71 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
“நேரமாகுதே ஹரி! பாங்குக்குக் கிளம்புலையா?” அலைபேசியும் கையுமாக பால்கனியின் மதில் சுவற்றில் ஊன்றி நின்றுகொண்டிருந்த மகனிடம் வினவினார் வாசுகி.
“நான் இன்னைக்கு பாங்குக்குப் போகல ‘ம்மா; வேற முக்கியமான வேலை இருக்கு!” இதழோரம் பூத்த புன்னகையுடன் பதில் சொன்னவனின் விழிகள் மட்டும் அலைபேசியையே தழுவி இருந்தது.
“லீவு போட்டுட்டு அவளோட ஊர் சுத்தப்போற… அதானே!” வாசுகி கடுகடுக்க,
ஹரியின் முகத்தில் மலர்ந்த புன்னகை மலர்ந்த வேகத்திலேயே பொசுங்கியது. வாதத்தை வளர்க்க விரும்பாதவன், நீள் மூச்சுடன் தன்னைச் சமன்படுத்திக்கொண்டான்.
“ப்ளீஸ் மா! என் கதை பதிப்பிக்கும் விஷயமா, முதல் முதலா ஒருத்தர சந்திக்கப்போறேன். உனக்கு இதுல உடன்பாடு இல்லன்னு எனக்குத் தெரியும்.
நீ என்னை வாழ்த்தலேன்னாலும் பரவாயில்ல. தயவு செய்து என் மனச காயப்படுத்தறா மாதிரி எதுவுமே சொல்லிடாத,” அவர் முகவாயை தாங்கிப்பிடித்தவாறு கெஞ்சினான்.
வாசுகி சிலையாக நிற்க, அவனே மேலும் பேசினான்.
“நம்பு மா! உன்னை எதிர்த்து நான் எதையும் செய்ய மாட்டேன். உன் ஆசியில்லாம என்னால எதையும் சாதிக்க முடியாது,” அவர் நல்வார்த்தை சொல்லமாட்டாரா என ஏங்கினான்.
அப்போதும் வாசுகி பிடிவாதத்தின் மொத்த உருவமாக மௌனமாக நகர, கனத்த மனத்துடன் பதிப்பகத்திற்குக் கிளம்ப ஆயத்தமானான்.
மீரா வாங்கித் தந்திருந்த சட்டை அணிந்துகொண்டவன், அப்பாவின் நிழற்படம் முன் கண்மூடி பிரார்த்திக்க, நெற்றியில் ஒரு தீண்டலை உணர்ந்தான்.
“நல்லபடியா போயிட்டு வா ஹரி. எல்லாம் உன் மனம்போல் நடக்கட்டும்,” மென் குரலில் வாழ்த்தி நெற்றியில் திருநீறிடும் அம்மாவின் அன்பில், வெற்றியின் உச்சத்தையே தொட்ட மனநிறைவில் அவரை ஆரத்தழுவி புறப்பட்டான்.
பதிப்பாளரின் அலுவலகத்தில் காத்திருந்தவன் சுற்றி முற்றி பார்த்து பெருமூச்சுவிட்டான். கதை எழுதும் தன் விருப்பத்தை பற்றி பல பிரபலமான பதிப்பகங்களுக்கு விண்ணப்பித்திருந்தான் ஹரி. இவர்கள் அந்தளவுக்கு பிரபலமானவர்களாக இல்லாதபோதும், தனக்கு வாய்ப்பு கொடுக்க முன்வந்தவர்கள் என்ற மரியாதை அவனுக்கு இருந்தது.
பேரும், புகழும் யாருக்கும் ஒரே நாளில் வருவதில்லை என்ற நிதர்சனத்தை நினைவூட்டிக்கொண்டவன், அவர்கள் இடும் விதிமுறைகளும் நிபந்தனைகளும் ஒத்துப்போனால், எந்தவித தயக்கமும் இல்லாமல் கதைகளை பதிவிட வேண்டுமெனத் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
“வாங்க மிஸ்டர் ஹரி!” சிரித்த முகமாக கைகுலுக்கி அழைத்தார் ஸ்ரீராம். அவனும் பதிலுக்கு வணக்கம் சொல்ல, அவனை தன் பிரதானமான அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றார்.
கதை எழுதும் அவன் ஆர்வத்தை பற்றியும், இத்தனை கதைகள் எழுதியும், நீண்ட காலமாக பதிபிக்காத காரணங்களை பற்றியும் ஸ்ரீராம் வினவ, ஹரியும் உள்ளதை உள்ளபடி சொன்னான். அவன் நேர்மையான குணமே அவரை வெகுவாக ஈர்த்தது.
“இந்த நிறுவனம் தொடங்கி நான்கு வருடங்கள் ஆகுது. இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட்டிருக்கோம்,” விவரித்து, சுழல் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவர்,
“பெருமைக்குச் சொல்றேன்னு நினைக்காதீங்க ஹரி. எல்லா புத்தகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கு. இன்னும் சொல்லப்போனால், அதுல மூன்று கதைகள் திரைபடமா கூட வந்திருக்கு; ஏழு புத்தகங்கள், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தின்னு மொழிபெயர்ப்பும் செய்திருக்கோம்,” நிறுவனத்தின் அருமைபெருமைகளை எடுத்துரைத்தார்.
அனைத்தையும் மென்னகையுடன் பணிவாகத் தலையசைத்து உள்வாங்கினான் ஹரி.
“முழு கதையோட நகல் கேட்டிருந்தேனே! கொண்டு வந்திருக்கீங்களா?” அவர் கேட்டதும் முகத்தில் பூரிப்பு மின்ன கதையின் தட்டச்சுப் பிரதியை அவரிடம் நீட்டினான் ஹரி.
அவர் கைகளில் தவழ்ந்த படைப்பைக் கண்ணில் ஒற்றி கொண்டு கடவுளை பிரார்தித்த ஸ்ரீராம், முதல் பக்கத்தைத் திருப்பினார். மனத்தைக் கவரும் விதமாக தொடங்கிய கதையின் மேலும் சில பக்கங்களைப் புரட்டியவர்,
“நீங்க அனுப்பின நாலு கதையோட கதை சுருக்கமும் நல்லா இருந்துது. ஆனா புது முகமோ, பிரபலமான முகமோ, நாங்க ஒவ்வொரு கதையா தான் பதிப்பிப்போம். இந்தக் கதை ரொம்ப நல்லாயிருந்ததுனால, இதுலேந்து தொடங்கலாம்னு யோசிச்சேன். இதுல உங்களுக்கு சம்மதமா?” என்று வினவினார்.
‘மீரா தேவதையாக என் வாழ்க்கையில் நுழைய காரணமான இந்தக் கதை எனக்கும் ரொம்ப ஸ்பெஷல் ஆச்சே,’ மனத்தில் நினைத்தவன், “பரிபூரண சம்மதம்!” என்று நெகிழ்ந்தான்.
“நல்லது!” தலையசைத்தவர், வலதுபுற டிராவிலிருந்து, ஒரு கோப்பை எடுத்து, ஹரியிடம் நீட்டினார்.
“உங்க புத்தகம் பதிப்பிக்கும் சம்பந்தமான ஒப்பந்தத்தோட படிவங்கள்!” என்றதும், அவனும் அதை பணிவாக வாங்கி ஆராய்ந்தான்.
“எடிடிங்க், ராயல்டி, பிரிண்டிங்க், விளம்பரம், ரைட்ஸ் போன்ற எல்லா முக்கியமான தகவல்களும் அடங்கியிருக்கு. எடுத்துட்டுப்போய் நிதானமா படிச்சு பாருங்க, உங்களுக்குச் சரின்னு பட்டால், அடுத்த வாரமே கையொப்பம் இடலாம்;” என்றவர், வரும்போது, புத்தக அட்டைக்கான புகைப்படங்கள் சிலவும், புத்தகத்தில் இணைக்க அவன் நிழற்படத்தின் பிரதிகளையும் எடுத்துவருமாறு கேட்டுக்கொண்டார்.
வாய்ப்பு அளிக்க முன்வந்த அவர் பெருந்தன்மைக்கு மனதார நன்றிகளைத் தெரிவித்து, ஒரு வாரத்தில் நேரில் வந்து சந்திக்கிறேன் எனக் கைகுலுக்கி புறப்பட்டான்.
மதியம் நேராக வங்கிக்குச் சென்று நண்பர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டான் ஹரி. மீராவுடன் கலந்துபேசி ஒப்பந்தத்தை கையொப்பமிட நினைத்தவன்,
“அரவிந்தா! இன்னைக்குச் சாயங்காலம் உங்க வீட்டுல சந்திச்சுப் பேசலாமா?” என்றான் பொத்தாம் பொதுவாக.
மீராவைத் தனிமையில் சந்தித்துப் பேசமுடியாத நண்பனின் இக்கட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்ட அரவிந்தன், “இதெல்லாம் கேட்கணுமா டா!” செல்லமாக அவன் பின்முதுகில் அடித்தான்.
காதலர்களின் சூழ்நிலை அறிந்திருந்த மகேஷும் தனக்கு வீட்டில் வேலை இருப்பதாக சொல்லித் தட்டிக்கழித்தான்.
மாலை பணியிலிருந்து திரும்பிய மூவரும், பால்கனியில் அமர்ந்து, அகிலா தயாரித்த மசாலா டீயும், பஜ்ஜியையும் விழுங்கி கொண்டே, ஒப்பந்தத்தில் கொடுத்திருந்த நிபந்தனைகளை ஆராய்ந்தனர். காதலர்களை தனிமையில் விடும் பொருட்டு, ஏதோ ஒரு சாக்கு சொல்லி, அரவிந்தன் அவ்வப்போது நழுவினான். நான்காவது முறையாக அவன் அப்படிச் செய்ய, அதை கவனித்துவிட்டாள் மீரா.
“டேய் நில்லுடா!” அவன் கையைப் பிடித்துத் தடுத்தவள், “நாங்க என்ன, இங்க காதலிக்கவா வந்திருக்கோம். ஆனாவூனா எஸ்கேப்பாகுற,” கண்களை உருட்டி மிரட்டினாள்.
அதற்கெல்லாம் சலிப்பவனா அரவிந்தன். தோழியின் பக்கம் திரும்பியவன், “ஆசையப்பாரு…என்ன வேண்டாம்னு சொல்லி கழட்டிவிட்ட உனக்கு, இதெல்லாம் வேற செய்யணுமா? நான் இந்த டீ கப்பெல்லாம் எடுத்துட்டுப்போக எழுந்தேன்,” என்று அவளை வம்பிழுத்தான்.
“இதையெல்லாம் நான் எடுத்துட்டுப்போறேன். நீ ஹரிக்கு உதவு,” என அவனிடமிருந்து ட்ரேவை வெடுக்கென்று பிடுங்கி நகர்ந்தவள், அகிலாவுடன் மணிக்கணக்காக ஊர் கதை பேசிவிட்டே திரும்பினாள்.
அதற்குள் நண்பர்கள் பத்திரத்தைத் தெளிவாக அலசியிருந்தனர். மீரா வருவதை கண்ட அரவிந்தன், “எனக்கு ஓகே டா. எதுக்கும் உன்னோட நிதி அமைச்சரை கேட்டுக்கோ!” வேண்டுமென்றே அவளைச் சீண்டினான்.
“நீ தாரளமா செலவு செய் ஹரி. கஜானா காலியானா, நிரப்ப அதான் எனக்கொரு பணக்கார நண்பன் இருக்கானே,” அவளும் ஏட்டிக்குப் போட்டிப் பேச,
“உங்க ரெண்டுபேர் விளையாட்டுக்கும் அளவே இல்ல!” தலையைச் சிலுப்பிக்கொண்ட ஹரி, மீராவை வீட்டிற்குக் கிளம்புமாறு பணித்து, அரவிந்தனை தன்னுடன் ஃபோட்டோ ஸ்டுடியோவிற்கு வருமாறு கேட்டுக்கொண்டான்.
“இந்த சட்டைலையா ஃபோட்டோ எடுக்கப்போற?” அரவிந்தன் மேலும் கீழுமாக ஏறிட,
“ஏன்… ஏன்… ஏன்? இதுக்கென்ன குறைச்சல்?” எத்தனித்தாள் மீரா.
“கடவுளே! அவனுக்கு இந்த சிவப்பு நிறம் எடுப்பா இல்லடி!” அரவிந்தன் அக்கறையில் கெஞ்ச,
“அவன் என் கண்ணுக்கு மட்டும் அழகாயிருந்தா போதும்!” எனக் கழுத்தை நொடித்தவள், “நீ இவன் பேச்ச கேட்காத டா ஹரி!” எனத் தன்னவனுக்கு அன்புக்கட்டளையிட்டாள்.
அழகாய் அசடுவழிந்தவன் முகம் கழுவிக்கொண்டு வருவதாகச் சொல்லி நகர,
“எப்படி டி, இவ்வளவு தாஜா பண்ணி வெச்சுருக்க? இப்படி பூம் பூம் மாடு மாதிரி நீ சொல்ற எல்லாத்துக்கும் தலையாட்டுறான்,” அரவிந்தனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“அது வந்து…” ரகசியம் சொல்வதுபோல அவன் காதோரம் தலைசாய்த்தவள், “உன் மனைவிக்கு அந்த ரகசியத்தைச் சொல்லிக் கொடுக்கறேன்,” என்று கிசுகிசுத்தாள்.
“கொழுப்பு! உடம்பெல்லாம் கொழுப்பு!” அவன் உதடுகள் ஏசினாலும், உள்ளம் அவர்கள் அன்னியோன்னியத்தை மெச்சியது.
அன்று இரவு வீட்டிற்குத் திரும்பிய ஹரி, பதிப்பிக்கும் விவரங்களைப் பற்றி வாசுகியிடம் அவருக்குப் புரியும் விதமாக எளிமையாக விளக்கினான். விவரங்களைப் பகிரும் மகனின் முகத்திலிருந்த பூரிப்பை கவனிக்கவே செய்தது அந்த தாயுள்ளம்.
வாசுகியின் கைவண்ணத்தில் உயிர்ப்பித்த சில ஓவியங்களை மீராவிடம் காட்டி, அதிலொன்றை தன் புத்தக அட்டைக்கு தேர்வு செய்யச் சொன்னான் ஹரி. வாசுகியின் வேலைப்பாட்டில் அசந்து போனவள், ஒன்றை தேர்ந்தெடுத்தாள். அவள் முடிவில் ஹரிக்கும் மனப்பூர்வ சம்மதம்.
ஒரு வாரத்தில், ஒப்பந்தம் கையெழுத்திட ஸ்ரீராமை சந்தித்தான். ஒருசில ஒப்பந்த நிபந்தனைகளை எதிர்கால நிகழ்வுகளின் அடிப்படையில் மாற்றலாமா என்று ஹரி கேட்க, அவரும் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்தார். இருவருக்கும் இடையே தொழில்ரீதியாக நல்ல பரஸ்பர புரிதல் உருவானது.
உடன்பாடு இல்லை என்று அவமதித்த போதும், தன்னிடம் மகன் ஒவ்வொரு விஷயத்தையும் பகிர்ந்துகொண்டதில் வாசுகிக்கு அளவில்லா சந்தோஷம்; மாலைப் பொழுதுகளில் மகன் தன்னுடன் அதிக நேரம் செலவிட்டது அதைவிட சந்தோஷம்; மீராவைப் பற்றி எதுவும் பேசாமல் இருந்தது பேரானந்தம்.
இரண்டு நாட்கள் மட்டுமே தங்குவேன் என்று சொன்னவர், இரண்டு வாரங்கள் மகிழ்ச்சியாக மகனுடன் தங்கினார். அடிக்கடி வந்துபோவதாகவும், உறுதியளித்தார்.
தாயுடன் நேரம் செலவிட சொல்லி மீரா வற்புறுத்தியது எவ்வளவு சரியென்று நெகிழ்ந்தான் ஹரி.
இதற்கிடையில் மகேஷ் நிர்வாகித்து வந்த குழு கிண்டியில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு ஒரு மாதத்தில் மாற வேண்டுமென்ற அறிவிப்பு வந்தது. அது அவனுக்கு வருத்தம் தந்த போதிலும், நண்பர்கள் அருகருகில் வசிப்பதை எண்ணி மனத்தைத் தேற்றிக்கொண்டான். நாட்கள் அதன் போக்கில் உருண்டோடின.
அன்று வந்திருந்த வழக்கமான தினசரி மின்னஞ்சல்களை அலசிக்கொண்டிருந்த அரவிந்தனுக்கு நற்செய்தி ஒன்று வந்திருந்தது. அதை உடனே செயல்படுத்த எண்ணியவன், தேவையான ஏற்பாடுகளைச் ஒருமணி நேரத்தில் செய்துமுடித்து, மீராவையும், அவள் குழுவிலிருந்த ரவியையும் தன் அறைக்கு வரும்படி அழைத்தான்.
“கங்க்ராட்ஸ் மிஸ்.மீரா! நீங்க கொடுத்த கோர் பாங்கிங் பற்றிய ப்ரெசென்டேஷன் பார்த்து, பிரபலமான வங்கிகளுக்கு மென்பொருள் தயாரிக்கும் நிறுவனம், உங்கள அவங்க அலுவலகத்துக்கு வந்து வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி சார்ந்த வேலைகளில் பங்கெடுத்துக்கச் சொல்லிக் கேட்டிருக்காங்க,” அறிவித்து அவளிடம் பணி கடித்தத்தை நீட்டினான்.
அதை உற்றுப் பார்த்தவளின் கண்களில் பட்டது, இரண்டே விஷயங்கள் தான். ‘இடமாற்றம்; ஓராண்டு காலம் ஒப்பந்தம்;’ படித்தவள், மறுப்பாய் தலையசைத்து, “யோசிச்சு சொல்றேன், மிஸ்டர் அரவிந்த்!” பணிவாகப் பதிலளித்தாள்.
சரி என்றவன், ரவி பக்கம் திரும்பி, “அவங்க அங்க போகவேண்டியதுனால, நீங்க தான் கட்டண செயலாக்கம் குழுவைக் கண்காணிக்கணும்,” என்றான்.
மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவர் உடனே சம்மதம் தெரிவித்தார். பணி மாற்றங்களைக் கையாளுவதைப் பற்றி மேற்கொண்டு பேச, விரைவில் கலந்துரையாடலாம் என அரவிந்தன் கூற, இருவரும் வெளியேறினர்.
“வாடா ஹரி சாப்பிடலாம்!” ஒரு மணியளவில் அரவிந்தன் அழைக்க,
“இல்லடா! நானும் மீராவும் அடுத்த பிரேக்குல சாப்பிடுறோம்,” மறுத்தான் ஹரி.
பணியிட மாற்றத்தில் அவளுக்குத் துளியும் விருப்பமில்லை எனக் காலையில் அவள் முகத்தைப் பார்த்தே கண்டுகொண்டிருந்தான் அரவிந்தன். எட்டடி தூரத்திலிருந்த மீராவின் இருக்கையை நோக்கி வேகமாக நடந்தவன், “சாப்பிட வா மீரா!” கண்டும் காணாமல் அழைக்க,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு! நான் அப்புறம் சாப்பிட்டுக்குறேன்!” கணினியிலிருந்து முகம் திருப்பாமல் பதில்சொல்லி அவன் பொறுமையைச் சோதித்தாள் பேதை.
வேகமாக, அவள் சுழல் நாற்காலியைத் தன் பக்கம் திருப்பி, “ஒட்டுமொத்த ஆஃபிஸ் சர்வரும் டௌன். இதுல உனக்கு மட்டும் அப்படியென்ன முக்கியமான வேல இருக்கு?” என்று மிரட்டினான்.
‘செய்வதெல்லாம் செய்துவிட்டு என்னைக் கேள்வி கேட்கிறாயா?’ பார்வையால் வீழ்த்தியவள், “நான் ஹரி கிட்ட தனியா பேசணும்!” கோபமும், சோகமும் தெறிக்கப் பதிலுரைத்தாள்.
“நீ ஹரியோட பேசப்போகுற விஷயத்துல எனக்கும் சம்பந்தம் இருக்கு!” ஆணவம் அவன் குரலில் ஓங்கியது.
“என்னடா ஆச்சு?” குறுக்கிட்டான் ஹரி.
“அவள முதல்ல சாப்பிட வர சொல்லு!” அரவிந்தன் கண்களை இறுக மூடி முறுக்கிக்கொள்ள,
“வா மீரா சாப்பிடலாம்!” என்றான் ஹரி.
“மாட்டேன் டா! உன்கிட்ட நான் தனியா பேசணும்!” துக்கம் தொண்டையை அடைக்க மறுத்தவள், “அவன் முன்னாடி பேசினா, உன்ன குழப்பிடுவான் ஹரி,” கண்ணீர் மல்க மன்றாடினாள்.
அருகிலிருந்த நாற்காலியை இழுத்து எதிரே அமர்ந்து அவள் முகவாயை ஏந்திய ஹரி, “எதுவாயிருந்தாலும் இப்போ வந்து பேசு. அதையும் மீறி, என்கிட்ட தனியா பேசணும்னா, நம்ம சாயங்காலம் வீட்டுக்குப் போறப்ப பேசிக்கலாம்,” பொறுமையாக எடுத்துச்சொன்னான்.
“அதான் சொல்லிட்டானே, உன் ரோமியோ! வா சாப்பிடலாம்!” அவள் பேச காத்திராமல், கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தான் அரவிந்தன்.
உம்மென்ற முகத்தோடு உடன் நடந்தவள் வேண்டுமென்றே மகேஷ் அருகில் உட்கார்ந்தாள்.
“போயேன்! நான் இருக்கேன் என் நண்பனுக்கு!” அந்தக் கோபத்திலும் அவளைச் சீண்டி, ஹரி அருகில் அமர்ந்தான் அரவிந்தான். இவர்கள் தாமதமாக வந்தது, அரவிந்தன் ஜாடை பேச்சு என அனைத்தையும் கவனித்த மகேஷ், விவாதம் களைகட்டப் போகிறது எனப் பெருமூச்சுவிட்டான்.
“எதைப்பற்றி பேசணும் மீரா?” ஹரி மென்மையாகத் தொடங்க,
“அதான் அவனுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்லிட்டான்ல. உன் நண்பன் கிட்டயே கேளு!” உறுமினாள் அவள்.
அவள் பிடிவாதம் அறிந்தவன் அரவிந்தனிடம், “என்னதான்டா உங்களுக்குள்ள பிரச்சனை,” சலித்துக்கொள்ள,
அவளுக்கு வந்திருக்கும் வாய்ப்பு பற்றியும், அதனால் அவள் பெறவிருக்கும் அனுபவம், அடையாளம், பதவி உயர்வு என நன்மைகளை அடுக்கிய அரவிந்தன், “மேடத்துக்கு இதுல யோசிக்க என்ன இருக்குன்னு கேட்டுச் சொல்லுடா?” தோழியை அனலாய் ஏறிட்டான்.
“எவ்வளவு சந்தோஷமான விஷயம் மீரா!” ஹரி தொடங்கியதும்,
“புரிஞ்சுதான் பேசுறியா ஹரி? இந்த இடமாற்றத்தால, நம்ம சந்திக்கிறது பாதிக்கும்னு உனக்கு தோணவேயில்லையா?” எகிறினாள் அவள்.
வேறேதோ பெரிய காரணம் சொல்லி மறுப்பாள் என்று நினைத்த அரவிந்தனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“உன் தயக்கத்துக்கு இதுதான் காரணமா.” தலையைச் சிலுப்பிக்கொண்டவன், “உள்ளூருல தானே இருக்கப்போற மீரா. ஆஃபிஸ்ல இல்லென்னா என்ன… அவன வீட்டுல போய் பாரு,” இதெல்லாம் ஒரு சாக்கா என்ற ரீதியில் சிரிக்க,
“அப்படியே இவன் என்னை சந்திச்சு, விழுந்து விழுந்து கா….” என்று தொடங்கி, “…பேசிட்டாலும்! என்று தன்னவனைப் பார்வையால் சுட்டெரித்தாள்.
அவள் முகபாவனையில் விழுந்தவன், “சரி! நான்தான் சொன்னேன், லன்ச் டைம்ல பார்த்துப் பேசினால் போதும்னு; அதுக்காக சூழ்நிலைக்கு ஏத்தா மாதிரி மாத்திக்க மாட்டேன்னு சொல்லலியே,” எனக் கன்னத்தில் குழிவிழ, கண்சிமிட்டினான்.
அதற்கெல்லாம் வசப்படாதவளாய், “அதெல்லாம் சரிப்படாது ஹரி; நான் ரொம்ப தூரம் போயிட்டு வரணும். ஆஃபிஸ் டைம் வேறவேற. நம்ம சந்திக்கவே முடியாது.” சவால்களை அடுக்கினாள்.
அதுவரை உணவை கூட அருந்தாமல் அமைதியாக அமர்ந்திருந்த மகேஷ், “நம்ம ஹெட் ஆபிஸும் அதே காம்ப்ளெக்ஸ்ல தானே இருக்குது மீரா. நீயும் என்னோட காருல வந்தா உனக்கு அலுப்பாயிருக்காது; எப்படியும் நாம சீக்கிரம் போயிட்டு சீக்கிரம் வந்துடுவோம். சாயங்காலம் ஹரியைப் பார்த்துட்டு உங்க வீட்டுக்குக் கிளம்பு,” சுலபமாய் தீர்வு சொல்ல, ஹரியும் கூட ஆமோதித்தான்.
நேரில் சந்தித்துப் பேசுவது ஒரு பிரச்சனை என்றால், அவள் மனசுக்குள் வேறொரு கவலையும் ஒடிக்கொண்டிருந்தது.
“அதுமட்டுமில்ல டா அரவிந்தா. எனக்குப் பதிலா மேனேஜரா வரும் ரவி இவன் லட்சியத்தைப் புரிஞ்சிக்காம நிறைய வேலை வாங்கினாருனா… அதான்,” அவள் சொல்லி முடிப்பதற்குள், மூவரும் வெடித்துச் சிரித்தனர். அதிலும் அரவிந்தன், கண்களில் தண்ணீர் வரும் அளவிற்குக் குலுங்கி குலுங்கிச் சிரிக்க, அவள் முகம் கோபத்தில் சிவந்தது.
சுட்டெரிக்கும் பாவையின் காளி அவதாரத்தைக் கண்டுகொண்ட ஹரியும் மகேஷும் சுதாரித்த போதிலும், அரவிந்தன் இடைவிடாமல் சிரித்துக் கலாய்த்தான்.
“என்னடி முறைக்கற?” சிரிப்பை அடக்கமுடியாமல் அதட்டிய அரவிந்தன், “பெர்ஃபாமன்ஸ் அப்ரைசல்ல, நீங்க பிடிச்ச பிடிவாதம் மறந்துட்டீங்களா மிஸ்.மீரா,” அவளை ஓட்டினான்.
“உனக்கு எல்லாமே விளயாட்டுதான்!” வெறுத்துப் பேசி விருட்டென எழுந்தாள்.
அவள் கையை இறுக பிடித்து, நகர விடாமல் தடுத்த அரவிந்தன், “சும்மா விளையாட்டுக்குத் தானேடி சொன்னேன். எனக்கும் உன் அளவுக்கு ஹரி மேல அக்கறை இருக்கு,” தன்மையாகக் கூறி, மறுகையால் நண்பன் தோளினைச் சுற்றி வளைத்தான்.
‘இத்தனை காலமாக நண்பன் கண்ட கனவு கரையாதிருக்க குடை பிடித்தவன் அல்லவா அவன். ஹரி லட்சியப் பாதையில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் அலட்சியமாக இருந்துவிடுவானா என்ன!’ என்று நிதானமாக யோசித்தாள்.
“பசிக்குதுடி! சாப்பிடலாம் வா,” என்று அரவிந்தன் உலுக்கியதில் சுயத்திற்கு வந்தவள்,
“எழுந்திரு! அங்க போய் உட்காரு!” அவனை விரட்டிவிட்டு, தன்னவன் அருகில் உரிமையோடு அமர்ந்தாள்.
அனைவரும் சகஜமாகப் பேசிக் கொண்டே உணவு அருந்த,
“இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும் மீரா!” திடமாய் அறிவித்த ஹரியை மூவரும் ஆழ்ந்து பார்த்தனர்.
“என் கனவுகளை நனவாக்குறது மட்டும் உன் வேலை இல்ல! உன்னுடைய லட்சியங்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுக்கணும் சரியா!” அவன் அறிவிறுத்த, சிறுபிள்ளை போல வலமும் புறமும் தலையசைத்தாள் மீரா.
“இன்னொரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ மீரா. அன்பும் அக்கறையும் வெளிபடுத்த தினமும் சந்திகணும், பேசணும்னு எல்லாம் அவசியமில்ல. மனசுல இருந்தா போதும்.” ஹரி பேசிக்கொண்டே போக, அதற்கும் தலையசைத்தாள் பாவை.
‘இவனை விட்டா, பார்க்காமல், பேசாமல் காதலிப்பது எப்படின்னு புத்தகம் எழுதுவான் போல’ சலித்துப்போன அரவிந்தன்,
“நானும் ஒரு உண்மைய சொல்றேன் மீரா…” ஹரி போலவே இறுகிய தொனியில் தொடங்க,
‘இவன் பங்குக்கு என்ன சொல்லப் போகிறான்!’ எனப் பெருமூச்சுவிட்டாள் மீரா.
“…உன் அளவுக்கு அவனை யாரும் பிழுஞ்சு வேல வாங்கமாட்டாங்க. அதனால ஹரி, உன் தொல்லை இல்லாமல் சந்தோஷமா, இன்னும் அதிக உற்சாகமா, தைரியமா வேலை செய்வான்,” என்றதுமே அதிரடியாக சிரித்தான் மகேஷ்.
“அப்படியா ஹரி?” மீரா செல்லம் கொஞ்ச, எந்த நண்பர் பக்கம் சாய்வது எனப் புரியாமல் தடுமாறினான் ஹரி.
பிரிவுகள் எல்லாம் பிரிவு அல்ல,
ப்ரியமானவள்(ன்) நினைவுகளில் கலந்திருக்கும் போது!
தூரங்கள் எல்லாம் தூரம் அல்ல,
தோதான கனவுகள் சந்திக்க வழிவகுக்கும் போது!
இடைவெளிகள் எல்லாம் இடைவெளி அல்ல,
இடர்களை தாண்டி இதயங்கள் இணைந்திருக்கும் போது!
காத்திருப்பதும் இவர்களுக்கு கடினம் அல்ல,
காலமெல்லாம் சேர்ந்து வாழ்வோம் என்ற
நம்பிக்கை நிலையாக இருக்கும் போது!
இலட்சியம் என்ற இரயில் இலக்கை அடையும் வரை,
தளராது தவழும் தண்டவாளமாய்,
பிரிந்தே இணைந்திருப்போம் என்று
பக்குவமாய் இசைத்தது – அவர்கள்
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்….


Please Comment Here