63 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
எழுத்தாளர் வேதா விஷால் அவர்களின் “எந்தையும் தாயும்”.
நடிகர் விவேக் ஒரு படத்தில் சொன்னதுபோல, நிறைய குடும்ப நாவல்கள் முட்டிமோதிப் போராடி திருமணத்தில் இணையும் ஜோடிகளைச் சுற்றி நகர்ந்து, பின் முதல் குழந்தை பிறந்தவுடன் “இனி எல்லாம் சுபமே” என முடிந்துவிடும்.
அதற்கு மாறாக, அறுபது நாள் வழிந்தோடிய ஆசை ஆயுசுக்கும் நீடித்ததா என்ற கேள்விக்குப் பதில் சொல்லும் வகையில் சாரநாதன்-மாளவிகா வாழ்க்கையின் எல்லா பக்கங்களையும் அலசி ஆராய்ந்து, Ego என்னும் Slow Poison மெல்ல மெல்ல தன் வேலையைக் காட்டியதை அட்டகாசமாய் விவரித்த உங்களுக்கு Hats Off ஆத்தரே.
உங்கள் எழுத்து நடை எப்போதுமே தனித்துவமானது தான்.
இக்கதையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால், கதையின் பெரும்பாலான இடங்களில், பெற்றவர்கள், கூடப் பிறந்தவர்கள், சொந்த பந்தங்கள், “பாசம், அக்கறை, உரிமை” என்ற பெயரில் சாரநாதன்-மாளவிகாவின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட தருணங்களை அத்தியாயம் முழுக்க விவரித்துவிட்டு, ஆங்காங்கே ஓரிரண்டே வரிகளில் கபிலனின் ஒற்றைக் கேள்வியில் எங்களைக் கண்கலங்க வைத்துவிட்டீர்கள்.
தனியறை வாசத்தில் துவண்டுபோனது, குடும்பப் புகைப்படம் கேட்டது, காரில் உற்சாகமாக ஏறிய குழந்தையின் மனம் மல்லிகை வாசத்தில் உடைந்தது, அம்மாவுக்குத் தலைசுற்றல் ஏன் என உணர்ந்தது, செண்பாவின் வளைகாப்பு, காலப்பந்தை வெறித்தனமாக விளையாடியதற்குக் காரணம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.
பெரியவர்களின் செயல்களைப் புரிந்தும் புரியாமலும் கபிலன் மனதில் போட்டுப் புழுங்கிய இடங்களைப் படிக்க மனம் கனத்தது. இந்தக் குழந்தையின் உணர்வுகளைப் புரிஞ்சுக்க ஒருவர் கூட இல்லையா என மனம் பதைபதைத்தது.
விட்டுக்கொடுத்து வாழத் தெரியாத இவர்களுக்கு இன்னொரு குழந்தை தேவையா என சாரநாதன்-மாளவிகா மேல் கோபம் வந்தது என்னமோ உண்மைதான். ஆனால் கபிலன் மேல் பாசமழை பொழிந்த அனைத்துக் குட்டீஸின் அன்பில் மெய்சிலிர்த்துப் போனேன். (கடவுளின் தீர்ப்பில், There is reason for everything என மானசீகமாக உணர்ந்தேன்.)
Especially நுங்கு குட்டியின் bonding. அண்ணன்-தங்கை உறவு எப்போதுமே Very Very Special தான். பெரியவர்கள் கொடுக்காத அரவணைப்பையும், கவனத்தையும்(Attention) அடுத்த தலைமுறையினர் அள்ளி அள்ளித் தருகிறார்கள் என்பதைக் கண்டபோது மனத்திற்குப் பெறும் ஆறுதலாக இருந்தது. கல்லூரிப் படிப்பு பற்றிய அவன் தொலைநோக்கு பார்வை வாரே வாவ். இனிமேல் உன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும்தான் டா என்று மலை உச்சியில் நின்று கத்தத் தோன்றியது.
கபிலனின் பிள்ளைப்பருவத்தைச் சின்னாபின்னமாக்கிய ஒவ்வொருவரின் சூழ்நிலை, காலம்கடந்த ஞானம் அனைத்தும் மிகவும் எதார்த்தமாக இருந்தது. நீலவேணியின் தவிப்பு இயல்பு என்றால், காவேரியின் குணத்திற்கு நீங்கள் தந்த விளக்கம் வாரே வாவ்.
தன் காரியமே குறியாக இருக்கிறானே என ஜெயபிரகாஷ் மேல் எரிச்சல் வந்தாலும், தள்ளி நின்று உறவாட அவன் சொன்ன காரணங்கள் ஏற்கக் கூடியதாக இருந்தது.
ஆனால் மாளவிகாவை தான் என்னால் மன்னிக்கவே முடியவில்லை. மிகுந்த விருப்பத்துடன் டே கேர் நிர்வாகம் செய்யும் ஒருத்தி, தன் சொந்த மகனின் உணர்வுகளை அலட்சியப் படுத்திவிட்டாளே என்ற ஆதங்கம் மேலோங்கியது.
சாரநாதனுடனான திருமண வாழ்க்கையில் மாளவிகாவின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும், கேட்பார் பேச்சைக் கேட்டு குழம்பியதும், ஆத்திரத்தில் வாய் விட்டதும், அதன் பின்விளைவுகளும் என அனைத்தும் திருமணப் பந்தத்தில் இணையும் இன்றைய தலைமுறையினர் பெண்களுக்கு “Life is not a bed of roses!” என விழிப்புணர்வுட்டும் வகையில் இருந்தது.
சாரநாதன் மேலும் அதே ஆதங்கம் இருந்தது. மகனை வாரத்தில் ஒரு நாள் வந்து பார்க்க மெனக்கெடும் இவன் ஏன் குழந்தையைத் தன் கூடவே வைத்துக்கொள்ள தயங்குகிறான் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ‘இந்தமுறையாவது தன்னோடவே அழைச்சிட்டுப் போயிடுவானா.’ என்ற நப்பாசை பட்டேன்.
‘என்னோட வந்துடுறீயா அப்பு’ ன்னு சாரநாதன் கேட்டப்போது அப்பாடா என்றிருந்தது.
ஆனால் கபிலன் மறுத்ததும், அதைப் பின் தொடர்ந்து வந்த பிளாஷ்பேக்கும், சாரநாதன் ஏன் தயங்கினான் என்று உணர்த்தியது. இரண்டு பக்கமும் அடிவாங்கும் மத்தளத்தைப் போலான திருமண வாழ்க்கையில் தொலைத்த “கபிலன் என்னும் பொக்கிஷத்தை” மீட்கவும் முடியாமல், விட்டுத் தள்ளவும் முடியாமல் திண்டாடுகிறான் என அவன்மேல் பரிதாபம்தான் வந்தது.
அதேமாதிரி, வீடு தொழில் என அனைத்தையும் கம்பீரமாகக் கையாளும் ஒருவன், திருமண வாழ்க்கையில் எப்படிக் கோட்டைவிட்டான் என்பதும் புதிராக இருந்தது. ஒன்றுக்கு இரண்டு திருமணமான பின்னும் சிடுமூஞ்சியாக இருக்கும் இவனிடம் தான் குறை என ஒரு கட்டத்தில் முடிவே செய்துவிட்டேன். ஆனால் தோட்டத்து வீட்டில் செண்பாவிடம் அவன் ஒளிவுமறைவின்றி பேசிய காட்சியில் மனத்தைக் கொள்ளைகொண்டுவிட்டான் ஆத்தரே.
என்னவொண்ணு! அன்னைக்குப் பேசினா மாதிரியே எப்பவுமே செண்பாகிட்ட மனச திறந்து பேசியிருந்தா, அவ கண்டிப்பா அவன் வலிகளுக்கு ஆறுதலா இருந்திருப்பா என்பது என் எண்ணம்.
‘இல்ல! இல்ல! செண்பா ரெண்டாங்கெட்டான், சின்னப்பொண்ணு, பக்குவம் போதாது’ என்றெல்லாம் சொல்பவர்களுக்கு என்னுடைய கண்ணோட்டம் இது தான்.
*Ignorance is bliss என்பதுபோல வயதிலும், வெளிஉலக அனுபவம் இல்லாத போதிலும், ‘கபிலனுக்காகத் தான்’ என்ற சாரநாதனின் காரணத்தை எந்த எதிர்கேள்வியும் இல்லாமல் ஏற்றவள் அவள்.
*கார் வாங்கியது முதல் குலதெய்வ கோவில் பயணம் வரை அவன் உணர்வுகளைப் புரிந்துகொண்டாள்.
*சொல்லப்போனால் கேட்பார் பேச்சைக் கேட்டுக் குழம்பிய மாளவிகாவை காட்டிலும், ‘என் மாமன்! என் கணவன்’ எனத் திடமாகவே இருந்தாள் செண்பா.
இந்தக் கதையில் கபிலனுக்கு இணையாக நான் உருகியது செண்பாவை நினைத்து தான்.
ஆயிரம் தான் பாட்டி நல்லபடியாகப் பார்த்துக்கொண்டாலும், அறியாத வயதிலே தந்தையை இழந்தும், பொறுப்பில்லாத தாயின் நிழலில் வளர்ந்தும், எதிர்பாராத நேரத்தில் எதிர்பார்க்காத மாமனுக்கு இரண்டாம் தாரமானதும், முன்னறிவிப்பே இல்லாமல் இல்லறத்தில் இணைந்தும் என அவளுக்கும் தான் வாழ்க்கை முழுக்க சாய்ஸே இல்லை.
ஆக அவளை நான் குறையே சொல்லமாட்டேன். அவ்வப்போது அவள் சண்டையிட்டதும், முறுக்கிக்கொண்டதும், புலம்பியதும் என யாவும் அன்பிற்கும், பாசத்திற்கும் ஏங்கிய அவளின் மனத்தின் எதிர்பார்ப்புகளே.
செழியன், வள்ளி எனத் துணை கதாபாத்திரங்களின் தார்மீக ஆதரவும் அற்புதம்.
கிரிஸ்டி கதாபாத்திரத்தை மட்டும்தான், ‘எதிர் நீச்சல் படத்தின் லொக்கு லொக்கு தாத்தா’ மாதிரி கண்ணில் காட்டாமலேயே விட்டுவிட்டீர்கள்.
எப்போதும் போல கதைமாந்தர்களின் சுற்றுப்புறம், பழக்க வழக்கங்கள், உணவு உடை, அவர்கள் தொழில் சார்ந்த நுணுக்கமான தகவல்கள் என அனைத்தையும் அசத்திவிட்டீர்கள்.
முருங்கைப் பூவின் தேன் செம்ம!
மல்கோவா, நுங்கு என அனைத்து அடைமொழிகளும் அசத்தல். அதுவும் நிறைய இடங்களில் சாரநாதனின் மைண்ட் வாய்ஸ் ‘மல்கோவா!’ என எதிரொலித்த போது, “அடேய்! உனக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா” என்று தோன்றியது.
நுங்குகுட்டி மேல் பஜ்ஜி வாசம் வருவதற்கு நீங்கள் சொன்ன காரணம் தூள்!
உங்கள் எழுத்தின் மாயாஜாலத்தால், சாரநாதனின் வேட்டிக்கும் தனி மௌசு வந்துவிட்டது.
ஒரு முறை Late Night வீடு திரும்பும் சாரநாதன் சாதம்தான் வேண்டும் என்றதும் முகம் சுளிக்காமல் துவையல் பொறியல் என நாலு அடுக்காய் சமைத்துப் பரிமாறுவாள் செண்பா; அதே மாதிரியான சூழலில் ஜெய்பிரகாஷ் தன் இரவு உணவை வெறும் பிரெட் பாலுடன் முடித்துக்கொள்வான்.
அவ்விரண்டு காட்சிகளையும் தற்செயலாக யோசித்தீர்களா இல்லை திட்டமிட்டு வைத்தீர்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மனத்தில் தோன்றிய உணர்வு இதுதான்.
ஓடி ஓடி உழைப்பதே அரை ஜான் வயிறுக்காகத் தான் என்பதை உணர்ந்து மூன்று வேளையும் சலிக்காமல் வீட்டிலேயே சமைத்து சாப்பிடும் கிராமத்தினர் வாழ்க்கைமுறையையும், நாகரீகம் என்ற பெயரில் Fast Foodக்கு மாறிய நகர்புறத்தினரின் வாழ்க்கைமுறையையும் சொல்லாமல் சொன்னது போல தோன்றியது.
சிறுபிள்ளைகள்தானே! பழகிக்கொள்வார்கள் என்று அலட்சியம் செய்தும், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளே பிராதானம் என்றும் வாழ்க்கை முடிவுகளை எடுக்கும் பெற்றவர்களின் மனக்கண்ணைத் திறக்கும் விதமாக, உணர்ச்சிகளின் குவியலாகக் கதை தந்த ஆத்தருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
புத்தகம் கிடைக்கும் இடம்:
புத்தகங்களைப் பெற அருணோதயத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.
மொபைல் எண் 9952076258.
BOOK FAIR : அருணோதயம் 6th Row, Stall No: 462, 463

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here