174 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
புயலென வீசிய பழிச்சொல் மழையில் – மனத்தில்
புகைந்த விகற்பங்கள் யாவும் பொசுங்கி மறைந்தது!
புளகாங்கித கடலில் முத்துக்குளித்த பந்தங்கள் – மருவிய
புதையல் ரத்தினங்கள் வழிகளா! வலிகளா! -மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 37…
சென்னை, இந்தியா
ஓயாமல் கைகால்களை உதைத்துக்கொண்டும், ஆ ஊ என மழலையில் பெல் அடித்துக்கொண்டும் காற்றில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த தன் அருமை மகனுக்குப் புத்தாடை அணிவிக்கிறேன் என்ற பெயரில் அவனுடன் அக்கப்போர் செய்து கொண்டிருந்தான் சந்தோஷ். கணவனையே கண்கொட்டாமல் பார்த்து ரசித்து நின்றாள் சாதனா.
பைஜாமாவை ஒரு காலில் நுழைப்பதற்குள் மறுகாலில் மாட்டியிருந்த பகுதியை உதறித்தள்ளிப் போக்குக்காட்டிக் கொண்டிருந்த மகனிடம் தோற்றுப்போய்,
“கஷ்டப்படுறேன்னு தெரியுதுல. வந்து ஹெல்ப் பண்ணா என்னவாம்?” மனைவியை உதவிக்கு அழைத்தான் சந்தோஷ்.
“குழந்தைக்கு என்ன பேரு செலக்ட் பண்ணிருக்கன்னு சொல்லு; ஹெல்ப் பண்ணறேன்.” உதட்டைச் சுழித்தாள் அவன் அன்பு மனைவி.
“இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சிடப்போகுது.” சற்று நேரத்தில் துவங்கவிருக்கும் பெயர் சூட்டு விழாவை நினைவூட்டி சொல்ல மறுத்தவன், புதல்வன் காலால் வீசி எறிந்த கால்சட்டையை மனைவியிடம் நீட்டினான்.
அவளோ வெட்டும் பார்வையால் சுட்டெரித்துவிட்டு, முக ஒப்பனை செய்துகொள்ள கண்ணாடி முன் ஐக்கியமானாள்.
“பழி வாங்குற நேரமாடி இது!” நமுட்டாகச் சிரித்தவன், “அப்பாக்காக கொஞ்சம் குவாப்ரேட் பண்ணுங்க ஜூனியர்.” என குழந்தையிடம் சரணாகதியானான்.
குழந்தையின் பெயரை சந்தோஷ் வந்துதான் தேர்ந்தெடுக்க வேண்டுமென சாதனா ஒற்றைக் காலில் நிற்க, பெயர் சூட்டு விழாவை, குடும்ப வழக்கங்களைப் பின்பற்றி; நாள் நட்சத்திரம் பார்த்து; சொந்த வீட்டில்தான் நடத்த வேண்டுமென சாரதா நிபந்தனைகளை அடுக்க, அன்னை-மகளின் விருப்பங்களுக்குத் தோதாக நாள் குறிப்பதற்குள், குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகியிருந்தது.
பிள்ளையை தங்கம், கண்ணா, ராஜா, லட்டுப்பையா, செல்லக்குட்டி, புஜ்ஜிகுட்டி என்று அவரவருக்குப் பிடித்த விதத்தில் அழைத்து சீராட்டி மகிழ்ந்த வீட்டினரும், இந்த நாளிற்காக ஆவலாகக் காத்திருந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்தான் பணி நியமனம் முடிந்து வீடு திரும்பியிருந்தான் சந்தோஷ். குழந்தையின் வளர்ச்சியை முதல் நாள் தொட்டே கணவன் கண்டு ரசித்து அகம் மகிழ வேண்டுமென்ற சாதனாவின் ஆசைகள் நிராசையான நிலையில், நேரில் வரும்வரை குழந்தையின் முகத்தைப் புகைப்படத்தில் கூடப் பார்க்கமாட்டேன் என வீம்பு பிடித்திருந்தான் அவன்.
அவனுக்காகவே, அனுதினம் குழந்தையைப் புகைப்படங்கள் எடுத்து, காணொளிகள் பதிவுசெய்து எனப் பசுமையான தருணங்களைச் சேமித்து வைத்திருந்தாள் சாதனா. அவற்றை ஒவ்வொன்றாய் காட்டி பூரித்த சாதனா, குழந்தைக்குப் பெயரைத் தேர்வு செய்யச் சொல்லி வாஞ்சையாகக் கேட்க, மனைவியின் சிணுங்கல்களுக்குத் தலையாட்டினானே தவிர மனத்திலிருந்த பெயரை வாய்விட்டுச் சொல்லத்தான் இல்லை. இதோ அதோ எனத் தட்டிக்கழித்து அவள் பொறுமையைச் சோதித்தது தான் மிச்சம்.
“ஒரு வாரம் பொறுத்துட்டு இருந்தவளுக்கு ஒருமணி நேரம் காத்துட்டிருக்க முடியல பாருடா தங்கக்குட்டி. முறுக்கிட்டுப் போகுறா!” நீல வண்ண குர்தா, க்ரீம் நிற பைஜாமாவில் ஜொலித்த புதல்வனிடம் புலம்பியவாறு அவன் நெற்றிமுட்டி உச்சிமுகிர்ந்தவன், திமிறும் மனைவியின் தோள் சுற்றி வாஞ்சையாக அணைத்துக்கொண்டு வரவேற்பறைக்கு நடந்தான்.
வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது.
ஹரி அவர் மனைவி மீரா, இரு மகள்கள்; அவர் நண்பர்கள் அரவிந்தன் அஞ்சலி தம்பதிகள்; லண்டனில் வசித்துவந்த மகன் ரங்கனின் குடும்பம் உட்பட மதுரையிலிருந்து வந்திருந்த சத்யா குடும்பத்தினர்; சாதனாவின் தோழி மஞ்சரியும் அவர்களுடன் ஆசிரமத்தில் வளர்ந்த மற்ற நண்பர்களும்; ஆசிரமத்தின் உரிமையாளர் சுகந்தி என இளையவர்களின் அன்பிற்கு இணங்கி அனைவரும் வந்திருக்க, தொடர்பிலே இல்லாத பிறந்த வீட்டு, புகுந்த வீட்டுச் சொந்தங்களையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விழாவிற்கு அழைத்திருந்தார் சாரதா.
விழாவின் நாயகனின் தரிசனத்தைக் கண்டவர்கள், அவனைச் சுற்றி வண்டாய் மொய்த்துக் கொஞ்சி மகிழ, அவர்களிடமிருந்து தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிப் போனது சந்தோஷுக்கும் சாதனாவுக்கும்.
சாரதாவும், உறவுப் பெண்கள் சிலரும் சீர் தட்டுகளை அடுக்கி, சடங்குக்குத் தேவையான பொருட்களை புரோகிதரிடம் எடுத்துத் தந்து எனப் பம்பரமாய் சுற்ற, விக்ரமும் ரிஷியும் விருந்தினர்களை உபசரித்தும் சந்தோஷை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தும் பூரித்தனர்.
கீர்த்தனாவும் காயத்ரியும் தொட்டிலை அலங்கரிப்பதில் மும்முறமாக இருக்க, இங்கும் அங்குமாக ஓடித்திரிந்து குறும்பு செய்துகொண்டிருந்த யாதவன் யாழினி, சிவா, ஆன்னாவை, ஹரியின் பதின்வயது மகள்கள் மேய்த்துக் கொண்டிருந்தனர்.
கீர்த்தனாவை குத்து விளக்குகளை ஏற்றச் சொன்ன புரோகிதர், குழந்தையின் பெற்றோர்களை மனையில் அமருமாறு அழைத்தார்.
புண்யாவஜனம் மந்திரங்களை ஜபித்து அவர்களைச் சில சடங்குகளைச் செய்யச்சொல்லி, வாழை இலையில் பரப்பி வைத்திருந்த நெல்மணியின் மேல் குழந்தையை விடச்சொன்னார்.
“நெல்லு மேலயா! குழந்தைக்குக் குத்துமே!” சந்தோஷ் குழந்தையை விட மறுக்க,
“அதெல்லாம் ஒண்ணுமாகாது மாப்பிள்ளை. தைரியமா விடுங்க.” நம்பிக்கையூட்டினார் சாரதா.
மாப்பிள்ளை என்ற அழைப்பில் வெட்கம் அப்பிக்கொண்டது சந்தோஷுக்கு. கடந்த ஒரு வாரமாக மாமியார் தரும் அன்புத்தொல்லைகளை இயல்பாகக் கடக்க நினைத்தாலும் முடியவில்லை அவனால்.
“ம்ம்…சாருமா சொல்லறாங்கல! தைரியமா விடுங்க மாப்பிள்ளை!” இடப்பக்கம் அமர்ந்திருந்த கீர்த்தனா வேண்டுமென்றே அவன் செவிகளில் கிசுகிசுத்து வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தாள்.
குழந்தையின் பின்பக்கத்தில் தன் பரந்த கரங்களை அடம்கொடுத்து, நெல்லின் மேல் பட்டும் படாமலும் அவன் விடுவதைக் கண்ட அனைவரும் கேலியும் கிண்டலுமாகச் சிரித்தனர்.
“நியாயமா வெறும் உடம்புல தான் விடணும் தெரியுமா!” முணுமுணுத்த புரோகிதர், சாரதாவிடம் குழந்தைக்குச் சூட்ட விரும்பும் குலதெய்வ பெயர், மூதாதியர் பெயர்கள் என ஒவ்வொன்றாய் கூறச் சொன்னார்.
“ஒவ்வொரு பெயரையும், அப்பா அம்மா ரெண்டு பேருமா சேர்ந்து குழந்தை காதுல மூணுமுறை ஓதுங்கோ.” என்றார்.
‘என் வம்சம்! என் வாரிசு!’ என்ற பெருமிதத்துடன் சாரதா,
குலதெய்வமான உப்பிலியப்பன் பெயரையும், மூதாதியர் பெயர்களாக, தன் மாமனார் ராமநாதன் பெயரையும், கணவர் சாயிநாதன் பெயரையும் பட்டியலிட, சாதனாவின் கண்கள் நெகிழ்ச்சியில் குளமாகின.
கடந்த ஒருமாத காலமாக விழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த சாரதா, வலியச் சென்று விட்டுப்போன சொந்த பந்தங்களுடன் உறவாட மெனக்கெட்டதே, தன்னை மகள் என ஊர் அறிய பகிரங்கமாய் அறிவிக்கத்தானே என நினைவுகூர்ந்தவளின் தொண்டை அடைத்தது.
தன்னை நிர்க்கதியாக விட்டுச்சென்றதற்காக நித்தியம் பிராயச்சித்தம் தேடி வருத்திக்கொள்ளும் அன்னையின் மேலிருந்த அன்பு பன்மடங்கானது அவளுக்கு.
உணர்ச்சிவசப்படும் மனையாளின் கரங்களில் அழுத்தம் தந்த சந்தோஷ் நிதானமாக இருக்குமாறு நினைவூட்ட,
“குழந்தைக்கு அஃபிசியலா என்ன பேரு வைக்கப் போறீங்கோ?” கேட்டு அவர்கள் கவனத்தைத் திசைதிருப்பினார் புரோகிதர்.
“அது அவன் அம்மா அப்பா விருப்பம்.” சாரதா பதிலளிக்க, மொத்த குடும்பமும் சந்தோஷை ஏறிட்டது.
பெயர் தேர்ந்தெடுக்க கணவன் மனைவி செய்த அலப்பறைகள் அத்தகையது.
குழந்தையின் செவி அருகே தலைசாய்த்த சந்தோஷ்,
“கண்ணன்! கண்ணன்! கண்ணன்!” என மூன்றுமுறை ஓதி சாதனாவுக்குக் கண்ணசைத்தான்.
கணவனின் விருப்பத்தை அறிந்துகொண்ட கிளர்ச்சியில் மனையாளும்,
“கண்ணன்! கண்ணன்! கண்ணன்!” என உளமார ஓதி புன்னகைத்தாள்.
தன் இஷ்ட தெய்வத்தின் பெயர் என உச்சிகுளிர்ந்த சாரதா, மாப்பிள்ளையை மெச்சினார்.
“இவ்வளவு அட்டப்பழசான பெயரை வைக்குறதுக்குத் தான் ஒருவாரமா பில்ட் அப் கொடுத்துட்டு இருந்தீங்களா மா…ப்…பி…ள்…ளை!” நீட்டி முழுக்கி கலாய்த்தாள் கீர்த்தனா.
“இதுக்கு என்னடி குறைச்சல்?” சாரதா அதட்ட,
“ரொம்ப எல்லாம் யோசிக்கல கீர்த்தி. ‘கண்ணா! கண்ணா!’ன்னு காயத்ரி கூப்பிடும் போது அழகா இருந்துது. அதான் அந்த பெயரையே ஃபைனலைஸ் பண்ணிட்டேன்.” எனக் கண்சிமிட்டினான் சந்தோஷ்.
அவன் சர்வசாதாரணமாக உரைத்தாலும், அவன் உள்நோக்கம் அறிந்தவள் கப்சப் ஆகவே செய்தாள்.
‘இத்தனை தூரம் யோசித்திருக்கானா!’ என சாதனா வாயைப் பிளக்க, காயத்ரியோ பூரிப்பில் பேச்சற்றுப் போனாள்.
பெயர் சூட்டும் சடங்கு முடிந்ததாக அறிவித்த புரோகிதர், சொந்த பந்தங்கள் குழந்தைக்குத் தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவித்து தொட்டிலில் விடலாம் என்றார்.
மறுகணமே சாதனா, காயத்ரியை அருகில் வருமாறு அழைக்க, அவளோ தடுமாறி நின்றாள். குழந்தையை வலுக்கட்டாயமாக அவள் கையில் திணித்த சந்தோஷ்,
“தொட்டதுக்கெல்லாம் உணரச்சிவசப்படுறதே அக்காளுக்கும் தங்கைக்கும் வாடிக்கையாகிப் போச்சு!” குழந்தையைத் திணிக்கும் சாக்கில் அவள் காதில் கிசுகிசுத்து,
“ம்ம்…என் மகனுக்கு என்ன சீர் செய்யப் போகுறீங்க மச்சினி அவர்களே?” எனக் கண்சிமிட்டினான்.
கண்ணீரும் சிரிப்புமாக அவள் விக்ரமை ஏறிட்டாள். அவன் குழந்தைக்கு வாங்கிவைத்திருந்த தங்கச் சங்கிலியையும், வெள்ளித் தண்டைகளையும் எடுத்துவர, அவற்றை குழந்தைக்கு அணிவித்து நெகிழ்ந்தாள் காயத்ரி.
ரிஷியும் கீர்த்தனாவும், குட்டிக் கண்ணனுக்குத் தங்க வளையல்களும், மோதிரங்களும் வாங்கியிருக்க, அவர்கள் அதையும் காயத்ரியிடமே தந்து போட்டுவிடச் சொன்னார்கள்.
தொப்புள் கொடியை பட்சி தாயத்தோடு சேர்த்து வெள்ளி அரைஞாண் கயிறு செய்துவைத்திருந்த சாரதா அதை மகளிடம் தந்து கட்டிவிடச்சொன்னார்.
அணிமணிகளுடன் மின்னிய அவர்கள் வீட்டுச் செல்லப்பிள்ளை, அந்த மாயக்கண்ணணாகவே காட்சியளித்தான்.
காயத்ரி குழந்தையை சாதனாவிடம் நீட்ட, அவளோ, அக்காளையே தொட்டிலில் விடச்சொல்லி கண்களை உருட்டினாள்.
‘என்ன தவம் செய்தேனோ!’ என மெய்சிலிர்த்தவளாக காயத்ரி குழந்தையை தொட்டிலில் விட்டு தாலாட்ட, அவள் இருப்பக்கங்களிலும் தோள்சாய்ந்து ஊஞ்சலாடினர் சாதனாவும் கீர்த்தனாவும்.
சில நிமிடங்களில் அவர்கள் அருகில் வந்த விருந்தினர்கள் குழந்தையை ஆசீர்வாதம் செய்து, பெண்களிடம் பரிசுகளைத் தந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.
குடும்பத்தினரின் உண்மை நிலவரம் அறிந்தவர்கள், அவர்கள் பரிமாறிக்கொள்ளும் அன்பையும் பாசத்தையும் உளமார ரசித்து வாழ்த்த, காற்று வாக்கில் அரசல் புரசலாகக் கேட்டறிந்தவர்களோ, அவரவர் பாணியில் கருத்துக்களையும் அறிவுரைகளையும் தாரளமாகப் பகிர்ந்தனர்.
‘முதல்ல என் பிள்ளைகளுக்கு திருஷ்டி சுத்திப் போடணும்.” மனத்தில் சூளுரைத்துக் கொண்ட சாரதா, அன்றிரவே தன் எண்ணைத்தை நிறைவேற்றவும் செய்தார்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நாட்கள் அதன் போக்கில் ஓட, சந்தோஷ் பணியில் சேர வேண்டிய நாளும் நெருங்கியது.
“இன்னும் ஒரே ஒருவாரம் லீவ் எக்ஸ்டென்ட் பண்ண முடியுமாடா?” கடந்த மூன்று நாட்களாக வறட்டு இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கண்ணனை, குழந்தைநல மருத்துவரிடம் காட்ட அழைத்துப்போகும் வழியில் வினவினாள் சாதனா.
“என்னைக்கா இருந்தாலும் இந்தப் பிரிவை எதிர்கொள்ளத்தான் வேணும் சனா.” நிதர்சனத்தை சந்தோஷ் எடுத்துரைக்க, பெண்ணவளின் முகம் சோகத்தில் தோய்ந்தது.
அம்மா, அக்கா, தம்பி என மனையாள் உருகுவது அவனுக்குப் பேரின்பத்தை அளித்தபோதும், தான் மட்டுமே உலகமென வாழ்ந்து வந்தவள், தன் அன்பை மற்றவர்களுடன் பகிரும்போது, சற்று பொறாமையாகவே உணர்ந்தான்.
“ம்ம்ம்.. வந்து ஒருமாசமாகப் போகுது. என் சனாவோட தனிமையில் செலவிடும் நேரத்துக்காக நான் காத்துட்டு இருக்கேன். இவ என்னடான்னா ஊருக்கு வரவே சலிச்சுக்குறாளே!” சிந்தையைக் குடைந்த எண்ணங்களை வாய்விட்டே சொல்லிவிட்டான் அவன்.
அப்போது தான் அவளுக்கும் தான் எவ்வளவு சுயநலமாக யோசிக்கிறோம் எனப் புரிந்தது.
“நீதான் எனக்கு எப்பவும் ஃப்ர்ஸ்ட் டா. குழந்தையை வளக்குறதுல இவ்வளவு சவால்கள் இருக்கும்னு நான் கனவிலும் எதிர்பார்க்கல.” அவள் சொல்லிமுடிப்பதற்குள், ஓயாமல் இருமி (Cough) அவள் கவனத்தை ஈர்த்தான் கண்ணன்.
குழந்தையின் நெஞ்சில் நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தியவள், “இவனை என்னால தனியா பாத்துக்கு முடியுமா முடியாதான்னு குழம்பிட்டு இருக்கேன் டா.” தன் எண்ணத்தை வெளிப்படுத்தினாள்.
அதற்குள் மருத்துவமனை வர, வண்டியைத் தரிப்பிடத்தில் நிறுத்தியவன், அவள் கரங்களை ஆதுரமாய் வருடிக்கொடுத்து, “என் சனா இப்படிப் பிறந்த வீட்டுச் சொந்தங்களோட ஒட்டி உறவாடுறத பார்க்க இந்த சந்தோஷுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாவே இருக்குது. அதுல எந்தவித சந்தேகமும் இல்ல. அதே சமயத்துல ‘என் சனா; எனக்கு மட்டும்தான்னு’ பொறாமையும் அப்பப்போ எட்டிப்பார்க்குது.” எனக் கண்சிமிட்டியவன், “கண்டதையும் நெனச்சு கவலைப்படாத. முதல்ல டாக்டர் பார்த்துட்டு வரலாம். வந்து உனக்கொரு தீர்வு சொல்லறேன்.” என்றான்.
சீதோஷ்ண மாற்றங்களால் ஏற்பட்ட சாதாரண இருமல் என அறிவித்த மருத்துவர், வீட்டில் கடைபிடித்து வரும் கைவைத்தியத்தையே தொடர்ந்து செய்துவந்தால் போதுமெனக் கூறினார். அதில் சட்டென தன் அன்னையின் முகம் மின்னி மறைய சாதனாவின் மனக்கவலை அதிகரித்தது தான் மிச்சம்.
சிந்தனையில் கரைந்தவளாக அவள் வண்டியில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
“கண்ணன், சென்னையில் விக்ரம் காயத்ரி கிட்ட வளரறுதல எனக்கொரு பிரச்சனையும் இல்ல சனா.” மெல்ல பேச்சுக்கொடுத்தான் சந்தோஷ்.
‘இன்னும் எத்தனை நாட்களுக்குத் தன் விருப்பங்களைப் பூட்டிவைத்து தியாகம் செய்யப்போகிறான்!’ என மனத்திற்குள் பதறியவள், அவனை அருகிலிருக்கும் பூங்காவிற்கு வண்டியைத் திருப்பச் சொன்னாள்.
பனிக்காற்று குழந்தைக்கு ஒவ்வாது எனக் கூறியவனை பார்வையால் சுட்டெரித்தவள், அமைதியாக கண்ணனுக்கு குரங்கு குல்லா, ஸ்வெட்டர், க்ளொவ்ஸ் எனக் கவசங்களை அணிவிக்க, அவள் பிடிவாத குணம் அறிந்தவன், வண்டியைப் பூங்காவுக்கே செலுத்தினான்.
“போதும் சந்தோஷ்! எனக்காக யோசிச்சு யோசிச்சு உன் விருப்பங்களை மனசுக்குள்ள புதைச்சு வச்சுக்கிட்டது எல்லாம் போதும்டா.” பூங்காவின் நீண்ட இருக்கையில் அமர்ந்த மறுநொடி வெடித்திருந்தாள் அவள்.
‘என்ன நடந்துவிட்டது என இவள் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாள்!’ எனக் குழம்பியவன் வினவ,
‘எதுவுமே தெரியாதது போல நடிப்பதே இவனுக்கு வாடிக்கையாகிப் போச்சு.’ எனக் குமுறியவள்,
“கண்ணன் நம்ம குழந்தை. நான் யாருக்கும் தத்துக்கொடுக்க மாட்டேன்.” நரம்புகள் புடைக்க கொந்தளித்தாள்.
தான் சொன்னதை தவறான அர்த்தம் கொண்டிருக்கிறாள் என மென்னகையுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டு தன் புதல்வனை அவளிடமிருந்து பெற்றுக்கொண்டவன்,
“ஹேய் மக்குப் பொண்டாட்டி. நான் எப்போ என் கண்ணனைத் தத்துக்கொடுக்கப் போறேன்னு சொன்னேன். விக்ரம் காயத்ரி கிட்ட வளரட்டும்ன்னு தானே சொன்னேன்.” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தினான்.
அவள் புரியாத பார்வை பார்க்க, குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு போர்வை சுற்றி அடைகாத்தவன் தன் எண்ணத்தை விவரித்தான்.
மகப்பேறு விடுப்பு முடியும் வரை அவளும் குழந்தையும் தன்னுடன் டெல்லிக்கு வந்து இருக்கட்டும் என்றவன்,
“உன் மெடெர்னிடி லீவ் முடியறதுக்குள்ள, நீ உன் ரிப்போர்டிங்க் லொகேஷன் சென்னைக்கு மாத்திக்குற வழியைப் பாரு; நானும் எப்படியாவது சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்க முயற்சி செய்யறேன். உடனே நடக்குறது கஷ்டம்தான். ஆனால் அதுவரைக்கும் நான் முடிஞ்ச போதெல்லாம் இங்க வந்து உங்கள பாத்துக்கறேன்.” தொலைநோக்கு பார்வையுடன் பேசினான்.
சாத்தியமான திட்டம் என்ற போதும், சற்று முன்தானே தன்னை பிரிந்திருப்பது மனத்திற்குப் பாரமாக உள்ளதெனப் புலம்பினான் என நினைவுகூர்ந்தவள்,
“மெடர்னிடி லீவ் வரைக்கும் நீ சொன்ன திட்டம் ஓகே. அதுக்கப்புறம் குழந்தையை சென்னையில் விடுறது கூட ஓகே. ஆனால் நான் டெல்லியில் இருந்தபடி தான் வேலை செய்யப்போகுறேன். தனியார் விமானம் இயக்குறதுக்குப் பதிலா, ரிஷி மாதிரி உள்ளூர் விமானங்கள், அதுவும் டெல்லி-சென்னை ரூட் மட்டும் கொடுக்கச் சொல்லி ரெக்வஸ்ட் பண்ணப்போறேன். என் சூழ்நிலை புரிஞ்சுகிட்டு அவங்க கண்டிபா எனக்குச் சாதகமான முடிவைத் தான் தருவாங்க.” பெருமிதம் பொங்க உரைத்தவள்,
“அதனால, என் புருஷன் என் குழந்தை ரெண்டு பேரையும் தவிக்கவிடாம பார்த்துப்பேன்.” கணவனின் தோளில் சாய்ந்துகொண்டு, குழந்தையின் உச்சி முகர்ந்தாள்.
இருவரின் பணி இயல்பையும் கருத்தில் கொண்டவனுக்கு, அவள் சொல்வதும் சரியெனப்பட, அப்படியே செய்துவிடலாம் என்று சம்மதித்து,
“சரி வா! நேரமாச்சு. கிளம்பலாம்.” என்றான்.
“கொஞ்ச நேரம் இங்க உட்கார்ந்து பேசிட்டுப் போகலாம் டா!” என அவனை வழிமறித்தவள், “இனிமேலாவது என்கிட்ட உன் விருப்பங்களை வெளிப்படையா சொல்லுவேன்னு சத்தியம் பண்ணு சந்தோஷ்.” எனக் கரம் நீட்டி காத்திருந்தாள்.
‘குழந்தை விஷயத்தில் எத்தனை பெரிய தவறைச் செய்யத் துணிந்தேன்!’ என எண்ணி எண்ணி குமுறியவளுக்கு, இன்று எல்லாம் சரியானப்போதும் திக்திக் என்றிருந்தது. அந்தப் பதற்றமே இன்று வார்த்தைகளாக வெளிவந்தது.
“குழந்தை விஷயம் உட்பட நீ எனக்கு எந்தக் குறையும் வச்சதே இல்ல சனா. நண்பர்கள்னாலும், புருஷன் பொண்டாட்டினாலும், குட்டி குட்டி கருத்து வேறுபாடுகள் வருவது சகஜம் தான் மா.” பதிலுரைத்துவன் புறப்படலாம் என அவள் கரம் பிடிக்க,
அவளோ அவனைத் வலிய இழுத்து தன்னருகில் அமர்த்திக்கொண்டாள்.
“என்ன எதிர்பார்ப்போட என்னை கல்யாணம் செஞ்சிட்ட சந்தோஷ்; வேற ஏதாவது உன் மனசு நோகுமாறு நடந்திருக்கேனா?” கசந்த குரலில் வினவினாள்.
“எந்த எதிர்பார்ப்பும் இல்லம்மா…” அவன் தொடங்கும்போதே பாவை அவனை அனல்பார்வையில் வீழ்த்தினாள்.
சொல்லும் வரை விடமாட்டாள் என அவள் சுபாவம் அறிந்திருந்தவன், “சரி! சரி! சொல்லறேன். ஒரு டசன் குழந்தைகளோட உன்னோட குடும்பம் நடத்தணும்னு ஆசையா இருந்துது; முதலுக்கே மோசம்ன்ற மாதிரி அம்மணி பக்கத்துலேயே வரவிடாம தடை விதிச்சுட்டீங்க.” ஏமாற்றமாகிப்போன எதிர்பார்ப்புகளை சற்று வேடிக்கையாகவே மொழிந்து நமுட்டாகப் புன்னகைத்தான்.
“மன்னிச்சிரு டா. இனி உனக்கொரு நல்ல மனைவியா இருப்பேன்.” அவள் கண்கலங்கிப் போக,
“ஹேய் லூசு. என் சனா எப்பவுமே எனக்கு ஒரு சூப்பர் பொண்டாட்டியா தான் இருந்திருக்கா. இப்போ கொஞ்ச நாளாத்தான் தொட்டதுக்கு எல்லாம் கண்ணைக் கசக்கும் க்ரை பேபியா மாறியிருக்கா.” என அவளைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டவன்,
“பரவாயில்ல. டெல்லிக்கு அழைச்சிட்டுப் போய் வைத்தியம் பார்த்துடுவோம்!” அவள் காதோரம் காதலாய் இசைத்தான்.
நாணமும் கோபமுமாய் தன்னவனின் நெற்றி முட்டியவளின் மனமும் அவன் அன்பில் நிறைந்தது.
பிறந்த வீட்டின் பாசத்தில் மதிமயங்கியும்,
பிள்ளை வளர்ப்பின் பொறுப்புகளில் விழிப்பிதுங்கியும்,
பிரிந்தும் பிரியாமல் உறவாட விழையும்,
பிரியமானவளின் பரிதவிப்புகள் மறைந்ததா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்…


Please Comment Here