91 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அம்மா மாடி ஏறுவதற்கு முன் அவரிடம் எதையும் பேசிப் புரியவைக்க முடியாது என்ற நிதர்சனத்தை உணர்ந்த ஹரி, நடப்பது நடக்கட்டும் என்ற பெருமூச்சுடன் மாமனருகில் வந்தான்.
“எல்லாம் தெரிஞ்ச நீங்களே அம்மாவை இப்படித் திடுதிப்புன்னு அழைச்சிட்டு வரலாமா?” மாமனிடமிருந்து பெட்டியை வாங்கியபடி புலம்பினான்.
மாமன் மணிமாறனோ, “எல்லாம் அரவிந்தன் செஞ்ச வேலை ஹரி!” என உதடு பிரிக்காமல் புன்னகைத்தார்.
“அரவிந்தனா?” புருவச் சுளிப்புடன் அப்படியே உறைந்து நின்றான்.
அரவிந்தனின் திருமணத்தை சொந்த ஊரிலேயே நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தார்கள் அவன் பெற்றோர்கள். அதற்கான வேலைகளைத் தொடங்க அசோகனும் அகிலாவும் ஊருக்குச் சென்றனர் என்று ஹரி அறிந்திருந்தான். ஆனால் அதற்கும், அம்மாவின் திடீர் வருகைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க, மணிமாறனே பேசினார்.
“அரவிந்தன் அவங்ககிட்ட உன் கதையோட பிரதிகளை கொடுத்து என்கிட்ட தரச் சொல்லியிருந்தான். அத எனக்குத் தெரிஞ்சவங்களுக்கு இலவசமா கொடுக்கவும் சொல்லியிருந்தான்,” என்றதும், நண்பன் எதற்காக மேலும் நூறு பிரதிகள் வாங்கிக்கொண்டான் என்று விளங்கியது.
‘உன் அன்புக்கு அளவேயில்லடா அரவிந்தா!’ ஹரி மனத்தில் நெகிழ, மணிமாறன் தொடர்ந்து பேசினார்.
புத்தகத்தின் முன் அட்டையில் அச்சிடப்பட்டிருந்த ஓவியத்தைக் கண்டதும், மகன் தான் வரைந்த ஓவியத்தைத் தேர்ந்தெடுத்து இருக்கிறான் என வாசுகியின் முகம் பூரிப்பில் விரிந்தது என்றும் ஆனால் அப்போதும் கூட அந்த புத்தகத்தைக் கையால் தொடாத அளவிற்கு வீம்பு பிடித்தார் என மணிமாறன் தங்கையின் மனப்போராட்டங்களைக் கூற, ஹரியின் முகம் ஏமாற்றத்தில் சுருங்கியது.
“அப்புறம் எதுக்கு இங்க வரணுமாம்,” ஹரி முணுமுணுக்க,
“மொத்தத்தையும் கேளுடா,” நமுட்டாகச் சிரித்த மணிமாறன் மீதியை விவரித்தார்.
புத்தகத்தைப் படித்த அக்கம் பக்கத்தினர் வலிய வந்து வாசுகியிடம் பெருமைப்பேச, கதை எதைப்பற்றி என்று கூட அறியாமல் சிரித்து மழுப்பினார் என்றும், ஆனால் நாளிடைவில் மகனின் எழுத்துத் திறனை பற்றிய நற்செய்திகள் காதில் விழ, கதையைப் படிக்கும் ஆர்வம் அவருக்குள் மொட்டு விட்டது என்றும் மணிமாறன் கூற,
ஹரியின் செவிகளும், ‘அடுத்தென்ன!’ என்ற ரீதியில் ஆர்வத்தில் வளைந்தன.
“நீ அவளைப் பற்றியும் உன் பாட்டியைப் பற்றியும் எழுதியிருப்பன்னு அவ கொஞ்சமும் எதிர்பார்க்கல ஹரி. இத்தனை நாளா மகனின் எழுத்தை உதாசீனம் செஞ்சிட்டேன்னு புலம்பி, உடனே உன்னைப் பார்க்கணும்னு அடம்பிடிச்சா டா,” மணிமாறன் கூற, கேட்டவனுக்குக் கரைகாணா சந்தோஷம்.
“ஆனால் மீரா விஷயத்துல அவ இன்னும் அதே பிடிவாதமாத்தான் இருக்குறா ஹரி,” மணிமாறன் தலைகுனிய,
‘அதானே பெரிய சவால்!’ பெரூமுச்சுடன் தலையசைத்தவன், அன்னையின் பிரளய மழையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்துடன் மாடி ஏறினான்.
“ரெண்டு பெட்டி எடுத்துட்டு வர இவ்வளவு நேரமா?” வெகு இயல்பாக வினவிய வாசுகியின் தோரணையில் பெரும் ஆச்சரியம் ஹரிக்கு. அவர் குளித்து முடித்து, பருக ஃபில்டர் காபி தயாரித்து இருப்பதையும் கவனித்தான்.
“காபி சூப்பரா இருக்கும்மா! எத்தன நாளாச்சு உன் கையால ஃபில்டெர் காபி குடிச்சு,” அவனும் சகஜமாகப் பேச்சுக்கொடுக்க,
மேடையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவர் அவன் பக்கம் திரும்பி, “எதுக்கு ஹரி பொய் சொல்ற? உனக்கு டீ தான் பிடிக்குமுன்னு எனக்குத் தெரியாதா!” திடமாய்க் கேட்டார்.
அவர் சொன்னது முற்றிலும் உண்மைதான். அதுவும் சில மாதங்களாக மீராவின் ஏலக்காய்த் தேனீருக்கு அடிமையாகி இருந்த அவன் சுவை அரும்புகளுக்கு, வேறு எதிலும் நாட்டம் இல்லை. பதில் சொல்ல முடியாமல் அமைதியாக நகர்ந்தான்.
சமையல் செய்ய ஆயத்தமானர் ஃப்ரிட்ஜை திறந்தார். மகன் ஃப்ரிட்ஜ் வாங்கியதில் அவருக்கு எதுவும் ஆச்சரியம் இல்லை என்றாலும் அதிலிருந்த பதார்த்தங்களைப் பார்த்து புருவங்கள் உயர்த்தினார். புளிக்காய்ச்சல், வற்றல் குழம்பு, மாவு வகைகள், காய்கறி, பழங்கள் என்று நிரம்பி இருந்தது.
“சமையலுல நல்லா தேறிட்ட ஹரி!” மெச்சியவர் இட்லி மாவை எடுத்தார்.
“அம்மா! மீரா இங்க தினமும் வந்து சமைக்குறா.” தயக்கம் கிஞ்சித்தும் இல்லை அவன் குரலில்.
கேட்டவருக்குத் தான் வியப்பு. ஃப்ரிட்ஜின் பாதி திறந்த கதவின் இடுக்கில், சிலையாக நின்றார். அவர் வாய்திறந்து மீராவை ஏசுவதற்குள், மகன் முந்திகொண்டான்.
“நான் தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக்காதுன்னு தான், அவ எனக்காக வீட்டுலேயே சமைக்குறா….” ஹரி பேசுவதையும் பொருட்படுத்தாமல் சமையலறைக்குள் புகுந்தார் வாசுகி.
‘என் மகன் உடல்நலத்தில் இவ்வளவு அக்கறையாக இருப்பவள் மீது என்ன குறைகூறுவது!’ அவர் சிந்தனையில் கரைய,
அன்னையின் மனநிலை அறியாமல் அவரைப் பின்தொடர்ந்தவன், “எதுக்கும் பொய்சொல்லக் கூடாதுன்னு நீ தானேமா சொல்லுவ; அதான் உள்ளத உள்ளபடி சொன்னேன்,” என அவர் தோளினை வளைத்து, “நீ இதெல்லாம் உபயோகிக்கணும்னு அவசியமில்ல. இது உன் வீடு; உன் கிட்சென்; உனக்குப் பிடிச்சத சமைச்சு தா,” சமாதானம் செய்தான்.
வெடுக்கென்று எத்தனித்தவர், “அந்த பொண்ணுதான் சிக்கனம்னா என்னன்னே தெரியாமல் இவ்வளவு செஞ்சு வச்சிருக்கான்னா நானும் வீம்புக்கு அதயெல்லாம் கீழ கொட்டி வீணாக்கனுமா?” எனக் கழுத்தை நொடித்தார்.
“ஒருத்தருக்கு மட்டும் தனியா சமைக்க கூடாதூன்னு ஏதோ காரணம் சொன்னா…” யோசிக்காமல் பேசத்தொடங்கியவன்,
அப்படிச் சொன்னால் அவளும் கூடச் சேர்ந்து சாப்பிடுகிறாளா, குடும்பம் நடத்துகிறாளா என அம்மா கொந்தளிப்பாரே எனச் சுதாரித்துக் கொண்டவன், ராணி அக்கா, மகேஷின் குழந்தைகள் தன்னுடன் சாப்பிடுவார்கள் என மேலோட்டமாகக் கூறிவிட்டு, தனக்கு நேரம் சரியில்லை என்று நகர்ந்தான்.
அறைக்குள் சென்று கதவடைத்தவன், ‘அய்யோ ஹரி! யோசிச்சுப் பேசுடா! உண்மை விளம்பியா இருக்கேன்ற பேருல மீரா பேருக்குக் களங்கம் வரமாதிரி எதுவும் செஞ்சிடாதடா. அவ பாவம்!’ தனக்குத்தானே புத்திமதி சொல்லிக் கொண்டான்.
பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்தவரோ, ‘ஒருத்தர் மட்டும் தனியா சாப்பிடக் கூடாதூன்ற மரபு தெரிஞ்ச பொண்ணா இவ.’ மனதளில் மலைத்தார் அவர்.
மீரா நேர்த்தியாக வைத்திருந்த சமையலறையில் மேலும் ஒருமணி மணி நேரம் செலவழித்தவருக்கு அந்த நல்லெண்ணங்கள் பன்மடங்கானது. மேற்கத்திய கலாச்சாரத்தின் மோகத்தில் விழும் தலைமுறையில், இவள் இன்னும் பாரம்பரிய உணவுகளைச் சமைத்து, மகன் ஆரோக்கியம் மீது கவனமாய் இருப்பதை மூக்கைத் துளைத்த சத்துமாவு கஞ்சியும், சாம்பார் பொடியும், பறைசாற்றின.
காலை உணவு சாப்பிட்டவரின் நாவும், மீரா கைப்பக்குவத்திற்கு அடிமையானது. மிருதுவான இட்லி, தக்காளி சட்னியின் அளவான உப்பு, காரம் என்று ஒவ்வொன்றிலும், அவளுடைய அன்பும் அக்கறையும் பிரதிபலித்தது.
பெண் சமஉரிமை என்றும் பேசும் பெண்களுக்கு மத்தியில், திருமணம் கூட ஆகாத நிலையில், மகனுக்காக இத்தனை வேலைகளை செய்து வருகிறாளே என நெகிழ்ந்தார். அதேசமயத்தில், தினமும் இப்படி இவர்கள் தனிமையில் சந்திப்பது சரியா என்றும் தோன்றியது. அக்கறையா, அதிகப்பிரசங்கித்தனமா என்று பாகுபடுத்த முடியாமல் குழம்பினார்.
ஹரி வங்கிக்குப் புறப்பட, மணிமாறனும் தொழில் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாகச் சொல்லி அவனுடன் கிளம்பினார்.
வீட்டில் தனியாளாக வலம் வந்தவரின் விழிகள் பூஜை மேடையில் பதிந்தது. அன்று தான் வைத்துவிட்டுப்போன அதே ஜோடி வெள்ளி விளக்குகள்; இத்தனை மாதங்களாகியும், மீரா அவற்றை அப்புறப்படுத்தவில்லை என யோசித்தவரின் முகத்தில் மெல்லியப் புன்னகை. சுவற்றில் மாற்றியிருந்த கணவன் நிழற்பத்திற்கு முன் நின்றார்.
‘நீங்கதான் இங்க நடக்குற அத்தனைக்கும் ஒரே சாட்சி. ஹரிக்கு என்ன பதில் சொல்லணுமுன்னு எனக்குத் தெரியல. நீங்களே வழிகாட்டுங்க!” கணவரிடம் பாரத்தை இறக்கிவைத்தார்.
அலுவலகம் புறப்பட தயாராகி வண்டியில் அமர்ந்தவன், மீராவை அழைத்து, அம்மாவின் திடீர் வருகையை பற்றி சொன்னான். இரண்டு வாரம் அவள் தன்னுடன் இருப்பதை பற்றி தயங்கி தயங்கி அவன் கூற,
வங்கியின் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மீராவை அழைத்தான் ஹரி. அம்மாவின் திடீர் வருகை பற்றி அவன் தயக்கத்துடன் கூற, அவளோ, “அடுத்த ரெண்டு வாரம் என் சமையலேந்து உனக்கு விடுதலைன்னு சொல்லுடா!” கிண்டல் செய்து சிரித்தாள்.
‘விடுதலையா! உன் கைப்பக்குவத்துக்கு மெல்ல மெல்ல அடிமையாறேன் ஏக்கத்தில் தவித்தவன், அம்மா ஊரில் இருக்கும் வரை பொது இடங்களில் சந்திக்கலாமா என வினவினான்.
“எழுத்தாளரே! எனக்கு சொன்ன ரூல்ஸ் உங்களுக்கும் பொருந்தும். மாலை நேரங்களில் அம்மாவோட செலவிடுங்க. அவங்க உங்களுக்காகத்தான் ஊருலேந்து வந்திருக்காங்க,” அன்பாய் மறுத்தாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவன் கொள்கைகளுக்குச் செவிசாய்க்கப் பழகியவளுக்கு, இந்தத் தற்காலிகமான பிரிவை ஏற்கும் மனபக்குவமும் வளர்ந்திருந்தது. அவள் கொஞ்ல் பேச்சுக்கும், சிணுங்கல்களுக்கும் அடிமையானவனின் மனம்தான், இரண்டு வாரங்கள் பார்க்காமல் இருக்க முடியுமா என்று ஏங்கியது. அவன் வேறு சாக்குத் தேட,
“அது வரைக்கும் வண்டி உன்கிட்டயே இருக்கட்டும்டா. மகேஷ்கிட்ட என்னை பிக்அப் டிராப் பண்ணிக்கச் சொல்றேன்,” முடிவே செய்துவிட்டாள்.
கண்களில் ஏக்கம் வழிந்தோட சன்னியை தழுவினான் ஹரி.
‘மீரா இல்லாத குறையே தெரியாம, நான் உன்ன பாத்துக்கறேன் ஹரி! ஐ பிராமிஸ்!’ நம்பிக்கையூட்டும் சன்னியின் வார்த்தைகள் அவன் காதில் எட்டவில்லை.
‘ஐ வில் மிஸ் யு டா!” மீராவின் குரல் ரம்மியமாய்க் காதில் ஒலிக்க,
“ஐ வில் மிஸ் யு டூ மீரா!” அவன் குரலும் கரகரத்தது.
அதை உணர்ந்தவள் மறுகணமே, “ஐ லவ் யூ ஹரி!” என்றாள்.
“ம்ம்!” எதிர்முனையிலிருந்து அவ்வளவுதான் ஒலித்தது.
“ம்ம்ம்…” அவள் இழுக்க, அவள் எதிர்ப்பார்ப்பை உணர்ந்து வாய்விட்டுச் சிரித்தான் ஹரி.
“செம்ம உஷார்டா நீ!” அவன் உறுதியை மெச்சியவள், “வலிய வந்து ஐலவ்யூ சொன்ன “அந்த” நல்லவனோட காதல அலட்சிய படுத்தினேன்ல… கர்ம வினை என்னைச் சும்மா விடுமா!” அரவிந்தன் காதலை நிராகரித்ததைச் சுட்டிகாட்டி புலம்பினாள்.
அதைக்கேட்டு இன்னும் அதிகமாகச் சிரித்தவன், “அந்த நல்லவன் செஞ்ச வேலையினால தான்டி அம்மா இப்போ கிளம்பி வந்திருக்காங்க,” மாமன் மணிமாறன் சொன்ன அனைத்தையும் பகிர்ந்தான்.
“ஏதோ நல்லது நடக்கப் போகுதுன்னு என் உள்மனசு சொல்றதுடா!” உருகினாள் பாவை.
“உன் எண்னம் பலிக்கட்டும் மீரா!” அவனுக்கும் அதே நப்பாசை.
அவர்களைக் கடந்து சென்ற வான்தேவதைகள் ‘ததாஸ்து’ என வாழ்த்தவே செய்தனர். கவலையில் தோய்ந்த காதல் உள்ளங்கள் தான் அதைக் கவனிக்க மறந்தன.
பத்து நாட்களில் திரும்பி வந்து வாசுகியை அழைத்துச் செல்வதாகச் சொல்லி, ஊருக்குப் புறப்பட்டார் மணிமாறன். அலுவலக வேலை, புத்தகம் பதிப்பிடுவது என்று ஓய்வில்லாமல் உழைக்கும் மகனை மலைப்பாய் பார்த்தார் வாசுகி. இரவு பகல் பாராது, அயாரது உழைக்கும் மகனின் கண்களில் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் மட்டுமே நிறைந்திருந்தது. எனினும் அவன் காதலுக்கு மனமார சம்மதம் சொல்லமுடியாத இனம்புரியாத தயக்கத்தில் தவித்தார்.
“பாட்டி! இன்னைக்கும் மீரா அத்தை வரலியா?” பள்ளியிலிருந்து திரும்பிய ராணியின் பிள்ளைகள், கேட்டுக்கொண்டே வீட்டை நோட்டம் விட்டனர். தினமும் அவளுடன் விளையாடி, பாடம் கற்ற பிள்ளைகளுக்கு அவள் ஒரு வாரமாக வராதது விசித்திரமாக இருந்தது.
என்ன சொல்வதென்று தெரியாமல் வாசுகி முழிக்க, மீரா அத்தைக்கு உடம்பு சரியில்லை எனக் கூறி சமாளித்தாள் ராணி.
“அத்தை கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு,” முணுமுணுத்துக் கொண்டு செல்லும் குழந்தைகளைக் கண்ட வாசுகிக்குச் சங்கடமாய் இருந்தது.
தனக்குத் தெரிந்த தேங்காய் இடியாப்பம் செய்துகொண்டு ராணியின் வீட்டிற்கு நடந்தார்.
“வா… வாங்க… மா… உள்ள வாங்க மா!” தயக்கத்துடன் ராணி அழைக்க, மென்னகையுடன் உள்ளே சென்றவர், குழந்தைகளிடம் இடியாப்பத்தைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். அவர்களும் மகிழ்ச்சி ததும்ப புசித்தார்கள் என்றாலும், மீரா செய்தி தரும் விதவிதமான பதார்த்தங்களைப் பற்றி ஓயாமல் பெருமையடித்துக் கொண்டிருந்தனர்.
வாசுகியின் சுபவாம் அறிந்த ராணிக்குத் தான் பதற்றமாக இருந்தது. மீரா வந்து போவதைப் பற்றி எந்தளவுக்கு தெரியுமோ எனப் பயந்தவள்,
“அது மீரா நம்ம ஹரிக்குச் சமைக்க…” திணற,
“தெரியும் ராணி!” என்றார் வாசுகி புன்னகை முகமாக.
வாசுகியின் முகமலர்ச்சியைக் கண்டு வியந்த ராணிக்கு, காதலர்களின் புரிதலை எடுத்துச் சொல்ல இதுவே சரியான நேரம் எனத் தோன்றியது.
“மீரா இங்க தினமும் வரான்னுதான் பேரு. சமைச்சிட்டு, குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திட்டு கிளம்பிடுவா. ஹரி அதுக்கு அப்புறம் தான் வீட்டுக்கு வருவான். பேருக்குத்தான் காதலர்கள்; மற்றபடி ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கறது கூட இல்ல,” எனச் சலித்துக்கொண்டாள்.
முகத்தில் எந்த உணர்வையும் காட்டிக்கொள்ளாமல், பிறகு வருகிறேன் எனக் கூறி எழுந்தார் வாசுகி.
ராணியோ கிடைத்த சந்தர்ப்பத்தை விடுவதாக இல்லை.
“மீரா ரொம்ப நல்ல பொண்ணு மா. எல்லா விதத்திலும் ஹரிக்கு ஏத்தவ!” அழுத்திக் கூறினாள்.
அதையும் கண்டும் காணாத ரீதியில், குழந்தைகளுக்கு முத்தமிட்ட வாசகி, “ஹரி மாமா வீட்டுக்கு எப்போ வேணும்னாலும் வாங்க. பாட்டி, எனக்குத் தெரிஞ்சத நான் சமைச்சு தரேன் தங்கங்களா,” செல்லம் கொஞ்சிவிட்டு நகர்ந்தார்.
வீட்டிற்கு திரும்பியவர் கணவனின் நிழற்படம் முன் பனித்த கண்களுடன் கை கூப்பி நின்றார்.
‘உன் சந்தேகம் தீர்ந்ததா வாசுகி!’ கணவர் கேட்பதுபோல உணர்ந்தவரின் மனமும் தெளிந்தது.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது. அன்று ஹரி எழுதிய புத்தகத்தின் முன் அட்டையைத் தடவியபடி சிந்தனையில் கலந்திருந்தார் வாசுகி. பணியிலிருந்து திரும்பியவன், அதைக் கண்டதும் புத்தகத்தை குழந்தையாகப் பாவித்துக் கொஞ்சும் மீராவின் நினைவு வந்தது.
“பாட்டியும் பேரப்பிள்ளையும் விளையாடிட்டு இருக்காங்க மீரா,” தன்னவளிடம் சொல்ல வேண்டும் போல ஆசையாக இருந்தது அவனுக்கு.
அந்த மிதப்பிலேயே அவன் உள்ளே நுழைய, மகனைக் கண்டதும் படபடவென்று புத்தகத்தை மேஜையில் வைத்தார் வாசுகி.
கண்டும் காணாமல் உடை மாற்றிக்கொண்டு வந்தவன், புத்தகத்தை எடுத்துக்கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“அம்மா! நான் சொல்லப் போகுற விஷயம் உனக்குப் பிடிக்கலேனாலும் பரவாயில்ல,” என்றவனை வாசுகி ஆழமாகப் பார்த்தார்.
“நீ வரைந்து ஓவியத்தைப் புத்தகத்தின் முன்அட்டையில் போடணும்னு சொன்னதே மீராதான் ‘ம்மா,” என்றதும், தான் புத்தத்தின் அட்டைப் படத்தை வருடிக்கொண்டிருந்ததை மகன் கவனித்திருக்கிறான் என்று புரிந்து கொண்டார் வாசுகி.
அம்மாவின் கைகளைத் தன் உள்ளங்கைகளில் பத்திரப்படுத்திக் கொண்ட ஹரி, “இப்போ கதைகள் வெளியிடறுதல எனக்கு ஒரு பிடிமானம் வந்திருக்கு ‘ம்மா; முதல் கதைக்கு நல்ல வரவேற்பு; வாரயிதழில் எழுதின தொடர் கதையும் நல்லபடியா முடிஞ்சு, அடுத்த கதையும் எழுத தொடங்கிட்டேன். இரண்டாவது புத்தகமும் அடுத்த வாரம் விற்பனைக்கு வந்திடும்,” விவரித்துப் பெருமூச்சுவிட்டவன்,
“உன் விருப்பத்தை மீறி புத்தகம் பதிப்பித்திருந்தாலும் எனக்கு நன்மையாத் தானே மா நடக்குது? வங்கி வேலையாகட்டும், கதை எழுதறது ஆகட்டும், நான் இப்போ எத்தனை உற்சாகமா இருக்கேன்னு நீயும் தானே கண்கூடாக் பாக்குற?” சிந்திக்கச் சொன்னவன், “மீராவோட தூண்டுதல் இல்லாம இதெல்லாம் சாத்தியமே இல்ல ‘ம்மா. மீரா எனக்கு மனைவியா வந்தால் மட்டும்தான் சாதிக்கணும்னு இந்த வெறியும், சந்தோஷமும் என்னுள்ள நிலைச்சு நிக்கும்மா,” புரிந்துகொள்ளுமாறு மன்றாடினான்.
மீரா பெயரை உச்சரித்ததும் வாசுகியும் மகனிடம் மனம்திறந்து பேச ஆயத்தமானார். அச்சமயம் புத்தகமும் கையுமாக வீட்டிற்குள் வந்த ராணியின் பிள்ளைகள், “ஹரி மாமா! மீரா அத்தைகிட்ட ஃபோன்ல பேசினோம். அவங்களுக்கு இன்னும் உடம்பு சரியாகலையாம். வீட்டுபாடத்தை உங்ககிட்ட கத்துக்கச் சொன்னாங்க,” வாங்கையாகக் கேட்டுக் காத்திருக்க,
‘பதில் சொல்லும்மா!’ என ஹரியின் விழிகள் அன்னையிடம் கெஞ்சியது.
அவரோ அமைதியாகச் சமையலறைக்குள் புகுந்தார்.
கால் மணி நேரத்தில், மகனுக்கு பருக டீயும், குழந்தைகளுக்கு ஆப்பிள் துண்டுகளும் தந்து அவர்கள் அருகில் அமர்ந்தார்.
“ஆப்பிள் தோல் பகுதியில் நிறைய வாக்ஸ்(Wax) இருக்காம்; அது உடம்புக்கு நல்லது இல்லன்னு சொல்லி, மீரா அத்தை தோல் சீவித்தான் கொடுப்பாங்க பாட்டி,” பிள்ளைகள் பேச, ஹரியின் முகத்தில் பதற்றம் பரவியது.
குழந்தைகளைப் பார்த்து லேசாக சிரித்த வாசுகி, “அதெல்லாம் பாட்டிக்குத் தெரியாது கண்ணுங்களா; அடுத்த வாரம் உங்க மீரா அத்தை வந்து சரியா செஞ்சி தருவாங்க; இப்போ இதை சாப்பிடங்க,” என்றார்.
பிள்ளைகள் மலர்ந்த முகத்துடன் தலையசைக்க, பெற்ற பிள்ளையின் கண்கள் பளபளத்தது.
ஒரு மணி நேரத்தில் குழந்தைகள் வீட்டிற்குப் புறப்பட, கதவடைத்து அம்மா அருகில் ஓடி வந்தவன், “நீ சொன்னது நிஜம் தானா ‘ம்மா?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“ம்ம்!” என இமைகள் மூடித்திறந்தவர், “ஆனால் எனக்கொரு நிபந்தனை இருக்கு ஹரி!” என்றார்.
‘மீராவுக்கு நான் போடாத நிபந்தனையா!’ தலையைச் சிலுப்பிக்கொண்டு அசடுழிந்தவன், “சொல்லு ‘ம்மா! எதுவா இருந்தாலும் செஞ்சிடலாம்!” உற்சாகமாய்க் கேட்டான்.
“இந்தமுறை நடந்தத, கேட்டத எல்லாம் பார்க்கும்போது, அந்த பொண்ணு நல்லவதான்னு எனக்குப் புரியுது. இருந்தாலும், அவகிட்ட நீ கடன் வாங்கினது எனக்குச் சுத்தமா பிடிக்கல. என்னதான் நல்ல பொண்ணா இருந்தாலும் என் மகன் அவளைச் சார்ந்து வாழறத நெனச்சா எனக்குச் சங்கடமாயிருக்கு.
அதனால அவகிட்ட வாங்கின கடந்தொகையைத் திருப்பிக் கொடுத்துட்டு நம்ம வீட்டுப் பத்திரத்தை வாங்கிட்டு வா; அதுக்கு அப்புறம் நீ நெனச்சா மாதிரி அவளைக் கல்யாணம் செஞ்சுக்க,” வாசுகி ஒரே மூச்சில் தன் எதிர்பார்ப்புகளைச் சொல்ல,
“இன்னும் சரியா ஒரே மாசத்துல கடன் அடைச்சிடுவேன் ‘ம்மா,” மகிழ்ச்சியில் மிதந்தவன் அவரைக் கட்டியணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டான். மீராவை உடனே அழைத்து வந்து அன்னையிடம் அறிமுகம் செய்துவைக்கிறேன் எனப் பரபரத்தான்.
“அவசரப்படாத ஹரி! கடன் அடைச்சா மட்டும் போதாது. குடும்ப பொறுப்புகளை தனியா சுமக்குற அளவுக்கு, நீ உன் வரவு செலவுகளைத் திட்டமிடணும்; எந்தச் சூழ்நிலையிலும் நீ பணத்திற்கு அவளைச் சார்ந்து வாழக்கூடாது,” நேரடியாகவே தன் எண்ணத்தைத் தெரிவித்தார்.
மீரா ஒருபோதும் தன்னை, பணத்தாலோ, பதவியாலோ அதிகாரம் செய்யமாட்டாள் என்று அறிந்தவனின் மனம், அதை அம்மாவிடம் எடுத்துச் சொல்லத் துடித்தது. சொல்வதைக் காட்டிலும் செயலால் நிரூபிக்கலாம் எனத் தீர்மானித்தவன்,
“பயப்படாதே ‘ம்மா. வங்கி வேலையை ராஜினாமா செய்யமாட்டேன்; அதே சமயத்தில் அது என் எழுத்துப் பயணத்துக்குத் தடையா இருக்காது!” பணிவாகவே நம்பிக்கையூட்டினான்.
இரண்டு நாட்களில் அம்மா ஊருக்குப் புறப்பட, தன்னவளைக் காணும் ஆசையில் மாலை ஐந்து மணிக்கெல்லாம் வேலையிலிருந்து திரும்பி வந்தான் ஹரி. வெகுநாட்களுக்குப் பிறகு மீராவை நேரில் கண்ட குழந்தைகளும் அவளை விடுவதாக இல்லை. அவர்கள் விளையாடி முடித்துக் கிளம்ப ஆறு மணி ஆகியிருந்தது.
தன்னவளின் கைப்பக்குவத்தில் ஏலக்காய் டீயை சுவைத்துக் கொண்டே, அம்மாவுடன் பேசிய அத்தனையும் நினைவுகூர்ந்து ஹரி பூரிக்க,
“இப்போ என் அப்பா மட்டும்தான் டா, நம்ம காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்குறாரு,” முகத்தைத் தொங்கப்போட்டாள் பேதை.
அவள் அருகில் வந்தமர்ந்து ஆதரவாகத் தோள் சுற்றி வளைத்து அணைத்தவன், “இன்னும் ஒரே மாசம் தான்டி! உன்கிட்ட வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டா, உங்க அப்பாவும் நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லப்போறாரு,” தன்னம்பிக்கை ததும்ப பேசினான்.
அப்போதும் அவள் முகத்தில் சுரத்தே இல்லை.
அவள் முகத்தைக் கண் பார்க்க நிமிர்த்தியவன், “அப்புறம் நீ கேட்ட அந்த மூணு வார்த்தகளைச் சொல்லிச் சொல்லி உன்னை காதலிப்பேன்,” என்றதும், மீராவின் இமைகள் படபடத்து முகமெல்லாம் வெட்கம் வழிந்தோடியது.
“யாரோ வெட்கமே வராதுன்னு தர்க்கம் செஞ்சாங்க; இப்போ என்னடானா, சொல்றேன்னு சொன்னதுக்கே இவ்வளவு வெட்கப்படுறாங்க,” நமுட்டாகச் சிரித்தான் ஹரி.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல எழுத்தாளரே! என் அப்பா சம்மதத்தோட நீங்க ஐ லவ் யூ சொல்றதுகுள்ள எனக்கு நாணம், வெட்கம் எல்லாம் மறந்து போயிடும்,” முறுக்கிக்கொண்டாள் பாவை.
அவனும் விடுவதாக இல்லை. “அப்படியா!” என்று இழுத்தவன், ”நான் ரொமன்டிக்கா சொல்ல வரப்ப, நீ மட்டும் கண்சிமிட்டி பாரு… இருக்கு உனக்கு….” வாய்க்கொள்ளா புன்னகையுடன் அவன் சவால் விட,
“பார்க்கலாம்! பார்க்கலாம்! நீங்க எந்த அளவுக்கு ரொமான்டிக்கா சொல்லிக் கிழிக்குறீங்கன்னு,” குழி விழும் அவன் கன்னத்தை நறுக்கென்று கிள்ளினாள்.
ஔதாரிய குணம் கொண்டவள் தேர்ந்தெடுத்து கொடுத்த,
ஓவியம் பார்த்து மனம் மாறினாளோ;
ஒருவருக்கு மட்டும் சமைத்தல் கூடாது, மரபு அறிந்தவள் குணத்தில்,
ஐயங்கள் தீர்ந்ததோ;
ஏகபோகமாய் அக்கம்பக்கத்தினர் பாடிய புகழாரத்தில்,
எதார்தத்தைப் புரிந்து கொண்டாளோ;
ஊட்டி வளர்த்த மகனுக்கு ‘அவள்’ அன்பாய் சமைத்த
உணவு ‘இவள்’ சுயத்தை உலுக்கியதோ;
ஈன்றெடுத்த பிள்ளையின் விருப்பத்திற்கு
இணங்கி, இரக்கம் கொண்டாளோ;
ஆதுரத்தில் மலர்ந்த தெளிவு ஆயுசுக்கும் நீடிக்குமா – பதில்சொல்லும்
அவள் மகன் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்….


Please Comment Here