71 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
‘வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க;’
எம். எஸ்.அம்மாவின் குரலில் விநாயகர் கவசமும், இதமான சாம்பிராணி வாசமும், நெய் விளக்கும் அதிகாலை பொழுதை பக்தியில் நிரப்பிக் கொண்டிருந்தது. மஞ்சள் பொடியில் பிடித்த பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை சாற்றி சங்கடஹர சதுர்த்தி விரதத்திற்கான ஏற்பாடுகளை செய்வதில் மூழ்கியிருந்தார் நிர்மலா.
“எனக்குத் தலையில வெச்சுக்க கொஞ்சம் மல்லிப்பூ தா ‘ம்மா,” அரக்கு நிற மைசூர் பட்டில் தேவதையாக எதிரில் நிற்கும் மகளின் அலங்காரத்தில் பிரமித்துப் போனார் நிர்மலா.
மகேஷ் வீட்டுக் கிரகப்பிரவேசத்திற்குச் செல்ல தயாராகி வந்திருக்கிறாள் எனப் புரிந்தது அவருக்கு. ஆனால் ஒரு வாரமாய் எதிலும் ஆர்வம் காட்டாத மகள், இன்று உற்சாகமாய் கிளம்புவதை கண்டதும் பூரித்துப் போனார். பூஜை செய்வதற்கு முன்னரே பலன் கிட்டியதுபோல ஒரு உணர்வு.
“பூ கேட்டு எவ்வளவு நேரமாச்சு ‘ம்மா,” மீரா உலுக்கியதில் சுயத்திற்கு வந்து மென்னகைத்தவர், தானே மகளின் கூந்தலில் மல்லிகை சரம் சூட்டி, அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தார்.
பூஜை மேடையில் கொழுக்கட்டை பிரசாதத்தைக் கண்டுகொண்ட மீராவிற்கு அரவிந்தனுக்குப் பிடிக்கும் என நினைவு வந்தது. “பத்து கொழுக்கட்டை அரவிந்தனுக்கு எடுத்துட்டுப் போறேன் ‘ம்மா,” என அவள் தாம்பாளத்தை எடுக்க,
“அடியேய்! இனிமேல் தான் பூஜையே ஆரம்பிக்கப்போறேன். வேணும்னா, நீ சாயங்காலம் அவன் வீட்டுக்குக் கொண்டுபோய் கொடு.” என மகளின் கரங்களைப் பிடித்து தடுத்தார் நிர்மலா.
ஹரியை காதலிப்பதாகச் சொல்லியும், அவன் இருக்கும் இடத்திற்குப் போக அனுமதி கொடுக்கும் அன்னையின் நம்பிக்கையில் பேச்சற்றுப்போனாள் மீரா.
“நேரமாகுதுல்ல கிளம்புடி,” விரட்டியவர், பேச்சோடு பேச்சாகத் தந்தையிடம் தகவல் சொல்லச் சொல்ல, மீராவின் முகம் சுருங்கியது.
“நீயே அவர்கிட்ட சொல்லிக்க,” மறுத்துப் பேசி நகர்ந்தாள்.
“நில்லுடி!” குரலை உயர்த்தியவர், “காதலிக்கிறவன் வந்ததும் மனச மாத்திப்ப; பெத்த அப்பாகிட்ட மட்டும் பேசாமல் இருப்பீயா?” இடித்துக்காட்ட, மீராவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
ஆசை ஆசையாக விழாவிற்குப் புறப்பட்ட மகளின் வாடிய முகத்தைக் காணச் சகிக்காதவர், “இங்க பாரு மீரா! ஹரி நல்லவன்னு எனக்குத் தெரியும்; உனக்கு உன் காதல் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு என் கணவர் எடுக்கற முடிவு எனக்கு முக்கியம். அவருக்கு பேசி புரிய வெப்பியோ, இல்ல அவர் சொல்படி நடப்பையோ, அது உன் இஷ்டம். ஆனால் அவருக்கு மரியாதை கொடுத்து நடந்துக்கோ,” திட்டவட்டமாக உரைத்தார்.
அன்னையின் கரிசனத்தில் தோற்றவள் அவர் சொற்படி தந்தையிடம் நல்லவிதமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டாள். தந்தை மகளிடையே நிலவிய பனிப்போரை சிறிதளவாவது உடைக்க முடிந்ததே என நிம்மதி பெருமூச்சுவிட்ட நிர்மலா, மனநிறைவோடு வழிப்பாடுகளைத் தொடர்ந்தார்.
மகேஷ் மறுவடிவமைத்து கட்டிய வீடு, மீரா வீட்டிற்கு மிக அருகில் இருந்தது. மறுவடிவமைப்பு செய்யும் முன் கூட்டுக்குடும்பமாக மகேஷ் அங்குதான் வசித்து வந்தான். கீதாவும் வெளியூரில் இருந்து பணிக்கு வந்ததால், திருமணமாகும் வரை அதே பகுதியில், ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்தாள். வங்கியில் சந்திப்பிதைத் தாண்டி நண்பர்கள் அருகருகே வசித்ததாலும், அவர்களிடையே நெருக்கம் அதிகமானது.
ஐந்தே நிமிடத்தில் சன்னியில் சல்லென்று பறந்து சென்றவள், அடையாளம் தெரியாத அளவுக்கு இரண்டு தளங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடமாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டிருந்த அவ்வீட்டின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தாள்.
அகலமான நுழைவாயில்; நாலைந்து மகிழுந்துகள் விடும் அளவிற்கு விசாலமானத் தரிப்பிடம்; குழந்தைகள் மைதானம் எனக் கட்டிடத்தின் அடித்தளத்தின் அம்சங்களை ரசித்து நடந்தவளை ஈர்த்தது, வலதுபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த பிள்ளையார் சன்னதி.
கும்பிடு போட அருகில் சென்றவள், அளவான அலங்காரத்துடன் அழகாய் காட்சி அளித்த பிரசன்ன விநாயகரின் தரிசனத்தில் மெய்மறந்து நின்றாள். ஹரியும் அரவிந்தனும் வந்ததுக் கூடக் கவனிக்காமல், பிள்ளையாருக்கு இணையாகச் சிலையாக நின்று கொண்டிருந்தாள் மீரா.
“ஓய்! பிள்ளையார எங்க பார்த்தாலும் அப்படியே நின்னுடுவியா,” செல்லமாக முதுகில் தட்டி அவள் கவனத்தைக் கலைத்தான் அரவிந்தன்.
“இன்னைக்கு சங்கடஹர சதுர்த்தி டா, நெனச்ச காரியம் கைக்கூடும்,” அவள் துள்ளலாய் அறிவிக்க,
“அடிப்போடி! அவருக்கு ஓரவஞ்சனை. உன் வேண்டுதல்களை மட்டும்தான் நிறைவேற்றுவாரு,” பொய்யாகச் சலித்துக்கொண்டான் அரவிந்தன்.
“ஏன்டா அப்படிச் சொல்ற?” மீராவின் முகம் சுருங்கியது.
“உன் காதலுக்கு மட்டும் பச்சை கொடி காட்டிட்டு, என் காதல காத்துல பறக்க விட்டுட்டாருல.” அவன் முணுமுணுத்து வேடிக்கை செய்ய, பக்கென்று சிரித்தான் ஹரி.
“எனக்கு ஹரி கணவனா வரணும்னு நான் வேண்டிண்டேன்; என் கல்யாணத்துனால நம்ம நட்புக்கு பங்கம் வர கூடாதூன்னு நீ வேண்டிக்கிட்ட; அவர் நம்ம ரெண்டு பேருக்கும்தான் வரம் கொடுத்திருக்காரு,” சர்வசாதாரணமாகப் பதிலளித்த மீராவின் விளக்கத்தில் வாயடைத்துப் போன அரவிந்தன்,
“நல்லா பொழச்சிப்படி,” எனத் தோழியை மெச்சி, “டேய், உன் கதைக்கு இவளை வசனம் எழுதச் சொல்லு. விற்பனை அள்ளும்,” நண்பனின் காதில் கிசுகிசுத்தான்.
இவர்களை விட்டால் ஒருவரை ஓருவர் ஓட்டிக்கொண்டே இருப்பார்கள் என அறிந்த ஹரி, உள்ளே செல்லலாம் எனக் கூற,
இரண்டடி நடந்த மீரா, அரவிந்தனை வழிமறித்து, “இன்னைக்கு விழாவிற்கு வரமாதிரி ட்ரெஸ் பண்ணிருக்கேனான்னு சொல்லுடா?” கேட்டு, பொம்மை போல் இடமும் வலமும் அசைந்தாடினாள்.
“உன்னைப் பார்த்தா வைரல் ஃபீவர் வந்த பொண்ணு மாதிரியே தெரியலையே! ஒரு வேளை என் கண்ணுல மண்ணைத் தூவிட்டு ரெண்டு பேரும் எங்கையாவது ஊர் சுத்தினீங்களா,” அரவிந்தன் பலத்த யோசனையுடன் விசாரிக்க,
“யாரு? இவன் கூடவா? முசுடு எழுத்தாளர்!” தங்களுக்குள் நடந்த கருத்து வேறுபாடுகளின் சுவடு கூடத் தெரியாத அளவிற்குத் தன்னவனை பார்வையால் விழுங்கினாள்.
அதற்கும் ஹரி கன்னத்தில் குழி விழச் சிரிக்க, அரவிந்தனோ, “என்னை ரிஜெக்ட் பண்ணல்ல! நல்லா அனுபவி!” விடாமல் ஓட்டி, அவள் மொத்துவதற்குள் ஒரே தாவலில் படிக்கட்டுகளை ஏறினான்.
முதல் தளத்தில் சடங்குகள் நடக்க, இரண்டாம் தளத்தில் உணவு பரிமாறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மகேஷ் குடும்பத்தினரை நலன்விசாரித்து வாழ்த்துக் கூறிய மூவரும் புது வீட்டை சுற்றி பார்த்தும் விமர்சித்து கொண்டும் நேரம் செலவழித்தனர்.
ஒரு மணி நேரத்தில் விழா விமர்சியாக நிகழ்ந்தேறி முடிய, வெளி வேலைகளைக் கவனிக்க நண்பர்களை உதவிக்கு அழைத்தான் மகேஷ். அதற்கிடையில் மீரா, மகேஷின் மனைவி மைதிலியுடன் விருந்து உணவு உண்டு முடித்திருந்தாள்.
பசியோடு உணவருந்த வந்த நண்பர்களுக்கு இலை போட்டு, சாதம், பருப்பு, சாம்பார், பச்சடி, பொறியல் என்று மகேஷின் அக்கா ராணியும், மனைவி மைதிலியும் தடபுடலாக உபசரித்துக் கொண்டிருக்க,
“அக்கா, நானும் பரிமாறுறேன்!” என்று புடைவையை இழுத்துச் சொருகிக் கொண்ட மீரா ராணியிடமிருந்து ஜாங்கிரி தட்டை வாங்கிக்கொண்டாள். ஹரிக்கும், மகேஷுக்கும் இலைக்கு ஒன்று என்று வைத்தவள், அரவிந்தனுக்கு மட்டும் மூன்று, நான்கு என்று அடுக்கி கொண்டே போனாள்.
“போதும் போதும் மீரா! இவ்வளவு ஜாங்கிரி சாப்பிட்டா, மத்தத எல்லாம் சாப்பிட வயிற்றில் இடம் இருக்காதுடி,” கெஞ்சலாய் சொல்லி கையால் தடுத்தான் அரவிந்தன்.
“கண்ணு தெரியலையா மீரா! உன் ஆளு இங்க இருக்கான்,” மைதிலி அவள் தோளில் இடித்துவிட்டு நகர,
“என்ன ஹரி! மீரா என்னை மட்டும் தனியா கவனிக்குறான்னு உனக்கு பொறாமையா இருக்கா?” நண்பனின் தோளில் இடித்தான் அரவிந்தன்.
“அதான் உனக்கு ஜாங்கிரி பிடிக்கும்னு ஊருக்கே தெரியுமே!” ஹரி கண்களை உருட்ட,
“இல்லையே! உதடுதான் அப்படிச் சொல்லுது; கண்ணுல லைட்டா பொறாமை எட்டிப்பாக்குதே,” சீண்டியவன், “மீரா மா, பிள்ளையார் எனக்குக் கொடுத்த வரம் பலிக்காது போல தெரியுதே,” தோழியையும் விட்டுவைக்கவில்லை.
அதற்கெல்லாம் சற்றும் அசரவில்லை அவள்.
“ஹரி ஒருபோதும் அப்படி நினைக்கமாட்டான்; முதல்ல நட்பு; அப்புறம் தான் காதல், கல்யாணம் எல்லாம்,” அழுத்திக்கூறி, தன்னவனின் கன்னத்தில் வாஞ்சையாக வருடினாள் மீரா.
கேலியும், கிண்டலுமாக விருந்து சாப்பாடு உண்டு முடித்த நண்பர்கள் வரவேற்பறையில் வந்து அமர, “இருந்தாலும் நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ஜாங்கிரியா சாப்பிடுவீங்க?” மீரா அரவிந்தன் இருவரையும் கண்டித்தான் ஹரி.
அச்சமயம் அங்கு வந்த மகேஷ், திட்டுவாங்கிக் கொண்டிருக்கும் நண்பர்களின் கையில் ஆளுக்கொரு பையைத் திணித்து, “வீட்டுக்கு எடுத்துட்டுப் போக ஜாங்கிரி பார்சல்.” என்று துள்ளலாய் சொல்ல, இருவரும் இமைகள் படபடக்க அசடுவழிந்தனர்.
ஹரியின் வெட்டும் பார்வையைக் கவனித்த மகேஷ், “நீதான் எந்த இனிப்பையும் விரும்பி சாப்பிட மாட்ட; அவங்க சாப்பிட்டா என்னடா?” என்று மிரட்ட,
வெடுக்கென்று மீராவின் கையிலிருந்த இரண்டு கிலோ ஜாங்கரி பையைப் பிடுங்கி உயர்த்திக் காட்டி, “அதுக்குன்னு, இப்படியா அளவில்லாம!” என முறைத்தான்.
“உஷாரா இரு மீரா, உங்க கல்யாண சாப்பாடுல அது வேண்டாம், இது வேண்டாம்னு, ஹரி கன்டீஷன் போட்டுடப்போறான்,” கிண்டல் செய்துகொண்டே மீரா அருகில் வந்தமர்ந்தாள் மைதிலி.
அது அப்படியே அவர்கள் திருமணம் பற்றிய விசாரிப்புகளுக்குத் திரும்பி, காதல் ஜோடிகள் பதில் சொல்லமுடியாமல் திணற, அவர்கள் விழி பரிமாற்றங்களைக் கண்டுகொண்டான் அரவிந்தன்.
தளத்திற்கு இரண்டு வீடுகள் கொண்டிருந்த அந்தக் கட்டிடத்தில் யார் யார் எங்கே வசிக்கப் போகிறார்கள் என விசாரித்து, இலகுவாய்ப் பேச்சை திசைதிருப்பினான்.
ராணியின் கணவர் தானே கட்டிடம் கட்டும் தொழில் செய்து வந்ததால், அந்த மறுவடிவமைப்பு பொறுப்பையும் அவரே ஏற்று கொண்டிருந்தார். கணவன் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் ஜோரில், ஹரி-மீரா கல்யாண பேச்சை மறந்த ராணி, ஒய்யாரமாய் பிளாஸ்டிக் நாற்காலியில் கால்களை மடக்கி அமர்ந்து பெருமிதத்துடன் விவரித்தாள்.
இரண்டாம் தளத்தில் மகேஷும் தம்பியும் ஆளுக்கொரு வீட்டில் குடியேறப் போவதாகவும், அம்மாவும் அப்பாவும் மகேஷுடன் நிரந்தரமாக இருக்கப் போவதாகவும், முதல் தளத்தில் தனக்கும் தன் மச்சினர் குடும்பத்தினருக்கும் தனித்தனி வீடு எனத் திட்டமிட்டிருப்பதாக விளக்கியவளின் விழிகள் தம்பி மகேஷை சுட்டெரிக்க, நண்பர்களின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.
“அவன் அமெரிக்காவில் படிச்சுட்டு இருக்கான் டா. அவனுக்குக் கல்யாணமாகி செட்டில் ஆக எப்படியும் ரெண்டு மூணு வருஷமாவது ஆகும். அது அப்படியே இருக்கட்டும்னு நானும் மாமாவும் சொல்றோம். ஆனால் அக்கா அதை வாடகைக்கு விடச் சொல்றாங்க.” கருத்து வேறுபாடுகளை விவரித்த மகேஷ்,
“நீயே சொல்லுடா அரவிந்தா! நாங்க கூட்டுக் குடும்பமா இருக்கோம்; வெளி ஆளுங்களுக்கு வாடகைக்கு விட்டா சரியா வருமா?” நண்பனைக் கேட்டான்.
அதுவும் நியாயம்தானே என அரவிந்தன் நண்பனுக்கு ஒத்தூத, வீட்டை அத்தனை நாட்களுக்குப் பூட்டிவைப்பது நல்லதில்லை எனப் புலம்பினாள் ராணி.
“நீங்களே மாறி மாறி இருக்க வேண்டியது தானே அக்கா!” மீரா தீர்வு சொல்ல,
“இவர் பாதி நாள் வேலை விஷயமா வெளியூருக்குப் போயிடுவாரு; மாமியார் மாமனாரும் கிராமத்துல இருக்குறதுக்குத் தான் விரும்புறாங்க. மாசத்துல ரெண்டு நாள் வந்து தங்கினால் ஜாஸ்தி.” தன் வீட்டின் நிலவரத்தைக் கூறிய ராணி, “இதே வாடகைக்கு விட்டால் எனக்கும் பக்கத்துல துணைக்கு ஆளு இருப்பாங்கல்ல” தன் தரப்பு நியாயங்களை முன்வைத்தாள்.
“ஹரிக்கு வாடகைக்கு விடுறியா டா மகேஷ்?” இமைக்கும் நொடியில் கேட்டான் அரவிந்தன்.
அத்தனை பேரும் அவனைப் புதிராய் பார்க்க, தனக்கென்ன அவசியம் இருக்கிறது என மறுத்தான் ஹரி.
மீரா அவனைச் சந்திக்க வந்துபோக, இதைவிட பாதுகாப்பான இடம் வேறென்ன இருக்க முடியும் என அரவிந்தன் சொன்னதுதான் தாமதம்.
“எனக்கு இதுல டபுள் ஓ.கே அரவிந்தா!” பூரித்தாள் ராணி.
“இல்ல இல்ல! இது சரி வராது!” ஹரி திடமாய் மறுக்க,
“நீ சொன்னாதான் உன் ஆளு கேட்பான் போல மீரா,” கோர்த்துவிட்டாள் மைதிலி.
ஹரியின் சுபாவம் அறிந்திருந்தவள், “அவனுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்யட்டும்,” நழுவ,
“என்னவொரு தன்னடக்கம்! உன் முகத்துக்குக் கொஞ்சம் கூடப் பொருந்தலடி,” அரவிந்தன் அவள் தலையில் குட்டி வெறுப்பேற்றினான்.
“நாங்க எல்லாரும் சுத்தி இருக்குறப்ப தனியா எங்க காதலிக்குறதுன்னு யோசிக்கறா போல,” பெருமூச்சுவிட்டாள் மைதிலி.
“அப்படியெல்லாம் இல்ல மைதிலி,” மீரா தயங்க,
“உங்க வீட்டுல இருக்க எனக்கென்ன கஷ்டம். என் பட்ஜெட்டுக்குள்ள வராது; அதான் வேண்டாம்னு சொல்றேன் ‘க்கா.” உண்மை காரணத்தைக் கூறி, தன்னவளின் தர்மசங்கடத்தைக் களைந்தான் ஹரி.
“நீயும் எனக்குத் தம்பிதான் டா ஹரி; நமக்குள்ள என்ன பட்ஜட். உன்னால முடிஞ்ச வாடகையைக் கொடு.” ராணி உரிமையோடு பேச,
“அக்கா சொல்றது சரிதான் ஹரி,” இம்முறை மகேஷும் தமக்கைக்கு ஆதரவாகப் பேசினான்.
“அவனை என்ன கேட்டுக்கிட்டு. ஹரி, நீ இங்க வர! அவ்வளவுதான்!” முடிவே செய்துவிட்டார் ராணியின் கணவர்.
அவர்கள் அன்புத்தொல்லையில் விழிப் பிதுங்கிப் போனது ஹரிக்கு.
“அரவிந்தா! ரெண்டு பேரும் பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணலாம் சொல்லிட்டு, இப்போ என்னை கழட்டிவிட்டா என்னடா அர்த்தம்?” வசமாய் மாட்டிவிட்டாயே எனக் கண்களால் இறைஞ்சினான்.
“அட, நானும் உன்னோட வந்திருக்கப் போறேன்னுல்ல நெனச்சிட்டு இருக்கேன். அப்போ நீ எனக்கு அடைக்கலம் கொடுக்க மாட்டியா?” அப்பாவியாக முகம் சுருக்கிய அரவிந்தன், “என்ன மீரா! என்னோட சேர வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லி வெச்சுருக்கியா?” தோழியையும் சேர்த்து வம்பிழுத்தான்.
“அப்படியே நான் சொல்லி அவன் கேட்டுட்டாலும்…” ரோஷம் ஜிவ்வென்று ஏறியது அவளுக்கு.
“இது… இதுதான் ஒரிஜனல் மீரா,” அரவிந்தன் கலாய்க்க,
“டேய்! நீங்க ரெண்டு பேரும் இங்க வந்துட்டா, உங்க புண்ணியத்தால நானும் அப்பப்ப பேச்சுலர் லைஃப் எஞ்சாய் பண்ணுவேன்டா.” மகேஷ் தன் பங்குக்கு மைதிலியைச் சீண்ட, அவளும் முறைப்புகளைத் தாரளாமாக வீசி எறிந்தாள்.
நால்வரும் போட்டிப்போட்டு செய்த ஆரவாரத்தில் ஹரியின் வாதம் கண்காணாமல் போனது.
நண்பன் அரைமனதாகத் தான் ஒத்துக்கொண்டிருக்கிறான் என்பதை உணரவே செய்தான் அரவிந்தன். அவனைக் கட்டாயப்படுத்துவது நியாயமில்லை எனத் தோன்ற வெளிப்படையாகப் பேசத் தீர்மானித்தான்.
“உனக்கும் மீராவுக்கும் யோசிச்சு ராணி அக்காகிட்ட வீட்டை வாடகைக்குக் கேட்டிருந்தாலும், அதில் என்னுடைய சுயநலமும் அடங்கியிருக்கு டா,” அன்று இரவு உறங்கப்போகும் முன் மெல்ல பேச்சுக் கொடுத்தான் அரவிந்தன்.
“சுயநலமா! அதுவும் உனக்கா?” உரக்கச் சிரித்தான் ஹரி.
கிடைக்கும் நேரங்களில் எல்லாம் எழுத்தில் கவனம் செலுத்திவரும் ஹரியின் சௌகரியங்கள் கருதியே அத்தனை நாட்களாகத் தன் பெற்றவர்களை சென்னைக்கு அழைத்துவராமல் ஒத்திப்போட்டதாக உண்மைகளை உடைத்தவன், “உனக்கு மகேஷ் வீட்டுல வாடகைக்கு இருக்க விருப்பமில்லேன்னா பரவாயில்ல டா….” எனக் கூறத் தொடங்கியதும்,
மகனுடன் சேர்ந்து வசிக்க அவர்கள் எத்தனை நாட்களாகத் தவம் கிடக்கிறார்கள் என அறிந்திருந்தவனுக்கு அதற்கு மேல் எந்த விளக்கமும் தேவையிருக்கவில்லை.
“இல்ல இல்ல! எனக்குப் பரிபூரண சம்மதம். முதல்ல அம்மா அப்பாவை சென்னைக்கு அழைச்சிட்டு வர வழியப்பாரு,” மனதார உரைத்தான்.
மனம்விட்டுப் பேசியதில் நிம்மதியை உணர்ந்த அரவிந்தன், பாராட்டு விழா முடிந்த மறுநாளே ஊருக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறி திட்டங்களைத் தீட்டினான். நண்பனின் உற்சாகத்தில் அகம் மகிழ்ந்தான் ஹரி.
புதன்கிழமை அன்று தலைமை அலுவலகம் சென்ற அரவிந்தனுக்கும் மீராவுக்கும் பெரும் ஆச்சரியங்கள் காத்திருந்தது.
பாராட்டு விழா என்றதும், விருந்து, ஆட்டம் பாட்டம் என்று மட்டுமே எதிர்பார்த்து போனவர்களுக்கு, வங்கிக்கான கேடயம், தனித் தனியாக அவர்கள் இருவரின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்த கோப்பை, சான்றிதழ்கள், பரிசுத்தொகை என வழங்கி பெரும் அளவிற்கு கௌரவ படுத்தினார்கள்.
அதுமட்டுமில்லாமல், கடந்த ஓராண்டு காலமாக, கிளையை சிறப்பாக இயக்கி வந்ததற்காக ‘மக்கள் சேவையில் சிறந்த கிளை’ விருதை அரவிந்தனுக்கு வழங்கினார்கள்.
மீரா தன் துறை சார்ந்த ஆராய்ச்சி ஆய்வுகளை சில மாதங்களுக்கு முன் சமர்ப்பித்திருந்தாள். ஊதியத்தொகையில் ஒரு முக்கிய பகுதியாக இருக்கும் பெர்க்ஸ் (Perks) எனப்படும் சலுகைகளை பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தாள். தன் ஆராய்ச்சியில், பணியாளர்களுக்கும், வியாபரிகளுக்கும் பயனளிக்கும் வகையில், இந்தச் சலுகைகளை எப்படி வழங்கலாம் என்று பல திட்டங்களை விளக்கியிருந்தாள். புதிய திட்டங்களை சிறப்பாக விவரித்ததற்கு, பணமாகவும், பொருளாகவும் சன்மானம் பெற்றாள்.
விழா முடிந்து, இருவரும் மனநிறைவுடன் அவரவர் வீட்டிற்குத் திரும்பினர்.
அம்மா அப்பா இருவரிடமும் பரிசுப் பொருட்களைக் காட்டி பூரித்தாள் மீரா.
ஒவ்வொன்றாக நிதானமாக வாங்கிப் பார்த்த வரதன், “இப்படி உன் திறமையைச் சரியான இடத்துல காட்டு; வாழ்க்கையிலும் சாமர்த்தியமா முடிவு எடுக்கப் பழகு.” ஜாடையாக அறிவுறுத்தினார்.
சன்மானமாகக் கிடைத்தப் பரிசுத்தொகையில் தன்னவனுக்கு என்ன பரிசு வாங்கிக் கொடுக்கலாம் என்ற சிந்தனையில் கலந்திருந்தவளின் செவிகளுக்கே அவர் பேசியது கேட்காதபோது, மூளைக்கு எட்டிவிடுமா என்ன?
பரிசுப்பொருட்களை எல்லாம் குவித்துக்கொண்டு, தன் அறைக்குள் வந்தவள், முதல் காரியமாக, ஹரியை அழைத்தாள். அவனும் அதற்குள், அரவிந்தனிடம் பேசியதில், நடந்ததை பற்றி எல்லாம் தெரிந்துகொண்டிருந்தான். இருந்தும், அவள் வாயால் நடந்ததை எல்லாம் பூரிப்புடன் சொல்லி முடிக்க,
“இத்தனை புகழையும், பாராட்டையும் வேண்டாம்னு சொல்லி அடம்பிடிச்சியே…. பைத்தியகாரி!” பணிக்கு வரமாட்டேன் என்று அவள் முரடு பிடித்ததைச் செல்லமாகச் சுட்டிக்காட்டினான்.
“ம்ம்…. என்ன செய்ய; ஒரு எழுத்தாளார் மேல இருக்குற கண்மூடித்தனமான பைத்தியத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்ல தெரியுமா?” காதலாய் மொழிந்தவளின் அன்பில் தோற்றுதான் போனான் ஹரி.
என்னவன் இவன் என்று உருகுகிறாள் மங்கை;
என்ன தகுதி இவனுக்கு உண்டு உறுமுகிறார் தந்தை;
எதிரும் புதிருமான உள்ளங்கள் இணையுமா – பதில்சொல்லும்
எலுவன் எலுவை* மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்….
*எலுவன் – தோழன்; எலுவை – தோழி


Please Comment Here