89 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
ஜன்னல் வழியே நுழைந்த சூரிய கதிர்கள் அவன் முகத்தில் செல்லமாக முத்தமிட்டன. கண்ணிமைகள் திறப்பேனா என்று வாதம் செய்ய, சோம்பல் முறித்தபடி எழுந்தான் ஹரி.
அவன் கண்கள் முதலில் தேடியது அரவிந்தனைத்தான். தன்னை எழுப்பாமல் தனியாக மெது ஓட்டம் பயில சென்றுவிட்ட நண்பனைச் செல்லமாகத் திட்டிக்கொண்டபடியே காலை உணவைச் சமைக்கத் தொடங்கினான் ஹரி.
“உருளைகிழங்கு மசாலா வா? வாசனை மூக்க துளைக்குதே!” ஜாக்கிங்க் சென்று திரும்பியவன் நேராகச் சமையலறைக்குள் நுழைய,
“உன் வியர்வை நாற்றம் தாங்க முடியலடா. முதல்ல போய் குளி!” நண்பனை விரட்டிவிட்டான் ஹரி.
கமகமவெனக் குளித்துமுடித்து வந்த அரவிந்தன், “சரி சொல்லுடா! மீரா ஏதாவது சொன்னாளா?” டேப் ரெக்கார்டரில், பாஸ் பட்டனை விடுவித்ததைப் போல முந்தினம் விட்ட இடத்திலேயே தொடங்கினான்.
ஹரியும் அதைப்பற்றித் தெளிவாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்று தீர்மானமாக இருந்தான். ஆனால் அதற்கு முன் அவன் சாப்பிடவேண்டும் என்று அன்புகட்டளையிட்டு, சுடச்சுட மசால் தோசையும், தேங்காய் சட்னியும் பரிமாறினான்.
காலை உணவு உண்ட நண்பர்கள் கோப்பையில் இஞ்சி டீயுடன் பால்கனியில் வந்து அமர்ந்தனர்.
“உன் கிட்ட மூணு கேள்வி கேட்கப்போறேன். ஆமாம், இல்லன்னு ஒரு வார்த்தையில் பதில் சொல்லணும், புரியுதா?” பீடிகையுடன் தொடங்கினான் ஹரி.
‘பில்ட் அப் எல்லாம் பயங்கரமா இருக்கே!’ வியந்தவனின் மனக்கண்ணில் மீராவின் குறும்பு முகம் நிழலாடியது.
“மீராவுக்கு நீ என் ஸிஸ்டம் ஆக்ஸஸ் கொடுத்தியா?” ஹரி கேட்க,
“அது… அது…” தடுமாறினான் அரவிந்தன்.
“விளக்கம் எதுவும் வேண்டாம்னு சொன்னேன்!” ஹரி நினைவூட்ட ஆமாம் என்று மட்டும் தலையசைத்தான் அரவிந்தன்.
“என் கதை புத்தகத்தை அவகிட்ட தந்து படிக்கச் சொன்னியா?” ஹரி தொடர,
‘கிராதகி, எல்லாத்தையும் இவன்கிட்ட சொல்லியிருக்காளே,’ மனத்தில் செல்லமாகத் திட்டிக்கொண்டே, ஆமாம் என அசடுவழிந்தான்.
“திங்கட்கிழமை நீ உன் காதலை அவகிட்ட சொன்னியா?” ஹரி கேட்டதும் அரவிந்தனின் முகம் பூரிப்பில் ஜொலித்தது.
“அவ முடிவ சொல்லிட்டாளா?” மெல்லிய குரலில் கேட்டவனின் விழிகளில் தவிப்பும் ஆர்வமும் தாண்டவமாடியது.
நண்பனின் உணர்வுப் போராட்டங்களில் பேச்சற்றுப் போனவன் தர்மசங்கடத்தில் தத்தளிக்க, ஏதாவது பேசு என ஹரியின் தோள்களை உலுக்கினான் அரவிந்தன்.
“இங்க பாரு அரவிந்தா, இதுல… இதுல… என் தப்பு ஒண்ணுமில்ல… நீதான்…” ஹரி சுற்றிவளைக்க,
“எஸ் ஆர் நோ?” பொறுமை இழந்தான் அரவிந்தன்.
“அவளுக்கு என்னை பிடிச்சிருக்காம் டா,” ஹரி மென்று விழுங்க, ஸ்தம்பித்து நின்றான் அரவிந்தன்.
“நீ ஏன்டா அவகிட்ட என் கதைகளைப் பற்றி புகழாரம் பாடின?” தன் மீது தவறில்லை எனப் புரியவைக்க முயன்றான் ஹரி.
ஆனால் அரவிந்தன் மனத்திலோ வேறொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.
“உன்னைப் பிடிச்சியிருந்தா, அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்கலாமே. அதுக்கு ஏன் ஒரு வாரம் காத்திருக்கச் சொன்னா?” கண்கள் கலங்க வினவினான்.
மனம்நொந்து பேசும் நண்பனின் கைகளை இறுகப்பிடித்துக் கொண்ட ஹரி, “அவளுக்கு என்மேல தோன்றின திடீர் உணர்வு என்னன்னு புரியாததுனாலதான் உன்னோட கலந்துபேச நெனச்சிருந்தா. நீ உன் காதல் சொன்னதும், அவ சொல்ல வந்தத மறைச்சிட்டா,” நிதானமாகப் புரியவைத்தான்.
அதிர்ச்சியிலிருந்து மீளாதவனாக அரவிந்தன் சிலையாக அமர்ந்திருக்க, ஹரியே மேலும் பேசினான்.
“அவளுக்கு என்மேல தோன்றிய உணர்வு வெறும் பரிதாபம் தான். நீ என்னைப்பற்றி சொன்னது, அவ என் கதைய படிச்சது, எல்லாத்தையும் போட்டுக் குழம்பிட்டிருக்கா. அவ்வளவுதான். உன் காதல்தான் நிஜம்; நீதான் அவளுக்குச் சரியான ஜோடி,” மனம்திறந்து பேசினான் ஹரி.
அப்போதும் அரவிந்தன் எந்த எதிர்வினையும் காட்டாமல் போக, அவன் தனிமையில் நிதானமாக யோசிக்கட்டும் என்று எண்ணி வெளியேறினான் ஹரி.
‘மீராவுக்கு வந்தது திடீர் உணர்வுன்னா, அப்போ எனக்கு வந்ததுக்கு பேர் என்ன? குழப்பம் அவளுக்கு மட்டும் தானா? எனக்கும் அவமேல என்ன உணர்வுன்னு தெளிவா தெரியாமதானே ப்ரபோஸ் பண்ணேன். அப்போ யார் காதல் நிஜம்?’ நிதானமாகச் சிந்தித்தான்.
‘எனக்கு மனசுல பட்டத உடனே சொல்லிட்டேன். ஆனா மீரா, நிதானமா இருந்திருக்கா. ஒரு வாரம் பொறுமையா சிந்திச்சு முடிவெடுத்திருக்கா,’ யோசித்துப் பார்க்க,
ஒரு வாரமாய் அவள் தன்னிடம் சகஜமாகப் பழகியதும், ஹரியிடமிருந்துதான் விலகி இருந்தாள் என்றும் கவனித்தான். வாரம் முழுவதும் கருத்தரங்குக்காக ஒன்றாக வேலை பார்த்தப்போதும் கூட, அவள் இயல்பாகவே பேசிப்பழகினாள் என்று உணர்ந்தான். இத்தனை நாளாக வராத காதல், இப்போது வந்திடுமா என்று தெளிவடைந்தான்.
நண்பனுக்கு யோசிக்க காலவகாசம் கொடுக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக வெளியே சென்றவன், மாலை ஏழு மணி அளவில் வீடு திரும்பினான். வரும்போதே உணவகத்திலிருந்து பரோட்டா குருமாவும் வாங்கி வந்தான்; அரவிந்தன் மதியம் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டான் என்ற அக்கறையில்!
“என்னடா ஹரி? இவ்வளவு நேரம் எங்க போன?” அரவிந்தன் பற்கள் மின்ன வினவ, வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.
மாத இதழ்கள் பிரசுரிக்கும் ஒரு நிறுவனத்திற்குச் சென்றிருந்ததாக மழுப்பியவன், உணவுப் பொட்டலங்களைப் பிரித்துக்கொண்டே நண்பனை சாப்பிட அழைத்தான்.
“முதல்ல இங்க வந்து உட்காரு!” ஹரியை வலுக்கட்டாயமாகத் தன்னருகில் சோஃபாவில் அமர்த்திய அரவிந்தன், “மீரா உன்னத் தான்டா விரும்பறா,” என்றதுமே, இல்லையென்று மறுப்பாகத் தலையசைத்து எழுந்தான் ஹரி.
“அவ ஒரு விஷயத்துல முடிவெடுத்துட்டா பின்வாங்கவே மாட்டான்னு உனக்குத் தெரியாதா?“ நியாயப்படுத்திய நண்பனை அனலாய்ப் பார்த்த ஹரி,
“பத்து நாளுக்கு முன்னாடி எனக்குப் பதவி உயர்வுக்குக் கூடச் சிபாரிசு செய்யாதவ, இப்போ கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறா,” அவள் அலைபாயும் மனநிலையைச் சுட்டிக்காட்டினான்.
“புரிஞ்சுக்கோ டா! அவ வேலையில உன்கிட்ட கண்டிப்பா இருக்கறத்துக்கும், இப்போ கல்யாணம் செய்துக்க நினைக்கறதுக்கும் பின்னால ஒரே காரணம்தான் இருக்குது ஹரி. அது, அவளுக்கு உன் திறமை மேலிருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை. உனக்குத் தேவையான ஊக்கத்தை மனைவி ஸ்தானத்திலிருந்து கொடுக்க ஆசைப்படறா,” அரவிந்தன் விளக்கவும்,
மீரா தன்னை எழுத்தில் மட்டும் கவனம் செலுத்தச் சொன்னதை எண்ணி உறைந்து நின்றான் ஹரி.
“இன்னும் என்ன யோசிக்கிற ஹரி? அவளுக்குச் சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு, நீ வெற்றியின் உச்சத்திற்குப் போகுறது உறுதி!” அரவிந்தன் அவன் கரங்களை அழுந்த பிடித்து உள்ளப்பூர்வமாகச் சொல்ல,
அப்போதும் மீரா, அரவிந்தனின் பெருந்தன்மையை பற்றி பறைசாற்றியது தான் நினைவுக்கு வந்தது ஹரிக்கு.
“அரவிந்தா, உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா?” குற்றவுணர்ச்சி அவன் குரலில் வழிந்தோடியது.
இல்லையென்று மென்னகையுடன் தலையைச் சிலுப்பிக்கொண்ட அரவிந்தன், அவள் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டால் தங்கள் நட்பிற்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற பயத்தில் குழம்பிவிட்டதாகத் தன் மனப்போராட்டங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து, “ஆனால் இப்போ எனக்கு அந்தப் பயமில்ல. ஏன்னா அவ கல்யாணம் செய்துக்கப்போறது, என் நண்பனைத் தானே!” முடிவே செய்துவிட்டவன்,
“இன்னையோட உன் பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பை சொல்லு,” மனத்தில் எந்தவொரு சலனமும் இல்லாமல் வாழ்த்தி, உணவைப் பரிமாறினான்.
காதலை விட்டுக்கொடுக்கும் நண்பன் ஒரு புறம்; காலத்துக்கும் துணையாய் வருகிறேன் என்று சொல்லும் தோழி மறுபுறம். மீரா அவன் மனைநிலையை எவ்வளவு துல்லியமாகக் கணித்திருக்கிறாள் எனச் சிந்தனையில் கரைந்த ஹரிக்கு, அவர்கள் பரஸ்பர புரிதலுக்கு முன்னால், தான் எம்மாத்திரம் என்றுதான் தோன்றியது.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கவனிக்க, அரவிந்தன் அதிகாலையிலேயே செல்ல திட்டமிட்டிருந்தான்.
“புது சட்டை; புது காதலி; ம்ம்….கலக்குற ஹரி!” கண்ணாடி முன்னின்று தலை வாரி கொண்டிருந்தவனை ராகம் போட்டு வம்பிழுத்தான் அரவிந்தன். இனி அவனுக்கு, அந்தச் சட்டை ஏன் வந்தது எதற்காக வந்தது எனச் சொல்லித் தெரிய வேண்டியிருக்கவில்லை.
“நீ வேற ஏன்டா, எனக்கே பயமா இருக்கு… எடுத்திருக்கும் முடிவு சரியான்னு தெரியல,” ஹரி முகம் சுருக்க,
“எல்லாம் சரியாதான் இருக்கும்!” கண்களில் சிரிப்பு மின்ன நண்பனின் தோளினில் தட்டினான் அரவிந்தன்.
“உனக்கு இதுல….” ஹரி தொடங்க, “ஒரு வருத்தமும் இல்ல!” உறுதியளித்தான் அரவிந்தன்.
ஒப்புக்காகத் தலையசைத்து ஹரி திரும்ப, சட்டை வைத்திருந்த ஜவுளி பையை ஆராய்ந்த அரவிந்தன், அதில் பழைய செய்தித்தாள் ஒன்றை மடித்துவைத்து, வெளியே தெரியாதவாறு மூடினான்.
“என்னடா செய்யற?” புருவச் சுளிப்புடன் வினவினான் ஹரி.
“இதை மீராகிட்ட கொடுக்கப்போறேன். நீ அவ காதலுக்குச் சம்மதம் சொல்லலேன்னு வருந்துவா. அப்புறம் உன்னை நேருல பார்த்ததும் பூரிச்சுப்போவா! எப்படி என் மாஸ்டர் பிளான்?” சட்டை காலரை தூக்கிவிட்டு வில்லத்தனமாகச் சிரித்தான் அரவிந்தன்.
“ஏன்டா உனக்கு இந்த விபரீத விளையாட்டு?” ஹரி மறுக்க,
“உன் ஆளு கொஞ்சம் நேரம் வருந்தினால் எதுவுமாகிடாது,” நமுட்டுச் சிரிப்புடன் வம்பிழுத்தான் அரவிந்தன்.
“அதுக்கில்லடா, அப்புறம் அவ கருத்தரங்குல ஒழுங்கா பேசலேனா?” ஹரி அக்கறையில் நினைவூட்ட,
“அதுக்குள்ளத்தான் நீ வந்திடுவியே.” தர்க்கம் செய்தான் அரவிந்தன்.
“ரொம்ப பிளான் பண்ணற; அவ உடனே பிரிச்சுப் பார்த்துட்டு, உன்னை மொத்து மொத்துன்னு மொத்துவா பாறேன்,” ஹரி தன் யூகத்தைச் சொல்ல, அதற்கும் உரக்கச் சிரித்த அரவிந்தன்,
“நோ சான்ஸ்! அவ சரியான ரோஷக்காரி; கண்டிப்பா தொட்டுக் கூடப் பார்க்க மாட்டா!” சத்தியம் செய்யாத குறையாக அடித்துச் சொன்னான்.
“ஒரு வேளை திறந்துட்டா?” விடாமல் நச்சரித்தான் ஹரி.
“உனக்கு அப்படித் தோணுச்சுனா ஒரு காதல் கடிதம் எழுதி உள்ளே வை. எனக்கு அடியாவது மிஞ்சும்,” அரவிந்தன் யோசனை சொல்ல,
“அடப்போடா, உனக்கு நேரமாகுது கிளம்பு,” நழுவினான் ஹரி.
“உனக்கு எழுதச் சொல்லித்தரணுமா; சும்மா சாக்கு சொல்லாம எழுதுடா,” அரவிந்தன் கண்சிமிட்ட, அசடுவழிந்தபடி நண்பனின் அன்புக் கட்டளைக்குச் செவிசாய்த்தான் ஹரி.
வங்கிக்குள் நுழைந்ததுமே மீராவின் இருக்கையை நோக்கித்தான் நடந்தான் அரவிந்தன். வழக்கம்போல கணினியில் மூழ்கியிருக்கும் தோழியை ரசித்துத் தலையைச் சிலுப்பிக்கொண்டான்.
பல வங்கி அதிகாரிகள் பங்குகொள்ளும் கருத்தரங்கு என்பதால் சுடிதாருக்கு பதிலாகப் புடைவை உடுத்தியிருந்தாள். அந்தக் கஞ்சி போட்ட இளம் பழுப்பு நிற சேலையில், பிரம்படி கொடுக்கும் பள்ளி ஆசிரியர் போலவே தோன்றினாள்.
கையில் வைத்திருந்த பையை சாமர்த்தியமாக மறைத்துக்கொண்டு, “குட் மோர்னிங் மீரா! ஆடிட்டோரியம் போகலாமா?” என்று கேட்டான்.
அவளும் இளநகையுடன் தேவையானதை எடுத்துக்கொண்டு எழுந்துகொள்ள,
“ஓ, மறந்துட்டேன் மீரா! ஹரி இதை உன்கிட்ட கொடுக்கச் சொன்னான்!” எதார்த்தமாகப் பேசிக்கொண்டே அவள் மேஜை மேல் வைத்தான்.
பையைக் கண்டதுமே பெண்மானுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. புடைவையின் மடிப்புகளைச் சரி செய்துகொள்வது போல தலைகுனிந்து, முகத்தில் வழிந்த ஏமாற்றத்தை மறைத்தாள்.
அவள் முகபாவனைகளைக் கண்கொட்டாமல் கவனித்தவன், “என்னது அது?” அப்பாவியாகக் கேட்டு வம்பிழுத்தான்.
“ஒண்ணுமில்ல,” மழுப்பியவள், ஓய்வறைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறித் தப்பித்தாள்.
தனிமையை நாடிச் சென்றவளுக்கு ‘ஓ….’ என்று கதறி அழவேண்டும் போல இருந்தது. மனத்தில் புழுங்கிய ஏமாற்றம் வெள்ளமாய் பெருக்கெடுக்க, கண்ணிமைகளை இறுக மூடி கண்ணீருக்கு அணை கட்டினாள்.
‘இன்று முக்கியமான நாள். அரவிந்தனும் நானும் இந்த நாளுக்காகக் கடினமா பாடுபட்டிருக்கோம்,’ தனக்குத்தானே நினைவூட்டிக் கொண்டவள், “அரவிந்த்!” என்று உரக்கச் சொன்னாள்.
‘அவன் காதலுக்குத்தான் ஒரு நல்ல முடிவு சொல்லமுடியல; அவன் உழைப்புக்காவது உறுதுணையா இருக்கணும்,’ தெளிவானவள், கருத்தரங்கு நிகழும் இடத்தை நோக்கி நடந்தாள்.
ஆம்! இது அவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள். பல கிளைகளிலிருந்து, உயர் பதவியிலிருந்த ஊழியர்கள் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்தனர். வங்கிகள் செயல்படும் முறையில், காலத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை பற்றியும், நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ள வந்திருந்தனர். இதில் மிகச்சிறந்த திட்டங்களைப் பற்றி உரையாற்றும் குழுவிற்குச் சிறப்புப் பரிசுகள் கூட அறிவித்திருந்தனர். எல்லாவற்றிர்க்கும் மேலாக, இதில் வெற்றி பெற்றால், கிளை மேலாளர் என்ற வகையில், அரவிந்தனுக்கு பேரும் புகழும், அவர்கள் கிளைக்கு அங்கீகாரமும் கிடைக்கும்.
தன் சொந்த பிரச்சனையை பணியில் காட்டக்கூடாது என்று தெளிந்தவள் அரவிந்தனைத் தேடி வந்தாள்.
அவள் முகத்தைப் பார்த்தே அவளின் மனநிலை அறிந்தான் அரவிந்தன். ஏன் சீண்டினோம் என்று கூடத் தோன்றியது அவனுக்கு.
“வா மீரா! அடையார் கிளை மேலாளரை உனக்கு அறிமுகம் செய்யறேன்,” அழைத்தவன், கருத்தரங்கு தொடங்கும்வரை ஏதோ ஒன்றில் அவள் கவனத்தைத் திசைதிருப்பினான்.
விளையாடுவது ஏன்; இப்போது வருந்துவது ஏன் என்றுதான் அவனைக் கேட்க வேண்டும்!
கருத்தரங்கு தொடங்க அரைமணி நேரமே இருந்த நிலையில் அதில் பங்கேற்பவர்கள் மேடையில் வந்து அமர்ந்தனர். அன்று வங்கி விடுமுறை நாள் என்பதால், மற்ற ஊழியர்கள் தன் சொந்த விருப்பத்தில் வரலாம் என்று அறிவித்திருக்க, மகேஷும், கீதாவும் இதுதான் சாக்கு என்று வீட்டிலேயே இருந்துவிட்டனர்.
கருத்தரங்கு தொடங்கி இருபது நிமிடங்களான போதும், அரவிந்தனின் கவனமெல்லாம் அவன் அலைபேசியில் தான் இருந்தது.
“அப்படி என்னத்தான் இருக்கு அந்த ஃபோன்ல. அதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணு அரவிந்தா!” அவன் அலட்சிய போக்கில் மீரா எரிச்சலடைய,
அவனோ குனிந்த தலை நிமிராமல் உதடுவரை வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கி, “வாங்கிக் கொடுத்ததுதான் வாங்கிக் கொடுத்த… சம்மதம் சொல்ல பச்சை சட்டை கொடுத்திருக்கலாமே! இப்படியா கண்கூசும் அளவுக்கு சிவப்பு நிறத்துல எடுத்துக் கொடுப்ப? நக்கல் செய்தான்.
புருவங்கள் வளைய ஸ்தம்பித்தவளின் முகம் பார்க்கத் தலையைத் திருப்பியவன், “எனக்கு எல்லாம் தெரியும்டி,” இமைகள் மூடித் திறந்தவன், வலதுபுறம் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் திசையில் சுட்டிக்காட்டி, “உன் ஆளு சிம்லா ஆப்பிள் மாதிரி எப்படி ஜொலிக்குறான் பாரு,” என்றான்.
பார்வையாளர்களுக்கு மத்தியில் ஹரியின் தரிசனத்ததைப் பெற்றவளின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் குளமாகின. அதுவும் அவள் பரிசளித்திருந்த சட்டை அணிந்திருக்கிறான் எனக் கண்டவளுக்கு ஈடில்லா மகிழ்ச்சி. அவள் முகமலர்ச்சியைக் கண்டுகொண்ட ஹரியும் கன்னத்தில் குழி விழப் புன்னகைத்து, விழிகள் மூடித்திறந்து தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
அவர்கள் பரிபாஷைகளை உளமார பருகிய அரவிந்தன், “மீரா மா! நம்ம கிளையே, உன்னை நம்பித்தான் இருக்கு; சரியா பேசுவல்ல,” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
“இதெல்லாம் உன் வேலையா?” கண்ணீரும் சிரிப்புமாய் நண்பனைப் பார்வையால் சுட்டெரித்தாள் மீரா.
“என்ன கழட்டி விட நினச்சல்ல!” அவனும் விஷமப்புன்னகையுடன் முறைக்க,
“அடப்பாவி! வெளியே வா இருக்கு உனக்கு,” தோளில் ஓங்கி அடித்தாள்.
ஓரிரு நிமிடத்தில் கருத்தரங்கும் தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராகப் பேச, இவர்கள் முறையும் வந்தது. எல்லோரையும் கவரும் விதமாக இருவரும் பேசினர்.
சில காலமாகப் பிரபலமாகி வரும் ‘கோர் பேங்கிங்’ பற்றி, பாமர மக்களுக்கு எப்படி அதிக விழிப்புணர்வை உருவாக்க முடியும் என்பதை விவரித்தனர். தாங்களே சொந்தமாய் சிந்தித்து வடிவமைத்த சில வழிமுறைகளையும் விளக்கினர். நண்பர்களாக இருந்ததாலோ என்னமோ, இயல்பாகவே அவர்களால், ஒருவரை ஒருவர் அனுசரித்து மேடையில் பேச முடிந்தது.
ரொம்ப நல்லா பேசின மீரா! நமக்கு முதல் பரிசு கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கு,” தங்கள் இருக்கைக்குத் திரும்பியதும், தோழியின் கைகுலுக்கிப் பாராட்டினான் அரவிந்தன்.
“என்ன மன்னிச்சிரு டா!” குற்றவுணர்ச்சியில் தவித்தவளின் கண்ணோரம் மழைச்சாரல் வழிந்தது.
“நீ எந்தத் தப்பும் செய்யல மீரா; உன் நோக்கம் ரொம்ப உயர்ந்தது,” பெருமைப்பட்டவன் அவள் தலையில் ஆறுதலாகத் தட்டிக் கொடுத்தான்.
அவன் கரிசனத்தில் நெக்குருகியவளின் குற்றவுணர்ச்சி அவளைப் பிடுங்கித் தின்றது.
“மீரா! இந்தமாதிரி அவன் முன்னாடி ஃபீல் பண்ணாத; அவன் ஏற்கனவே எடுத்த முடிவு சரியா இல்லையான்னு குழம்பிட்டிருக்கான்,” அரவிந்தன் எச்சரிக்க, அவள் கண்கள் ஹரியைத் தேடியது.
கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருந்தபோதும் வெகுதொலைவில் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு.
ஒரு மணி நேரத்தில் கருத்தரங்கு நிறைவுக்கு வர, இவர்களுக்கு முதல் பரிசும் அறிவித்தனர். இதற்காகப் பெரும் லட்சியத்துடன் அயராது உழைத்தவளுக்கு, இன்று இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியைக் காட்டிலும் தன் காதல் கைகூடிய வெற்றிதான் பெரிதாகத் தோன்றியது.
“வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!” வாய்கொள்ளா புன்னகையுடன் நண்பர்களை நோக்கி ஓடிவந்தான் ஹரி.
“உனக்கும் தான்டா நண்பா!” அரவிந்தன் சீண்ட, ஹரியின் காந்தக் கண்கள் அகம் நுழைந்தவளை ஊடுருவியது.
அவர்கள் செய்த குறும்புகளை நினைவுகூர்ந்தவள், “காலி கவரையா கொடுத்து ஏமாத்துற?” கோபம், காதல் அனைத்தையும் ஹரியின் புஜத்தில் இறக்கினாள்.
“ஆ… வலிக்குதுடி!” கண்களைச் சுருக்கி அலறியவன், “நீ அதைத் திறந்து பாத்திருந்தா காலியா இல்லையான்னு தெரிஞ்சிருக்கும்,” கன்னத்தில் குழி விழ சிரித்தான்.
புருவச் சுளிப்புடன் மீரா விலகி நிற்க, தோழியின் தோளினை அரவணைத்த அரவிந்தன், “ஆமாம்! உன் எழுத்தாளர் உனக்குக் காதல் கடிதம் எழுதியிருக்கான். நான் உறுதியா சொன்னேன், நீ அந்த கவரைத் தொடக்கூட மாட்டேன்னு.” தன் திட்டம் வெற்றியடைந்ததை கர்வத்துடன் கிசுகிசுத்தான் அரவிந்தன்.
“உனக்கு விளையாட நேரம் காலமே இல்லையா ஹரி,” கண்களை உருட்ட,
“டேய்! இவளை நம்பி உன் வாழ்க்கையைப் பணயம் வைக்கப்போறியா? இத்தனை நாளா ஆஃபிஸ்ல மட்டும் உன்னை அதிகாரம் பண்ணவ, இனி முழுநேரம் மனைவின்ற பேருல கொடுமைப்படுத்த போறாடா; யோசிச்சிக்க!” விடாமல் சீண்டினான் அரவிந்தன்.
அவன் விளையாடுகிறான் என்று தெரிந்தும், “அவனை நம்பாத ஹரி! ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பறான்,” மீராவும் பதறுவது போல நடிக்க,
“இவ அன்புத்தொல்லைகளை எதிர்கொள்ள நான் தயார்!” காதலாய் மொழிந்து தன்னவளின் தலையில் செல்லமாகத் தட்டினான் ஹரி.
“அப்படிச் சொல்லு ஹரி!” பூரித்தவள், அந்தக் காதல் கடிதத்தைப் படித்துவிட்டு வருவதாகக் கூறித் துள்ளி குதித்து ஓடினாள்.
பக்கம் பக்கமாய் கவிதைகள் வரைந்திருப்பான் என்று எதிர்பார்த்து ஓடியவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
“சம்மதம்! நிபந்தனைகளுக்கு உட்பட்டு!” மூன்றே வார்த்தைகளைச் சுமந்த அந்தத் தாளை முன்னும் பின்னும் ஆராய்ந்தவள், ‘இது காதல் கடிதமா இல்லை கடன் பத்திரமா!’ என வாய்க்குள் முணுமுணுத்தாள்.
நெஞ்சம் நிறைந்தவனே எனப் பித்துப்பிடித்து உருகும் அவளிடம்,
நிபந்தனைகள் எனப் பிடிக்கொடுக்காமல் உறவாடுகிறான் இவன்;
நிறைகுறைகளை ஏற்று வாழ்வதே நிதர்சனமென உணர்ந்தார்களா- பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here