67 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
காலை எழுந்ததிலிருந்து வாசற்கதவையே பார்த்துக் கொண்டிருந்தான் ஹரி. எட்டு மணியளவில் தான் மீரா வருவாள் என்று தெரிந்திருந்த போதிலும், ஆறு மணி முதற்கொண்டு வாசலுக்கும் பால்கனிக்கும் நடையாய் நடந்து தவித்தான். பரிசுப்பொருளை காட்டவேண்டும் என்பதை தவிர, அவன் சிந்தையில் வேறெதுவும் ஓடவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவன் இரவு உறங்கினானா என்பது கூடச் சந்தேகம் தான்.
‘எழுத்தாளரே! எழுத்தாளரே!’ என்று அவள் கீச்சுக்குரலில், தன்னை அழைப்பது போலவே அவனுக்கு ஒரு பிரம்மை.
‘டிங்க்!’ என்று ஒலிக்கத் தொடங்கிய அழைப்பு மணி, ‘டாங்!’ என்று முடியும் முன், பற்கள் மின்ன கதவைத் திறந்தான்.
(கதவை விட்டு நகர்ந்தால் தானே மணியடித்து முடியும்வரை காத்திருக்க!)
“ஹரி மாமா! மீரா அத்தை இதை உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க!” மழலையாய் மொழிந்த ராணியின் மகள், வண்டிச் சாவியையும், டப்பா ஒன்றையும் தந்துவிட்டு சிட்டாகப் பறந்தாள்.
டப்பாவில் கொழுக்கட்டைகள் கண்டதும் பால்கனிக்கு வேகநடையிட்டான் ஹரி. அவன் எதிர்பார்த்தது போலவே கூப்பிய கரங்களுடன் பிள்ளையார் சிலைமுன் நின்று ஸ்லோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
வேண்டுதல்கள் முடிந்து கண்திறந்த பாவையின் பார்வை தன்னிச்சையாகப் பால்கனி பக்கம் திரும்பியது.
“காலையில விநாயகர் அகவல் சொல்ல நேரமில்ல ஹரி. அதான் மகேஷ் வரதுக்குள்ள சொல்லிடலாமேன்னு…” மாடிக்கு வராததற்குக் காரணம் சொன்னவள், “மறக்காம கொழுக்கட்டைய ஆஃபிஸுக்கு எடுத்துட்டுப் போ! அது உனக்கும் அரவிந்தனக்கும் தான்!” என்றாள் அதிகாரமாக.
ஏமாற்றத்தை மறைத்து புன்னகைத்தவன், “கொழுக்கட்டை எனக்கும் அரவிந்தனுக்குமா… இல்ல அரவிந்தனுக்கு மட்டுமா?” பால்கனி சுவற்றில் ஊனினின்று அவளை வம்பிழுத்தான்.
“உனக்குக் கொஞ்சம்; என் நண்பனுக்கு நிறைய!” எனக் கண்கள் சுருக்கி விரல்களை மூடித்திறந்து குழையும் தன்னவளின் குறும்பில் இதயம் தொலைத்தவனாக, கன்னத்தில் குழி விழச் சிரித்துத் தலையைச் சிலுப்பினான் ஹரி.
தன்னவனின் முகத்தை விழிகளில் நிரப்பிக்கொண்டவள், “எழுத்தாளரே! இன்னைக்குச் சாயங்காலம் வெயிட் பண்ணட்டுமா வேண்டாமா?” என்று கண்சிமிட்டினாள்.
“வெயிட் பண்ணு; நான் சீக்கிரம் வந்துடுவேன்!” அவன் கூறவும், மகேஷ் வரவும் சரியாக இருந்தது.
நண்பர்கள் புறப்பட்ட பிறகும் சிந்தனையில் கரைந்தவனாக பிள்ளையாரை உற்றுப் பார்த்த வண்ணம், பால்கனியிலேயே நின்றிருந்தான் ஹரி.
‘என் பக்த்தைக்குப் பதில்சொல்லாம அலையவிட்டல்ல… வாங்கி வெச்ச பரிசு பொருள மீரா பார்க்க மாட்டாளான்னு, நீயும் அதே மாதிரி ஏங்கு…’ பிள்ளையார் அசரீரியாகச் செவிகளில் சாபமிடுவது போன்று இருக்க, தனக்குத் தானே சிரித்துக்கொண்டான்.
‘வாய்விட்டு அழைத்திருந்தால் ஓடி வந்திருப்பாள்; வாங்கி வைத்ததைப்பற்றி, சொல்லியிருந்தால் பறந்தும் வந்திருப்பாள்; தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தால் விடுப்பு எடுத்து தனக்காக விருந்தே சமைத்திருப்பாள்!’ என்னவள் என்ற கர்வத்துடன் பிள்ளையாரிடம் செல்லச் சண்டையிட்டவன், காத்திருக்கும் சுகத்தில் மிதந்தவாறு, தன் பாங்கில் மூன்று வரி காதல் கடிதம் எழுதி, அது மீரா கண்ணில் தென்படும்படி மாட்டிவிட்டு, வங்கிக்குப் புறப்பட்டான்.
“கீதா ஒண்ணும் தப்பா நினைக்கலயே டா?” தோழி அனுப்பியிருந்த கொழுக்கட்டையை விழுங்கியபடி வினவினான் அரவிந்தன்.
“கீதா எதுவும் கேட்கல! ஆனால் இந்த மீராதான்… அரவிந்த் வரலையே… அஞ்சலி சமாதானமானாளான்னு தொணதொணத்துட்டு இருந்தா!” எனப் பெருமூச்சுவிட்டவன்,
“சொல்லப்போனா அவளுக்கு, நீங்க உண்மையிலேயே அஞ்சலியோட மாமா வீட்டுக்குத்தான் போனீங்களான்னு சந்தேகம்!” சலித்துக்கொள்ள,
தோழியின் புரிதலை எண்ணி இதழ்கள் விரிய சிரித்தான் அரவிந்தன்.
“அப்போதான் அஞ்சலி ஓரளவுக்குச் சமாதானம் ஆகியிருந்தா ஹரி. கீதா குழந்தையப் பார்த்து மறுபடியும் குழம்பிடுவாளோன்னு பயத்துல தான்…” அரவிந்தன் தர்மசங்கடத்தில் இடைநிறுத்த,
அரவிந்தன் முதல் காதல் தோல்வியில் முடிந்தது; ஹரி அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி வலியுறுத்தியது; மீரா அஞ்சலிக்கு மூளைச்சலவை செய்தது என்று பல காரணங்கள் இருக்க, ஏதோ ஒரு கட்டாயத்தால் தான் அஞ்சலி போன்ற பெண்னை திருமணம் செய்து கொள்கிறான் என்ற யூகத்திலிருந்த ஹரி,
“அஞ்சலியை விரும்பித்தானே கல்யாணம் செய்துக்குற நண்பா?” பொத்தாம் பொதுவாக வினவினான்.
“ஏன்டா! மீராவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருந்திருந்தா அவளைத் திருமணம் செய்துக்க மாட்டேன்னு மறுத்திருப்பியா?” நேரடியாகவே கேள்வியைத் திருப்பினான்அரவிந்தன்.
அதில் ஹரிக்கு சுருக்கென்று குத்தினாலும், “மீரா நம்ம தோழி டா!” அழுத்திச் சொன்னவன், “அவளை ஏத்துக்கிறதும் அறிமுகமில்லாத அஞ்சலியை ஏத்துக்கிறதும் எப்படிடா ஒண்ணாகும்?” ஹரியும் விடாமல் தர்க்கம் செய்தான்.
அஞ்சலியை பற்றி அதிகம் தெரியாத காரணத்தால் தான் நண்பன் உணர்ச்சிவசப்படுகிறான் எனப் புரிந்துகொண்ட அரவிந்தன், வெளிப்படையாக பகிர்ந்து கொண்டால் மட்டுமே அவன் சந்தேகம் தீரும் என்றும் நம்பினான்.
“கோவிலுல சந்திச்ச அஞ்சலியோட அம்மாவை குடும்பத்தோட வீட்டுக்கு வரச்சொல்லி, அஞ்சலியை என் மகனுக்குத் திருமணம் செய்து கொடுக்க விருப்பமான்னு கேட்டதே என் அம்மாதான் டா. ஆனால் அஞ்சலியோட அம்மா, அவளுக்கு இருக்குற பிரச்சனைய ஒளிவுமறைவு இல்லாம சொல்லி தன்மையா மறுத்துட்டாங்க. அவங்க எதார்த்தமா நடந்துகிட்டது எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துது ஹரி…” என மூன்றாவது கொழுக்கட்டையை விழுங்கியவன் மேலும் பேசினான்.
“அதுக்கு அப்புறம், வேலை, படிப்பு, பொழுதுபோக்குன்னு, பொது விஷயங்களை மட்டும் தான் பேசினோம். அஞ்சலியோட பேசின அந்த கொஞ்சம் நேரத்துல அவகிட்ட இருந்த நேர்மறை சிந்தனைகளை ரசிச்சேன். வயசாகி, தலை நரைச்சதுக்கு அப்புறமும் அவ கைகோத்து சந்தோஷமா பயணிக்க முடியுமுன்னு என் உள்மனசு சொல்லிச்சு. அவங்க கிளம்பினதும் என் விருப்பத்தை அம்மாகிட்ட சொன்னேன்,” இடைநிறுத்தியவனின் முகத்தில் ஒரு மென்சிரிப்பு; கேட்டுகொண்டிருந்தவன் முகத்தில் ஒரு ஆர்வம்.
“என்னடா பரிதாபமா?” அம்மாவைப் போலவே அரவிந்தன் நடித்துக்காட்ட, ஹரியின் புருவங்கள் உயர்ந்தன.
“இல்லைன்னு ஒரு விஷயத்தப்பற்றி, உடைஞ்சு போய் உட்காராம, இருக்குற வாழ்க்கையைத் தானும் சந்தோஷமா வாழ்ந்து, மத்தவங்களையும் எப்படிச் சந்தோஷமா வாழ வைக்காலாமுன்னு யோசிக்குற அவளோட நேர்மறை குணம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமான்னு மனசுக்குப் பட்டதை சொல்லி, அம்மாவுக்கு இதுல ஏதாவது தயக்கம் இருக்கான்னு கேட்டேன்.”
அரவிந்தன் விளக்கம் சொல்ல சொல்ல, சஸ்பென்ஸும் கூடுவது போல இருந்தது ஹரிக்கு.
“எனக்கும் அஞ்சலி நம்ம வீட்டுக்கு மருமகளா வரணுமுன்னு தான் ஆசை அரவிந்தா. ஆனால் அவங்க சொன்ன பிரச்சனைய நீ எப்படி எடுத்துப்பன்னு தெரியாம, என்னால எதுவும் சொல்லமுடியல…” அரவிந்தன் விளக்க, கேட்டவனுக்கு மெய்சிலிர்த்தது.
அகிலாவுடன் பேசிய மீதியையும் பகிர்ந்தான் அரவிந்தன்.
“அஞ்சலிக்கு இருக்குற பிரச்சனைய அம்மா எப்படிப் பாக்குறாங்கன்னு கேட்டதுக்க, அவங்க கண்ணோட்டம் தான் எனக்கு ஒரு பிடிமானமே கொடுத்துது ஹரி.
“என்ன சொன்னாங்க?” கண்கள் அகல வினவினான் ஹரி.
முகம் தெரியாதவர்கள் பிரச்சனையைக் கேட்டாலே மனம் கடந்து தவிக்கும்போது, தன் தோழியின் பிரச்சனைக்குத் தீர்வு தரும் நிலையில் இருந்தும் மௌனம் காப்பது மனசாட்சியை முள்ளாய்க் குத்துகிறது என அகிலா சொன்னதை கூறியவன்,
“நீ அஞ்சலியை கல்யாணம் செஞ்சுக்குறன்னு சொல்றத கேட்க ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு அரவிந்தா. ஆனால் எத்தனை பெரிய மனஸ்தாபம் உங்களுக்குள்ள வந்தாலும், அஞ்சலியோட குறையைப்பற்றி குத்திக்காட்டி பேசமாட்டேன்ற உறுதி இருந்தால் மட்டுமே, அவளைக் கல்யாணம் செய்துக்கறத பற்றி யோசிக்கணுமுன்னு கண்டீஷன்னா சொல்லிட்டாங்க!” அன்னை இட்ட நிபந்தனையை விவரிக்க, ஸ்தம்பித்துப் போனான் ஹரி.
தன் தாயைவிட, தன் கதைகளில் கற்பனை செய்த தாயைவிட, அகிலா எத்தனை உயர்ந்தவர் என அசைபோட்டவன், “உன்கிட்ட கடுமையா பேசினதுக்கு என்னை மன்னிச்சிரு டா அரவிந்தா!” தலைகுனிந்தான் ஹரி.
“அப்படியெல்லாம் சொல்லாத ஹரி! என்மேல இருக்குற அக்கறையில் தானே கேட்ட!” தன்மையாகப் பேசியவன்,
“எனக்கும் அஞ்சலி பற்றி உங்ககிட்ட எல்லாம் சொல்லக்கூடாதூன்னு இல்ல ஹரி… அவசியமில்லன்னு நெனச்சேன்,” உண்மை நோக்கத்தை உடைத்தான் அரவிந்தன்.
“தப்பு இல்ல அரவிந்தா! இது உங்க வாழ்க்கை; எல்லாத்தையும் எல்லார் கிட்டையும் சொல்லணும்னு அவசிமில்ல,” சொன்னவனுக்கு அதுவரை மீரா அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தை நண்பனிடம் சொல்லவில்லையே என நினைக்காமல் இருக்க முடியவில்லை.
“இதையேதான் நானும் அவளுக்குச் சொன்னேன். ஆனால் அவ மீராகிட்ட எல்லாத்தையும் சொல்லுவான்னு நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கல,” நடந்ததை எல்லாம் எண்ணி அரவிந்தன் சிரிக்க,
“உன்மேல அக்கறை காட்டறேன்ற பேருல அஞ்சலியைக் கட்டாயப் படுத்தாதேன்னு நானும் படிச்சுப் படிச்சு சொன்னேன் டா. அவ காது கொடுத்துக் கேட்டால் தானே,” ஹரியும் பொய்யாகச் சலித்துக்கொண்டான்.
“மீராவை விட வேற யாரும் என்னைச் சரியா புரிஞ்சுக்க மாட்டாங்க டா,” கூறிக்கொண்டே ஒரு கொழுக்கட்டையை விழுங்கியவாறு டப்பாவை ஹரி பக்கம் தள்ளினான்.
சரிதான் என அவன் தலையசைத்தது தான் தாமதம். அந்த டப்பாவிம் ஒரேவொரு கொழுக்கட்டை இருப்பதை கண்டவன், “இதை மட்டும் எதுக்கு விட்டு வெச்ச; நீயே சாப்பிடு!” என்று, செல்லக் கோபத்துடன் நண்பனின் வாயில் திணித்தான்.
அசடுவழிய மென்று விழுங்கியவன், புத்தகம் அச்சிடும் வேலையின் முன்னேற்றங்களைப் பற்றி வினவ, “வெள்ளிக்கிழமை ரெடி ஆயிடும். நீயும் அஞ்சலியும் அன்னைக்கு வீட்டுக்கு வாங்களேன். மீராவும் உங்கள பார்க்கணும்னு துடிச்சிட்டு இருக்கா!” என்றான் அன்பாக.
“யூ ர் டூ லேட் டு இன்வைட் நண்பா!” என்றதும், ஹரி முகம் கேள்வியில் விரிந்தது.
சண்டைகள் சமரசமான நாள்முதல் பெண்கள் இருவருமே தினமும் மணிக்கணக்காக பேசிக்கொள்கிறார்கள் என அரவிந்தன் உண்மையை உடைக்க,
“அதானே! என் பேச்ச கேட்டு, ஒரு நாள் அஞ்சலிக்கு ஃபோன் செய்யாம இருந்ததே பெரிய விஷயம்!” பெருமூச்சுவிட்ட ஹரி, வெகுநேரமாக அளவளாவிக் கொண்டிருப்பதை உணர்ந்து, பணிக்குத் திரும்பலாம் என்று எழுந்தான்.
அன்று மாலை ராணியுடன் விதியே எனக் கிளம்பிக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலில் மீராவைக் கண்டதும், “அம்மா! அம்மா! நாங்க மீரா அத்தையோட விளையாடிகிட்டு இருக்கோம்! கடையில ரொம்ப போரா இருக்கும்!” என்று அடம்பிடித்தனர்.
“விட்டுட்டுப் போங்க அக்கா! நானும் ஹரி வர வரைக்கும் சும்மாதான் உட்கார்ந்துட்டு இருப்பேன்,” மீரா சொல்லவும், மகிழ்ச்சியில் துள்ளிய பிள்ளைகள் தங்கள் வீட்டிலிருந்து கை நிறைய விளையாட்டு பொருட்களை அள்ளிவந்தனர்.
“அத்தை! இது எனக்கு மகேஷ் மாமா வாங்கிக்கொடுத்த பரிசு”
“இது நான் விளையாட்டு போட்டியில ஜெயிச்சது!” பிள்ளைகளின் கூக்குரலுக்குத் தலையாட்டிக் கொண்டே கதவைத் திறந்து உள்ளே நுழைந்தவளுக்கு, தன்னவன் தனக்கும் விளையாட ஒரு பரிசு பொருள் வாங்கி வைத்திருந்ததை கவனித்து பிரம்மித்து போனாள்.
சிறுபிள்ளை போல விரைந்தோடியவள், குளுகுளுவென்று காற்று வீசும் ஃப்ரிட்ஜை திறந்து அதில் முகத்தை புதைத்து கண்மூடி குளிர் காய்ந்தாள். காய், பழம், பால் என்று நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்த பொருட்களை, நோக்கியவள், ஃப்ரிட்ஜின் கதவை மூட, அதில், அவளுக்கு பிடித்த பிள்ளையார் படம் பொருத்திய மேக்னெட்டை கண்டாள். அதன் கீழ்பகுதியில் தொங்கி கொண்டிருந்த காகிதத்தை, பிரித்துப் படித்தாள்.
‘சம்மதம்! நிபந்தனைகளுக்கு உட்பட்டு!’ அதே மூன்று வார்த்தைகள்.
’முசுடு எழுத்தாளர்!’ தன்னவனைச் செல்லமாக திட்டிக்கொண்டே குழந்தைகளை நோக்கி நடந்தாள்.
அவள் விளையாட வருவதாய் எண்ணி, குழந்தைகள் ஆவலாய் பொம்மை நீட்ட, அதை வாங்கி கீழே வைத்தவள், “குட்டீஸ்! அத்தைக்கு ரொம்ப பசிக்குது டா!” கண்கள் சுருங்க, வயிற்றை தடவினாள். குழந்தைகளும் அந்த நடிப்பை நிஜமென நம்பி, அவளையே உற்று பார்த்தனர்.
“சொல்லுங்க! அத்த, என்ன இனிப்பு செய்யட்டும்?”
“இனிப்பு வேண்டாம் அத்தை. அது பல்லுக்கு நல்லது இல்லன்னு அம்மா சொல்லியிருக்காங்க,” மழலையாய் மறுத்து நூடுல்ஸ் வேண்டுமென்று அசடுவழிந்தனர் பிள்ளைகள்.
அன்று பிறந்தநாள் விழாவிற்கு சமைக்க வாங்கியிருந்த சேமியா மற்றும் மசாலா பொடிகள் இருந்தன. ஹரி வாங்கி வைத்திருந்த காய்கறிகளையும் சேர்த்து, அரைமணி நேரத்தில், சுட சுட உப்புமாவை தயாரித்தாள் மீரா.
உப்புமாவா என முதலில் முகம் சுளித்த பிள்ளைகள், மீரா கதை சொல்லக் கேட்டு, “சூப்பரா இருக்கு அத்தை!” என கெட்சப்புடன் புசித்தனர்.
கவனம் சாப்பிடுவதில் திசைதிரும்ப விளையாடுவதை பற்றி மறந்தனர். ஹரி வர, இன்னும் அரைமணி நேரம் இருப்பதை உணர்ந்த மீரா அவனுக்கு இரவு உணவு செய்ய ஆயத்தமானாள்.
ஒரு பக்கம் பருப்பு வெந்து குக்கர் ஓசை அடங்க, மற்றொரு அடுப்பில் புளித் தண்ணீரில் கொதித்த கத்தரிக்காயும், முருங்கைக்காயும் வீடெங்கும் அதன் வாசத்தை பரப்பின.
“ஹரி மாமா! ஹரி மாமா! பாருங்க அத்தை புதுவிதமான நூடுல்ஸ் செஞ்சிருக்காங்க!” பிள்ளைகள் இருவரும் உள்ளே நுழைந்தவனிடம் கோஷம் போட, வாசலுக்கு ஓடி வந்தாள் மீரா.
குழந்தைகளை செல்லம் கொஞ்சி சாப்பிடச் சொன்னவன், தன்னவள் அருகில் வந்து, “அதுக்குள்ள சமைக்க ஆரம்பிச்சிட்டியா? நான் இன்னும் என் நிபந்தனைகள சொல்லவே இல்லையே!” குறும்பாக கண்சிமிட்டினான்.
“அடப்போடா! நீயும் உன் நிபந்தனைகளும்!” அலுத்துகொண்டவள், “போ! போ! ட்ரெஸ் மாத்திட்டு வா!” கையில் இருந்த கரண்டியால், அவன் முழங்கையில் செல்லமாக அடித்து விரட்டினாள்.
பருப்பு சேர்த்து ஒரு கொதி வந்த சாம்பாரை சுவை பார்த்து இறக்கி வைத்துவிட்டு, தங்களுக்கு பருக ஏலக்காய் டீயும் எடுத்துவந்து ஹரி அருகில் அமர்ந்துகொண்டாள்.
ஹரிதான் ஊட்டிவிட வேண்டுமெனச் சொல்லி இளையவன் அடம்பிடிக்க, அவனை மடியில் அமர்த்திக்கொண்டு ஸ்பூனால் ஊட்டிவிட்டு கொண்டே, டீயை பருகினான் ஹரி.
“என்னடா, ஃப்ரிட்ஜ் வாங்கி அசத்திட்ட?”
“பின்ன!” சலித்துக்கொண்டவன், “வார நாட்களுல, நீ சமைக்க வருவ! சனியும், ஞாயிறும், வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டா தானே உடம்புக்கு நல்லது… அதையும் சேர்த்து நீ வெள்ளிகிழமையே சமைச்சு ஃப்ரிட்ஜுல வச்சிட்டு போவன்னு தான்…” நக்கலாகப் பதிலளிக்க,
“இவ்வளவு ஆசையை வச்சுகிட்டு சம்மதம் சொல்ல இழுத்தடிக்கற!” பொய்கோபத்துடன் அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.
“ஆ..ஆ… வலிக்குது டி!” அவன் அலறியதில் மடியில் அமர்ந்திருந்த பிள்ளை, அரண்டு போக,
“எதுக்கு அத்தை மாமாவை கிள்ளறீங்க?” என்றாள் மூத்தவள்.
“ம்ம்… உங்க மாமா, நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லல!” நமுட்டுச் சிரிப்புடன் சீண்டும் தன்னவனை முறைத்து கொண்டே பதிலளித்தாள்.
அவன் இரண்டு நாட்களாக அவளுக்காக காத்திருந்த கதையை சொல்லி அவள் வாயை அடைத்தான்.
உண்டு முடித்த பிள்ளைகள் பரமபதம் விளையாட அழைக்க நால்வரும் விளையாடத் தொடங்கினர். ஏணியில் ஏறுவதும், பாம்புகளில் சறுக்குவதுமென ஆட்டதில் குழந்தைகள் மூழ்கியிருந்தனர். அதற்கிடையில், ஹரி, அரவிந்தனிடம் பேசியதை எல்லாம் சொல்ல, “நான் தான் அன்னைக்கே சொன்னேனே டா! அவங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருக்குன்னு. நீ ஏன் அவனை இப்படியெல்லாம் கேள்வி கேட்ட?” நண்பன் சங்கடபட்டிருப்பான் என்ற ஆதங்கத்தில் புலம்பினாள்.
“நீயும் தானே என் பேச்ச கேட்காம, கீதா வீட்டுலேந்து கிளம்பின அடுத்த நிமிஷமே அஞ்சலிக்கு போன் செஞ்சிருக்க….” ஹரி கண்களை உருட்ட,
”அதான் அவங்க சமாதானம் ஆயிட்டாங்களே!” குழைந்து பேசி அவனை வசீகரித்தாள்.
தன்னவளை ரசித்தவாறு ஹரி தாயத்தை உருட்ட,
காயை நகர்த்திய இளையவன், “மாமா நீங்க மறுபடியும் பாம்பு தலையில வழுக்கி விழுந்துடீங்க!” என்று கலகலத்தான்.
“நான் வழுக்கி விழுந்து ரொம்ப நாள் ஆச்சு!” என்றவனின் பார்வை மட்டும் மீராவிடமிருந்தே தழுவியிருந்தது.
முகமெல்லாம் பூத்த நாணத்தை மறைக்க, ஆட்டதில் கவனம் செலுத்தினாள் மீரா.
ஆட்டம் சூடு பிடிக்க நால்வரும் அதில் மூழ்கினர். அச்சமயம் அங்கு வந்த ராணி, “நல்லா காதலிக்கறீங்க!” கேலி செய்து, நாசுக்காய் பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்தாள்.
“ஹரி மாமா! நாளைக்கும் இதேபோல விளையாடலாம். ஸ்னேக் அண்ட் லேடர்ஸ் இங்கையே இருக்கட்டும்,” மனமில்லாதவர்களாய் வீட்டிற்கு புறப்பட்டனர் சிறுவர்கள்.
மீரா நீட்டிய உப்புமாவைப் பெற்றுகொண்டு, சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து சுவைத்தான்.
அவனருகில் அமர்ந்தவள், “பிடிச்சிருக்கா!” என்றாள் மெல்லிய குரலில்.
“உன் சமையலுக்கு என்ன குறைச்சல்,” மேலும் ஒரு ஸ்பூன் உப்புமாவை விழுங்கினான்.
“அதுக்கில்ல டா! அரவிந்தனுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்ச அளவுக்கு, உன் விருப்பங்கள் எனக்கு தெரியலையே!” மீரா வருந்த,
“ச்சீ போடி!” என அவள் கையை தட்டிகொடுத்தவன், “இது இப்படி இருக்கணுமுன்னு அரவிந்தன் அளவுக்கு எனக்கு குறிப்பா சொல்ல தெரியாது. அவ்வளவுதான்!” என்றான்.
இன்னும் சமாதானம் ஆகதவளாக அவள் சிந்தனையில் கரைய,
“ஓய்! நல்லா இல்லாததுதனால தான், எனக்கு மட்டும் கொடுத்தியா!” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
அவளும் இடம் வலமாகத் தலையசைத்து அழகாய் அசடுவழிய, “அப்போ! இந்தா, நீயும் சாப்பிடு!” என்றான் ஹரி.
அவளும் மென்னகையுடன் வலது கையை நீட்டினாள்.
நீட்டும் அவள் கரத்தை தடுத்து அவனே ஊட்டிவிட்டான். அதை சற்றும் எதிர்பார்க்காதவள் நெகிழ்ந்து போக, “எழுத்தாளரே! இதெல்லாம் உங்களுக்கு காதலிக்குற பட்டியல்ல வராதா!” வம்பிழுத்தாள்.
‘எத்தனை நேரம் காத்திருந்தேன்! இவள் எழுத்தாளரே என்று அழைப்பதற்காக!’ பூரித்தவன்,
“அப்பாடா! இப்போதான் என் மீரா ஃபார்முக்கு வரா!” என்று சொல்லி அவளை மேலும் சீண்டினான்.
அவன் உரிமை கொண்டாடுவதை ரசித்தும் ரசிக்காதவளாகப் பதில் சொல்லச் சொல்லி நச்சரித்தாள்.
“இதுல என்னடி இருக்கு. எத்தனைமுறை நம்ம ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்கோம்,” கூறிக்கொண்டே மீண்டும் ஒரு வாய் ஊட்டிவிட்டான்.
“அது வேற இது வேற ஹரி! இப்போ நீ என் காதலன் டா! உன்னுடைய சின்ன சின்ன ஸ்பரிசமும் சிலிர்ப்ப கொடுக்குது; வார்த்தையால விவரிக்க முடியாத ஒரு வித உணர்ச்சிய தூண்டுது!” மெய்மறந்து அந்த உணர்வுகளை அவள் வர்ணிக்க,
“அப்படின்னா இனிமே இதெல்லாம் செய்யமாட்டேன்,” பதறி தள்ளி அமர்ந்தவன் தன் நிபந்தனைகளை சொல்வதாகச் சொல்லி, பேச்சை திசைதிருப்பினான்.
“ஒத்துக்க மாட்டீயே! ஒண்ணு, பேசி வாய் அடைக்குற; இல்ல ஊட்டிவிட்டு வாய் அடைக்குற!” புலம்பியவள், “ நீயே அதிசயமா ரொமான்டிக்கா ஏதாவது செஞ்சாலும், அதை நான் பேசியே கெடுத்துடறேன்,” என முணுமுணுத்தாள்.
கன்னத்தில் குழி விழ மென்னகைத்தவாறு அவள் முகத்தை கையில் ஏந்தியவன், “மிஸ்டர் வரதன் ஒரு வார்த்தை சொல்லட்டும்; அப்புறம் இந்த ஹரி உன்னை எப்படித் திகட்ட திகட்ட காதலிக்கறான்னு பாரு!” கண்பார்த்து பேச, அவன் கையை வெடுக்கென்று உதறியவள்,
“போடா! அது அது அந்தந்த காலத்துல செஞ்சாதான் மதிப்பு!” தர்க்கம் செய்து, “சரி! உங்க நிபந்தனைகளை சொல்லுங்க எழுத்தாளரே! நான் வீட்டுக்கு கிளம்பணும்” என முகத்தைத் தூக்கி வைத்துக்கோண்டாள்.
“வா! உன் வீடு வரைக்கும் நடந்துகிட்டே பேசலாம்!” என்றதும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
‘என்னை அம்போன்னு விட்டுட்டு போறீயே மீரா!’ சன்னி புலம்புவதை காதில் வாங்கிகொள்ளாமல் சாலையில் நடக்கத் துவங்கினர் காதல் ஜோடிகள்.
“நீ எனக்காக சமைக்க நினைக்கறது சந்தோஷம் மீரா. ஆனால் நீயும் தினமும் வேலையிலிருந்து அசதியா வருவ. உன்னால முடியாத நாட்களுல சமைக்கலேன்னாலும் பரவாயில்ல. உன்னை வருத்திக்கிட்டு எதுவும் செய்யக்கூடாது, புரியுதா?” என்றதும், சரி என்று தலையசைத்தாள்.
“சாயங்காலம் ஆறு மணிக்கு முன்னாடியே வீட்டுக்குக் கிளம்பிடணும். எனக்காகக் காத்திருக்கக் கூடாது; உங்க வீட்டுலதான் நீ டின்னர் சாப்பிடணும்…” சொன்னவனுக்கு ஏனோ ஒரு தயக்கம்,
“…வெள்ளிக்கிழமை ஒரு நாள் வேணுமுன்னா என்னோட சாப்பிடு. அன்னைக்கு நம்ம ஒண்ணா சேர்ந்து சமைக்கலாம் சரியா!” என்றதும், அவள் முகத்தில் ஒரு புன்னகை.
“ஆனா, சனி, ஞாயிறு, இங்க அவசியமில்லாம வரவே கூடாது!” ஆள்காட்டி விரலை காட்டி மிரட்ட,
“எழுத்தாளரே! எனக்கு ஒரு சந்தேகம்!” என்று குறுக்கிட்டாள் அவள்.
“ம்ம் சொல்லு!”
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படித்தான் தினமும் எங்க வீட்டுக்கு அனுப்பிடுவீங்களா!” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு கலாய்த்தவளுக்கு முறைப்புகளையே பரிசாய் தந்தான் ஹரி.
“நான் அம்மா அப்பாவோட நேரம் செலவிடணுமுன்னு நீ யோசிக்கறதுனால, அப்படி கேட்டேன்.” விளையாட்டாகக் கேட்டதை, பக்குவமான தோரணையில் கேட்டுச் சமாளித்தாள்.
“அவனும் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, “கல்யாணம் செய்துகிட்டு நீ மட்டும் என்னோட வரணுமுன்னு நினைக்கற அளவுக்கு நான் சுயநலவாதி இல்லடி!” அவள் முகம் பார்த்து சொல்ல, மங்கையின் முகம் பெருமிதத்தில் மின்னியது.
அவள் வீட்டின் வாயிலை நெருங்கிவிட்ட போதிலும் தன் மனத்திலிருந்த முக்கியமான ஒன்றை சொல்ல முடியாமல் தவித்தான். மீரா முன்வாசல் கதவைத் திறக்க,
“மீரா! எங்கம்மா…எங்கம்மா… இங்க வரப்ப, நீ… உன்னால… அதுவந்து…” திக்கித்திணறினான் ஹரி.
கதவுக்கு மறுபக்கம் நின்றிருந்தவனின் கைகளை கம்பிகளின் இடுக்கில் பிடித்துக்கொண்டவள், “நீ ஆரோக்கியமான வீட்டுச் சாப்பாடு சாப்பிடணும். அதை யாரு கையால சாப்பிட்டா என்ன.” அவன் உள்ளத்தைப் படித்தாள்.
“அது மீரா…” விளக்க முயன்றவனை குறுக்கிட்டு, “அவங்க உன் அம்மா டா! அவங்களுக்குத்தான் முன்னுரிமை! எதையும் யோசிக்காம கிளம்பு,” என்றாள்.
சங்கடத்திலிருந்து மீளாதவனாக அவன் அமைதியாக நகர்ந்தான்.
“எழுத்தாளரே! நான் வேணுமுன்னா உங்களுக்கு வீடு வரைக்கும் துணைக்கு வரட்டுமா!” வம்பிழுத்துக் கண்சிமிட்டினாள் மீரா.
“ச்சீ போடி!” கன்னத்தில் குழிவிழ அவன் சிரிக்கப் பார்த்தவளுக்கும் மனம் லேசானது.
கண்ணுகெட்டும் தூரம் வரை கதவருகில் நின்று அவள் பார்க்க,
சிந்தையெல்லாம் நிறைந்தவளின் நினைவுகளில் அவன் நடக்க,
இருவருக்கும் இடையே பாதை நீண்ட போதும்,
இதயங்கள் பாசத்தால் நெருங்கிய மாயம் என்னவோ- பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…


Please Comment Here