56 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
எழுத்தாளர் திருமதி. தேவி ஸ்ரீனிவாசன் அவர்கள் எழுதிய “மற்றொன்றிணைக் காணாவே”.
பிரம்மாண்டமான சினிமா நட்சத்திரங்களுக்கான விழா ஒரு புறம்; அதைத் தொலைக்காட்சியின் வாயிலாக, புலம்பல்களுக்கும் பூரிப்புகளுக்கும் இடையில் கண்டுகளிக்கும் அக்ரஹாரத்தில் வசிக்கும் எளிமையான குடும்பத்தினர் மறுபுறம் என்று தொடங்கும் கதையின் முதல் அத்தியாயத்திலேயே கதாபாத்திரங்களின் மனநிலையை அழகாக உணர்த்திவிட்டீர்கள்.
திரையுலக நட்சத்திரங்களுக்கே உரிய தவிர்க்க முடியாத பழக்கவழக்கங்கள் என்ற பிம்பத்தை உடைத்து, தனக்கென கோட்பாடுகளை வரைந்து, அதில் உறுதியாகவு நின்ற அபிமன்யுவின் கதாபாத்திரம் அருமையிலும் அருமை.
‘மனமிருந்தால் மார்க்கம் உண்டு!’ என்று சந்தியாவந்தனம் முதல், உண்ணும் உணவு வரை அவன் எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் தன் கலாச்சாரத்தைப் பின்பற்றி கடைப்பிடித்தது, இக்கதைப் படிக்கும் வாசகர்களுக்கு நல்லதொரு வழிக்காட்டும் விதமாக இருந்தது.
நடிப்பே என்றாலும், வழிவழியாகச் செய்துவரும் சடங்குகளின் புனிதத்தைக் கொச்சைப் படுத்தக்கூடாது என்று அவன் தந்த விளக்கங்கள் அனைத்தும் அற்புதம்.
காதல் கதையை இப்படியும் எழுதி காதலை உணர்த்தலாம் என்னும் வகையில், உத்ரா அபிமன்யு தம்பதியரின் அன்பையும் காதலையும், ஆசைகளையும் ஏக்கங்களையும், தவிப்புகளையும் தடுமாற்றங்களையும் நீங்கள் உணர்த்திய விதம் அருமையிலும் அருமை. Hats off to your scripting in this regard.
அர்ச்சகர்களின் சேவை எந்தளவிற்கு ஆத்மார்த்தமாக இருக்க வேண்டுமென்று சுந்தரர் அவர்களின் காட்சிகள் மூலம் மிக அழகாகச் சொல்லிவிட்டீர். உங்கள் சொல்லாடலின் தனித்துவத்தால் அவர் அனுஷ்டித்த நித்திய பூஜைகள் அனைத்தும் எங்கள் கண்முன் நிழலாடியது.
அவர் பிடிவாதமும் கோபமும் நிறைந்தவராக இருந்த போதிலும், அவரை மிகவும் பிடித்துப்போனது. அதுவும், மகனிடம் ரகசியமாகப் பேசும் மனையாளின் செயல்களைக் கண்டும் காணாமல் சென்ற அவர் குணம், அதை மனையாள் வசுமதியிடம் அவர் தெரியப்படுத்திய விதம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
கதையின் நாயகன் அபிமன்யுவா அல்லது சுந்தரரா என்று கேட்கும் அளவிற்குத் தந்தை மகன் இருவரும் ஒருவரை ஒருவர் மிஞ்சினர் என்று தான் கூறவேண்டும். அச்சுப் புத்தகத்தின் அட்டைப் படத்தில் அவர்கள் இருவரும் இருப்பது போன்று கண்டவுடன் உச்சிகுளிர்ந்து போய்விட்டேன். அட்டைப் படம் வடிவமைத்தவருக்கு என் மகிழ்ச்சியையும் நன்றிகளையும் தெரிவித்துவிடுங்கள் ஆத்தரே.
தந்தை-மகன் புரிதல் இப்படியென்றால், மாமியார் வசுமதியும் மருமகள் உத்ராவும் அதற்கும் ஒருபடி மேல். இருவரின் புரிதலும், செல்லச் சண்டைகளும், வம்பு பேச்சுகளும், ரகசிய திட்டங்களும் கொள்ளை அழகு. இன்னும் இன்னும் வேண்டுமென்று கேட்கும் அளவிற்கு அவர்களின் காட்சிகள் மனத்தைக் கொள்ளை கொண்டது.
அகிலாவின் வெகுளித்தனமும், ஆதித்யாவின் பக்குவமும், ராஜாவின் தன்னடக்கமும் என அனைத்தும் மிக மிக நேர்த்தியாக இருந்தது. பிரிந்த உள்ளங்கள் ஒன்றுசேர அவர்களின் பங்களிப்பும் Simply Wow.
இத்தனை நேர்த்தியாகக் கதையின் நகர்வை திட்டமிட்ட உங்கள் திறனை என்ன நான் சொல்ல. வாரே வாவ்!!!
சம்பிரதாயங்களைத் தாண்டி, பூணூல் அணிவதிலும், ஸ்லோகங்களைச் சொல்வதிலும் உள்ள புனிதத்தையும், வேத பாடசாலைகளின் உன்னதமான நோக்கத்தையும், குருவின் ஸ்தானத்தையும் கதையின் நகர்வில் இணைத்து நீங்கள் தந்த தகவல்கள் அனைத்தும் விழிப்புணர்வூட்டும் வகையாக இருந்தது.
கதைமாந்தர்களுக்கு ஏற்ப, வசனங்களை பிராமணர் பாஷையிலும், பொதுவான பேச்சு வழக்கிலும் தந்த விதம் அழகிலும் அழகு. படிப்பவர்கள் அனைவருக்கும் புரியும் விதமாக, பிராமணர்கள் பயன்படுத்தும் பிரத்யேகமானச் சொற்களுக்கும் வாக்கியங்களுக்கும், கதையின் போக்கில் விளக்கம் தந்ததும், ஐதீகங்கள் பற்றிய குட்டி குட்டி காட்சிகள் புகட்டிய விதமும் ரசனையாக இருந்தது.
பெற்றவர்களுக்கு நற்பெயர் சேர்க்கும் சிறந்த மகனாகவும், ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!’ என்பதற்கு இணங்க சிறந்த மனிதனாகவும் அபிமன்யுவை சித்தரித்து, நற்சிந்தனைகள் நிரம்பிய இக்கதையை எத்தனை முறை படித்தாலும் சலிக்காது. கதையை மீண்டும் ஒருமுறை அச்சுப் புத்தக வடிவில் படிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்.
வாசகர்களே! புது வருடம், புத்துணர்வூட்டும் கதை படிக்க விரும்பினால், இப்புத்தகத்தைப் பெற்று மகிழுங்கள்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 12 வரை நடக்கும் புத்தக திருவிழாவில் இதய வாசியே புத்தகம் கீழே உள்ள ஸ்டால்களில் கிடைக்கும் தோழமைகளே.
பிரியா நிலையம் (PRIYA NILAIYAM)
STALL NO 215 & 216 – 8 ROW
For online orders, Contact: +91 9444462284

மேலும் விவரங்களுக்கு எழுத்தாளர் திருமதி. தேவி ஸ்ரீனாவாசன் அவர்களைத் தொடர்புகொள்ளவும்.
என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here