73 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
புயல் அடித்து ஓய்ந்ததுபோல அமைதியே உருவாகக் காட்சியளித்த அலைபேசியை வெறித்துப் பார்த்து அமர்ந்திருந்தாள் மீரா; அஞ்சலி அழைத்தது கனவாக இருக்கக் கூடாதா என்ற நப்பாசையில்!
அதுவோ, இன்னும் கொஞ்சம் அதிர்வுகளைத் தரட்டுமா என மின்னல் போல பளிச்சிட்டு சீண்டியது.
திரையில் ‘அரவிந்த் காலிங்!’ என்று பார்த்தவளுக்கு அங்கமெல்லாம் நடுக்கம். என்ன ஆறுதல் சொல்லி இவனைத் தேற்றுவது எனப் புரியாமல் “ஹெலோ!” என்றாள் கம்மிய குரலில்.
வங்கியின் பயிற்சி தேர்வுகள் சம்பந்தமான சில சந்தேகங்கள் மட்டும் கேட்டு அவன் அழைப்பைத் துண்டிக்க, அஞ்சலி தன் முடிவை இன்னும் அரவிந்தனிடம் சொல்லவில்லை என நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
அன்று மாலை வீடு திரும்பிய ஹரி, உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அவள் கரத்தில் ஒரு கோப்பினை நீட்டி, “எந்தப் பின்னூட்டப் படித்தை புத்தகத்தில் இணைக்கலாம்னு சொல்லு மீரா,” வாஞ்சையாகக் கேட்டு அவளருகில் அமர்ந்தான்.
அஞ்சலி பேசியதைப் பற்றிய சிந்தனையில் கரைந்திருந்தவளோ, அந்தக் கோப்பிலிருந்த தாள்களைப் பெயருக்காகப் புரட்டி ஒன்றை சுட்டிக்காட்ட,
“இதையே! இதையே தான் நானும் மனசுல நெனச்சேன்!” துள்ளியவன், பின்னூட்டப் படிவம் இணைப்பதில் ஸ்ரீராமுக்கும் பெரும் மகிழ்ச்சி என விவரித்து, அந்த யோசனையை முன்வைத்த அஞ்சலியின் புத்திசாலித்தனைத்தை மெச்சி தன்போக்கில் புகழாரம் பாடிக்கொண்டிருந்தான்.
அதுவரை எந்த எதிர்வினையும் காட்டாமல் சிலையாக அமர்ந்திருந்தவளுக்கு அஞ்சலியின் பெயரைக் கேட்ட மறுநொடி கோபம் சுள்ளென்று ஏறியது.
“அந்த அதிபுத்திசாலித்தான் நம்ம அரவிந்தன கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டா!” எரிமலையாக வெடித்தாள்.
“என்னடி சொல்ற?” அதிர்ந்தான் ஹரி.
அத்தனை நேரம் தேக்கிவைத்திருந்த சோகமெல்லம் விழி வழியே வழிந்தோட, அஞ்சலி தன்னிடம் பேசிய அனைத்தையும் கொட்டித்தீர்த்தாள் மீரா.
நண்பனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று ஹரி உறைந்துபோக, அரவிந்தனை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வரலாமா என்று வினவினாள் மீரா.
மறுப்பாய் தலையசைத்தவன், “அவசர படாதடி! அஞ்சலி உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னால்ல. முதல்ல நீ அவகிட்ட பேசி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிக்கப் பாரு…” முடிக்கும் முன்,
“என்ன விளையாடுறியா? நம்ம அரவிந்தன் எவ்வளவு நல்லவன். அவனையே வேண்டாம்னு சொல்லுவா… அவகிட்ட போய் நான் பேசணுமா?” உறுமினாள் மீரா.
“அந்த நல்லவன நீயும்தானே வேண்டாம்னு சொன்ன?” எகிறி முறைத்தான் ஹரி.
உண்மை என்ற போதிலும், அதை ஹரி சொல்லக் கேட்டவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேனே என இமைக்கும் நொடியில் சுதாரித்துக்கொண்ட ஹரி, “உன்னைக் காயப்படுத்தணும்னு அப்படிச் சொல்லலடி; உனக்கு மறுக்க ஒரு நியாயமான காரணம் இருந்தா மாதிரி, அவளுக்கும் ஏதாவது இருக்கலாம்னு சொல்ல வந்தேன்?” தலைகுனிந்து வருந்த, அவளும் அவன் நோக்கத்தைப் புரிந்துகொண்டாள்.
“நான் என்ன பண்ணனும் சொல்லுடா?” நிதானமாகவே கேட்டாள்.
“நாளைக்கு மதியம் அவளை இங்க வரச் சொல்லிப் பேசு; நியாயமான காரணமாக இருந்தால் விட்டுடு; பேசித்தீர்க்க முடிஞ்சா சமாதானம் செய். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் வற்புறுத்தாதே!” தெளிவாக எடுத்துரைத்து, ஆறு மணியளவில் அரவிந்தனை அழைத்து வருவதாக உரைத்தான்.
“அவனுக்குத் தெரியவேண்டாம்னு சொல்லிட்டு எதுக்கு இங்க அழைச்சிட்டு வர?” குழம்பினாள் மீரா.
“இது அவன் சம்பந்தப்பட்ட விஷயம்; சொல்லித்தான் ஆகணும்! அதுக்கு முன்னாடி, நீ அஞ்சலிகிட்ட பேசுறதுல ஏதாவது அதிசயம் நிகழ்ந்துடாதான்னு ஒரு சின்ன நம்பிக்கை,” ஹரியின் குரலில் ஏக்கம் வழிய, அவனும் தன்னைப் போலவே தான் கவலையில் தவிக்கிறான் என உணர்ந்த மீரா, சரி என்று மட்டும் தலையசைத்தாள்.
“எந்தக் காரணத்துக்காகவும் நம்ம அரவிந்தனைக் கல்யாணம் செய்துக்கோன்னு நீ அஞ்சலியை வற்புறுத்தக் கூடாது!”, ஹரி அழுத்திச் சொல்ல, அப்போதும் ‘ம்ம்!’ என்று மட்டுமே உச்சுக்கொட்டினாள் அவள்.
“புரிஞ்சுக்கோ டி! அவன் இன்னைக்கு வருந்த கூடாதூன்னு நெனச்சு, காலத்துக்கும் வருந்துறா மாதிரி செஞ்சிடக் கூடாதுன்னு தான் சொல்றேன்,” ஹரி மீண்டும் ஒருமுறை வலியுறுத்த,
“சரி டா! நான் அவளுக்கு ஃபோன் செய்யறேன்,” முகத்தில் சுரத்தே இல்லாமல் அலைபேசியை உயிர்ப்பித்தாள்.
தன்னவளின் கரம் பிடித்து இழுத்து கண்ணோடு கண் பார்க்க எதிரில் நிறுத்திக்கொண்டவன், “ஐ ஆம் ரியலி ஸாரி மீரா! நான் அப்படி பேசியிருக்க கூடாது!” மனம் நொந்து மன்னிப்பை யாசித்தான்.
“யாருக்கு வேணும் உன் ஸாரி. ஐலவ்யூ சொல்லுங்க எழுத்தாளரே!” அவள் கண்சிமிட்டி புன்னகைத்த பின்தான் அவனுக்கு உயிரே வந்தது.
“ச்சீ போடி!” கண்களில் காதல் மின்ன தலையில் செல்லமாகத் தட்டினான்.
இரண்டே நிமிடத்தில் பேசி முடித்தவள், “அல்லி ராணி நாளைக்கு நாலு மணியளவுல வராளாமா!” என உதட்டைச் சுழித்தாள்.
“பாரு பாரு! இப்போ தானே சொன்னேன்… யாரையும் தப்பா பேசக்கூடாதூன்னு!” ஹரி நினைவூட்ட, அவளும் சிறுபிள்ளை போல செல்லம் கொஞ்சினாள்.
மறுநாள் சொன்ன நேரத்திற்கு டான் என்றும் வந்து நின்றாள் அஞ்சலி. அன்று வலிய அவள் கையைப் பிடித்து உள்ளே அழைத்த மீரா, இன்று கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.
ஹால் சுவற்றில் சாய்ந்து நின்று மீரா முகம் திருப்பிக் கொள்ள,
“நீங்க என்மேல கோபமா இருக்கீங்கன்னு எனக்குப் புரியுது மீரா,” அஞ்சலியே முன்வந்து மௌனத்தை உடைத்தாள்.
“கல்யாணம் வேண்டாமுன்னா, அவன்கிட்டயே சொல்ல வேண்டியதுதானே,” மீரா அலுத்துக்கொள்ள,
“எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனால் அவர் புரிஞ்சுக்கவே இல்ல. அதான் அவர் காதல்ல மறுத்த உங்ககிட்ட சொன்னா புரிஞ்சுப்பீங்கன்னு… அவருக்கும் புரியவைப்பீங்கன்னு உதவி கேட்டு வந்திருக்கேன்?” அஞ்சலியின் பதிலில் ஆடித்தான் போனாள் மீரா.
“வேற யாரையாவது காதலிக்குறியா அஞ்சலி?”
“ச்சே ச்சே!” அஞ்சலி மென்மையாகச் சிரிக்க,
அதைத் தவிர, தன் நண்பனை பிடிக்காமல் போக வேறு என்ன காரணம் இருக்க முடியுமென வெளிப்படையாகவே கேட்டாள்.
“பிடிக்கலன்னு யாரு சொன்னா! பிடிச்சிருக்கு; ரொம்பப் பிடிச்சிருக்கு; அதனால தான் அவர் என்னைக் கல்யாணம் செய்துக்கக் கூடாதூன்னு நினைக்கறேன்,” அஞ்சலி முரண்பாடாகப் பதில்சொல்ல,
நண்பனை பிடித்திருக்கு என்று அவள் உதிர்த்த ஒரு வார்த்தையில், மீராவின் கோபமெல்லாம் காற்றில் பறந்தது.
“அய்யோ அஞ்சலி! நீ எவ்வளவு தெளிவான பொண்ணுன்னு நெனச்சேன்; இப்படி குழப்புறியே!” என ஓடிவந்து அவள் கன்னத்தை வருடினாள்.
அஞ்சலியும் மீராவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டாள்.
“நான் பதினோராம் வகுப்பில் படிச்சிட்டிருந்த போது, ஒரு சாலை விபத்தில் என் கருப்பையை இழந்துட்டேன். அந்தச் சமயத்துல பொண்ணு உயிர்பிழச்சா போதுமுன்னு, என் அம்மா அப்பா அதை பெருசா எடுத்துக்கல. ஆனால் கல்யாணமுன்னு வரப்போ அது முக்கியமில்லையா மீரா?” அவளையே நியாயம் கேட்டாள்.
என்ன சொல்வதென்று தெரியாம்ல மீரா அமைதி காக்க,
“அதுக்காக நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லவேயில்ல. என்னை மாதிரி குறையுள்ள ஒருத்தர திருமணம் செய்துகிட்டு, குழந்தைய தத்தெடுப்பேன்; இல்ல தாய் இல்லாத குழந்தைக்கு அம்மாவா இருப்பேன்,” தன் கண்ணோட்டத்தை சொல்ல, அவள் பக்குவத்தில் நெகிழ்ந்து போனாள் மீரா.
“இதையெல்லாம் எங்க அம்மா, அரவிந்தன் அம்மாகிட்ட பேசும்போது அவரும் கேட்டிருக்காரு. உங்க நண்பன் என்னமோ பெரிய கொடைவள்ளல் மாதிரி எனக்கு வாழ்க்கை கொடுக்க வந்துட்டாரு…” அஞ்சலி பெருமூச்சுவிட, நண்பனின் நற்குணத்தை அசைபோட்ட மீராவின் முகம் புன்னகையில் விரிந்தது.
இப்படித்தான் வாழவேண்டும் என்று தெளிவாகச் சிந்திக்கும் இவளை எப்படி மடக்கினான் என்பதுதான் மீராவின் தற்போதைய சந்தேகம்.
“அதை ஏன் கேக்குறீங்க…” சலித்துக்கொண்டவள், “…நீங்க பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கற அளவுக்கு என் நிலைமை ஒண்ணும் அவ்வளவு மோசமாயில்லன்னு கர்வமாக் கூட சொல்லி பார்த்தேன். அதுக்கும் அவர், “பரிதாபப்படுறேன்னு யார் சொன்னா! தேர் இஸ் ய டிஃப்ரென்ஸ் பிட்வீன் சிம்பதி அண்ட எம்பதி’ன்னு எனக்கே பாடம் எடுத்தாரு,” என்றாள்.
‘செம்மடா அரவிந்தா!’ நண்பனின் சாமர்த்தியத்தில் உச்சிகுளிர்ந்தவள், “சரி, நீ என்ன பதில்சொன்ன?” கதை கேட்பதுபோல கண்கள் அகல வினவினாள்.
“ம்ம்…” இழுத்தவள், “ஐ வான்ட் டு கிவ் மை எம்பதி டு சம்வொன் ஹூ ரியலி நீட்ஸ் இட்’ன்னு எதிர்த்துப் பேசினேன்” என்றாள் சலிப்பாக.
‘ஜாடிக்கு ஏற்ற மூடிதான்’ மீண்டும் மனதளவில் பெருமிதம் கொண்டவள், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “சரியா தானே சொல்லியிருக்க அஞ்சலி! அப்படியும் அவன் ஏன் ஒத்துக்கல்ல?” அவளுக்குப் பரிந்து பேசுவது போலவே பாவலா செய்தாள்.
“அப்போதான் உங்களுக்கு பிரபோஸ் பண்ணி, அதை நீங்க மறுத்த சோக கீதத்தை வாசிச்சு, லவ் ஃபயிலியர் டிப்ரெஷன்’ல இருக்குற எனக்கும் ஆறுதல் சொல்லி, அரவணைக்கற ஒரு துணை தேவைன்னு அப்பாவியா முகத்த வெச்சுகிட்டு, என்னை வாழ்க்கை தரச் சொல்லி கெஞ்சினாரு மீரா,” அஞ்சலி விளக்க,
“அடப்பாவி! என்னவெல்லாம் கதை அளந்திருக்கிறான்!” நண்பனின் குறும்பில் மயங்கியவள், தன்னையும் அறியாமல் வாய்விட்டே சொல்லிவிட்டாள்.
தனக்காக வருந்துகிறாள் எனத் தவறாகப் புரிந்து கொண்ட அஞ்சலி, “ஆமாம் மீரா. என்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு வீட்டுலையும் சொல்லி, முடிஞ்சா இந்தக் கல்யாணத்த நிறுத்தூன்னு சவால் வேற விட்டாரு,” அரவிந்தன் பிடிவாதத்தை எடுத்துரைத்து, அன்று விழாவுக்கு வந்ததும் கூட, தன் முடிவை பகிரங்கமாக அறிவிக்கத் தான் எனவும் கூறி இடைநிறுத்தியவள், “ஆனால் அப்படிச் செய்ய முடியல,” எனத் தலையைத் தொங்கப் போட்டாள்.
“ம்ம்… ஏன் செய்ய முடியல?” தீவிரக்குரலில் கேட்டாள் மீரா.
“அது நீங்க எல்லாரும் ரொம்பச் சந்தோஷமா பேசிட்டு இருக்கும்போது பிரச்சனை பண்ண வேண்டாம்னு தான்….” அஞ்சலி தயங்க,
இத்தனை நற்குணங்கள் பொருந்தியவள் தான் அரவிந்தனுக்கு மனைவியாக வரவேண்டும் என்று மீரா முடிவே செய்துவிட்டாள்.
ஆனால் அஞ்சலியோ, “அவர் உங்க பேச்சுக்கு மறுப்பேச்சே சொல்லமாட்டாருன்னு நான் அன்னைக்கு கவனிச்சேன். நான் அவருக்குப் பொருத்தமானவ இல்லன்னு நீங்கதான் சொல்லிப் புரியவைக்கணும்,” தன் முடிவில் தீர்மானமாக இருந்தாள்.
அரவிந்தனும் ஹரியும் எந்த நேரமும் வந்துவிடுவார்கள் என்று கைகடிகாரத்தைப் பார்த்து உறுதி செய்துகொண்ட மீரா, அவளுக்கு ஆதரவாகப் பேசி நேரத்தைக் கடத்தினாள்.
ஆறு மணிக்கு வாசற்கதவு மணி ஒலிக்க, கதவைத் திறந்தாள் மீரா.
“என்னடி, இன்னும் டீ போடலையா?” அன்று போலவே எதிர்பார்த்த அரவிந்தன், வாசற்படியில் நின்று கொண்டே வாசம்தேட,
“ஒரு மாறுதலுக்கு உன் நண்பனைப் போடச்சொல்லு!” பதில்சொல்லி, தன்னவனை முறைத்தாள் மீரா. ஹரியும் அவளைப் பதிலுக்கு முறைத்தான்.
காரணம், அவள் தினமும்சமையல் செய்வதைப் பற்றி கேட்டதற்கு, பதில் சொல்லாமல் இதோ அதோ என இழுத்தடித்துக் கொண்டிருந்தான் ஹரி. அவளும் அவன் தன் முடிவைச் சொல்லும் வரை, சமையலறைக்குள் காலெடுத்து வைக்கமாட்டேன் எனச் சபதம் எடுத்திருந்தாள்.
இருவரின் விழி பரிமாற்றங்களைப் பொருட்படுத்தாது உள்ளே நுழைந்த அரவிந்தனுக்கு இன்பதிர்ச்சி.
“அஞ்சலி, நீ இங்க என்ன பண்ணற?”
அவளும் அவன் திடீர் விஜயத்தில் உறைந்து நின்றாள்.
‘பேசிவிட்டாயா?’ தன்னவளுக்கு ரகசியமாகக் கண்ணசைத்தான் ஹரி. கவலைப்பட வேண்டாம் எனப் பதிலுக்கு இமைகள் மூடித் திறந்தவள்,
“நீ எடுத்த முடிவு ரொம்பச் சரி அரவிந்தா. உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குடா!” நண்பனின் தோளில் தட்டிக்கொடுத்த வண்ணம், மூவருக்கும் ஒரே நேரத்தில் விடையளித்தாள்.
முகமெல்லாம் புன்னகையாக அஞ்சலி அருகே வேகநடையிட்ட அரவிந்தன், அவள் தோளினை அன்பாகச் சுற்றிவளைத்து, “எல்லாத்தையும் சொல்லிட்டியா?” செவிகளில் கிசுகிசுத்தான்.
கோபாவேசத்துடன் அவன் கையை உதறிவிட்டவள், “உங்ககிட்ட என்ன சொன்னேன்; நீங்க என்ன சொல்றீங்க மீரா?” என்றாள் ஆத்திரம் பொங்க.
“நான் சரியாதான் பேசுறேன் அஞ்சலி. என் நண்பன் தெளிவா சிந்திச்சு முடிவெடுத்திருக்கான். நீதான் உன் மனச மாத்திக்கணும்,” மீரா அழுத்தமாகச் சொல்ல, அஞ்சலி எந்த நோக்கத்துடன் வந்திருக்கிறாள் என உணர்ந்த அரவிந்தன்,
“அவ புத்திக்கு உரைக்குறா மாதிரி சொல்லு மீரா,” என்றவாறு அஞ்சலியைப் பார்வையால் சுட்டெரித்தான்.
நண்பர்களின் புரிதலில் அஞ்சலியின் பொறுமை எல்லையைக் கடந்தது. “நண்பனுக்குக் கண்மூடித்தனமா ஜால்ரா அடிக்குற உங்கள நம்பி வந்தது என் தப்புதான்!” மீராவை ஏசிவிட்டு விறுவிறுவெனக் கதவை நோக்கி நடந்தாள்.
“நில்லு அஞ்சலி!” அவள் கையைப்பிடித்து தடுத்த மீரா, “உனக்கு அவனோட அன்பு புரியலையா? அவனுக்குத் தேவை வாழ்க்கை முழுவதும் சேர்ந்து பயணிக்க ஒரு நல்ல துணை. பிள்ளை பெற்றுக் கொடுக்குற இயந்திரம் இல்ல!” எனக் கர்ஜித்தாள்.
“அதே அன்பை புரிஞ்சுக்காம நீங்களும் தானே அவர் காதலை மறுத்தீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?” அஞ்சலி எதிர்த்துப் பேச,
“அது வேற; இது வேற அஞ்சலி!” கெஞ்சிய மீராவின் பிடி வலுவிழந்தது.
வெற்றிப் புன்னகையுடன் அரவிந்தன் அருகில் வந்த அஞ்சலி, “மீரா உங்க காதலை மறுத்தா, எந்தக் கேள்வியும் கேட்காம சரின்னு சொல்லுவீங்க! அதே நான் மறுத்தா கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்துப்பீங்க… அப்படித்தானே?” இடித்துக்காட்டினாள்.
இனியும் பேசிப் புரியவைக்க முடியாது என நம்பிக்கை இழந்த அரவிந்தன், திருமணத்தை ரத்து செய்துவிடலாம் எனக் கூறி, கதவருகே நடந்தான்.
“அரவிந்தா…” கசந்த குரலில் மீரா அழைக்க,
தோழியின் வாடிய முகத்தை எதிர்கொள்ள முடியாமல் துடிதுடித்தவன், “விடுடி! எனக்கும் கல்யாணத்துக்கும் ராசியே இல்ல,” வெறுத்துப்பேசி புறப்பட்டான்.
நண்பனின் மனவுளைச்சலுக்குத் தானும் ஒரு காரணம் தானே என மீரா குற்றவுணர்ச்சியில் துடிக்க, வந்த நோக்கம் நிறைவேறிய மிதப்பில் நடையைக் கட்டினாள் அஞ்சலி.
‘இவளிடம் இப்போது உறுதியாகப் பேசவில்லை என்றால், எப்போதுமே பேசமுடியாது!’ எனச் சுதாரித்துக்கொண்ட மீரா,
“நில்லு அஞ்சலி!” மீண்டும் அவளை வழிமறித்தாள்.
தலை எது வால் எது எனப் புரியாமல் நின்றுகொண்டிருந்த ஹரி, தன்னவளின் தோளில் அழுத்தம் தந்து அஞ்சலிக்கு வழிவிடச் சொல்ல, அவன் கரத்தை இறுகப் பற்றிக்கொண்ட மீரா, “ஹரி மேல காதல் வரலேன்னா, அரவிந்தனுக்குச் சம்மதம் சொல்லியிருப்பேனோ என்னமோ!” என்றாள்.
அஞ்சலியின் புருச்சுளிப்பிலேயே அரவிந்தன் அவளிடம் இதைப்பற்றி சொல்லவில்லை எனப் புரிந்துகொண்டாள் மீரா.
“ஆமாம் அஞ்சலி! ஒரு நாள் இடைவெளியில, அரவிந்தன் காதல் தோற்றுபோச்சு…” தொடங்கியவள் உண்மைகள் அனைத்தையும் உடைத்தாள்.
அரவிந்தன் விளையாட்டாகக் கூறிய காதல் தோல்விக்குப் பின் இத்தனை தர்மசங்கடங்கள் இருந்ததா என மலைத்த அஞ்சலி சிலையாக நிற்க,
“நானும் அவன் காதலை மறுத்தது உண்மைதான் அஞ்சலி. அதுக்கு அவன் வருந்தாத காரணம், அவன் உயிரா நினைக்குற ரெண்டு நண்பர்கள் சந்தோஷமா வாழப்போகுறாங்கன்ற மனநிறைவுல. அதுவும் அவனுக்கு ஹரி ரொம்ப ஸ்பெஷல்,” எனத் தன்னவனின் தோளில் தட்டிக்கொடுத்து, அரவிந்தனைத் திருமணம் செய்துகொள்ளுமாறு மீண்டும் கெஞ்சினாள் மீரா.
அன்று அரவிந்தனும் சரி; இன்று மீராவும் சரி; நண்பர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் பேசுவதில் பிரமித்த அஞ்சலி,
“நானும் அவர் நல்லபடியா வாழனும்முன்னு தானே விலகிப்போக நினைக்குறேன். அதை ஏன் நீங்க புரிஞ்சுக்கவே மாட்டேன்றீங்க,” தனக்கும் இது தர்மசங்கடமான நிலை என்று மனமுடைந்தாள்.
“பிள்ளைவரமுன்றது, நம்ம கையில இல்ல அஞ்சலி. உனக்கு இல்லன்னு ஏற்கனவே தெரியும்; எனக்கு அது தெரியாது; அவ்வளவுதான் நமக்குள்ள இருக்கும் வித்தியாசம்,” எதார்தத்தை எடுத்துரைத்தாள் மீரா.
அரவிந்தன் மாதிரியே பேசுகிறாளே என அஞ்சலி சிந்தனையில் கரைய,
“அரவிந்தன் ரொம்பப் பிடிவாதக்காரன் அஞ்சலி. அவன் கண்டிப்பா வேறொருத்தர கல்யாணம் செய்துக்க மாட்டான். உன்னையும் கஷ்டப்படுத்திட்டு, அவனுக்கும் கஷ்டத்தைக் கொடுக்கறது தான் உனக்கு ஆசைன்னா அப்படியே செய்,” என்றாள் மீரா அழுத்தம் திருத்தமாக.
அஞ்சலி மௌனமாக நகர, இம்முறை மீரா அவளை தடுக்கவில்லை. அவள் சிந்திக்கத் தொடங்கிவிட்டாள் என்று உறுதியாக நம்பினாள்.
“ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் கீதா வீட்டில் சந்திக்கலாம்,” படிக்கட்டுகள் இறங்கும் அவள் காதில் விழுமாறு உரக்கச் சொன்னாள்.
கதவடைத்து திரும்பியவளை இடிக்காத குறையாக வழிமறித்தான் ஹரி.
“எந்தக் காரணத்துக்காகவும் அவளை வற்புறுத்தாதன்னு சொன்னேன்ல. சொல்றத எதுவுமே கேட்க மாட்டியா?” எனக் கடுகடுத்தான்.
“எழுத்தாளரே! அவங்க காதல் கதையில் நிறைய டிவிஸ்ட் அண்ட் டர்ன் இருக்குது. ஆனால் அதெல்லாம் தெரியணுமுன்னா, முதல்ல எனக்குச் சாப்பிட ஏதாவது எடுத்துகிட்டு வாங்க. ரொம்பப் பசிக்குது,” நமுட்டுச் சிரிபுடன் கண்களைச் சுருக்கிச் சிணுங்கினாள்.
“ஏன் பசிச்சா உனக்கே எடுத்து சாப்பிட தெரியாதா?” அவன் மிரட்ட,
“நான் கேட்ட கேள்விக்கு , நீதான் இன்னும் பதில் சொல்லவே இல்லையே!” நினைவூட்டி கண்சிமிட்டினாள்.
இவளிடம் பேசி ஜெயித்துவிட முடியுமா என்று முறைத்தவன், ஐந்தே நிமிடத்தில் கொய்யா பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வந்தான்.
அவளும் அதை கிளி போலவே கொத்தித்தின்று, தன்னவனுக்கும் வலிய ஊட்டிவிட்டாள்.
“அரவிந்தன் பிடிவாதக்காரன்னா, அப்போ உன்னை என்னன்னு சொல்றது?” அவள் விரல்களை குவித்துத் தடுத்தான் ஹரி.
“நானும் என் நண்பனும் பிடிவாதம் பிடிக்குறதே நல்லது நடக்கணும்னு தான்!” கழுத்தை நொடித்தவள், அஞ்சலி தயங்குவது எதனால் என விவரித்தாள்.
“எல்லாம் சரிதான் மீரா. ஆனால் அஞ்சலி அவ மனச மாத்திப்பாளா?” சந்தேகமாகக் கேட்டான்.
“கண்டிப்பா ஹரி!” அவள் உறுதியாகச் சொல்ல, அவனுக்கு அந்தளவிற்கு நம்பிக்கை வரவில்லை.
“நமக்காக ஒருத்தர் வலிய வந்து அவங்களோட சந்தோஷங்கள தியாகம் செய்யறாங்கன்னா, அப்படிப்பட்டவங்கள பிடிச்சியிருந்தாலும், அவங்களுக்கு சரின்னு சொல்றது எவ்வளவு தர்மசங்கடமான விஷயம் தெரியுமா?” என்றவன் “எனக்கும் உன் காதலை ஏற்கும்போது இப்படித்தான் இருந்தது,” ஒப்பிட்டு உணர்த்தினான்.
அதை கேட்டுச் சிரித்தவள், “எழுத்தாளரே, அப்படி உங்க காலையே வலிய சுத்தி சுத்தி வரோமுன்னா, உங்களைவிட வேற யாரும் எங்களை அன்பா, அக்கறையா அரவணைக்க முடியாதுன்ற அசைக்கமுடியாத நம்பிக்கைல,” அழுத்திக் கூறி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.
அப்போதும் அவன் முகத்தை உம் என்று வைத்துக்கொள்ள,
“அவங்க சண்டைக்கு சண்டேவே பதில் தெரிஞ்சிடும். நம்ம காதல் கதையில் தான், நிரப்ப இன்னும் பதில் தெரியா கேள்விகள் நிறைய இருக்கு. அதனால நீங்க உங்க கவனத்தைச் சிதறவிடாம, சனிக்கிழமை அறிமுக விழாவில் என்ன பேசலாமுன்னு யோசிங்க எழுத்தாளரே!” வம்பிழுத்துக் கண்சிமிட்டினாள்.
குறும்பாக பேசும் அவள் காதினை திருகியவன், “தெரியுதுல்ல! தேவையில்லாம என்கிட்ட பிடிவாதம் பிடிக்குறத விட்டுட்டு, நீயும் கொஞ்சம் கேள்விகளுக்கு பதில் கண்டுபிடி,” எனக் காதலாய் மொழிந்தான்.
பிடித்தும் பிடிகொடுக்காமல் பேசி விலகுகிறாள் அவள்;
பிரியமானவளை பிரிந்தே தீருவேன் என வெறுக்கிறான் அவன்;
அக்கறை என்ற பெயரில் அக்கப்போர் செய்யும் இவர்கள்,
அணை திறந்த வெள்ளமாய் காதலில் நிரம்புவார்களா – பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here