90 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
“அட என்னம்மா இன்னும் அடுப்படியிலேயே இருக்க! அவங்க எல்லாம் வரத்துக்குள்ள ட்ரெஸ் பண்ணிட்டு வா!” வாணலிக்கு வலிக்குமா, கரண்டிக்கு நோகுமா என்ற ரீதியில் ரவையை நிதானமாக வறுத்துக்கொண்டிருந்த அன்னை அகிலாவின் தோளினில் முகம் புதைத்து ஊஞ்சலாடினான் அரவிந்தன்.
“உன் நண்பர்கள் வர இன்னும் சுளையா ஒருமணி நேரம் இருக்குடா!” தலைகால் புரியாத சந்தோஷத்தில் மிதக்கும் மகனின் கன்னத்தோடு கன்னம் இடித்தவர், அலமாரியின் மேல் தட்டில் வைத்திருந்த கோதுமை மாவு டப்பாவை எடுத்துத் தரச்சொல்லி அவனிடம் கேட்க,
“இன்னும் சப்பாத்தி வேற செய்யணுமா?” அலறினான் அரவிந்தன்.
“அதெல்லாம் அவங்க வந்தவுடனே சூடா போட்டுக்கலாம்!” மென்னகையுடன் மகனின் கன்னத்தில் தட்டிக்கொடுத்தார் அகிலா.
அரவிந்தன் படுத்தும்பாட்டை கவனித்த ஹரி, “அவங்கள ஃப்ரீயா விடுடா!” எனக் கூறி நண்பனை இழுத்தான்.
“கேசரில முந்திரி மட்டும் போடு ‘ம்மா; திராட்சை சேர்க்காதே; மீராவுக்குப் பிடிக்காது.” குறிப்புகள் தந்தபடி வாசலை நோக்கி நடந்தவன், “ஹான்! அப்படியே சர்க்கரை கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்! அதுதான் மீராவுக்குப் பிடிக்கும்!” கூவ,
“அட வாடா! உனக்குத் துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்குமே வித்தியாசம் தெரியாது; நீ அவங்களுக்குச் சொல்லித்தரியா?” நண்பனைத் தரதரவென்று இழுத்தான் ஹரி.
வாரயிதழில் மூழ்கியிருந்த அசோகனுக்கும் கூட, படித்துக் கொண்டிருந்த தொடர் கதையைக் காட்டிலும் நண்பர்களின் கிண்டலும் கேலியும் சுவாரசியமாகத் தோன்றியது.
திட்டமிட்டிருந்தபடி பெற்றோரை சென்னைக்கு அழைத்து வந்திருந்தான் அரவிந்தன்.
நண்பர்களுக்கு அருகிலேயே குடியிருக்க விரும்பியவன், ஏற்கனவே வசித்து வந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலேயே இருந்திட முடிவுசெய்திருந்தான். மகன் மனம் மாறுவதற்கு முன் வந்துவிட வேண்டுமென்று பதறிய தாய் உள்ளமோ, அந்த வாரமே சென்னைக்கு வரத் தீர்மானித்துவிட்டார்.
ஆனால் மகேஷின் புது வீட்டில் சின்ன சின்ன வேலைகள் பாக்கியிருக்க, அது முடியும்வரை ஹரி அவர்களுடன் தங்க வேண்டியதாயிற்று. அவன் வீடு மாறுவதற்குள் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, அப்படியே பெற்றோரிடமும் அறிமுகப்படுத்த நினைத்தான் அரவிந்தன்.
முன்வாசலுக்கு வந்த நண்பர்கள் இரு வீட்டிற்கும் தேவையான மற்ற அத்தியாவசிய பொருட்களைப் பற்றி கலந்துபேச,
“அட சொல்ல மறந்துட்டேன் பாரு!” தலையில் தட்டிக்கொண்ட அரவிந்தன், “மகேஷ் உன் வீட்டுக்கும் சேர்த்து இன்டர்னெட் கனெக்க்ஷன் கொடுத்துட்டானாமா. நீ என் லேப்டாப் எடுத்துட்டுப் போய் யூஸ் பண்ணு,” என்றதும் ஹரியின் முகம் வாடியது.
பத்திற்கும் மேற்பட்ட பிரபலமான பதிப்பகங்களுக்கு விண்ணப்பக் கடிதங்கள் அனுப்பி விளையாட்டுப் போல மூன்று வாரங்கள் ஆகிவிட்டது என நினைவூட்டியவனின் குரல் சரிந்தது.
“அட என்னடா! நடக்கவே நடக்காதுன்னு மூணு வருஷமா மூட்டைக்கட்டி வச்சிருந்த கனவுக்குப் பிள்ளையார் சுழி போட்டு மூணு வாரம் தானே ஆச்சு.” மனம் தளராதே என அரவிந்தன் ஹரியின் தோளில் தட்ட, மகேஷின் கார் அவர்கள் வாசல் முன் வந்து நின்றது.
“ஹாய் டா!!!” முகமெல்லாம் பற்கள் மின்ன காரிலிருந்து இறங்கினாள் மீரா.
“பார்த்தீயா! முதல்ல உன் ஆளு வந்துட்டா; அடுத்து பப்ளிஷர் வருவாரு,” அரவிந்தன் கோர்வையாகப் பேச, ஹரி கவலைகள் மறந்து புன்னகைத்தான்.
மகேஷும், மைதிலியும் வரும்வழியில் மீராவை அவர்கள் காரிலேயே அழைத்து வந்திருந்தனர்.
“ஹாய் எனக்கா உன் ஆளுக்கா?” வந்ததும் வராததுமாகத் தோழியை வம்பிழுத்தபடியே மூவரையும் உள்ளே அழைத்து வந்து பெற்றோரிடம் அறிமுகம் செய்துவைத்தான் அரவிந்தன்.
அறிமுகக் கேள்விகள், நலன் விசாரிப்புகள் எனத் தொடங்கி அது அப்படியே ஹரி மீரா காதல் விவகாரத்தில் பயணித்தது.
“இன்னும் ரெண்டு நாள்தான் மீரா! அதுக்கப்புறம், ஹரியைப் பார்க்க எங்க வீட்டுக்குத் தான் வரணும்.” மைதிலி சீண்ட,
“ஆமாம் மைதிலி! அடுத்த வாரம் போடானா கேட்க மாட்டேன்றான். விட்டால் போதும்னு ஓடுறான்,” அரவிந்தன் நண்பனின் தோளினில் வாஞ்சையாக இடித்தான்.
அன்றுபோல் விளையாட்டு விபரீதமாகிவிடுமோ என அஞ்சிய மகேஷ், “திங்கட்கிழமை நாள் நல்லா இருக்குன்னு அப்பா சொன்னதுனால தான்டா உடனே ஷிஃப்ட் பண்ணறான்,” அரவிந்தனுக்குக் கண்ணசைத்து அடக்கிவாசி என்றான்.
அதில் சுதாரித்துக்கொண்ட அரவிந்தன், அன்று தனக்கு வங்கியில் கலந்துரையாடல்கள் வரிசைக்கட்டி நிற்பதால், ஹரிக்கு உதவ இயலாத அக்கறையில் குறைப்பட்டதாக லாவகமாய் பேச்சை திசைத்திருப்ப, மைதிலியோ விடுவதாக இல்லை.
“என்னங்க! நீங்க லீவு போட்டு, ஹரிக்கு ஒத்தாசையா இருக்கலாமே!” கணவனைக் கோர்த்துவிட்டாள் அவள்.
“அவன் மீட்டிங்க்குக் கூப்பிடுறதே எங்க டீமைத்தான்! இவனுக்குப் படம்போட்டுக் காட்ட நானும் அவசியம் போகணும்.” முதலாளி நண்பனை சலிப்பாய் ஏறிட்டவன்,
“ரியல் எஸ்டேட் மார்க்கெட் டௌன் ஆனா, வீட்டுக்கடன் கொடுக்குற எங்களால என்ன செய்ய முடியும்,” என மனைவியிடம் புகார் வாசித்தான்.
மைதிலியின் கவனம் மீரா பக்கம் திரும்பியது.
தேவையில்லாமல் சந்திக்கக் கூடாது எனத் தன்னவனிட்ட நிபந்தனைகளைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்தவள், தானும் வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை முடிக்க வேண்டிய நெருக்கடியில் இருப்பதாகக் கூறி மழுப்பினாள்.
“என்னம்மோ போங்க!” மைதிலி களைத்துப்போக, சாக்குச் சொல்லிச் சமாளிக்கும் மீராவின் தவிப்பை உணரவே செய்தான் ஹரி.
சம்பிரதாயத்திற்கு அன்று குடியேறிவிட்டு, நண்பர்களின் உதவியோடே பொருட்களை எடுத்துச் செல்லுமாறு அசோகன் ஹரிக்கு ஆலோசனை சொல்ல அவனும் சரியெனத் தலையசைத்தான்.
“நேரமாச்சு! சாப்பிட்டுக்கிட்டே பேசுங்க,” அனைவரையும் உணவருந்த வருமாறு அன்பாய் அழைத்தார் அகிலா.
ஆளுக்கொரு பதார்த்தம் என எடுத்துவர உதவிய நண்பர்கள், தரையில் வட்டமாக உட்கார்ந்து கொண்டனர்.
“வாசனையே மூக்க துளைக்குது ஆன்ட்டி. எதை முதல்ல சாப்பிடுறதுன்னு தெரியல!” கண்களை இங்கும் அங்குமாய் சுழலவிட்டுப் பிரமித்தான் மகேஷ்.
“மைதிலி சமையலை விடவா ருசியா இருக்கப்போகுது?” கண்சிமிட்டினான் அரவிந்தன்.
காலிஃப்லவர் பகோடா, உருளை போண்டா, தக்காளி, வெள்ளரி, மாங்காய் சாலட் தூவிய லிஜ்ஜத் பப்படம் எனத் தட்டை நிரப்பிக்கொண்ட மகேஷ், “அடப்போடா! அவளுக்கு இதுல பாதி ஐடம்ஸோட பேருக்கூடத் தெரியாது.” மனைவியைச் சீண்ட,
“அப்ப இந்த தொப்பை தொந்தி எல்லாம் எங்கிருந்து வந்துது!” தோழனின் பெருத்த வயிற்றில் குத்தினாள் மீரா.
மகேஷ் அழகாய் அசடுவழிய, மைதிலியின் முகம் பொய்கோபத்திலும் நாணத்திலும் சிவந்தது.
சப்பாத்தி, சுரைக்காய் கோஃப்தா, பிஸிபேளாபாத், பைன் ஆப்பிள் ரஸம், தயிர்வடை, வாழைக்காய் வறுவல் என நண்பர்கள் அனைத்தையும் ஒரு பிடிப் பிடிக்க, கரண்டி கரண்டியாக இனிப்பை மட்டுமே அருந்திக்கொண்டிடுந்த மீரா, “கேசரி அட்டகாசம் ஆன்டி! !” எனப் புகழந்தாள்.
மென்னகையுடன் மகனை ஏறிட்ட அகிலா, “உனக்குப் பிடிச்சா மாதிரி செய்யச்சொல்லி அரவிந்த் தான் சொல்லிக்கொடுத்தான் மீரா!” என நெகிழ்ந்தார்.
நண்பனின் பாசத்தில் நெக்குருகியவளின் அலைபேசி சிணுங்கியது.
அழைப்பது கீதா எனக் கண்டுகொண்டவள், அனைவரும் பேசலாம் எனக் கூறி ஸ்பீகரில் உயிர்ப்பித்தாள்.
“மீரா! எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கா!” மறுமுனையில் இணைந்திருந்த கீதாவின் கணவர் ரமேஷ் பெருமை பொங்க அறிவிக்க,
“கங்க்ராட்ஸ்!” என்று நண்பர்கள் செய்த ஆரவாரத்தில் அவர் காது கிழிந்தது.
வலி எடுத்ததா? சுகப்பிரசவமானதா? குழந்தை யார் சாயல்? என மீரா ஓயாமல் கேள்விகளை அடுக்க, ரமேஷுக்கு விழிப் பிதுங்கிப் போனது.
“சும்மா தொணத்தொணன்னு பாட்டியாட்டம் கேள்வி கேட்டுகிட்டு,” அதட்டி அவளிடமிருந்து அலைபேசியைப் பிடுங்கினான் அரவிந்தன்.
நண்பனுக்கு அழகுகாட்டி கழுத்தை நொடித்தவள் சாப்பாட்டில் கவனத்தைத் திருப்ப, பெயர் சூட்டு விழா சேர நேரில் வந்து குழந்தையைப் பார்க்கிறோம் எனத் தேதியை விசாரித்தான் மகேஷ்.
அறுவை சிகிச்சையில் பிரசவித்த கீதாவின் உடல்நலம் பலவீனமாக இருப்பதால், பெயர் சூட்டு விழாவைத் தள்ளிவைக்கும் எண்ணத்தில் இருப்பதாக அறிவித்த ரமேஷ், “நாள் குறிச்சதும் சொல்றேன். உன் மருமாளுக்கு தாய்மாமன் சீரோட தயாரா இருங்க டா!” மூவரையும் வம்பிழுத்தான்.
“அது என்ன கேர்ள் பிரெண்ட்ஸ் எல்லாரையும் எங்களுக்கு சகோதரி முறை சொல்லி கோர்த்துவிடுறீங்க? உங்க தம்பின்ற முறையில் சீர் செஞ்சா உங்களுக்குக் கசக்குமா?” அரவிந்தன் எகிற, ரமேஷ் சரணாகதியாக என அவ்விடமே சிரிப்பொலியில் நிறைந்தது.
மகனுக்கு இவ்வளவு நெருங்கிய நண்பர்களா என்ற மலைப்பில், இளையவர்களின் அலப்பறைகளைக் கண்டு களித்தனர் அகிலாவும் அசோகனும்.
கீதாவிற்கு மயக்கம் தெளிந்தவுடன் பேசலாம் எனக் கூறி ரமேஷ் அழைப்பைத் துண்டிக்க, குழந்தை பிறந்த நற்செய்தியை இனிப்புடன் கொண்டாட வேண்டுமென்ற அரவிந்தன் ரசகுல்லா டின் எடுத்து வந்தான்.
வயிற்றில் துளிக்கூட இடமில்லை என்று அனைவரும் தட்டிக்கழித்தனர்… மீராவைத் தவிர!
மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து கொண்டிருந்தவன் தோழிக்கு ஊட்டியே விட்டான்.
இருவரையும் பார்வையாலேயே சுட்டெரித்தான் ஹரி.
“பாரு டா அரவிந்தா! அவன் எப்படி முறைக்கிறான்.” கன்னங்கள் உப்ப மென்றுகொண்டே செல்லம் கொஞ்சினாள் மீரா.
“அவன் கடக்குறான்!” என்றவன், ஹரி பக்கம் திரும்பி, “ரமேஷுக்கு சொன்னதுதான் உனக்கும்! மீராவ சிஸ்டர் அப்படி இப்படின்னு கூப்பிடச் சொன்ன…” அவன் முகத்திற்கு எதிரே ஆள்காட்டி விரலை உயர்த்திக் காட்டி மிரட்டினான்.
“நான் சொன்னா மட்டும் நீ அப்படியே கேட்டுடப்போற!” ஹரி சலித்துக்கொள்ள, சங்கோஜமின்றி மேலும் இரண்டு ரசகுல்லாக்கள் விழுங்கினாள் மீரா.
ஐவரின் நட்பின் ஆழத்தையும், அவர்கள் அன்புக் கூட்டில் உறவாய் இணைந்த மைதிலி மட்டும் ரமேஷின் புரிதலையும் கவனித்த அகிலாவிற்கு ஒன்று மட்டும் தெள்ளெத் தெளிவாகப் புரிந்தது. தனக்கு மருமகளாக வருபவள், குடும்பத்தை மட்டும் அனுசரித்தால் போதாது; அரவிந்தனின் நண்பர்களுடனும் சகஜமாகப் பழகவேண்டியதும் மிகமிக அவசியம் என்று!
சனிக்கிழமை வங்கியிலிருந்து நேராக ஊருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தான் ஹரி. வழியனுப்ப வாசல் வரை உடன் நடந்துவந்தவளின் முகத்தில் சோகம் அப்பிக்கொண்டது.
அதைக் கண்டும் காணாதது போல நடித்தவன், “என்னை கோயேம்பேடு பஸ்ஸாட்டாப்பில் இறக்கிவிடு!” என்றான் இயல்பாக.
மூன்று வார்த்தை காதல் கடிதம் எழுதுவதற்குப் பெயர்போனவன் நாலு வார்த்தைகளில் அன்புக்கட்டளை இட்டதில் உச்சிக்குளிர்ந்தாள் பேதை.
‘முசுடு எழுத்தாளர்!’ செல்லமாகத் திட்டிக்கொண்டே அவன் தோள்பையைக் கைப்பற்றி, சன்னியின் சாவியை அவன் கையில் திணித்து வண்டியைச் செலுத்துமாறு உத்தரவிட்டாள்.
பேருந்து நிறுத்தம் வரும்வரை எந்த எதிர்வினையும் காட்டாமல் வந்தவன், பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்ததும், அவளிடம் ஒரு காகிதத்தை நீட்டினான்.
‘மஞ்சள், குங்குமம், பூ, பழம், பால்….’ என்ற மங்கலகரமான காதல் கடிதத்தை உரக்கப் படித்தவள், ‘என்ன இது!’ என்ற ரீதியில் அவனைப் பார்வையால் விழுங்கினாள்.
“அம்மா வாங்கிவைக்கச் சொன்னாங்க…” அவன் தொடங்கியது தான் தாமதம்.
“என்னையா?” பேதையில் கண்கள் ஆர்வத்தில் விரிந்தது.
“எல்லாம் உனக்கு விளையாட்டா?” கடிந்தவன், “திங்கட்கிழமை பால் காய்ச்ச, என்னை வாங்கிக்கச் சொன்னாங்க. நான் ஊருலேந்து வந்து வாங்க கஷ்டமா இருக்கும். அதனால நீ இதெல்லாம் வாங்கி புது வீட்டுல வச்சிடு. ராணி அக்காகிட்ட ஒரு செட் சாவி இருக்கு.” அவன் பேசிக்கொண்டே போக,
“இதெல்லாம் காதல் இல்லையா எழுத்தாளரே?” அவன் தோளினில் செல்லமாக இடித்துக் கண்சிமிட்டினாள் மீரா.
அவளை முறைத்துக்கொண்டே சற்று தள்ளி அமர்ந்தவன், “எனக்கு உதவியா இருக்கணும்னு நீ சொன்னதுனால கேட்டேன்.” இறுகிய தொனியில் சொல்ல,
“ஒத்துக்கமாட்டியே!” உதட்டைச் சுழித்து அந்தக் காகிதத்தைத் தன் பர்ஸில் மடித்து வைத்தவள், அம்மாவையே நேரில் அழைத்து வந்து பால் காய்ச்சலாமே என்றாள்.
பதில் தெரிந்தும் தெரியாதது போல கேள்வி கேட்கிறாளே என நொந்தவன் மௌனம் காக்க,
“சரி விடுடா! எல்லாம் சரியாகிடும். உங்க குலதெய்வம் யாருன்னு சொல்லு?” அவனை இயல்பு நிலைக்குத் திருப்ப மெனக்கெட்டாள்.
தெரியாது என அவன் பதிலுரைக்க, “பரவாயில்ல; உங்க அப்பா ஃபோட்டோ இருந்தா கொடு!” கேட்டுக்கொண்டே அவன் வாலட்டை உரிமையோடு அலசி, அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த தந்தையின் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோவையும் எடுத்துக்கொண்டாள்.
அவள் பேச்சு செயல் எல்லாம் விநோதமாக இருக்க, “என் போட்டோ கேட்டா ஒரு நியாயம் இருக்கு; எங்க அப்பா போட்டோ வெச்சுகிட்டு என்ன பண்ண போற?” தன்னையும் மீறி குறும்பு செய்து நமுட்டாகச் சிரித்தான் ஹரி.
“பேச்சுல காதல் கொஞ்சம் எட்டிப்பார்க்குதே!!! இது காதல்னு ஒத்துக்கோ; நான் காரணம் சொல்றேன்.” ராகமாய்க் கேட்டு அவனை மடக்கினாள்.
“அதான் சொல்லிருக்கேனேடி! பிடிக்காம இல்ல…பயமா இருக்கு…” காதலும் பயமும் முட்டிமோத பதில்சொல்ல முடியாமல் திணறினான் அவன்.
அவன் வாய்விட்டுச் சொல்லித்தான் தெரியவேண்டுமா எனத் தன்னைத் தானே திட்டிக்கொண்டவள், ‘சரி சரி! சொல்றேன். புது வீட்டுல முதல் முதல்ல குலதெய்வம் ஃபோட்டோ வெச்சா நல்லதுன்னு சொல்லுவாங்க. உங்க குலதெய்வம் யாருன்னு தெரியலனு சொன்னல. அதான், உன் எழுத்துக்கு உறுதுணையா இருந்த உங்க அப்பா போட்டோ வெக்கலாம்னு கேட்டேன்.” காரணத்தைக் கூறவும், அவள் அன்பில் உறைந்து போனான் ஹரி.
வெளிரிப்போன அவன் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தியவள், “இன்னும் என்ன பயம்டா உனக்கு?” என்றாள் அதிகாரமாக.
மூன்று வாரமாகியும் பதிப்பகங்களில் இருந்து எந்தப் பதிலும் வராத நிலையில் எதிலும் பிடிமானம் இல்லாததைப் போல இருக்கிறது என மனமுடைந்தான்.
“மூணு வருஷமா எத்தனையோ கதவுகள் திறந்திருக்கும்; அப்போ எல்லாம் கண்ணை மூடிகிட்டு, இப்போ கவலைப்படற,” செல்லமாகக் கோபித்தவள், பொறுமையாக இருக்குமாறு நம்பிக்கையூட்டினாள்.
முன்தினம் அரவிந்தனும் இதே மாதிரி அதட்டியதை நினைவுகூர்ந்து, ‘இவங்க ரெண்டு பேரும் எப்படித்தான் மாடுலேஷன் மாறாம ஒரேமாதிரி பேசுறாங்களோ,’ வியந்தவன், பேருந்து புறப்படும் நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்தான்.
இருக்கையிலிருந்து எழுந்தவன், “திங்கட்கிழமை நீ வந்து பால் காய்ச்சி பூஜை செய்யறீயா மீரா,” மெல்லிய குரலில் கேட்க,
“எழுத்தாளரே! கொள்கை எல்லாம் காத்துல பறக்குறா மாதிரி இருக்கே!” குதூகலம் அடைந்தாள் பாவை.
அவள் பக்கம் சரியும் மனத்தை இழுத்துப் பிடித்தவன்,“கற்பனையில ரொம்ப மிதக்காத! லட்சியத்தை நோக்கி நான் வைக்கும் முதல் அடியில் நீ என் கூட இருக்கணும்னு கேட்டேன்.” மீசையில் மண் ஒட்டாத கதையாகச் சமாளிக்க,
“ஒத்துக்குமாட்டியே! முசுடு எழுத்தாளர்!” செல்லம் கொஞ்சி, அவன் கையை நறுக்கென்று கிள்ளி கிளுகிளுத்தாள் மீரா.
ஞாயிற்றுக்கிழமை அவன் சொன்னதை செய்தாள்; சொல்லாததையும் செய்தாள். அவன் அப்பாவின் போட்டோவை ஸ்டுடியோவில் தந்து பெரிதாக்கி, லேமினேட் செய்தாள்; விக்ன விநாயகர், ராமர் பட்டாபிஷேகம் படங்கள், ஜோடி பித்தளை விளக்குககள், தனக்குப் பிடித்த இனிப்பு பலகாரங்கள் எனப் பட்டியலில் இல்லாத பொருட்களையும் சேர்த்து வாங்கினாள்.
மாலை ஆறு மணியளவில் இரு பை நிறைய பொருட்களைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தவளை கண்ட ராணி மேலும் கீழுமாக அவளை ஏறிட்டாள். குளிர் சாதனப் பெட்டியில் வைக்கவேண்டிய பொருட்களை ராணியிடம் தந்து,
“அக்கா, பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துட்டு ஒருமணி நேரத்துல கிளம்பறேன்!” என்றாள்.
“பரவாயில்லையே! காதலிக்கும் போதே இவ்வளவு பொறுப்பா இருக்கையே!” பாராட்டியவள் தானும் உதவ முன்வர, தானே எல்லாவற்றையும் செய்ய ஆசைப்படுவதாக அசடுவழிந்தாள் மீரா.
வலதுகால் எடுத்துவைத்து வீட்டிற்குள் நுழைந்தவளின் மனத்தில் பட்டாம்பூச்சி சிறகடித்தது. ஹரியுடன் பல சுகமான பொழுதுகளைக் கழிக்கப்போகும் மிதப்பிலேயே பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தாள்.
கடவுள் படங்களையும் மாமனாரின் படத்தையும் வரவேற்பறையின் அலமாரித் தட்டில் கிழக்கு முகமாக வைத்து கோலமிட்டாள். விளக்குகளுக்குப் பொட்டிட்டு திரியும் போட்டு தயார் நிலையில் வைத்தாள்.
வீட்டின் வாசலிலும் நடுபகுதியிலும், காவி கலந்த மாக்கோலம் வரைந்து, வாங்கி வந்த தோரணங்களையும் தொங்கவிட்டு அலங்கரித்தாள்.
சமையலறையிலும் பால் காய்ச்ச வேண்டிய எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்தபின் ஹரியின் அறையை நோக்கி நடந்தாள்.
தனக்குக் கிடைத்திருந்த சன்மான தொகையில் வாங்கிவந்திருந்த பரிசுப் பொருளை அவன் கண்ணில் படும் வண்ணம், அலமாரியின் நடுத்தட்டில் வைத்துப் புன்னகைத்தாள்.
‘டேய், முசுடு எழுத்தாளரே! எப்படியும் உனக்குத் தெரியாம இந்த ஏற்பாடுகளை செய்ததுக்கு திட்டப்போற! இதுக்கும் சேர்த்துத் திட்டு!’ தனக்குள் முணுமுணுத்துக்கொண்டு, அலமாரியின் கதவை சாற்றினாள்.
அன்று இரவு உணவுக்குப் பின் தன் அறைக்குள் வந்தவள், பூஜைக்குப் புடைவைக் கட்டுவதா, அங்கிருந்து அப்படியே வங்கிக்குச் செல்லவிருப்பதால் சுடிதாரே அணியலாமா என மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க அவள் கைப்பேசி ஒலித்தது.
அழைப்பது ஹரி என்று கண்டவளின் முகமெல்லாம் வெட்கப் பூக்கள் வெடித்தது. தன்னவனையே கேட்கலாம் என்ற ஆசையோடு அவள் அழைப்பை ஏற்க,
“மீரா! திடீர்னு அம்மாவும் வரேன்னு சொல்லிட்டாங்க. அதனால கார் ஏற்பாடு செய்து அழைச்சிட்டு வரேன்.” அவன் கூற,
மகிழ்வதா வருந்துவதா என்ற குழப்பத்தில் “நான் வரட்டுமா வேண்டாமா!” கேட்டவளுக்குத் தொண்டை அடைத்தது.
“உனக்குத் தகவல் சொல்லணும்னு தான் கூப்பிட்டேன்.கண்டிப்பா வா. நாம மட்டும்தானே. உன்னை அம்மாக்கு அறிமுகம் செஞ்சுவைக்க இது நல்ல சந்தர்ப்பம்.” அவனே நம்பிக்கையுடன் சொல்ல, அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.
மாமியாரை முதன் முதலாகச் சந்திக்கப் போகிற மிதப்பில் புடைவையே கட்டலாம் எனத் தீர்மானித்தாள்.
தாரம் நான் எனக் காதலில் மிதக்கிறாள் பேதை;
தாய் நான் எனப் பறைசாற்ற வருகிறாள் பெற்றவள்;
தராசின் முள்ளாய்த் தவித்துத் தள்ளாடும் பாங்கன்,
தர்மம் இதுவென நடுநிலை காப்பானா – பதில்சொல்லும்,
அவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here