68 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
“உனக்காகத்தான் எல்லாரும் காத்துட்டு இருக்காங்க மீரா,” பரபரத்தார் நிர்மலா.
“ரெண்டே நிமிஷம் ‘ம்மா!” பெருமூச்செறிந்தவள், கைப்பேசியை மறுபடியும் காதில் வைத்து, “ப்ளீஸ் ஹரி, ஏதாவது பேசுடா,”
ஐந்து நிமிடங்களாக எதுவும் பேசாமல், அழைப்பையும் துண்டிக்காமல், மௌனம் காத்த தன்னவனிடம் கெஞ்சினாள்.
“ஏன் மீரா என்கிட்ட இதைப்பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லல,” ஏமாற்றம் அவன் குரலில் தொக்கி நின்றது.
அன்று வரதனின் நிறுவனத்தின் வெள்ளி விழா. தொழில் நண்பர்கள், ஊழியர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் என சுமார் இருநூறு பேர், விழாவில் பங்கேற்க வந்திருந்தனர்.
வரதன் தன் நண்பர்களுடன் நல்லுறவாடி இருந்திருந்தால் நிச்சயமாக அவர்களையும் விழாவிற்கு அழைத்திருப்பாள் மீரா. அழைக்க முடியாத விழாவைப் பற்றி சொல்லி அவர்களைச் சங்கடப்படுத்துவதைக் காட்டிலும், சொல்லாமல் இருப்பதே மேல் என எண்ணினாள். அதுவும் அன்று ஞாயிற்றுக்கிழமை; விடுமுறை நாட்களில் நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதில்லை எனக் கணக்கிட்டவளுக்கு, மறைப்பதில் பிரச்சனை இருக்காது என்று நினைத்தாள்.
“சொல்லக்கூடாதுன்னு இல்லடா,” மெல்லத் தொடங்கியவள், உண்மை காரணத்தைச் சொல்லி மன்னிப்பை யாசிக்க, அவளின் தர்மசங்கடமான நிலையை உணர்ந்து சமாதானமானான் ஹரி.
“ஆனால் நீ இல்லாம… நான் மட்டும் எப்படி நம்ம குழந்….” தொடங்கியவன், “முதல் பிரதியை வாங்கிட்டு வரது,” சமாளிக்க, அவன் ஏக்கத்தைப் புரிந்துகொண்டாள் மீரா.
“நம்ம புத்தக குழந்தையை விட இந்த விழா எனக்குப் பெருசில்ல…” அவன் சங்கடத்தைக் களைந்தவள்,
“நீ செஞ்ச நல்ல விஷயங்களிலேயே தோண்டி தோண்டி குறை கண்டுபிடிக்குற என் அப்பாவுக்கு, உன்மேல இன்னும் வெறுப்பு வரமாதிரி ஆயிடுமோன்னு பயப்படுறேன் ஹரி,” நிதர்சனத்தை எடுத்துரைக்க, அவனும் அவளை அதற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.
முன்வாசல் கதவருகே வந்தவனின் சிந்தையெல்லாம் அவளே நிறைந்திருந்தாள். செவிகளைக் கிழிக்கும் ஹார்ன் சத்தத்தில் சுயத்திற்கு வந்த ஹரி, “அரவிந்தா! நீ எப்போடா வந்த?” கண்கள் அகல வினவினான்.
“நான் வந்து ரொம்ப நேரமாச்சு,” சலித்துக்கொண்டவன், “கூப்பிடறது கூடக் காதில் விழாத அளவுக்கு அப்படி என்னடா யோசனை?” கேள்வியைத் திருப்ப,
“அது… அது… ஸ்ரீராம பார்க்க போயிட்டு இருக்கேன்!” மேலோட்டமாய் பதிலளித்தான் ஹரி.
பதிப்பிக்கும் விஷயங்களில் ஹரிக்கு இருந்த ஈடுபாட்டை அறிந்திருந்தவன் சரி என்று தலையசைத்து,
“இதோ வரேன்!” என்று கொண்டுவந்த பைகளை எடுத்துக்கொண்டு மகேஷ் வீட்டை நோக்கி காற்றாய் பறந்தான்.
ஐந்தே நிமிடங்களில் திரும்பி வந்த அரவிந்தன், “உனக்கு எடுத்திட்டு வந்த குலாப் ஜாமுன் டப்பாவையும் மகேஷ் வீட்டுலேயே கொடுத்திருக்கேன். மறக்காம வாங்கிக்கோ; நாளைக்கு மீராவுக்கு கொடு!” படபடவென்று சொல்லி,
“என்னை வீட்டுல விட்டுட்டு, நீ வண்டி எடுத்துட்டுப் போடா,” என வண்டிச்சாவியை ஹரியிடம் நீட்டினான்.
“இரு! இரு!” நண்பனின் தோளில் வருடி அவனை ஆசுவாசப்படுத்திய ஹரி, “ஓடி வந்து ஸ்வீட் கொடுக்குற அளவுக்கு என்னடா ஸ்பெஷல்?” என்றான்.
“எங்களுக்குக் கல்யாணமாகி இன்னையோட ஒரு மாசமாச்சு டா,” அரவிந்தன் கண்சிமிட்ட,
அதைக் கேட்டுப் பக்கென்று சிரித்தவன், “இதையெல்லாமா கொண்டாடுவீங்க!” என நண்பனின் புஜத்தில் கிள்ளினான்.
அதற்கும் பூரிப்பு மின்ன பல்லிளித்தான் அரவிந்தன்.
“நீ வழியுறத பார்த்தால், இன்னும் ஏகப்பட்ட ஏற்பாடுகள் செஞ்க்சிருப்ப போல,” நமுட்டாகச் சிரித்த ஹரி, வண்டி அவர்களுக்கு உபயோகமாக இருக்குமெனக் கூறி சாவியைத் திருப்பித் தந்தான்.
“நோ வே நண்பா; சண்டே ஒருநாள் தான் நாங்க வீட்டுல இருக்கோம்; அதனால எல்லா கொண்டாட்டமும் வீட்டுல தான்னு அஞ்சலி ஸ்ட்ரிக்டா சொல்லிட்டா,” என்ற அரவிந்தன்,
“சீக்கிரம் வண்டியை எடு; அஞ்சலி எனக்காகக் காத்துட்டு இருப்பா!” என்று நண்பனை விரட்டினான்.
அரவிந்தனை வீட்டில் இறக்கிவிட்டு, பதிப்பகத்திற்கு வண்டியை செலுத்தியவனுக்கு, மீண்டும் மீராவின் நினைவு வந்தது. மீரா வராமல் பிரதியை வாங்குவதில் அவனுக்குத் துளியும் மனமில்லை; தாமதமானாலும் ஸ்ரீராம் ஊருக்கு வந்த பிறகே வாங்கிக்கொள்ளலாம் எனத் தீர்மானித்தவன், வண்டியை ஓரம்கட்டிவிட்டு அவரை அழைத்தான்.
நான்கைந்து முறை அழைத்தும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மனம் புத்தகத்தை வாங்க மறுக்க, நிதர்சனத்தை ஏற்றுக்கொள் என்றது புத்தி. சிக்னலில் காத்திருந்தவனின் மனமும் புத்தியும் சண்டையிட, பச்சை விளக்கு மாறிய நேரம், மனம் வென்றது.
நடப்பது நடக்கட்டும் என்ற தெளிவுடனும் துணிச்சலுடனும் வண்டியை வரதனின் அலுவலகத்தை நோக்கி செலுத்தினான் ஹரி.
அழையா விருந்தாளியாக விழா அறைக்குள் வந்தவனை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. விருந்தாளிகள், ஆங்காங்கே வட்டமாக நின்று அரட்டை அடித்துக்கொண்டும், விருந்து உணவு உட்கொண்டும் இருந்தனர்.
வெள்ளி ஜரிகை புட்டாகள் நிறைந்த கருநீல காக்ரா சோளியில் தாரகையாக மின்னியவளைக் கண்டுகொண்டவனின் கண்கள் குளிர்ந்தன. தந்தையும் மகளும் விருந்தினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். ஆழ்ந்து சுவாசித்தவன், நேராக வரதனை நோக்கி நடந்தான்.
“அங்கிள்!” என்ற அவன் திடமான குரலில் திரும்பிய வரதன் முழிக்க,
“ஹரி!!!” திடுக்கிட்டாள் மீரா.
“ஒரு முக்கியமான வேலையா மீராவை அழைச்சிட்டுப் போக வந்திருக்கேன். ஒருமணி நேரத்துல நானே அவளைத் திரும்ப கொண்டு வந்து விட்டுடறேன்,” அறிவித்தவன், அவர் பதிலுக்குக் காத்திராமல்,
“வா மீரா!” எனக் கண்ணசைத்து உரிமையுடன் அவள் இடது கையைப் பற்றிக்கொண்டு கம்பீர நடையிட்டான். அவன் செயலில் ஸ்தம்பித்தவளோ, கயிற்றால் கட்டி இழுக்கப்படும் பொம்மை போல, மறுகேள்வி இன்றி பின்தொடர்ந்தாள்.
இருவரின் உடல் மொழிகளைக் கவனித்த விருந்தினர்கள், தங்கள் கற்பனைக்கு எட்டிய யூகங்களை அருகில் உள்ளவர்களிடம் கிசுகிசுத்தனர்.
பெரும் சிரமத்துடன் கோபத்தை அடக்கிக்கொண்ட வரதனின் கண்கள் மனையாளைச் சுட்டெரித்தது. நிர்மலா மிகவும் சாந்தமாக இருந்தார்.
தன் அருகில் அமர்ந்திருந்த பெண்மணியிடம், “இவங்க எப்பவுமே இப்படித்தான் விஜி. பேங்க்ல ஏதாவது பிரச்சனைன்னா திடுதிடுப்புன்னு கிளம்பிடுவாங்க,” என மென்னகையுடன் தலையைச் சிலுப்பிக்கொண்டார்.
“ஓ அப்படியா!” அப்பெண்ணும் தலையசைக்க, மற்றவர்களும் அவரவர்கள் செய்து கொண்டிருந்த வேலைகளுக்குத் திரும்பினர்.
மனையாள் சமாளித்துவிட்டாள் என வரதன் நிம்மதி பெருமூச்சுவிட, அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர், “இப்போ வந்த பையன், ஒரு எழுத்தாளன் தானே?” கண்கள் சுருக்கி வினவினார்.
“அட ஆமாம்! அதான் எங்கையோ பார்த்தா மாதிரி இருக்குதேன்னு யோசிச்சேன்,” ஒத்தூதிய அவர் மனைவி, நிர்மலா பக்கம் திரும்பி, “அந்தப் பையன் எழுதின கதை புத்தகத்தைத் தானே நவராத்திரியில் தந்தீங்க?” என்றார்.
நிர்மலா கையைப் பிசைந்துகொண்டே வரதனை ஏறிட, அதற்குள் அங்கிருந்த பெண்கள் கூட்டம், ஹரியின் கதைகளைப் பற்றி பெரும் உற்சாகத்துடன் விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.
அடுத்தடுத்து வெளிவந்த புத்தகங்களில் யார் யார் எதைப் படித்திருக்கிறார்கள் எனப் போட்டிப்போட்டு அளவளாவ, ஹரியின் விசிறிகளின் எண்ணிக்கை அதிகமானது. நிர்மலாவும் அவர்களுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருக்க, தன் அலுவலகத்தின் வெள்ளி விழா, ஹரியின் எழுத்தின் வெற்றி விழாவாக மாறிக்கொண்டிருப்பதைக் கண்டும் காணாமல் அமைதியாக நின்றார் வரதன்.
தரிப்பிடத்திற்கு வந்தவள் மூச்சுவிடாமல் கேள்விகள் கேட்டு நச்சரித்தாள்.
‘இத்தனை வேலைகளைத் தைரியமா செஞ்சிட்டேன். இப்போ இவள பேசவிட்டா நான் போட்ட திட்டமெல்லாம் வீணாயிடும்,’ தனக்குத்தானே புத்திமதி சொல்லிக்கொண்டவன்,
“உன் கையால தான் கதையோட முதல் பிரதியை வாங்கணும்; கேள்வி கேட்காம வண்டில ஏறு!” அதட்டி, வண்டியைக் கண்காட்டினான்.
அவளும் அவன் அன்புக்குச் செவிசாய்க்க, பத்து நிமிடங்களில் ஸ்ரீராமின் அலுவலத்திற்கு வந்திருந்தனர்.
மீராவின் அலங்காரங்களைக் கண்டதுமே, “உங்க வீக்கென்ட் வேலையை விட்டுட்டு வந்துருக்கீங்க போல இருக்கே,” என வினவினார்.
“பரவாயில்ல ஸ்ரீராம். உங்க மனைவி எப்படி இருக்காங்க?” மீராவின் கரிசனத்தில் ஸ்ரீராம் இலகுவாய் ஆனோரோ இல்லையோ, தன்மேல் கோபமில்லை என நிம்மதி பெருமூச்சுவிட்டான் ஹரி.
“அவளுக்கு வந்தது ஃபால்ஸ் பேயின்னு இப்போ தான் சொன்னாங்க. ஆனா அதுலே ரொம்ப சோர்ந்து போனதுனால அறுவை சிகிச்சை செய்யணும்னு சொல்லியிருக்காங்க. ரொம்ப பயந்து போயிருக்கா; இரவு ஒன்பது மணிக்குள்ள நான் அங்க போனோம்!” கவலை தோய்ந்த குரலில் விளக்கினார்.
எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று மீரா ஆறுதல் சொல்ல, அவரும் சிரித்த முகத்துடன் நன்றி கூறி, முதல் பிரதியை அவளிடம் நீட்டினார்.
மீரா அவள் போக்கில் தங்கள் புத்தக குழந்தையைச் சீராட்டிப் பாராட்ட, மனையாளின் உடல்நலத்தைப் பற்றி ஹரியிடம் பகிர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார் ஸ்ரீராம்.
“தலைச்சன் பிள்ளைல்ல ஸ்ரீராம்! அதான் பயப்படுறீங்க,” குறுக்கிட்ட மீரா, புத்தகத்தை மார்போடு அணைத்துக்கொண்டு,
“எங்களுக்கும் முதல்ல அப்படித்தான் இருந்துது. இப்போ பாருங்க… நாலு பிள்ளைகள் வந்தவுடன, எல்லா சவால்களையும் தைரியமா சமாளிக்குற பக்குமவம் தானா வந்திடுத்து,” தன்னவனின் புஜத்தில் தலைசாய்த்து கண்சிமிட்டினாள்.
அவள் செய்கை வேடிக்கை பேச்சு எல்லாம் பார்த்துப் பழகியிருந்தவருக்கு, வழக்கம்போல அவள் சொல்வது பாதிக்கு மேல் புரியாத போதும், புரிந்ததுபோல தலையசைத்தார்.
“உனக்கு என்மேல கோபமே இல்லையா மீரா?” தரிப்பிடத்திற்கு வந்த மறுநொடி ஆதங்கம் பொங்க வினவினான் ஹரி.
“எனக்கு நம்ம குழந்தையவிட வேறெதுவும் முக்கியம் இல்ல ஹரி,” கண்சிமிட்டி புத்தகத்தின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தவள், “என் குழந்தையை நான் இன்னும் முழுசா கொஞ்சி முடிக்கல; சாயங்காலம் வீட்டுக்கு வருவேன்!” குழைய,
அதை உளமார ரசித்து நமுட்டாகச் சிரித்தவன் “ஆனாலும் உனக்குத் துளிக்கூட வெட்கமே இல்லடி? ஸ்ரீராம் கிட்ட அப்படியா பேசுவ!” அவள் தலையில் செல்லமாகக் குட்டினான்.
“எங்கடா முசுடு எழுத்தாளர் அதைப்பற்றி கேட்காம உருகுறாறேன்னு நெனச்சேன்,” அவள் சலித்துக்கொள்ள,
அதற்கும் உதடு பிரிக்காது தலையைச் சிலுப்பிக்கொண்டவன், “சாயங்காலாம் வீட்டுக்கு வா! உன் நண்பன் உனக்கு குலாப் ஜாமுன் கொடுத்திட்டுப் போயிருக்கான்,” அரவிந்தன் வந்துபோன காரணத்தை விளக்கினான்.
“நமக்கும் தான் இன்னைக்கு முக்கியமான நாள் தெரியுமா?” அவள் கசந்த குரலில் கூற, அம்மாவைச் சந்தித்து ஒரு மாதமானது என்பதைக் குறிப்பிடுகிறாளா எனக் குற்றவுணர்ச்சி மேலோங்க கேட்டான்.
இல்லையென்று மறுப்பாய் தலையசைத்தவள், “சாயங்காலம் வீட்டுக்கு வரப்ப சொல்றேன்; இல்லேன்னா ஏதாவது காரணம் சொல்லி வராதன்னு சொல்லிடுவீங்க எழுத்தாளரே!” சொல்லிக் கண்சிமிட்ட, அவனும் நிம்மதி பெருமூச்செறிந்து புன்னகைத்தான்.
வெள்ளி விழாவை செவ்வனே முடித்து நாலு மணியளவில் வீடு திரும்பினர் மீராவின் குடும்பத்தினர். தன்னவன் வீட்டிற்குச் செல்ல வேண்டுமே என யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு, அதை அம்மா அப்பாவிடம் எப்படிச் சொல்வது என்ற கவலை. மேலும் அவர்கள், காலையில் ஹரியுடன் சென்று வந்ததைப் பற்றியும் தன்னிடம் எதுவுமே கேட்கவில்லையே என்ற குற்றவுணர்ச்சி வேறு அவளைப் பிய்த்துத் தின்றது.
சிந்தனையில் கலந்தவளாக சோஃபாவில் ஒய்யாரமாய் கால் நீட்டி அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தமர்ந்தார் வரதன். அப்பாவுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக, நொடியில் கால்களை மடக்கி கொண்டாள் மீரா.
வியாபார அட்டை ஒன்றை சட்டைப் பாக்கட்டிலிருந்து எடுத்தவர், “அவனை என் நண்பன் ராஜசேகரன சந்திக்கச் சொல்லு!” கூறி, மகளிடம் நீட்டினார்.
என்னவனின் பெயரை கூட உச்சரிக்க மனமில்லாத அளவிற்கு இவருக்கு ஏன் இத்தனை வெறுப்பு எனக் குமுறியவள், “யார்கிட்ட கொடுக்கணும் ‘ப்பா!” கண்டும் காணாமல் கேட்டாள்.
தன் நண்பன் ராஜசேகரனின் நல்லுறவைக் கருத்தில் கொண்டவர், “அதான்… அவன்… அந்த ஹரி!” வேண்டாவெறுப்பாகக் கூற,
“என்ன விஷயமான்னு தெரிஞ்சிக்கலாமா?” அந்த அட்டையை முன்னும் பின்னும் திருப்பிக் காட்டினாள்.
தன் நண்பன், ஹரியின் கதைகளைப் பற்றி கலந்தாலோசிக்க விரும்புவதாக அவர் பொத்தாம் பொதுவாகப் பதிலளிக்க,
“உங்களுக்கு உங்க நண்பர் எவ்வளவு முக்கியமோ, அதேமாதிரி எனக்கு என் நண்பன் முக்கியம். உங்க நண்பர் ஹரியைச் சந்திச்சே ஆகணும்னு நெனச்சீங்கனா, நீங்களே அவன்கிட்ட கொடுங்க,” என்றவள், சொன்ன வேகத்தில் அந்த அட்டையை அவர் கையில் நுழைத்தாள்.
இத்தனை நாட்களாக ஹரியின் திறனை அலட்சியம் செய்துவிட்டு இன்று, யாரோ ஒரு நண்பருக்காக அவனை அடிப்பணிய சொல்கிறாரே என்ற ஆதங்கம் அவளுக்கு.
“நல்லது செய்ய நினைக்குற என்னையே எதிர்கேள்வி கேக்குற…” சிடுசிடுத்தவர், “…இருக்கட்டும் பரவாயில்ல! என்னால ஒருத்தருக்கு நன்மை ஏற்பட்டா, எனக்கும் சந்தோஷம்தான்!” மீசையில் மண் ஒட்டாத கதையாக, “எப்போ வருவான்னு கேட்டுச் சொல்லு!” என்றார்.
“இன்னைக்கே! ஆறு மணிக்கு வர சொல்றேன் ‘ப்பா!” தெளிந்த குரலில் பதிலளித்தாள் மீரா.
மீரா பகிர்ந்த தகவல்களைக் கேட்ட ஹரிக்குப் பெரும் வியப்பு. வரதனின் நண்பர் தன்னிடம் எதைப்பற்றி பேச விரும்புகிறார் என அவன் ஆர்வத்துடன் வினவ,
“அதெல்லாம் நான் கேட்கலடா. நீ வரப்ப நம்ம குழந்தையைத் தூக்கிட்டு வா,” ஒரு கணம் யோசித்தவள், “ஹான்! அப்புறம் குலாப் ஜாமுனும்,” என்றாள்.
பெருங்குரலில் சிரித்தவன், “எவ்வளவு முக்கியமான விஷயத்தைப் பற்றி கேக்குறேன், நீ என்னடான்னா…” பொய்யாகச் சலித்துக்கொள்ள,
“எழுத்தாளரே! அது உங்களுக்கும் உங்க மாமனாருக்குமான பிரச்சனை; எனக்கு என் குழந்தையும், என் நண்பன் கொண்டுவந்த ஜாமுனும் தான் முக்கியம்,” செல்லம் கொஞ்சினாள்.
“அது சரி…நமக்கு ஏதோ முக்கியமான நாள்ன்னு சொன்னீயே…” அவன் காதலாய் கேட்க, அந்த வசீகரிக்கும் குரலில் மதிமயங்கியவள்,
“இன்னையோட நான் உங்களுக்கு பிரபோஸ் செஞ்சு ஒரு வருஷமாகுது எழுத்தாளரே!” வெட்கமும் பூரிப்புமாக உரைத்தாள்.
அதைக் கேட்டவனின் மனப்பாரம் கூடியது. அவளைக் காத்திருக்க சொன்ன ஒரு வருட காலவகாசம் நெருங்கியும் தங்கள் காதல் கதைக்குத் தீர்வு கிடைக்கவில்லையே எனக் குமுறினான். அதை மானஸீகமாக உணர்ந்தவள் போல,
“இரட்டிப்பு சந்தோஷத்தோட நம்ம இந்த நாளைக் கொண்டாட போகுறோமுன்னு என் உள்மனசு சொல்லுதுடா,” நம்பிக்கை வார்த்தை கூறித் தேற்றினாள்.
ஹரி வழக்கமாக அமரும் வலதுபுற சோஃபாவில் இன்று வரதன் அமர்ந்திருக்கிறார். அதனால் அவன் நீட்ட சோஃபாவில் அமர வேண்டியதாயிற்று.
(இடமாற்றம், மனமாற்றம் தரும் என்ற நம்புவோம்.)
மீரா இருவருக்கும் பருக ஏலக்காய் டீ பரிமாறிவிட்டு, தன்னவன் பக்கத்தில் உரிமையோடு உட்கார்ந்த பின்னும் மௌனம் சாதித்தார் வரதன். அவர்கள் பனிப்போரில் சலித்துப்போயிருந்த நிர்மலா, இரவு உணவு தயாரிக்க சமையலறைக்குள் புகுந்தார். ஆயினும், அவர் செவிகள் மட்டும் வரவேற்பறையை நோக்கியே வளைந்து இருந்தது.
“சொல்லுங்க அங்கிள்! என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாமே!” ஹரியே முன்வந்து கேட்டான்.
சட்டைப் பாக்கடில் வைத்திருந்த வியாபார அட்டையை எடுத்து அவனிடன் கொடுத்தார் வரதன். அவன் அதை முன்னும் பின்னும் ஆராய, வரதன் பேசினார்.
“என் நண்பன் ராஜசேகரன் பல தரப்பு தொழில்களில் பணத்தை முதலீடு செய்யறவன். உன் கதையைத் திரைப்படமா எடுக்க ஆசைப்படறான்; அது சம்பந்தமா உன்கிட்ட பேசணுமாம்!” தகவல் சொன்னவர், கடமை முடிந்தது என்ற ரீதியில் பெருமூச்சுவிட்டார்.
அதைக்கேட்ட காதல் ஜோடிகளின் மனத்தில் பல எண்ணோட்டங்கள்.
‘கடவுளே! இது ஹரியின் கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறதே. அப்பாவிடம் முழு விவரமும் கேட்காமல், என்னவனை அவசரப்பட்டு அழைத்து அவனை மீண்டும் தர்மசங்கடத்தில் மாட்டிவிட்டேனே,” என மீரா உள்ளுக்குள் பதற,
“அங்கிள்! எனக்காக யோசிக்கும் உங்களுக்கும் உங்க நண்பருக்கும் மனசார நன்றி சொல்லிக்கிறேன்,” தொடங்கிய ஹரி,
“ஆனால் நான் என் முடிவைச் சொல்றதுக்கு முன்னாடி, அனுபவசாலியான நீங்க ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்க அங்கிள்,” கொக்கிப்போட, பேச்சுவார்த்தை சுமூகமாய் முடியாது என்று புரிந்துகொண்டார் வரதன்.
“பெரும் லாபத்தையும் புகழையும் தரும் வாய்ப்புகள் தேடி வந்தாலும், அது உங்க கொள்கைகளுக்கு எதிர்மறையா இருந்தால் நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க அங்கிள்?” என்றான்.
“அது… அது… பெரும்பாலும் கொள்கைகளுக்கு தான்…” அவர் திணற,
“கதை எழுதும் என் நோக்கம், அதை புத்தக வடிவில் நாலு பேரு படிக்கணும்னு மட்டுமே. மன்னிச்சிருங்க அங்கிள்! அதை சினிமா படமா எடுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல,” பணிவாக அதே சமயத்தில் அழுத்தமாக மறுத்தான் ஹரி.
“தேடி வரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முன்னேறுறத விட்டுட்டு அப்புறம் வாய்ப்பு கிடைக்கல; குடும்பச் சூழ்நிலைன்னு புலம்ப வேண்டியது,” முணுமுணுத்தார் வரதன்.
“புத்தக விற்பனையில் வரும் பணம் எனக்கு அவசியம்தான். ஆனால் அதுவும் என் உழைப்புக்கு நியாயமா கிடைக்க வேண்டிய அளவு இருந்தால் போதும்னு நினைக்கிறேன்,” என்ற ஹரியின் விளக்கத்தில் சுய அலசலில் இறங்கினார் வரதன்.
சினிமா போன்ற துறைகளில் அவருக்கும் பெரிதாக நாட்டம் இருக்கவில்லை. ஹரியின் முடிவில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லாத போதும், அவன் மறுப்பதற்கான காரணங்களை அறிய முயன்றார்.
திரைப்படமாக எடுக்கும் பட்சத்தில், அதிலிருந்தும் தனக்குச் சேர வேண்டிய நியாயமான பணத்தைப் பெற்றுக்கொண்டு தன் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளலாமே என மடக்கினார்.
பணத்தைத் தாண்டி, தன் எழுத்தின் மூலம் கதை படிக்கும் வாசகர்களின் மனத்தில் ஒரு இதமான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாகத் தொடங்கியவன்,
“கதை படிக்குற ஒவ்வொருத்தருக்கும், கதாபாத்திரங்களின் உருவம், அவங்கங்க கற்பனையில் தோன்றும் உருவமா இருக்கணும்னு ஆசைப்படுறேன். இதுவே திரைப்படமா எடுத்தால், பாக்குறவங்க மனசுல படத்தில் நடிக்கும் திரை நட்சத்திரங்கள் முகம் மட்டுமே மனசுல பதிஞ்சுப்போயிடும்,” விவரித்துப் பெருமூச்சுவிட்டவன்,
“அதுக்காகத் திரைப்படங்களே எடுக்கக் கூடாதுன்னு நான் சொல்ல வரல. எல்லா கதைகளையும் திரைப்படமா எடுத்துட்டா அப்புறம், மக்களுக்கு புத்தகம் படிக்குற பழக்கம் நாளிடைவுல மறந்தே போயிடும்னு நினைக்கிறேன்,” தன் எண்ணத்தைத் தெளிவுபடுத்தினான்.
நிதர்சனம் தானே எனப் புத்தி ஏற்றபோதும், வெறுப்பு ஊறிப்போயிருந்த மனம் உசுப்பிவிட்டது.
“நீ சொல்றது எழுத படிக்க தெரிஞ்சவங்களுக்கு பொருந்தும்; நம்ம ஊருல இருக்குற பாமர மக்கள் எத்தனையோ பேருக்கு உன் கதையக் கொண்டுபோய் சேர்க்க, இந்த திரைப்படம் உதவுமே!” குறுக்கு விசாரணை செய்தார்.
அதற்கும் அசரவில்லை அவன்.
படிப்பறிவு இல்லாதவர்களுக்கு உரக்கப் படித்துக் காட்டலாம் என்றும், ஆடியோ நாவல்கள் என மேற்கத்திய நாடுகளில் சமீபத்தில் வளர்ந்து வரும் நவீன வசதிகளைப் பற்றி ஆராய்ந்திருப்பதாகவும் விவரங்களை எடுத்துரைத்தான்.
மனம்தளராமல் பேசும் அவன் குணம் பிடித்திருந்தபோதும், வரவுக்கும் செலவுக்கு இழுத்துப் பிடிக்க வேண்டிய அவன் சூழ்நிலையையும் அவரால் அத்தனை எளிதில் தள்ளிவைக்க முடியவில்லை.
“நீ சொல்ற காரணமெல்லாம் பேச, கேட்க நல்லா இருக்கும். ஆனால் வாழ்க்கையில செட்டில் ஆகணும்னா, கொஞ்சம் சாமர்த்தியமா யோசிக்கணும்!” இடவலமாகத் தலையசைத்தார்.
ஏட்டிக்குப் போட்டி வாதித்தாலும் தன்னிடம் இத்தனை நேரமாக முகம் கொடுத்துப் பேசியிருக்கிறாரே எனப் பூரித்த ஹரி, வாழ்க்கை பற்றிய தன் கண்ணோட்டத்தையும் மனம் திறந்து பகிர எண்ணினான்.
“என்னை பொறுத்தவரை வாழ்க்கைல செட்டில் ஆகுறது, மானசீகமா கதை எழுதணும்; வங்கி வேலைகளைப் பொருப்பா செய்யணும்; முக்கியமா வேலைக்கும், குடும்பத்துக்கும், சரிசமமா நேரம் செலவிடணும்,” என்றவன்,
“ நீங்க கூட, குடும்பத்தோட நேரம் செலவிடணும்ன்ற ஒரே காரணத்துக்காக, லாபம் தரும் பல வியாபாரங்களை வேண்டாம்னு மறுத்திருக்கீங்கன்னு உங்க எளிமையான குணத்தைப் பற்றி மீரா என்கிட்ட சொல்லியிருக்கா,” எனத் தன்னருகில் அமர்ந்திருவளின் கண் பார்த்துப் புன்னகைத்தான் ஹரி.
அதைக் கேட்ட வரதனுக்கும் மெய்சிலிர்த்து அடங்கியபோதும், “எங்க தலைமுறையோட நிலைமை வேற; இப்போ இருக்குற விலைவாசி, போட்டி எல்லாத்தையும் சமாளிக்கணும்னா கிடைக்குற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கணும்!” விடாப்பிடியாகப் பேசினார்.
அப்போதும் ஹரி கிஞ்சித்தும் மனம் தளரவில்லை.
“உங்களை எதிர்த்துப் பேசணும்னு பேசல அங்கிள். இந்த விலைவாசி உயர்வுகள் கூட நாம பணம், பதவின்னு கண்மூடித்தனமா போட்டிப்போட்டுட்டு ஓடுறதுனால ஏற்படும் விளைவு,” நிதர்சனத்தை எடுத்துரைத்தவனுக்கு அவர் ஏன் தன்னை மடக்கி மடக்கித் தாக்குகிறார் எனப் புரியாமல் இல்லை.
“என்னால மீராவை நல்லபடியா பார்த்துக்க முடியும் அங்கிள்,” தழைந்த குரலில் கூற, புருவங்கள் உயர்த்தி அவனை ஆழமாய் பார்த்தார் வரதன்.
ஹரியின் கண்ணில் மின்னிய நேர்மையைக் கவனித்தவர் ஸ்தம்பித்துப் போக, ஹரி மேலும் பேசினான்.
“என்னால அவளுக்கு சொகுசு கார் வாங்கித்தர முடியாதுதான். ஆனால் அடிப்படை வசதிகள் கொண்ட சாதாரண கார் நிச்சயமா வாங்கித்தர முடியும்; அதேமாதிரி, லாக்கர்ல பூட்டி வெச்சுக்குற அளவுக்கு நகை வாங்கிக்கொடுக்க முடியலேனாலும், கழுத்தில் காதில் போட்டு அனுபவிக்குற அளவுக்கு நகைகள் வாங்கித்தர முடியும்,” எனத் தன்னவளின் விரல் கோத்துக்கொண்டவன்,
“நாங்க ஒருவருக்கொருவர் நேரம் செலவிட்டு எங்க நினைவடுக்கில் சேமிக்குற பசுமையான நினைவுகள்தான் எங்களோட காலத்துக்கும் வரப்போகும் சொத்து,” எனக் கண்சிமிட்டினான். மீராவும் நெகிழ்ச்சி பொங்க தலையசைத்தாள்.
ஹரியின் மனவுறுதியில் வரதனின் சுயம் ஆட்டம் கண்டது. என்றாலும் மனதார சம்மதம் சொல்ல முடியாமல் தடுமாறியவர்,
“என் நண்பன் தரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கிறதும் புறம்தள்ளறதும், உன் இஷ்டம்!” படபடத்துவிட்டு வழக்கம் போல தன் அறைக்குள் புகுந்தார்.
இத்தனை நேரம் முகம் கொடுத்து பேசியவர் தன் எண்ணத்தைப் புரிந்துகொள்வார் எனப் பெரும் நம்பிக்கையில் இருந்தான் ஹரி. அது கானல் நீராகிப் போக,
“உன்னோட அப்பா சொல்றத மறுக்கணும்னு இல்ல மீரா. சினிமா படமா எடுக்ககூடாதுன்ற எண்ணம் என் மனசுல ஆணிவேர் மாதிரி பதிஞ்சிடுத்து டி!” தலைகுனிந்து வருந்தினான்.
“நான் உன்னை ஒண்ணுமே கேட்கலியே ஹரி!” என தன் கரத்தில் அழுத்தம் கொடுத்த தேவதையைப் புருவங்கள் வளைய பார்த்தான் ஹரி.
“உனக்கு எது சரின்னு படுதோ அதை நீ துணிஞ்சு செய்; உன்மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்குடா! நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்க வேண்டாம்!” அவள் மென்னகைக்க, அதுவே அவன் குற்றவுணர்ச்சியைப் பெருக்கியது.
“அப்படிச் சொல்லாத மீரா; உன் அப்பாவைப்பற்றி, என்னைவிட உனக்குத்தான் நல்லா தெரியும்; அவர் நம்ம நல்லதுக்குத்தான் சொன்னாருன்னு உனக்குத் தோணினா அதை வெளிப்படையா சொல்லுடி. உன் சந்தோஷத்தை விட எனக்கு என் கொள்கை ஒண்ணும் பெருசு இல்ல,” தெளிந்த குரலில் பேசினான்.
“நிச்சயமா இல்லடா!” அவன் கன்னத்தை வருடியபடி மறுப்பாய்த் தலையசைத்தவள், “அவரை இம்ப்ரஸ் பண்ணனும்னு, நீ தழைஞ்சு போயிருந்தா தான் நான் வருத்தபட்டிருப்பேன் ஹரி. விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயத்துக்கு மட்டும் விட்டுக்கொடுத்தால் போதும்… எல்லாத்துக்கும் அவசியமில்ல!” தெளிவாக விளக்கி, எதைப்பற்றியும் கவலைப்படாமல் புறப்படுமாறு புன்னகைத்தாள்.
முன்வாசல் கதவருகே வந்தவன், “இருந்தாலும், இந்தநாள் இப்படி முடிஞ்சிருக்க வேண்டாம்ல,” விரக்தியில் பேச,
“எழுத்தாளரே! வரதன், வாசுகி எல்லாம், நமக்குப் பதில்சொல்ல முடியாமதான் ஓடி ஒளிஞ்சுக்குறாங்க. அவங்க தனிமையில் சிந்திக்க துவங்கிட்டாங்க. நீங்க எனக்கு ஐலவ்யூ சொல்ல ரெடியா இருங்க; நான் போய், என் நண்பன் கொடுத்த குலாப் ஜாமுன் சாப்பிடுறேன்!” திடமாகக் கூறித் தேற்றினாள்.
அவள் குறும்பு பேச்சில் நம்பிக்கை கொண்டவன், ஏக்கத்துடன் அவள் கன்னங்களை வருடி, மனமில்லாதவனாய் நகர்ந்தான்.
அறைக்குள் வந்த வரதனின் மனத்தில் பல மாற்றங்கள். குறிக்கோள் இல்லாதவன்; மகளை வசியம் செய்கிறான்; என்றெல்லாம் ஹரியைப் பற்றி அனுமானித்து இருந்தவருக்கு இன்று பல விஷயங்கள் புலப்பட்டது. காலையில் விழாவில் அவனிடம் கண்ட துணிவும், சற்றுமுன் உரையாடியதில் அவன் கொள்கையில் உறுதியாய் நின்ற தெளிவும், அவர் உள்ளத்தைக் கவரத்தான் செய்தது. எனினும் அவன் நிதி நிலைமை மனத்தை அறுக்க, அவரால் சட்டென்று ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
மேஜையில் இருந்த இரண்டு பொருட்கள், அவர் குழப்பத்திற்கு விடையளிப்பது போல காட்சியளித்தன.
தொழில் தொடங்கிய நாளில் எடுத்த புகைப்படமும், இன்று வெள்ளி விழாவின் நினைவாக ஊழியர்களுக்குப் பரிசளித்த கோப்பையும், அவர் தன் லட்சியப் பாதையில் அனுபவித்த ஏற்ற இறக்கங்களை கண்முன் நிறுத்தியது.
ஹரியும் இதற்கு விதிவிலக்கில்லை என்று புரிந்துகொண்டவரின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
அச்சமயம் விறுவிறுவென அறைக்குள் வேகநடையிட்ட நிர்மலா, “பேசிக்கிட்டு இருக்குறப்ப இப்படிக் கோபப்பட்டு, ரூமுக்கு வந்து கதவ சாத்திகிட்டா, எதுவும் மாறப்போகறது இல்ல,” கடுகடுத்து, கணவர் கையில் ஒரு புத்தகத்தைத் திணித்தார்.
தன் கதைகளைத் திரைப்படமாக எடுக்க விருப்பமில்லை என ஹரி தன் முதல் புத்தக வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்த செய்தியைத் தாங்கிய வாரயிதழ் அது.
“ஹரி உங்ககிட்ட தர்க்கம் செய்யணுமேன்னு பேசல,” நிர்மலா சுட்டிக்காட்ட,
அதை படிக்காமலேயே மூடியவர், “எனக்கும் தெரியும்டி. யோசிக்க கொஞ்சம் டைம் கொடு; நல்ல முடிவா சொல்றேன்,” என்றார் வரதன் கண்களை இறுகமூடித் திறந்து.
கணவரின் பதிலில் நெகிழ்ந்த நிர்மலா, “யோசிங்க! ஆனால் உங்க பொண்ணு உங்களவிட பிடிவாதகாரி. அதை மறந்துடாதீங்க,” உதடு பிரிக்காமல் புன்னகைத்து எச்சரிக்க,
“ம்ம்..தெரியும்!” மென்மையாய் தலையசைத்துச் சிரித்தார் வரதன்.
விடாமுயற்சி என்னும் மேஜிக் தந்தையின் மனத்தில் புகுந்து வேலைசெய்யத் தொடங்கிவிட்டது என்று மீரா மட்டும் அறிந்திருந்தால், இரட்டிப்புச் சந்தோஷத்துடனே குலாப் ஜாமுனை ருசித்திருப்பாள்.
ஔவியம் கொண்டாரோ – இல்லை
ஓராண்டு காலம் பொறுமை காத்தவர்களின்,
ஒற்றுமை கண்டு மிரண்டாரோ-மகளின்
ஐவிரல் கோர்த்தவன்- கம்பீரமாய்
ஏழேழு ஜென்மத்திற்கும் என்னவள் என்று
எடுத்துச் சொன்னதில் வியந்தாரோ!
ஊர் பார்க்க சபையில் வந்து பேசியவனின்,
உறுதியில் நிலைகுலைந்தாரோ – மீராவிற்கு
ஈடுயிணை ஆகுமா, பணமும் பதவியும்- அவன் கேட்டதில்
இவர் இறுமாப்பு தான் சரிந்ததோ!
ஆட்டம்கண்டு தோற்றது அவர் சுயம் இன்று – வென்றது
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்….


Please Comment Here