90 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
புத்தகத்தின் பிரதிகளை தோழியின் வீட்டிற்கு எடுத்துவந்த அரவிந்தனின் உற்சாகம் பத்தே நிமிடத்தில் பஸ்பமாகி போனது.
‘அவ கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லியிருந்தா கூட வருத்த பட்டிருக்கமாட்டேன்! ஆனால் அவளுக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாதவன தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு பிடிவாதம் பிடிக்குறாளே! அவ முட்டாள்தனத்த என்னன்னு சொல்றது…’ தலையில் அடித்துக்கொண்டு புலம்பிய வரதனின் குத்தல் பேச்சில் உறைந்து போயிருந்தான் அரவிந்தன்.
அரவிந்தன் அஞ்சலி ஜோடிப் பொருத்தத்தைக் கண்டதும், தன் மகளின் திருமண வாழ்க்கையை எண்ணி வருந்தினார் வரதன். அரவிந்தன் தன் மகளுக்கு நெருங்கிய நண்பணாக இருந்தபோதும் அவளைச் சரியான பாதையில் வழிநடத்த தவறிவிட்டான் எனக் கோபாவேசமாகக் குற்றம்சாட்டிவிட்டு வெளியேறி இருந்தார் மனிதர்.
அப்பாவின் விருப்பமின்மையைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அரவிந்தனை வீட்டிற்கு அழைத்திருந்தவள், நண்பனிடம் எதைச் சொல்வது, எதை விடுவது என்று தெரியாமல் திண்டாடினாள். சிலையாய் அருகிலிருந்தவனை தொடவும் தயங்கினாள் அஞ்சலி. யார் பக்கம் பேசுவது என்று புரியாமல் நண்பர்களுக்குத் தனிமையைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் நிர்மலா.
கோபமா, வெறுப்பா, ஆத்திரமா, ஏமாற்றமா என்று வகைப்படுத்த முடியாத அளவுக்குக் குழம்பித் தவித்த அரவிந்தனின் மனம் எரிமலையாய் கொப்பளித்தது.
“அரவிந்தா! அப்பாவுக்கு எங்க காதல்ல உடன்பாடு இல்லடா!” அவன் முன் மண்டியிட்டு அமர்ந்த மீரா மெல்லிய குரலில் தொடங்க, அவள் கைகளை உதறிவிட்டு வெடுக்கென்று எழுந்தவன்,
“கிளம்பலாம் அஞ்சலி!” பெருங்குரலில் கர்ஜித்து வெளியேறினான்.
“நான் சொல்றத கேளுடா! ஹரி தெளிவா சிந்திச்சு நிலைமையைச் சமாளிச்சுட்டு வரான். அவன்கிட்ட போய் எதுவும் கேட்டுடாத… ப்ளீஸ்!” கெஞ்சிக்கொண்டே வாசல்வரை அவர்களைப் பின்தொடர்ந்தாள் மீரா.
“எதையும் சொல்லக் கூடாதுன்னு நெனச்ச அவன்கிட்ட எனக்கு என்ன பேச்சு? உங்க விஷயத்துல்ல தலையிட நான் யாரு?” பார்வையால் வீழ்த்தியவன் வண்டியை உயிர்ப்பித்தான்.
மனம் தளர வேண்டாமென மீராவுக்குக் கண்ணசைத்தபடி அமைதியாக வண்டியில் ஏறிக்கொண்டாள் அஞ்சலி.
மீரா வீட்டில் நடந்ததை எல்லாம் கேட்ட ஹரிக்குத் திடுக்கிட்டது. நண்பனிடன் அனைத்தையும் சொல்லி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இருவரும் முடிவு செய்தனர்.
ஆனால் இரண்டு நாட்களாகியும் அரவிந்தன் கோபம் துளிக்கூடக் குறையவில்லை. ஹரியும், மீராவும் எத்தனையோ முறை தொடர்பு கொள்ள முயன்றபோதும், அவர்களிடம் அவன் பேசவில்லை. வங்கியிலும் ஹரிக்குப் பேச வாய்ப்பு கொடுக்காமல் தள்ளியே இருந்தான். பிரச்சனையை ஆறப்போட நினைத்த ஹரி பொறுமை காக்க, அரவிந்தனின் மனநிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் நாட்கள் நகர்ந்தது தான் மிச்சம்.
அரவிந்தன் பேச்சையும் மீறி மீராவை அழைத்துப் பேசிய அஞ்சலி, அவர்கள் காதலில் இத்தனை இடையூறுகளா என்று அதிர்ச்சி அடைந்தாள்.
“கவலப்படாத மீரா! நாளைக்கு மகேஷ் வீட்டு நவராத்திரிக்கு வரப்போகுறோம். நான் சொல்றமாதிரி செய்,” என்று ஒரு திட்டத்தை விளக்க, மீராவும் சம்மதித்தாள்.
“என்னடி இன்னும் கிளம்பாம இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்க?” ஆறு மணியளவில் வீடு திரும்பிய ஹரி அதட்டினான்.
“ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கேனே… அது கூடவா தெரியல?” சிடுசிடுத்தவள், மைதிலி நவாரத்திரிக்கு அழைத்திருப்பதாக அறிவித்தாள்.
மிதமான அலங்காரத்துடன் புடைவை கட்டியிருக்கும் தேவதையை அப்போதுதான் கவனித்தான் ஹரி. சரி என்று மட்டும் தலையசைத்துவிட்டு அவன் நகர,
‘வாய்விட்டுச் சொல்லியும் ரசிக்காம போகுறத பாரு… முசுடு எழுத்தாளார்!’ முணுமுணுத்தவள் தேநீர் தயாரிக்க நகர்ந்தாள்.
சில நிமிடங்களில் அஞ்சலியிடமிருந்து குறுஞ்செய்தி வர, ஓடிவந்து வாசற்கதவைத் திறந்தாள் மீரா.
அதேசமயத்தில் மாடியேறி வந்திருந்த அஞ்சலி உரிமையோடு ஹரி வீட்டிற்குள் நுழைந்தாள்.
“அஞ்சலி! நம்ம மகேஷ் வீட்டுக்கு வந்திருக்கோம்!” அரவிந்தன் கறாராக நினைவூட்ட,
“அட! மீரா போட்ட டீ வாசனை மூக்கைத் துளைக்குதே!” வாசம் பிடித்தவாறு அவனையும் உள்ளே இழுத்தாள்.
அரவிந்தன் அவள் பிடியிலிருந்து விலக எத்தனிக்க, பொறியில் மாட்டிய எலி தப்பித்துவிடுமோ என்பதுபோல விரைந்தோடி வாசற்கதவைத் தாளிட்டாள் மீரா.
பெண்கள் முன்கூட்டியே கலந்துபேசி ஏதோ செய்கிறார்கள் என உணர்ந்த ஹரி, முகத்தைத் தொங்கப் போட்டு நிற்கும் நண்பன் அருகில் நடந்தான்.
“இன்னும் எத்தனை நாளைக்கு என்கிட்ட பேசாம இருக்கப்போகுற?” உரிமையோடு அரவிந்தன் தோளினை வளைத்து அரவணைத்தான் ஹரி.
வெடுக்கென்று தள்ளிவந்து உம்மென்று நின்ற அரவிந்தனின் முகமேந்திய அஞ்சலி, “எல்லார் மனசையும் வசீகரிக்குற அளவுக்குப் பேசிப் பழகவேண்டியது; கோபம் வந்தா பேசாம காயவிட வேண்டியது! இதே வேலைப்பா உங்களுக்கு?” அதட்ட,
“நான்தான் அவங்கள, என் நண்பன், என் தோழின்னு உரிமையா சொல்லிட்டு இருக்கேன்; ஆனால் அவங்க என்னை அப்படி நினைக்கல அஞ்சலி,” விட்டால் அழுதுவிடுவான் என்ற ரீதியில் வெறுத்துப் பேசினான் அரவிந்தன்.
“நீங்களும் தானே என்னைப் பற்றி உங்க நண்பர்கள் கிட்ட எதுவும் சொல்லாம மறைச்சீங்க… உங்களுக்கு ஒரு நியாயம்; அவங்களுக்கு ஒரு நியாயமா?” மடக்கினாள் அஞ்சலி.
அவர்களுக்காகப் பரிந்து பேசும் தன்னவளைப் புருவங்கள் உயர்த்தி ஏறிட்ட அரவிந்தன், “மறைக்கல! அவசியமில்லன்னு தான் சொல்லல;” அழுத்திக்கூறி,
“உன் பிரச்சனையப் பற்றி சொன்னாலும் அவங்களால எந்தத் தீர்வும் கொடுத்திருக்க முடியாது. ஆனால் அவங்க விஷயத்துல என்னால ஏதாவது செஞ்சியிருக்க முடியும்!” இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி,
“உனக்குப் பணம் தேவைப்பட்டிருந்தால் நான் ஒரு பர்ஸ்னல் லோன் ஏற்பாடு செய்திருப்பேனே ஹரி!” ஆற்றாமையில் வினவினான்.
“நான் லோன் எடுக்கக் கூடாதுன்னு அடம்பிடிச்சதே இவதான் டா!” மீராவைப் பார்வையால் வீழ்த்தினான் ஹரி.
அரவிந்தனின் அனல்பார்வை மீரா பக்கம் திரும்பியது.
“பணம் கொடுக்கறத பற்றி பேசுறதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு என் காதலில் உடன்பாடில்ல டா,” கண்ணீர் மல்க உரைத்தாள்.
“ஏன் ஏன்? என் நண்பனுக்கு என்ன குறைச்சல். அப்படியென்ன குறை கண்டுபிடிச்சாராமா அவரு? நானே அங்கிள்கிட்ட பேசுறேன் மீரா!” பொங்கியவன், நண்பனைத் தோளோடு சேர்த்து வளைத்தான்.
அவன் பாசப் பரிமாற்றங்களைப் பார்ப்பவர்களுக்கு, இவனா இத்தனை நாட்கள் பேசாமல் இருந்தான் எனத் தோன்றும்!
“நீ இப்படி உணர்ச்சிவசப்படுவன்னு தெரிஞ்சுதான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன்டா அரவிந்தா!” செல்லமாகக் கண்டித்த ஹரி,
“அவருக்கு என்னைப்பற்றி அதிகம் தெரியாததுனால தான் அப்படி நடந்துக்கிட்டாரு. எனக்காக நீ போய் பேசி உங்களுக்குள்ள இருக்குற நல்லுறவைக் கெடுத்துக்காத,” மென்மையாகப் புரியவைத்தான்.
“ஹரி பதில்சொன்ன விதத்துல மனுஷன் ஒரு வார்த்தை திருப்பிப் பேச முடியல தெரியுமா?” தன்னவனின் தோளில் பெருமிதம் பொங்க இடித்தவள், “என் ஹரி திறமை இந்த உலகம் அடையாளம் கண்டுக்கும் போது, அவரும் புரிஞ்சுப்பாரு!” நம்பிக்கையுடன் பேச, ஹரிக்கு மெய்சிலிர்த்துப் போனது.
நண்பர்களின் உறுதியில் அரவிந்தன் மனமும் லேசானது.
“சரி! சரி! நானும் என் நண்பனும் பேசி எத்தனை நாளாச்சு!” நண்பனுடன் சோஃபாவில் அமர்ந்துகொண்டவன், “ஸ்வீட்டோட கொண்டாடலாம்,” என்றான்.
“அப்போ என்னோட பேசாததைப் பற்றி உனக்கு ஒரு ஃபீலிங்கும் இல்லையா?” கண்கள் சுருக்கி சண்டையிட்டாள் மீரா.
“இருக்குடி!” இதழோர சிரிப்புடன், அவளையும் மறுபுறம் அமர்த்திக்கொள்ள, நண்பர்கள் ஒன்று சேர்ந்ததை பார்த்து, அஞ்சலியும் நெகிழ்ந்து போனாள்.
நால்வருக்கும் பருக ஏலக்காய் டீ எடுத்துவந்தாள் மீரா.
“ஸ்வீட் கேட்டா டீ எடுத்துட்டு வர?” அவள் தலையில் செல்லமாகத் தட்டினான் அரவிந்தன்.
வீட்டில் கைவசம் இனிப்பு பலகாரம் எதுவுமில்லை என்றவள் மகேஷ் வீட்டு நவராத்திரி விருந்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் எனக் கூறி, புறப்படச் சொன்னாள்.
“ஆளவிடுடி! அங்க ஒரே லேடீஸ் கூட்டமா இருக்கும்,” தட்டிக்கழித்தவன், ஹரி பக்கம் திரும்பி, “இதுல இவங்க பஜனை பண்ணறேன்னு வேற மொக்கை போடுவாங்கடா!” எனச் சலித்துக்கொண்டான்.
ஹரியும் அவனுக்கு ஒத்தூத, உதட்டைச் சுழித்து அழகு காட்டிய பெண்கள் வாசலை நோக்கி நகர்ந்தனர்.
“அப்படியே மைதிலி பண்ண ஸ்பெஷல் சாப்பாடு, ஸ்வீட் எல்லாத்தையும் மகேஷ்கிட்ட கொடுத்து அனுப்பு.” திடீர் பேச்சுலர் பார்ட்டிக்கு வழிவகுத்தான் அரவிந்தன்.
திட்டத்தை அறிந்த மகேஷ் உற்சாகமாய் கிளம்பினான். மைதிலியோ, சாப்பாடோடு சேர்த்து குழந்தைகளையும் அனுப்பிவிட, வயதில் வளர்ந்த பிள்ளைகள், சிறுவர்களோடு பரமபதம் விளையாட வேண்டியதாயிற்று.
மைதிலி வீட்டிலிருந்த பிரமண்டாமான கொலுவை கண்டுகளித்தனர் இருவரும். மைதிலியிம், ராணியும், ஒரே இடத்தில் கொலு வைக்கலாம் என்று முடிவு செய்ய, இருவரிடமும் இருந்த பொம்மைகளைச் சேர்த்து மொத்தமாக பதினோறு படிகள் வைத்திருந்தனர்.
பாரம்பரியமான கடவுள் சிலைகளிலிருந்து, கிரிக்கெட், திருவிழா செட் போன்ற காலத்திற்கு ஏற்ப நவீன பொம்மைகள் அத்தனையும் கொண்ட அந்த கொலுவில், எது இல்லை என்றுதான் கேட்கவேண்டும் போல இருந்தது.
கீழ் வீட்டில் வசிக்கும் கணவரின் நெருங்கிய நண்பர் எழுதிய கதை புத்தகம் எனப் பெருமிதத்துடன் வந்தவர்கள் அனைவருக்கும் தாம்பூலம் தந்தாள் மைதிலி. அதன் உபயத்தால் ஹரியின் தரிசனத்தைக் காணும் ஆவலில், விடைப்பெற்ற அனைவரும் அவன் குடியிருந்த பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டு தான் மாடி இறங்கினர்.
இரண்டு நாட்களுக்குப் பின் பெண்கள் கூட்டணி கீதா வீட்டில் களைக்கட்டியது.
கீதாவின் கைவண்ணத்தில் நிரம்பி வழிந்த மூன்று படி நிறைய பொம்மைகள் ஒவ்வொன்றையும் ரசித்த அஞ்சலி. “பார்பி பொம்மைக்கு எவ்வளவு அழகா மடிசாரு கட்டி விட்டிருக்க கீதா,” எனப் பிரமித்தாள்.
அதேசமயத்தில் அவள் கையில் துயில் கொண்டிருந்த குழந்தை சிணுங்க, “என்ன வேணும் சஹானா பாப்பாவுக்கு?” என்று முகத்தோடு முட்டி செல்லம் கொஞ்சினாள் அஞ்சலி.
குழந்தையும் அவள் குரலில் மயங்கி, சோம்பல் முறித்து, பொக்கை வாய் விரிய இளித்தாள்.
‘எத்தனை மாற்றம் இவளிடம்’ என்று அஞ்சலியை வியப்பாய் பார்த்த மீரா, அப்போது தான் உணர்ந்தாள், அன்று கீதாவிடன் குழந்தையின் பெயரைக் கூடக் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை என்று!
குழந்தை அஞ்சலியின் கதகதப்பில் சொகுசாக உறங்க, மீராவும் மைதிலியும், கீதாவுக்கு உதவியாய் வந்தவர்களை கவனித்தனர். சுண்டல், புட்டு, மஞ்சள், குங்குமத்துடன் சேர்த்து நண்பனின் புத்தகத்தைத் தந்து அவன் திறனை ஓயாமல் புகழாரம் பாடிக்கொண்டிருந்தாள் கீதா. பின் அட்டையில் இருந்த ஹரியின் நிழற்படத்தை காட்டியும், புத்தகத்தில் இணைத்திருந்த படிவங்களை காட்டியும் பூரித்தாள். வந்தவர்களும் அவசியம் படித்துப் பதில் போடுவதாகச் சொல்லி, புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்கும் அவளின் எண்ணத்தை பாராட்டினர்.
தோழிகள் ஹரியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்ததைக் கவனித்த மீராவுக்கு, தன் வீட்டிற்கு வந்த விருந்தாளிகளிடம் ‘அவன் என்னவன்!’ என்று உரக்கச் சொல்லவேண்டும் என ஏக்கம் தொண்டையை அடைத்தது. ஆனால் பார்வையிலேயே வெறுப்பை உமிழும் தந்தை முன் அவனை நண்பன் எனக் கூறுவதே பெரும்பாடாக இருந்தது அவளுக்கு.
இந்த நிலைமை என்று மாறுமோ எனப் பரிதவித்துப் போனாள் பாவை.
இதற்கிடையில் ஹரியின் புத்தகங்கள், பொது இடங்களில் விற்க தொடங்கின. விற்பனைகள் நல்லவிதமாக நடக்கிறது என ஸ்ரீராம் பகிர்ந்த நற்செய்தி அவனுக்கு நம்பிக்கையூட்டியது.
அரவிந்தன் தன்னிடமிருந்த நூறு பிரதிகளை வங்கிக்கு எடுத்துச் சென்றான். ஊழியர்கள் அதிகம் புழங்கும் ஒரு பகுதியில் மேஜை ஒன்று அமைத்து, புத்தகங்களை நேர்த்தியாக அடுக்கி, அதனருகில் பூட்டப்பட்ட இரண்டு பெட்டிகளை வைத்து அனைவரையும் அழைத்தான்.
“நீங்க எல்லாரும் ஏற்கனவே நம்ம ஹரியை ஒரு திறமைசாலியா, கடின உழைப்பாளியா, உதவும் மனப்பாங்கு உடையவனா பார்த்துருப்பீங்க!” அவன் தொடங்கவும்,
‘இவனை விட்டால் நாள் முழுக்க புகழ்ந்துகிட்டே இருப்பான்!” வாய்க்குள் சிரித்துக்கொண்டான் ஹரி.
“உங்களுக்குத் தெரியாத இன்னொரு திறமையும் அவனுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கு!” புதிர்போட்டவன் இடைநிறுத்த, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு மெல்லிய கிசுகிசுப்பு சப்தம் பரவியது.
அதை உளமார ரசித்துப் புன்னகைத்தவன், “நம்ம ஹரி ஒரு மிகச்சிறந்த எழுத்தாளனும் கூட! அவன் முதல் கதையான ‘தெவிட்டாத இன்பம்’ புத்தகமா வெளியிடப்பட்டிருக்கு,” என்றவனின் கரம் மேஜையைச் சுட்டிக்காட்ட, அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தது.
நன்றிகளை உரைத்த ஹரி, அவன் எழுத்துப்பயணம் பற்றி அவர்கள் தொடுத்த கேள்விகளுக்குப் பதில்சொல்லி முடித்ததும் அரவிந்தன் தொடர்ந்து பேசினான்.
“பணம் ஒரு பிரச்சனை இல்ல! நீங்க படிக்க விரும்பினால் பிரதிகளை இலவசமா கூட எடுத்துட்டுப் போலாம். நம்ம நண்பனுக்கு நீங்க கொடுக்கற உற்சாகம்தான் முக்கியம்!” என்றதும், ஹரி அவனைக் கேள்வியாக ஏறிட்டான்.
நண்பனின் விழிமொழிகளைக் கண்டும் காணாமல் ஊழியர்களுடன் பேசிக்கொண்டிருந்தான் அரவிந்தன். அதில் ஒருவர், இரண்டு பெட்டிகள் எதற்கு என்று வினவினார்.
ஒன்று, விருப்பமுள்ளவர்கள் புத்தகத்தின் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும், மற்றொன்று, புத்தகத்தில் இணைத்திருக்கும் படிவங்களைப் பூர்த்தி செய்து போடுவதற்கும் என விளக்க, அவர்களும் பேருவகையுடன் வாழ்த்துக்கூறி விடைப்பெற்றனர்.
“எதுக்குடா புத்தகங்களை இலவசமா எடுத்துக்கச் சொன்ன? அது உனக்கு வீண் செலவில்லையா?” தனிமையில் சிக்கிய நண்பனைக் கடிந்தான் ஹரி.
“விளம்பரம் நண்பா! மார்கெடிங்க் ஸ்ட்ராடெஜி!” கண்சிமிட்டி, கலந்துரையாடலுக்கு நேரமாகிறது என நழுவினான் அரவிந்தன்.
இவன் திட்டம்தான் என்னவென்று குழம்பி நின்றான் ஹரி.
அதிகார துஷ்பிரயோகம் செய்து யாரையும் பணம் செலுத்தச் சொல்லிக் கட்டாயப்படுத்தாமல், அதேசமயத்தில் நண்பனின் திறமையை எடுத்துரைக்க பணம் ஒரு தடையாகவும் இருக்கக்கூடாது என்று யோசித்து, அவன் அப்படிச் செய்தான் என்று, பாவம் ஹரிக்குத் தெரியவில்லை!
அதுதான் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்த, அரவிந்தன் ஸ்ட்ராடெஜி!!!
அன்று நவராத்திரியின் ஒன்பதாவது நாள். சரஸ்வதி தேவியின் படத்தை மையப்பகுதியில் வைத்து, புஜைக்குத் தேவையான அலங்காரங்களைச் செய்துகொண்டிருந்தார் நிர்மலா. வாசலில் கோலமிட்டு, வீடெங்கும் சந்தனம், குங்குமம் பொட்டு வைத்துக் கொண்டிருந்த மீராவின் சிந்தனை எல்லாம், மாலையில் குடும்பத்துடன் வரச்சொல்லி அழைத்திருக்கும் அரவிந்தன் வீட்டிற்கு, அம்மாவை மட்டுமாவது அழைத்துச் சென்றால் நன்றாக இருக்குமே என்ற ஆசையில் கரைந்திருந்தது.
அப்பாவின் மடிக்கணினி, காசோலை புத்தகம், சில அலுவலக பத்திரங்களைப் பூஜை அறைக்கு எடுத்து வந்து அடுக்கியவள், “அம்மா சாயங்காலம், அரவிந்த் அம்மா, உன்னையும் அவசியம் அவங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரணுமுன்னு சொல்லியிருக்காங்க,” மெல்லிய குரலில் அறிவித்தாள்.
“போய் உன்னோட பாங்க் பாஸ் புக், தம்புரா, புத்தகங்கள், வண்டிச்சாவி எல்லாம் எடுத்துட்டு வா,” உத்தரவிட்டார் நிர்மலா.
ஐந்து நிமிடத்தில் அவற்றை எடுத்துவந்து அவள் அடுக்க, “எல்லாம் தனித்தனியா சொல்லணுமா? ஹரி எழுதின புத்தகத்தோட பிரதி எங்க?” கண்டும் காணாமல் அதட்டினார் நிர்மலா. பனித்த கண்களுடன் மின்னல் வேகத்தில் சென்று திரும்பியவள், அன்னையைப் பின்னாலிருந்து கட்டியணைத்தாள்.
“உன் அப்பா ஆஃபிஸுல பூஜை முடிச்சிட்டு வந்துட்டு, ஏழு மணியளவுல கிளம்பலாம்!” நிர்மலா கூறவும், அவர் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்தாள்.
வீட்டிலும் அலுவலகத்திலும் உற்சாகமாக வேலைகளை செய்தாள் மீரா. வரதனின் அலுவலக ஊழியர்களுடனும் கலகலத்துப் பேசிப் பழகினாள்.
மகள் சிந்தையில் நிறைந்திருக்கும் தன்னவன் தான், அவளின் இந்தப் புத்துணர்வுக்குக் காரணம் என்று வரதன் மட்டும் அறிந்திருந்தால்?
அகிலாவின் அன்புக்கட்டளைக்கு இணங்கி கீதா, மகேஷ் இருவரும் குடும்பத்துடன் வந்திருந்தனர். மீராவின் சூழ்நிலை அறிந்திருந்த நண்பர்கள் அவள் தந்தை வராத காரணத்தை உணர்ந்து நிர்மலாவுடன் சகஜமாகப் பேசிப் பழகினர். அஞ்சலியையும் அவள் பெற்றோரையும் அனைவருக்கும் அறிமுகம் செய்துவைத்து பூரித்தனர் அகிலாவும் அசோக்கும்.
அகிலா வைத்திருந்த ஏழு படி கொலுவைக் கிண்டல்களுக்கும் கேலிகளுக்கும் நடுவில் விமர்சித்தனர் தோழிகள். அரவிந்தன் குழந்தை பருவத்தில் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகளைக் கொலுவில் சுட்டிக்காட்டிய அகிலா, அவற்றை அவன் சிறுவயதில் கடித்தும், வளைத்தும் அதிரடியாகக் கையாண்ட சாகசங்களையும் இலவச இணைப்பாக விவரிக்க, சிரிப்பொலி வீட்டை நிரப்பியது.
“அதெல்லாம் நீ சொன்ன கற்பனை கதைகளின் தாக்கம் ‘ம்மா!” பொய்கோபம் கொண்ட அரவிந்தன் நண்பன் பக்கம் திரும்பினான்.
”இப்போ கூட ஹரி! நவராத்திரிக்கு வந்தவங்க கிட்ட உன் கதையின் கருவைச் சொல்றேன்னு ஒரு படத்தோட டிரெயிலரே ஓட்டி காட்டுறாங்க,” என்றான்.
அகிலா அழகாய் அசடுவழிய, அவர் அன்பில் நெக்குருகி நின்றான் ஹரி.
அரட்டைக் கச்சேரி சூடுப்பிடிக்க, மகனையும், வருங்கால மருமகளையும் அருகில் அழைத்தார் அகிலா. அவர்கள் கரங்களில் வைரக்கல் பதித்த மோதிரங்களைத் திணித்து, மாற்றிக்கொள்ளுமாறு கண்ணசைத்தார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத இளஞ்சோடிகள் ஒருவரை ஒருவர் ஏறிட்டு விழிமொழிகளில் வினா எழுப்ப,
“நிச்சயதார்த்தம் தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க; உங்க நண்பர்கள் முன்னாடி, மோதிரமாவது மாத்திக்கோங்க மாப்பிள்ளை!” அன்புக்கட்டளை இட்டார் அஞ்சலியின் அம்மா சாரதா.
இருவரின் அம்மாக்களின் ரகசியத் திட்டம் என நெகிழ்ந்தனர் அஞ்சலியும், அரவிந்தனும்.
அத்தனை நேரம் அரட்டையும் கும்மாளமுமாக அளவளாவிக் கொண்டிருந்த காதல் ஜோடிகளின் முகத்தில் வெட்கம் வழிந்தோடியது. அஞ்சலியின் விரலில் மென்மையிலும் மென்மையாக மோதிரத்தை நுழைத்த அரவிந்தனின் விழிகள், என்னவள் என்ற கர்வத்துடன் அவளை ஊடுருவியது.
அவன் ஸ்பரிசத்திலும் பார்வையிலும் அங்கமெல்லாம் சிவந்து போனவள், குனிந்த தலை நிமிராமல், அவன் கையில் மோதிரத்தை நுழைத்தாள்.
நண்பர்களின் ஆரவாரத்திற்கு இடையே பரிதவித்து நின்றார் நிர்மலா. தன் மகளுக்கும் நல்ல காலம் பிறக்காதா என்ற ஏக்கத்தில்!
“சரி! தோழிகள் எல்லாம் பாட்டுப் பாடினால்தான் விருந்து சாப்பாடு!” அகிலா வம்பிழுக்க,
“எனக்கு அவ்வளவா பாட வராது! நீங்க பாடுங்க, நான் வாசிக்கறேன்!” கூறிக்கொண்டே சரஸ்வதி தேவி சிலை முன்னிருந்த தம்பூராவை எடுத்தாள் மீரா.
பெண்கள் பஜனையை மொக்கை என்று சொன்ன தோழர்களும், மெய்மறந்து ரசிக்கும் அளவிற்கு, அத்தனை லயமாய் கீர்த்தனைகளைப் பாடினர் முப்பெரும் தேவிகள்.
கச்சேரியைத் தொடர்ந்து அகிலாவின் கைப்பக்குவத்தில் அனைவரின் வயிறும் நிரம்பியது.
பெண்கள் அனைவரிடமும் சில்க் காட்டன் புடைவைகளையும் காட்டன் சட்டை வேட்டியும் தாம்பூலத்தில் வைத்துத் தந்த அகிலா, ஹரியிடம் ஒரு பையை நீட்டினார்.
“இது பெண்கள் விழா. எனக்கு எதுக்கு?” மறுத்தான் ஹரி.
“தெரியும் பா! கல்யாணமான ஆண்களுக்கு அவங்களுக்கும் சேர்த்து அவங்க மனைவிகளுக்குத் தாம்பூலம் கொடுப்பேன். இப்போதைக்கு நீ பிரம்மச்சாரி; பிரிச்சுப் பார்த்துப் பிடிச்சிருக்கான்னு சொல்லு,” அகிலா மென்னகைக்க,
“டேய் நண்பா! இந்தச் சலுகை எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும்தான்… அனுபவிச்சிக்கோடா!” ஹரி தோளில் தட்டினான் மகேஷ்.
கன்னத்தில் குழிவிழச் சிரித்துக்கொண்டே பரிசுப்பொருளைத் திறந்தவனின் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தோடியது.
“பிடிச்சிருக்கா!” நண்பன் காதில் கிசுகிசுத்தான் அரவிந்தன்.
கண்ணீரும் சிரிப்புமாக அவன் தலையசைக்க, “இது உன் மீரா!” அழுத்திச்சொல்லி, ஹரி கையில் வைத்திருந்த மீரா சிலையை அவன் நெஞ்சோடு சாய்த்துவிட்டான் அரவிந்தன்.
எதிரில் நின்றிருந்தவளின் கண்களும் குளமாகின.
“நிஜமாதான் டா அரவிந்தா! இன்னைக்கு நம்ம மீரா தம்புரா வாசிக்கிறத பாக்குறப்ப, ஏக்தாரா(Ektaara) கையில வெச்சுகிட்டிருக்க மீராபாய் பாக்குறா மாதிரியே இருந்துது.” அகிலா நெகிழ,
“உருவத்துல மட்டுமில்ல ஆன்ட்டி; குணத்துலையும் அவ அப்படித்தான்!” தன்மேல் அவள் வைத்திருக்கும் கண்மூடித்தனமான அன்பை அசைபோட்டவனாக அடிமனத்திலிருந்து உரைத்தான்.
“இல்லையா பின்ன! கிருஷ்ண நாமத்துக்கும், ஹரி நாமத்துக்கும் ஏது வித்தியாசம்?” அஞ்சலி, மீராவின் தோள்களை இறுகப்பற்றி கண்சிமிட்டினாள்.
உணர்ச்சிவசப்படும் நண்பர்கள் நிர்மலா அங்கு இருப்பதையே மறந்துபோயிருந்தனர். அவரும் நடப்பதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அரைமணி நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக அனைவரும் புறப்பட்டனர். வாசல் வரை அமைதியாக வந்த நிர்மலா, அவர்களை வழியனுப்ப வந்த நண்பர்கள் பக்கம் திரும்பி,
“தம்பி!” என்று மெல்லிய குரலில் அழைக்க, ஹரியும் அரவிந்தனும் அவரைக் கேள்வியாக நோக்கினார்கள்.
“உங்க நாவல்ல நானும் படிச்சேன். ரொம்ப அற்புதமா இருந்துது. எல்லார் கிட்டையும், என் மாப்பிள்ளை எழுதின புத்தகமுன்னு சொல்ல ஆசைதான்; ஆனால்…ஆனால்… மீரா அப்பா சம்மதிக்காமல், என்னால உங்களை அப்படிக் கூப்பிடவே முடியாது,” தன் தர்மசங்கடமான சூழ்நிலையை நாசூக்காக எடுத்துச்சொன்னார்.
“நீங்க எங்க காதல்ல எதிர்க்கல்லன்னு நான் அன்னைக்கே புரிஞ்சுக்கிட்டேன் ஆன்ட்டி,” அவர் தயக்கத்தை உடைத்தவன், “நீங்க மட்டும் என்னை மீராவோட பேசச் சொல்லிக் கட்டாயபடுத்தலேனா எங்க காதல் ஒரு வாரத்துலேயே உடைஞ்சு இருக்கும்,” ஆத்மார்த்தமாக நன்றிகளையும் தெரிவிக்க, மனப்பாரம் குறைந்ததைப் போல உணர்ந்தார் நிர்மலா.
நிர்மலா மௌனமாக இருப்பதைப்போல தோன்றினாலும், இடம் பொருள் பார்த்துப் பக்குவமாக நடப்பதை எண்ணி பூரித்தனர் அரவிந்தனும் மீராவும்.
தோழன் கனவைத் தனதாக்கி வாழ்பவளும்;
தந்தை மகள் பந்தம் உடையாமல் காப்பவளும்;
தோழியை உறவாக்கிக் கொண்டவளும்;
தயவும் தயாளமும் தன்னிடத்தே கொண்டவளும்;
மறுகி மறுகி மற்றவர்களிடம் பாசம் பொழிபவளும்;
மழலை மொழியில் தாய்மை உணர்வைக் கடத்தியவளும்;
உயிராய் ஜனித்தவளையே உலகம் என்பவளும்;
உறவாய் வந்தவளை உயிராய் நேசிப்பவளும்;
உடன்பிறந்தவன் சரிபாதியுடன் சிநேகமாய் பழகுபவளும்;
பெருவிழா என நவராத்திரி பண்டிகை கொண்டாடி,
முப்பெரும் தேவியரை குளிரவைத்த வேளையில்,
முரடு பிடிக்கும் உள்ளங்களும் உருகுமா – பதில்சொல்லும்
பெற்றவர்கள் பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அன்பின் ஆழம்….
பின்குறிப்பு:
அன்புள்ள வாசகத் தோழமைகளே!
அத்தியாயத்தின் கடைசியில் இணைத்திருக்கும் கவிதையில், அன்பின் ஆழம் கதையில் வரும் ஒன்பது பெண்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். அவர்கள் குணாதிசயங்களை மையமாக வைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வரி எழுதியுள்ளேன். எந்த வரி யாரைக் குறிக்கிறது எனக் கண்டுபிடித்து சொல்லுங்களேன்.


Please Comment Here