குறும்புகளுமாக காலை உணவை உண்டனர்.
பசி முத்திய குழந்தை வீல்வீலென சைரனை ஊதி அவர்கள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பினான்.
குழந்தையைப் பிரிய மனமே இல்லாத ரிஷிகுமார், அவனைத் தோளில் போட்டுக்கொண்டு ஆசுவாசப்படுத்தி பாட்டில் பால் எடுத்துவருமாறு சாதனாவிடம் கூற, மூன்று பெண்களும் பக்கென்று சிரித்துவிட்டனர்.
“பத்தே நிமிஷம் ரிஷி. திரும்ப உன்கிட்டயே விட்டுடறேன். பசியாத்தும் நேரம் போக மிச்ச நேரமெல்லாம் நீயே தூக்கி வச்சுக்கோ.” கண்சிமிட்டிய சாதனா, குழந்தையை வாங்கிக்கொள்ள,
“அம்மா முன்னாடி எப்படி….” தயங்கியவனின் முகம் நொடியில் வாடியது.
அவன் மனநிலையை உணர்ந்த காயத்ரி, “அதெல்லாம் சமாளிச்சுக்கலாம் டா. வீணா மனசபோட்டுக் குழப்பிக்காம, இன்றைய பொழுதை மகிழ்ந்து அனுபவி.” எனத் தேற்றினாள்.
தொடர்ந்து வந்த நாட்களிலும் கோவில், குளம், கடைவீதி, பூங்கா என விக்ரமும் காயத்ரியும் சாரதாவை வீடுகடத்த, இரட்டையர்களுக்குத் தனிமை தரும் கண்ணாமூச்சி ஆட்டம் இனிதாகவே அரங்கேறியது.
அன்றும் அப்படித்தான்.
யாதவன் யாழினி வந்திருப்பதை அறிந்திருந்த சத்யாவின் பேரன் சிவா, அவர்களைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துவர வேண்டுமென விக்ரமை நச்சரித்திருந்தான். அதையே சாக்காக வைத்துக்கொண்ட விக்ரம், மாமியாரை தன்னுடன் அழைத்துச் செல்ல திட்டமிட, சத்யாவோ குடும்பத்தினர் அனைவரும் விருந்துக்கு வரவேண்டுமென அன்புக்கட்டளை இட்டார்.
பச்சை உடம்புக்காரி என முத்திரையைக் குத்தி, சாதனா வெளியே செல்வதற்குத் தடைவிதித்ததோடு மட்டுமல்லாமல், அவளுக்குத் துணையாக வீட்டில் இருந்துகொள்கிறேன் என்றும் கூறிவிட்டார் சாரதா.
மறுநாள் சாரதாவின் நட்சத்திர பிறந்தநாள் விழாவை முடித்துக்கொண்டு அன்று இரவே ஊருக்குத் திரும்ப வேண்டிய நிலையில் ரிஷிகுமாருக்கு அங்கு செல்லவே மனமில்லை.
“ரெண்டு மணி நேரம் தானே ரிஷி. போனோம் வந்தோம்னு தலையைக் காட்டிட்டு வந்துடலாம். சாயங்காலம் காயத்ரி, அத்தையை வழக்கம்போல கோவிலுக்குக் கூட்டிட்டுப் போகட்டும்.” சோகமே உருவமாய் வண்டியைச் செலுத்தும் மச்சானிடம் விக்ரம் மறுயோசனை சொல்ல,
“இன்னைக்கு பிரதோஷம் வேற. எப்படியும் ரெண்டு மூணு மணி நேரமாயிடும். நீயும் கீர்த்தியும் ஆசைத்தீர சாதனவோட டைம் ஸ்பென்ட் பண்ணுங்க.” ஆதாயங்களை அடுக்கினாள் காயத்ரி.
“லீவ் மட்டும் சாங்க்ஷன் ஆகியிருந்தா, இன்னும் ஒரு வாரத்துக்கு இங்கேயே இருந்திருப்பேன் மாமா.” அப்போதும் குறைப்பட்டான் ரிஷிகுமார்.
“இப்படிப்பண்ணா என்ன ரிஷி?” குறுக்கிட்ட கீர்த்தனா, சந்தோஷ் ஊருக்கு வந்துட்டார்ன்னு சொல்லிட்டு, சாதனாவையும் குழந்தையையும் நம்மளோட கவ்ஹாத்திக்கு அழைச்சிட்டுப் போயிட்டா என்ன. அவ சிங்கப்பூர் போயிருக்காளா கவ்ஹாத்தி போயிருக்காளான்னு சாருமா என்ன ஆராய்ச்சியா செய்யப்போறாங்க?” தீவிர யோசனையில் இறங்கினாள் கீர்த்தனா.
“சூப்பர் ஐடியா ரித்தி!” ரிஷிகுமார் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எனப் பளிச்சிட,
“சாருமாகிட்ட பொய்யே சொல்லமாட்டேன்னு வீராப்பா சுத்திட்டு திரிஞ்ச என் தங்கையை நீ எங்கேயாவது பார்த்தீயா காயும்மா?” நாக்கை உள்கன்னத்தில் சுழற்றியபடி வம்பிழுத்தான் விக்ரம்.
“ம்கும்!” கழுத்தை நொடித்தவள், “சாதனாவைப் பத்தி மறைக்குறது உன் ஆன மச்சான்; சந்தோஷ் ஊருக்கு வந்துட்டார்ன்னு பொய் சொல்லப் போகுறது உன் ஆசை மச்சினி. இதுல நான் எங்க சாருமாகிட்ட பொய் சொன்னதாகும்.” வியாக்கியானம் செய்தாள் கீர்த்தனா.
“அது சரி……” விக்ரம் ராகமாய் இழுத்து கேலியாகத் தலையாட்ட,
“சும்மாயிருக்குறவள சீண்டி அழவிட்டுட்டு அப்புறம் அவளையே குறைசொல்ல வேண்டியது.” கடுகடுத்த காயத்ரி, கணவனின் புஜத்தில் நறுக்கென கிள்ளவும் மறக்கவில்லை.
“ஆ வலிக்குது டி!” விக்ரம் பொய்யாகச் சிணுங்க, “ அவர்களுக்கு இடையில் அமர்ந்திருந்த யாதவனும் யாழினியும், காயத்ரியைப் போலவே கிள்ளுகிறேன் என்ற பெயரில் விக்ரமின் கழுத்தில் கிச்சுகிச்சு மூட்டி கலகலத்தனர்.
லேசான மனத்துடன் சத்யாவின் வீட்டிற்கு வந்தவர்கள், அதே மனநிலையில் விருந்து உணவை உண்டு மகிழ்ந்தனர். மூன்று இளஞ்ஜோடிகளும் பின்தோட்டத்தின் திண்ணையில் அமர்ந்து இளைப்பாறினர்.
விளையாட காத்துக்கொண்டிருந்த சிவா, தன் தந்தை தனக்குப் புதிதாக வாங்கித் தந்திருந்த கிரிக்கெட் சாதனங்களை கடை பரப்பினான்.
விளையாட்டின் விதிமுறைகளை அறியாத யாதவனும் யாழினியும் பந்தை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து விளையாட,
“இது த்ரோ & கேட்ச் விளையாட்டு இல்ல யாழி பாப்பா. பாலை பேட் வச்சு அடிக்கணும்.” மட்டையை யாழினியின் கையில் திணித்து நிதானமாகக் கற்றுக்கொடுத்தான் சிவா.
ஆனால் பந்து உருட்டி விளையாடுவதில் மும்முறமாக இருந்தவளோ, அவனைச் சற்றும் லட்சியம் செய்யவில்லை.
சிவா வளவளவெனப் பேச, யாழினி கேட்க மறுக்க, இதற்கிடையில் யாதவன் ஸ்டம்ப் குச்சிகளை வைத்து கம்பு சுற்ற எனச் சிறுவர்களின் சண்டை முத்தியது.
விளையாட்டுச் சாமான்களைத் துவம்சம் செய்யும் இரட்டையர்களைச் சமாளிக்க முடியாத சிவா, விக்ரமிடம் ஓடினான்.
“விக்கி மாமா! இவங்க ரெண்டு பேரும் தப்பு தப்பா கிரிகெட் விளையாடுறாங்க. எந்த ரூல்ஸும் ஃபோலோ பண்ண மாட்டேன்றாங்க.” ஒரு குரல் அழுதான்.
“அவங்க சின்ன குழந்தைங்க ஜூனியர். உன்ன மாதிரி கிரிகெட் கோச்சிங்க் போனதுக்கு அப்புறம் அவங்களும் ரூல்ஸ் ஃபோலோ பண்ணி விளையாடுவாங்க. இப்போதைக்கு சும்மா ஜாலியா விளையாடு.” ஷிவானி சமாதானம் சொல்ல, முடியவே முடியாது என அடம்பிடித்தான் சிவா.
சிவா கோபத்தில் விளையாட்டுச் சாதனங்களை மூட்டை கட்ட, யாழினி பந்தை தர மறுத்து அழுது ஊரைக்கூட்டினாள்.
அவளைத் தூக்கிக்கொண்டு, பந்தைத் திருப்பித் தருமாறு செல்லம் கொஞ்சி சமாதானம் செய்தான் விக்ரம். அவன் தேவதையோ, பந்தை தன் பிஞ்சுக்கரங்களில் இன்னும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு போக்குக்காட்டினாள்.
“அவ நீலிக்கண்ணீர் வடிக்குறா ‘ண்ணா! நாலு சாத்து சாத்தி பந்தை வாங்காம, கண்ணே மணியேன்னு கொஞ்சிட்டு இருக்கீயே!” கீர்த்தனா கண்டித்து கண்களை உருட்ட, யாழினியின் அடம் கூடியதுதான் மிச்சம்.
மூன்று குழந்தைகளையும் சமாதானம் செய்கிறேன் என்ற பெயரில் விக்ரமும் அவர்களுடன் விளையாட ஆயத்தமானான். சிவாவிடம் பேட்டை நீட்டியவன், இரட்டையர்களை ஃபீல்டிங்க் செய்யச் சொல்லி அவனே பந்தை வீசினான். ஏதோ பெரிய பொறுப்பில் அமர்த்தியது போல உற்சாகம் கொண்டனர் பிள்ளைகள்.
குழந்தைகளுக்கு இணையாக ஆரவாரம் செய்து விளையாடும் விக்ரமைக் கண்ட ரிஷியும் விஸ்வேஷ்வரனும் களத்தில் இறங்கினார்கள். ஆட்டம் இன்னும் அழகாய் சூடுப்பிடித்தது.
நேரம் போவதே தெரியாத அளவிற்கு விளையாட்டில் மூழ்கியிருந்தவர்களை தேநீர் அருந்தவருமாறு அழைத்தாள் ஷிவானி.
“லாஸ்ட் ஓவர் ஷிவானி!” குதூகலத்துடன் அறிவித்த ரிஷிகுமார், தன்னை எதிர்நோக்கிவரும் பந்தை வீழ்த்தும் ஆர்வத்தில் லாவகாமாய் கிரிகெட் மட்டையை சுழலவிட்ட அதே தருணம் தென்னை மரத்திலிருந்து விழுந்த மட்டை தேங்காய் ஒன்று அவன் தலையைப் பதம் பார்த்தது.
“அம்மாஆஆஆஆஆஆஅ!” எனப் பெரும் அலறலுடன் தரையில் சாய்ந்தான் ரிஷிகுமார்.
மண்டை பிளந்ததில் ரத்தம் குபுகுபுவென ஊற்றெடுக்க, அரை மயக்கத்தில் கிடந்தவனை விஸ்வேஷ்வரன் கைத்தாங்கலாய் பிடித்து அமர்த்த, காயத்தைப் பரிசோதித்தான் விக்ரம்.
“தையல் போட வேண்டியிருக்கும் போல விஸ்வேஷ். நான் அவனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகுறேன்.” என்று அறிவித்தவன், ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த, ஷிவானியிடம் நீளமான துணி எடுத்துவரச் சொன்னான்.
இதற்கிடையில் ரிஷியின் கதறலைக் கண்டு பயந்த குழந்தைகள் வீட்டிற்குள் சென்று, நடந்ததை எல்லாம் ஒப்பிக்க, அலறியடித்து ஓடி வந்தனர் காயத்ரியும் கீர்த்தனாவும்.
என்ன ஏது என விசாரிக்காமல், அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் அம்மாவின் செயலில் இரட்டையர்கள் இருவரும் ‘ரிஷிப்பா! ரிஷிப்பா!’ விசும்பியதுதான் மிச்சம்.
அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காயத்ரிக்கு உத்தரவிட்டு, ரிஷியை வண்டியின் பின்னிருக்கையில் உட்காரவைத்த விக்ரம்,
“ரத்தம் நிறைய போகக்கூடாதுடா; காயத்துமேல அழுத்திப் பிடி.” எனக் கூறிக்கொண்டே தலையைச் சுற்றியிருந்த பருத்தி வேட்டியின் மேல் ரிஷிகுமாரின் கரத்தை அழுத்தினான்.
வெள்ளை துணி நொடியில் சிவப்பைப் பூசிக்கொள்ள, அதையே இமைக்காமல் பார்த்து நின்ற கீர்த்தனாவின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது.
பயப்படும் அளவிற்கு எதுவுமில்லை என ஆறுதல் சொல்லி அவளை உள்ளே வருமாறு இழுத்தாள் ஷிவானி.
“இல்ல ஷிவானி! எனக்கு சாருமாவ பார்க்கணும்.” என்றவளின் முணுமுணுப்பு மற்றவர்கள் காதில் விழுந்ததோ இல்லையோ, வண்டியைச் செலுத்த ஆயத்தமான விக்ரமின் செவிகளை எட்டியது.
தங்கையின் உள்ளத்தைப் படித்தவன், “கீர்த்தி! நீயும் எங்களோட ஹாஸ்பிடல் வா. ரிஷிக்கு ஒரு தெம்பா இருக்கும்.” நைச்சியமாகப் பேசி அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
எட்டு தையல்கள் போடவேண்டிய அளவிற்குக் காயம் ஆழமாக இருந்தது. சிகிச்சை, பரிசோதனை எனச் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு அவர்கள் மருத்துவமனையிலிருந்து கிளம்பவே மாலை நான்கு மணி ஆகியிருந்தது.
வீட்டிற்குத் திரும்பும் வழியில் தங்கைக்கு வேப்பிலை அடிக்கலாம் என விக்ரம் எண்ண, அவளோ காரில் ஏறியதும் ஏறாததுமாய் சாரதாவுக்கு அழைத்துவிட்டாள்.
“சாருமாஆஆஆ!” அவள் ஸ்ருதியைக் கூட்டும்போதே அடுத்து என்ன நடக்கப்போகிறது என யூகித்த விக்ரம், வண்டி ஓட்டிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், அவளிடமிருந்து கைப்பேசியை பிடுங்கினான்.
“அத்தை! இவ அழுது ஆர்ப்பாட்டம் செய்யற அளவுக்கு ரிஷிக்கு ஒண்ணுமாகல. நீங்களே ரிஷிகிட்ட பேசுங்க.” எனப் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மச்சானிடம் கைப்பேசியை திணிக்கும் சாக்கில், விழிமொழியால் எச்சரித்தான்.
மகனின் தெளிவான குரலில் நிம்மதி பெருமூச்செறிந்த தாயுள்ளம் ஓரிரு நிமிடங்கள் பேசி அழைப்பைத் துண்டித்தார். அன்னையிடம் பேசி முடித்தவனின் கவனம், வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் மனையாள் பக்கம் திரும்பியது.
“விளையாடும் போது அடிப்படுறது சகஜம்தான் ரித்திமா. இதுக்கெல்லாம் அழலமா?” அவள் உள்ளம் அறிந்தும் அறியாததுபோல மெல்ல பேச்சுக்கொடுத்தான் ரிஷிகுமார்.
“விளையாடும் போது அடிப்படுறது சகஜம்தான் ரிஷி!” அவன் சொன்னதையே திருப்பிச் சொன்னவள், “ஆனால் அங்க அத்தனை பேர் இருந்தபோதும், உன் மேல மட்டும்தானே தேங்காய் விழுந்துது. அதுவும் மரத்துக்குக் கீழ நின்னு விக்கட் கீப்பிங்க் பண்ண விஸ்வேஷ் மேல விழாம, உன் தலையைத் தானே குறி வச்சுது.” தர்க்கம் செய்தாள் அவள்.
ஒன்றுக்கு இரண்டாய் யோசித்து குழம்பித் தவிப்பது இவளுக்குக் கைவந்த கலையே எனத் தலையைச் சிலுப்பிக்கொண்டவன்,
“ம்ப்ச்…உயரத்துலேந்து விழும் பொருள் நேரா விழாம டேக் டைவெர்ஷன்னு ஸ்லான்டிங்கா தான் விழும்னு நீ சைன்ஸ் பாடத்துல படிச்சது இல்லையா?” கிண்டலாகச் சமாளித்தான்.
அவன் கிண்டல் பேச்சை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள்.
“நீ ஆயிரம் விளக்கம் சொல்லி நியாயப்படுத்தினாலும், உனக்கு அடிப்பட்டதுக்கு காரணம், நாம சாருமாகிட்ட சாதனா பத்தின உண்மையைச் சொல்லாததுனால தான்.” ஆவேசமாய் வெடித்து, ஆண்களின் கண்ணாமூச்சி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
பேசிப் புரியவைத்துவிடலாம் என எண்ணியிருந்தவனுக்கு, மனையாளின் பதிலில் தூக்கிவாரிப் போட்டது.
“அசட்டுத்தனமா பிஹேவ் பண்ணாத ரித்தி. சாதனா பத்தி அம்மா கிட்ட ஏதாவது உளறினேனா, அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்.” திட்டவட்டமாக உரைத்தான்.
பெண்ணவள் வாதம் செய்யாமல் முகத்தைத் திருப்பிக்கொள்ள, தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறாள் என்ற முடிவுக்கு வந்திருந்தான் ரிஷிகுமார்.
ஆனால் தங்கையின் சுபாவம் அறிந்திருந்த விக்ரமுக்கு, அது புயலுக்கு முன் நிலவும் அமைதி எனத் தெள்ளத்தெளிவாகப் புரிந்தது.
மீதி பயணத்தை அமைதியில் கடந்தவர்கள் வீட்டை வந்தடைய, வண்டியை விட்டு இறங்க பரபரப்பும் தங்கையின் செய்கையிலேயே அவள் அடுத்தென்ன செய்யப்போகிறாள் என யூகித்த விக்ரம், அவள் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.
“உன் ஆதங்கம் எனக்குப் புரியுது கீர்த்தி. சாதனா பத்தின உண்மைகளை அத்தைகிட்ட சொல்லறது தான் சரின்னு நானும் உன்னை மாதிரியே ரிஷிகிட்ட நிறைய சண்டை போட்டிருக்கேன்.
ஆனால் அவன் பக்கத்துப் பயத்தையும் நாம யோசிக்கணும் ரித்தி. இத்தனை வருஷத்துப் பழக்கத்துல, நாம பாக்குற உன் சாருமா தைரியசாலியா, பக்குவப்பட்டவங்களா இருந்தாலும், கணவன்-மனைவியா அவங்களுக்கும் மாமாக்கும் நடுவுல இருந்த அன்யோன்யம் பத்தி நம்மளவிட, ரிஷிக்கும் காயத்ரிக்கும் தான் தெரியும்.
இந்தச் சூழ்நிலையில உன் சென்டிமென்ட் விட அவங்க இன்ட்யூஷன்னுக்குத் தான் நாம முக்கியத்துவம் தரணும். நன்மைக்காக சொல்லற பொய்யில் எந்தத் தப்புமில்லை கண்ணம்மா.” கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல மென்மையிலும் மென்மையாக எடுத்துரைத்தான்.
அப்போதும் பெண்ணவள் மௌனம் சாதிக்க, ரிஷிகுமாரின் இரத்த அழுத்தம் எகிறியது தான் மிச்சம்.
“உன் சாருமாவோட பிறந்த நாளே அவங்க இறந்த நாளாகணும்னு நெனச்சீனா , இப்பவே போய் உண்மைகளை எல்லாம் சொல்லிடு ரித்தி.” மனம்நொந்து பேசி, வண்டியை விட்டு இறங்கி வேகநடையிட்டான் ரிஷிகுமார்.
வீட்டிற்குள் நுழைந்த தந்தையை இரட்டையர்கள் இருவரும் சூழ்ந்துகொண்டு அவன் காயத்தை ஆராய்ந்து கேள்விகளைத் தொடுக்க, கீர்த்தனாவோ அமைதியாகச் சமையலறைக்குள் புகுந்து, மடமடவெனத் தண்ணீரைப் பருகினாள்.
காபி டிகாஷன் இறக்கிக்கொண்டிருந்த சாரதா, அவள் வாடிய முகத்தைக் கண்டுகொண்டு, “கண் திருஷ்டியா இருக்கும் கீர்த்தி. உப்பு மிளகாய் சுத்திப் போட்டா எல்லாம் சரியாபோயிடும்.” அவள் கன்னத்தை வருடியது தான் தாமதம்.
வீரிட்டு அழுதவள் எழுப்பிய சத்தத்தில் மொத்த குடும்பமும் சமையலறையில் ஆஜரானார்கள்.
நிலைமை என்னவென்று சுதாரித்திக்கொண்ட விக்ரம், “இதுக்குத்தான் உன்னை ஹாஸ்பிடல் வரவேண்டாம்னு சொன்னேன். கண்டதையும் பார்த்து நீயும் பயந்து மத்தவங்களையும் பயமுறுத்துற பாரு.” தன்மையாகப் பேசி அவள் கண்களைத் துடைத்துவிட்டு தன்னுடன் வருமாறு தோளோடு அரவணைத்தான்.
அண்ணன் கைவளையத்திலிருந்து விலகி சாரதா அருகில் ஓடியவள், “சாருமா! நான் சொல்லப்போகுற விஷயத்தைக் கேட்டு நீங்க அதிர்ச்சியாக மாட்டேன்னு பிங்கி பிராமிஸ் பண்ணுங்க.” எனச் சுண்டுவிரலை நீட்டினாள்.
நிலைமை கைமீறிப் போய் கொண்டிருக்கிறது எனப் பதறிய ரிஷி, குரலை உயர்த்தி அதட்ட, அதுவே சாரதாவுக்குச் சந்தேகங்களைக் கிளப்பியது. மகன் விபத்தைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்லாமல் மழுப்புகிறான் என அஞ்சியவர், மருத்துவர் என்ன சொன்னார் என மருமகளளைத் துருவி துருவி கேட்டார்.
“நான் சொல்லப்போகுற விஷயத்தைக் கேட்டு, நீங்க பதறக்கூடாது, மயங்கக்கூடாது, உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடாது…” பலமாக முன்னெச்சரிக்கைகளை அடுக்கி,
“…எனக்கு நீங்களும் வேணும் ரிஷியும் வேணும்….” என விசும்பியபள்,
சுற்றி நின்று கொண்டிருப்பவர்களையும் தவிப்பாக ஏறிட்டாள்.
“எனக்கு நீங்க எல்லாரும் வேணும்…” ஏக்கம் பொங்க மன்னிப்பை யாசித்தாள்.
பொடிவைத்துப் பேசும் மருமகளின் வார்த்தைகளில், சாரதாவின் சிந்தனை சிறகுகள் கட்டுக்கடங்காமல் விரிந்தது.
“இதோ நிக்குறாளே சாதனா….இவ தான் நீங்க இறந்துட்டதா நெனச்சிட்டு இருக்குற உங்க மகள். ரிஷியோட கூடப் பிறந்த ட்வின் ஸிஸ்டர். அவ இறந்துட்டதா மாமா உங்ககிட்ட பொய் சொல்லி, அவளை ஹாஸ்பிடல்லேயே விட்டுட்டு வந்துட்டாராம்.” படபடவென ஒப்பித்தபடி, சாதனாவைத் தன்னருகில் இழுத்து நிறுத்தினாள்.
அத்தகைய செய்தியை சற்றும் எதிர்பார்த்திராத சாரதாவின் விழிகள் துக்கமும் சந்தோஷமுமாக சாதனாவை ஏறிட்டன.
“அது…அது வந்து….” சாதனா உண்மைகளைச் சொல்லத் துணிய,
“அம்மா! ரித்தி ஏதோ உளறுரா மா. அவ சொல்லறத எல்லாம் பெருசுப்படுத்தாத.” குறுக்கிட்ட ரிஷி, சாதனா பக்கம் திரும்பி,
“மன்னிச்சிருங்க மேடம். அம்மாவோட பர்த்டேக்கு சர்ப்ரைஸ் பண்ணறேன்ற பேருல இவ சிறுபிள்ளைத்தனமா ஏதேதோ செஞ்சிட்டு இருக்குறா.” என்றான் மழுப்பலாக.
“ப்ளீஸ் ரிஷி! பொய் சொல்லாத டா! எனக்கு நீ வேணும்!” கீர்த்தனா அவன் சட்டையை உலுக்கினாள்.
தள்ளிவிடாத குறையாக அவள் கைகளை உதறிவிட்டவன் , “எனக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்றேன்ல!” கர்ஜித்தான் அவன்.
உண்மையைச் சொல்லுமாறு கீர்த்தனாவின் கெஞ்சல்களும் கதறல்களும் சாதனா பக்கம் திரும்பியது.
அன்னையிடம் உண்மைகளைச் சொல்லி உறவாட முடியாத தன் அவல நிலையைப் பற்றி அறிந்திருந்தாள் தான். எனினும், ‘மேடம்’ என்று அழைத்து அந்நியப்படுத்திய சகோதரனின் விளிப்பில் அவள் மனம் வலித்தது. சொந்தம் எனச் சொல்லிக்கொள்ள அத்தனை பேர் இருக்கும்போதும் அநாதையாக நிற்கிறோமே எனக் கூனிக்குறுகியவள் தந்த பதிலெல்லாம் மௌனம் மட்டுமே.
சுற்றி நடந்துகொண்டிருப்பதை ஜீரணிக்க இயலாத சாரதா கற்சிலையாகத் தரையில் விழுந்தார்.
உண்மைகளைச் சொல்ல முடியாத சகோதரன் சகோதரியின் தவிப்பு; கீர்த்தனாவின் பயம்; எந்த எதிர்வினையும் காட்டாத அம்மாவின் உடல்நிலை என அனைத்தையும் கருத்தில்கொண்ட காயத்ரி, நடப்பது நடக்கட்டும் என்று உண்மையைச் சொல்ல துணிந்தாள்.
“அம்மா! வாழ்க்கையில் எத்தனையோ சவால்களைத் தாண்டி, எங்களை நல்லபடியா வளர்த்திருக்க. இதைவிட பெரிய பேரதிர்வுகளை எல்லாம் எதிர்த்தும் வந்திருக்க. இப்ப நான் சொல்றத பதட்டப்படாம கேளு. கீர்த்தி சொல்றது உண்மைதான் மா!” எனப் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்து அவரைத் தோளில் சாய்த்துக்கொண்டாள்.
தோள் சாய்ந்த அன்னையின் இறுக மூடிய கண்களிலிருந்து பெருக்கெடுத்த கண்ணீர் துளிகள் காயத்ரியின் நெஞ்சைக் குத்திக் கிழித்தது.
இனி என்ன நடக்குமோ என அங்கிருந்த ஒவ்வொருவரும் பேதலித்து நிற்க,
இருகொள்ளி எறும்பென உணர்வுகளின் பிடியில் சிக்கித்தவித்த கீர்த்தனா, “சாருமா! ப்ளீஸ் தைரியமா இருங்க. எனக்கு நீங்களும் வேணும்; ரிஷியும் வேணும்.” எனக் கதறி அழுதாள்.
மருமகளின் மனப்போராட்டங்கள் நினைவு வந்தவராகச் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவர், “சாதனா என்னோட பொண்ணுன்னு அவ வந்த அன்னைக்கே கண்டுபிடிசிட்டேன் கீர்த்தி.” என உண்மைகளை உடைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கண்டேன் காரிகையை! பரிதவித்த தாய்மனம் – உயிரானவளை
கண்ணுக்குத் தென்பட்ட அடையாளங்களில் கண்டுகொண்டதா!
கண்ணுக்கு எட்டாத பரிபாஷைகளில் உணர்ந்ததா – இல்லை
கடந்தகாலம் கண்முன் விரிய விழித்துக் கொண்டதா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here