61 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
இரண்டு வாரங்களாக அந்த மேஜையைக் கடந்து சென்ற போதெல்லாம் அரவிந்தனின் கண்கள், மீதமிருந்த புத்தகங்களைக் கணக்கெடுக்கத் தவறவேயில்லை. இன்று அந்த மேஜை காலியாக இருப்பதைக் கண்டபோதும் அவனால் முழுவதுமாகச் சந்தோஷப்படவும் முடியவில்லை.
ஹரியைப் பற்றி தெரிந்திருப்பதனால், உடனே முன்வந்து புத்தகங்களை வாங்கிக் கொள்வார்கள் என அவன் எதிர்பார்த்திருக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் இடத்தில், வெறும் நூறு பிரதிகள் விற்கவே இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது.
இதில் எத்தனை பேர் அவற்றுக்குப் பணம் செலுத்தி இருப்பார்கள்; எத்தனை பேர் ஆர்வமாகப் படித்து இருப்பார்கள் என்ற கவலை வேறு!
அதுவும் சற்று முன் இரண்டு பெட்டிகளையும் எடுத்து வந்த பியூன், தனக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத போதும், ஹரி சார் எழுதிய கதை புத்தகத்தின் பிரதியை ஒரு நினைவுச் சின்னமாக எடுத்து வைத்துக்கொண்டதாகக் கூறி அசடுவழிந்தான். அவனைப் போல படிக்கும் எண்ணமே இல்லாமல் வெறுமனே எடுத்துக்கொண்டு போனவர்கள் எத்தனை பேரோ என்று நினைத்தவனுக்கு, பெட்டிகளைத் திறக்க ஒரு வித தயக்கம்.
மேலும் புத்தக விற்பனை பற்றி ஒரு வார்த்தை கூடக் கேட்காத நண்பனிடம் நற்செய்தி மட்டுமே சொல்ல வேண்டுமென்று கிடந்து தவித்தான் அரவிந்தன்.
இப்படியே யோசித்துக் கொண்டிருந்தால் ஒரு பயனுமில்லை என உணர்ந்தவன் பெருமூச்சுடன் முதல் பெட்டியைத் திறந்தான்.
பெட்டி நிறைய பணம் இருப்பதைக் கண்டு பூரித்தவன், மறுகணமே ரூபாய் நோட்டுகளை மேஜையில் பரப்பி எண்ண, கிட்டத்தட்ட தொண்ணூறுக்கும் மேலான புத்தகங்களின் மதிப்புக்கு இணையான பணம் வசூலாகியிருந்தது. அந்த உற்சாகத்தில் படிவங்கள் இருக்கும் பெட்டியையும் திறந்தான்.
முப்பது படிவங்கள் இருந்தன. அத்தனையிலும் நேர்மறையான பின்னூட்டங்களைப் படித்தவனுக்கு மனநிறைவாக இருந்தது. அதில் ஒருவர், மேலும் இரண்டு பிரதிகள் கேட்டு விண்ணப்பித்து இருப்பதைப் பார்த்தவனுக்கு, உடனே அஞ்சலி நினைவில் வந்தாள். இருவரில் யாருக்கு முதலில், புத்தகங்களின் கூடுதல் ஆர்டர் வருகிறது எனப் பந்தயம் வைத்து கொண்டிருந்தனர் காதல் ஜோடிகள்.
கைக்கடிகாரத்தில் மணி பார்த்தவன், அவளுக்கு வகுப்பு நேரம் முடிந்திருக்கும் என்று உணர்ந்து உடனே அழைத்தான்.
“ஓய் அஞ்சலி பாப்பா! ஐ கோட் டூ ஆர்டர்ஸ்!” நமுட்டுச் சிரிப்புடன் பெருமையடித்துக் கொண்டான்.
“அப்படிக் கூப்பிடாதீங்கன்னு உங்களுக்கு எத்தனைமுறை சொல்றது?” அவள் சிடுசிடுக்க,
“அஞ்சலி பாப்பா! அஞ்சலி பாப்பா! அஞ்சலி பாப்பா!” இன்னும் அழுத்தமாக உச்சரித்துச் சீண்டினான்.
சில நாட்களுக்கு முன் அரவிந்தன் முன்னறிவிப்பு இல்லாமல் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது சாயம் வெளுத்த ஒரு பாவாடை சட்டையில் தலைவிரி கோலமாய் பாதி தூக்கத்தில் வந்து கதவைத் திறந்திருந்தாள் பேதை. அதைக் கண்டவனுக்கு, ‘அஞ்சலி’ திரைப்படத்தில் நடித்த குழந்தை நினைவுக்கு வர, தன்னவளையும் அப்படியே அழைத்து வெறுப்பேற்றினான்.
“அதுக்குன்னு நாள் முழுக்க சீவி சிங்காரிச்சிட்டு இருக்க முடியுமா?” சலித்துக்கொண்டவள், “எனிவே பந்தயத்துல நான் தான் ஜெயிச்சேன்…காலையிலேயே முதல் ஆர்டர் வந்தாச்சு! அதுவும் பல்க் ஆர்டர்; முப்பது பிரதிகள் கேட்டு இருக்காங்க. சாயங்காலம் சொல்லாம்னு நெனச்சேன்!” அவள் அறிவிக்க, அந்தப் பக்கத்தில் மௌனம் நிலவியது.
“ஹெலோ பாஸ்! இருக்கீங்களா!” குரலை உயர்த்தினாள் அவள்.
“எப்படி அஞ்சலி பாப்பா! புத்தகத்தை வாங்கிக்கிட்டா தான் விடுவேன்னு அடம்கிடம் பிடிச்சியா?” அவன் வாயைப்பிளக்க,
“உங்களுக்கு எல்லாத்துக்கும் நக்கல்தான்!” உதட்டைச் சுழித்தவள், தன்னுடன் பணிபுரியும் ஆசிரியர், மாதர் சங்கத்தின் உறுப்பினர் என்றும், ஹரியின் கதையில் பெண்மையைப் பற்றி உயர்வாய் சொல்லி இருப்பதால், அதையே அவர்கள் ஆண்டு விழா போட்டியில் பங்கேற்கும் மகளிருக்குப் பரிசாய் வழங்கலாம் என்ற எண்ணத்தில் கேட்டிருப்பதாகவும் விளக்கினாள்.
“கலக்கிட்ட அஞ்சலி! ஹரிக்கு இனிமே பெண்கள் மத்தியில் சரியான மவுசுதான்னு சொல்லு. அநேகமா, ஃபீட்பாக் ஃபோர்மோட சேர்த்து, அவனுக்கு காதல் கடிதமும் வரப்போகுது பாரு!” கலாய்த்து, பெருங்குரலில் சிரித்தான்.
“ஹரி என்ன உங்கள மாதிரியா… மீரா இல்லேன்னா அஞ்சலி… அஞ்சலி இல்லேன்னா ராதான்னு, காதல் கடிதம் அனுப்புற பொண்ணுங்கள பார்த்து பல்லிளிக்க…” அவளும் கலாய்த்தாள்.
அவள் தன்மீது உரிமை கொண்டாடுவதை ரசித்தவன், “அந்தப் பக்கம் லேசா புகை… ய… றா… மா…தி…ரி… இருக்கே…” ராகமாய் இழுக்க அவர்கள் காதல் பரிபாஷைகளும் சூடுப்பிடித்தது.
நேரில் சென்று ஹரிக்கு இன்பதிர்ச்சி கொடுக்கலாம் என்று திட்டமிட்ட காதல் ஜோடிகள், அன்று இரவு மீராவை மட்டும் அழைத்து நற்செய்தியைப் பகிர்ந்தனர்.
அவளோ அரவிந்தனை ஹரியிடம் வங்கியிலேயே சந்தித்துப் பேசச் சொல்ல,
“என்னடி ஆச்சு உனக்கு? எவ்வளவு பெரிய விஷயம் சொல்றேன்! இப்படிச் சுரத்தே இல்லாம பேசுறியே?” எனத் திட்டினான்.
“என்ன செய்யச் சொல்றடா? அவனை உங்க வீட்டு நவராத்திரி பண்டிகையில் பார்த்ததோட சரி!” பெருமூச்சுவிட்டவள்,
“விற்பனை தொடங்கி ஒரு மாசமாகியும், கருத்துச் சொல்லி ஒருத்தர் கூடப் பதில் போடலயேன்னு வருத்தமா இருக்கான்டா. எவ்வளவு சொல்லியும் அவனுக்கு நம்பிக்கையே வரல…” புலம்பிக்கொண்டிருக்க,
“அதான் ஹரி எதிர்பார்த்த கருத்துக்கள் நிறைய வந்திருக்கு. இப்போ கண்டிப்பா சந்தோஷப்படுவார்; நீயும் வா!” துள்ளலாகக் குறுக்கிட்டாள் அஞ்சலி.
கடந்த இரண்டு வாரங்களாக ஏதோவொரு சாக்குச்சொல்லி அவளை நேரில் சந்திக்காமல் தட்டிக்கழித்து வந்தான் ஹரி. அவனாக அழைக்கும் வரை சந்திக்கக் கூடாது என்று அவளும் பிடிவாதமாக இருந்தாள்.
“பரவாயில்ல அஞ்சலி! அரவிந்தன் அவனோட தனியா பேசட்டும். நாம இன்னொரு நாள் சந்திக்கலாம்!” மீராவின் தீர்மானத்தில் காதல் ஜோடிகளின் திட்டம் உடைந்தது.
வங்கியில் பேசுவதைக் காட்டிலும் ஹரியின் வீட்டிற்குச் சென்று பேசுவது நல்லது என யோசித்த அரவிந்தன், வெள்ளிக்கிழமை மாலை அவன் வீட்டிற்குத் திடீர் விஜயம் செய்தான்.
“என்னடா! சொல்லாம கொள்ளாம வந்து நிக்குற?” ஹரியின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், “மீரா வெஜிடபிள் பிரியாணி தானே செஞ்சிருக்கா?” வாசம் பிடித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான் அரவிந்தன்.
“என்னடா இன்னைக்கு இவ்வளவு அதிகமா சமைச்சிருக்காளேன்னு யோசிச்சேன். இப்போ புரியுது,” மென்னகையுடன் நண்பனை வரவேற்றான் ஹரி.
பையிலிருந்து ஒரு என்வெலப்பையும், இனிப்பு டப்பாவையும் நண்பனிடம் நீட்டிய அரவிந்தன், “குட் நீயுஸ் உனக்கு; குலாப் ஜாமுன் என் தோழிக்கு!” கோர்வையாகப் பேசிக் கண்சிமிட்டினான்.
இனிப்பு டப்பாவை ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு வந்து, நண்பன் அருகில் வந்தமர்ந்த ஹரி, அந்த மெல்லிய என்வெலப்பை பிரித்தான்.
படிவங்களைப் பார்த்தவனின் கண்கள் குளமாகின. புருவங்கள் வளைய உதடுகள் விரிய என ஒவ்வொன்றாய் படித்து நெகிழ்ந்தவன்,
“தாங்க்ஸ் நண்பா! இதெல்லாம் உன்னால தான்டா!” நன்றி சொல்ல,
“அதெல்லாம் இருக்கட்டும்! இந்தா ஆர்டர் ஃபோர்ம்! புத்தகங்கள் எடுத்துட்டு வா!” அலட்டல் இல்லாமல் கட்டளையிட்டான் அரவிந்தன்.
“முப்பது பிரதிகளா! என்னடா நடக்குது?” கண்கள் அகல வினவினான் ஹரி.
அஞ்சலி கூறிய அனைத்தையும் அரவிந்தன் பகிர, “உங்க அன்புக்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்டா!” நெக்குருகிப் போனான் ஹரி.
“முதல்ல என் தோழி சமைச்சு வச்சிருக்க பிரியாணியை ஒரு தட்டுல போட்டு எடுத்துட்டு வா!” அரவிந்தன் விரட்ட,
“உன்னை!” பொய்கோபம் கொண்டவன் அவன் சொற்படியே செய்தான்.
“மீராவுக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கு ஹரி!” உணவருந்திக் கொண்டே பேச்சுக் கொடுத்தான் அரவிந்தன்.
“போட்டுக் கொடுத்துட்டாளா!” ஹரி தலையைச் சிலுப்பிக்கொள்ள, என்ன சொல்லிப் புரியவைப்பது என அரவிந்தனின் முகம் கவலையில் தோய்ந்தது.
“கருத்துக்கள் வரலையேன்னு வருத்தப்பட்டேன் தான். ஆனால் அதுக்காக, அதையே நெனச்சு எல்லாம் சோர்ந்து போகல. வாரயிதழுக்குக் கொடுக்க வேண்டிய எபிசோடு, பாங்க் எக்ஸாமுக்கு படிக்குறதுன்னு சரியா இருந்துது. அவ்வளவுதான்,” ஹரியே தன்மையாகப் பதிலளிக்க,
அதில் அரவிந்தனின் மனமும் லேசானது. “எப்படியோ ஹரி! அவளுக்கு நீதான் உலகம்; அதை மறந்துடாதே!” புன்னகை முகமாய் நினைவூட்டி வயிறார உண்டு முடித்தான்.
வங்கியில் புத்தகம் விற்ற பணம் என அரவிந்தன் மற்றொரு என்வெலப்பை நீட்டி நண்பனுக்கு இன்பதிர்ச்சி தர, அதை வாங்க மறுத்தான் ஹரி.
“ஏன்டா! என் நண்பன் எழுதின புத்தகங்கள நான் வாங்கிக்கக்கூடாதா!” தர்க்கம் செய்தான் அரவிந்தன்.
“வாங்கிக்க! யாரு வேண்டாம்னு சொன்னா! ஒண்ணோ, ரெண்டோ வாங்கிக்க. இப்படி மொத்த பாரமும் தலையில போட்டுக்காத!” ஹரி அதட்ட, அரவிந்தனின் முகம் சுருங்கியது.
“புரிஞ்சுக்கோ அரவிந்தா! என் பக்கத்துல இருந்து எனக்குத் தட்டிக்கொடு; பணத்தைக் கொடுத்து என் தன்னம்பிக்கையைச் சோதிக்காத! என்னால முடியும்டா! நான் சமாளிப்பேன்!” என்றான் கெஞ்சலாக.
“மன்னிச்சிரு டா! உன்மேல பரிதாபப்பட்டு கொடுக்கல! நீ கட்டாயம் ஜெயிப்பன்னு எனக்கும் தெரியும்… ஆனா, அது மீராவோட அப்பா…அது… மீரா… அவ எத்தனை நாள் காத்துட்டு இருப்பா சொல்லு…” அரவிந்தன் தயங்க,
“எத்தனை நாளானாலும் மீரா எனக்காக கண்டிப்பா காத்திருப்பா!” தன்னவள் மீதிருந்த அதீத நம்பிக்கையில் அழுத்திச் சொன்னவன்,
“அதுக்காக அவளை அப்படியே விட்டுடமாட்டேன் அரவிந்தா! அவ என் உயிர்! அவளுக்குச் சந்தோஷமான வாழ்க்கைத் தரணும்ன்ற ஒரு காரணத்துக்காகவே கடினமா உழைப்பேன்,” உறுதியாகச் சொல்ல அரவிந்தனுக்கும் அதற்குமேல் கட்டாயப்படுத்த விருப்பமில்லை.
என்றாலும் நண்பனுக்கு ஏதோவொரு விதத்தில் உதவவேண்டும் என்று நினைத்தவன், “சரி! இந்தப் பணத்தை எடுத்துக்கிட்டு எனக்கு இன்னொரு நூறு பிரதிகள் கொடு,” என்றான்.
“அத்தனை புத்தகங்கள் வச்சிட்டு என்ன செய்யப் போகுற?” ஹரி எகிற,
“அட கொடுடா! எல்லாத்துக்கும் எதிர்கேள்வி கேட்டுகிட்டு!” மிரட்டி அவன் வாயை அடைத்தான் அரவிந்தன்.
அரவிந்தன் வருகைக்குப் பிறகு, ஹரி பழையபடி பேசிப் பழகுவான் என எதிர்பார்த்திருந்தாள் மீரா. ஆனால் அவனோ நண்பர்கள் போட்டிப்போட்டு விநியோகம் செய்வதால் தான், புத்தகங்கள் அமோகமாய் விற்கின்றன என்றும், இந்த எண்ணிக்கை எல்லாம் வெறும் கண்துடைப்பே என்றும் கூறி, ஒரு முகம் தெரியாதவரிடமிருந்து வரும் நேர்மறை கருத்தே, தன் திறமைக்குக் கிடைக்கும் சன்மானம் என்று திட்டவட்டமாக உரைத்தான்.
அவன் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்தவளும் அவன் போக்கிலேயே விட்டாள்.மாலையில் அவள் சமைத்துவைத்துப் புறப்படுவதும், அவன் பிறகு வருவதுமாகக் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.
அப்படி ஒருநாள் மீரா சமைத்துக்கொண்டிருக்க, வாசற்கதவு மணி ஒலித்தது. தன்னவனாக இருக்குமோ என்று ஆசை பொங்க ஓடிச்சென்று கதவைத் திறந்தாள்.
“அத்தை! அம்மா இந்த லெட்டர்ஸ் உங்ககிட்ட கொடுக்கச் சொன்னாங்க!” இரண்டு கவர்களைத் திணித்துவிட்டு ஓடினர் மகேஷின் பிள்ளைகள்.
பிரித்துப் பார்க்காமலேயே, அது என்னவாக இருக்கும் என்று புரிந்தது அவளுக்கு. நற்செய்தியாக இருக்கவேண்டும் என்று, கடவுள் மேடையிலும், மாமனார் நிழற்படம் முன்னும் வைத்து பிரார்தித்த பின் அவற்றைப் பிரித்தாள்.
முதல் கடிதம்…
‘உங்கள் புத்தகத்தை, நான் வழக்கமாக செல்லும் நூலகத்தில், புது வரவுகள் பிரிவிலிருந்து எடுத்துப்படித்தேன். மிகவும் அற்புதமான கதை. தெவிட்டாத நேர்மறை கதிர்கள் வீசியது என்றுதான் சொல்லவேண்டும். நான் இன்னும் பத்து நாட்களில், அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களால் முடிந்தால், பத்து பிரதிகளை, இந்த விலாசத்திற்கு அனுப்ப முடியுமா?’ என்றிருந்தது.
‘முதல் கடிதத்திலேயே பத்து பிரதிகளுக்கான ஆர்டரா!’ என்று பூரித்தவள், இரண்டாம் கடிதத்தையும் பிரித்துப் படித்தாள். அதில் கூடுதல் ஆர்டர் இல்லாத போதும், கதையைப் பற்றிய பாராட்டுகளுக்குக் குறைவே இல்லை. அடுத்த கதைக்காகக் காத்திருக்கிறேன் என உற்சாகமாகப் பதில் எழுதியிருந்தார் அந்த வாசகர்.
இறைவனுக்கும், மாமனாருக்கும் நன்றி செலுத்திவிட்டு, நிர்மலாவை அழைத்து வீட்டிற்கு வர தாமதமாகும் என்று தகவல் சொன்னாள். கடிதம் அனுப்பியிருந்த நபருக்கு ஃபோன் செய்து, பிரதிகளை எடுத்து வருவதைப் பற்றி கலந்துபேசி, மீதி சமையலையும் செய்து முடித்தாள்.
ஏழு மணியளவில் வீடு திரும்பியவனுக்கு மீராவைக் கண்டதும் அங்கமெல்லாம் மெய்சிலிர்த்தது. தன்னவளைப் பல நாட்களாக நேரில் பார்க்காத ஏக்கம் அவனுக்கும் இருக்கத்தான் செய்தது!
“மீரா! இன்னும் வீட்டுக்கு கிளம்பாம, என்ன பண்ணிட்டிருக்க?” மீசையில் மண் ஒட்டாத ரீதியில் அதட்டினான்.
அவனுடன் மாலை நேரத்தை கழிக்க வேண்டுமென்ற முடிவோடு இருந்தவளோ, “இன்னைக்கு உன்னோட டின்னர் சாப்பிட்டுப் போகலாமுன்னு காத்துகிட்டு இருக்கேன்!” அசராமல் பதிலளித்தாள்.
“வெள்ளிக்கிழமை ஒண்ணா டின்னர் சாப்பிடுறது தானே வழக்கம்! இன்னைக்கு என்ன புதுசா?” ஹரியின் குரல் இறுகியது.
“வழக்கமாவா!” ஏளனமாகச் சிரித்தவள், “மூணு வெள்ளிக்கிழமைகளா வேலை வேலைன்னு சொல்லி என்கிட்டேந்து ஓடினது எல்லாம் எந்தக் கணக்குல வரும் ஹரி!” மடக்கினாள் பேதை.
‘எழுத்தாளரே’ என்று அழைக்காமல் ஹரி என்று கூப்பிட்டதே, அவளின் மனவலியை எடுத்துரைத்தது. வெகு நாட்களுக்குப் பிறகு நேரில் பார்க்கும் அவனுக்கும் வாதம் செய்ய மனமில்லை. உடை மாற்றிக்கொண்டு வருவதாகச் சொல்லி நகர்ந்தான்.
வெளியே வந்தவனிடம் அனல்பார்வையுடன் ஆவிப்பறக்கும் ஏலக்காய் தேனீரை நீட்டினாள் பேதை. எதையாவது ஏடாகூடமாக பேசிவிடுவோமோ என்ற பதற்றத்தில், அவனும் கப்சுப் என்று தேனீரை அருந்தி முடித்தான்.
“அரவிந்தன் வந்து நற்செய்தி சொல்லியும் உனக்கு நம்பிக்கை வரலேன்னா என்ன அர்த்தம் ஹரி?” நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள் மீரா.
“ம்ப்ச்! ஃப்ரெண்ட்ஸ் நீங்க என் புத்தகத்த வாங்கி, தெரிஞ்சவங்க கிட்ட திணிக்குறதுக்கும், முகம் தெரியாதவர்கள் முன்வந்து வாங்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு!” அவன் சலித்துக்கொள்ள,
“எந்த ஒரு புது விஷயத்தையும், மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமுன்னா விளம்பரம் தேவை! அதானே நாங்க செஞ்சோம். இதுல என்ன தப்பு இருக்கு?” அவளும் அவனுக்கு இணையாகக் கண்களை உருட்டினாள்.
அவள் நியாயப்படுத்துவதை ரசித்துச் சிரித்தவன், “விளம்பரமுன்னா என்னைப் பற்றியும், என் புத்தகத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்றது. இப்படிச் சொந்த காசு போட்டு வாங்கி, அதை வரவங்களுக்கு போறவங்களுக்கு எல்லாம் இலவசமா விநியோகம் செய்யறது இல்ல!” வித்தியாசத்தைத் தெளிவுபடுத்தினான் ஹரி.
“இதுக்குப் பேர் மார்கெடிங்க்!” அழுத்திச் சொன்னவள் கழுத்தை நொடிக்க, அன்று அரவிந்தன் வங்கியில் பேசியது நினைவில் வந்தது ஹரிக்கு.
“மேடம்! நீங்க செய்யறது மார்கெடிங்கும் மேல! ஒரு வாழைப்பழத்தின் அருமை பெருமைகளை விளக்கி விற்க சொன்னா, நீங்க தோலை உரிச்சு எல்லாருடைய வாயிலும் ஊட்டிவிடுறீங்க!” கன்னத்தில் குழிவிழச் சிரித்தவாறு அவள் கன்னத்தில் தட்டினான்.
தட்டும் அவன் கைவிரல்களை தன் கரத்துள் அடக்கியவள், “நிதானமா யோசிச்சுப் பாருடா! அரவிந்த் இலவசமா எடுத்துட்டுப் போன்னு சொன்னதுக்கு அப்புறமும் எவ்வளவு பேரு விருப்பப்பட்டு வாங்கியிருக்காங்க,” எல்லாம் நன்மைக்கே என்றாள்.
பணம் என்றதும் அரவிந்தன் செய்தது, நினைவுக்கு வர, “அதையும் ஏதேதோ காரணம் சொல்லி என்கிட்ட திருப்பித் தந்துட்டான் மீரா!” சொல்லும்போதே, அவன் குரல் வலுவிழந்தது.
“என் அப்பாகிட்ட நீ பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டா, அவர் மனசு மாறிடுவாருன்னு நெனச்சிருப்பான் ஹரி,” அலட்டலே இல்லாமல் அவள் கூற,
‘இவளுக்கா அரவிந்தனின் உள்ளத்தைச் சொல்லிப் புரியவைக்க வேண்டும்!’ எண்ணியவன், “நண்பிகிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக்கொடுக்க நண்பன் உதவி செய்யறான்,” ஹரி தன்போக்கில் விரக்தியில் முணுமுணுக்க, அவனிடமிருந்து தேனீர் குவளையை விருட்டென்று பிடுங்கிக்கொண்டு சமையலறைக்குள் விரைந்தாள் மீரா.
எப்படிப் பேசினாலும் இவன் தன் எண்ணத்தை மாற்றிகொள்ள மாட்டான் என்று சலிப்புத்தட்ட, கடிதங்களை அவன் கையில் திணித்தாள்.
படிக்கும் அவன் முகத்திலிருந்த பயம், தவிப்பாய், கேள்வியாய், வியப்பாய், மகிழ்ச்சியாய் மாறும் சின்ன சின்ன முக அசைவுகளை உள்ளம் நிறையுவரை பருகினாள் பேதை.
“இப்ப உங்களுக்கு நம்பிக்கை வந்துதா எழுத்தாளரே!” அவள் கண்சிமிட்ட,
“இதை முதல்ல சொல்லாமல் ஏன்டி எதை எதையோ பேசி வெறுப்பேத்தின!” அவள் செவிமடல்களைத் திருகி செல்லமாகக் கடிந்தான்.
“உன் திறமைய நம்பித்தான் நாங்களும் மார்கெடிங்க் செஞ்சோமுன்னு உனக்குப் புரியவைக்க பார்த்தேன். ஆனால் நீ சரியான பிடிவாதக்காரன்!” உதட்டைச் சுழித்தாள் பாவை.
“பிடிவாதம் எல்லாம் இல்லடி; உங்க கண்மூடித்தனமான பாசத்தைப் பார்த்தால் பயமாயிருக்கு,” சிரித்து மழுப்பினான் அவன்.
அதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாதவள் ஆர்டர் தந்த நபரிடம் பேசியதைப் பகிர்ந்து, இருபது பிரதிகள் எடுத்துச் செல்கிறேன் என்றாள்.
“பத்து பிரதிகள் தானே கேட்டிருக்காரு!” குழம்பி நின்றவனுக்குப் பதிலளிக்காமல், அரவிந்தன் அன்று வாங்கிவந்திருந்த குலாப்ஜாமுனை ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்தவள், “மார்கெடிங்க் எழுத்தாளரே!” என்று கண்சிமிட்டி, அவனுக்கு ஊட்டினாள்.
புருவச் சுளிப்புடன் அவன் மென்று விழுங்க, அவளே விவரித்தாள்.
புத்தகங்களை விற்கச் செல்லும் இடத்தில் அந்த நபருடன் வேறுயாராவது இருந்தாலோ, அல்லது அவரே கூடுதல் பிரதிகள் கேட்டாலோ, இல்லையென்று சொல்லாமல், தர வசதியாக இருக்கும் என்றவளை பெருமிதம் பொங்க நோக்கினான் ஹரி.
“சரி! இந்த வாரக் கடைசியில் வரோம்னு சொல்லு. நானும் வரேன்,” அவன் கூற,
“என்ன ஹரி! இத்தனை நாள் எனக்காக நேரம் ஒதுக்காததுக்கு ஈடுகட்ட பாக்குறியா!” இடித்துக்காட்டினாள் அவள்.
மனசாட்சி சுருக்கென்று குத்த தலைகுனிந்து நின்றான் ஹரி.
இதுவே பேசவேண்டிய சரியான தருணம் என்று அறிந்தாள் மீரா. “நான் சொன்னத மறந்துட்டியா ஹரி! உன்னோட சுக துக்கங்கள் ரெண்டுத்தலையும் எனக்குப் பங்கு வேணும் ஹரி.
இத்தனை நாளா நீ கவலையா இருந்ததை நான் தப்பு சொல்லல. ஆனால் என்கிட்டேந்து ஒதுங்கி இருந்தியே… அதுதான்டா மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருந்துது,” துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
அவன் கண்பார்வையை எதிர்கொள்ள முடியாமல் பால்கனியை நோக்கி நடந்தாள்.
அவள் ஆசையாக எடுத்துவந்த குலாப் ஜாமுன் டப்பாவை எடுத்துக்கொண்டு, பால்கனிக்குச் சென்றவன், “ஐ ஆம் சாரி மீரா! இனி அப்படி நடந்துக்கமாட்டேன்!” கலங்கிய அவள் கண்களைத் துடைத்துவிட்டு இனிப்பை ஊட்டினான்.
“யாருக்கு வேணும் உங்க சாரி! ஐலவ்யூ சொல்லுங்க எழுத்தாளரே!” சிணுங்கினாள் பேதை.
அவன் வழக்கம்போல சிரித்து மழுப்ப, “அதான் உங்க மாமியார் சம்மதம் சொல்லிட்டாங்களே!” என நினைவூட்டினாள்.
“மிஸ்ஸர்ஸ்.வரதன் சம்மதம் எல்லாம் மிஸ்டர்.வரதன் சம்மதத்துக்கு ஈடாகுமா?” அவன் நமுட்டாகச் சிரிக்க,
“தெளிவா இருக்குறதா நெனப்பு……!” முறைத்தவள், “உங்க கொள்கையை மறந்துபோய் ஊட்டிவிடுறீங்ளே!” அவன் வாயிலிட்ட மூன்றாவது ஜாமுனை மென்றவாறு வம்பிழுத்தாள்.
“ஸ்பூணுல தானே ஊட்டுறேன்; கையில இல்லையே; காதல் கரண்ட் பாஸ் ஆகாது!” அவனும் விடாமல் சாக்குச் சொல்ல,
வெடுக்கென்று அவன் ஆள்காட்டி விரலைப் பற்றிகொண்டவள், “இப்படியே பேசி வெறுப்பேத்தின, அப்புறம் விரல கடிச்சிடுவேன்!” பற்களை நரநரத்தாள்.
சிறுபிள்ளையாகக் குறும்பு செய்யும் அவள் முகபாவனைகளை ரசித்தவன், “விரல் இல்லாம எப்படி எழுதுறதாம்,” புருவங்களை ஏற்றி இறக்கி கிண்டல் செய்ய,
வெடுக்கென்று அவன் வாயைப் பொத்தியவள், “நீ எழுதணும் ஹரி! எனக்காக எழுதணும்டா! இந்த உலகத்துல ஒருத்தர் கூட உன் கதையை விரும்பி படிக்கலேனாலும் பரவாயில்ல; நான் ஒருத்தி உன் கதைகளைப் படிக்க இருக்கேன்றத எப்பவும் மறந்துடாத! உன்மேல காதல் வந்ததும் சரி; உன் மனைவியா உன்னோட பயணம் செய்ய ஏங்குறதும் சரி; நீ எழுதும் கதைகள் அத்தனையும் உன்னோட சேர்ந்து படிக்கணுமுன்ற ஆசையிலதான்,”
அவள் பேசப் பேச, அவன் விழிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தந்தைக்கு இணையாக யாரும் தன்மேல் இவ்வளவு நம்பிக்கை வைத்து பேசியதில்லையே என உருகினான் அவன்.
அந்த நீர்துளிகள் மெல்ல மெல்ல அவள் விரல் இடுக்கில் புகுந்துகொள்ள, தன்னையும் அறியாமல் மனத்தில் இருப்பதை எல்லாம் பேசுவதை உணர்ந்தவள் சுதாரித்துக்கொண்டாள்.
“எழுத்தாளரே! கண்ணுல கொஞ்சம் காதல் எட்டிப்பாக்குறா மாதிரி இருக்கே!” மென்னகையுடன் அவன் கண்களைத் துடைத்துவிட்டாள்.
“காதல் எட்டிப்பார்த்தாலும், நீ தெளிவா இருக்கியே! ரெண்டு பேரும், சேர்ந்து போய் புத்தகங்கள கொடுக்கலாமுன்னு சொல்லியும், தனியாத்தான் போவேன்னு அடம்பிடிக்குறியே!” சொன்னவன் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.
அவன் அன்பில் உச்சிகுளிர்ந்தவள், “எழுத்தாளரே! நீங்களே நேருல போய் வியாபாரம் செஞ்சா, அவ்வளவு கெத்தா இருக்காது. கதையைப் படிக்குறவங்க, ஆட்டோகிராஃப் கேட்டு உங்களைத் தேடி வரணும்.” என்றாள் பெருமிதம் பொங்க.
‘இவளுக்கு என் மேல்தான் எத்தனை நம்பிக்கை!’ வியந்தவன், அவளைத் தோளோடு வளைத்து அணைத்தான்.
மூன்று வாரங்களுக்குப் பிறகு….
“மழையில நனையாதே! நில்லுடி. குடை எடுத்துட்டு வரேன்…” பரபரவென்று படிக்கட்டுகளை இறங்கி கொண்டிருக்கும் தன்னவள் பின் ஓடினான் ஹரி.
“நேரமாச்சு டா!” பறந்தவளின் கையைப் பிடித்துத் தடுத்தான்.
“அதுக்குத்தான் வந்தோமா சாவியைக் கொடுத்தோமான்னு கிளம்பணும். அந்த இட்லி நான் வெச்சா வேகாதா?” காலையில் கிடைக்கும் பத்து நிமிடங்களைக் கூட வீணாக்காமல், அவனுக்காகக் காலை உணவு செய்யும் அவள் பழக்கத்தைச் சுட்டிக்காட்டி குடையை விரித்தான்.
சுருங்கிய முகத்துடன் வாசலை நோக்கி நடந்தாள். ஆனால் அவள் மனம் மட்டும் தன்னவனுடன் குடைக்குள் உரசிக்கொண்டு நடக்கும் இந்தப் பத்தடி தூரம் நீளாதா எனப் பேராசை கொண்டது.
“எழுத்தாளரே! லீவு போடவா! இப்படியே ஜாலியா மழையில நடக்கலாமா?” அவன் காதில் கிசுகிசுத்தாள்.
அதற்குள் வண்டியை அவள் ஏறுவதற்கு வசதியாகப் பக்கத்தில் நிறுத்திய மகேஷ், “ஸாரி மீரா! மழை வரும்னு தெரிஞ்சிருந்தா, பார்க்கிங்கிலேயே வெயிட் பன்ணிருப்பேன்!” கூற,
“நல்லது செஞ்சடா! இல்லேன்னா இதான் சாக்குன்னு லீவு போட்டிருப்பா,” நண்பனிடம் பேசும் சாக்கில் தன்னவளுக்குப் பதில் அளித்தான் ஹரி.
“முசுடு எழுத்தாளர்!” அவன் கன்னத்தில் நறுக்கென்று கிள்ளிவிட்டே காரில் ஏறிக்கொண்டாள் மீரா.
‘இவங்களும் இவங்க காதலும்!’ தலையைச் சிலுப்பிக்கொண்டே காரை செலுத்தினான் மகேஷ்.
‘நடக்கலாம் டி! ஜுரம் வர அளவுக்கு மழையில நனஞ்சுகிட்டே நடக்கலாம் மீரா!’ வாய்விட்டுச் சொல்ல முடியாத ஆசைகளை ஹரி மனத்தில் புதைக்க, அவன் முன் வேறொரு வண்டி வந்து நின்றது.
“அம்மா… ” காரிலிருந்து இறங்கும் வாசுகியைக் கண்டு மிரண்டு நின்றான் ஹரி.
மகனை வாசலில் கண்ட அன்னைக்கும் அதே அளவுக்கு ஆச்சரியம். தன்னுடன் வந்திருக்கும் அண்ணன் பக்கம் திரும்பியவர், ”அவன்கிட்ட சொல்லாதன்னு சொன்னேனே!” கண்டிக்க,
“நீ மழையில நனையாம ஜாக்கிரதையா உள்ளப்போ! நானும் ஹரியும் பெட்டிகளை எடுத்துட்டு வரோம்,” தங்கையிடம் பேசியபடி ஹரிக்கு ஜாடை காட்டினார் அவன் தாய்மாமன்.
இயற்கை அன்னையின் சாரல் மழையில் நனைய விடாமல்,
இதயம் கனிந்தவளுக்கு ஓடிவந்து குடை பிடித்தவன்,
ஈன்றெடுத்தவளின் சொல் மழையில் மூழ்க விடாமல்,
ஈடுகொடுத்துப் பேசி உரிமையை நிலைநாட்டுவானா – பதில்சொல்லும்,
அவன் ‘அவனவள்’ மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here