114 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
“மீரா சாப்பிட வரல்ல?” கீதாவிடம் கேட்டுக்கொண்டே அலுவலகத்தின் உணவுக்கூடத்தைக் கண்களால் அலசினான் அரவிந்தன்.
“இல்லடா! அவளுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்,” பதிலளித்து அவன் எதிரில் அமர்ந்தவளோ, “தங்கத்துக்குப் பசிக்குதா? இதோ அம்மா இட்லி சாப்பிடறேன்,” தன் மேடிட்ட வயிற்றில் உருண்டோடிய குழந்தையுடன் பேசுவதில் மும்முரமாக இருக்க, அரவிந்தன் முகத்தில் வழிந்தோடிய தவிப்பை கவனிக்கவில்லை.
அரவிந்தன் அன்று தன் காதலை சொன்ன நாளிலிருந்தே நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்து வந்தாள் மீரா. காரணம், அவளால் ஹரியிடம் சகஜமாகப் பழகமுடியவில்லை. மனத்தில் காதலுடன் அவனுடன் நட்பாய் மட்டும் பழக மனசாட்சி உறுத்தியது.
அது தெரியாமல் சடாரென்று எழுந்தவன் மீராவைத் தேடி வேகமாக நடந்தான். அதே சமயம், சாப்பிடுவதற்காக வந்த மகேஷும், ஹரியும் ஓட்டமும் நடையுமாக வெளியேறும் நண்பனைக் கண்கள் அகல பார்த்து நின்றனர்.
“உனக்கென்ன பிரச்சனை மீரா?” கணினியில் மூழ்கியிருந்த தோழியின் தோள்களை உலுக்கினான் அரவிந்தன்.
மதிய உணவு இடைவேளை என்பதால், ஓரிரண்டு ஊழியர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களும் வேலையில் கவனமாக இருந்ததால், அரவிந்தன் குரல் உயர்த்திப் பேசியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
அவன் கேள்வி புரிந்தும் புரியாதவளாய், “நல்ல சமயத்துல வந்தடா! இந்த பேக்ரவுண்ட் கலர் எப்படி இருக்குன்னு சொல்லு?” இலகுவாகப் பேசினாள்.
“முதல்ல சாப்பிட வா!” அவனும் தன் பிடியில் உறுதியாக இருந்தான்.
“எனக்குப் பசிக்கல அரவிந்தா,” அவள் மறுக்க, அவன் கோபம் எல்லையைக் கடந்தது.
“என்னை அவாய்ட் பண்றியாடி?” நேரடியாகவே கேட்டான்.
‘உன்னை இல்லடா… ஹரியை!’ சொல்லத் துடித்த மனத்தை அடக்கியவள், அடுத்த வாரம் கலந்துகொள்ளவிருக்கும் கருத்தரங்கிற்கு வேண்டிய வேலைகளைச் செய்து முடிப்பதற்குள் தலையே சுற்றுகிறது என்றாள்.
அவள் கூறியதில் ஓரளவு உண்மை இருந்தாலும், அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. “சரி, உன் இஷ்டம்! முடிவு எதுவா இருந்தாலும், எப்பவும்போல என் தோழியா இரு. அது போதும்,” நினைவூட்டி, குனிந்த தலையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
மனம் நொந்து பேசிச் செல்லும் அவன் கரத்தைப் பிடித்துத் தடுத்தவள், “ப்ராமிஸ்டா. உன்னை நான் தப்பாவே நினைக்கல. எப்பவுமே தப்பா நினைக்கமாட்டேன்,” தெளிவுபடுத்தி, “உனக்கு பசிக்கலேனா, இந்த வேலையை முடிச்சிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து செகண்ட் லன்ச்சுல சாப்பிடலாமா?” என்றதும், அவன் முகம் மலர்ந்தது. உதடுகள் விரிய அவளருகில் அமர்ந்துகொண்டான்.
மீராவும் அந்தக் கருத்தரங்கிற்கான வேலைகளையே காரணம் காட்டி, வாரத்தின் மீதமுள்ள நாட்களிலும் நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிடுவதைத் தவிர்த்தாள்.
வெள்ளிக்கிழமை இரவு, பென் டிரைவில் கொண்டுவந்த ஹரியின் கடைசி கதையை படித்து முடித்திருந்தாள்.
‘முடிவெடுக்க வேண்டிய நேரம்!’ தனக்குத்தானே சொல்லிக்கொண்டு, பெருமூச்சுவிட்டவள், சுவற்றில் மாட்டிவைத்திருந்த வெள்ளை பலகையில், ‘ஹரியிடம் தோன்றிய உணர்வு என்ன?’ எழுதி, மார்க்கரை தாடையில் தட்டியபடி அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து தீவிரமாகச் சிந்தித்தாள்.
இந்த ஒரு வாரத்தில் அவனிடம் உணர்ந்த காதல் துளியும் குறையவில்லை என்பதுதான் நிஜம்.
‘அவன் கனவுக்குக் கைகொடுக்க நினைப்பது ஒருபக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி அவன் அன்புக்காக என் மனம் ஏங்குவதும் உண்மைதானே! கதையில் அவன் வர்ணித்திருக்கும் அந்த அன்பான கணவன், அழகான குடும்பம் எல்லாம் எனக்கு அவன் நிஜத்தில் தரவேண்டும்,’ அலசி ஆராய்ந்தவள் ‘காதல்’ என்று பதில் எழுதினாள்.
‘அரவிந்தனுக்கு என்ன பதில் சொல்வது?’ அடுத்த கேள்வியை எழுதி, அதன்மேல் மார்க்கரை தட்டிச் சிந்தித்தாள்.
‘அரவிந்தனுடன் ஒப்பிடுகையில், அழகிலும் சரி, அந்தஸ்திலும் சரி, ஹரியின் நிலை குறைவுதான். ஆனால் அவை யாவும் நிரந்தரமல்ல!’ மறுப்பாய்த் தலையசைத்து,
‘திறமைகளைப் பொறுத்தவரை ஹரி அரவிந்தனுக்குச் சளைத்தவன் இல்லை; சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால், அவனுக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை; அதற்கு என்னால் உறுதுணையாய் இருக்கமுடியும்.’ ஒப்பிட்டவளின் முகத்தில் புன்னகை அரும்பியது.
‘எல்லாவற்றுக்கும் மேலாக, அரவிந்தனிடம் நான் ஒரு நல்ல தோழமையை மட்டுமே உணர்கிறேன். அவனும் என்னுடைய இந்த முடிவை பெருந்தன்மையோடு ஏற்பான்,’ நூறு சதவீதம் நம்பியவள், அரவிந்தனிடம் உள்ளதை உள்ளபடி சொல்வதில் எந்தத் தயக்குமும் இல்லை என்று எழுதினாள்.
‘பெற்றோரின் மனநிலை?’ இருவருக்குமாகச் சேர்த்து சிந்தித்தாள்.
‘அப்பா, தானே ஒரு சுயத்தொழில் செய்பவராக இருப்பதால் ஹரியையும் ஊக்குவிப்பார்; அம்மாவோ அப்பா பேச்சை தட்டுவதே இல்லை.
ஹரியினுடைய அம்மாவுக்குப் பிடித்தமான வங்கி வேலையில் நான் இருப்பதால், என்னை மருமகளாய் ஏற்க அவரும் மறுப்புச் சொல்ல மாட்டார்,’
இருக்குடும்பத்திலும் எதிர்ப்புகள் இருக்காது என்று பலமாக நம்பியவள், ‘காதலுக்குச் சம்மதம் சொல்லுவார்கள்’ என்று எழுதி, ஒரு ஸ்மைலியும் வரைந்து பெருமிதம் பொங்க புன்னகைத்தாள்.
ஹரியிடம் பூத்திருக்கும் காதல் உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தவள், ‘ஐ லவ் யூ ஹரி!’ என்று எழுதி, இரகசியமாய் முணுமுணுத்து, தன் தலையில் செல்லமாகத் தட்டிக்கொண்டு வெட்கத்தில் வழிந்தாள்.
அன்று சனிக்கிழமை. பணிக்கு வந்ததிலிருந்து, ஹரியிடம் பேசும் சரியான சந்தர்ப்பத்திற்காக மீரா காத்திருக்க நண்பகல் ஆனது. அவள் உள்ளத்தைப் படித்தவன் போல அவர்கள் பணியிடத்திற்கு வந்த அரவிந்தன், “ஹரி எனக்கு வேலை இருக்குடா. நேரமாகும். நீ கிளம்பு,” என்றான்.
ஹரி பேருந்தில் செல்வதாகப் பதிலளிக்க, அவனுடம் தனிமையில் பேச இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது எனக் குதூகலம் அடைந்தாள் மீரா.
“ஹரி, நானும் உன்னோட பஸ்ஸுல வரேன்,” வீட்டிற்கு புறப்பட்டவனை அவள் வழிமறிக்க,
“உன் வண்டிக்கு என்ன ஆச்சு?” அக்கறையாய் வினவினான் ஹரி.
“வண்டி பஞ்சர் பா!” அன்று அரவிந்தனிடம் சொன்ன அதே சாக்கைச் சொல்லி வெற்றியும் கண்டாள்.
பேருந்து நிறுத்தம் வந்து இருபது நிமிடங்களாகியும் பேருந்தும் வரவில்லை; அவளும் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. வெயில் சுட்டெரிக்க, கைக்குட்டையால் நெற்றி வியர்வை துடைத்துக்கொண்டவன், “ஷேர் ஆட்டோல போகலாமா மீரா!” என்றான்.
“அடுத்த பஸ் ஸ்டாப் வரைக்கும் நடக்கலாமா?” அவள் வினவ,
“இந்த உச்சி வெயில்லையா?” கண் கூசும் வானத்தைச் சுட்டிக்காட்டினான் ஹரி.
“தாகமா இருக்குடா. கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு பஸ் ஏறலாம்!” மழுப்பிச் சமாளித்தாள் அவள்.
சிறிது தூரம் நடந்ததும், “ஹரி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,” குனிந்த தலையுடன் மெல்லிய குரலில் தொடங்கினாள்.
“வேலை விஷயம்னா, தயவுசெய்து எந்த அறிவுரையும் சொல்லாத மீரா. எனக்கு கொடுக்கற வேலைய செய்யறேன்; மேற்கொண்டு பயிற்சி எடுக்கவோ, படிக்கவோ எனக்குச் சுத்தமா விருப்பமில்ல,” அவள் சுபாவம் அறிந்திருந்தவன் மூச்சுவிடாமல் எச்சரிக்க,
“நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாமா?” மனத்தில் இருந்ததை பட்டென்று உடைத்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு?” அடிக்கும் வெயிலில், அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று குழப்பத்துடன் ஏறிட்டான்.
‘விஷயத்தை தொடங்கியாச்சு; இனி இவன்கிட்ட திடமாத்தான் பேசணும்,’ எனப் பெருமூச்சுவிட்டவள்,
“நான் சொல்லறத முழுசா கேளுடா! அப்புறம் உன் விருப்பம் என்னன்னு சொல்லு,” அதிகாரம் செய்து அவன் வாயடைத்தாள்.
“உன்னுடைய கதை ‘தெவிட்டாத இன்பம்’ படிச்சேன். உன் எழுத்துல மயங்கி….” அவள் தொடங்கியதும்,
“அது…. நான்…. என் கதை…. உனக்கு எப்படி….” அவளுக்கு எப்படி தெரிய வந்ததென்ற பயத்தில் ஹரியின் உதடுகள் தந்தியடித்தன.
“குறுக்கே பேசாதன்னு சொன்னேன்ல!” மிரட்டியவள் சாலையைக் கடக்க, சுரங்கப் பாதையில் நுழையும்வரை அமைதியாக இருந்து பின் பேசத் துவங்கினாள்.
அவன் ஊருக்குச் சென்றிருந்த சமயம் அறிக்கைகளைத் தேடியது முதற்கொண்டு, அரவிந்தன் அவளிடம் புத்தகம் கொடுத்து படிக்க சொன்னது வரை அனைத்தையும் முழுவீச்சாக விளக்கினாள்.
இளகிய மனம் படைத்த அவள் தன்மேல் பச்சாதாபம் கொண்டிருக்கிறாள் எனத் தீர்க்கமாக நம்பியவன், “லூஸு! இதுக்குப்போய் காதல், கல்யாணம்னு சொல்லுவீயா!” குறுஞ்சிரிப்புடன் அவள் தலையில் குட்டினான்.
“நான் எதையும் யோசிக்காம பேசமாட்டேன்னு உனக்குத் தெரியாதா?” அவள் கண்டிக்கவும் சுரங்கப் பாதையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
நடைபாதயில் நடக்கத் துவங்கியதும், “உனக்கு வரப்போகும் மனைவியை உன் கதையில வரும் கதாநாயகன் மாதிரியே அன்பா பார்த்துப்பு தானே?” வினவினாள் மீரா.
“மீரா…” ஹரி தடுமாற,
நீட்டி முழக்காமல் பதில்சொல்லுமாறு கண்களை உருட்டினாள் அவன் அன்புத் தோழி.
“ஆ…. ஆ…. ஆமாம்!” அவனும் மென்று விழுங்கினான்.
“அது போதும் ஹரி! என்னை நீ அப்படிப் பாசமா பார்த்துக்கோ; பதிலுக்கு நான் உன் லட்சியத்திற்கு உறுதுணையா இருப்பேன்.
நம்ம உடனே கல்யாணம் செய்துக்கலாம்; நீ உன் வேலைய ராஜினாமா செய்துட்டு, முழு நேரமும் கதை எழுதறதுல மட்டும் கவனம் செலுத்து. உன்னோட அம்மாவுக்கு இந்த அரசாங்க வங்கி வேலை ரொம்பப் பிடிக்கும்னு அரவிந்த் சொன்னான். எனக்கும் அப்படித்தான்னு உனக்கு நல்லாவே தெரியும். அதனால அவங்களுக்கு, நீ வேலைக்கு போகலன்ற வருத்தம் இருக்காது. சரின்னு சொல்லுடா!” காதலாய் மொழிந்து அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டாள்.
உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு அவள், தன்னுடன் வாழ ஒரு எதிர்காலத் திட்டமே தீட்டிவிட்டாள் என்று விளங்கியது. தன் கனவுகளுக்காக அவள் வாழ்க்கையைப் பணயம் வைப்பது எந்தவிதத்திலும் நியாமில்லை என நினைத்தவன், “நீ என்மேல நம்பிக்கை வச்சு பேசுறதே எனக்கு ஆறுதலா இருக்கு மீரா; நீ உனக்கேத்தவனைக் கட்டிக்கிறது தான் சரி,” எனக் கரத்தைத் திருப்பிக்கொண்டான்.
“உனக்கென்ன கல்யாணம் செய்துக்க இஷ்டமான்னுதான் கேட்டேன்; எனக்கு யாரு சரி யாரு தப்புனு அறிவுரை கேட்கல!” கொந்தளித்தவள் விறுவிறுவென முன்னே நடந்தாள்.
சட்டென அவள் கைகளைப் பற்றி இழுத்தவன், என்ன சொல்வதென்று தெரியாமல் அக்கம் பக்கத்தில் பார்வையைச் சுழலவிட, பத்தடி தூரத்தில் கரும்பு ஜூஸ் கடை ஒன்று கண்ணுக்குத் தென்பட்டது.
“கரும்பு ஜூஸ் கேட்டுட்டுக் குடிக்காம போனா என்ன அர்த்தம்?” கண்களில் குறும்பு மின்ன மிரட்டியவனின் தோரணையில் விழவே செய்தாள் பெண்.
“உன்னைக் கட்டாயப்படுத்த எனக்கு எந்த உரிமையும் இல்ல ஹரி; ஆனால் நீ சரின்னு சொல்லணும்னு ஆசைப்படுறேன் டா,” ஏக்கம் வழிய அவன் கைகளில் ஒரு பையைத் திணித்தாள்.
“என்ன இது?” அவன் முழிக்க,
“உனக்கு என்னைப் பிடிச்சிருந்தா, திங்கட்கிழமை கருத்தரங்குக்கு இதைப் போட்டுட்டு வா. விருப்பம் இல்லேன்னா…. திரு…. திருப்பி…” எதிர்மறையாகச் சிந்திக்கக் கூட மூச்சு முட்டியது அவளுக்கு.
“அது என்ன நீ மட்டும் யோசிக்க ஒரு வாரம் எடுத்துப்ப; நான் என் முடிவைச் சொல்ல வெறும் ரெண்டு நாள்தான் அவகாசம் தர?” வேண்டுமென்றே சீண்டினான்.
“அது அரவிந்த் என்னைக் காதலிக்குறதா சொல்லியிருக்கான் டா,” ஒரு வேகத்தில் உளறியவள் உதட்டைக் கடித்துக்கொண்டாள்.
“இது எப்போ நடந்தது?”
ஹரி கண்களை உருட்டிய விதத்திலேயே, இனி சொல்லும்வரை விடமாட்டான் என உணர்ந்தவள், “முதல்ல எனக்குக் கரும்பு ஜூஸ் வாங்கித்தா,” அன்புக்கட்டளை இட்டு மழுப்பினாள்.
“எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி கேட்டுட்டு இருக்கேன்?” பின்தொடர்கின்றவனையும் பொருட்படுத்தாமல், கடையை நோக்கி வேகநடை இட்டாள்.
அவள் பிடிவாத குணம் அறிந்தவனும், “ரெண்டு கிலாஸ் கரும்பு ஜூஸ் போடுங்க; ஐஸ் வேண்டாம்,” கடைக்காரரிடம் பேச,
“எலுமிச்சை சாறு சேர்த்துக்கோங்க; அப்படியே டிஸ்போசபிள் கப்புல தாங்க,” மிச்சத்தை சொல்லி முடித்தாள் மீரா.
“இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!” சிடுசிடுத்தவன், அரவிந்தன் விவகாரம் கேட்டு நச்சரித்தான்.
கடைக்காரர் கரும்பு துண்டுகளை இயந்திரத்தில் நுழைக்க, அருகிலிருந்த மரத்தின் நிழலில் வந்து நின்றவள், “அது ஒண்ணுமில்ல டா! அப்பா என் கல்யாண பேச்சு எடுத்ததும் அவன் கொஞ்சம் குழம்பிப்போயிட்டான்.” ஒரே வரியில் பதிலுரைத்தாள்.
“அப்படியெல்லாம் இருக்காது; நீ நடந்தத ஒண்ணு விடாம சொல்லு; அவன் குழம்பினானா இல்லையான்னு நான் சொல்லறேன்.” நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசினான் ஹரி.
கடைக்காரர் வந்து பழச்சாறு கொடுக்க, அதை மெதுவாய்ப் பருகியபடி அனைத்தையும் விளக்கினாள் மீரா.
“அப்போ நான் உன்னை விரும்பலேன்னு சொன்னா, அரவிந்தனுக்குச் சரின்னு சொல்லிடுவியா? நடைப்பாதையில் நடக்கத் தொடங்கியதும் கேட்டான் ஹரி.
“பைத்தியமா டா நீ! உன்னோட எப்படியெல்லாம் வாழணும்னு நான் கனவு கண்டுட்டிருக்கேன்,” எரிமலையாய் வெடித்தவள், “ச்சீ போடா!!!” வெறுத்துப்போனாள்.
“அதுக்கில்லடி,” அவன் சமாதானம் செய்ய முயல,
“நீ என்ன முடிவு எடுத்தாலும், நான் அவனுக்கு ‘நோ’ தான் சொல்லப்போறேன் ஹரி. அதுக்குள்ள என் காதல் கதைக்கு ஒரு முடிவு தெரிஞ்சா, என் நண்பன் அரவிந்தன்கிட்ட வெளிப்படையா பேசமுடியும்னு தோணித்து,” பட்டாசாய் வெடித்தாள்.
“நானும் அந்த அர்த்தத்துல கேட்கல மீரா; அவன் உனக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவன். நீ அவனுக்குச் சம்மதம் சொன்னால், உங்க ரெண்டு பேருக்கும் மனதார சந்தோஷப்படுவேன்னு சொல்ல வந்தேன்,” மென்மையாகப் புரியவைத்தான்.
“நீ என்னைச் சந்தோஷப்படுத்து; அதுபோதும்!” உதட்டைச் சுழித்து முறைத்தாள் மீரா.
அவள் குறும்புப் பார்வையை ரசித்து, “அப்போ என் நண்பன் வருத்தப்பட்டா பரவாயில்லையா?” வம்பிழுத்தான் ஹரி.
விளையாட்டாகக் கேட்டாலும், அதுவும் வாஸ்தவம் தானே எனத் தலைகுனிந்தவள், “அவன் எனக்கும் நண்பன் ஹரி,” அழுத்திக்கூறி,
“உன்னைத்தான் கல்யாணம் செஞ்சிக்க போறேன்னு சொன்னா, நமக்காக முதல சந்தோஷப்படப் போகுறதே அவன்தான்டா!” அரவிந்தன் மேலிருக்கும் அசாதாரண நம்பிக்கையில் பேசினாள்.
அரைமணி நேரத்தில் உலகமே தலைகீழாக மாறியது போல் தோன்றியது ஹரிக்கு.
“இன்னும் கொஞ்ச தூரம் நடக்கலாமா மீரா?” அமைதி வேண்டிக் கேட்டான்.
‘காலத்துக்கும் இப்படியே சேர்ந்து நடக்கலாம் ஹரி!’ சொல்லத் துடித்த உதட்டையும், கோர்க்க நெருங்கிய கரத்தையும் கட்டுப்படுத்தி, சரியென்று மட்டும் தலையசைத்தாள்.
வீட்டிற்கு வந்த பிறகும் சிந்தனையிலேயே சஞ்சரித்திருந்தான் ஹரி. அவள் அரவிந்தனைப் பற்றி சொன்னது எந்தளவிற்கு உண்மையோ அதே அளவிற்குத் தான் மீராவிற்குத் தகுதியானவன் இல்லை என்றும் உறுதியாக நம்பினான்.
“என்னடா இது! லைட் கூடப் போடாம உட்கார்ந்திருக்க,” கேட்டுக்கொண்டே அரவிந்தன் வீட்டிற்குள் நுழைய, சுயத்திற்கு வந்தான் ஹரி.
“கொஞ்சம் தலைவலி டா; அதான் அப்படியே தூங்கிட்டேன்,” ஹரி மழுப்ப,
“அடடா! அஞ்சே நிமிஷம், இஞ்சி டீ போட்டு எடுத்துட்டு வரேன் ஹரி,” இமைக்கும் நொடியில் சமையலறையை நோக்கி ஓடியவனின் கண்களுக்குத் தென்பட்டது அந்தப் பை;
அதிலிருந்த சட்டையை வெளியே எடுத்து ஆராய்ந்தவன் கேள்விகளைத் தொடுக்க,
“மீரா கொடுத்தா டா,” யோசிக்காமல் உளறினான் ஹரி.
“ஏதாவது சொன்னாளா?” அரவிந்தனின் காதல் மின்னும் விழிகளின் தவிப்பைப் புரிந்துகொள்ளவே செய்தான் ஹரி.
“எதுவும் சொல்லல டா,” நண்பனின் நேர்கொண்ட பார்வையை எதிர்கொள்ளமுடியாமல், அசதியாக இருப்பதாகக் கூறிவிட்டு தன் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டான் ஹரி.
நண்பர்கள் வழக்கமாக செய்யும் குறும்புகள் நினைவில் வர, ‘ஒருவேளை ரெண்டு பேரும் சேர்ந்து என்னை ஓட்டுறாங்களோ!’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டே ரசனையாக அந்தச் சட்டையை வருடினான் அரவிந்தன்.
‘எத்தனை நாளுக்கு இப்படி ஒளிஞ்சிக்க முடியும் ஹரி?’ அறைக்குள் வந்தவனின் மனசாட்சி வாட்டியெடுத்தது.
‘அரவிந்தன் மனம் நோகும்படி நான் எதையுமே செய்யமாட்டேன்; மீராவும் நல்லா இருக்கணும்; அதுக்கு அரவிந்தனும் மீராவும் சேர்வதுதான் நல்லது.’ முடிவுக்கு வந்தான் ஹரி.
அகம் நுழந்தவளின் பதிலுக்காகக் தோழன் காத்திருக்க,
அவன் நலனின் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கிறாள் அவள்;
அனைவரின் நலத்திலும் அக்கறையாக இருக்கிறான் அவன்;
அலைபாயும் நெஞ்சங்கள் தெளிவெனும் கடலில் சங்கமித்ததா – பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்….


Please Comment Here