74 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
வழக்கமாக காரில் ஏறியமர்ந்த மறுகணமே வளவளவென்று பேசுபவள், அன்று பத்து நிமிடங்களாகியும் மௌனகுருவாகப் பராக்குப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட மகேஷுக்கு சற்று விசித்திரமாகவே இருந்தது.
“அப்படியென்ன பலத்த யோசனை?” என்றான்.
“வீட்டுக்குப் போய் என்ன செய்யலாமுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்,” என்றாள் மென்னகையுடன்.
தினமும் ஹரி வரும் வரை காத்திருந்து, அவனிடம் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு கிளம்பும் இவளுக்கு யோசிக்க அப்படியென்ன இருக்கிறது எனத் தோள்களை குலுக்கிக் கொண்டவன், கிரிக்கெட் கமென்ட்ரியில் மூழ்க, அவளோ சாதம் வடிக்கலாமா, சப்பாத்தி செய்யலாமா எனச் சிந்தனையில் கரைந்தாள்.
வண்டி வீட்டின் தரிப்பிடத்தில் நிற்கும் முன்னரே தன் சன்னியைக் கண்டுகொண்டவளின் கண்கள் விரிந்தன.
“ஹரி வீட்டுக்கு வந்துட்டான் போலடா!” துள்ளியவள், கண்சிமிட்டும் நேரத்தில் மாயமாக மறைந்தாள்.
‘இவங்களும் இவங்க காதலும்!’ சிரித்துக்கொண்டே மாடி ஏறினான் மகேஷ்.
வங்கியில் பராமரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருபதால் சீக்கிரம் வந்துவிட்டதாக அறிவித்த ஹரி, ஆறு மணியளவில் வாரயிதழ் நடத்தும் ரமேஷின் நண்பரைச் சந்தித்துவிட்டு வரப்போவதாகக் கூற, பேதையின் முகம் காற்று இறங்கிய பலூன் எனச் சுருங்கியது.
“சரி! டீ போட்டுத் தரேன். குடிச்சிட்டு கிளம்புடா,” ஏமாற்றத்தை மறைக்க அங்கிருந்து நகர்ந்தாள்.
“என்ன விஷயமுன்னு கேட்க மாட்டீயா?” அவள் வலக்கையைப் பற்றித் தடுத்தவன், “அறிமுக விழாவிற்கு வந்திருந்த ரமேஷ் நண்பருக்கு என் கதைகள் பிடிச்சுப்போக, அவங்க பத்திரிக்கையில் தொடர்கதை எழுத முடியுமான்னு கேட்டு ஃபோன் செஞ்சாரு. அதான் இந்தக் கதையைக் கொடுக்கலாமுன்னு நினைக்கறேன். நீ என்ன சொல்ற,” கோப்பினை அவளிடம் நீட்டினான்.
அதுவும் ஹரிமேல் மலர்ந்த காதலை உறுதிப்படுத்திக் கொள்ள அவள் படித்தக் கதைகளுள் ஒன்று!
“அற்புதமான கதை டா! இதைப்பற்றி ஸ்ரீராம்கிட்ட பேசினியா?”
வாரயிதழ்களில் தொடர்கதை பிரசுரிப்பதும் அவன் வளர்ச்சிக்குக் கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு என்று ஸ்ரீராம் மனதார வாழ்த்தியதைக் கூறி அவர் நற்குணத்தை மெச்சினான் ஹரி.
அதைக் கேட்டுக்கொண்டே தாள்களை முன்னும் பின்னுமாகப் புரட்டியவள், “நம்ம முதல் குழந்தைய பிறந்ததுக்கு அப்புறம் தான் கண்ணால பார்த்தோம்; ஆனால் இவன் சிறுக சிறுக வளருரத, வாராவாரம் பார்த்து ரசிக்கப்போறோம் டா,” புத்தகமாய் வெளியிடுவதற்கும், தொடர்கதையாய் வெளியிடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை ஹரியின் பாணியிலேயே ஒப்பிட்டுப் பூரித்தாள் மீரா.
“நான் ஏதோ அன்னைக்கு மனசுல தோணினத சொன்னேன்டி. அதையே வா நெனச்சிட்டு இருப்ப?” என்றவனின் குரலில் பெருமிதம் வழிந்தோடியது.
“எனக்கு என் எழுத்தாளர் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் வேதவாக்கு!” உதட்டைச் சுழித்தவள், கோப்பினை அவன் கையில் திணித்துவிட்டு சமையலறைக்குள் புகுந்தாள்.
தன்னவளின் கண்மூடித்தனமான காதலில் திளைத்தவனாக ஆவிப்பறக்கும் ஏலக்காய் தேநீரை ரசித்துக் குடித்து முடித்தவன், காலி டம்ளருடன் சமையலறைக்குள் வர, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த உருளைக்கிழங்கு மசாலாவையும், உருட்டி வைத்திருந்த சப்பாத்தி மாவையும் கவனித்தான்.
“என் ஒருத்தனுக்கு எதுக்குடி இவ்வளவு செய்யற?” துடுப்பை அவள் கையிலிருந்து பிடுங்கி சப்பாத்தியைத் திருப்பினான் ஹரி.
“ஒருத்தருக்கு மட்டும் தனியா சமைக்க கூடாதுன்னு அம்மா சொல்லுவாங்க டா!” சப்பாத்தியை திரட்டி கொண்டே அவள் பதிலளிக்க,
“இப்படியெல்லாம் காரணம் சொல்லி என்னோட சேர்ந்து சாப்பிடலாமுன்னு பிளான் பண்ணறியா?” கண்சிமிட்டியவாறு துடுப்பினால் செல்லமாக அடித்தான்.
“ஆ…சுடுதுடா!” முகம் சுளித்தவள், “குழந்தைங்க வந்தா கொடு; இல்ல என் நண்பனுக்கு எடுத்துட்டுப் போ!” வழியா இல்லை எனக் கழுத்தை நொடித்தாள்.
“பேசாம உன் மாமியார அழைச்சிட்டு வந்துடறேன். உன் கைப்பக்குவத்துக்கு மயங்குறாங்களான்னு பார்க்கலாமா?” குறும்பாய் அவள் காதில் கிசுகிசுத்தான்.
வெடுக்கென்று அவன் பக்கம் திரும்பி கண்ணை உருட்டியவள், “எழுத்தாளரே! அதெல்லாம் நாங்க சமாளிச்சுடுவோம். எங்களுக்கு நடுவுல மாட்டிக்கிற உங்கப்பாடு தான் திண்டாட்டமாயிடும்!” சவால் விட,
“வாய்! வாய்! கொஞ்சமாவது பயம் இருக்கா!” பொய்கோபம் கொண்டவன், ”டின்னர்தான் என்னோட சாப்பிட வேண்டாமுன்னு சொன்னேன். ஆஃபிஸ்லேந்து வர உனக்கும் பசிக்குமுல்ல…” சாத்தியமான வழி உண்டு என்று காதலாய் முறைத்தான்.
“அப்போ நீ எனக்கு தினமும் ஊட்டிவிடுவியா?” அப்பாவியாக அவள் குழைய,
“ச்சீ போடி! உனக்கு எங்க அம்மாதான் சரி!” எனச் சரணாகதியானான்.
தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் அவனுடன் சுளையாக ஒருமணி நேரம் செலவழித்தவளுக்கு அளவில்லா சந்தோஷம். அன்று மாலை அவனுக்குச் சமைத்துவைத்திருந்த அரிசி உப்புமாவை வெங்காயச் சட்னியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், “அரவிந்தன் இந்த டிரேயினிங் மெட்டீரியல் எல்லாம் கேட்டிருந்தான்,” தோள்பையிலிருந்து ஒரு கவரை எடுத்துத் தந்தாள்.
“இதெல்லாம் எனக்காக தான் கேட்டிருப்பான் மீரா!” அவற்றை ஆராய்ந்தவாறு ஹரி பேச,
“உனக்கு எதுக்கு?” புருவங்களை உயர்த்தினாள் மீரா.
“பதவி உயர்வு சம்பந்தமான பயிற்சி எடுத்துக்கலாமுன்னு நினைக்கறேன்,” ஹரியின் பதிலில் திடுக்கிட்டாள் மீரா.
“புத்தகம் வெளியிடறதுல ஒரு பிடிமானம் வந்ததும் வேலையை விடுறதா சொன்னியே ஹரி,” என்றவளின் குரல் கம்மியது.
அவளிடம் தெளிவாகச் சொல்லவில்லை என்றால் வீணாக வருந்துவாள் என அறிந்தவன், மறுகணமே மடிக்கணினியை உயிர்ப்பித்தான்.
அதில் வங்கியில் வரும் வருமானம், கதை பதிப்பிப்பதற்கான வரவு செலவுகள், மற்றும், வீட்டுச்செலவுகள் என்று கணக்கு விவரங்களைப் பட்டியலிட்டிருந்தவன்,
“நாலு கதை நல்லபடியா விற்பனையானா, நான் உன்கிட்ட வாங்கின பணத்த கொடுத்துட முடியும். ஆனால் கல்யாணம் குடும்பமுன்னு வரப்ப, புத்தகம் வெளியீட்டுல வர வருமானம் மட்டும் போதாது. பாங்க் வேலையைத் தக்க வெச்சுக்கணுமுன்னா அதுக்கேத்தா மாதிரி உழைக்கணும். அதான் அரவிந்தன் கிட்ட டிரேய்னிங்க் மெடிரியல்ஸ் கேட்டேன்,” ஒவ்வொன்றாகச் சுட்டிக்காட்டி விளக்கினான்.
அந்தப் பட்டியலில் குறிப்பிட்டிருந்த செலவுகளை ஆராய்ந்தவள், “இந்த வீட்டு வாடகை, ஃப்ரிஜ் வாங்க ஈ.எம்.ஐ, இதெல்லாம் என்னால தானேடா உனக்கு வீண் செலவு!” வருந்தும் குரலில் கேட்டாள்.
“ஓ கம் ஆன் மீரா!” அவள் தோளினைச் சுற்றி வளைத்தவன், “நீ என் ராஜகுமாரி டி! உனக்காக இது கூடச் செய்யமாட்டேன்னா?” என்றான் காதல் பொங்க.
விழி உயர்த்தி தன்னவனை நோக்கியவள், “அப்படியில்ல ஹரி! நான் கொஞ்சம் சிந்திச்சு இருந்தா, இந்தச் செலவு எல்லாம் குறைச்சிருக்கலாமே!” என்றாள் அக்கறையாக.
“மிஸ்டர் வரதன் கம்பனில இருக்குற மொத்த மாடுலார் கிட்செணும் கூடக் கேளு. வாங்கிப் போட்டு அசத்திடலாம்!” கன்னத்தில் குழி விழச் சிரித்துக் கண்சிமிட்டினான்.
“உன்னை நெனச்சா எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஹரி. ஆனால் எனக்காக உன்னையே நீ வருத்திக்கறியோன்னு தோணுதுடா,” வேலை, பயிற்சி, புத்தக வெளியீடு இப்படி எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்தால், அவன் உடல்நலம் பாதிக்குமோ என்று அஞ்சினாள்.
“முன்னாடி எல்லாம் விரும்பினதை செய்ய முடியலயேன்ற கோபம் வெறுப்ப அத்தனையும் வேலையில காட்டினேன். துணிஞ்சு இறங்கினா எதுவும் சாத்தியமுன்னு நீ எனக்குப் புரியவெச்சுட்ட. இப்போ எனக்கு இதுல ஒரு கஷ்டமும் இல்லடி,” என மென்னகைத்தான்.
அப்போதும் அவள் சமாதானம் ஆகாதவளாக சோகமே உருவாய் முகத்தைத் தொங்கப்போட்டாள்.
“எனக்காகக் காத்துக்கிட்டு இருக்கும் மீராவோட சேர்ந்து வாழணுமுன்ற நினைப்பே, எனக்குத் தேவையான வலிமையையும், உற்சாகத்தையும் கொடுக்கும்…” வாஞ்சையாக உரைத்து அவள் முகத்தைக் கண்பார்க்க நிமிர்த்தியவன்,
“…அதனால தயவுசெய்து உன் மூஞ்சியை ஃப்யூஸ் போன பல்ப் மாதிரி உம்முன்னு வெச்சுக்கிட்டு என்னைக் கஷ்டப்படுத்தாதடி,” என்று அதட்டினான்.
மறுகணமே அவள் இதழ்கள் மென்னகையில் மலர்ந்தன.
“சரி எழுத்தாளரே! ஆனால் இந்த மீரா, ஹரின்ற எழுத்தாளருக்கு மட்டும்தான் காத்துக்கிட்டு இருக்கான்னு நீங்களும் மறந்துடாதீங்க!” அவன் தன் இலட்சியத்திலிருந்து, எதற்காகவும் யாருக்காகவும் பின்வாங்கிவிடக் கூடாது என்று அழுத்திக் கூறினாள்.
‘நீ என்னை எழுத்தாளரே என்று அழைக்க வேண்டுமென்ற ஒரு காரணத்திற்காகவே வாழ்நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருப்பேன்!’ உதடு பிரிக்காத புன்னகையோடு தலையைச் சிலுப்பிக்கொண்டவன்,
“புரியுதுடி! வெற்றியோ தோல்வியோ எழுதிக்கிட்டே இருப்பேன். ஆனால் வெறும் ஜீவிதத்துக்காக மட்டும் எழுதாம, அதை மானசீகமா செய்யணுமுன்னு நினைக்கறேன்,” எனத் தெளிவுபடுத்தினான்.
அவன் பதிலில் நெகிழ்ந்தவள், “சரிடா! உனக்கு ட்ரெயினிங்க்ல ஏதாவது உதவி வேணுமுன்னா சொல்லு!” அக்கறையாகப் பேச,
“எப்படி…” என இழுத்தவன், “எனக்குப் பதிலா நீ போய் எக்ஸாம் எழுதறியா?” அவள் நெற்றியில் முட்டி சீண்டினான்.
“நல்லது சொன்னா நக்கல் செய்யறியா!” முறுக்கிக்கொண்டவள் எழுந்துகொள்ள, அவளை எட்டிப்பிடித்தவன், “உன்னை கேட்காமல் வேற யார கேட்க போறேன்டி?” யாசிக்கும் குரலில் சமாதானம் செய்ய, பெண்பாவையும் மெழுகென உருகிப்போனாள்.
அன்று மாலை வீட்டிற்குத் திரும்பிய மீரா, முன்வாசலில் பத்து அட்டைப் பெட்டிகளைக் கண்டு அன்னையிடம் வினவினாள்.
“அதுவா! நவராத்திரிக்கு பரிசு கொடுக்க, அப்பா கம்பனிலேந்து ஹாட்பேக்ஸ் எடுத்துட்டு வரச் சொன்னேன்!” என்றார் நிர்மலா பெட்டிகளைச் சரிப்பார்த்தவாறு.
“அதான் ஹரி எழுதின புத்தகத்த கொடுக்கலாமுன்னு சொன்னேனே ம்மா!” சண்டைக்குப் பாய்ந்தாள் மீரா.
அவள் வேகத்தை கண்ட நிர்மலா மென்சிரிப்புடன், “ஏன்டி! ஸ்கூல், காலேஜ் படிக்குற பொண்ணுங்களுக்கு எல்லாம் குடும்ப நாவலைப் பரிசா கொடுக்க முடியுமா!” என்றார் குறும்பாக.
பற்களைக் கடித்து அசடுவழிந்தவள், டப்பாவிலிருந்து ஒரு ஹாட்பேக்கை எடுத்துக்கொண்டு நகரந்தாள்.
“யாருக்குடி அது?” நிர்மலா தடுக்க,
“கதை எழுதினவருக்கே புத்தகத்தைப் பரிசா தர முடியுமா?” கண்சிமிட்டி, வாயடைத்து நிற்கும் அன்னையின் கன்னத்தில் முத்தமிட்டுக் கொஞ்சினாள்.
மறுநாள் அந்தச் சிவப்பு ஹாட்பேக்குடன் ஹரி வீட்டிற்குள் நுழைந்தவள், ‘முதல்ல எங்க அப்பா கம்பனி தயாரிச்ச ஹாட்பேக்குல லன்ச் எடுத்துட்டுப் போங்க; அப்புறம் மத்ததெல்லாம் வாங்கித் தருவீங்களாம்… முசுடு எழுத்தாளர்!’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டு பூரித்தாள்.
முக்கால் மணி நேரத்தில் தக்காளி சாதமும் தயிர் பச்சடியும் செய்து முடித்தவள், மறுநாள் அவன் வங்கிக்கு எடுத்துப்போக ஏதுவாக மிளகு குழம்பும் செய்துவைத்தாள்.
ஹரி எந்நேரமும் வந்துவிடுவான் என்ற மிதப்பில் பால்கனியில் வந்தமர்ந்தவளின் கைப்பேசி சிணுங்கியது.
திரையில் ஹரி காலிங்க் எனக் கண்டுகொண்டவள், “சொல்லுடா! எங்க இருக்க?” என்றாள் பெருமூச்சுடன்.
“மீரா! நான் பத்திரிக்கை ஆஃபிஸ்ஸுக்கு வந்திருக்கேன். வேலை முடிய நேரமாகும் போல. எனக்கு வெயிட் பண்ணாத,” அவன் படபடக்க அவள் முகம் ஏமாற்றத்தில் தோய்ந்தது.
எத்தனையோ நாட்கள் அவனைச் சந்திக்காமல் கிளம்பியது உண்டுதான். ஆனால் அன்று ஆசை ஆசையாக அவனுக்காகக் கொண்டு வந்த பரிசுப் பொருளை நேரில் பார்த்துக் கொடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அவளைப் பிய்த்துத் தின்றது.
இயந்திரகதியாக மிளகு குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்தவளுக்கு, திடீரென்று ஒரு யோசனை உதித்தது. தன்னவனை போலவே காதல் கடிதம் எழுதிவைத்தால் என்னவென்று!
அன்று வேலை முடிந்து சாலை நெரிசல்களை எல்லாம் கடந்து ஹரி வீட்டுக்கு வந்து சேர மணி ஒன்பதாகி இருந்தது. பயங்கர பசியுடன் வந்திருந்தவன் நேராகச் சமையலறைக்குள் நுழைய, அந்த சூப்பர் மார்கெட் பை அவன் கண்களை உருத்தியது.
‘நிபந்தனைகள் அறிய, மேலிருந்து கீழாய், ஒவ்வொரு அடுக்காய் திறந்து பார்க்கவும்!’ ஹாட்பேக்கின் மூடியிலிருந்த குறிப்பைப் படித்து, கன்னத்தில் குழிவிழச் சிரித்தான்.
தன்னைச் சீண்டி விளையாடுகிறாள் என யூகித்தவன் முதல் அடுக்கைத் திறக்க, அதில் மற்றொரு துருப்புச் சீட்டு இருந்தது.
‘உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றால், தினமும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடணும்; எப்படி என்று விவரங்கள் அறிய, அடுத்த அடுக்கைத் திறக்கவும்!’
‘முடியலடி உன்னோட!’ தலையைச் சிலுப்பிக்கொண்டே திறந்தான்.
‘மிளகு குழம்பு செஞ்சு ஃப்ரிட்ஜுல வெச்சிருக்கேன். காலையில் சாதம் மட்டும் சூடா வடிச்சு, கலந்து எடுத்துட்டுப் போங்க எழுத்தாளரே! பின் குறிப்புக்கு அடுத்த அடுக்கைத் திறக்கவும்!’
இதற்குமேல் என்ன இருக்குமென்ற யோசனையோடு கடைசி அடுக்கைத் திறந்தான்.
‘இது பரிசுப் பொருள் இல்லை. உங்க உடல் நலம் கருதி, உங்க மாமனார் கம்பனிலேந்து, உங்க அருமை மனைவி கொண்டு வந்த சீதனம்.’ என்று கண்சிமிட்டும் ஒரு ஸ்மையிலியும் வரைந்திருந்தாள்.
அவள் குறும்புத்தனத்தில் பித்தேறியவனாகப் பசியையும் மறந்து அலைபேசியை எடுத்தான். அவள் குரல் கேட்டதும்,
“குறிப்புகள் இவ்வளவுதானா! இல்லை வாட்டர் பாட்டில், ஸ்னேக் பாக்ஸ், ஏதாவது கொண்டுவந்து , அதுலையும் எழுதி வெச்சுருக்கியா?” நமுட்டுச் சிரிப்புடன் கலாய்த்தான்.
“சாப்பிட்டியா டா?” உச்சிகுளிர்ந்தவள் அசடுவழிய,
“எங்க சாப்பிடுறது? வந்ததுலேந்து நீ எழுதிய குறிப்புகள் படிக்கவே நேரம் சரியா இருந்துது,” அவன் பொய்யாகச் சலித்துக்கொள்ள, அந்தப் பக்கத்தில் ஒரு புன்னகை அரும்பியது.
மேலும் சில நிமிடங்கள் அவள் காதலில் நனைந்த பின்னே அவள் சமைத்து வைத்திருந்த தக்காளி சாதத்தை உண்டான்.
வயிறு அவள் கைப்பக்குவத்தில் நிறைய,
மனம் அவள் குறும்புகளில் மிதக்க,
கண்களில் காதலியை நிரப்பிக்கொண்டு உறங்கினான்!
மறுநாள் மாலை, அஞ்சலியும், அரவிந்தனும், ஆறு மணியளவில் ஹரி வீட்டிற்கு வந்தனர். நேரில் சந்தித்துக்கொண்ட பெண்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நலன்விசாரித்துக் கொண்டனர். அஞ்சலி, மீரா கையில் இனிப்பு டப்பா ஒன்றைத் திணித்தாள்.
“ஒரே வாரத்துல உன் பொண்டாட்டியைச் செம்மையா ட்ரெயின் பண்ணிருக்க டா!” மெச்சிய மீரா லட்டு ஒன்றை நண்பன் வாயிலிட்டாள்.
அரவிந்தன் முகம் பெருமிதத்தில் ஜொலிக்க, பெண்கள் இருவரின் சிநேகத்தை வியந்து பார்த்து நின்றான் ஹரி.
“ஹரி! நீயும் பேசாம எங்க கட்சியில சேர்ந்துடு. உன் சைட் ரொம்ப வீக்கா போயிக்கிட்டே இருக்குடா!” கண்கொட்டாமல் நிற்கும் தன்னவனுக்கும் லட்டு ஒன்றை ஊட்டினாள் மீரா.
“நானும் உங்க கட்சிதான் ஹரி. எனக்கும் அவ்வளவா இனிப்பு பிடிக்காது. இவளுக்கும் அரவிந்தனுக்கும் பிடிக்குமுன்னு தான் வாங்கிட்டு வந்தேன்,” என அஞ்சலி மீராவை உரிமையோடு ஒருமையில் அழைத்துப் பேச, அஞ்சலியும் தங்களுக்குள் ஒருவராக ஒன்றிவிட்டாள் என நெகிழ்ந்தான் ஹரி.
“மகேஷும் மைதிலியும் எங்க?” என்ற அரவிந்தனின் விழிகள் வரவேற்பறையை அளவிட,
“அவங்க, மைதிலி தோழியோட ரிசெப்ஷனுக்கு போயிருக்காங்க டா,” தகவல் சொன்னான் ஹரி.
வந்த வேலையை முதலில் முடிக்கலாம் என்று யோசனை சொன்ன அரவிந்தன், கதை புத்தகத்தின் பிரதிகளைக் கணக்கிட்டுப் பிரித்துவைத்தான்.
“கீதா வீட்டிற்குக் கொடுக்க வேண்டியதையும் தாடா!” என்றவனை கேள்வியாகப் பார்த்தான் ஹரி.
“அஞ்சலி கார் எடுத்துட்டு வந்திருக்கா; நாளைக்கு கீதா குழந்தையைப் பார்க்கப் போறோம். அப்படியே அவங்க வீட்டுல கொடுத்திடறோம்,” அரவிந்தன் சொன்னதும், அஞ்சலியின் மனநிலையில் நல்ல மாற்றம் இருக்கிறது என்று உணர்ந்தான் ஹரி.
“ஹரி! உங்ககிட்ட கூடுதல் பிரதிகள் இருந்தால் எனக்கு ஒரு இருபத்து ஐந்து பிரதிகள் தாங்க. நானும் என் பள்ளி ஆசிரியர்களுக்கு விற்க முயற்சி செய்யறேன்,” உரிமையோடு பேசி, மேலும் அவனை வியப்பில் ஆழ்த்தினாள் அஞ்சலி.
“புருஷனும் பொண்டாட்டியும் இப்படிப் போட்டிப் போட்டுக்கிட்டு வியாபாரம் செய்யறுத்துக்குப் பதிலா, பேசாமல் உங்க கல்யாணதுக்கு வரவங்களுக்கு ரிடர்ன் கிஃப்டா கொடுத்துடுங்க,” இதழோரம் பூத்த புன்னகையுடன் ஹரி கிண்டல் செய்ய, அஞ்சலியின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“நண்பா! அதுக்கு இன்னும் நாலு மாசம் இருக்குடா. அதுக்குள்ள உன் நாவல் பிரபலமாகி, எங்க கல்யாணத்துக்கு வர உன் விசிறிகள், உன்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்க வரிசையில் வந்து நிப்பாங்க,” நண்பனின் தோளில் தட்டினான் அரவிந்தன்.
“நீ என் உயிர் தோழன் தான்டா! அதுக்காக இவ்வளவு மிகைப்படுத்தியா பேசுவ?” ஹரி சிரிக்க,
“ஏன்! ஏன்! ஏன்! அரவிந்த் சொன்னதுல என்ன தப்பு; கண்டிப்பா நடக்கும் பாரு,” அதிகாரமாக இடைபுகுந்த மீரா அவர்களைச் சாப்பிட அழைத்தாள்.
“என்னடி சமைச்சிருக்க?” அரவிந்தன் பதார்த்தங்களைத் திறந்து பார்க்க,
“உனக்குப் பிடிச்ச சப்பாத்தி குருமாவும், ராஜ்மா சாவலும் டா!” என்றாள் மீரா.
“அட்டகாசம்! நார்த் இந்தியன் மீல்ஸுன்னு சொல்லு!” சாப்பிட ஆயத்தமானான் அரவிந்தன்.
ராஜ்மாவும் சாதமும் ஒன்றின் மேல் ஒன்று படாத வண்ணம் அஞ்சலி கொறிக்க,
“இப்படிச் சாப்பிட்டா, உனக்கு மீரா கைப்பக்குவம் எப்படித் தெரியும்?” என்ற அரவிந்தன் இரண்டையும் கலந்து வலுக்கட்டாயமாக அவளுக்கு ஊட்டிவிட்டான்.
“எனக்கு ஊட்டிவிடணுமுன்னு உங்களுக்கு ஆசை; அதுக்கு எதுக்கு மீராவ இழுக்குறீங்க!” மென்றுகொண்டே தன்னவனைக் கலாய்த்தவள், மீரா பக்கம் திரும்பி,
“நீ சமைச்சத எப்படிச் சாப்பிட்டாலும் ருசியா இருக்கு மீரா!” எனப் பாராட்டினாள்.
மிராவும் மென்னகையுடன் தலையசைத்தாள்.
அவர்கள் அன்பு பரிமாற்றத்தைப் பார்த்த ஹரிக்கு, ஊட்டிவிடச் சொல்லி மீரா ஆசையாகக் கேட்டது நினைவுக்கு வந்தது. ஏக்கம் வழியும் தன்னவளின் முகத்தைத் தர்மசங்கடத்துடன் ஏறிட்டான்.
“அதுயென்ன ஹரிக்கு மட்டும் தினமும் சமைச்சு டப்பா கட்டித் தர? எனக்கு தனியா லன்ச் கொண்டுவந்த காலம் எல்லாம் மறந்து போச்சா?” அரவிந்தனின் அதட்டலில் இருவரும் சுயத்திற்கு வந்தனர்.
உரிமை சண்டை போடும் அவன் தோரணையில் அன்று மைதிலி சொன்ன அறிவுரை நினைவுக்கு வர, “உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா டா; இனி அவ தான் உனக்கு வேண்டியதை எல்லாம் செஞ்சு தருவா,” மழுப்பிய மீரா, அஞ்சலியைப் பார்த்துக் கண்சிமிட்டினாள்.
“இன்னைக்கு நான் கொண்டு போன மிளகு குழம்பு சாதத்தில், பாதிக்கும் மேல இவன்தான் சாப்பிட்டான்!” புகார் வாசித்தான் ஹரி.
“ஒண்ணு நல்லா புரிஞ்சுக்கோ மீரா! நம்ம வாழ்க்கையில் புது உறவுகள் வந்தாலும், நமக்குள்ள இருக்கும் நட்பு மட்டும் எப்பவும் மாறாது! அதனால நீ எனக்குப் பிடிச்சத சமைக்குறப்போ கண்டிப்பா அனுப்பி வைக்குற!” தீவிரக்குரலில் மூவருக்கும் பதிலளித்தான் அரவிந்தன்.
விளையாட்டு விபரீதமாகிவிடுமோ என ஹரியும் மீராவும் ஒருவரை ஒருவர் ஏறிட்டுத் தவித்தனர்.
ஆனால் அஞ்சலியோ சிரித்த முகத்தோடு, “அரவிந்தன் சொல்றது சரிதான் மீரா. அவர் என்கிட்ட சொன்ன முதல் விஷயமும் இதுதான்!
நீ அவர் காதல ஏத்துக்காததுனால, உங்களுக்குள்ள இருக்கும் நட்பு எந்த விதத்திலும் மாறலன்னு அழுத்திச் சொல்லி, நானும் எந்தச் சூழ்நிலையிலும் உங்க நட்பை தப்பா புரிஞ்சுக்கக் கூடாதுன்னு தீர்மானமா சொன்னாரு!” என்றாள்.
அதைக்கேட்ட ஹரிக்குத் தான் திடுக்கிட்டது.
“என்னடா அரவிந்தா இது! என்கிட்ட சொன்னா மாதிரியே அஞ்சலிகிட்டயும் சொல்லியிருக்க? அறிமுகமில்லாத பெண்கிட்ட முதல் முதல்லா பேசும்போது இப்படியா கண்டீஷன் போடுவ?” நண்பனை கண்டித்தான்.
“அட, நீங்க வேற ஹரி! அவர் அப்படிப் பேசினதைக் கேட்டுத்தான், எனக்கு அவர ரொம்பப் பிடிச்சுபோச்சு. ஒருத்தர் இவ்வளவு வெளிப்படையா பேச முடியுமான்னு பிரமிப்பா பார்த்தேன்,” பெருமிதம் கொண்டாள் அஞ்சலி.
அஞ்சலியின் உற்சாகத்தைக் கவனித்த மீரா, “இவ்வளவு அன்பை உள்ள வெச்சுகிட்டுத்தான் என் நண்பன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னியா?” வாஞ்சையாக அவள் கன்னத்தைக் கிள்ளினாள்.
“நல்லா கேளு மீரா!” என்ற அரவிந்தனின் விழிகள் தன்னவளை ஊடுருவியது.
பதில்சொல்ல முடியாமல் அஞ்சலி இமைகள் படபடக்க தலைதாழ்த்த,
“இவங்க ரெண்டு பேரும் எப்பவுமே இப்படித்தான் அஞ்சலி. வாதிடுறாங்களேன்னு நெனச்சு பரிதாபப்பட்டு சமரசம் பண்ணா, நம்மள கேனையனாக்கி, இவங்க ஒண்ணு சேர்ந்துப்பாங்க… இதோ இந்த மாதிரி!” இருபுறம் அமர்ந்திருந்த நண்பர்களின் காதுகளை ஹரி திருக, வாய்விட்டுச் சிரித்தாள் அஞ்சலி.
கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் இடையே உண்டு முடித்தவர்கள், வீட்டிற்குப் புறப்பட,
“மீரா! உங்க வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டிய புத்தகங்களையும் என்கிட்ட கொடு. நாளைக்கு, நானும் அஞ்சலியும் உங்க வீட்டுக்கு வரோம். உங்க அப்பா, அம்மாவுக்கும் அஞ்சலியை அறிமுகம் செஞ்சு வச்சா மாதிரி இருக்கும்,” என்றான் அரவிந்தன்.
மீராவும் மறுபேச்சின்றி சம்மதம் தெரிவித்தாள்.
முன்வாசலுக்கு வந்த அரவிந்தன், பெட்டிகளை நேர்த்தியாக அடுக்கி வைத்தவாறு, “சனி, ஞாயிறு, முழுக்க முழுக்க என்னோட தான் நேரம் செலவிடற. ஏதாவது சாக்கு சொன்ன… இருக்கு உனக்கு…” அஞ்சலியின் காதுகளில் கிசுகிசுத்தான்.
“அப்படியே வார நாட்களுல பார்க்காம, பேசாம இருக்குற மாதிரி மிரட்டுறத பாரு!” நறுக்கென்று அவன் கன்னத்தைக் கிள்ளி, ஓட்டுனர் பக்கம் ஏறிக்கொண்டாள்.
அவனும் அவள் கிள்ளியது வலித்தது போல் கன்னத்தைத் தேய்த்துக் கொண்டே மறுபக்கம் வந்து,
“நாளைக்கு பாங்குல பார்க்கலாம் டா ஹரி!” கூற, அஞ்சலியும் அவர்களிடம், பிறகு சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு, காரை உயிர்ப்பித்தாள்.
புது ஜோடிகளை சுமந்துகொண்டு மகிழுந்து சாலையில் கலக்க, மென்னகையுடன் சன்னியை உயிர்ப்பித்தாள் மீரா.
காதலை கூடச் சொல்லாமல், நிபந்தனைகள் மட்டுமே போடுகிறேனே எனக் குற்றவுணர்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த ஹரி, அவள் கைகளை இறுகப் பிடித்து, “கொஞ்ச நாள் வெயிட் பண்னுடி! ஐ பிராமிஸ்… அப்புறம் உனக்குச் சந்தோஷத்தைத் தவிர வேறெதுவும் தரமாட்டேன்,” வருந்தினான்.
வருந்தும் அவன் கண் பார்த்தவள், “எழுத்தாளரே! யாரு இப்போ சந்தோஷமா இல்லன்னு சொன்னாங்க? அவங்க ஆகாயத்துல பறக்குறாங்க; நம்ம தண்ணியில மிதக்குறோம்; அவ்வளவுதான் வித்தியாசம்!” நிதானமாக காதலித்தாலும், அதிலும் ஒரு சுகம் என்று வெகு இயல்பாகக் கண்சிமிட்டி, “திங்கட்கிழமை பார்க்கலாம்!” என்று சொல்லிப் புறப்பட்டாள்.
அவள் விட்டுக்கொடுத்துப் போகும் ஒவ்வொரு முறையும், அவளைத் தன்னருகிலேயே வைத்துகொள்ள வேண்டும் என்ற ஏக்கம், அவனை வாட்டியெடுத்தது.
கண்டதும் காதலாக உருகும் ஜோடிப் புறாக்களை,
கண்டும் காணாமல் உள்ளுக்குள் மறுகும் பெண்பாவை,
கண் கண்ட காதலன் கண்ணியன் அவன் கைகோத்து,
கண்ணூஞ்சல் ஆடும் நாள் என்றோ -பதில்சொல்லும்,
பெற்றவர்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here