74 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
ஹரி விண்ணப்பித்திருந்த வீட்டுக்கடன் தொகை கிடைக்கவில்லை என்று மகேஷ் மனம்நொந்த விதத்திலேயே அவன் சூழ்நிலையைப் புரிந்துகொண்டார் ராணியின் கணவர் தயாளன். ஹரியின் விருப்பத்தை அறிந்த பின் அவருக்கும் வீட்டை வேறு முகம்தெரியாத மனிதர்களுக்கு விற்கத் துளியும் விருப்பமில்லை. வீட்டில் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைத்துவிட்டால் மட்டும் தனக்கும் போதும் என்றார். அரவிந்தனும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஹரிக்குக் கடனாக கொடுக்க முன்வந்தான்.
அதன் அடிப்படையில் கணக்குகளை வரைந்த மகேஷ், எஞ்சியிருந்த தொகையை, நண்பனுக்குத் தானே கடனாக கொடுக்க முடிவுசெய்தான். ஆனால் இந்தச் சமரச பேச்சுகளுக்கு எல்லாம் ஹரி செவிசாய்ப்பானா என்ற ஐயமும் அவனை வாட்டியெடுத்தது.
மூவரும் அன்று மாலையே ஹரியை நேரில் சந்தித்துப் பேசத் தீர்மானித்தனர். வீட்டுக்கடன் பற்றி பேச வருகிறேன் என மீராவிடம் மேலோட்டமாகக் கூறி, அவளையும் அங்கு இருக்குமாறு கேட்டுக்கொண்டான் மகேஷ்.
“வீட்டுக்குக் கிளம்பாம இன்னுமென்ன செஞ்சிட்டிருக்க?” வங்கியிலிருந்து திரும்பிய ஹரி, அவளைக் கண்டதும் கண்டித்தான்.
தான் வங்கிக்குத் திரும்பும் நாளை மடிக்கணினியின் நாள்காட்டியில் எண்ணிக்கொண்டு இருந்தவள், “இன்னும் சரியா முப்பத்துமூணு நாள்தான் ஹரி! அப்புறம் காலையிலேந்து உன்கூடவே இருப்பேன்டா!” நினைவூட்ட,
கன்னத்தில் குழி விழச் சிரித்தவன், “நேரமாகுது கிளம்பு!” என்று விரட்டினான்.
“எவ்வளவு ஆசையா சொல்றேன். அதை ரசிக்காம….முசுடு எழுத்தாளர்!” என அவன் கன்னத்தைக் கிள்ளியவள், மகேஷ் வீட்டுக்கடன் பற்றி பேச வரப்போவதாகவும், தன்னையும் அங்கு இருக்கச் சொன்னதாகவும் அறிவித்தாள்.
என்னஏது என அவன் விவரங்களைக் கேட்க, மகேஷ் தன்னிடமும் எதுவும் சொல்லவில்லை எனக் கூறி, அவனுக்கு ஏலக்காய் டீ தயாரிக்க நகர்ந்தாள் மீரா.
குளிக்கச் சென்றவனின் நாசிகளை ஏலக்காய் மணம் துளைக்க, அலமாரியைத் திறந்தான். அதில் ஒட்டியிருந்த நாள்காட்டி படத்தில், ‘தேவதை வரும் நாள்!’ என அவள் சற்றுமுன் குறிப்பிட்ட முப்பத்து மூன்றாவது நாளில், ஏற்கனவே தன் கைப்பட எழுதி இருந்ததை வருடினான்.
‘இதை மட்டும் என் ராஜகுமாரி கவனித்து இருந்தால்,’ எண்ணியவனின் இதழ்கள் பூரிப்பில் வளைந்தன.
அரவிந்தனும், தயாளனும் மகேஷுடன் வந்திருப்பதைக் கண்ட காதல் ஜோடி ஒருவரை ஒருவர் குழப்பத்துடன் ஏறிட்டுக்கொண்டனர்.
உள்ளே நுழையும் போதே, தோழியை வம்பிழுக்கும் அரவிந்தன் தன் இயல்புக்கு மாறாக அவ்வளவு அமைதியாக இருந்தான்.
காரில் வரும்போது, காரணம் சொல்லாமல் மகேஷ் மழுப்பியது; தேனீருக்குப் பதில் பழச்சாறு தந்த போதும் மறுக்காத அரவிந்தன்; எல்லாவற்றிருக்கும் மேலாக, வங்கி அளிக்கும் வீட்டுக்கடனுக்கும், தயாளன் இங்கு வருவதற்கும் என்ன சம்பந்தம் என அசைபோட்டவளுக்கு, வீடு வாங்க எண்ணும் தங்கள் திட்டத்தில் ஏதோ பெரிய சிக்கல் உள்ளது என்று புரிந்தது.
படிவங்கள் அடங்கியிருந்த கோப்பை ஹரியிடம் நீட்டிய மகேஷ், “நீ கேட்டிருக்கும் லோன் அமௌண்ட் சான்க்க்ஷன் ஆகலடா,” முழுவதுமாகச் சொல்லி முடிக்கும் முன்னரே, ஹரியின் முகம் ஏமாற்றத்தில் தோய்ந்தது.
“அதுல ஒண்ணும் பிரச்சனை இல்ல ஹரி. மீதி பணத்துக்கு வழி சொல்லத்தான், நாங்க உன்கிட்ட பேச வந்திருக்கோம்,” மகேஷ் இடைவிடாமல் பேச, காதலர்களுக்கு அவர்கள் வந்திருக்கும் நோக்கம் புலப்பட்டது.
விண்ணப்பித்திருக்கும் கடன் தொகை கிடைக்காத பட்சத்தில், தன்னால் பண நெருக்கடியை சமாளிக்க முடியாது எனத் திட்டவட்டமாக மறுத்தான் ஹரி.
“அவசரப்படாத ஹரி! வீடு உனக்குத்தான்,” தயாளன் நம்பிக்கையூட்ட,
இதற்கிடையில், வீட்டுக்கடன் படிவங்களை இங்கும் அங்குமாகப் புரட்டிய மீரா, “அவனுக்குத்தான் இப்போ நல்ல வருமானம் வருதே மகேஷ்! அப்படி இருந்தும் ஏன் வருமானம் போதலன்னு குறிப்பிட்டிருக்காங்க?” எனப் புருவங்கள் சுருக்கினாள்.
வீட்டுக்கடன் அங்கீகாரம் பொறுத்தவரை, நிலையான வருமானம் வருகிறதா எனச் சோதிக்க, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சம்பாதித்த பணத்தை கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்றும், ஹரி சம்பாதித்திருக்கும் ராயல்டி தொகை, சம்பள உயர்வு அனைத்தும் சமீபத்தில் கிட்டியவை என்பதால், அவற்றை மட்டுமே அடிப்படையாக வைத்து கடன் தொகை அளிக்கமுடியவில்லை என விவரித்தான்.
அதைக்கேட்ட ஹரி விரக்தியில் சிரித்தான். “இது என்னடா ஸிஸ்டம்… கடன் தொகையைக் கட்ட தகுதி இருக்கான்னு சோதிக்க தற்போதிய வருமானம் தானே முக்கியம்,” ஹரி கேட்க,
“அதானே மகேஷ்!” தன்னவனுடன் ஒத்தூதிய மீரா, “அப்படியே அது வங்கி விதிமுறைகள்னாலும், நம்ம ஹரி பற்றி உனக்குத் தெரியாதாடா,” தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
வாடகை பணத்தில் கூட, எந்தவித சன்மானமும் எதிர்ப்பார்க்காதவனை பற்றி சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று தோன்றியது மகேஷுக்கு. அதே சமயத்தில், வங்கியில் ஒரு உயர்ந்த பொறுப்பில் பணியாற்றி வரும்போதும், பாமர மக்கள்போல வெள்ளந்தியாய் கேள்வி கேட்கும் நண்பர்களை கண்ட மகேஷ் அவர்கள் வலியை உணர்ந்தான். அவன் பேச வார்த்தையின்றி போக, அரவிந்தன் பதில் சொன்னான்.
நம்ம ஹரியைப்பற்றி, லோன் கொடுக்குற அதிகாரிக்கு என்ன தெரியும்,” ஹரியின் தோள்பட்டையில் தட்டிக்கொடுத்தவன்,
“நண்பா! வங்கி நிர்வாகிகளா, நீ கேட்ட லோன் எங்களால வாங்கித்தர முடியலடா; ஆனால் நண்பர்களா எங்களால உதவ முடியும்!” என்றவுடன் ஹரிக்கு அவர்கள் திட்டம் விளங்கியது.
அதுவும் அரவிந்தன், உதவுகிறேன் என்ற பெயரில், மொத்த சுமையும் தானே சுமப்பான் என்று நன்கு அறிந்திருந்தவன், வேண்டவே வேண்டாம் எனத் தீர்க்கமாக மறுத்தான்.
“அப்படிச் சொல்லாத ஹரி! நீதான் இந்த வீட்டை வங்கிக்கணும். எனக்கு இதுல துளிக்கூட லாபம் வேண்டாம்டா. போட்ட பணம் திரும்ப கிடைச்சா போதும்….” இடைபுகுந்த தயாளனை ஆழமாகப் பார்த்தான் ஹரி.
அவர் மேலும் பேசினார். “அதுமட்டுமில்ல ஹரி! மொத்த பணத்தையும் நான் உடனே வியாபாரத்துல போடப்போகுறது இல்ல. நஷ்டம் கைமீறி போயிடக்கூடாதுன்னு முன்னெச்சரிக்கையா தான் இந்த வீட்டை விற்கறேன்,” என்றவர், தன் தொழில் நெருக்கடிகளைச் சமாளிக்க தேவையான தொகையை மீறின பணத்தை, ஹரி அவனால் முடிந்தபோது தவணை முறையில் தந்தால் போதும் என்றார்.
“லாபம் வேண்டாம்னு சொல்றது உங்க பெருந்தன்மை மாமா. உங்களுக்கு நியாயமா கிடைக்க வேண்டிய லாபத்தை, என்னுடைய சூழ்நிலைக்காக நீங்க இழக்கறதுல எனக்கு விருப்பமில்ல…” தெளிந்த குரலில் மறுத்தவன், அவரால் முடிந்தால், வீட்டை வாங்கிக்கொள்ளும் நபரிடம் தனக்கே வாடகைக்கு விடச்சொல்லி பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொண்டான்.
“மாமாவுக்குக் கொடுக்க வேண்டிய லாபத்தையும் சேர்த்து நான் உனக்குக் கடனா தரேன்டா!” அரவிந்தன் குறிக்கிட,
இடது கரத்தை வாய்மேல் விரித்து, ‘பேசாமல் இரு!’ என ஜாடை காட்டிய ஹரி, “ உதவி செய்யறேன்ற பேருல நீ என்ன செய்வன்னு எனக்குத் தெரியும்!” அரவிந்தனை மிரட்டினான்.
“வட்டிக் கூட வாங்கிக்கிறேன் டா. உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ஒப்பந்தம் போட்டுக்கலாம்,” அரவிந்தன் யோசனைகள் அடுக்கிக்கொண்டே போக,
“நோ வே நண்பா! உனக்குன்னு ஒரு குடும்பம் வந்தாச்சு;” திடமாக மறுத்தான்.
“அதெல்லாம் யோசிக்காம பேசலடா,” மகேஷ் தன் பங்குக்கு வாதம் செய்ய,
“ஹரி சொல்றது தான் சரி! லோன் வாங்கறது வேற; நீங்க உதவுறது வேற!” குறுக்கிட்டாள் மீரா.
இவளாவது எதார்த்தத்தைப் புரிந்துகொண்டாளே என ஹரி நெகிழ்ந்தது தான் தாமதம்.
“மகேஷ்! அந்த லோன் என் பேருல எடுத்தா, முழு அமௌண்ட் சான்க்க்ஷன் ஆகுமாடா?” வினவினாள் மீரா.
“கண்டிப்பா மீரா!” மகேஷும் உற்சாகம் காட்ட, அரவிந்தனின் முகமெல்லாம் பெருமிதம்.
“இல்ல மீரா! அது சரிவராது!” ஹரி தடுக்க,
அவன் சொல்வதை சற்றும் பொருட்படுத்தாதவள், “மாமா! நான் ஹரிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும். எங்க முடிவை ரெண்டு நாளுல சொன்னா போதுமா!” என்று கேட்டாள்.
தயாளனும் மனமுவந்து சம்மதித்தார்.
“நீ என்ன தலைகீழ நின்னு அடம்பிடிச்சாலும், நான் இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்டி!” ஹரியின் முகம் கோபத்தில் சிவந்தது.
காதலர்களின் வாதத்தைப் பார்த்து மிரண்ட தயாளன் புறப்பட எழுந்தார். அவர்கள் ஊடல்கள் பார்த்துப் பழகின நண்பர்கள், ஹரியின் நிலைமையை எண்ணி சிரித்து, அங்கிருந்து நகர்ந்தனர்.
இவள் என்ன சொல்லி மடக்கினாலும், தன் முடிவில் உறுதியாக இருக்கவேண்டும் என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் ஹரி. அவளோ தோள்பையை எடுத்துக்கொண்டு, “நாளைக்கு பார்க்கலாம் ஹரி!” என்று கூறி புறப்பட்டாள்.
‘இவளிடம் பேசி ஜெயிப்பது ஒரு சவால் என்றால், பேசாமல் கோபம் கொள்ளும் இவளைச் சமாதானப்படுத்துவது அதைவிட கடினமாச்சே!’ சுதாரித்துக்கொண்டவன்,
“என்னடி கோவமா?” அதட்டி அவளை வழிமறித்தான்.
“இல்ல ஹரி! நேரமாகுது; வீட்டுக்குப் போகணும்!” எதுவுமே நடக்காதது போல் பதிலளித்து கடுப்பேத்தினாள் பேதை.
“ஓ! மேடமுக்கு கோபம் வந்தா, பேசாம போகறது தான் உங்க புது யுத்தியா!” அவன் வழியை விட்டான்.
வேண்டுமென்றே அவன் முகத்திற்கு எதிரே எம்பியவள், “எழுத்தாளரே! கோபமும் கிடையாது, யுத்தியும் கிடையாது! நீங்கதானே சொன்னீங்க, நான் என்ன அடம்பிடிச்சாலும் உங்க மனச மாத்திக்க மாட்டேன்னு… அப்புறம் எதுக்கு வீணா உங்ககிட்ட வாக்குவாதம்…” நக்கலாய் பதிலளித்து நகர்ந்தாள்.
அவள் கையை அழுத்திப் பிடித்து தன் பக்கம் திருப்பியவன், “இந்த வீடு இல்லேன்னா என்ன மீரா? நாம நல்ல நிலைமைக்கு வந்தவுடன வேற வீடு வாங்கிக்கலாம்டி,” எதார்தத்தை எடுத்துரைத்தான்.
“வேற வீடு, இந்த வீட்டுக்கு ஈடாகுமா ஹரி?” மடக்கினாள் பாவை.
“உண்மைதான் மீரா; ஆனால் அதுக்காக உன்னையே நீ வருத்திக்கிறதுல எனக்குத் துளியும் விருப்பமில்ல,” மனம் திறந்து பேசினான்.
“இதுதான் ஹரி உன்கிட்ட பிரச்சனை! சந்தோஷத்தை மட்டும் அள்ளி அள்ளித்தர நினைக்குற; கஷ்டம்னு வரப்ப, மொத்தத்தையும் நீயே சுமக்கணும்னு நினைக்குற,” தேக்கி வைத்திருந்த உணர்ச்சிகளைக் கொட்டியவள், அவன் கன்னத்தை வருடி, “இது நம்ம வாழ்க்கைடா…எத்தனைமுறை சொல்றது… நீ நான்னு பிரிச்சு பார்க்காதன்னு,” மனம்நொந்து பேசினாள்.
அவள் பேசியதில் எவ்வளவு நியாயம் இருந்ததோ, தன் யூகத்திலும் அதே அளவிற்கு நியாயம் இருப்பதை புரியவைக்க நினைத்தான்.
“நான் அப்படியெல்லாம் பிரிச்சு பார்க்கல மீரா; அதான் டவுன்பேமென்ட் கட்ட உன் சேமிப்பையும், லோன் என் பேருலையும் எடுக்க சம்மதிச்சேனே,” அவனும் தன்மையாகவே நினைவூட்டினான்.
“இப்பவும் நீதான் இந்த வீட்டுக்கடன் மொத்தமும் அடைக்கபோற!” அலட்டலே இல்லாமல் சொன்னவளை ஆழமாகாப் பார்த்தான் ஹரி.
அவன் விரல் கோர்த்து வீட்டிற்குள் அழைத்து வந்தவள், “லோன் என் பேருல எடுத்தாலும், ஈ.எம்.ஐ என் எழுத்தாளர் அவர் வருமானத்துலேந்து தான் கட்டணும்…சரியா?” உரிமை கொண்டாட, பேதலித்து நின்றான் ஹரி.
அவன் இருபுறமும் தோள்பட்டையை உலுக்கியவள், “சொல்லுடா…ஈ.எம்.ஐ கட்டுவ தானே!” அப்பாவியாக முகம் வைத்துக் கேட்க, அதற்கு மெலிதாய் தலை மட்டும் அசைத்தான்.
“எழுத்தாளரே! உங்க முகத்துல ஒரு சுரத்தே இல்ல… நீங்க சரியான நேரத்துல பணம் செலுத்தலேனா, அப்புறம் வங்கி ஆளுங்க, உங்க ராஜகுமாரிய பிடிச்சு வெச்சுப்பாங்க…” மீரா கண்கள் சுருக்கிக் கொஞ்ச, வாய்விட்டுச் சிரித்தான் ஹரி.
“கட்டுவேன் டி!” கன்னத்தில் குழிவிழச் சிரித்தவன், அவள் முகத்தைக் கண் பார்க்க நிமிர்த்தி, “அப்படியே நான் பணம் கட்டலேன்னாலும், இந்த ராஜகுமாரிய அவங்க பிடிச்சு வெச்சுக்க மாட்டாங்க. ஏன்னா அவங்களுக்கு ஹரி அளவுக்குப் பொறுமை எல்லாம் இல்ல…” கிண்டல் செய்து கண்சிமிட்ட, அவளும் பொய்கோபம் கொண்டு குழைந்தாள்.
“சரி கிளம்பு! நானும் உன் வீடு வரைக்கும் வரேன்” என்றான்.
“பேசிகிட்டே நடக்க போறோமா எழுத்தாளரே!” கண்கள் அகல கேட்டாள்.
“ம்ஹூம்!” மறுப்பாய் தலையசைத்தவன், “லோன் எடுக்கறத பற்றி உன் அப்பாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாம்,” ஹரி சாதரணமாகக் கூற,
“எங்கடா சண்டைப்போடாம, பிரச்சனை தீர்ந்துதேன்னு நெனச்சேன்,” முணுமுணுத்தவள்,
“மன்னிச்சிரு ஹரி! இந்த விஷயத்தை நம்ம வீட்டுல யார்கிட்டயும் சொல்லப் போகுறதில்ல!” திட்டவட்டமாக மறுத்தாள்.
“தப்பு மீரா! அவங்க நம்ம காதலுக்கு மறுப்பு சொல்றதுனால, நாம இதைப்பற்றி மறைக்க நினைக்கறது ரொம்ப தப்புடி,” சிறுப்பிள்ளைக்கு அறிவுரை சொல்வது போல விளக்க, அப்போதும் அசரவில்லை அவள்.
“இது உன் வெற்றியின் அடுத்த படி ஹரி. என் அப்பாவும் உன் அம்மாவும் நம்மள ஆசிர்வாதம் பண்ணலேனாலும் பரவாயில்ல; சபிக்க வேண்டாம்னு நினைக்குறேன். ” தன் பயத்தைப் பகிர்ந்தாள்.
அவள் சொல்வது நிதர்சனம் என்றபோதும், வெறுப்பை மட்டுமே உமிழும் அவர்கள் நாளிடைவில், இதைப்பற்றி தெரிந்து கொண்டாலும் பிரச்சனை தானே என்று வினவினான்.
விஷயத்தை அறிபவர்கள் எப்படி இருந்தாலும் பிரச்சனை செய்வர் என்று தர்க்கம் செய்த மீரா, அவர்கள் கோபம் கொள்ளும்போது பேசிக்கொள்ளலாம் என்று மூளைச்சலவை செய்து, உடனே மகேஷ் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள்.
உடனே வந்துவிட்டார்களே எனத் திகைத்தார் தயாளன். மகேஷுக்கு அதில் பெரும் ஆச்சரியம் இல்லை.
“எப்படியும் உன் கோபம் இவகிட்ட செல்லுபடியாகாதுன்னு தெரியும்ல… இதுக்கு நீ அப்பவே சம்மதம் சொல்லி இருக்கலாம்டா!” மகேஷ் கிண்டல் செய்ய, அசடுவழிந்து நெளிந்தான் ஹரி.
வெற்றிப்புன்னகை மின்ன அந்தக் குறுகிய சோஃபாவில் ஹரியை உரசி உட்கார்ந்திருக்கும் மீராவை மனையாளிடன் சுட்டிக்காட்டிய மகேஷ், “மைதிலி, எதுக்கும் நீ இவகிட்டேன்ந்து கொஞ்சம் தள்ளியே இரு,” என்றான்.
“நீ முதல்ல லோன் எடுக்க வேண்டிய விவரங்களைச் சொல்லு. எனக்கு வீட்டுக்குக் கிளம்ப நேரமாகுது,” நண்பனை அதட்டிய மீரா, மைதிலி பக்கம் திரும்பி,
“மைத்தும்மா! முதல் பாடம்… கணவர் சொல்ற அறிவுரை எதுவுமே காதுல போட்டுக்காத!” என்றாள் இறுகிய தோணியில்.
“வாய்! வாய்!” செல்லமாகச் சிரித்த மகேஷ், படிவங்களை காட்டி விளக்கினான்.
“போன விஷயம் என்ன ஆச்சு?” இரவு உணவு உண்ண, சமையலறை மேடையில் ஏறி உட்கார்ந்து கொண்டவனுக்கு, தட்டில் சுட சுட சப்பாத்தி குருமா பரிமாறியடி வினவினாள் அஞ்சலி.
சப்பாத்தியில் தனக்கொரு வாய், மனைவிக்கு ஒரு வாய் என ஊட்டிக்கொண்டே, பிடிக்கொடுக்காமல் நழுவும் நண்பனின் பிடிவாதத்தைப் பற்றி விவரித்தான் அரவிந்தன்.
“அந்த வீட்டுல ஹரியை எப்படியாவது வாழவைக்கணும்னு மெனக்கெடற நீங்க, கடன் கொடுக்கறதுக்கு பதிலா, நீங்களே அந்த வீட்டை வாங்கிடலாமே!” மறுயோசனை சொன்னாள் அஞ்சலி.
பெருமிதம் பொங்க அவளைத் தன்னருகில் இழுத்து, சேர்த்து வளைத்து அணைத்தவன், “உன் எண்ணம் புரியுது அஞ்சலி மா. ஆனால் வீட்டுக்குச் சொந்தக்காரனாக விரும்புறவன, வாடகைக்கு வந்து தங்குன்னு எப்படிச் சொல்லமுடியும்?” கேட்க,
அரவிந்தனின் உயர்ந்த குணத்தை மெச்சினாள் அஞ்சலி. அதே சமயத்தில், யாரும் எதுவும் செய்யவில்லை என்றால், வீடு ஹரிக்குக் கிடைக்காதே என அவள் சுட்டிக்காட்ட,
கவலையில் வளையும் அவள் உதடுகளை நுணிவிரலால் வருடியவன், “அதெல்லாம் போகாது; அந்த வாயாடி இத்தனை நேரத்துக்கு ஹரிகிட்ட அடம்பிடிச்சு அவன சம்மதிக்க வெச்சிருப்பா,” மீராவின் சுபாவத்தை நினைவூட்ட, அதைக்கேட்ட அஞ்சலியும் வாய்விட்டுச் சிரித்தாள்.
சமையலறையை சுத்தம் செய்து முடித்தவர்கள் ஹாலிற்கு வந்தமர்ந்தனர். அரவிந்தனின் கையில் ஒரு கட்டு விடைத்தாள்களை நீட்டியவள்,
“ரொம்ப நெருக்கடி ‘ப்பா! கரெக்ட் பண்ணிக்கொடுங்க ப்ளீஸ்!” அவன் தாடையை குவித்து செல்லம்கொஞ்சினாள்.
“உன்னை கரெக்ட் பண்ண வீட்டுக்கு வந்தா, இத கரெக்ட் பண்ண சொல்ற,” விடைத்தாள்களை உயர்த்திக் காட்டி சலித்துக்கொண்டான் அவன்.
“ஒரே ஒருமணி நேரம்தான்… ஐ பிராமிஸ்… அப்புறம் “ஒன்லி” ரொமான்ஸ்!” என்றவளின் குறும்புப் பார்வையில் மயங்கியவன் சொன்னதை செய்தான்.
வணங்காமல் விடைத்தாளைத் திருத்தி கொண்டிருந்தவனின் கைப்பேசி ஒலித்தது. ஊரிலிருந்து அம்மாதான் ஆபத்பாந்தவனாக அழைக்கிறார் என்று பெருமூச்சுவிட்ட அரவிந்தன், திரையில் ‘மகேஷ் காலிங்க்’ என்று கண்டதும், ஸ்பீக்கர் ஆன் செய்து அழைப்பை ஏற்றான்.
மீரா பெயரில் வீட்டுக்கடன் எடுக்க ஹரி சம்மதித்துவிட்டதாக மகேஷ் அறிவிக்க, தன் யூகம் எவ்வளவு சரியென்ற இறுமாப்புடன் அஞ்சலியைப் பார்த்து புருவங்களை வளைத்துப் புன்னகைத்த அரவிந்தன்,
“சம்மதம் சொன்னானா? இல்ல சொல்ல வெச்சாங்களா?” வம்பு செய்ய,
பெருங்குரலில் சிரித்தான் மகேஷ்.
அதில் கடுப்படைந்த மீரா, “அரவிந்தன் கிட்ட சொல்லுடா ஹரி… இந்தமுறை நான் உன்கிட்ட சண்டை கூடப் போடலன்னு…” முகத்தைச் சுருக்கினாள்.
ஹரியும், மீராவும் அங்குதான் இருக்கிறார்கள் என உணர்ந்த அரவிந்தன்,
“தைரியமா உண்மையைச் சொல்லுடா நண்பா! நாங்கலாம் உனக்குப் பக்கபலமா இருக்கோம்!” இரட்டிப்பு உற்சாகத்துடன் தோழியை ஓட்டினான்.
“அடமெல்லாம் பிடிக்கல டா,” என்றவனின் ஓரப்பார்வை தன்னவளைக் காதலுடன் தழுவியது.
மீராவும் அவனைக் கண்கொட்டாமல் பார்க்க, “ரொம்ப சரியா பேசினாடா அரவிந்தா… அதான் சரி சொல்லிட்டேன்!” ஹரி ஆத்மார்த்தமாகக் கூறி கண்சிமிட்டினான்.
“சரி சரி! இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஐஸ்கிரீம் சாப்பிட்டு வரலாமா?” அரவிந்தன் மறுமுனையிலிருந்து துள்ள, அவனுக்கு இணையாக மீராவும் துள்ளி குதித்தாள்.
“ஆஃபிஸ்லேந்து வந்து இன்னும் வீட்டுக்குப் போனப்பாடு இல்ல… மரியாதையா கிளம்பு!” ஹரி அவள் செவிகளைத் திருக,
‘முசுடு எழுத்தாளர்’ அழகு காட்டி முணுமுணுத்தாள் பாவை.
அந்தப் பக்கம் அஞ்சலி, அரவிந்தனை கண்டித்துக் கொண்டிருந்தாள். “இருமல் இப்போதான் குறைஞ்சிருக்கு… நீங்க முதல்ல, நான் சொன்ன வேலைய முடிங்க!” என்று.
அஞ்சலி கண்டிப்பதைக் கவனித்த மகேஷ், “அப்படியென்ன வேலைடா செஞ்சிட்டிருக்கு!” குறும்பாய் வினவ,
விடைத்தாள் திருத்திக் கொண்டிருப்பதைப் பற்றி ஒரு குரல் அழுதான் அரவிந்தன். அதைக் கேட்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரிக்க,
“நான் படிக்குற காலத்துல கூட இவ்வளவு படிச்சது இல்லடா.” தொடர்ந்த அரவிந்தன், தன்னவளைப் பார்த்தபடி,
“அதுலையும் இவ ரொம்ப ஸ்டிரிக்ட் டீச்சர் டா. பேஜ் நம்பர் போடாததுக்கு எல்லாம் மார்க் குறைக்குறா,” புகார் வாசிக்க, டீச்சரிடமிருந்து உதையும் சேர்த்து கிடைத்தது அவனுக்கு.
உதை சத்தம் கேட்ட மகேஷ், மைதிலியிடம் திரும்பி, “நீ அஞ்சலியோடையும் சேராதேமா!” அப்பாவியாகச் சொல்ல, அந்த இடமே சிரிப்பொலியில் நிரம்பியது.
மீராவின் பெயரில் வீட்டுக்கடன் வாங்குவது மிகவும் சுலபமாக இருந்தது. அவர்கள் விண்ணப்பித்திருந்த மொத்த தொகையும் கிடைத்ததால், ஹரி வேறு எவரிடமும் கடன் வாங்க வேண்டியிருக்கவில்லை.
எல்லாம் தயாரான நிலையில், நல்லநாள் பார்த்து, வீட்டை ஹரி-மீரா இருவரின் பெயரில் மாற்றி அமைக்க பதிவாளர் அலுவலகம் சென்றனர். மகேஷ் வங்கியின் சார்பில் வர, அரவிந்தனும், கீதாவும் நண்பர்கள் தரப்பில் சாட்சி கையெழுத்திட வந்தனர்.
தயாளன் தானே கட்டிடம் கட்டும் தொழிலை நிர்வாகம் செய்து வந்ததனால், விற்பனை சார்ந்த சம்பிரதாயங்கள் அனைத்தையும் அவரே இளையவர்களுக்கு விளக்கினார். மேலும் அவர் அங்கே பணிபுரிந்த அரசாங்க அதிகாரிகளின் நல்லுணர்வில் இருந்ததால், வேலையும் விரைவாக முடிந்தது.
ஹரி-மீரா பெயரில் பதிவு செய்திருந்த பத்திரத்தை, உயர் அதிகாரி அவர்களிடம் தந்து வாழ்த்தினார். அதைப் பெற்றுக்கொள்ளுமாறு ஹரி மீராவுக்குக் கண்ணசைத்தான். அவளோ, தன்னவனின் கைகளைக் கெட்டியாகப் பிடித்துகொண்டு, இருவரும் சேர்ந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினாள்.
‘ஹரி-மீரா’ சேர்த்து எழுதியிருந்த இடங்களை வருடியவள், “பிள்ளையார் படம் போட்ட திருமண அட்டையிலும் இதே மாதிரி நம்ம பேரு வரணும்டா,” ஏக்கம் பொங்க உரைத்தாள்.
“வரும்டி. நிச்சயமா வரும்!” ஆறுதல் சொன்னவனின் மனத்திலும், சொல்லிலடங்கா கவலைகள் சுழன்றன.
வங்கியின் சார்பாகப் பத்திரத்தைப் பெற காத்திருந்தான் மகேஷ். ஹரி பத்திரத்தை அரவிந்தனிடம் கொடுத்து, “உன்னால தான்டா நான் மீராவின் காதலுக்குச் சம்மதம் சொன்னேன். இந்தப் பத்திரத்தையும் நீ தான்டா கொடுக்கணும். நீ கொடுக்குற வேளை, நாங்க கணவன்-மனைவியா அடுத்த கட்டத்த நோக்கி பயணிக்கணும் டா,” மனமுருகி பேசினான்.
காதலை ஏற்கவே தயங்கியவன், இன்று மீராவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஏங்குவதை கண்டு பூரித்தான் அரவிந்தன்.
“உங்க இல்லற வாழ்க்கை இந்த வீட்டுலதான் தொடங்கும்!” வாழ்த்தியவன், மகேஷிடம் பத்திரத்தை ஒப்படைத்துவிட்டு, ஹரியை ஆரத்தழுவினான்.
அரவிந்தனின் அன்பை மெச்சியவளின் கண்கள் பளபளத்தது. உணர்ச்சிவசப்படும் தோழியைக் கண்டுகொண்ட அரவிந்தன், மறுகையை நீட்டி, அவளை அருகில் வருமாறு அழைத்து கண்சிமிட்டினான்.
ஓடி வந்தவளை மறுபுறம் சேர்த்து அணைத்தவன், இருவர் காதிலும் குறும்பாகக் கிசுகிசுத்தான். நண்பர்களின் பரிபாஷைகளை ரசித்த ரமேஷ், அந்த மகிழ்ச்சியான தருணத்தை, தான் கொண்டுவந்திருந்த கோடாக் கேமராவில் படம்பிடித்தார்.
அதை கவனித்த கீதா, “நாங்க ரெண்டு பேரும் இல்லாமல் எப்படி ஃபோட்டோ எடுப்பீங்க!” பொய்கோபம் கொண்டவள், மகேஷை அவர்கள் அருகில் இழுத்துச் சென்றாள்.
நண்பர்கள் செய்த ஆரவாரங்களை வளைத்து வளைத்து படம் பிடித்தார் ரமேஷ். ஆனந்தத்தில் மிதந்த பஞ்ச பாண்டவ நண்பர்கள் பளிச் பளிச் என்று சிரித்து போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அந்த இடமே திருவிழா கோலம் பூண்டது.
ஔபாசனத்தின் புனித தீச்சுடர் இல்லை!
ஓதுவாரின் வேத பாராயணமும் இல்லை!
ஒருமித்த சிந்தனை கொண்ட நண்பர்களின் புன்னகை,
ஐமுக விளக்கின் ஜோதியாக வீசி வாழ்தியது நன்னிலை!
ஏலக்காய் நறுமணம் சுவாசித்த சுவர்கள்;
எழுதுகோல் சிந்திய மையின் கறைகள்;
ஊர் போற்ற வென்ற கோப்பைகள்;
உண்மை உழைப்பிற்கு கிடைத்த சன்மானங்கள்;
ஈட்டிய பசுமையான நினைவுகள் நிறைந்த,
இல்லம்-இனிய-இல்லம் சொந்தமானது;
ஆசைகளும் நிறைவேறியது – இதே போல
அனைத்தையும் சாத்தியாக்குமா தோழமை – பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here