181 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
தொலைத்த பிள்ளையின் பரிதவிப்பில் இளகாத மனம்,
தலைச்சன் பிள்ளையின் போதனையிலும் குறையாத அழுத்தம்,
(தி)மருமகளின் கண்ணீரில் கரைந்த மாயம் என்னவோ?
தயவு தாட்சண்யமா; தர்ம சங்கடமா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 36…
யாரிடமிருந்து சாதனாவைப் பற்றிய உண்மைகளை மறைக்க வேண்டுமெனெப் பாடுபட்டார்களோ, அவரே இன்று அவ்வுண்மைளை அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், அதை மனத்திடத்துடனே ஏற்றுக்கொண்டும், தங்களிடமிருந்து மறைத்துவைத்தும் ஊமை நாடகம் ஆடியிருக்கிறாரே என்ற வியப்பு ஒவ்வொருவரின் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.
அதிரிச்சியிலிருந்து மீளாதவர்களாக நால்வரும் உறைந்து நிற்க, கணவனை விட்டுக்கொடுக்க முடியாத அன்னையின் தர்மசங்கடத்தை உணர்ந்த சாதனா,
“அப்பா என்னை மகளா ஏத்துக்காததுக்கு நீங்க என்னம்மா செய்ய முடியும். விட்டுத்தள்ளுங்க மா.” பெருந்தன்மையுடன் கூறி அன்னையின் மடியில் தலைசாய்த்தாள்.
உரிமையோடு மடிசாய்ந்த பிள்ளையின் ஸ்பரிஸத்தை உளமார பருக வேண்டிய தாயோ அவளைத் தள்ளிவிடாத குறையாக விலகி அமர்ந்தார்.
“என் புருஷனைப் பத்தி உனக்கு என்ன தெரியும்?” கோபத்தில் அவர் கண்கள் சிவந்தன.
சொந்தம் என எண்ணி இவர்களை நம்பி ஏமாறுவதே வாழ்க்கையின் நியதியாகிப் போனதே என நொந்துகொண்ட சாதனாவின் கோபமும் எல்லையைக் கடந்தது.
“பெண் குழந்தையை வளக்குற அளவுக்கு வக்கில்லன்னு உங்க புருஷன் கைப்பட எழுதித் தந்திருக்காரு. இதுக்குமேல என் ‘சோ கால்ட் அப்பா!’ பத்தி நான் வேறென்ன தெரிஞ்சக்கணும்னு எதிர்பாக்குறீங்க?” ஆக்ரோஷமாக உறுமினாள்.
“சாதனா!!!” விக்ரம் குரல்கொடுக்க,
“என்னை ஏன் அதட்டுறீங்க விக்ரம். நம்பிக்கைத் துரோகம் செஞ்ச புருஷனுக்குச் சப்பைக் கட்டும் உங்க மாமியாருக்கு அவங்க புருஷனோட லட்சணத்தை எடுத்துச்சொல்லுங்க.” என மேலும் எகிறியவளுக்கு அங்கு நிற்கவே அருவருப்பாய் இருந்தது.
விறுவிறுவென படுக்கை அறைக்குள் வேக நடையிட்டவள் தன் உடைமைகளை மூட்டைக்கட்டினாள்.
தந்தை செய்த நம்பிக்கை துரோகத்தைப் பற்றி அன்னை அறிந்திருக்கு வாய்ப்பில்லை என யூகித்த காயத்ரி, சாரதாவுக்குப் பொறுமையாக எடுத்துரைக்க, அவரோ ஆவேசமாய் தன் அறைக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டது தான் மிச்சம்.
அன்னையின் மனநிலை பற்றி அஞ்சிய நால்வரும் அறைக் கதவைத் தட்டி கூச்சலிட, தனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்ற ரீதியில் ஒரு கையில் குழந்தையையும், மறுகையில் தோள்பையையும் ஏந்திக்கொண்டு வெளியேற ஆயத்தமானாள் சாதனா.
அன்னையின் செயலில் துயில் கலைந்து வீரிட்டு அழுத பச்சிளம் குழந்தையின் சப்தம் காதுகளைத் துளைக்க, சகோதரி செய்யவிருக்கும் காரியத்தைக் கண்டு திடுக்கிட்டான் ரிஷிகுமார்.
“அவசரப்படாதே சாதனா! அம்மாகிட்ட நான் எடுத்துச்சொல்லறேன்.” கெஞ்சினான்.
“இத்தனை நாளா சொல்லாததை இப்போ சொல்லப்போறீயா?” என்றவளின் ஏளனப் பார்வையும் எள்ளல் தொனியும் அவனைக் கொல்லாமல் கொன்றது.
அம்மாவின் இறுதி மூச்சுவரை உண்மைகளைச் சொல்லக்கூடாது என்று தான் அவனும் நினைத்திருந்தான். ஆனால் எல்லாம் கைமீறி போன நிலையில், நிதர்சனங்களை ஏற்று மறப்போம் மன்னிப்போம் என அன்னையும் சகோதரியும் புரிதலுடன் வாழ மாட்டார்களா என நப்பாசை மேலோங்கியது.
“அம்மாக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும் சாதனா…” சகோதரிக்கு எப்படிப் புரியவைப்பது என அவன் வார்த்தைகளைத் தேட,
“ஆமாம் சாதனா. நீயே கொஞ்சம் யோசிச்சுப் பாரு. நீ இங்க வந்த நாளிலிருந்து, சாருமா உன்கிட்ட எவ்வளவு பாசமா பழகிட்டு இருக்காங்க.” ஒத்தூதினாள் கீர்த்தனா.
சாதனாவால் அதை மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் தன்னை நிர்க்கதியாக விட்டுச்சென்ற தந்தைக்குச் சப்பைக்கட்டும் அன்னையின் கூற்றையும் ஏற்க முடியவில்லை.
வாசலை நோக்கி நடந்தாள் அவள். காலில் விழாத குறையாக வழியை மறித்தாள் கீர்த்தனா.
கீர்த்தனாவின் கெஞ்சலிலும் கதறலிலும் ரிஷிகுமாரின் கோபம் பூதாகரமானது. மனைவியின் தோள்களை இறுக பிடித்தவன், “உன் வீணாப்போன பயத்துக்காக எல்லாருடைய மன நிம்மதியையும் வேரோட பிடுங்கி சாய்ச்சிட்டீயே. உனக்குத் திருப்தி தானே ரித்தி!“ வெறுப்பை உமிழ்ந்தான்.
பெற்றவர்களின் வாக்குவாதத்தைக் கண்ட குழந்தைகள் மிரண்டு நடுங்கினர்.
“உங்களுக்குச் சுத்தமா அறிவே இல்ல!” முணுமுணுத்த காயத்ரி, யாதவன் யாழினிக்குச் சமாதானம் சொல்லி, வேறு வழித் தெரியாமல் படுக்கை அறையில் அமரவைத்து, அவர்கள் கவனத்தைத் தொலைக்காட்சியில் திசைதிருப்பினாள்.
சாரதாவின் அறைக்கதவைத் தட்டி ஓயாமல் ஒப்பாரி வைத்து ஓய்ந்த கீர்த்தனா, “எல்லாரும் நல்லா இருக்கணும்னு தானே பாடுபடுறேன். ஏன் என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேன்றீங்க.” எனப் புலம்பிக்கொண்டே கதவருகில் சரிந்தாள்.
அத்தனை பேரின் கூக்குரலில் இளகாத அந்தத் தாய்மனம் மருமகளின் கதறலில் இளகியது.
மாமியாரின் கழுத்தில் தலைசாய்த்தவள், “யாருக்காக வருஷாவருஷம் பட்டிணி கிடந்து தவிச்சீங்களோ, அவளே உங்க கண்ணு முன்னாடி நிக்குறா. இப்போ போய் அடம்பிடிக்குறீங்களே. நடந்து முடிஞ்சதை எல்லாம் மறந்துட்டு சாதனாகிட்ட அன்பா பேசிப்பழகுங்க சாருமா.” என்றாள் ஆதங்கம் பொங்க.
‘பாசத்திற்காக ஏங்கும் பிள்ளையாச்சே இவள்!’ சிந்தித்தவாறு குளமான கண்களுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தவர், சாதனா அருகில் நடந்தார். அவள் எதிர்ப்பையும் மீறி குழந்தையைத் தூக்கிக்கொண்டு மார்போடு அணைத்துக்கொண்டவர்,
“அப்பா உன் விஷயத்தில் தப்பு செஞ்சிருக்காரு தான். ஆனால் நீ பழி சுமத்துற அளவுக்கு மோசமானவர் இல்ல.
உன்னை எந்தச் சூழ்நிலையில் தொலைச்சோம்னு தெரிஞ்சுண்டு அதுக்கு அப்புறம் இந்த வீட்டை விட்டுப் போ. நான் உன்னைத் தடுக்கமாட்டேன்.” பதிபக்தி தெறிக்கப் பேசினார்.
அப்போதும் சாதனா கற்சிலையாக நின்றாள்.
சாதனா கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்த பயணப்பையை அவளிடமிருந்து பிடுங்காத குறையாக வாங்கி, அவளை உள்ளே இழுத்து சோஃபாவில் அமரச்செய்து வாசற்கதவைத் தாளிட்டான் விக்ரம்.
“நடந்தது என்னன்னு யாருக்கும் முழுசா தெரியாதது தான் அத்தனை குழப்பத்திற்கும் காரணம் அத்தை. உங்களுக்குத் தெரிஞ்ச விஷயங்களைச் சொல்லுங்க. அப்போதான் இந்தப் புதிருக்கு விடை கிடைக்கும்.” அழுத்தமாய் கூறினான்.
‘நியாயப்படுத்தக் கூடிய தவறையா செஞ்சிருக்காங்க!’ அப்போதும் சாதனாவின் முகத்தில் வெறுப்பு கசிந்தது.
மாப்பிள்ளை தந்த தைரியத்தில் நிமிர்ந்து நடந்தவர், கோப்பு ஒன்றை எடுத்துவந்து, அதிலிருந்து ஒரு நாட்குறிப்பேட்டை காயத்ரியின் கைகளில் திணித்து,
“ஃபெப்ரவர் 12ஆம் தேதியில் உன் அப்பா என்ன எழுதியிருக்காருன்னு எல்லாருக்கும் கேக்குற மாதிரி உரக்கப் படி.” கட்டளையிட்டார்.
முன்னட்டையில் இருந்த வருடமே அது தந்தை இறந்த வருடம் என்பதை நினைவூட்ட, அந்தப் பக்கத்தை திருப்பியவளின் சிந்தனையில் ஆயிரம் கேள்விகள் மின்னி மறைந்தது. பெருமூச்சுடன் தன்னைத் தானே சமன்படுத்திக் கொண்டவளாய் படிக்க ஆரம்பித்தாள்.
“சாரு! உன் முகம் பார்த்துப் பேச தைரியமில்லாமத்தான் இந்த விஷயத்தை எழுத முடிவு செஞ்சிருக்கேன்.
நமக்கு பிறந்த ரெட்டை குழந்தைகளில் பெண் குழந்தை இறந்துட்டான்றது உண்மைதான். ஆனால் உன்கிட்ட சொன்ன மாதிரி அவ இறந்தே பிறக்கல.
குறைப்பிரசவம்ன்றதுனால ரெண்டு குழந்தைகளையும் இன்குபேடர்ல தான் வச்சிருந்தாங்க. அத்தனை வசதிகள் செஞ்சும் நம்ம பொண்ணு மட்டும் மூச்சு விட ரொம்பக் கஷ்டப்பட, அவளுக்கு மேற்கொண்டு பரிசோதனை செய்யணும்னு சொல்லி டாக்டர் என் ஒப்புதல் கையெழுத்துக் கேட்டாங்க.
வென்டிலேடர் பாக்ஸ்குள்ள குழந்தை இழுத்து இழுத்து மூச்சு விடுறதும், உடம்பு முழுக்க டூயூபும், ஊசியுமா பார்க்கவே எனக்கு ரொம்பச் சங்கடமா இருந்துது.
இது மரபணு கோளாறுனால் ஏற்பட்ட நோய்னும், பெத்தவங்க நம்ம ரெண்டு பேரோட ஜீன்லேந்துதான் வந்திருக்குன்னும் ஏதேதோ மருத்துவ விளக்கங்கள் தந்து, குழந்தை சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோயால் அவதிப்படுறான்னு சொன்னாங்க.
மருத்துவ ரீதியா தீர்வே இல்லாத நோயில் அவதிப்படும் நம்ம குழந்தை மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு மாசம்தான் உயிரோட இருப்பான்னு சொல்லி, என் தலையில் இடியைத் தூக்கிப்போட்டாங்க.
குழந்தை பறிக்கொடுக்கப்போறேன்ற வேதனை ஒரு பக்கம் இருக்க, இந்த விஷயத்தை உன்கிட்ட எப்படிச் சொல்லப்போறேன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். என் பயத்துக்குத் தீனி போடுறா மாதிரி மயக்கம் தெளிஞ்ச உனக்கு ஜன்னி ஜுரம் வந்து, இரத்த அழுத்தம் எகிறின்னு உன்னை மீட்டெடுக்க போதும் போதும்னு ஆச்சு.
இந்த நிலைமையில் குழந்தைக்கு வந்திருக்கும் நோய் பற்றி உன்கிட்ட சொல்லவேண்டாம்னு டாக்டர் எச்சரிக்க, ஒரு மாசத்துக்கு அப்புறம் மட்டும் இந்தப் பிரிவை நீ எப்படித் தாங்குவன்னு யோசிச்சேன்.
துக்கம் சோகமெல்லாம் இந்த ஹாஸ்பிடலோட போகட்டும்னு யோசிச்சு, குழந்தை இறந்தே பிறந்துடுத்துன்னு பொய் சொல்லிடலாம்னு அவங்கிட்ட கேட்டேன். அவங்க முடியாதுன்னு தான் சொன்னாங்க.
ஆனால் குழந்தைக்கு பரிசோதனை செஞ்ச மருத்துவர் தான், மேலிடத்தில் என் சார்பில் பேசி என் திட்டத்தைச் செயல்படுத்த உதவி செஞ்சாங்க.
வென்டிலேடர் எடுத்துடவா, இல்ல குழந்தை விதிபடி இறக்கட்டுமான்னு என்னை கேட்டாங்க. அந்த நொடி நான் பட்டப்பாடு எனக்கு மட்டும்தான் தெரியும் சாரு. என் குழந்தையை நானே கழுத்தை நெறிச்சு கொல்லுறா மாதிரி மரணவலிய அனுபவிச்சேன்.
குழந்தை பிரேதத்ததைப் பரிசோதனை செஞ்சு, இந்த நோய் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய என் ஒப்புதல் வாக்குமூலம் கேட்டாங்க. நம்ம குழந்தையால இந்தச் சமூகத்துக்கு ஒரு நல்லது நடக்கப்போகுதுன்னு எண்ணத்துல தான் சம்மதம் சொன்னேன்.
அவளுக்குன்னு கட்டின பணத்தையும் திரும்பித் தந்துட்டாங்க. அதை வேற எந்த விஷயத்துக்கும் செலவு செய்ய எனக்குத் துளியும் இஷ்டமில்ல. ஆனால் வரவுக்கும் செலவுக்கும் இழுத்துப் பிடிக்கும் நம்ம நிலைமையில் அதை வேண்டாம்னு மறுக்கவும் முடியல. அதான் அதை காயத்ரி ஸ்கூல் ஃபீஸ் கட்ட செலவழிச்சேன்.
குழந்தை இறந்த பிறகு தகவல் சொல்லச் சொல்லி, வேறொரு குழந்தையைக் காட்டி குழந்தை இறந்தே பிறந்ததா சொல்லி உன்னை நம்ப வச்சு, வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தேன்.
வீட்டுக்கு வந்த ஒரே வாரத்துல உனக்கு வலிப்பு வந்து உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தேனே நினைவிருக்கா? உன் மனவுளைச்சல் தான் இதுக்கெல்லாம் காரணம்ன்னு சொன்ன டாக்டர், நீ இதுலேந்து மீண்டு வரலேன்னா உயிர் பிழைக்குறதே கஷ்டம்ன்னு சொல்லிட்டாரு.
மூச்சுப் பேச்சு இல்லாத நீ ஒரு பக்கம்; தாய்ப்பால் கிடைக்காம தவிக்குற கைக்குழந்தை ரிஷி. சுத்தி என்ன நடக்குறதுன்னு புரியாத பயத்துல காயத்ரின்னு என் வாழ்க்கையே சூனியமானா மாதிரி இருந்துது. எப்படியோ முட்டிமோதி ரெண்டு வாரத்துல உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தா, உனக்குப் பிரசவம் பார்த்த மருத்துவமனையிலிருந்து ஒரு லெட்டர் வந்து, அதை நீதான் போஸ்ட் பாக்ஸ்லேந்து எடுத்த.
கவர்ல அந்த ஹாஸ்பிடல் பேர பார்த்ததுக்கே நீ அந்த இடத்துலேயே மயங்கி விழுந்துட்ட. அதுல இருக்குற விஷயம் மட்டும் உன் கண்ணுக்குப் பட்டுச்சுன்னா, நீ உயிரோடவே இருக்கமாட்டேன்னு புரிஞ்சுகிட்டேன்.
மருத்துவ செலவுகளுக்கு ஆபிஸுல ரீம்பர்ஸ்மென்ட் வாங்க கேட்டிருந்த படிவங்கள்ன்னு உன்கிட்ட பொய் சொல்லி சமாளிச்சு அந்த கவரை பிரிக்காமலேயே எரிச்சுட்டேன்.
ஆனால் மறுபடியும் இந்த மாதிரி ஏதாவது லெட்டர் இல்லேன்னா ஃபோன் வந்து, உனக்கு உண்மை தெரிய நேர்ந்தால், உன் உயிருக்கே ஆபத்தாகிடுமோன்னு பயமா இருந்துது. அந்தப் பயத்துல தான் எனக்கு திடீர்ன்னு ட்ரான்ஸ்ஃபர் ஆயிடுத்துன்னு பொய் சொல்லி, உன்னையும் நம்ம குழந்தைகளையும் இரவோட இரவா என் அக்கா வீட்டுக்கு அனுப்பினேன் மா.
உன்னை ஏமாத்தணும்ன்ற நோக்கமில்ல சாரு. எங்க உன்னை ஒரேடியா இழந்துடுவேனோன்ற பயத்துல தான் மறைச்சேன். நன்மைக்குச் சொல்லுற பொய்கள் தப்பே இல்லன்னு நீயும் தானே சொல்லுவ.
இந்த விஷயம் என்னோடவே புதைஞ்சு போயிடட்டும்ன்னு நெனச்சுதான் இத்தனை வருஷம் சொல்லாம இருந்தேன். ஆனால் நான் அனுபவிச்சிட்டு இருக்கும் இந்த மரண பயம், நான் எவ்வளவு பெரிய குற்றத்தைச் செஞ்சிருக்கேன்னு என் கன்னத்தில் அடிக்காத குறையா புரியவச்சிருக்கு.
ஆமாம் சாரு. முப்பத்து அஞ்சு வயசுல செத்துப்போகறதுக்கே எனக்கு இவ்வளவு பயமா இருக்குன்னா…..மரண பயத்துல என்னை தனியா விட்டுப்போகாதன்னு உன் கையைப் பிடிச்சு கெஞ்சி அழறேன்னா….அப்போ நம்மள மட்டுமே நம்பி வந்த குழந்தையும் அப்பா அம்மா எங்கேன்னு இப்படித்தானே தேடியிருப்பா.
ஆயிரம் காரணம் சொல்லி நான் செஞ்சதை நியாயப்படுத்தினாலும், அம்மாவையும் குழந்தையையும் பிரிச்சுவச்ச எனக்கு மன்னிப்பே கிடாயாது சாரு. அதான் கடவுள் எனக்கு இப்படியொரு தண்டனை கொடுத்து, என்னை உங்ககிட்டேந்து பிரிக்கப் போறார் போல.
இது மன்னிப்புக்கேட்டு சரிசெய்யக் கூடிய விஷயமில்லன்னு எனக்குத் தெரியும். உன்கிட்ட உண்மைகளைச் சொன்ன திருப்தியில் நிம்மதியா இறப்பேன்னு தோணித்து.
அன்னைக்கு உன் உடல்நலம் பற்றிய பயத்துல குழந்தை இறந்த நாள் தேதி கூடத் தெரிஞ்சுக்காம, ஹாஸ்பிடல்லேந்து வந்த கவரை எரிச்சுட்டேன். அதனால் குழந்தை இறந்த நாள் நேரம் எதுவுமே எனக்குத் தெரியாது.
இந்த டைரியோட குழந்தைக்கு வாங்கின பர்த் சர்டிஃபிகேட், அவள் உடம்பில் இருக்கும் அடையாளங்கள், ஆராய்ச்சிக்குச் சம்மதம்னு நான் எழுதிக்கொடுத்த ஒப்புதல் பத்திரம் எல்லாம் இருக்கு.
சூழ்நிலை கைதியா தான் இத்தனை தவறுகளை செஞ்சிருக்கேன் சாரு. தயவு செய்து என்னை வெறுத்துடாத மா.”
பசுமரத்தாணி நினைவுகளாய் தேக்கிவைத்த குடும்ப ரகசியங்களை காயத்ரி படித்து முடிக்க, அனைவரின் மனமும் பாரமாகிப்போனது….சாதனாவைத் தவிர!
மரணத்தருவாயில் மனைவியிடம் உண்மைகளைச் சொல்லத் துணிந்து தந்தையும் சரி; உண்மைகளை அறிந்த அன்னையும் சரி; தன்னைப் பற்றி அறிய எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்ற ஆதங்கம் மேலோங்கியது அவளுக்கு.
கணவனின் அகால மரணத்திற்குப் பின், குடும்பப் பொறுப்புகள் மொத்தமும் தன் தலையில் விழ, வரவுக்கும் செலவுக்கும் இழுத்துப் பிடித்து, இரண்டு குழந்தைகளைக் கரை சேர்ப்பதே பெரும் சவாலாக இருந்த அன்றைய சூழ்நிலையில், சாதனாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் கூட அவருக்குத் தோன்றவில்லை என்பது உண்மைதான்.
என்ன காரணம் சொல்லியும் தன் தவறை நியாயப்படுத்த முடியாது என அறிந்தவர் மகளின் குற்றச்சாட்டை அமைதியாக ஏற்றுக்கொண்டார்.
மறப்போம் மன்னிப்போம் எனக் கடந்து போகக் கூடிய காயம் இல்லையே என உணர்ந்த மற்றவர்களும் யாருக்கு ஆறுதல் சொல்வது எனப் புரியாமல் குழம்பி நின்றனர்.
பெருகி வரும் சாதனாவின் மனக்கசப்புகளை அறுக்க விழைந்தான் விக்ரம். சிலையாக அமர்ந்திருந்தவளின் வலது கரத்தை ஆதுரமாய் வருடிக்கொடுத்தவன்,
“அத்தையும் மாமாவும் உனக்குச் செஞ்சது மன்னிக்க முடியாத குற்றம்தான் சாதனா. ஆனால் அவங்க உன்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிருந்தாங்கன்னா, நீயில்லாத உன்னுடைய சந்தோஷ் வாழ்க்கை என்னவாகியிருக்கும்ன்னு யோசிச்சுப் பாருமா.” அவள் வழியிலேயே பேசி, நடந்தது யாவும், யாவருக்கும் நன்மையே என வலியுறுத்தினான்.
கண்ட நாள் முதல் கொண்ட காதல் அல்லவா அவள் சந்தோஷ் மேல் கொண்டிருந்த நேசமானது. விக்ரமின் வார்த்தைகளில் பேதையின் கண்களில் தாரை தாரையாக் கண்ணீர் ஊற்றெடுத்தது.
“எனக்கு என் சந்தோஷஷைப் பார்க்கணும். எனக்கு என் சந்தோஷைப் பார்க்கணும்.” சிறுபிள்ளையென விக்கித்து அழும் அவளை என்ன சொல்லித் தேற்றுவது எனப் புரியாமல் தவித்தனர் அங்கிருந்த அனைவரும்.
குழந்தையும் தெய்வமும் ஒன்று என உணர்த்துவது போல, பசியில் வாடிய அவள் செல்லப்பிள்ளை சிணுங்கினான். வேறு வழியில்லாமல் குழந்தையை மகளிடம் நீட்டினார் சாரதா.
சந்தோஷை உறித்து வைத்திருந்த குழந்தையின் முகத்தில் ஆறுதல் அடைந்தவள், அமைதியாக அறைக்குள் நகரவே செய்தாள். அதைக் கண்டவர்களின் மனங்களும் நிம்மதியில் நிறைந்தது.
“எல்லாம் சரி ‘ம்மா. ஹாஸ்பிடல்லேந்து வந்த லெட்டர நீயும் அப்பாவும் பிரிச்சே பார்க்கலையே. அப்போ சாதனா உயிரோட இருக்கான்னு எப்படிக் கண்டுபிடிச்ச?” விட்ட இடத்திலிருந்து தொடங்கினாள் காயத்ரி.
‘அதானே!’ மூவரின் முகமும் ஆச்சரியத்தில் விரிய, உள்ளே சென்ற சாதனாவின் செவிகளும் சாரதாவின் விளக்கத்தைக் கேட்க கூர்மையாய் வளைந்தன.
“மன்னிச்சிருங்க மாப்பிள்ளை.” பீடிகையுடன் தொடங்கியவர், “ஜோசியர் சொன்ன பரிகாரத்தை அலட்சியமா விட மனசுக்கு ஒப்பல்ல. அதான் பரிகாரத்தை நானே செய்யலாமேன்னு….” மொத்தத்தையும் சொல்லலாமா வேண்டாமா என மென்று விழுங்க,
“ஜோசியரா? என்ன பரிகாரம் விக்கிப்பா?” படபடத்தாள் காயத்ரி.
மாமியார் என்ன செய்திருப்பார் என்ற அதிருப்தியில் சலிப்பாகத் தலையசைத்த விக்ரம், “அதையும் உன் அம்மாகிட்டயே கேளு!” மனைவியிடம் சிடுசிடுத்தான்.
சென்னையில் ஜோசியரைச் சந்தித்தது, அவர் குறிப்பிட்ட கர்ம வினையும் பரிகாரமும், அதைக் கேட்டு தனக்கு வந்த மாரடைப்பு, விக்ரம் தடை விதித்தது என அனைத்தையும் ஒபித்த சாரதா,
“நீங்க எல்லாரும் டெல்லிக்குப் போயிருந்த சமயம் குழந்தை இறந்த நாள், நேரமெல்லாம் விசாரிக்க எனக்குப் பிரசவமான ஹாஸ்பிடலுக்குப் போனேன்.” என்றதும், டெல்லி பயணத்தின் நினைவு வந்தவர்களாக விக்ரமும் ரிஷியும் விழி வழியே பேசிக்கொண்டனர்.
இத்தனை வருடங்களுக்குப் பின் துல்லியமான ஆதாரங்களுடன் விசாரிக்க வந்திருப்பவருக்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என அஞ்சிய ஊழியர்கள் தலைமை அதிகாரியிடம் புகார் வாசிக்க, அதுவே தனக்குச் சாதகமானது என்ற சாரதா அங்கு நடந்த அனைத்தையும் விவரித்தார்.
அது அவர்கள் தலைமுறை தலைமுறையாகக் கட்டிக்காத்து வந்த பரம்பரை மருத்துவமனை என்றும், தன்னை சந்திக்க வந்த தலைமை அதிகாரிதான் தனக்கு அந்த நாளில் பிரசவம் பார்த்தவர் எனவும் சாரதா கூற, நால்வரும் பிரமித்து நின்றனர்.
வந்திருப்பது குழந்தையின் அன்னை என உறுதி செய்துகொண்ட மருத்துவரின் பயம் கோபமாக மாறியது எனத் தலைகுனிந்தவர், குழந்தை உயிரோடு இருப்பதைப் பற்றி அவர்கள் அனுப்பிய கடிதங்களுக்கும் விடுத்த அழைப்புகளுக்கும் பதிலளிக்காத தன் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டி வார்த்தைகளால் வதைத்தார்கள் எனக் கூறி கண்கலங்கினார்.
காயத்ரி அன்னையின் தோளினை ஆதுரமாய் வருட, அறையிலிருந்த கேட்டுக்கொண்டிருந்த சாதனாவின் மனத்திலும் கரிசனம் துளிர்விட்டது.
அன்னை தனக்காக எத்தனை பிரயத்தனப்பட்டு இருக்கிறாள் என உணர்ந்தவளின் மனம், கடந்த நாலைந்து மாதங்களாகக் கண்மூடித்தனமான அன்பை மட்டுமே பொழிந்த சாரதாவின் அக்கறையையும் நினைவுகூர்ந்தது. பசி தீர்ந்து மென்சிரிப்பை பரிசாய் தந்த குழந்தையின் பளிங்கு முகத்தில் தன் உயிரானவனின் சாயலைக் கண்டவளுக்கு விக்ரம் சொன்ன வார்த்தைகள் நினைவு வந்தது.
நடந்தது யாவும் நன்மைக்கே எனப் பக்குவப்பட்ட அவள் மனம், அன்னை கூறிக்கொண்டிருந்த மீதியை கேட்க விழைந்தது.
அன்று தனக்கு ஏற்பட்ட மனவுளைச்சல் பற்றியும், கணவரின் எதிர்பாராத மரணத்தைப் பற்றியும் எடுத்துச்சொல்லி மன்னிப்புக் கேட்டதில், அந்த மருத்தவரின் மனம் கனிந்ததாக உரைத்த சாரதா,
“அவங்க பார்த்த முதல் பிரசவம் என்னுடையதாம். ஒரு பேஷண்ட் கிட்ட எதைச் சொல்லணும் எதை சொல்லக்கூடாதுன்னு முன் அனுபவம் இல்லாமல், சாதனா சம்பந்தமான எல்லா தகல்வல்களையும் அப்பாகிட்ட ஒப்பிச்சிருக்காங்க.
ஆனால் அடுத்தகட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு சிஸ்டிக் ஃபப்ராஸிஸ் இல்லன்னு உறுதியாக, அவங்க எங்களுக்குத் தெரிவிக்க மெனக்கெட்டிருக்காங்க.
ஆனால் நாங்க தான் கவரைக் கூடப் பிரிச்சு பார்க்கலையே!” விரக்தியாகச் சிரித்த சாரதா,
“இதனால அவங்க கேரியருக்குப் பாதிப்பு வந்துடக்கூடாதுன்னு, குழந்தையை அநாதை ஆசிரமத்துல சேர்க்க, அவங்களுக்குச் சாதகமா கதையை மாத்தி, ஆவணங்கள் தயார் செஞ்சு, அப்பாவோட கையெழுத்தையும் உபயோகிச்சிருக்காங்க.” யாருடைய கெட்ட நேரம் எனப் பிரித்தறிய முடியாத நிலை அது எனப் பெருமூச்சுவிட்டவர்,
“குழந்தை உயிரோட இருக்குறா! அதுவே போதும்னு, கோவிலூருக்குப் போனேன். ஆனால் அங்க அப்படியொரு ஆசிரமம் இருந்ததே யாருக்கும் தெரியல. அப்படியும் விடாம தேடிட்டு இருந்தேன். ஆனால் நாட்கள் மாதங்களானதே தவிர, அவளைக் கண்டுபிடிக்கவே முடியல….” சாரதா மனமுடைந்த அதே சமயத்தில்,
வெளியே வந்த சாதனா, குழந்தையை சாரதாவின் கையில் திணித்தாள்.
சாரதா புரியாமல் விழிக்க, தன்மானம் கொண்ட பெண்மானோ, “எனக்குச் சேர வேண்டிய அன்பை எல்லாம் வட்டியும் முதலுமா என் பிள்ளைக்குத் தந்ததுனால உங்கள மன்னிச்சுட்டேன்.” முறுக்கிக்கொண்டாள்.
குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டவாறு சோஃபாவில் சரிந்த சாரதாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வெள்ளப் பெருக்கெடுத்தது.
“நீங்க ரொம்ப மோசம் சாருமா. இவ்வளவு விஷயத்தையும் மனசுக்குள்ள போட்டு புழுங்கி இருக்கீங்களே தவிர, ஒரு வார்த்தை எங்ககிட்ட சொல்லணும்னு தோணல இல்ல.” வருத்தம் பொங்க குறைப்பட்ட கீர்த்தனாவின் விழிகள் பரிதாபமாய் ரிஷிகுமாரை ஏறிட்டது.
அதிர்ச்சியிலிருந்து மீளாத அவனோ அவளைக் கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை.
ஒளிவுமறைவு இல்லாமல் உறவாட விழையும் கள்ளம் கபடமில்லாத மருமகளின் உள்ளத்தின் வலியை உணரவே செய்தார் சாரதா.
சாதனா விஷயத்தில் தன் கணவர் உணர்ச்சிவசப்பட்டதைப் பற்றி காயத்ரியும் ரிஷிகுமாரும் அறிய நேர்ந்தால், அவர்கள் இருவரும் தந்தையை மொத்தமாக வெறுத்துவிடுவார்களோ என்ற பயம் ஒரு பக்கம்; நடந்து முடிந்ததை எல்லாம் சாதனாவிடம் கூறி மன்னிப்புக் கேட்டு, வாழ்நாள் முழுக்க அவள் வெறுப்பை சம்பாதிப்பதற்குப் பதிலாக, கண்ணுக்கு எட்டும் தூரத்தில் மகள் இருக்கிறாள் என்ற மனநிறைவுடன் மீதி காலத்தைக் கழித்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் நியாயங்களை அடுக்கியவர்,
“அதுமட்டுமில்ல கீர்த்தி…ரிஷி…அது வந்து…” தயங்கியவரின் விழிகள் மகனை ஏறிட்டது. இனியும் தயங்கினால், தானே பிள்ளைகளுக்கு இடையே பாரபட்சம் பார்ப்பது போல ஆகிவிடுமே எனச் சுதாரித்துக்கொண்டவர், பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தார்.
“மகளுக்காகப் பட்டிணி கிடக்குறதையே பொறுத்துக்க மாட்டான் அவன். இதுல இறந்த மகள் உயிரோட இருக்குறான்னு தேடச் சொன்னா, அவன் ருத்திரதாண்டவம் ஆடுவான்னு பயந்துதான் எதையும் சொல்லாம இருந்தேன். நான் பயந்தா மாதிரி, நீ உண்மைகளைப் போட்டு உடைச்சதும் கண்ணுமண்ணு தெரியாம எப்படிக் கத்தினான் பாரு.” என மகனைப் பார்வையால் சுட்டெரித்தவர்,
“இப்போ சொல்லறேன் ரிஷி! நல்லா கேட்டுக்கோ. சாதனா நம்ம வீட்டுப் பொண்ணு. இங்க தான் இருப்பா.” எனத் தீவிரக்குரலில் கூறினார்.
பதிலுக்கு அனலாய்ப் பார்த்து முறைக்கும் மகன் பெரும் ரகளை செய்யப் போகிறான் என அவர் எதிர்பார்த்துக் காத்திருக்க, இருவரின் விழி மொழிகளைக் கவனித்த மற்றவர்கள் குப்பெனச் சிரித்தனர்.
சுற்றி என்ன நடக்கிறது எனப் புரியாமல் சாரதா விழிக்க,
“அம்மா! நான் உயிரோட இருக்குறேன்னு கண்டுபிடிச்சதே என் உடன்பிறப்பு தான்.” சகோதரனை தோள் சுற்றி அணைத்துக்கொண்டாள் சாதனா.
“அப்படியா ரிஷி. எப்போடா?” சாரதா வியந்து நோக்க, அப்போதும் அவன் தந்த பதிலெல்லாம் முறைப்புகள் மட்டுமே.
“ரிஷி பர்த்டே அன்னைக்கு…காஷ்மீர் போனப்ப சாருமா.” சாரதாவின் தோளினில் தலைசாய்த்த கீர்த்தனா, “இன்னும் சொல்லப்போனா, நீங்க உங்க விரதத்தைக் கைவிட்ட அன்னைக்குத் தான் நாங்க முதல் முதலா சாதனாவை சந்திச்சோம்.” என சாரதாவின் மறுபுறம் உரசிக்கொண்டிருந்த சாதனாவின் கன்னத்தைக் கிள்ளி கிளுகிளுத்தாள் கீர்த்தனா.
எத்தனை பெரிய மனஸ்தாபம் வந்த போதும், அனைத்தையும் தள்ளிவைத்து விட்டு, காதல் பொங்க பொங்க பேசிப் பூரிக்கும் மனையாளின் அன்பில் ஸ்தம்பித்த ரிஷிகுமார், “ரித்தி!” எனக் கை நீட்டியது தான் தாமதம்.
கணவனின் அந்த விளிப்பில் ஓடி வந்து கட்டியணைத்தவள், “உனக்கு என்மேலிருந்த கோபம் போயிடுத்தா.” அவனை இறுக அணைத்தாள்.
அவனும் ஆம் என்ற தலையசைப்புகளுடனும், நெற்றி முத்தங்களுடனும் தன் மன்னிப்பை யாசிக்க, மனக்கசப்புகள் தீர்ந்தது என மற்றவர்களும் மகிழ்ந்தார்கள் எனினும், காதல் மயக்கத்தில் மிதக்கும் ஜோடிகளின் அலப்பறைகளைக் கண்டும் காணாமல் கடக்க பெரும்பாடுபட்டனர்.
‘இடம் பொருள் பார்க்காமல் டூயட் பாடுவதே இவர்கள் வேலை!’ எனப் பொய்யாகச் சலித்துக்கொண்ட காயத்ரி,
“யாது!!! யாழி!!! அம்மா அப்பாவை வந்து கவனீங்க டா தங்கங்களா!” வேண்டுமென்றே உரக்கப் பேசி அவர்கள் கவனத்தை ஈர்த்தாள்.
பெற்றவர்களுக்குக் கேட்டதோ இல்லையோ; வெகுநேரமாக அறையில் அகப்பட்டிருந்த குழந்தைகள் துள்ளலாக வெளியே ஓடி வந்து சாரதாவிடம் ஏறிக்கொள்ள பரபரத்தனர்.
மார்பில் உறங்கியிருந்த குழந்தையை மடியில் விட்டுக்கொண்டவர், யாதவன் யாழினி இருவரையும் இருபக்கம் அணைத்துக்கொண்டு முத்தமிட்டு,
“சொல்லுடா ரிஷி. சாதனா உன் கூடப்பிறந்தவன்னு எப்படிக் கண்டுபிடிச்ச?” ஆர்வம் மின்ன வினவினார்.
“என்னைக் குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேக்குறது இருக்கட்டும். நீ சாதனாவை எங்க எப்போ பார்த்தன்னு சொல்லும்மா. உனக்கு ஏதாவது ஆகிடுமோன்னு உண்மையை மறைச்சு, எங்க மாம்ஸ்ஸ எவ்வளவு பாடாய்ப்படுத்திருக்கேன் தெரியுமா?” விக்ரமை ஆரத்தழுவிக்கொண்டு புலம்பினான் ரிஷிகுமார்.
“அதான் நம்ம குடும்ப சொத்தா, சாதனா கையில் ஜீரக வடிவ மச்சம் இருக்கே.” நாத்தனாரின் முரட்டுக் கையையும் யாழினியின் குட்டிக் கையையும் விரித்துக் காட்டி பெருமிதம் பொங்க புன்னகைத்தாள் கீர்த்தனா.
“ம்ஹூம்! சாதனா நம்ம வீட்டு வாசல்ல வந்து நின்னதுமே கண்டுபிடிச்சிட்டேன்” கண்சிமிட்டியவர், “மச்சத்தைப் பார்த்து உறுதி செஞ்சிட்டேன்னு வேணும்னா சொல்லலாம்.” துப்பு கொடுத்து கண்சிமிட்டினார் சாரதா.
புதிர் போட்டு விளையாடும் மாமியார் மருமகளின் செயலில் கடுப்பான ரிஷிகுமார், “ம்ப்ச்! சுத்தி வளைக்காம விஷயத்தைச் சொல்லும்மா. திருவிழாவில் தொலைச்ச குழந்தையின் வாசத்தை வச்சே கண்டுபிடிக்கும் அம்மா மாதிரி சாதனாவை பார்த்ததும் உனக்கு ஏதாவது ஃபீல் ஆச்சா?” நச்சரித்தான் ரிஷிகுமார்.
கண்ணீரும் சிரிப்புமாக மகனின் கன்னத்தை வருடிய சாரதா, “எப்படி இருந்த என் பிள்ளையை எப்படி மாத்தி வச்சிருக்கா பாரு என் மருமகள்.” என கீர்த்தனாவின் கன்னத்தைப் பொய்கோபத்துடன் கிள்ளினார்.
“நான் என்ன செஞ்சேன் சாருமா? கீர்த்தனா அப்பாவியாகக் குழைய,
“பின்ன என்னடி! பாசம்ன்னா எத்தனை கிலோன்னு கேக்குற என் புள்ள, இப்படி சென்டிமென்ட்டா யோசிக்குறான்னா அதுக்கு யாரு காரணம்?” வேடிக்கை செய்தார்.
சாதனா உட்பட எல்லோரும் சேர்ந்து ரிஷிகுமாரை ஓட்ட,
“என்னை கிண்டல் பண்ணது போதும்; நீ உன் துப்பறியும் கொசுவத்தி சுருள்ள கொளுத்து;” கண்கள் சுருக்கி மிரட்டினான்.
அசடுவழிய விக்ரமை ஏறிட்டவர், “அன்னைக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது, ஹாஸ்பிடல்ல நான் புலம்பினத எல்லாம் கேட்டு நீங்கதான் சாதனாவைத் தேடி கண்டுபிடிச்சு, உங்க ஃப்ரெண்டுன்னு பொய் சொல்லி அழைச்சிட்டு வந்திருப்பீங்கன்னு நெனச்சேன் மாப்பிள்ளை.” என்றார் இமைகள் படபடக்க.
அனைவரும் சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டு வாயைப் பொத்திக்கொள்ள, “பொய் சொல்லறேன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க அத்தை?” வியப்பு குறையாதவனாய் வினவினான் விக்ரம்.
“பின்ன என்ன மாப்பிள்ளை? இத்தனை வருஷமா பாக்குறேன். நம்ம வீட்டுல வச்சு பாத்துக்கற அளவுக்கு உங்களுக்கு இவ்வளவு நெருக்கமான ஃப்ரெண்ட்ஸ் யாருமே வந்தது இல்லையே.” சாரதா அலட்டலே இல்லாமல் கூற, கீர்த்தனாவும் சாதனாவும் வெடித்துச் சிரித்தார்கள்.
விக்ரம் வாயைப் பிளக்க, மேலும் பேசச்சொல்லி அன்னையைக் குடைந்தான் ரிஷிகுமார்.
சாதனாவைத் தன்னுடன் தங்க வைத்தது, காயத்ரியும் கணவனுடன் இணைந்து சாதனாவை அன்பாய் கவனித்துக்கொண்டது எனப் பட்டியலிட்டவர்,
அது…அது…எதேச்சையா தான் கண்ணுல பட்டுது…பிரசவமாகி ஹாஸ்பிடல்ல இருந்தப்போ சாதனா லேப்டாப் அணைக்காமலேயே தூங்கிட்டா. குழந்தை தலைமாட்டுல இருக்கேன்னு மூடப் போனேன். அதுல அவ குழந்தை பர்த் சர்டிஃபிகேட்டு சேமிச்சு வச்சிருந்த ஃபோல்டர்ல, அவளுதும் இருந்துது. மனசு கேட்காம திறந்து பார்த்துட்டேன்.” தர்மசங்கடத்துடன் சாதனாவை நோக்கினார்.
அவளோ, “சபாஷ். உருகி உருகி சேர்க்க நெனச்சதெல்லாம் என் தம்பி; பாராட்டு உங்க மாப்பிள்ளைக்கா?” பொய்கோபத்துடன் விக்ரமை நோக்கி கண்களை உருட்டினாள் சாதனா.
“ஏன் சொல்ல மாட்ட; என் காயும்மா கிட்ட கெட்டபேரு வாங்குற அளவுக்கு உன்னைக் கவனிச்சுகிட்ட எனக்கு இது தேவைதான்.” அவனும் ஏட்டிக்குப் போட்டி வம்பிழுத்தான்.
“என்ன பெருசா பார்த்துட்டீங்க; எப்பப்பாரு காயும்மா காயும்மான்னு காயத்ரி மந்திரத்தைத் தான் ஜெபிச்சீங்க. மச்சினின்னு என்னைக்காவது எனக்கு முன்னுரிமை கொடுத்திருக்கீங்களா.” விக்ரமை விடாமல் ஓட்டியவள்,
“அதுக்கே உங்க பொண்டாட்டி சக்களத்திச் சண்டைபோட வந்துட்டா?” என அக்காளின் கன்னத்தை வாஞ்சையாகக் கிள்ளினாள்.
அழகாய் அசடுவழிந்த மனையாளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்ட விக்ரம், “ஆமாம் அத்தை! உங்களுக்கு இருக்குற புத்திசாலித்தனம் ஒரு சதவீதம் கூட உங்க பொண்ணுக்கு இல்ல.” மச்சினிக்குப் பரிந்துபேசி வாய் வார்த்தையாகக் கேலி செய்தாலும், தன்னவளின் கண்மூடித்தனமான காதலில் நெகிழவே செய்தான்.
“சக்களத்திச் சண்டையா!” இது என்ன புதுக்கதை என சாரதா வியக்க,
அக்காளும் நாத்தனாரும் செய்த அலப்பறைகளை கிண்டலாக ஒப்பித்தாள் சாதனா.
“கோபம் வந்தால், இப்படியாடி கண்ணு மண்ணு தெரியாம வார்த்தைய விடுவ?” மகளைக் கண்டிகவே செய்தார் சாரதா.
“என்னை மட்டும் திட்டுற; உன் மருமகள் என் தம்பியை அடிக்க வேற செஞ்சா தெரியுமா?” காயத்ரி எகிற, தம்பியின் பழுத்தக் கரத்தை நீட்டிக் காட்டி நியாயம் கேட்டாள் சாதனா.
“அது…அது….அவ சின்ன பொண்ணு….”மருமகளை விட்டுக்கொடுக்க முடியாமல் சாரதா திணற,
மகள்களுக்கும் மருமகளுக்கும் இடையே மாட்டிக்கொண்டு திண்டாடும் சாரதாவின் சுகவேதனையை உள்ளம் நிறைய ரசித்தனர் விக்ரமும் ரிஷியும்.
நாதன் அவன் நெஞ்சத்தில் நிறைந்திருக்க,
நாட்குறிப்பில் நினைவலைகள் நிரந்தரமாக,
நேரிட்ட நெருக்கடிகள் யாவும் நீங்கியது இன்று;
நேசமும் பாசமும் நீடித்து நிலைக்குமா நாளை – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here