90 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
வங்கியிலிருந்து புறப்பட்ட நண்பர்கள் வீட்டின் அருகே இருந்த பல்பொருள் அங்காடி ஒன்றை வந்தடைந்தனர். ஹரி கடைக்குள் சென்று மறுநாளிற்குத் தேவையான பிரட், ஜாம், பழங்கள் வாங்கி வர, டின்னருக்குச் சாப்பிட முன்வாசலிலிருந்த தள்ளுவண்டி உணவகத்திலிருந்து சப்பாத்தி, சன்னா மசாலா பார்சல் செய்துகொண்டான் அரவிந்தன்.
அச்சமயம் அரவிந்தனின் அம்மா அவனை அழைத்தார். ‘வேண்டாம், பார்க்கலாம்’ எனப் பிடிக்கொடுக்காமல் பேசிய நண்பனின் தோரணையில் வருத்தம் கொண்டான் ஹரி.
“அவங்க கேட்கறதுல என்ன தப்பு? அவங்களுக்கும் உன்னோட வந்து இருக்கணும்னு ஆசை இருக்காதா டா?” ஹரி அக்கறையாகப் பேச,
“அதெல்லாம் உனக்கும் மீராவுக்கும் கல்யாணமானதுக்கு அப்புறம் பார்த்துக்கலாம்,” திட்டவட்டமாக மறுத்தான் அரவிந்தன்.
ஒரு வருடத்திற்குப் பிறகுதான் திருமணம் செய்துகொள்ள திட்டமிருப்பதாக ஹரி கூறிய போதும், அரவிந்தனின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னைக்கு வர அரவிந்தனின் அம்மா பரபரப்பது ஏன் என்ற உண்மை காரணம் அறிந்திருந்த ஹரி, “நீயும் சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும் அரவிந்தா,” வேதனையுடன் உரைத்தான்.
“அதான் ஒரு வருஷமிருக்குல… கல்யாணமே செஞ்சிக்கலாம்,” கண்சிமிட்டினான் அரவிந்தன்.
அதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு எனக் கலங்கிய கண்களுடன் நண்பனை ஆரத்தழுவினான் ஹரி.
தங்கும் விடுதியில் வசித்தால், நண்பனுக்குப் புத்தகம் பதிப்பிக்கத் தேவையான சுற்றுசூழல்களும், வசதி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் அரவிந்தன் தனி வீடு எடுத்து தங்க நினைத்ததே. ஆனால் இப்போது அவன் மனத்தில் வேறு சில கவலைகளும் சேர்ந்துகொண்டன.
பெற்றவர்களை சென்னைக்கு அழைத்துவரும் பட்சத்தில், ஹரி தங்கும் விடுதிக்குச் சென்றுவிடுவான் என நன்கு அறிந்திருந்தான். அவன் அப்படிச் செய்தால், அவ்விடம் மீரா அவனைச் சந்தித்துப் பேசிப் பழக ஏதுவாக இருக்காது எனத் தோழியின் சௌகரியத்திலும் பாதுகாப்பிலும் அக்கறையாக யோசித்தான். அதனால், குறைந்தபட்சம் அவர்கள் திருமணம் நிச்சயமாகும் வரையாவது தன் பெற்றவர்களை சென்னைக்கு அழைத்து வரக்கூடாது என ரகசியத் தீர்மானம் செய்துகொண்டான் அரவிந்தன்.
அன்று கருத்தரங்கில் பேசிய ‘கோர் பாங்கிங்க்’ விழிப்புணர்வு திட்டங்களை, செயலில் கொண்டு வருவதைப் பற்றி விவரிக்க, தன் கிளையின் துறை தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தான் அரவிந்தன்.
விளம்பரப் பலகைகள் வைத்து வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வூட்ட எண்ணியவன், தான் வடிவமைத்த வடிவங்களைக் காட்டினான். அவர்கள் பகிர்ந்த ஆலோசனைகளையும், மாற்றங்களையும் குறித்திக்கொண்டு திருத்தங்களைச் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஓடியிருந்தது.
அனைவரும் கைகுலுக்கி விடைப்பெற, மீரா மட்டும் அங்கேயே நின்றுகொண்டாள். கடந்த இரண்டு நாட்களாக மதிய உணவு இடைவேளையின் போது, மற்றவர்கள் எல்லாம் கலகலப்பாய் இருக்க, இவன் மட்டும் தனியாக இருந்ததுபோல வருத்தம் அவளுக்கு.
“அரவிந்த்! நீயும் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சி, லைஃப்ல செட்டில் ஆகணும் டா,” மென்று விழுங்கினாள்.
பார்த்து கொண்டிருந்த கோப்பை ஒரே திருப்பில் மூடியவன், “அது எப்படி, புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசுறீங்க?” நமுட்டுச் சிரிப்புடன் தலையைச் சிலுப்பிக்கொண்டான் அவன்.
ஒரு கணம் குழம்பினாலும், அவன் ஜாடை பேச்சை உணர்ந்தாள் மீரா. ஹரியும் அவனிடம் இதைப்பற்றி பேசியிருக்க வேண்டுமென்று நினைத்தாள்.
“உன்னோட இந்த நிலைமைக்கு நான்தானே காரணம்,” அவள் முடிக்கும் முன்,
“நீ உன் விருப்பத்த சொன்ன; அவ்வளவுதான் மீரா; நான் அப்பவே அதை மறந்துட்டேன்,” என அழுத்திக் கூறினான்.
“அப்படின்னா அதை செயலில் காட்டு,” அவளும் வலியுறுத்த,
“காட்டாமல்…” இழுத்தவன், “உன் நெனப்புல தாடி வளத்துட்டு, சோக பாட்டு பாடுவேன் நெனச்சையா?” சீண்டினான்.
அவன் வேடிக்கை பேச்செல்லாம் அவள் முன் செல்லாக்காசானது.
“உங்க கல்யாணத்துக்கு நான் என் மனைவியோட தான் வருவேன், போதுமா?” அவன் நம்பிக்கையூட்ட, அப்படியே ஆகட்டும் என நண்பனை மனதார வாழ்த்தி, மென்னகையுடன் நகர்ந்தாள் மீரா.
“வேணும்னா, உங்க அப்பாகிட்டச் சொல்லி எனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்கச் சொல்லுடி,” உரக்கக் கூறி அவளை வம்புக்கு இழுத்தான் அரவிந்தன்.
பாதி திறந்த கதவின் இடுக்கில் நின்றவள், கேள்வியாய் அவனைப் பார்க்க, “அதான் இப்போ உனக்கு மாப்பிள்ளை தேடுற வேலை அவருக்கு மிச்சமாச்சே,” அவன் கண்சிமிட்ட, பொய்கோபத்துடன் அசடுவழிந்தபடி நகர்ந்தாள் அவள்.
பணியிருக்கைக்கு வந்தவளுக்கு ஹரியைப் பற்றி இன்னும் வீட்டில் சொல்லவில்லையே என்ற கவலை அப்பிக்கொண்டது. தயக்கத்திலேயே இத்தனை நாட்களையும் வீணடித்துவிட்டேனே என நொந்தவள் அன்று மாலை அவன் தன் தந்தையைச் சந்திக்க வருவதற்குள் எப்படியாவது வீட்டில் சொல்லிவிட வேண்டுமென்று தெளிந்தாள்.
பங்குச் சந்தை நிலவரம், பெட்ரோல் விலை உயர்வு என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள் மீரா.
ஹரி வருவதற்கு ஒருமணி நேரமே மீதமிருக்க, “அப்பா, நான் ஒருத்தர கல்யாணம் செஞ்சிக்க விரும்பறேன்,” நேரடியாக விஷயத்திற்கே வந்தாள்.
வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனையை விட பெரியதாக இருக்கும் என யூகித்து தொலைக்காட்சியை அணைத்தவர், “யார் அந்தப் பையன்? எவ்வளவு நாளா பழக்கம்?” வழக்கமான கேள்விகளை அடுக்கினார், எந்தவித எதிர்ப்போ அதிர்ச்சியோ இல்லாமல்.
“என்னடி சொல்லற?” கணவருக்கும் சேர்த்துப் பதறினார் நிர்மலா.
“அவள பேசவிடு நிர்மலா!” மனைவியைக் கண்டித்தவர், விவரங்களைக் கூறுமாறு மகளிடன் நிதானமாகக் கேட்டார்.
“உங்களுக்கு நல்லா தெரிஞ்சவன் தான் ‘ப்பா,” அப்பா தந்த தைரியத்தில், கண்கள் மின்ன துப்புக் கொடுத்தாள் மீரா.
“அரவிந்தனா?” நிர்மலாவின் முகம் பூரிப்பில் மலர,
“இல்லம்மா ஹரி,” மீரா மர்மத்தை உடைத்தது தான் தாமதம்.
“அவனா?” முகம் சுளித்த வரதன், “காதல் திருமணத்திற்கு நான் எதிர்ப்பு சொல்லமாட்டேன் மீரா. ஆனால் இவன் உனக்குச் சரியானவனான்னு யோசிச்சுப் பாரு,” என ஹரியின் பதவி, ஊதியம் என அனைத்தையும் சுட்டிக்காட்டினார்.
“அப்பா சொல்றது சரிதானேடி?” நிர்மலாவும் ஒத்தூத,
அன்னை முகத்தைப் பார்த்தவள், “அவன் இப்ப வேணும்னா சுமாரான வேலையில் இருக்கலாம் ‘ம்மா. ஆனால் ஒருநாள், நிச்சயமா என்னைவிட உயர்ந்த நிலைக்கு வருவான்.” பெருமிதம் பொங்க பதிலுரைத்தாள்.
“அது எப்படி இத்தனை நாளா வராத முன்னேற்றம் திடீர்னு வந்துடும்?” வரதனின் முகத்தில் ஆர்வம் மேலோங்கியது.
ஹரியைப் பற்றி உயர்வாகச் சொல்ல இதுவே தக்க சந்தர்ப்பம் எனத் தொண்டையைச் செருமிக்கொண்டவள், “அவன் ஒரு சிறந்த எழுத்தாளன். இதுவரை பதினெட்டு கதைகள் எழுதியிருக்கான். ஆனால் எதையும் பதிப்பிக்க முடியாத சூழ்நிலை,” எனக் குடும்பப் பொறுப்புகளுக்காக லட்சியங்களை மூடி மறைத்து வாழும் அவன் நெருக்கடியை எடுத்துச் சொன்னாள்.
கலை உலகத்தில் கடுகளவு கூட நாட்டம் இல்லாத மனிதர் அவர்.
மறுப்பாய் தலையசைத்தவாறு ஏளனமாகச் சிரித்தவர், “இந்தக் காலத்துல யார்தான் எழுதறது இல்ல; தெருவுக்கு ஒருத்தன் கதை எழுதறான்; அதையும் ஒருத்தன் சினிமா படமா எடுக்கறான்,” கொச்சையாக விமர்சித்துக் கொண்டே போக,
“ஹரி ஒண்ணும் ஏனோதானோன்னு எழுதறவன் இல்ல! ஒவ்வொரு கதையும் கருத்தூன்றி எழுதியிருக்கான்!” குரலை உயர்த்தினாள் மீரா.
மகள் எதிர்த்துப் பேசுவதில் கோபமடைந்தவர், “அவ்வளவு நல்லா எழுதியிருந்தா, இத்தனை நாளா ஏன் ஒருத்தர் கூட அவனை அடையாளம் கண்டுக்கல,” அவர் கொந்தளிக்கவும் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.
வந்திருப்பது ஹரியாகத் தான் இருக்கும் என யூகித்தவள், அப்பா இருக்கும் இந்த மனநிலையில் அவன் பணத்தைப் பற்றி பேசத் தொடங்கினால், அவர் கோபம் எல்லையைக் கடந்துவிடுமே என அஞ்சினாள். கடைசி நிமிடம் வரை வீட்டில் சொல்லாதது தன் தவறு என நொந்துகொண்டவள், பணம் விஷயத்தில் அவர்கள் கலந்து பேசியதைப் பற்றி படபடவென்று ஒப்பித்து,
“உங்களுக்கு இதுல உடன்பாடு இல்லேனாலும் பரவாயில்ல. அவன்கிட்ட சாதரணமா பேசுங்க ‘ப்பா. அவன் மனச காயப்படுத்துறா மாதிரி எதையும் சொல்லிடாதீங்க. நாம அவன் கிளம்பினத்துக்கு அப்புறம் திரும்பப் பேசலாம்,” காலில் விழாத குறையாகக் கெஞ்சினாள்.
அவர் முகத்தில் கோபம் குறையவில்லை என்றாலும் மௌனமாக இருந்தார். தந்தை தன் வேண்டுகோளுக்கு இணங்கி நடப்பார் என்று நம்பியவள், கதவை நோக்கி நடந்தாள்.
“எல்லாம் ஓ. கே தானே?” உதட்டில் ஒட்டிய சிரிப்புடன் கதவு திறந்தவளிடம் கிசுகிசுத்தான் ஹரி.
“பார்த்துப் பொறுமையா பேசுடா,” அவன் உள்ளங்கையில் அழுத்தம் தந்து கண்ணசைத்தாள் மீரா.
வரதனின் முகபாவனைகளில் இருந்தே அவர் உள்ளத்தைப் படித்தான் ஹரி. மீரா முன்வந்து அவனை உட்காரச் சொல்ல, வரதனுக்கு வலதுபுற சோஃபாவில் அமர்ந்தவன், “மீரா சொல்லியிருப்பான்னு நினைக்கறேன் அங்கிள்,” பேசத் தொடங்கியதும், முகத்தை அப்பட்டமாகத் திருப்பிக் கொண்டார் மனிதர்.
எதிர்பார்த்தது தானே எனப் பெருமூச்சுவிட்ட ஹரி, கண்களில் நீர் திரள எதிரே நின்றுகொண்டிருந்த பாவையிடம், கவலைபட வேண்டாமெனக் கண்ணசைத்தான்.
தன் வாழ்க்கையில் இனி நடக்கவே நடக்காது என்று தள்ளிவைத்த கனவுக்கு மீரா தந்த ஊக்கத்தைப் பற்றியும், இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்ததை பற்றியும் விவரித்தவன், “மீராவின் சேவிங்க்ஸ்…” தொடங்கியதுமே, வரதனின் கண்களில் தீப்பொறி தெறித்தது.
“வரதட்சணை கொடுக்கல் வாங்கல் கூடக் குற்றமா பாக்குற இந்தக் காலத்துல, காதலிக்கிறேன்னு சொல்லி, பணம் பிடுங்க உனக்கு அசிங்கமா இல்ல?” எடுத்த எடுப்பிலேயே அவமதித்தார்.
“அப்பா….” இயலாமையில் பதறினாள் மீரா.
“கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அங்கிள்; அவளை ஏமாத்தணும்னு நெனச்சிருந்தால், உங்க அனுமதியோட தான் பணம் வாங்கிப்பேன்னு அவகிட்ட பிடிவாதமா சொல்லியிருப்பேனா?” தன்மையாகவே பேசினான்.
“அதானே உன் தந்திரம்! அப்படி வந்து கேட்டாதானே, மீரா கண்ணுக்கு நீ நல்லவனா தெரியுவ; உண்மைய எடுத்துச் சொல்ற நான் அவளுக்குக் கெட்டவனாகிடுவேன்,” குதர்க்கமாக இடித்துக்காட்டி ஏளனம் செய்தார் வரதன்.
தன்மானம் சுருக்கென்று குத்தியது ஹரிக்கு. “ப்ளீஸ் அங்கிள்! உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லேன்னா விட்டுடுங்க; தந்திரம் செய்யறேன்னு எல்லாம் சொல்லாதீங்க,” இனி அங்கிருப்பது நல்லதில்லை என உணர்ந்தவன் எழுந்துகொள்ள, பொறுமையாகப் பேசித் தீர்க்கலாம் எனக் கூறிக்கொண்டே அவனைத் துரத்திச் சென்றாள் மீரா.
கொஞ்சமும் தகுதி இல்லாத ஒருவன் பின் மகள் ஓடுகிறாளே எனக் கடுப்பான மனிதர், “இவனை மாதிரி எதையும் சாதிக்காதவனுக்குத் தான் கோபம், ரோஷமெல்லாம் அதிகமா இருக்கும் ‘ம்மா,” குத்திக்காட்டி அவன் தன்மானத்தை உரசினார்.
பொங்கிய சினத்தைக் கட்டுப்படுத்த ஹரி பெரும்பாடுபட, “என்னடா முறைக்குற! பணக்கார பொண்ணா பார்த்து லவ் பண்ணுன்னு உங்க வீட்டுல சொல்லி அனுப்பினாங்களா?” அதிகாரமாய் மிரட்டினார்.
நிலைமை கைமீறி போனது என உணர்ந்த ஹரி, “நான் சொல்ல வர எதுவும் உங்களுக்குத் தப்பா தான் தெரியும் அங்கிள். என் எண்ணம் உண்மையானது; நான் பார்த்துக்கறேன்.” முடிந்த அளவுக்கு பணிவாகப் பேசி, கதவை நோக்கி நடந்தான்.
கையேந்தி இருக்கும் நிலமையிலும் இவனுக்கு இவ்வளவு வீம்பா என்று தோன்றியது வரதனுக்கு. கண்டிப்பாக, மகளிடம் வேறு ஏதாவது சொல்லி அவள் மனத்தை கலைப்பான் என்று யூகித்தவர், “டிமாண்டிங் இஸ் பிலோ யுவர் டிக்னிட்டி.” தொழிலதிபருக்கே உள்ள ஆளுமையுடன் அவதூறாகப் பேசினார்.
குத்திப் பேசும் தந்தையை விழிகளால் சுட்டெரித்த மீரா, “மனசுல எதுவும் வெச்சுகாதே ஹரி. நான் அவருக்குப் புரியவைக்கிறேன்.” கெஞ்சலாய் அவனைப் பின்தொடர, அவனோ திரும்பிக் கூடப் பார்க்காமல் வெளியேறினான்.
நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியாமல் நின்றார் நிர்மலா.
வீட்டிற்குள் விரைந்து ஓடி வந்தவள், “நான் அவ்வளவு சொல்லியும், அவன தப்பான கண்ணோட்டத்திலேயே பாக்குறீங்களே, ஏன் ‘ப்பா?” கண்ணீர் மல்க நொந்து கொண்டாள்.
“முதல் சந்திப்பிலேயே பணம் கேட்டு வரவன, வேற எப்படி பார்க்க சொல்ற?” கேள்வியை மகளிடமே திருப்பினார் வரதன்.
“பணம் தரேன்னு நான்தானே ‘ப்பா கட்டாயப்படுத்தினேன்.” நினைவூட்டியவளின் குரல் சரிந்தது.
“கொடுக்கறேன்னு நீ சொன்னாலும், அதை அவன் மறுத்திருக்கணும் மீரா. அதுதான் புருஷ லட்சணம்,” மகளுக்கு மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியவர், தன் அறையை நோக்கி நடக்க, அவரை வழிமறித்தாள் மீரா.
‘ஒண்ணு சொல்லுங்க பா! வியாபாரத்துல, வெற்றி தோல்வி தெரியாமத்தான முதலீடு செய்யறீங்க. ஆனா இவனுக்குச் சந்தர்ப்பமே கொடுக்காம பழி சுமத்தினா, அது எந்த விதத்துல நியாயம்?” அவர் வழியிலேயே தர்க்கம் செய்தாள்.
“வியாபாரமும், வாழ்க்கையும் ஒண்ணா உனக்கு?” திடமாய் கேட்டு முறைத்தவர், “இது இல்லேன்னா அதுன்னு வியாபரம் மாதிரி வாழ்க்கைய பார்க்க முடியுமான்னு நீ சொல்லு?” கேள்வியை அவளிடமே திருப்பினார்.
தான் சொன்ன உதாரணம் தவறு என்று உணர்ந்தவள், “நம்புங்க ‘ப்பா! இது நான் நிதானமா எடுத்த முடிவுதான்,” என்று மன்றாடினாள்.
எவ்வளவு சொல்லியும் மகள் புரிந்துகொள்ள மறுக்கிறாளே என நொந்தார் வரதன்.
நீ என்கிட்ட அனுமதி கேட்டு வரல்ல மீரா; முடிவெடுத்துட்டு தகவல் சொல்லற; உன் இஷ்டம் போல செஞ்சிக்கோ. இனி நான் உன் விஷயத்துல தலையிடமாட்டேன்,” வெறுத்துப் பேசி தன் அறைக்குள் புகுந்தவர், கோபத்தைக் கதவடைப்பதில் காட்டினார்.
நடப்பதை எல்லாம் அமைதியாய் கவனித்து கொண்டிருந்த நிர்மலா, பேசுவதை காட்டிலும் ஆறப்போடுவதே நல்லது என்று நிதானம் கடைப்பிடித்தார்.
அப்பாவிடம் பேசிப் புரியவைக்க முடியாது எனத் தெளிந்தாள் மீரா. ஹரி நல்ல நிலைமைக்கு வந்தால், அப்பா தானாக மனம் மாறுவார் என்று உறுதியாக நம்பியவள், அவனிடம் மன்னிப்புக் கேட்டு, அவனைத் தன் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்தச் சொல்லவேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தாள்.
ஆனால் ஹரியிடம் பேச அலைபேசியை எடுத்தவளுக்கு வாழ்க்கையே சூன்யமானது போலத் தோன்றியது… ஹரி அவளுக்கு அனுப்பியிருந்த மூன்று வார்த்தை குறுஞ்செய்தியில்!
“சரி” என்று பதிலைத் தட்டி, அலைபேசியை மொத்தமாக அணைத்து வைத்தாள்.
அக்கறை என்ற பெயரில் மகளின் ஆசையை- தந்தை
அலட்சியம் செய்து ஆத்திரம் கொள்வதுதான் சரியா?
தன்மானம் என்ற பெயரில் தோழியின்
அன்பை – தலைவன்
தவிர்த்துத் தவிக்க விடுவதுதான் பிழையா?
புயலிலும் சூறாவளிக் காற்றிலும் பிடிவாதமாய் மூழ்கும் பேதைக்கு,
பாசக் கரங்களை நீட்டி மீட்டெடுத்தது யார் – பதில்சொல்லும்
அவர்கள் அவள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்;


Please Comment Here