69 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
“தெவிட்டாத இன்பம்! தன் முதல் கதையுடன் உங்களை சந்திக்க வந்திருக்கும், புதிய முகம் திரு.ஹரி அவர்களை அறிமுகம் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.” புன்னகை ததும்ப ஹரியைத் தன்னருகில் வரச் சொல்லிக் கண்ணசைத்த ஸ்ரீராம், அவன் எழுத்துப்பயணத்தைப் பற்றி பேசச் சொன்னார்.
பிரபலமான புத்தகக் கடைகளின் பிரதிநிதிகள், அனுபவத்தில் கைதேர்ந்த விநியோகஸ்தர்கள், நகரத்தின் புகழ்பெற்ற நூலகத்து நிர்வாகிகள், மற்றும், நாலைந்து விமர்சகர்களும் அந்த அறிமுக விழாவிற்கு வந்திருந்தனர். மேலும் ரமேஷ், வாரயிதழ் நடத்தி வந்த தன் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் ஹரியைப் பற்றி சொல்ல, அவர்கள் சார்பாக ஒரு நிருபரும் வந்திருந்தார்.
அனைவருக்கும் பணிவடக்கத்துடன் வணக்கம் சொல்லிக் கொண்டவன், “நான் கதை எழுத தொடங்கியதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்!” என்றான் கன்னத்தில் குழி விழ புன்னகைத்தபடி.
விருந்தாளிகள் கண்களில் ஆர்வம் குடிகொள்ள, அந்த மறைமுக குறிப்பில் மீராவின் முகம் பூரித்தது. தன்னவளை பார்வையால் வருடியபடி, அந்தப் பசுமையான நினைவை விவரிக்கத் தொடங்கினான் ஹரி.
“நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கறப்ப நேர்கூற்று, அயற்கூற்று பற்றிக் கற்றுக்கொடுத்த தமிழ் ஆசிரியர், எங்கள் கற்பனைக்கு எட்டிய உரையாடல் வாக்கியங்களை எழுதச் சொல்லி வீட்டுப்பாடம் தந்தாங்க.
அன்னைக்கு ராத்திரி என்ன எழுதறதுன்னு தெரியாம திணறிட்டு இருந்தேன். அப்போ என் அம்மாவும் பாட்டியும் சரமாரியா வாதம் செஞ்சிட்டு இருந்தாங்க. அதை அப்படியே எழுதிட்டுப் போய் கொடுத்துட்டேன்…” அவன் சொன்னதும் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.
வீட்டுப்பாடத்தைத் திருத்திய ஆசிரியர் கோபாவேசம் அடைந்து அம்மாவிடம் புகார் வாசித்தது, அதில் அம்மாவும் பாட்டியும் தன்னைத் திட்டியும், ஒருவர் மேல் ஒருவர் பழி சுமத்தி ஒயாமல் விவாதித்தும் என மணிக்கணக்காய் நீண்ட பிரச்சனைகளை ஹரி கோர்வையாக விவரிக்க, அனைவரும் கண்ணில் நீர் வர வயிறு குலுங்க சிரித்தனர்.
சிரிப்பொலி அடங்க காத்திருந்தவன், “அப்போ பரிசல் செய்ய எங்க அப்பா பேசின வார்த்தைகள் தான், என்னை உங்க முன்னாடி ஒரு எழுத்தாளனா கொண்டு வந்து நிறுத்திருக்கு,” என்றான் பெருமிதம் பொங்க.
விருந்தாளிகள் அவனை ஆழமாய் நோக்கினர்.
“சின்ன பையன் முன்னாடி சண்டைப்போட்ட அவங்க மேலத்தான் தப்பு இருக்குன்னு அவங்க தவறைச் சுட்டிக்காட்டி, இனி வீட்டுல நடக்குற எல்லா விஷயங்களையும் என்னைத் தயங்காம எழுதச் சொல்லி ஒரு நோட்டுப் புத்தகமும் வாங்கித் தந்தாரு. அதுக்கு அப்புறம் அவங்க சண்டை போட்டால் தானே,” உதடு பிரிக்காது புன்னகைத்தவன்,
தொடக்கத்தில் அவனுக்குப் பயந்து ஒற்றுமையாக இருப்பதைப் போல நடித்தவர்கள், தன்னையும் அறியாமல் புரிதலோடுப் பழக ஆரம்பித்துவிட்டார்கள் என்றவன், அவர்களின் அந்தப் பயணம்தான் ‘தெவிட்டாத இன்பம்’ என்ற கதையாக உருமாறி இருக்கிறது என்றான் முகமெல்லாம் பூரிப்புடன்.
விருந்தாளிகள் ஒருவரோடு ஒருவர் கிசுகிசுத்தவாறு, தங்களிடமிருந்த கதையின் பிரதியைப் புரட்ட,
“அப்போ, இது மாமியார்-மருமகள் ஒற்றுமை பற்றியா!” வினவினார் ஒருத்தர்.
“அட்டைப் படத்தைப் பார்த்ததும் தாய்பாசம் பற்றிய கதைன்னு நெனச்சு ஏமாந்துட்டேன் சார். இது செம்ம ட்விஸ்ட்,” ஒத்தூதினார் இன்னொருவர்.
‘என் தேவதையின் கணிப்பு எவ்வளவு சரி!’ எனச் சிந்தனையில் கரைந்தவனின் விழிகள் நன்றிகளுடன் மீராவைத் தழுவியது.
‘உன் நன்றி யாருக்கு வேண்டும்,’ எனக் கண்கள் சுருக்கி சீண்டியவளை உள்ளம் நிறையும்வரை ரசித்தான்.
ஓவியத்தைப் பாராட்டி சிலர் பேச, முழுக்கதையை ஏற்கனவே படித்திருந்த ஒரு விமர்சகர், கதாபாத்திரங்களின் தோற்ற அமைப்பு பற்றிய வர்ணனைகள் இணைத்திருந்தால், வாசகர்கள் மனக்கண்ணுக்கு விருந்தாக அமைந்திருக்குமே என குறைபட்டார்.
வேண்டுமென்று தான் அப்படி எழுதவில்லை என நேரடியாகப் பதில் சொன்னவனின் குரலில் சற்று ஆடித்தான் போனார் அவர்.
ஏன் என்று மற்றொருவர் காரணம் கேட்க,
“கதை படிக்கற ஒவ்வொருவரும், அவங்கவங்களோட உறவுகள மனசுல நெனச்சிகிட்டு படிக்கணும்ன்றது என் நோக்கம். அம்மாவோ, காதலியோ, அத்தை மகளோ, மாமன் மகனோ, யாராயிருந்தாலும், அங்களுக்குப் பரிட்சயமானவர் முகத்தைக் கற்பனை செஞ்சு படிகக்கும்போது, வரும் உணர்வே ஒரு தனி சுகம்…” கண்கள் மூடி, அனுபவித்துப் பேசினான்.
‘எனக்கும் அப்படித்தானே உன்மேல காதல் வந்துது ஹரி!’ தன்னவள் மனத்தில் நினைப்பது காதில் விழுந்ததுபோல, அவன் பார்வை அவள் பக்கம் சரிந்தது.
“அப்போன்னா சினிமா கதை எடுக்க வாய்ப்பே இல்லன்னு சொல்லுங்க!” வம்பிழுத்தார் மற்றொரு விருந்தினர்.
“வாய்ப்பே இல்லை சார்!” உறுதியாகத் தலையசைத்தவன், “படிக்கறவங்க மனசுல தோன்றும் காட்சிக்கு, அவங்களே இயக்குனர், கேமரா மேன், பின்னனி பாடகர் எல்லாமே,” ஆத்மார்த்தமாகக் கூறி, அனைவர் மனத்தையும் கொள்ளைகொண்டான்.
வெளியீடு பற்றிய மற்ற விஷயங்களை பேசி முடிக்க, வந்திருந்த அனைவரும், மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு வரும் என்று நம்பிக்கையூட்டியும், விற்பனை அள்ளும் என்று ஊக்குவித்தும் விடைபெற்றனர். அடுத்தக்கட்ட வேலைகளைப் பற்றி ஸ்ரீராம் கலந்துபேச, அவர் தரும் தார்மீக ஆதரவில் நெக்குருகிப் போனான் ஹரி.
அவருக்கு மனதார நன்றி கூறிக்கொண்ட காதல் ஜோடிகள் தரிப்பிடத்தை நோக்கி நடந்தனர்.
காதலன் தனிமையில் சிக்கியதும், அவன் சொன்ன ஆறாம் வகுப்பு நிகழ்வை ஒப்பிட்டு, “ஹரி! அப்போ எனக்காக எழுதற கதையிலையும், நம்ம போட்ட சண்டை பற்றியெல்லாம் எழுதியிருக்கியாடா?” அப்பாவியாக முகத்தைச் சுருக்கினாள்.
“முக்கால்வாசி பக்கங்கள் சண்டையும், நீ பிடிக்கற பிடிவாதமும் தான்…” அவனும் அவளை ஓட்டினான்.
“அப்போ கதையின் தலைப்பு, “பிடிவாதகாரியின் சண்டைகள்… இல்லேன்னா சண்டைக்காரியின் பிடிவாதங்கள்…’ அப்படித்தானே!” மீரா உதட்டை வளைக்க,
“ஓய் மக்கு! அதான் தலைப்பு அ..ஆ..ல தொடங்குமுன்னு சொன்னேன்ல,” வாஞ்சையாகத் தலையில் குட்டி நினைவூட்டினான்.
“அப்போ அன்பே ஆருயிரே வா?” என்றாள் சிறிதும் யோசிக்காமல்.
“நெனப்பு தான்டி!” பெருங்குரலில் சிரித்தவன் வண்டியை உயிர்ப்பித்தான்.
வழிநெடுக அவள் தலைப்புகளை யூகிப்பதுமாக, அவன் இல்லை என்று தர்க்கம் செய்வதுமாக காதலாகப் பயணித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று கீதா வீட்டு முன் ஹரி வண்டியை நிறுத்த, எதிரிலிருந்த பிள்ளையார் கோவிலை ஏக்கமாக பார்த்த வண்ணம் இறங்கினாள் மீரா.
கீதா வளைகாப்புக்கு வந்தன்று தங்கள் வாழ்க்கையில் நடந்த பல திருப்பங்கள் கண்முன் அரங்கேற, ‘பிள்ளையார் அப்பா, ஏன் இப்படி அரவிந்தன வாட்டியெடுக்கற? அவனுக்கு ஒரு நல்லவழி காட்டக்கூடாதா…’ மனமுருகி பிரார்த்தித்தாள். கோவில் மட்டும் திறந்திருந்தால் பிள்ளையாரிடம் ஒடிப்போய் சண்டையிட்டிருப்பாள்.
‘என்னடி செய்யற?” ஹரி அவளை உலுக்கியதும் தான் சுயத்திற்கு வந்தாள் பேதை.
“ஹரி…அது.. அது…அரவிந்தனும் அஞ்சலியும்…”
அவனுக்கும் அது வருத்தம்தான். ஆனால் பக்குவமாகவும் சிந்தித்தான்.
“என்ன செய்ய மீரா; அது அவங்க ரெண்டு பேருடைய வாழ்க்கை பிரச்சனை; யாரும் யாரையும் கல்யாணம் செய்துக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த கூடாதுடி!” நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.
மீரா எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதியாக நடக்க, அவள் தோளினை சுற்றி வளைத்து அணைத்தவன், “வீட்டுக்குப் போகுற வழியில் அரவிந்தனைப் பார்த்துட்டு போகலாம், சரியா!” ஆறுதல் கூறித் தேற்றினான்.
நண்பர்களை புன்னகை முகமாய் வரவேற்று சில நிமிடங்கள் அளவளாவிய கீதா, “குழந்தை எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வரேன்,” சொல்லி மாடிப்படிகளை ஏறினாள்.
பாதி வழியில் நின்றவள், மீரா பக்கம் திரும்பி, “சொல்ல மறந்துட்டேன் டி! அஞ்சலி ஃபோன் பண்ணிருந்தா. அவளோட மாமா வீட்டுக்குப் போகுறதுனால இங்க வரலன்னு சொல்லிட்டா. உன்கிட்ட குறிப்பா சொல்லச் சொன்னா,” தகவல் கூறி நகர்ந்தாள்.
அஞ்சலி வீட்டில்….
“இல்லாத மாமாவ பார்க்கப்போகுறதா ஏன் என்னை பொய் சொல்ல சொன்னீங்க?” அரவிந்தனிடம் எகிறினாள் அஞ்சலி.
“ம்ம்… அப்புறம் கீதா வீட்டுக்குப்போய் என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு நீ மறுபடியும் தொடங்கினா….” புருவங்களை மேலும் கீழுமாய் அசைக்க, உம் என்று முகத்தை வைத்துக்கொண்டாள் பேதை.
அவள் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தியவன், “ரெண்டு பொண்ணுங்க சேர்ந்ததுக்கே என்னை வீட்டை விட்டு துரத்திட்டீங்க. இப்ப கீதாவும் சேர்ந்தா….” விடாமல் சீண்ட,
“அதுக்கு மன்னிப்புக் கேட்கணும்னு தானே காலையிலிருந்து விடாம ஃபோன் பண்ணிட்டு இருந்தேன். அவ்வளவு ஆசையிருந்திருந்தா எடுத்து பேசியிருக்கலாம்ல,” கழுத்தை நொடித்தாள்.
அவளை உரிமையாக இடையோடு சேர்த்து அணைத்தவன், “மன்னிப்புக் கேட்கறதுக்கு டீச்சர் மூணு நாள் எடுத்துப்பீங்களா?” காதலாய் அவள் செவிகளில் கிசுகிசுத்தான்.
நாணத்தில் சிவந்த பெண்ணின் முகத்தை உள்ளங்கையில் ஏந்தியவன், “ம்ம்…சொல்லு…” என்று கண்சிமிட்டினான்.
“கோவிச்சுக்கிட்டு போனது நீங்கதானே,” அதிகாரம் தூள் பறந்தது அவளிடமிருந்து.
“என்னைக் கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு அடம்பிடிச்சது நீதானே!” அவனும் விடுவதாக இல்லை.
“என் மனச அன்னைக்கே மாத்திக்கிட்டேன் தெரியுமா,”
குற்றயுணர்ச்சியில் தத்தளித்தவள் அவன் கைவளைவில் இன்னும் இறுக்கமாக உடம்பை வளைத்துக்கொண்டு, “என்னைத் தவிர நீங்க வேற யாரையும் கல்யாணம் செய்துக்க மாட்டீங்கன்னு மீரா சொல்லலேன்னா எனக்கு உங்க அன்பு புரிஞ்சிருக்காது அரவிந்த்,” உரிமையுடன் பேச,
“மீரா உன்னை நல்லா ஏமாத்திருக்கா அஞ்சலி,” பக்கென்று சிரித்து, பெண்ணவளை அதிர்ச்சியில் ஆழ்த்தினான் அரவிந்தன்.
கீதா வீட்டில்…
“அஞ்சலி இப்படி ஏமாத்துவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லடா,” மனம்நொந்தாள் மீரா.
ஆனால் ஹரியுடைய கவலையெல்லாம் அரவிந்தனைப் பற்றியும், அவனுக்காக வருந்தும் தன்னவளைப் பற்றியும் மட்டும்தான்.
குழந்தையுடன் கீதா வருவதைக் கண்ட ஹரி, “அப்புறம் பேசலாம்!” என்று மீராவின் காதில் கிசுகிசுக்க,
‘பேசினா மட்டும் விதியை மாற்றமுடியுமா!’ விரக்தியில் சிரித்தாள் மீரா.
கீதா பெருமிதம் பொங்க குழந்தையை நண்பர்களிடம் நீட்ட, மீராவோ இயந்திர கதியாகக் கைநீட்டி, மார்போடு அணைத்துக்கொண்டாள்.
அவள் எண்ணமெல்லாம் அரவிந்தனை பற்றியே இருந்தது. மீரா அரவிந்தனை நேரில் பார்க்க துடித்தாள்; ஹரி அவன் எதிர்காலத்தை எண்ணி கவலையாய் இருந்தான்.
இனியும் பொருக்க முடியாதவளாய், “அரவிந்தன் ஃபோன் செஞ்சானாடி?” தோழியிடம் வினவினாள் மீரா.
அஞ்சலி வீட்டில்…
“நீ இவ்வளவு லூசா அஞ்சலி!” விழுந்து விழுந்து சிரித்தவன், “அவ அப்படித்தான் என்னைப் பற்றி எப்பவுமே பில்டப் பன்ணி பேசுவா. எனக்கு அவ்வளவு ஃபீலிங்கஸ் எல்லாம் கிடையாது மா…
மீரா இல்லேன்னா அஞ்சலி… அஞ்சலி இல்லேன்னா ராதான்னு யாராவது சிக்குற வரைக்கும் விடாமுயற்சி செய்துகிட்டே இருப்பான் இந்த அரவிந்தன்,” வசனம் பேச,
“விளையாடாதீங்க அரவிந்த்!” என அவன் பிடியிலிருந்து எத்தனித்தவள், “உங்களுக்கு பிடிக்கலேன்னா, இப்பவே சொல்லிடுங்க,” குபுகுபுவெனக் கண்ணீர் வடித்தாள்.
“பிடிக்காம தான் உன் குரல் கேட்டதும் உன்னை பார்க்க ஓடிவந்து இப்படிக் கட்டிப்பிடிச்சு பேசுறேனா?” அவளை வலிய இழுத்து இடையோடு அணைத்துக்கொண்டான்.
அந்த ஸ்பரிசம் வேண்டுமென்று பெண்ணவளின் மனம் ஏங்க, அது காலத்துக்கும் நிலைத்து நிற்குமா என்று அச்சுறுத்தியது புத்தி.
“அதுக்கில்ல அரவிந்த்; குழந்தை பெற்றுத் தரமுடியாத என்னை நீங்க கல்யாணம் செய்துக்கக் கூடாதூன்னு தான், உங்களை ரொம்பப் பிடிச்சிருந்தும் உங்ககிட்டேந்து விலகியே இருந்தேன்,” ஆற்றாமையில் மனமுடைந்தாள் அஞ்சலி.
“சும்மா தானே மா சீண்டினேன்,” அவன் விளக்க முயல,
“இருங்க! நான் சொல்ல வந்தத முழுசா சொல்லிடறேன்,” என அவன் வாயைப் பொத்தித் தடுத்தவள்,
“நமக்கு குழந்தை இல்லையேன்னு நீங்க ஒருநொடி வருந்தினாலும் போதும். நான் தோத்துப்போனதா நெனப்பேன். அப்புறம் நீங்க, என்ன சமாதானம் சொன்னாலும் என் மனசுல ஏற்பட்ட ரணம் ஆறவே ஆறாது. ஸோ, ஒரு தடவைக்கு ரெண்டு தடவ, நல்லா யோசிச்சு முடிவெடுங்க,” திடமாக உரைத்தாள்.
அவள் மென்னிதழ்களை இருவிரல்களில் இறுகப் பிடித்து மூடி, “இனி உனக்கு கனவுல கூட இந்த எண்ணம் வரக்கூடாதூன்னு தான், உன்னை ஓர் இடத்துக்கு அழைச்சிட்டுப் போக வந்திருக்கேன். வா கிளம்பலாம்,” அதிகாரமாக அழைத்தான்.
“எங்க போறோம்?” கண்களைச் சுருக்கினாள்.
“சொன்னாதான் வருவியா?” என்றான் அதட்டலாக.
“எனக்குத் தெரியவேண்டாம். வெளிய போயிருக்க அம்மா அப்பாவுக்கு ஃபோன் பண்ணி சொல்லணும்; பக்கத்து வீட்டு மாமிகிட்ட சாவி கொடுக்குறப்ப சொல்லணும்;” உதட்டைச் சுழித்தாள் அஞ்சலி.
“அரவிந்தன் மாமா வீட்டுக்குப் போறோம்னு சொல்லு!” குறும்புப் பார்வையால் அவளை விழுங்கினான்.
கீதா வீட்டில்…
“அதான் சொன்னேனேடி! அஞ்சலி மாமா வீட்டுக்கு போயிருக்காங்கன்னு!” கீதா நினைவூட்ட,
“அஞ்சலியைக் கேக்குல; அரவிந்தன் ஃபோன் செஞ்சானான்னு கேட்டேன்!” அழுத்திச் சொல்லி, தெளிவுபடுத்தினாள் மீரா.
“என்னடா ஹரி! இவ எந்த உலகத்துல இருக்கா?” பெருமூச்சுவிட்ட கீதா,
“அரவிந்த் ஃபோன்லேந்து தானேடி அஞ்சலி என்னைக் கூப்பிட முடியும். அவகிட்ட என் நம்பர் ஏது?” சலித்துக்கொள்ள,
நடப்பது எல்லாம் கனவா நனவா என்ற பூரிப்பில் தன்னவனைக் கண்கலங்க பார்த்தாள் மீரா. ஹரிக்கும் அது ஒரு இன்பதிர்ச்சியாகவே இருந்தது.
சந்தோஷத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், கையிலிருந்த குழந்தையை உயரத் தூக்கி இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டுச் செல்லம் கொஞ்சினாள்.
குழந்தையைக் கீழே விடாமல் மணிக்கணக்காய் கொஞ்சி, விளையாடி, உடைமாற்றி, தாலாட்டுப் பாடி என மீரா அத்தனையும் தானே செய்ய,
“நாலு பிள்ள பெத்தா மாதிரி என்ன அழகா குழந்தைய பாத்துக்குறடி!” வாயைப் பிளந்தாள் கீதா.
“நாலு இல்ல. ஒரு குழந்தைதான். வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன்!” ஹரி எழுதிய புத்தகத்தை மனத்தில் எண்ணி குறும்பு செய்தாள் மீரா.
“வாய்! வாய்!” கீதா அவளைச் செல்லமாக அடிக்க, தோழிகளின் அலப்பறைகள் சூடுப்பிடித்தது.
ஒருமணி நேரத்தில் வாசலுக்கு வந்தவள் பிள்ளையார் கோவிலின் வாசற்படிக்கு விரைந்தோடினாள். பிரார்த்தனையை நிறைவேற்றிய பிள்ளையாருக்குக் குட்டுப் போட்டு, கண்ணீரும் சிரிப்புமாக நன்றிகளைத் தெரிவித்தாள்.
அவளையே இமைக்காமல் பார்த்து ரசித்து நின்றவன் அருகில் ஓடி வந்தவள், “உண்மையிலேயே இவங்க மாமா வீட்டுக்குத்தான் போயிருப்பாங்களா ஹரி?” என்றாள் புருவச் சுளிப்புகளுடன்.
அஞ்சலி & அரவிந்த்…
“பொய்! பொய்! பொய்! எத்தனை பொய் சொல்லுவீங்க அரவிந்த்!” பைக்கிலிருந்து இறங்கிய அஞ்சலி, வந்தடைந்த இடத்தை மேலும் கீழுமாக பார்த்துப் படபடத்தாள்.
அவள் தோளினைச் சுற்றி வளைத்த அரவிந்தன் பதில்சொல்லாமல் முன்வாசலை நோக்கி நகர,
“ப்ளீஸ் சொல்லுங்க அரவிந்த்! நம்ம இப்போவே குழந்தைய தத்தெடுக்க போறோமா?” நச்சரித்தாள் பேதை.
வெடுக்கென்று நின்று அவளை ஏறிட்டவன், “இன்னும் கல்யாணமே ஆகலையாம். அதுக்குள்ள என் பொண்டாட்டிக்கு அவசரத்த பாரு!” அவள் கூர் நாசியில் கிள்ளி நெற்றி முட்ட, அன்பும் ஆசையும் பெருக்கெட்டுக்க, அசடுவழிந்து நெளிந்தாள் அஞ்சலி.
அவர்கள் வந்திருந்தது ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு.
காப்பகத்தின் அதிகாரியிடம், விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கும் தாங்கள் அங்கு வந்து சேவை செய்ய விரும்புவதாகச் சொல்லி விவரங்களைச் சேகரிக்க, அஞ்சலி ஸ்தம்பித்து நின்றாள்.
மனம் மாறியிருந்த அஞ்சலியின் குரலில், கொஞ்சம் தெளிவும், நிறைய காதலும் உணர்ந்திருந்தான் அரவிந்தன். அந்தத் தெளிவும் காதலும் மீண்டும் குழப்பமாக மாறிவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே அவளை அன்றே காப்பகத்திற்கு அழைத்து வந்திருந்தான்.
பேச்சு வார்த்தை முடித்து தரிப்பிடத்திற்கு வந்ததும், “எனக்காக ஏதேதோ செய்யறீங்கன்னு புரியுது…. ஆனா என்னன்னுதான் புரியல அரவிந்த்,” என்றவளின் கண்கள் பனித்தன.
“அருணாச்சலம் படத்தில் தலைவர், தன் பையனுக்கு பணத்தாசையே வரக்கூடதூன்னு செலவழிக்க முடியாத அளவுக்கு பணத்த கொடுப்பாருல. அந்தமாதிரி நமக்கே நமக்குன்னு குழந்தை இல்லன்ற ஏக்கமே தெரியாத அளவுக்கும் நாம இந்தக் குழந்தைகளோட நிறைய நேரம் செலவு பண்ணப்போறோம்,“ ஒப்பிட்டு விளக்கியவன்,
அவள் முகத்தக் கண்பார்க்க தாங்கிப்பிடித்து, “அப்புறம் பாரு… நம்ம லவ் பண்ண நேரமே இல்லடா அரவிந்தான்னு நீயே ஒருநாள் என்கிட்ட புலம்புவ!” அவளுக்குள் ஒளிந்திருக்கும் காதலை அவளுக்கே புரியவைத்தான்.
“பெருந்தன்மையோட செய்யறத கூட இப்படித்தான் விளையாட்டா சொல்லுவீங்களா?” விரக்தியில் புன்னகைத்தாள் அஞ்சலி.
“இதுல என் சுயநலமும் இருக்கு அஞ்சலி,” என்றவனை கண்கள் அகல ஏறிட்டாள்.
“நாம தினமும் இந்த குழந்தைகளோடு பழகின மனநிறைவோட வீடு திரும்பும்போது, நமக்கான நேரம் செலவிடணுமுன்னு மட்டும்தான் தோணும்; குழந்தை இல்லாத வீடுன்னு நினைப்பே வராது,” இடைநிறுத்தி,
“நமக்குள்ள அள்ள அள்ள குறையாத காதல் மட்டும்தான் இருக்கும்,” என்னவள் என்ற உரிமையோடு ஆரத்தழுவினான்.
அவன் பேசப் பேச, மீரா அவன் குணத்தைப் பற்றி சொன்னது எத்தனை நிஜம் என்று பிரமித்தவள், “ஆயிரம் சொல்லுங்க அரவிந்த். நம்ம ஒண்ணா சேர்ந்ததுக்கு, மீரா தான் காரணம்!” அடிமனத்திலிருந்து உரைத்தாள்.
“பாடுபட்டு உன்னை இம்ப்ரஸ் பண்றது நானு. பாராட்டு எல்லாம் என்னை கழட்டி விட்டவளுக்கா?” இடுப்பில் கைவைத்து முறைத்தான் அவன்.
“உதடுதான் அப்படி சொல்லுது; உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்கும் நட்பும், பரஸ்பர புரிதலும் எனக்குத் தெரியாதுன்னு நெனச்சீங்களா?” அஞ்சலி அவன் மார்பில் தட்டி கண்சிமிட்ட, இம்முறை மெய்சிலிர்த்து நின்றது அரவிந்தன்.
“உன்னை விட வேற யாரு எங்களையும் எங்க நட்பையும் பற்றி இவ்வளவு சரியா புரிஞ்சுக்கு முடியும் சொல்லு,” தாழ்ந்த குரலில் உரைத்தவன், “இனி நீ என்னைவிட்டு விலகி போகணும்ன்னு கனவுல கூட நினைக்காத!” என வலதுகை ஆள்காட்டி விரலை அசைத்தான் அதிகாரமாக.
“கொடுத்த சந்தர்ப்பத்த நீங்க நழுவவிட்டீங்க மிஸ்டர்; இனி என் கணவனா பொறுப்பேத்துகறுத தவிர உங்களுக்கு வேற வழியே இல்ல,” என அவள் அவன் செவிமடலைத் திருக,
“அட் யுர் செர்வீஸ் மேடம்!” என்னவள் என்ற கர்வம் முகமெல்லாம் மின்ன, காதலாகத் தலை தாழ்த்தி சரணாகதியானான்.
ஹரி & மீரா…
“சொல்லுடா ஹரி! அரவிந்தனுக்கு ஃபோன் செய்யட்டுமா?” வழியெல்லாம் தொணத்தொணத்துக் கொண்டு வந்தவள், ஹரி வீட்டு வாசலை வந்தடைந்ததும் மீண்டும் கேட்டாள்.
“எங்க போயிருந்தா என்ன மீரா! அவங்க சேர்ந்துட்டாங்கன்னு சந்தோஷ படு!” சிடுசிடுத்தவன், “மாடிக்கு வரையா?” அன்பாக அழைத்தான்.
பொழுது சாய்ந்துவிட்டதே எனச் சுட்டிக்காட்டியவள், புறப்படுவதாகச் சொல்ல அவனும் அதற்கு மேல் வற்புறுத்தாமல் வழியனுப்பி வைத்தான்.
அவன் அவளைக் காரணமில்லாமல் அழைக்கவில்லை. சமையல் செய்து கொடுக்கும் அவள் எண்ணத்திற்கு சம்மதம் சொல்ல, அவன் அவளுக்காக ஒரு பரிசு பொருள் வாங்கி வைத்திருந்தான். அரவிந்தனைப் பற்றி இருந்த கவலையில் அதைச் சொல்லக்கூட அவனுக்கும் தோணவில்லை. ஆனால், இப்போது அவளுக்கு இன்பதிரிச்சி கொடுக்க நினைத்தவன், வீட்டிற்கு அழைத்தான். நண்பன் காதல் கைக்கூடியதை எண்ணி மிதந்தவள், தன்னவன் பேச்சில் கலந்திருந்த காதலை கவனிக்க தவறினாள். காத்திருப்பதும் சுகம் என்று ஹரியும் மௌனம் காத்தான்.
உதிரத்தில் கலந்து உருவான உயிரை,
குலம் தழைக்க வந்த செல்வமே எனப் போற்றுவார் சிலர்!
உறவாய் வந்து இணையும் பந்தம் அதை,
கடவுள் தந்த வரமே எனப் பூரிப்பார் சிலர்;
உயிரில்லா பொருளையும் சீராட்டிப் பாராட்டி,
காதல் செய்யும் மாயம் என மிதப்பார் சிலர் – இந்த
உணர்வுகளின் வீரியம் வாழ்நாள் வரை தொடருமா -பதில்சொல்லும்
காதலர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்


Please Comment Here