366 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
எபிலாக்
பிரதிபலன் பாராமல் பாசம் பொழிந்த சொந்தங்கள்,
பிரிந்தே இணைந்திருப்போம்; பிரியம் குறையாமல்!
பிரபஞ்சத்தின் இலக்கண வழியில் பிணைந்து வாழ,
பிரிவில் வாடியது பிள்ளைகளா; பெரியவர்களா – மறுமொழியும்
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள் அத்தியாயம் 39…
ஏழு வருடங்களுக்குப் பிறகு…
சென்னை, இந்தியா
வெகுநாட்களுக்குப் பிறகு அனைவரையும் ஒரே நாளில் நேரில் சந்திக்கவிருக்கும் கிளர்ச்சியில் காயத்ரி பம்பரமாய் சமையல் செய்துகொண்டிருந்தாள். அடுப்பில் ஒரு கண்ணும், கடிகாரத்தில் ஒரு கண்ணுமாக இஞ்சிப்புளிக்கான விழுதை அரைத்துமுடித்தவளின் கவனத்தை ஈர்த்தது அவள் அலைபேசி.
பள்ளிக்கூடத்திலிருந்து வந்திருக்கும் அழைப்பு எனக் கண்டவளின் முகம் யோசனையில் தோய்ந்தது.
“காயத்ரி ஸ்பீகிங்க்!” அவள் அறிமுகம் செய்துகொண்டதுதான் தாமதம்.
“உங்க மகன் அதிகப்பிரசங்கியா பேசினதோடு மட்டுமில்லாமல், மத்த பிள்ளைகளை பொய் சொல்லவும் தூண்டியிருக்கான். நீங்க உடனே கிளம்பி வாங்க.” பொருமிய ஆசிரியர், என்ன ஏதுயென காயத்ரி விசாரிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்திருந்தார்.
வம்பை விலைக்கு வாங்குவதே இவனுக்கு வழக்கமாகிப் போய்விட்டது எனப் பெருமூச்சுவிட்ட காயத்ரி,
“அம்மா! உன் பேரன் ஏதோ சேட்டை செஞ்சிருக்கான்.இந்த இஞ்சிப்புளியைக் கிளறி இறக்கிவச்சிடு. நான் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன்.” அன்னைக்குக் குரல் கொடுத்தபடி கார் சாவியை எடுத்தாள்.
சாரதா விழுதைச் சுவைபார்க்க, அன்னையின் உள்நோக்கத்தை நொடியில் கண்டுகொண்டாள் காயத்ரி.
“கிளறுர வேலையை மட்டும் பாரு.” கண்களை உருட்டிக்கொண்டே வெல்லம் டப்பாவை அலமாரியின் மேல்தட்டுக்கு மாற்றினாள்.
மகளின் அவநம்பிக்கையில் கழுத்தை நொடித்தவர் பாத்திரத்தை அவள் கையிலேயே திணிக்க, பதிலுக்கு முறுக்கிக்கொண்ட காயத்ரி,
“கீர்த்தி!!!! இங்க வாடி!” குரல் கொடுத்தாள்.
மின்னல் வேகத்தில் ஆஜரானவளிடம் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய தகவலைப் பகிர்ந்து இஞ்சிப்புளி விழுதை கைமாற்றினாள்.
அவளோ, “அண்ணி! பள்ளிக்கூடத்துல உங்க செல்லப்பிள்ளையோட சேர்ந்து போக்கிரித்தனம் பண்ணது உங்க ஆன மருமாள்தான். எனக்கும் இப்போதான் ஃபோன் வந்துது.” நமுட்டாகச் சிரித்து,
“சாருமா! அண்ணி சொல்றத கேளுங்க. என் புருஷனே ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறைதான் வீட்டுக்கு வரான். அவன் விரும்பிச் சாப்பிடுற இஞ்சிப்புளியில் வெல்லத்தை அள்ளிக்கொட்டி பழிவாங்கிடாதீங்க.” குறும்பு செய்து, சலுகையாக மாமியாரின் கன்னத்தில் முத்தமிட்டு தாஜா செய்ய,
“சரி! சரி! வாயாடி.” சாரதாவின் வீராப்பு எல்லாம் இருக்குமிடம் தெரியாமல் மறைந்தது.
பெண்கள் இருவரும் பள்ளிக்கூடத்தை நோக்கி மகிழுந்தில் பறக்க, கீர்த்தனாவின் அலைபேசி அலறியது. அழைப்பது சாதனா எனக் கண்டறிந்தவளின் முகம் மகழ்ச்சியில் மலர்ந்தது.
தன் பணிநியமனத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், மாலையில் வரவேண்டியிருந்தவள் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே வீட்டில் இருப்பேன் எனத் தகவல் கூறியதும், கால்மணி நேரத்தில் வந்து அழைத்துக்கொள்வதாக் கூறி சாதனாவை விமான நிலையத்திலேயே காத்திருக்குமாறு அன்புக்கட்டளையிட்டாள் கீர்த்தனா.
விமானிகளின் சீருடையில் மிடுக்காக நடந்து வரும் சாதனவைக் கண்ட மறுகணமே அவள் வரும் திசையில் ஓடிச்சென்று கட்டியணைத்தாள் கீர்த்தனா. மென்சிரிப்புடன் பின்னே நடந்து வந்த காயத்ரி, தங்கையின் கன்னத்தை வருடி நலன்விசாரிக்க,
“பிளேன் ஓட்டுற எனக்கு வீட்டுக்கு வர வழித்தெரியாதா. உலகத்திலேயே பைலடை ரிசீவ் பண்ண ஏர்போர்ட் வந்த பாசப்பேர்வழிகள் நீங்க ரெண்டுபேரா தான் இருக்க முடியும்.” பொய்யாகச் சலித்துக்கொண்டாள் சாதனா.
“நாம வீட்டுக்குப் போனால் தானே!” காயத்ரி குறும்பாய் கண்சிமிட்ட,
“என்னைக்கோ ஒருநாள் தான் நாமளே சந்திச்சுக்குறோம். அது பொறுக்கல இந்த வாண்டுகளுக்கு.” பெருமூச்சுவிட்ட கீர்த்தனா, விரைவு செய்திகள் என்ற ரீதியில், கடந்த இரண்டு மாதங்களாக நடந்த அனைத்தையும் சின்ன நாத்தனாரிடம் ஒப்பித்து முடிக்கவும், காயத்ரி மகிழுந்தைப் பள்ளிக்கூட வளாகத்தில் நிறுத்தவும் சரியாக இருந்தது.
எரிமலையாக வெடிக்க காத்திருந்தார் நடன ஆசிரியர்.
உல்லாசப் பயணமென ஒன்றுக்கு மூன்று பெண்கள் வந்து எதிரில் நிற்கவும், அதுவும் சாதனாவை விமானிகள் சீருடையில் கண்டதும் மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்த வண்ணம் அவர்களை ஏற இறக்க அளந்தார்.
“சன்மா!!!! நீ எப்போ வந்த?” கண்ணனும் யாழினியும் அவள் இடுப்பைச் சுற்றி கட்டியணைத்து ஊஞ்சலாடினர்.
“டீச்சர் கோபப்படும் அளவுக்கு என்ன சேட்டை செஞ்சீங்க தங்கங்களா? யாதவன் எங்க?” அவள் வினவ,
யாழினி கீச்சுக்குரலில் புகார் வாசிக்க, ஆசிரியர் அருகில் இருப்பதையும் பொருட்படுத்தாமல், மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த யாதவனை அழைத்துவர விரைந்தோடினான் மூன்றாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த அவள் செல்லப்பிள்ளை.
“இரட்டை வாலு!” தலையைச் சிலுப்பிக்கொண்ட ஆசிரியர், “இதுல மிஸர்ஸ் காயத்ரி விக்ரம்?” என புருவங்களை உயர்த்தினார்.
“நான்தான்.” காயத்ரி அறிமுகம் செய்துகொண்டதும்,
மாதக் கடைசியில் நடக்கவிருக்கும் நிதி திரட்டும் நிகழ்வில் பங்கேற்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்களை அழைத்துவர ஏதுவாக, ஆளுக்கு இரண்டு நுழைவுச்சீட்டுகளை இலவசமாகத் தர பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருப்பதாக விவரித்து,
“எல்லாரும் அமைதியா கொடுத்த ரெண்டு டிக்கெட் வாங்கிட்டுப் போகும்போது, உங்க மகன் மட்டும் நாலு டிக்கெட் கேட்டான். தரமுடியாதுன்னு மறுத்தப்போ, மாயக்கண்ணனுக்கு ரெண்டு அம்மா அப்பா இருக்குறா மாதிரியே எனக்கும் ரெண்டு அம்மா ரெண்டு அப்பா இருக்காங்கன்னு பொய் சொல்லி அடம்பிடிச்சான்.” குற்றம்சாட்டினார்.
விக்ரமுடன் சேர்ந்து பொழுதுக்கும் கண்ணன் திருவிளையாடல்கள் கேலிச்சித்திரம் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்தவன், தன்னையே அந்த கண்ணனின் மறுபிறப்பு எனப் பாவித்ததின் விளைவு என அசைபோட்ட காயத்ரி உதடு பிரிக்காமல் புன்னகைக்க, ஆசிரியர் மேலும் பேசினார்.
“கண்டிச்சதும் அமைதியா போயிட்டானேன்னு நெனச்சா அவன் க்ளாஸ்மேட் யாழினியைக் கூட்டிட்டு வந்தான். ஆளுக்கு ரெண்டு டிக்கெட் கணக்குன்னா, யாழினி யாதவன் ரெண்டு பேருக்கும் தனித்தனியா ரெண்டு டிக்கெட் கொடுத்திருக்கணுமேன்னு எதிர்த்துப் பேசி, யாழினியை உசுப்பேத்திவிட்டு, எக்ஸ்ட்ரா டிக்கெட் கேட்டுன்னு இத்தனை பித்தலாட்டம் செஞ்சிருக்கான். ஹீ இஸ் செட்டிங்க ய பேட் எக்ஸாம்ப்ல்.” என்றவர்,
“இதுல மிஸர்ஸ் கீர்த்தனா ரிஷிகுமார்…” மூக்குக்கண்ணாடியைச் சரிசெய்துகொள்ள,
தன்னை அறிமுகம் செய்துகொண்டாள் கீர்த்தனா.
“உங்க பொண்ணு நேரடியா தப்பு பண்ணல. ஆனால் கண்ணன் கொடுக்குற தைரியத்துல பொய் சொல்லி சேட்டை பண்ணுறா. முதல்முறையினால வார்னிங்கோட விடறேன். பிரின்ஸிபால் காதுக்குப் போனால், அவங்க உங்க பிள்ளைகளை சஸ்பென்ட் பண்ணவும் யோசிக்க மாட்டாங்க. பொய்சொல்லக் கூடாதுன்னு வீட்டுல கத்துக்கொடுங்க.” என்றார் கறாராக.
பணிவடக்கத்துடன் மன்னிப்புக் கேட்க வேண்டிய இடத்தில் சாதனாவும் கீர்த்தனாவும் தங்கள் பிள்ளைகளின் புத்திசாதுரியத்தை எண்ணி வெடித்துச் சிரிக்க, அந்த ஆசிரியரின் முகம் கோபத்தில் சிவந்தது.
“ஷு! அடக்கிவாசிங்க டி!” முட்டிக்கொண்டுவந்த சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்ட காயத்ரி, “வந்தது வந்துட்டோம். பிரின்ஸிபாள்ள பார்த்துப் பேசிட்டே கிளம்புறோம்.” கூறிக்கொண்டே தலைமை ஆசிரியர் அறையை நோக்கி நடந்தாள்.
“நில்லுங்க. முன்னறிவிப்பு இல்லாமல் மேடம சந்திக்க முடியாது.” நடன ஆசிரியர் தடுப்பதற்குள், தலைமை ஆசிரியரின் அறைக்குள் நுழைந்து விட்டனர் அம்மூவரும்.
“அட என்ன பேரதிசயம்! முப்பெரும் தேவியரும் ஒரே நேரத்தில் தரிசனம் தரீங்களே?” தலைமை ஆசிரியர் ரம்யா அவர்களை இன்முகத்துடன் வரவேற்க, அந்த நடன ஆசிரியருக்குத் தலையே சுற்றியது.
ஏதோ மேலிடத்தின் சிபாரிசில் சேர்ந்த பிள்ளைகளோ எனக் கையைப் பிசைந்தவர், தான் சமீபத்தில் தான் பணியில் சேர்ந்திருக்கிறேன் என்றும், தன் வேலைக்கு உலை வைக்க வேண்டாமென்றும் மன்றாட, ரம்யா அவரைப் புதிராகப் பார்த்தார்.
நடந்த விஷயங்களை ரம்யாவுக்கு விவரித்த காயத்ரி, “அவங்க மேல தப்பில்ல ரம்யா. கண்ணனைப் பத்தின முழு விவரங்கள் தெரிஞ்சியிருந்தா அவங்க இப்படி ஓவர் ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டாங்க.” என்றாள்.
“பேரன்ட்ஸ் ஃபோன் நம்பர் எடுக்கறதுல காட்டின ஆர்வத்தை அவங்க குழந்தைக்கு என்ன உறவுமுறை வேணும்னு தெரிஞ்சுக்குறதுல காட்டியிருந்தீங்கன்னா இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசியிருக்க மாட்டீங்க மேடம்.” நடன ஆசிரியரை கண்டித்த ரம்யா, அவருக்கு குழந்தைகளின் சுயவிவரங்கள் அடங்கிய கோப்பை மடிக்கணினியில் திறந்து காட்ட,
“கண்ணனுக்கு நீங்க கார்டியனா காயத்ரி மேடம்.” வாயைப் பிளந்தவர், “அப்போ அவனோட அம்மா அப்பா?” கசந்த குரலில் வினவினார்.
“இதோ நிக்குறாளே. இவதான் அவனைப் பத்து மாசம் சுமந்தவள்.” சாதனாவைத் தன் பக்கம் இழுத்துக்கொண்ட காயத்ரி, தான் அவனுடைய பெரியம்மா என்றும், கீர்த்தனா அவன் அத்தை என்றும் அறிமுகம் செய்துவைத்தாள்.
பெற்றவர்கள் இருக்கும் நிலையில் அவர்கள் ஏன் பள்ளி விவகாரங்களில் தலையிடவில்லை என்ற கேள்வி அந்த ஆசிரியரின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
விமானத் துறையில் பணியாற்றிவரும் சாதனா சந்தோஷின் பணி இயல்பை விவரித்த ரம்யா, பெற்றவர்களின் பணிநியமனங்களைப் பொருத்து, கண்ணன் தன் பள்ளிப்படிப்பை டெல்லியிலும், சென்னையிலும் மாறிமாறி பயிலும் சிறப்புச் சலுகை பெற்றிருப்பதாகவும், சென்னை பள்ளி சார்ந்த அனைத்து விவகாரங்களையும் லீகல் கார்டியனாக அவன் பெரியம்மா பெரியப்பா பார்த்துக்கொள்வதாகவும் கூறி,
இனி மேலிடத்தில் தெரியப்படுத்தாமல் பெற்றவர்களைத் தொடர்புகொள்ளக் கூடாது என எச்சரித்து அனுப்பினார்.
இன்பதிர்ச்சி தந்திருக்கும் தேவியருக்குப் பருக தேநீரும் சிற்றுண்டிகளையும் வரவைத்தவர்,
“நீ நேருல வந்ததும் நல்லதா போச்சு சாதனா. இந்த வருஷமும் டபுள் பிரோமஷன் தர அளவுக்கு கண்ணன் எல்லா பாடங்களிலும் அசத்திட்டான். குழந்தைக்கு ப்ரெஷரா இருக்குமா; இல்ல அவன் சமாளிப்பானான்னு நீதான் முடிவு செய்யணும். அதான் உன்னோட கலந்துபேசி முடிவெடுக்கலாம்னு இருந்தேன்.” என்றார்.
ஏற்கனவே இரண்டு முறை டபுள் பிரோமஷன் பெற்று, ஏழு வயதிலேயே மூன்றாம் வகுப்பில், யாதவன் யாழினியுடன் இணைந்து படித்துக்கொண்டிருக்கிறான் என யோசித்த காயத்ரி,
“அவன் சிரமமில்லாம படிச்சாலும் தன்னையும் அறியாமல் குழந்தை தன் பிள்ளைப் பருவத்தைத் தொலைக்குறானோன்னு எனக்கு கவலையா இருக்கு ரம்யா.” தன் ஆதங்கத்தைக் கூற,
“அவனுக்கு டபுள் ப்ரோமஷன் கொடுக்காத ரம்யா. அவன் பக்கத்துல இருந்தால் தான் என் பொண்ணு பெயருக்காவது புக்கை திறந்து வச்சுக்குறா.” சலித்துக்கொண்டாள் கீர்த்தனா.
ரம்யாவின் விழிகள் சாதனாவை ஏறிட, “அதான் ஒண்ணுத்துக்கு ரெண்டு ஸ்ட்ராங்க் ரெகமெண்டேஷன் வந்துடுத்தே. இதுல நான் என்ன சொல்ல.” குறும்பாகக் கண்சிமிட்டினாள் அவள்.
ஒரு சில நிமிடங்கள் அளவளாவியவர்கள் விடைப்பெற,
“இன்னைக்கு ஒரு நாள் குழந்தைகளைச் சீக்கிரம் அழைச்சிட்டுப் போகலாமா ரம்யா.” வாஞ்சையாகக் கேட்டாள் சாதனா.
குடும்பத்திற்கும் லட்சியத்திற்கும் இடையே தவிக்கும் சாதனாவின் மனப்போராட்டங்களை அறிந்திருந்த ரம்யா,
“தாரளமா அழைச்சிட்டுப் போ!ஆனால் எந்தச் சாக்கும் சொல்லாமல் மூணு பேரும் இதே மாதிரி ஒண்ணா சேர்ந்து விழாவுக்கு வரணும்.” செல்லமாக நினைவூட்ட,
“என் சாருமாக்கு டிக்கெட் தந்தால் தான் நான் வருவேன்.” முகத்தைச் சுருக்கினாள் கீர்த்தனா.
வளர்ந்தும் பிள்ளைகளுக்கு இணங்க அடம்பிடிக்கும் அவள் செயலை ரசித்த ரம்யா, “உன் சாருமாக்கு என்ன. அக்கம் பக்கம் இருக்குறவங்களையும் அழைச்சிட்டு வா.” என ஐம்பதுக்கும் மேற்பட்ட நுழைவுச்சீட்டுகள் அடங்கிய புத்தகத்தை நீட்டி, அது சுகந்தி அவர்கள் பெங்களூரில் நிறுவனம் செய்துவரும் காப்பகத்திற்கு நிதி திரட்ட பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி என்றும் விவரிக்க,
“யூ ஆர் க்ரேட் ரம்யா.” ஆழ்மனத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்தாள் சாதனா.
ரிஷி, விக்ரம், சந்தோஷ் என ஒருவர் பின் ஒருவராக ஆண்களும் வர வீடே களைக்கட்டியது. நிலாச்சோறு சாப்பிட வேண்டுமென பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அடம்பிடிக்க, தடபுடலான விருந்து சாப்பாடு மாடி ஏறியது.
ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிட்டுக்கொண்டும், மற்றவர் தட்டிலிருந்து உரிமையோடு பிடுங்கிகொண்டும் எனச் செல்லச்சண்டைகளுக்கு இடையே உணவை புசிக்கும் குடும்பத்தினரின் பாசத்தில் நெக்குருகி நின்றார் சாரதா.
சாதனா கணவனிடம் கண்ணன் புராணம் பாடி பெருமிதம் கொள்ள,
“கண்ணனாவது குழந்தை. இவளும் அவனுக்குப் போட்டியா டிக்கெட் கேட்டிருக்கா பாரு. அங்க நிக்குறா என் பொண்டாட்டி.” மனையாளின் குறும்பை மெச்சிய ரிஷிகுமார் அவள் வாயில் மெது வடையைத் திணித்தான்.
“நான் இப்படித்தான் ரிஷி. எனக்கு மனசுல பட்டத பேசித்தான் பழக்கம்.” வடையை உள்வாயில் அடக்கிக்கொண்டு, உப்பிய கன்னங்களுடன் இன்னும் குழந்தையாகவே சிணுங்கினாள்.
மற்றவர்களும் ரிஷியுடன் சேர்ந்து கீர்த்தனாவை ஓட்ட, சலிக்காமல் சண்டடையிட்டுப் படபடத்தாள் அவள்.
“பிடிவாதக்காரி!” காயத்ரி அவள் கன்னத்தில் செல்லமாக இடிக்க,
‘அவளின் இந்தப் பிடிவாதம் தானே காயத்ரியின் மனவுறுதியை அசைத்து, ஆளுக்கொரு திசையென வாழ்ந்து வந்த என் பிள்ளைகளை என்னருகே நிரந்தரமாக கொண்டு சேர்த்தது!’ எனச் சிந்தனையில் கரைந்தார் சாரதா.
அவரவர் வாழ்க்கை என்றான அடுத்த வருடமே, மதுரை பணி ஒப்பந்தம் முடிந்து விக்ரமும் காயத்ரியும் நிரந்தரமாக சென்னையில் குடியேறி இருந்தனர். குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தியாகும் வரை வேலையில் சேரப்போவதில்லை என்ற தெளிந்த தீர்மானித்திற்கு வந்திருந்த சாதனா, சந்தோஷின் பணிநியமனங்களுக்கு ஏற்ப டெல்லியிலும் சென்னையிலும் மாறிமாறி இருக்கத் தீர்மானித்தாள். அதனால் சாரதாவின் டெல்லி வாசமும் வெகுஅளவில் குறைந்திருந்தது. குட்டிக்கண்ணணோடான சாதனாவின் சென்னை பயணங்களும் மெல்ல மெல்ல அதிகரித்தது.
குழந்தையுடன் முழுநேரம் செலவழிக்க தீர்மானித்த தங்கையின் முடிவில் திருப்தி கொண்ட காயத்ரி, அவள் அவ்வாறு வந்து போவதைத் தடுக்கவில்லை.
கிட்டத்தட்ட அதே சமயம் ரிஷிகுமாரின் கவுஹாத்தி பணிநியமனமும் ஒரு முடிவுக்கு வந்திருந்தது. சுய லட்சியங்களை விட குடும்பத்துடன் செலவழிக்கும் நேரமே பிரதானமென கருதிய ரிஷிகுமார், மறுபடியும் லண்டன் செல்ல விரும்பவில்லை. முன்பு பணியாற்றிய இந்திய நிறுவனத்திலேயே தன் பணிகளைத் தொடர்ந்தான்.
தன் சாருமா சென்னையில் வசிக்க, தாங்கள் மட்டும் ஏன் வெளியூருக்குச் செல்லவேண்டுமென அக்கப்போர் செய்தாள் கீர்த்தனா.
நாள் கணக்கில் பயணங்கள் மேற்கொள்ளும் ரிஷியின் பணிக்கு ஈடுக்கட்டி தன்னால் எந்த ஊரிலும் தனியாக சமாளிக்க இயலாது என்ற அவள் பிடிவாதம் காயத்ரியின் கண்டிபுகள் முன் செல்லாக்காசானது.
இரட்டையர்களின் தொடக்கப் பள்ளி நேரத்திற்கு இணங்க தனக்குத் தோதான பகுதி நேர வேலையில் சேர்ந்தவள், தன் சாருமா உட்பட யாரையும் வாய்விட்டு உதவிக்கு அழைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அதனால் காயத்ரியும் அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று.
யாதவன் யாழினி நிரந்தர சென்னை வாசிகள் என ஓரளவுக்குத் தீர்மானமான நிலையில், கண்ணன் பள்ளியில் சேர வேண்டிய காலமும் வந்தது. அடுத்த பதவி உயர்வுக்கான வரிசையில் காத்துக்கொண்டிருந்த சந்தோஷ், பணியிடமாற்றம் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெருக்கடியில் இருந்தான்.
லட்சியக் கனவா குழந்தையா என சாதனா மறுபடியும் ஊசலாட, குழந்தை டெல்லியிலும் சென்னையிலும் இருந்தபடி படிப்பதற்கான முயற்சிகளை எடுத்தான் சந்தோஷ்.
இந்திய விமானப் படையின் விங்க் கமாண்டாராகப் பணியாற்றி வந்தவனின் கம்பீரமான சேவையை மெச்சிய பள்ளி நிர்வாகங்கள், குழந்தையால் சமாளிக்க முடியும் பட்சத்தில், கண்ணன் அங்கும் இங்குமாய் இருந்து படிக்கலாம் என அவனுக்குச் சிறப்பு சலுகை அளித்தனர்.
சந்தோஷ் உள்ளூரில் பணியாற்றி வரும்போது டெல்லியிலும், மாதக்கணக்கில் பணி நியமனங்கள் மேற்கொள்ளும்போது சென்னையிலும் வசித்துப் படிப்பது எனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. கண்டதும் ஒன்றிப் பழகிவிடும் கண்ணனுக்கு, அது ஒரு சவாலாகவே இல்லை. போதாக்குறைக்கு வெவ்வெறு மொழிகள், கலாச்சாரங்கள் எனக் கற்றவனின் அறிவாற்றலும் புத்திகூர்மையும் பன்மடங்காக, இருமுறை டபுள் பிரமோஷன் பெறும் அளவிற்குக் கெட்டிக்காரனாகவே வளர்ந்தான்.
கீர்த்தனாவைப் போல, சாதனாவும் குழந்தை விஷயத்தில் அனைத்தையும் சுயமாகக் கவனித்துக்கொண்டதால் காயத்ரியால் சந்தோஷ் செய்த ஏற்பாட்டை எதிர்க்கமுடியவில்லை.
ஆனால் பொழுதுக்கும் காயும்மா விக்கிப்பா எனக் காலைச் சுற்றி வந்த மூன்று பிள்ளைகளின் கண்மூடித்தனமான அன்பில்தான் தோற்றுப்போனாள்.
லட்சியங்களைப் புறம்தள்ளிய பெண்களின் நிலை காயத்ரியின் கொள்கையை அசைத்தது. ஒரே வீட்டிலிருந்தும், பிள்ளைகளோடு ஒட்டிப்பழகியும், பெண்களுக்கு ஒத்தாசையாக இல்லாமல், நான் மட்டும் அலுவலகம் பதவி உயர்வு எனச் சுயநலமாக வாழ்கிறேனே என்ற குற்றவுணர்ச்சி மேலோங்கியது.
சாதனாவை பணியில் சேருமாறு வலியுறுத்தியும், கீர்த்தனாவை முழுநேர பணியில் சேரச்சொல்லியும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் தானும் உதவுவதாக முன்வந்து கூறினாள்.
செய்துவரும் வேலையே போதுமென கீர்த்தனா தீர்மானமாகச் சொல்ல, அக்காளின் உதவியை மனமுவந்து ஏற்றாள் சாதனா. அதன் விளைவே சென்னை பள்ளியில் காயத்ரியும் விக்ரமும், கண்ணனுக்கு கார்டியன் பொறுப்பை ஏற்றது.
“அம்மாஆஆஆ!!!!” காயத்ரியும்,
“சாருமாஆஆஆ!!!!” கீர்த்தனாவும்
ஒலிப்பெருக்கியை முழுங்கியவர்கள் போல ஒருசேர கூப்பாடு போட, தூக்கிவாரிப்போட்டு நிஜத்திற்கு வந்த சாரதா, மகன் கையில் வைத்திருந்த இஞ்சிப்புளி பாட்டிலைக் கண்டதும் திருதிருவென முழித்தார்.
“என்னம்மா நீ! அக்கா அவ்வளவு சொல்லியும் வெல்லத்தை இப்படிக் கொட்டி வச்சிருக்க.” ரிஷி முகம் சுருக்க,
“அதுக்கில்லடா! எல்லாரும் ரொம்ப நாள் கழிச்சு சந்திக்குறீங்க. காரம் உறவுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க…அதான்….” மூடநம்பிக்கையில் ஊறிப் போனவராய் தவித்து நின்றார்.
“சரி விடுடா. அத்தைக்கு ஏதோ சென்டிமென்ட்.” ஆபத்பாந்தவனாக குறுக்கிட்ட விக்ரம், அவர்கள் ஊருக்குப் புறப்படுவதற்கு முன் மச்சானுக்குப் பிடித்த மாதிரி இஞ்சிப்புள்ளி செய்துதரச் சொல்லி மனையாளுக்கு உத்தரவிட்டு சமரசம் செய்துவைத்தான்.
அவனுடைய காயத்ரி மந்திரமும் பாசமலரும் முறுக்கிக்கொள்ள, பெரியவர்களின் சம்பாஷணைகளைக் கேட்டுக்கொண்டிருந்த கண்ணன்,
“சன்ப்பா. என்னை ஊருக்கு அழைச்சிட்டுப் போகத்தான் வந்திருக்கீயா?” கவலை தோய்ந்த குரலில் வினவினான்.
“ஏன் டா கண்ணா? உனக்கு அப்பாவோட டெல்லிக்கு வந்திருக்க பிடிக்கலையா?” தன் லட்சியங்களுக்காக குழந்தையை இங்கும் அங்குமாக அலைக்கழிக்கிறேன் என்ற குற்றவுணர்வு சந்தோஷைப் பிய்த்துத் தின்றது.
மடமடவென தந்தையின் மடியில் ஏறிக்கொண்ட கண்ணன், “அதெல்லாம் இல்லப்பா. எனக்கு உன்னோட டெல்லி வர ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனால் யாதவன் யாழினி இல்லாம போர் அடிக்குது. அவங்களயும் கூட்டிட்டுப் போகலாமா?” சந்தோஷின் தோள்சுற்றி அணைத்து செல்லம் கொஞ்சினான்.
குழந்தைக்கு என்ன பதில்சொல்வது எனப் புரியாமல் சந்தோஷ் முழிக்க,
“குழந்தை எவ்வளவு ஏங்குறான் பாரு சாதனா? அவனுக்காகவாவது இன்னொரு குழந்தை பெத்துக்கலாம்ல?” ஆதங்கம் பொங்க கேட்டாள் கீர்த்தனா.
“அவன் மேல அவ்வளவு அக்கறை இருந்தால் நீ பெத்துத் தர வேண்டியதுதானே.” சட்டென்று சாதனா சிடுசிடுக்க,
“சனா! என்ன இது?” அதட்டினான் சந்தோஷ்.
ம்ப்ச்…அவன் அத்தை பசங்களத்தானே மிஸ் பண்ணறான். அதைத்தான் சொன்னேன்.” குறும்பாகக் கண்சிமிட்டி கீர்த்தனாவைச் சீண்டினாள்.
கிண்டல் பேச்சுகளுக்கு எல்லாம் அசருபவளா அவள்!
“அதுக்கு உன் தம்பி ஒத்துழைக்கணுமே! நாமிருவர் நமக்கிருவர்ன்னு பழுத்த கிழவன் மாதிரி வியாக்கியானம் செய்யறான்.” கணவனின் கன்னத்தில் காதலாய் இடித்தாள் கீர்த்தனா.
“அடியேய்! ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிச்ச என் தம்பியைப் பத்தி என்ன சொல்லற?” சாதனா சண்டைக்கு வர,
“அது ஏதோ உங்க வம்சத்துல இருக்குற ஜீன்னால ஜேக்பாட் அடிச்சுட்டான்.” விடாமல் வம்பு செய்தாள் கீர்த்தனா.
சுற்றி குழந்தைகள் இருப்பதையும் மறந்து பேசும் இவர்கள் குறும்புக்கு அளவே இல்லையெனத் தலையைச் சிலுப்பிக்கொண்ட சாரதா அவர்களை கண்டிக்க வாய்திறக்க,
“அந்த ஜேக்பாட் எங்களுக்கும் அடிச்சிருக்கு.” அறிவித்த சந்தோஷின் ஜாடைபேச்சில் ஸ்தம்பித்து நின்றார்.
காதில் விழுந்தது சரிதானா என மற்றவர்களும் வாயைப் பிளக்க,
“அதுக்குள்ள ஏன்டா சொன்ன?” நெளிந்த சாதனாவின் உடல்மொழியிலேயே அவர்கள் யூகங்கள் உறுதியானது.
கீர்த்தனாவும் ரிஷிகுமாரும் அவளை ஆரத்தழுவி முத்தமழையில் நனைத்து வாழ்த்த, மெய்சிலிர்த்துப் போன விக்ரமும் காயத்ரியும் சாதனாவின் தலைகோதி பூரித்தனர்.
பெரியவர்கள் செய்துகொண்டிருந்த ஆரவாரத்தில் அவர்கள் கால் இடுக்கில் புகுந்து அவர்களுக்கு இணையாகத் துள்ளிகுதித்து கூக்குரலிட்டனர் பிள்ளைகள் மூவரும்.
கருவுற்றிருக்கும் மகளின் கன்னத்தை வாஞ்சையாக வருடிய சாரதா,
“மாசமா இருக்குறேன்னு தெரிஞ்சும் அவ்வளவு தூரம் ஃப்லைட் ஓட்டிட்டு வந்திருக்கீயே.” தாய்க்கே உண்டான கவலையில் பேசினார்.
“அட அம்மா! அவனவன் ராக்கெட்டுலேயே பறக்குறான். நீ என்னடான்ன இங்க இருக்குற கல்கத்தாலேந்து சென்னைக்கு வந்தத நெனச்சு பயப்படுற.” கலகலத்தாள் சாதனா.
மகளின் பதிலில் சமாதானமாகதவராய் அவர் முகத்தைத் தொங்கப்போட, மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசித்துவிட்டு தான் விமானத்தை இயக்கினாள் என்று பொறுப்பாகப் பதிலளித்தான் சந்தோஷ்.
“காலையில வந்ததுலேந்து இதைப்பற்றி மூச்சுக் கூட விடல மாப்பிள்ளை. கண்ணனை இடுப்புல தூக்கி வச்சு கொஞ்சிட்டு இருந்திருக்கா. பொழுது சாய்ஞ்சு தலைக்கு குளிச்சிருக்கா; இதோ இப்போ ரிஷிக்குப் போட்டியா கரண்டி கரண்டியா இஞ்சிப்புளி சாப்பிட்டிருக்கா….” காரணங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து சாரதா கவலைப்பட,
“ம்ப்ச்… நீ வெல்லத்தைக் கொட்டி மெழுகியிருக்குற இஞ்சிப்புளியை எல்லாம் ஊறுகாய்லேயே சேர்த்துக்க முடியாதுமா.” அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டு கொஞ்சினாள் சாதனா.
“சும்மா இருடி. வெல்லமும் உடம்புக்குச் சூடுதான்.” விட்டால் அழுதுவிடுவார் போல இருந்தது அவர் கசந்த குரல்.
“ம்ப்ச். என்ன இது சாதனா. உன் நல்லதுக்குத்தானே சொல்லறாங்க. வீட்டுக்கு வந்ததும் சொல்லியிருக்கலாம்ல?” சந்தோஷ் இடைபுக,
“போடா! நான் என்னெவெல்லாம் பிளான் பண்ணேன் தெரியுமா. காரியத்தையே கெடுத்துட்ட.” முகம் சுருக்கி, விக்ரமை பார்த்தும் பார்க்காமல் தவிர்த்த பெண்மான் காயத்ரி அருகில் நடந்தாள்.
“ஒண்ணுத்துக்கு ரெண்டு குழந்தை சுமந்துட்டு இருக்கேன் காயத்ரி. என் ஆசைக்காக ஒரு குழந்தையையாவது தத்தெடுத்துக்குறீயா?” ஆழ்மனத்திலிருந்து கேட்டாள்.
“மறுபடியும் ஆரம்பிக்காத சாதனா.” விக்ரம் கண்டிக்க,
“ரித்தி மாதிரியே உளறாத. குழந்தைகளைப் பிரிக்குற உரிமையை உனக்கு யார் கொடுத்தா?” கடும்கோபம் கொண்ட ரிஷிகுமார், அழகு காட்டும் மனையாளையும் விட்டுவைக்கவில்லை.
“ரெண்டுபேரும் என்னை அதட்டாதீங்க. இந்தமுறை சந்தோஷ் கிட்ட கலந்துபேசினதுக்கு அப்புறம் தான் கேக்குறேன்.” இருவரையும் முறைத்தாள்.
“ரிஷி சொல்றதல என்னடி தப்பு. உன்னை நிர்க்கதியா விட்டுட்டோம்னு தானே என்னையும் அப்பாவையும் வெறுத்த. இப்போ நீ என்ன செய்யற?” பொங்கினார் சாரதா.
“அதுவும் இதுவும் ஒண்ணா?” சாதனா முணுமுணுக்க,
வாழ்க்கையின் நிதர்சனங்களை ஏற்று வாழப் பழகிய காயத்ரிக்கு தங்கையின் ஆதங்கம் புரியவே செய்தது.
“அதான் இவ்வளவு தூரம் இறங்கிவந்து கண்ணனுக்கு கார்டியன் கையெழுத்து போட்டு வருஷத்துல பாதிநாள் தனியாத்தானே பார்த்துக்குறேன். இதுக்கு மேல என்னடி செய்யச் சொல்லற.” தன்மையாகவே கேட்டாள்.
“அந்த கார்டியன் கையெழுத்தைத் தத்தெடுக்கும் படிவத்துல போடுன்னு சொல்லறேன்.” சாதனா தெளிவுபடுத்த,
“ம்ப்ச். இவளுக்குச் சொன்னால் புரியாது.” பெருமூச்சுவிட்ட விக்ரம், கண்ணனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு,
“சன்மாக்கு குட்டிக் கண்ணன் கதை மறந்துபோச்சாம். சன்மாக்கு புரியுறா மாதிரி நீ கொஞ்சம் சொல்லறீயா? என்றான்.
“அச்சோ சன்மா! மறுபடியும் மறந்துட்டீயா?” கண்களைச் சுருக்கிய கண்ணன் நவரச முகபாவனைகளுடன் மழலையில் மொழிந்தான்.
“குட்டிக் கண்ணனுக்கு தேவகிம்மா, வசுப்பா மாதிரி எனக்கு சன்மா சன்பா. சன்மாவும் சன்பாவும் பைலட்ஸ். என்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போக முடியாதுல. அதான் இந்த கண்ணனை காயும்மா விக்கிப்பாகிட்ட விட்டிருக்காங்க. அந்த குட்டிக்கண்ணன் பிருந்தாவனத்துக்கு வந்து யசோப்பா நந்துப்பாகிட்ட வளர்ந்த மாதிரி நான் என் காயும்மா விக்கிப்பாவோட சென்னையில் இருக்கேன். என விக்ரமின் தோள்சுற்றி இறுக அணைத்துக்கொண்டான்.
கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் கண்ணனை தன் மடியில் அமர்த்திக்கொண்டு முத்தங்களை வாரியிரைத்த காயத்ரி, “இதைவிட வேற என்னடி வேணும். கடவுளின் தீர்ப்பு மனிதனின் திட்டங்களுக்கு அப்பார்ப்பட்டது.” என நெகிழ்ந்தாள்.
பலமுறை மகன் சொல்ல இக்கதையைக் கேட்டுப் பூரித்திருந்த போதும், இன்று சாதனாவின் மனம் பாரமாகிப்போனது.
சிலையாக நிற்கும் அவளருகில் நடந்த விக்ரம் “மச்சினி மாசமா இருக்காளேன்னு நெனச்சு நிம்மதியா சந்தோஷப்பட விடுறீயா?” பொய்யாகச் சலித்துக்கொண்டு,
“கண்டதையும் யோசிக்காம பத்திரமா பிள்ளைகளைப் பெத்துக்கொடு. எத்தனை கார்டியன் கையெழுத்துப் போடணும்னாலும் நானும் என் பொண்டாட்டியும் தயார்.” அவள் தலையில் செல்லமாக அடித்தான்.
“மாமா சொல்றத கேளு சாதனா.” ஒத்தூதிய தம்பியை பார்வையால் சுட்டெரித்தவள்,
“மிஸ்டர் விக்ரம். நீங்க ஏதோ பொறுமையா பேசுறதுனால இந்தமுறை மன்னிச்சு விட்டுட்டேன். என் சந்தோஷ் என்னை ஒரு டசன் பிள்ளை பெத்துக்கொடுக்கச் சொல்லிக் கேட்டிருக்கான்.
ஒவ்வொரு முறை கன்சீவ் ஆகும்போதும் வேதாளம் மாதிரி இந்த விக்ரம்கிட்ட இதே கேள்வியை கேட்டே தீருவேன்.” என அவன் கண்ணெதிரே ஒற்றை விரலை சுழலவிட்டாள்.
அதிகாரம் செய்யும் மச்சினியின் கைவிரல்களை இறுக குவித்தவன், “வேதாளம் தலைமேல ஏறி உட்கார்ந்து இம்சை செய்தாலும், காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் இந்த பக்தன்கிட்ட உன் தந்திர எதுவும் வேலை செய்யாது.” கர்வம் மின்ன கூறி, மறுகையால் மனையாளை தன் தோளோடு சேர்த்து ஆரத்தழுவிக்கொண்டான்.
உதிரத்தில் கலந்த சொந்தங்களும் உறவாய் இணைந்த பந்தங்களும் உருகி உருகி செல்லச் சண்டையிட்டுக் கொள்ளவதை உளமார பருகிய அன்னை, பனித்த கண்களுடன் இறைவனுக்கு நன்றிகூறிய வண்ணம் அத்தருணத்தை நினைவடுக்கில் பத்திரப்படுத்திக் கொண்டார்.
கொஞ்சிக் குலவும் பெரியவர்களின் பரிபாஷகளைக் கண்கொட்டாமல் கவனித்துப் பூரித்த குழந்தைகளின் மனத்திலும் ஆழப் பதிந்தது, அந்த அன்புக் கூட்டின் பசுமரத்தாணி நினைவுகள்.
மிதிமிஞ்சிய பாசமும் நேசமும் நிரம்பி வழியும் உறவில்,
முத்திரைப் பத்திரங்களுக்கு ஏது வேலை?
என்னவன்(ள்) இவன்(ள்) கர்வம் கொண்ட உள்ளங்களில்,
ஏக்கங்களுக்குத் தான் ஏது இடம்? – மறுமொழிந்தது
நிழலாய்த் தொடரும் பசுமரத்தாணி நினைவுகள்!!!
பின்குறிப்பு:
எபிலாகில் தலைமை ஆசிரியராக வரும் ரம்யா தான் என் அடுத்த கதையின் நாயகி.
கதையின் பெயர் ” நிழலாடும் நின் நினைவில்.” டைட்டல் மட்டும் இப்போதைக்கு ரிஸர்வ் பண்ணி வச்சுக்கறேன். கதை அடுத்த வருடம் பதிவிடுறேன்.
ரம்யா, “கோதையின் பிரேமை” கதையிலேயே தன் கணவன் ஷ்ரவனோட ஒரு கெஸ்ட் ரோல் பண்ணியிருக்காங்க. அந்தக் காட்சி படித்தாலே அவர்கள் வாழ்க்கை பற்றி உங்களால் ஓரளவுக்கு யூகிக்க முடியும்.
அவங்க இந்த முப்பெரும் தேவியரோட எப்படி இவ்வளவு நெருக்கமா பழகுறாங்கன்ற விவரங்கள் “நிழலாடும் நின் நினைவில்” கதையில் சொல்லறேன்.
பசுமரத்தாணி நினைவுகள் கதையின் நிறைகுறைகளை பகிர்ந்து ஊக்குவியுங்கள் வாசகர்களே.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here