76 hits
ஓம் ஸ்ரீ சாயிராம்
ஒருவழியாகத் தங்கள் காதலில் ஒரு பிடிமானம் வந்தது என்று மீரா நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள், அந்த வாரயிறுதியில் அரவிந்தனுடன் ஊருக்குச் சென்றுவிட்டு வரப்போவதாகத் திடுதிப்பென்று அறிவித்திருந்தான் ஹரி.
ஊருக்குப் புறப்பட்ட போதும் சரி; ஊரிலிருந்த ஒரு வாரமும் சரி; பணிக்குத் திரும்பி வந்து நான்கு நாட்களுக்கு மேலாகியும் சரி; ஏன் எதற்காக அந்தத் திடீர் பயணம் என்ற காரணத்தைக் கூறாமல் இதோ அதோ என்று மழுப்பி, மீராவின் பொறுமையைச் சோதித்தான்.
வெள்ளிக்கிழமை மதியம் உணவு அருந்தி முடித்த நண்பர்கள் பணிக்குத் திரும்ப எழ, “ஹரி! உன்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்,” அவன் கைப்பிடித்துத் தடுத்தாள் மீரா.
“ஒரு மணிக்குள்ள ரிப்போர்ட்ஸ் பேக்கப் எடுக்கணும்,” அவன் நழுவப் பார்க்க,
“அதெல்லாம் அப்புறம் எடுத்துக்கலாம்; நீ முதல்ல உட்காரு,” வலுக்கட்டாயமாக அவனைத் தன் பக்கம் இழுத்தாள்.
அதைக் கண்ட அரவிந்தனால் அவளைச் சீண்டாமல் இருக்க முடியவில்லை.
“வேலையையும் நட்பையும் பிரிச்சுப் பார்க்கணும்னு அறிவுறுத்திய கண்டிப்பான ஆஃபிசர் ஒருத்தர் இருந்தாங்கடா மகேஷ்,” என்று எங்கோ பார்த்தபடி நண்பனிடம் பேச,
“அது நட்பு; இது காதல்! வேலையை விட முக்கியமானது! நீ கிளம்பு!” கண்களை உருட்டி நண்பனை விரட்டினாள் மீரா.
எதிர்பார்த்த ரியாக்க்ஷன் கிடைத்துவிட்ட கர்வத்தில், வெற்றிப் புன்னகையுடன் உணவுப்பையைச் சுழற்றிக்கொண்டே நகர்ந்தான் அரவிந்தன்.
“ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சு ஹரி, நீ அப்பாகிட்ட வந்து பேசுறேன்னு சொல்லி,” படபடவெனப் பொரிந்தாள்.
“ரெண்டு வாரம்னு நான் சொன்னது, வேலை நாட்கள் மட்டும்; சனி ஞாயிறு கணக்கில் வராது. அப்படிப் பார்த்தா, இன்னும் முழுசா நாலு நாள் டைம் இருக்கு,” நமுட்டுச் சிரிப்புடன் வங்கி ஊழியர் மாதிரி சாக்குச் சொல்லி அவளைக் கடுப்பேத்தினான்.
“விளையாடாத ஹரி!” அழாத குறையாகச் சிணுங்கியவள், “எங்க, மறுபடியும் ஏதாவது காரணம் சொல்லி, விட்டுட்டுப் போயிடுவியோன்னு பயமா இருக்குடா,” விழியோரச் சாரலுடன் உருக,
பயந்து நடுங்கும் அவள் விரல்களை மறுகணமே கெட்டியாகப் பிடித்துக்கொண்டவன், “எப்படி விட முடியும், நீ என் நிழலாச்சே!” என்றான் காதலாக.
ஊடல் கொண்ட பாவையோ, “அதான் இருட்டிலேயே ஒளிஞ்சிட்டு இருக்கியா?” என இடித்துக்காட்டி, வெடுக்கென்று தன் கரங்களைத் திருப்பிக்கொண்டாள்.
“கோவிச்சுக்காத டி! செவ்வாய்க் கிழமை உன்னோட அப்பாவை வந்து சந்திக்கிறேன்,” அவன் தழைந்து போக,
மறுநொடியே அவனருகில் நெருங்கியவள், “அப்பாகிட்ட ஏதாவது சொல்லி அவரைத் தயார் படுத்தணுமா?” அன்றுபோல் சொதப்பிவிடக் கூடாதே என்ற அக்கறையில் வினவினாள்.
அதற்கும் “நீ எதுவும் பேசாமல் இருந்தாலே நல்லது!” என உதடு பிரிக்காத புன்னகையுடன் கிண்டல் செய்தான் ஹரி.
“உனக்காச்சு! உன் மாமனாருக்கு ஆச்சு! எப்படியோ போங்க,” கழுத்தை நொடித்தவள் விறுவிறுவென முன்னே நடந்தாள்.
அவள் குறுக்கு விசாரணைகளில் இருந்து தப்பித்துவிட்டதாக ஹரி பெருமூச்சுவிட, மீராவோ சீண்டி ரசித்த தன்னவனின் மொழிகளில் ஒளிந்திருந்த தன்னம்பிக்கையையும் காதலையும் அசைபோட்டவாறே மனநிறைவுடன் தன் பணி மேஜைக்குத் திரும்பினாள்.
சொன்ன நேரத்திற்கு மீராவின் வீட்டிற்குச் சென்றான் ஹரி. கதவைத் திறந்தவளுக்கோ ஒரே பிரம்மிப்பு.
அவள் பரிசாக வாங்கித் தந்த சட்டையை அணிந்திருந்தான். அதுவே பாதி கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டது போலத் தோன்றியது அவளுக்கு.
நிமிர்ந்த தலையுடன் உள்ளே நடந்தவன், யார் விருந்தோம்பலுக்கும் காத்திராமல், செய்தித்தாளில் மூழ்கியிருந்த வரதனுக்கு வலதுபுற சோஃபாவில் அமர்ந்தான்; ஆம், அன்று அமர்ந்த அதே இடம்தான்!
அவனைக் கண்ட வரதனோ விருட்டென எழுந்தார்.
“அங்கிள், ப்ளீஸ் உட்காருங்க. உங்கள பார்க்கத்தான் வந்திருக்கேன்.” என்றவனின் குரலில் பணிவும், கண்களில் உறுதியும் கண்டவர் கொஞ்சம் மிரண்டுத்தான் போனார்.
இதற்கிடையில் என்ன நடக்கிறது எனப் புரியாமல் நிர்மலா மகளின் காதோரம் கேள்விகளை அடுக்கிக்கொண்டிருந்தார். தனக்கும் தெரியாது என உதட்டை வளைத்தவளின் விழிகள் மட்டும் தன்னவனையே தழுவியிருந்தது.
“ஒரு அப்பாவா, உங்க மகள் சௌகரியமா வாழணும்னு நினைக்குறதுனால தான் என்னை வேண்டாம்னு சொல்றீங்கன்னு புரியுது அங்கிள்,” ஹரி கூறவும், பையன் பின்வாங்கிவிடுவான் என்ற நம்பிக்கையில் அவன் கண்பார்க்க தலை நிமிர்த்தினார் வரதன்.
“…ஆனால் பாருங்க, உங்களுக்கு என்னை எந்தளவுக்குப் பிடிக்கலையோ, அதே அளவுக்கு மீராவுக்கு என்னைப் பிடிச்சிருக்கே,” என்றவன், தனக்காக எல்லாமுமான தந்தையிடமே மௌனவிரதம் கடைப்பிடித்தாளே என இறுமாப்புடன் சுட்டிக்காட்டி, “இப்படிப்பட்டவளின் காதலை என்னால எப்படி மறுக்க முடியும்னு சொல்லுங்க அங்கிள்!” மானசீகமாகக் கேட்டு, ‘என்னவள்’ என்ற பெருமிதத்துடன் மீராவை ஏறிட்டான்.
மீராவின் கன்னங்கள் பூரிப்பில் மின்ன, ஓட்டைவிழந்த பலூனாக வரதனின் முகம் அதிருப்தியில் சுருங்கியது. அதை எல்லாம் சற்றும் பொருட்படுத்தவில்லை ஹரி.
“ம்ம்…பதில் சொல்லுங்க அங்கிள்,” பிசிரற்ற குரலில் எடுத்துக்கொடுத்தான்.
“ஏற்கனவே சொன்னதுதான்! எல்லாம் உங்க இஷ்டம்; நான் இதுல தலையிடறதா இல்ல!” தீர்மானமாகத் தன் முடிவைச் சொன்னவர் எழுந்துகொள்ள,
“வெறுப்பும், வீண்விவாதமும் எந்தப் பிரச்சனையையும் தீர்த்து வைக்காது அங்கிள்!” என வலது கரம் நீட்டி வழியை மறித்தவன், அவர் உட்காரும் வரை அமைதியாகக் காத்திருந்தான்.
“கல்யாணத்தைப் பற்றி நாங்க ரெண்டும் பேருமே நிதானமா யோசிச்சுத் தான் முடிவெடுத்திருக்கோம். அவள நல்லபடியா வச்சு பார்த்துக்கணும், வாழ்க்கையில முன்னேறணும்னு நான் மனசளவுல தயார் படுத்திட்டுத் தான் அவளுக்குச் சம்மதம் சொன்னேன்.
பண விஷயத்தில் மீராவோட அன்புக்கட்டளையை என்னால மறுக்க முடியல. அதேமாதிரி, என்னைப் பற்றியோ எங்க ஃப்ரெண்ட்ஷிப் பற்றியோ எதுவுமே தெரியாத நீங்க இதுக்கெல்லாம் சம்மதிக்கணும்னு நினைக்குறதும் நியாயமே இல்ல,” என்றவன் கொண்டுவந்திருந்த மூன்று கோப்புகளை டீபாயில் பரப்பினான்.
‘இவன் என்ன ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டு, இன்சூரன்ஸ் ஏஜென்ட் மாதிரி இத்தனை தாள்களைக் கடை பரப்புகிறான்’ எனப் புருவங்கள் உயர அவனைப் பார்த்தாள் மீரா.
இரண்டு பக்கங்கள் கொண்ட முத்திரை காகிதத்தை அவர் முன் நீட்டி, “இது, நான் மீராகிட்டேந்து கடனா வாங்கிக்குற தொகைக்கான கடன் பத்திரம். எப்போ எவ்வளவு தவணை முறையில திருப்பி தரப்போறேன்னும் விளக்கி கையொப்பம் போட்டிருக்கேன்.” விவரித்தவன், அவர் கையில் வாங்குவாரா என்று ஒரு நிமிடம் காத்திருந்தான்.
வரதன் முகம் சுளிக்க, மனம் தளராமல் அடுத்த கோப்பைத் திறந்தான் ஹரி.
அது சற்று கனமாகவே இருந்தது. அதுவும் முத்திரை பத்திரம் தான். ஆனால், அதிக பக்கங்களுடன் கொஞ்சம் பழுப்பாகவும் பழையதாகவும் இருந்தது. கட்டைவிரலின் நுணியால் அதன் பக்கங்களை விசிறி போல வேகமாகப் புரட்டி பெருமூச்சுவிட்டவன்,
“இது என் வீட்டுப் பத்திரம். கடன் பணத்தை மொத்தமா திருப்பிக் கொடுத்ததுக்கு அப்புறம் இதை வாங்கிக்குறேன்,” சுருக்கமாகச் சொல்லி அதை கீழே வைத்தான்.
மீரா அவனைக் கேள்வியாய் நோக்குகிறாள் என்று அவளைப் பார்க்காமலே உணர்ந்தான்.
‘என்ன நடிப்பு…’ எரிச்சல் பொங்கியது வரதனுக்கு.
“வங்கியில கொடுத்தா வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்க; என் பொண்ணுகிட்ட கொடுத்தா, நீ பணத்த திருப்பி கொடுக்கலேனாலும், உன்மேல பரிதாபப்பட்டு, பத்திரத்த திருப்பி கொடுத்திடுவான்னு தந்திரமா?” கடும்கோபம் கொண்டார்.
அன்று போல் நிலைமை கைமீறி போய்விடுமோ என்ற பீதியில், தாயும் மகளும் நடப்பதை எல்லாம் பதற்றத்தோடு வேடிக்கை பார்த்தனர். ஆனால் உதை கூட வாங்கிக்கொள்ள தயாராக வந்திருந்தவனின் முகத்தில் கிஞ்சித்தும் குழப்பம் இல்லை.
“வங்கியில் அடைமானம் வச்சால், வீட்டை ஜப்தி பண்ணிடுவாங்கன்னு எனக்குப் பயம்தான் அங்கிள்,” தலையசைத்தவன்,
இது எங்க அப்பா வாழ்ந்து நடமாடிய வீடு. எழுதும் என் ஆசைக்கு, அவர் ஊக்கம் கொடுத்த வீடு. இந்த சென்டிமென்ட் எல்லாம் வங்கியில் யாருக்கும் புரியாது,” தந்தையின் நினைவில் அவன் குரல் கம்மியது.
“ஹரி…” மீரா பதற,
‘பயப்படாதே!’ எனக் கண்மூடித் திறந்தவன், “ஆனால் இந்த சென்டிமென்ட்ஸ் எல்லாம் என் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கற உங்க பொண்ணுக்கு மட்டும்தான் புரியும்.”
‘என் மீராவுக்கு’ என்று சொல்லத் துடித்தது மனசு; ஆனால், காதலை இன்னும் அங்கீகரிக்காத தந்தை முன்னால் அப்படி உரிமை கொண்டாடுவது தவறு என்று நினைத்து, ‘உங்க பொண்ணு’ என்று சொன்னான்.
அவன் தெளிந்த குரலில் வரதனின் பிடிவாதம் கொஞ்சம் ஆட்டம் கண்டது என்னமோ உண்மைதான். தடுமாறும் உள்ளத்தை இழுத்துப் பிடித்துவைத்தவர், “இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்; எல்லாத்தையும் எடுத்துட்டு நடைய கட்டு,” என விரட்டினார்.
ஹரியோ, அவர் பேசுவது எதுவும் காதில் விழாததைப் போல, மூன்றாவது கோப்பில் வைத்திருந்த சீல் செய்யப்பட்ட கவர் ஒன்றை எடுத்து அவர் கண்ணில் படுமாறு முன்னே தள்ளினான்.
“இது நான் உங்களுக்கு எழுதிருக்க கடிதம். எங்க திருமணத்துக்கு சம்மதம் சொல்லணும்னு தோணும்போது, இதைப் பிரிச்சு படிங்க.” என்றவன் மீரா பக்கம் திரும்பி,
“மீரா, இதெல்லாம் பத்திரமா உள்ள வெச்சுட்டு வா. பாங்குக்குக் கிளம்பலாம்,” அலட்டலே இல்லாமல் அழைத்தான்.
அவன் பார்வையில் வீசிய தன்னம்பிக்கையை மெச்சியவள் அவன் சொல்படி நடந்தாள்.
தன் கட்டுக்குள் எதுவும் இல்லை என்று உறைந்துபோன வரதன் சிலையாக அமர்ந்திருந்தார்.
புறப்பட எழுந்த ஹரி, “பணம் விஷயத்தில் உங்க விருப்பத்துக்கு மாறா நடந்துக்குறேன்னு புரியுது. ஆனால் உங்க சம்மதம் இல்லாம, மீராவைக் கல்யாணமில்ல…காதலிக்க கூட மாட்டேன்,” என்று சொல்ல, வரதனின் புருவங்கள் வியப்பில் வளைந்தன.
“அதுக்காக அவகிட்ட பேசமாட்டேன், அவள பார்க்கமாட்டேன்; அவளோட பழகமாட்டேன்னு எல்லாம் சொல்ல வரல. எப்பவும் போல நல்ல நண்பர்களா இருப்போம். ஏன்னா, அவ தரும் தார்மீக ஆதரவுதான் எனக்குப் பலம். அதை நீங்களும் ஒருநாள் புரிஞ்சுப்பீங்க,” தங்கள் உறவின் வரம்புக் கோட்டின் எல்லையை நிலைநாட்டி, அவர் பதிலுக்குக் காத்திராமல் வெளியேறினான்.
‘இதற்குப் பெயர்தான் புயலுக்கு முன் அமைதியா’ வாயைப்பிளந்த மீரா, பெற்றோரிடம் தன்மையாகச் சொல்லிக்கொண்டு தன்னவனைப் பின்தொடர்ந்தாள்.
அவனிடம் மனம்விட்டுப் பேச நினைத்தவள், விடுப்பு எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என யோசனை கூற,
“உன் அப்பாகிட்ட சும்மா பேச்சுக்கு சொன்னேன்னு நெனச்சியா?” முறைத்தவன் அவளிடமிருந்து வண்டிச் சாவியைப் பிடுங்கி உயிர்ப்பித்தான்.
“உன்கிட்ட நிறைய பேசணும் ஹரி!” பின் இருக்கையில் அமர்ந்தவள் அவன் செவிகளில் கிசுகிசுக்க,
“பேசணும்னா தினமும் லன்ச் பிரேக்ல பேசிக்கலாம்!” என்றான் இறுகிய தொனியில்.
நண்பர்கள் முன் பேசக்கூடிய விஷயமில்லை என அவள் நாசுக்காக உணர்த்தியதற்கும், சனிக்கிழமைகளில் வேலையில் இருந்து வீட்டிற்குத் திரும்பும் வழியில் பேசிக்கொள்ளலாம் என அலட்டலே இல்லாமல் கூறி அவள் வாயடைத்தான்.
“முசுடு எழுத்தாளர்!” உதடுகள் ஏசினாலும், உள்ளம் அவன் காதலில் நெகிழ அவனுடனான சன்னி பயணத்தை மகிழ்ந்து அனுபவித்தாள்.
அன்று மதியம் உணவருந்த வந்த அரவிந்தன், வேண்டுமென்றே மகேஷ் அருகில் அமர்ந்து, மீராவுக்கு ஹரி அருகில் உட்கார இடம்விட்டான்.
காலையில் அவன்தான் ஹரியை மீராவின் வீட்டில் இறக்கிவிட்டது. அவனைப் பொறுத்தவரை இன்றுதான் காதல் ஜோடிகள் தங்கள் விவகாரத்தை வீட்டில் பகிர்ந்து கொண்டிருப்பதாக நினைத்திருந்தான்.
“என்னடா ஹரி! மிஸ்டர் வரதன் பொண்ண தருவாரா மாட்டாராமாம்?” எடுத்த எடுப்பிலேயே தோழியைச் சீண்டினான்.
மீரா அவனைப் பார்வையால் சுட்டெரிக்க, எல்லாம் நல்லபடியாக நடந்தது என மேலோட்டமாகப் பதிலளித்தான் ஹரி.
“லவ் பண்ண லைசென்ஸ் கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க,” மகேஷ் ஆரவாரம் செய்ய,
“நீ வேற மகேஷ்! எங்கப்பா சம்மதம் இல்லாம காதலிக்கக் கூட மாட்டேன்னு வசனமெல்லாம் பேசினான்டா நம்ம எழுத்தாளர்,” புலம்பியவள், தன்னவனை ஓரக்கண்ணால் விழுங்கினாள்.
“அடப்பாவி! உனக்கே இது ரொம்ப ஓவரா தெரியல?” மகேஷ் கலகலவெனச் சிரிக்க, மீரா ஹரியிட்ட நிபந்தனைகளை புகாராக வாசிக்க எனக் கிண்டலும் கேலியும் நீடித்தது.
“ஹரி காரணம் இல்லாம எதையும் சொல்லமாட்டான்,” அரவிந்தன் பரிய,
“நீ உன் ஃப்ரெண்ட்டுக்குத் தானே எப்பவும் ஜால்ரா அடிப்ப!” உதட்டைச் சுழித்தாள் மீரா.
திருப்தி என்பதே இவளுக்கு இல்லை என முகம் சுருக்கினான் ஹரி.
கிண்டல் ஜோரிலிருந்த மகேஷோ, “வெளிய சந்தோஷமா ஊர் சுத்துறத விட்டுட்டு, லன்ச் டைம்லயும் வீட்டுக்குப் போகுற நேரத்துலயும் பார்த்துக்குறது போதும்னு சொன்னால் நியாயமாடா!” குலுங்கிச் சிரிக்க, ஹரியின் எரிச்சல் கோபமாக உருவெடுத்தது.
“பார்க், பீச்சுன்னு சுத்துறதுதான் காதல்னா… மன்னிச்சுக்க மீரா! எனக்கு அதெல்லாம் தெரியாது,” கடுகடுத்தவன், பாதி உணவிலேயே வெளியேறினான்.
அதைச் சற்றும் எதிர்பார்த்திராத மகேஷின் முகம் அதிர்ச்சியில் வெளிரிப்போனது.
“அவன் சுபாவம் உனக்குத் தெரியாதா மகேஷ்,” அரவிந்தன் நண்பனின் தோளினில் ஆறுதலாகத் தட்டிக்கொடுக்க,
உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசும் ஹரியின் மனநிலையைப் புரிந்துகொண்ட மீரா, “அட ஃபீல் பண்ணாதடா மகேஷ்! அவன் கோபமெல்லாம் அஞ்சு நிமிஷம் கூடத் தாக்குப்பிடிக்காது,” உதட்டில் ஒட்டிக்கொண்ட சிரிப்புடன் கண்சிமிட்டி,
அரவிந்தனிடம், “முதலாளி நண்பரே! என் ஆளு சாப்பிடாம போறான். நாங்க ரெண்டுபேரும், ஜோடியா அடுத்த லன்ச்சுல சாப்பிட்டுக்குவோம்.ரெண்டு லன்ச் பிரேக்குல லவ் பண்றோம்னு நீங்க புரளி பேசாதீங்க!” எனச் செல்லம் கொஞ்சினாள்.
மீராவே சூழ்நிலையை எதார்த்தாமாகக் கையாளுவதைக் கண்ட நண்பர்களின் மனமும் லேசானது.
“சரி! சரி! என் நண்பன் மனசு கோணாம நடந்துக்கோ,” துள்ளலாகத் தோழியைச் சீண்டினான் அரவிந்தன்.
“அதான் அவன் உன்கிட்ட ஒண்ணு விடாம எல்லாத்தையும் ஒப்பிப்பானே; நீயே கேட்டுத் தெரிஞ்சுக்கோ,” மீராவும் ஏட்டிக்குப் போட்டி கலாய்க்க,
“அவன் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல; அவன் முகத்தைப் பார்த்தாலே, நீ எந்தளவுக்கு அவனைக் கொடுமைப் படுத்திருப்பேன்னு கண்டுபிடிச்சுடுவேன்,” அவள் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு நகர்ந்தான்.
இரண்டாவது மதிய உணவு இடைவேளை தொடங்கியதும், உணவருந்திவிட்டு வரலாம் என ஹரியை அன்பாக அழைத்தாள் மீரா.
“நீ பேசினதுலேயே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு!” அவன் இடித்துக்காட்ட,
‘இவனிடம் கெஞ்சினால் வேலைக்கு ஆகாது!’ எனப் பெருமூச்சுவிட்டவள், “எதுவாயிருந்தாலும் லன்ச் பிரேக்குல பேசலாமுன்னு நீதானேடா சொன்ன; இப்போ நீ வரலேன்னா, இங்கேயே பேச வேண்டியதா இருக்கும்.” கைகளை மார்ப்புக்கு இடையே கட்டிக்கொண்டு சிலையாக நின்றாள்.
“இம்சைடி உன்னோட!” சிடுசிடுத்தபடி எழுந்தான் அவன்.
கண்ணில் கோபம் தெறிக்க எதிரே அமர்ந்திருந்தவனிடம், அவன் கோபத்திற்கான காரணத்தைச் சிந்திக்கச் சொன்னாள்.
“வாய் ஓயாமல் புலம்பிட்டு என்னை யோசிக்கச் சொல்றீயா?” ஹரி எகிற,
“தப்புதான் ஹரி!” ஒப்புக்கொண்டு அவன் கைவிரல்களை கோர்த்தவள், “நீயும் ஒரு விஷயத்தைப் புரிஞ்சுக்கோ டா. இப்போ நமக்குள்ள இருக்குற உறவு வேற. அவங்க நம்ம நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும் எல்லாத்தையும் அவங்க முன்னாடி பேசமுடியாது. அவங்க நம்மமேல இருக்குற உரிமையில் அட்வைஸ் பண்ணாலும், அது நமக்குச் சில சமயம் சரின்னு படும்; சில சமயம்… இதோ… இன்னைக்கு நடந்தா மாதிரி மனஸ்தாபத்துல முடியும்.
அதுக்குத்தான் நமக்கே நமக்கான நேரம் வேணுமுன்னு கேக்குறேன்,” தன் ஆதங்கத்தை மென்மையாக முன்வைத்தாள்.
“நீ சொல்றது சரிதான் மீரா. லன்ச் டைம்ல பேச முடியாதுதான். ஆனால் வேற எங்க எப்படின்னு எனக்குப் புரியல,” சிந்தனையில் கரைந்தான் ஹரி.
அவன் புரிந்துகொண்டதிலேயே மனம் குளிர்ந்தது பேதைக்கு.
“பார்த்துக்கலாம் விடுடா! நான் காலையில பேசணும்னு நெனச்சது வேற,” என்றவள், “எதுக்குடா வீட்டுப் பத்திரத்தை அப்பாகிட்ட தந்த?” காலையிலிருந்து வண்டாய்க் குடைந்த கேள்வியை இறக்கிவைத்தாள்.
அவளிடம் கலந்தாலோசிக்காமல் எத்தனை வேலைகளை செய்திருக்கிறேன் எனத் தெளிந்தவனும், “அது சரி! செக்யூரிட்டி இல்லாம யாரு கடன் கொடுப்பாங்களாமாம்,” இலகுவாகக் கேட்டுக் கண்சிமிட்டினான்.
அப்பாவின் குணத்திற்காகவே அப்படிச் செய்திருப்பான் என உணர்ந்தவள், தக்காளி சாதத்தை மென்று விழுங்கியவாறு, “வீட்டுப் பத்திரத்தைத் தரதுக்குப் பதிலா அரவிந்த் கிட்ட சூரிட்டி கையெழுத்து கேட்டிருக்கலாமே டா,” என வினவினாள்.
“கேட்டு…” இழுத்தவன், “மீரா அப்பாவுக்கு என்மேல நம்பிக்கை இல்லன்னு, நடந்ததை எல்லாம் அவன்கிட்ட சொல்லச் சொல்றியா?” எதையும் யோசிக்காமல் செய்யவில்லை என்று உணர்த்தினான்.
மீராவின் முகம் குற்றவுணர்ச்சியில் தோய, “அரவிந்த் கிட்ட சொல்லக் கூடாதூன்னு இல்ல மீரா. அவனுக்கு அங்கிள் மேல நிறைய மரியாதை இருக்கு. தற்காலிகமான பிரச்சனையை ஊதிப் பெருசுபடுத்தி அவனைக் குழப்பவேண்டாம்னு நெனச்சேன்,” எல்லோர் நன்மையையும் கருத்தில் கொண்டு முடிவு எடுத்திருப்பதாக விளக்கினான்.
பேதையின் கண்ணோரம் மழைச்சாரல் எட்டிப்பார்க்க, “எல்லாம் நல்லபடியா நடக்குதேன்னு சந்தோஷப்படுடி,” எனத் தன் மீல்ஸ் உனவிலிருந்த குலாப் ஜாமுனை அவள் வாயில் ஊட்டி புன்னகைத்தான்.
மனநிறைவோடு புசித்தவள், வீட்டுப் பத்திரத்தை எடுத்துத் தரும் அளவிற்குத் தன் அம்மாவிற்கு என்ன சொல்லிப் புரியவைத்தான் எனக் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.
அவன் தலைகுனிந்த விதமே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது.
“எதுக்குடா அவசரப்பட்ட…” எரிமலையாக வெடிக்கத் தயாரானவளின் முகமருகே கை நீட்டித் தடுத்தவன், “வீட்டுப் பத்திரம் உன்கிட்ட இருந்தா பாதுகாப்பா இருக்கும்னு நம்புறேன். என் மனைவியா வர நினைக்குறவ இதைக் கூட எனக்காக செய்யமாட்டியா?” உரிமையோடு கேட்க,
“இன்னும் எத்தனை பேரோட விரோதத்தை எனக்காக சுமக்கபோகுற ஹரி?” பேதையின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
வெளிப்படையாகப் பதில் சொல்லவில்லை என்றால், அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று அறிந்தவன், அம்மாவிற்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், அனைத்தையும் தாய் மாமனிடம் சொல்லி, அவர் முழு சம்மதத்துடன் தான் வீட்டுப் பத்திரத்தைப் பெற்றதாக விவரித்தான்.
அப்போதும் அவளால் அதை ஏற்க முடியவில்லை.
பெருமூச்சுடன் அவள் கரங்களை ஆதரவாகப் பற்றியவன், “நம்ம லட்சியத்தை நோக்கி போறப்ப, எல்லாருடைய விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாதுன்னு நீதானேடி சொன்ன,” நினைவூட்ட,
“அதுக்குன்னு!” கண்டிப்பும் கவலையுமாக முறைத்தாள் அவள்.
“காலம் அவங்களுக்கும் பதில் சொல்லும்!” என்றவன் உணவு நேரம் கடந்து பேசிக்கொண்டிருக்கிறோம் எனச் சுட்டிக்காட்டி, பணிக்குத் திரும்பலாம் என்றான்.
போகும் வழியில் மகேஷின் பணிமேஜையில் நின்று நண்பனிடம் மன்னிப்புக் கேட்டு, சில நிமிடங்கள் சகஜமாகப் பேசிவிட்டே பணிக்குத் திரும்பினான் ஹரி.
அன்று மாலை வீடு திரும்பியவளைத் தூதஞ்சல் கொண்டு வரும் ஊழியர் வாசலில் வழிமறிக்க, அப்போதுதான் ஹரி தன் தந்தையிடம் தந்த கவர் நினைவுக்கு வந்தது.
அறைக்குள் சென்று அதைச் சோதித்தவள், சீல் செய்யப்பட்டிருந்த அந்த கவரை பிரிக்க மனமில்லாமல் தன்னவனை அழைத்து விசாரித்தாள்.
“அது எனக்கும் என் மாமனாருக்கும் பர்ஸனல்!” உசுப்பேற்றினான் ஹரி.
காதல் கடித்ததையே மூன்று வார்த்தைகளுக்கு மேல் எழுதாதவன், மாமனாருக்கு இத்தனை கனமான கவரைத் தந்திருக்கிறானே என யோசித்தவளுக்கு அன்று அவன் துணிப்பையில் செய்தித்தாள் மடித்து வைத்து விளையாடியது நினைவுக்கு வர, பக்கென்று உரக்கச் சிரித்தாள்.
‘சண்டைக்கு வருவாள் என்று நினைத்தால் சிரிக்கிறாளே!’ எனக் குழம்பியவன், “எதுக்குடி சிரிக்குற?” வினவ,
“எனக்கு கவர்ல நியூஸ்பேப்பர் வச்சு கொடுத்த! உன் மாமனாருக்கு குமுதமா, ஆனந்த விகடனா?” கேலி செய்தாள்.
“அதை உன் அப்பாகிட்டயே கேட்டுப் பிரிச்சுக்காட்ட சொல்லு!” ஹரியும் அவளுக்கு இணையாக வம்பிழுத்தான்.
அன்று நாள் முழுவதும் அவனிடம் கண்ட உற்சாகத்தை எண்ணி நெகிழ்ந்தவள், “ஆனா ஒண்ணுடா! என்னமா கெத்தா அப்பாகிட்ட பேசின! மனுஷன் முகத்துல ஈ ஆடலையே,” என்றாள் பிரமிப்பாக.
“மீரா பக்கத்தில் இருக்க பயம் ஏன்?” பதிலுரைத்தவனுக்குக் காலையில் நடந்த வாக்குவாதம் கண்முன் நிழலாடியது.
“உண்மையைச் சொல்லு மீரா! உன்னை காதலிக்க கூட மாட்டேன்னு சொன்னதுல உனக்கு வருத்தம் தானே!” என்றான்.
“இல்லவே இல்ல!” அழுத்திச் சொன்னவள், “அப்பாகிட்ட சும்மா பேச்சுக்குச் சொல்லாம அதை உண்மையா கடைபிடிக்க நினைக்குற உன் மனசு யாருக்கும் வராது ஹரி.” மனதார உரைத்தாள்.
அவள் பக்குவத்தில் பேச்சற்றுப் போனவன் மௌனம் காக்க,
“உன்னோட ஊர் சுத்தணும்னு நான் எப்பவுமே எதிர்பார்க்க மாட்டேன் ஹரி. உன்னோட செலவிடுற நேரத்துல, உனக்கு ஏதோ ஒரு விதத்துல உதவியா இருக்கணும்னு ஆசைபடறேன்; அவ்வளவுதான்டா!” தன் நோக்கத்தை தெளிவுபடுத்தினாள் மீரா.
“என் லட்சிய பாதையில நான் எடுத்து வெக்குற ஒவ்வொரு அடியிலும் நீ என் பக்கத்துலேயே இருக்கணும் டி,” அடிமனத்திலிருந்து உரைத்தவனின் கண்கள் பூரிப்பில் குளமானது.
ஔடதம் வேறேதும் தான் உண்டோ,
ஓரப்பார்வைகள் ஊட்டும் நம்பிக்கையை காட்டிலும்;
ஒலியெழுப்பா உரையாடல்களுடன்,
ஐவிரல் கோர்த்து நடந்தால் போதும் என்றார்கள்!
ஏக்கங்கள், ஏமாற்றத்தில் தான் முடியும் என்று தெரிந்தும்,
எதிர்ப்பார்ப்புகள் குறையவில்லை!
ஊடலில் ஒரு தெளிவு பிறந்தது,
உச்சந்தலை முத்தத்தில் சலனமும் முளைத்தது!
ஈடாகுமா இவள் அன்புக்கு என்றான் அவன்,
இன்னும் ஏன் தயக்கம் என்றாள் இவள்!
ஆரம்பமானது இவர்கள் லட்சிய பயணம்,
அன்பின் ஆழத்தில்….


Please Comment Here