62 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
“நீங்க கடின உழைப்பாளி ஹரி!” பாராட்டிய ஸ்ரீராம் அவன் எழுதிய மூன்றாவது கதையின் முதல் பிரதியை மீராவிடம் தந்தார்.
வழக்கம்போல மீரா புத்தக்த்தைத் தாலாட்டிச் சீராட்ட அவளைப் பார்வையிலேயே விழுங்கினான் ஹரி. அத்தனை நாட்கள் பழக்கத்தில், ஸ்ரீராமுக்கும் கூட அவளின் வினோதமான செயல்களும் பழகியிருந்தது.
மென்சிரிப்புடன் காசோலையை ஹரியிடம் தந்தவர், “இதுவரை நான் யாருக்கும் இவ்வளவு குறுகிய காலத்துல ரெண்டாவது ராயல்டி செக் கொடுத்ததே இல்ல!” என்றார் பெருமிதம் பொங்க.
“நன்றி ஸ்ரீராம்!” என்றவன், தந்தையை மனதில் நினைத்து காசோலையைக் கண்களில் ஒற்றிக்கொண்டு பிரார்தித்தான்.
“உங்க முதல் கதையை இத்தோட நான்காவது முறையா அச்சிடறோம். இதுவரை எந்தவொரு புத்தகமும் இவ்வளவு அமோகமா விற்பனையாகி நான் பார்த்ததே இல்ல ஹரி,” மெச்சியவர், மூவரும் பார்க்க ஏதுவாக, கோப்பு ஒன்றினை மேஜையின் நடுவில் திறந்து வைத்து வரவு செலவுகளை விவரித்தார்.
“கதை எழுதறது மட்டும்தான் நான்! மற்றபடி மார்கெடிங் செய்யறது எல்லாம் என் நண்பர்கள்தான்!” பக்கவாட்டில் அமர்ந்திருந்த மீராவின் நெற்றிமுட்டி கண்சிமிட்டினான் ஹரி.
“இது உன் திறமைக்குக் கிடைச்ச சன்மானம் டா,” மீரா பதிலுக்கு அவன் புஜத்தில் தட்ட,
“இல்ல ஸ்ரீராம். ஒருத்தன் என்னன்னா வேலை செய்யுற இடத்துல, சொந்த ஊருலன்னு, தெரிஞ்ச இடத்துல எல்லாம் விநியோகம் செய்யறான்; ஒருத்தி நவராத்திரி பண்டிகையில கலந்துக்க வரவங்களுக்குத் தாம்பூலத்தில் வச்சுத் தரா; மீராவும் என் இன்னொரு நண்பனும், படிவம் மூலமா ஆர்டர் செஞ்சவங்களுக்கு நேருலயே போய் கொடுக்குறது போதாதுன்னு, கூடுதல் பிரதிகள் வேற வித்துட்டு வராங்க,” தன்னவளைப் பார்வையால் ஊடுருவியவன், ஸ்ரீராம் பக்கம் திரும்பி, “இவங்க இப்படியே செஞ்சாங்கன்னா, நாலு என்ன…. பத்து முறை கூட நீங்க அச்சிட வேண்டியிருக்கும்,” என்றான் கன்னத்தில் குழி விழ சிரித்தபடி.
பெருந்தன்மையுடன் பேசும் காதல் ஜோடிகளை பிரமிப்பாய் பார்த்த ஸ்ரீராம், “நீங்க வேடிக்கையா சொன்னாலும், அவங்க எல்லாரும் உங்கமேல வச்சிருக்க அன்பு அதுல தெரியுது ஹரி. இப்படிப்பட்ட நண்பர்கள் கிடைச்சது உங்க நல்லதிர்ஷ்டம்,” என்றார்.
அதை எப்படி மறுக்க முடியும் என்பதுபோல தலையசைத்தவன், அவர் அலுவல் நேரம் எனக் கருத்தில் கொண்டு, “அடுத்து நம்ம த்ரில்லர் கதையை வெளியிடலாமா?” பணி சார்ந்த விஷயங்களைப் பேசினான்.
சிறந்த குடும்ப நாவல்கள் எழுதும் எழுத்தாளர் எனப் பிரபலமாகிவரும் இந்த நேரத்தில் ஹரி திகில் நாவல்கள் பதிப்பித்தால் அது வாசகர்களிடையே எந்தளவுக்கு வரவேற்பு பெறும் எனத் தயங்கினார் ஸ்ரீராம்.
“எனக்கும் அந்தப் பயம் இருக்குது ஸ்ரீராம். ஆனால் முயற்சி செய்து பார்த்தால் தானே வெற்றியா தோல்வியான்னு தெரியும்?” ஹரி திடமாக வினவ, துணிந்து பேசும் தன்னவனை இமைக்காமல் பார்த்தாள் மீரா.
அனைவரின் கண்ணோட்டங்களையும் அலசி ஆராய்ந்தவர், “நாம வேணும்னா அந்தக் கதையை வாரயிதழில் தொடர் கதையா பதிவிட்டுப் பார்க்கலாமா ஹரி? அதில் மக்கள்கிட்டேந்து நல்ல வரவேற்பு கிடைச்சா, கண்டிப்பா புத்தகமா வெளியிடலாம். இல்லேன்னா, எப்படி அதை மேம்படுத்தலாம்னு யோசிச்சு நிதானமா வெளியிடலாம்,” யோசனைச் சொன்னார்.
வேண்டாம் என்று புறம்தள்ளாமல் தன் நலன் கருதி பேசும் அவர் அன்பில் நெக்குருகிப் போனான் ஹரி.
“அப்படியே செய்யலாம் ஸ்ரீராம்!” சம்மதம் தெரிவித்தவன், “தூணாய் தோள் கொடுக்கும் நண்பர்கள் மட்டுமில்ல… உங்க அறிமுகம் கிடைச்சதும் என் நல்லதிர்ஷ்டம் தான் ஸ்ரீராம்,” மனதார கூறினான்.
மென்னகையுடன் அவன் எழுத்தாற்றலை மெச்சி, தற்போது அச்சிடவிருக்கும் புத்தகத்தைப் பற்றி பேசியவர், “புத்தகத்துல போட சமீபத்தில் எடுத்த புகைப்படம் இருந்தால் தாங்க ஹரி. அந்த சிவப்பு சட்டை கண் கூசுற மாதிரி இருக்குது…” சொல்லி முடிப்பதற்குள்,
“ம்ஹூம்! அது ரொம்ப ராசியான சட்டை ஸ்ரீராம்,” உருகியவன், மீராவின் தோள் சுற்றி வளைத்த விதத்திலேயே மீதியைப் புரிந்து கொண்டார்.
“அன்னைக்கு அரவிந்தனை வம்பிழுக்கத் தான் அப்படிப் பேசினேன்டா. ஸ்ரீராம் சொல்ற மாதிரி வேற ஃபோட்டோ தரலாம் ஹரி,” இரண்டு குவளைகள் ஏலக்காய் தேனீருடன் அவன் அருகில் அமர்ந்துகொண்டாள் மீரா.
“யார் என்ன சொன்னாலும் அந்த ரெட் ஷர்ட் எனக்கு ஸ்பெஷல். என் ராஜகுமாரி வாங்கித்தந்த முதல் பரிசு. என் பொக்கிஷம்!” அவள் மூக்கின் நுனியை உரசி உரிமையுடன் ஒரு குவளையைப் பிடுங்கிக்கொண்டான்.
“மாசத்துக்கு ஒண்ணு வாங்கித்தரேன்னு சொல்றேன்; அந்த இத்துப்போன சட்டைக்கு இவ்வளவு வியாக்கியானம் பேசுற,” கண்கள் சுருக்கி முணுமுணுத்தாள் பேதை.
அவள் முகபாவனைகளை ரசித்தவனுக்கு மேலும் சீண்ட வேண்டும் என்றிருந்தது.
“வாங்கிக்க நான் ரெடிமா! உன் அப்பாதான் சமயம் பார்த்து ஊருக்கு போயிருக்காரு,” பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, அவர் சம்மதம் பெற ஆவலாகக் காத்திருப்பதைக் குறிப்பிட்டான்.
“அதான் எல்லாம் கைக்கூடி வருதுன்னு தெரியுதுல? உங்க கொள்கைகளைக் கொஞ்சம் தளர்த்திக்கிட்டாதான் என்ன எழுத்தாளரே?” சிணுங்கியவள், “ஹரின்னு பேரு வெச்சா, பெரிய அரிச்சந்திர சக்கரவர்த்தின்னு நெனப்பு!” புலம்பிக்கொண்டே காலி டம்ளர்களுடன் சமையலறைக்குள் நுழைந்தாள்.
படார் படார் என்று கேரட்டை நறுக்கிக் கொண்டிருந்த கோபாக்கினி அருகில் நடந்தவன், “நம்ம சேர்ந்து சமைக்கலாம் மீரா. என்னோட டின்னர் சாப்பிட்டுக் கிளம்பு!” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
வெடுக்கென எத்தனித்தவள், “என்மேல பரிதாபப்பட்டு உங்கள யாரும் காதலிக்க சொல்லல. நீங்களே மிச்ச சமையல செஞ்சு சாப்பிட்டுக்கோங்க,” இமைக்கும் நொடியில் கதவை நோக்கி வேகநடையிட்டாள்.
“இப்படி என்னையும் சமையலையும் பாதியிலேயே விட்டுட்டுப் போகுறது நியாயமே இல்லடி!” கெஞ்சிக்கொண்டே அவன் பின்தொடர்ந்த போதும், பாவையின் மனமோ சற்றும் இளகவில்லை.
“போகாம இருந்தா ஐலவ்யூ சொல்லுவீங்களா எழுத்தாளரே; சமைச்சா ஊட்டிவிடுவீங்களா?” கண்களை உருட்டி நிபந்தனையிட்டாள்.
“நாலு நாளுல நீ கேட்டதை எல்லாம் செய்யறேன் மீரா,” அவள் தந்தை சம்மதம் கிடைத்ததும் செய்கிறேன் என அவன் சொல்லாமல் சொல்ல,
தழைந்து போக மனமில்லாதவள், “அப்போ நானும் நாலு நாளுக்கு அப்புறம் வந்து சமைச்சுத்தரேன்,” கறாராகப் பேசி வெளியேறினாள்.
வண்டியை உயிர்ப்பித்தவளுக்கு ஏனோ ஒரு தயக்கம். அவன் காதில் விழும் அளவிற்கு விடாமல் ஹார்ன் அடித்தாள். ஹரியும் பால்கனிக்குப் பறந்தோடி வந்தான்.
“எழுத்தாளரே! இந்த நாலு நாள் முடிஞ்ச அளவுக்கு உங்க பேச்சுலர் லைஃப் எஞ்சோய் பண்ணிக்கோங்க. அதுக்கு அப்புறம் நான் சொல்றதுதான் சட்டம். வீட்டுக்குப் போ, சந்திக்காதன்னு விரட்டி விடுற வேலையே வேண்டாம்!” ஆள்காட்டி விரலை சுழற்றி மிரட்டினாள்.
‘நானே உன்னை விடமாட்டேன்!’ தனக்குள் சிரித்துக்கொண்டவன், “சரி! சரி! கிளம்பு!” என்று விரட்டிவிட்டான்.
இதற்கிடையில் மகப்பேறு விடுப்பு முடிந்து கீதாவும் பணிக்குத் திரும்பியிருந்தாள். அவள் வருகை ஹரிக்குத்தான் பெரும் உதவியாக இருந்தது. அவன் பணிச்சுமைகள் அறிந்து அவள் முன்வந்து உதவ, ஹரியால் வங்கித் தேர்வுக்கான பயிற்சியில் அதிக கவனம் செலுத்த முடிந்தது. அதன் விளைவாக நல்ல மதிப்பெண்கள் பெற்று பதவி உயர்வும் பெற்றிருந்தான்.
“கல்யாண பத்திரிக்கை கொடுக்க நானும் அஞ்சலியும் நாளைக்கு உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கோம். ரமேஷ் ஊருல இருக்காறா?” மதிய உணவு இடைவேளையில் சந்தித்த தோழியிடம் கேட்டான் அரவிந்தன்.
“அதெல்லாம் இருக்காரு,” நமுட்டாகச் சிரித்தவள், “அடேய்! அதான் கல்யாணத்துக்கு அப்புறம் அஞ்சலி உன்கூடவே தான இருக்கப்போகுறா; இப்படியா அட்டை மாதிரி ஒட்டிட்டுச் சுத்துவ!” கிண்டல் செய்து, அருகில் அமர்ந்திருந்த ஹரியின் தோளினைத் தட்டி, “இவனைப் பாரு! காதலிச்சாலும் எவ்வளவு பொறுப்பா, வேலை, பிரமோஷன்னு பாடுப்படறான்,” எனக் கலகலத்தாள்.
“குழந்தை குடும்பமுன்னு ஆனதுக்கு அப்புறம் கிழவி மாதிரி யோசிக்குற டி; அதான் என்னை மாதிரி வாலிபர்களோட காதல் ஃபீலிங்க்ஸ் உனக்கு விளங்கல…” அரவிந்தன் பதிலுக்குக் கலாய்க்க,
“அடப்பாவி!” கண்கள் அகல சண்டைக்குப் பாய்ந்தாள் கீதா.
நண்பன் காதல் கதையை அறிந்த ஹரி, “அவனைக் கிண்டல் செய்யாத கீதா; அவன் அந்தளவுக்கு அஞ்சலிய நேசிக்கிறான்,” பரிந்து பேச,
“இவன் மட்டும் என்னவாம்; மீராவுக்காக தான் இத்தனையும் செய்யறான்!” இடைபுகுந்தான் அரவிந்தன்.
“போதும்டா உங்க புகழாரம்; உலகத்துக்கே தெரியும், நீங்க ரெண்டுபேரும் நட்புக்குப் பெயர் போனவங்கன்னு!” சலித்துக்கொண்டவள் எழுந்துகொள்ள,
அவள் கரம் பிடித்துத் தடுத்த ஹரி, “உன் நட்பும்தான் உயர்ந்தது டி; நீ கொடுத்த யோசனையில் தான் என் புத்தகம் பலர் கையில போய் சேர்ந்துது. வேலையிலும் என்னால சுலபமா அடுத்த கட்டத்துக்கு போக முடிஞ்சிது,” அடிமனத்திலிருந்து உரைத்தான்.
ஹரியின் இளகிய சுபாவத்தை அவளும் அறிந்திருந்தாள்.
“இட்ஸ் ஓகேடா! இவங்க எல்லாரும் செய்யறதோட ஒப்பிட்டால் நான் செஞ்சது ஒண்ணுமே இல்ல ஹரி,” கீதா பதிலுக்கு உருக,
“ம்ஹூம்! நீ செஞ்சது ஒவ்வொண்ணும் என் லட்சியப் பாதையின் முக்கிய திருப்பு முனை கீதா,” ஹரி அழுத்திக் கூற,
மாறி மாறி உணர்ச்சிவசப்படும் நண்பர்கள் கண்ணீர் சிந்தாமல் நிறுத்தமாட்டார்கள் என உணர்ந்த அரவிந்தன், “சென்டிமென்டா பேசி உனக்கு வயசாகிடுத்துன்னு நிரூபிக்காத டி,” தோள்கள் குலுங்க சிரித்தான்.
“உனக்கு எல்லாமே விளையாட்டு தான்டா!” நறுக்கென அவன் புஜத்தில் கிள்ளி அங்கிருந்து நகர்ந்தாள்.
அரவிந்தனும் எழுந்துகொள்ள, “அடுத்த வாரத்தில் ஒருநாள் மீரா வீட்டுக்கும் நேருல போய் பத்திரிக்கை கொடுத்துட்டு வா அரவிந்தா!” மெல்லமாக உரைத்தான் ஹரி.
அரவிந்தனின் புருவங்கள் வியப்பில் வளைந்தன.
மீராவுக்குத் தரவிருக்கும் பணத்தைச் சேமித்துவிட்டதாக விவரித்தவன், அதை மீராவின் அப்பாவிடமே தந்து அப்படியே தங்கள் திருமணத்தைப் பற்றி பேசிவிட்டு வரப்போவதாக ஹரி தன் திட்டங்களைக் கூற, அரவிந்தன் நெகிழ்சியில் மிதந்தான். நண்பனுக்கு நல்லது நடக்கட்டும் என்று வாழ்த்தி, மீரா வீட்டிற்குப் போய்வருவதாகச் சொல்லிச் சம்மதம் தெரிவித்தான்.
அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று புரியாமல் மௌனமாக அமரிந்திருந்தார் வரதன். அவர் வலது புறம் இருந்த அதே ராசியான சோஃபாவில் நிமிர்ந்து அமர்ந்திருந்தான் ஹரி.
இரண்டு புத்தகங்கள் பதிப்பித்து விற்றதில் மீரா தன்னை நம்பி முதலீடு செய்திருந்த மொத்த தொகையும் லாபத்துடன் திருப்பிவிட்டதாக அகம் மகிழ்ந்து உரைத்து அவரிடம் காசோலையை நீட்டினான்.
வழக்கம்போல இறுகிய முகத்துடன் சிலையாக அமர்ந்திருந்தார் மனிதர்.
நொடிகள் நிமிடங்களாக, “ப்ளீஸ் வாங்கிகோங்க ‘ப்பா,” கெஞ்சினாள் மீரா.
“என்னைக் கேட்டா இதெல்லாம் செஞ்ச? உன் பணம்; உன் காதல்; உன் வாழ்க்கை; நான் எதுலையும் தலையிடறதா இல்ல,” தேக்கிவைத்த ஆத்திரம் அனைத்தையும் மகளிடம் கொட்டியவர் அங்கிருந்து எழுந்துகொள்ள,
“ஒரு நிமிஷம் நில்லுங்க!” கணீர் என்று குரல் கொடுத்தார் நிர்மலா.
மூவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியது.
“நம்ம பொண்ணு சொன்ன ஒரே காரணத்துக்காக ஹரி கடினமா உழைச்சது மட்டுமில்லாமல் சாதிச்சிட்டும் வந்திருக்காரு. இப்பவும் நீங்க இவ்வளவு வெறுத்துப் பேசினால் என்ன அர்த்தம்?” வாதாடினார் நிர்மலா.
மனைவியும் அவர்கள் பக்கம் சாய்ந்ததை எண்ணி கடுப்பானவர், “ஹாஹா! இதுக்குப் பேரு உழைப்பா!” பெருங்குரலில் சிரித்தார்.
“ஏதோ ரெண்டு புத்தகங்கள் நல்லா விற்பனையானா, அவனை ஒரு பிரபலமான எழுத்தாளாருன்னு தலையில தூக்கி வெச்சு கொண்டாட சொல்றியா?” கேள்வியை திருப்ப, குதர்க்கமாகப் பேசும் இவருக்கு என்ன பதில்சொல்வது எனத் தெரியாமல் முழித்தார் நிர்மலா.
“நீங்க சொன்னா மாதிரியே ஹரி எனக்கு ஏத்தவனா தன்னை உயர்த்திட்டு வந்திருக்கான் ‘ப்பா; இதுக்குமேல அவன் என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க?” கெஞ்சினாள் மீரா.
“இதெல்லாம் காதலிக்குறதுக்கு முன்னாடியே செஞ்சிருக்கணும்னு சொல்றேன்,” அவரும் இடித்துக்காட்ட தயங்கவில்லை.
ஹரி பேச்சுக்கு இணங்கி அவனை வெளியே கடன் வாங்க விட்டிருந்தால் இந்த மனஸ்தாபங்களுக்கே இடம் இருந்திருக்காதே எனக் குற்றவுணர்ச்சியில் துடிதுடித்த பேதையும் தலைகுனிய, எல்லார் வாயையும் அடைத்துவிட்டு இறுமாப்பில் தன் அறையை நோக்கி நகர்ந்தார் வரதன்.
“ஆசைப்படுற விஷயத்தை நெனச்சவுடனே செய்யுற தைரியம் எல்லாருக்கும் வந்துடாது அங்கிள். யாராவது நம்மமேல நம்பிக்கை வெச்சு ஒரு சின்ன ஊக்கம் தரமாட்டாங்களான்னு ஏங்குவோம்,” தாழ்ந்த குரலில் தொடங்கிய ஹரி, “மீரா அப்படியொரு நம்பிக்கை வார்த்தை சொன்ன பிறகுதான் எனக்கும் துணிஞ்சு இறங்கணும்னு தைரியம் வந்துது. சாதிக்குறதுக்கு உண்மையான உழைப்பு போதும்னு மண்டையில் உரைச்சுது,” மனம்திறந்து பேசினான்.
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அவன் கள்ளம் கபடமில்லாத குணத்தையும் குதர்க்கமாகவே பார்த்தார் வரதன்.
“யாராவது வந்து நமக்கு ஊக்கம் தருவாங்களா உதவி செய்யுவாங்களான்னு யோசிக்குற நீ, நாளைக்குக் குடும்பப் பொறுப்புகளை எப்படிச் சுமப்ப?” ஏசியவர்,
“இங்க பாரு மீரா! காதல் கண்ணை மறைக்கும்ன்னு சொல்லுவாங்க. இப்படி ஆசை வார்த்தை பேசுறவனையும், அனுதாபம் எதிர்பார்க்குறவனையும் கல்யாணம் செய்துக்கணுமான்னு யோசி,” மகளிடமும் எதிர்மறையாகவே பேசினார்.
“அப்பா! ஹரி மேல காதல் வரத்துக்கு முன்னாலேயே அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன். ஆசை வார்த்தை பேசி என்னை ஏமாத்தணும்னு அவனுக்கு அவசியம் இல்லை. சொல்லபோனால் நான்தான் முதல்ல ப்ரபோஸ் பண்ணேன்,” தந்தையிடம் தர்க்கம் செய்தவளின் விழிகள் தன்னவனை ஆற்றாமையில் தழுவியது.
மறுத்துப் பேசவேண்டும் என்ற மனநிலையில் இருந்தவர் மகள் சொன்ன அனைத்தையும் தனக்குச் சாதகமாகவே திருப்பிக்கொண்டார்.
“நீ ஒரு தோழியா பழகும் போதெல்லாம் முன்னேற எந்த முயற்சியும் எடுக்காதவன், கல்யாணம் செஞ்சுக்குறேன்னு சொன்னதும் உழைக்குறா மாதிரி நடிக்கிறான் ‘ம்மா. அவன் தந்திரம் உனக்குப் புரியலையா மீரா?” வரதன் சுட்டிக்காட்ட,
“அப்பா!!!” கொந்தளித்தாள் மீரா.
ஆனால் ஹரியோ, ‘வரதன் பழிச்சுமத்துவது போல தனக்குக் கெட்ட எண்ணம் இல்லை என்றாலும், மீரா காதலைச் சொன்னப் பிறகுதானே என்னிடம் இத்தனை மாற்றங்கள்!’ எனக் கூனிக்குறுகி நின்றான்.
ஹரியின் அமைதி அவர் ஆணவத்திற்குத் தீணியாக, “எழுதி வச்சுக்கோ மீரா! உங்க கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷமே இவன் பழையபடி சோம்பேறியா மாறிடுவான். அப்புறம், காலத்துக்கும் நீதான் அவனுக்கு உழச்சுக்கொட்ட வேண்டியிருக்கும்,” கர்ஜித்தவர், அவர்கள் பதிலுக்குக் காத்திராது தன் அறைக்குள் புகுந்துகொண்டார்.
“இப்படி அமைதியா நிற்காதடா ஹரி. ஏதாவது பேசு,” மீரா அவன் சட்டையை உலுக்கியதில் சுயத்திற்கு வந்தவன்,
“விடு மீரா. இது ஒண்ணும் முதல்முறை இல்லையே!” பழகிவிட்டது என்று பனித்தக் கண்களுடன் புன்னகைத்தவன், அவளையும் அவரிடம் வாதம் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டு புறப்பட்டான்.
“தம்பி, ஒரு நிமிஷம் நில்லுப்பா!” தடுத்த நிர்மலா, அன்று அவன் கொடுத்திருந்த பத்திரங்கள் அடங்கிய கவரை எடுத்து வந்தார்.
“இதை நான் அங்கிள் கையாலேயே வாங்கிக்கணும்னு ஆசைப்படுறேன் ஆன்ட்டி,” பணிவாக மறுத்தான் ஹரி.
காசோலையாவது எடுத்துச் செல்லச் சொல்லி நிர்மலா கூற, “அது மீராவுக்குச் சொந்தம்!” எனக் கூறி வெளியேறினான்.
ஏமாற்றங்களை மறந்து ஹரி இயல்பாகப் பேசிப் பழகிய போதும் மீரா அவன்மேல் கோபத்தின் உச்சியில் இருந்தாள். பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டு, பத்திரத்தையும் வாங்கிக்கொள்ளாமல் அடம்பிடிக்கிறான் என அவன்மேல் எரிச்சல் மண்டியது அவளுக்கு. சந்திப்பதற்கு, சமைப்பதற்கு என அனைத்தையும் தவிர்க்க, ஒரு வாரம் ஓடியது.
அன்று மாலை வேலை முடிந்ததும் நேராக வீட்டிற்குச் சென்றவள் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்க, அவள் கைப்பேசியில் குறுஞ்செய்திகள் குவிந்த வண்ணமாய் இருந்தன. தன்னவன் தான் அனுப்புகிறான் என்று தெரிந்தும் அலட்சியம் செய்தாள்.
மகளுக்குப் பருக காபி எடுத்துவந்த நிர்மலா, கைப்பேசி இடைவிடாமல் பளிச்சிட்டுக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.
அவர் அந்தக் குறுஞ்செய்திகளைப் படிப்பதைக் கூடப் பொருட்படுத்தவில்லை அவள். நேரில் பார்த்துக்கொள்ளும் போதே காதலிக்காதவன், குறுஞ்செய்தியில் காதல் கவிதைகள் அனுப்பிவிடுவானா என்ற எகத்தாளம் அவளுக்கு!
“மீரா! வந்து டீ போட்டுக் கொடுடி! உன் கையால டீ குடிக்காம நாக்கே செத்து போச்சும்மா,” உரக்கப் படித்த நிர்மலாவின் முகத்தில் மெல்லிய புன்னகை.
“உன் அப்பா பண்ண தப்புக்கு, பாவம் ஹரி என்ன பண்ணுவான்; இன்னும் எத்தனை நாளுக்கு இப்படிப் பேசாம இருக்கப் போகுற?” மகளை செல்லமாகக் கடிந்தார்.
“அவர் பேசுறது புரியலேன்னா, இவன் செய்யறது சுத்தமா புரியலம்மா! ரெண்டு பேரும் சமரசமாகட்டும், அப்புறம் இவங்ககிட்ட எல்லாம் பேசுறேன்,” தீர்மானமாகச் சொல்லி, சேனலை மாற்றினாள்.
“உங்க அப்பா மனசுல என்ன இருக்குன்னு வேணும்னா புரியாமல் இருக்கலாம். ஆனால் ஹரி தெளிவா சிந்திக்குறான்,” நிர்மலா கூற, அவரை ஆழமாகப் பார்த்தாள் மீரா.
“ஆமாம் மீரா. நீ மட்டும் போதும்னு ஹரி என்னைக்குமே நினைச்சதில்ல. பணம் கொடுக்கறேன்னு நீ முன்வந்த போது எங்ககிட்ட சொல்லிட்டு வாங்கிக்க நெனச்சான். உங்க அப்பா அவ்வளவு அவமானப்படுத்தி பேசியும், அவரை மதிச்சு பணத்தைத் திருப்பிக் கொடுக்க வந்தான். எல்லாத்துக்கும் மேல, அவர் கையாலத்தான் வீட்டுப் பத்திரத்தை வாங்கிப்பேன்னு சொல்றப்ப, அவன் உங்க அப்பாவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்குறான்னு புரிஞ்சுது,” நடந்த ஒவ்வொன்றையும் நிதானமாக நினைவூட்டிச் சிந்திக்கச் சொன்னார்.
“எல்லாம் சரிதான் ‘ம்மா… ஆனால்,” மீரா தொடங்க,
“இரு மீரா. நான் பேசி முடிச்சிடுறேன்,” எனத் தடுத்தவர் மேலும் பேசினார்.
“ஆண் வாரிசு இல்லாத எங்களுடைய கடைசி காலத்தை நினைக்கும்போது எனக்கு ரொம்பக் கவலையா இருக்கும் மீரா. ஆனால் ஹரி செய்யற ஒவ்வொரு விஷயத்தைப் பார்க்கும்போதும், இவனை விட வேறுயாரும் என் மகளையும் எங்களையும் சிறப்பா அரவணைக்க முடியாதுன்னு நூறு சதவீதம் நம்பிக்கை வருது,” நிர்மலா மனம்திறந்து பேச,
“ஆமாம் ‘ம்மா! அவன் ரொம்ப நல்லவன்!” நெக்குருகி கண்ணீர் சிந்தினாள் மீரா.
“ம்ம்… ஆனால் என் கணவரோட பரிபூரண சம்மதமும் எனக்கு அதே அளவுக்கு முக்கியம் மீரா,” தன் ஆதங்கத்தையும் அழுத்திக் கூறினார்.
“அப்பாவுக்கு எப்படிப் புரியவைக்கிறதுன்னு தான்ம்மா எனக்கும் தெரியல,” சலித்துக்கொண்டாள் மீரா.
“அதுக்கு நீ முதல்ல இப்படித் தொட்டதுக்கெல்லாம் கோபப்படாமல் இரு. ஹரி சொல்படி நட; அதுபோதும்,” நிர்மலா கட்டளையிட, அம்மா அவனை எவ்வளவு உயர்வாகப் பார்க்கிறார் எனப் புரிந்துகொண்டாள் மீரா.
அடுத்த அரைமணி நேரத்தில் தன்னவன் வீட்டு வாசலில் நின்றாள்.
கதவை திறந்தவனுக்கு லாட்டரியில் பரிசு விழந்ததுபோல முகமெல்லாம் புன்னகை.
“மீரா…..” அவன் வாஞ்சையாக அழைக்க, முகத்தைத் திருப்பிக்கொண்டு ஃப்ரிட்ஜிலிருந்து பால் கவர் ஒன்றை எடுத்துக்கொண்டு சமையலறையை நோக்கி நடந்தாள்.
“ஒரு வாரமாச்சுடி உன்னைப் பார்த்துப் பேசி,” உடைந்தவன், அவளை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் திருப்பிக்கொண்டான்.
அழுத்திப் பிடித்திருக்கும் கரங்களே, அவன் மனவலியைப் பறைசாற்றியது.
“நம்ம காதல் கதையில் எந்தவித முன்னேற்றமும் இல்ல; அதை மறந்து இப்படிக் காதல் வசனமெல்லாம் பேசுறீங்களே எழுத்தாளரே!” இடித்துக்காட்டி அவன் கையை உதறினாள்.
அவள் கோபத்தைப் பொருட்படுத்தாது மீண்டும் அவளைக் கண் பார்க்க நிமிர்த்திக்கொண்டு, “நம்ம முயற்சி செஞ்சோம்; நெனச்சபடி நடக்குல; அதுக்குன்னு இப்படி உடைஞ்சுபோய் என்கிட்ட பேசாம இருக்கலாமா?” மென்மையிலும் மென்மையாகக் கெஞ்சினான்.
இமைகளை இறுக மூடிக்கொண்ட பேதையின் கண்வழியே கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடியது.
“என்னால உனக்கு எவ்வளவு அவமானம் டா! பணம் கொடுத்து உதவுறேன்ற பேருல உனக்குக் கஷ்டத்துக்கு மேல கஷ்டத்தைத் தான் கொடுத்திருக்கேன் ஹரி,” தேம்பி அழுதாள் பாவை.
இல்லை என்ற தலையசைப்போடு அவள் விழிகளை ஆதுரமாய் துடைத்துவிட்டவன், “உங்க அப்பா பேசினதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்லடி! அவர் குத்தல் பேச்சிலும் மறுப்பிலும் அவர் உன்மேல வச்சிருக்கும் அன்பு எத்தனை ஆழமானதுன்னு புரிஞ்சுது மீரா,” கூறவும் அவனை புருவங்கள் உயர்த்திப் பார்த்தாள் மீரா.
“ரெண்டு புத்தகம் விற்பனையான பணத்தை மட்டுமே நம்பி, நம்ம காதலுக்குச் சம்மதம் சொல்லாம, குடும்பப் பொறுப்புகளைத் தனியாளா ஏத்துக்க தைரியம் இருக்கான்னு கேட்டாரே… அதுலேயே உனக்குப் புரியல…. அவர் என்கிட்ட எதிர்பார்க்குறது திடமான உழைப்பு மட்டும்தான்னு,” அவள் மூக்கின் நுனியை உரசியவன்,
“மிஸ்டர்.வரதன் அவர் மகளை ராஜகுமாரியா வளர்த்துட்டாரு; அவளுக்கு வரவிருக்கும் கணவனும் அவளை மகாராணி கணக்கா உள்ளங்கையில் தாங்கணும்னு நினைக்குறதுல தப்பு இல்லையே!” எனக் கண்சிமிட்டினான்.
“இவ்வளவு தெளிவா யோசிக்குற நீ, வேலையில் உனக்குக் கிடைச்ச பிரமோஷன், இங்கிரிமெண்ட் பற்றி எல்லாம் வாய்விட்டுச் சொல்லி இருக்கலாமே டா!” ஆற்றாமையுடன் வினவினாள்.
“நான் என்ன தேர்தல் வாக்குறுதியா கொடுக்கறேன்? தற்பெருமை அடிச்சுக்கிட்டு, பட்ஜட் மாதிரி வரவு செலவு எல்லாம் அவர்கிட்ட பட்டியலிட,” அவள் தலையில் செல்லமாகக் குட்டி, “என் தேவதையை எனக்கே எனக்கு கொடுத்திடுங்கன்னு கேட்க வந்தேன் டி,” உருகியவன் அவளைத் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“எல்லாம் சரி எழுத்தாளரே! வீட்டுப் பத்திரத்தைக் கொண்டுபோய் அம்மாகிட்ட கொடுத்திருந்தீங்கன்னா, நானும் என் மாமியாருமாவது நல்லபடியா உறவாடி இருப்போம்ல,” என்று சண்டைக்குப் பாய்ந்தாள்.
“அவங்களும் என் மீராவை வெறும் பணத்தாலையும், சொத்தாலையும் மதிப்பிடக் கூடாது. உன் அன்புக்கும் நற்குணத்திற்கும் முன்னால, அதெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு புரிஞ்சுக்கணும்,” அதற்கும் பதிலைத் தயாராகவே வைத்திருந்தான் ஹரி.
“எனக்கு என்னமோ இவங்க மனசெல்லாம் மாத்த அலைஞ்சி திரிஞ்சி, தொடங்கின இடத்துலேயே வந்து நிற்கறோமேன்னு தோணுதுடா,” முணுமுணுத்துக் கொண்டே ஏலக்காய் தேனீரை கொதிக்கவிட்டு இறக்கினாள்.
வரவேற்பறையில் அமர்ந்து தன்னவனுடன் தேனீர் பருகிக் கொண்டிருந்தவளின் கண்ணில் அரவிந்தன் அஞ்சலியின் திருமண பத்திரிக்கை தென்பட்டது.
அதை ஏக்கத்துடன் வருடியவள், “என் அப்பா மட்டும் நம்ம காதலுக்குச் சம்மதம் தெரிவிச்சிருந்தா, அரவிந்தன் கல்யாணத்துல நாமளும் கொஞ்சிக் குலாவி, நம்ம கல்யாணத்துக்கு ஒத்திகை பார்த்திருக்கலாம்,” பெருமூச்சுவிட்டவள், “தலை நரைச்சதுக்கு அப்புறம் தான் நீ என்கிட்ட ஐலவ்யூ சொல்லணும்னு விதியிருந்தா அதை யாரால மாற்றமுடியும்,” எனச் சலித்துக்கொண்டாள்.
“இத்தனை ரணகளத்துலயும் இதான் உன் கவலையா?” வாய்விட்டுச் சிரித்தான் ஹரி.
“பின்ன, ராக்கெட் விடுறத பற்றியும், கப்பல் வாங்குறத பற்றியுமா கவலைப்படுவாங்க,” முகத்தைத் தொங்கப்போட்டாள் மீரா.
அவள் முகத்தை நிமிர்த்தியவன், “எத்தனை வயசானாலும் எத்தனை முறை சொன்னாலும், அந்த மூணு வார்தையை நீ வெட்கப்படுற அளவுக்கு ரொமான்டிக்கா சொல்லுவேன் பாரு,” காதலாய் மொழிந்தான்.
அவளோ பிடிவாதமாக முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டாள்.
“நம்பலாமே டி! அரவிந்தன் கல்யாணதுக்கு முன்னால உன் அப்பா மனசுமாற ஏதாவது மேஜிக் நடக்கும்னு நம்பலாமே டி!” கெஞ்சிய அவன் அன்பில் தோற்றவள், உதடு பிரிக்காத புன்னகையுடன் இமைமூடித் திறந்து தலையசைத்தாள்.
எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை என உடைகிறாள் அவள்!
எல்லாம் நிறைவாக நிகழ்கிறது என்று உறுதியளிக்கிறான் அவன்!
வியத்தகு அதிசயம் நேரும் எனக் காத்திருக்கும் உள்ளங்கள் அறியுமா,
விடாமுயற்சியை விட வேறு பெரிய மேஜிக் இல்லை என்று – பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here