58 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பதிவாளர் அலுவலகத்திலிருந்து நண்பர்கள் பணிக்குத் திரும்ப, ஹரியும் மீராவும் மட்டும் சித்தி விநாயகர் கோவிலுக்குச் சென்றனர். கைக்கூடிய காரியங்களுக்கு நன்றி தெரிவித்தும், திருமணத்தை நடத்தித் தருமாறு பிள்ளையாரிடம் மனு கொடுத்துவிட்டும் வீட்டிற்குச் சென்றனர்.
ஓராண்டு காலமாக வசித்துவரும் வீடே என்றாலும், இன்று வாசற்கதவை திறந்ததும் அங்கமெல்லாம் மெய்சிலிர்த்தது ஹரிக்கு. பிள்ளையாருக்குத் திருமஞ்சனம் செய்துகொடுத்த மஞ்சள் பிரசாதத்தில் ‘ஓம்’ என்று கதவின் மையத்தில் எழுதும் தன்னவளைக் கண்கொட்டாமல் பார்த்து நின்றான் ஹரி.
‘அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு…. நீ வெற்றியின் உச்சகட்டத்துக்குப் போகுறது உறுதி!’ அரவிந்தன் அன்று சொன்னது எத்தனை உண்மை என்று நினைத்து நெகிழ்ந்தான்.
“எழுத்தாளரே! என்ன பலத்த சிந்தனை?” அவள் கீச்சுக்குரலில் சுயத்திற்கு வந்தவன், மெல்லிய சிரிப்புடன் இடவலமாகத் தலையசைத்தான்.
“அட உள்ள வாங்க எழுத்தாளரே! நமக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் காத்துக்கிட்டு இல்ல,” வம்படியாக அவனை உள்ளே இழுத்தாள்.
கசப்பான உண்மையையும் கனிவாகச் சொல்லும் தன்னவளின் குணத்தில் பெருமிதம் கொண்டவனாக அவள் இழுத்த இழுப்புக்குப் பின்தொடர்ந்தான்.
பத்திரத்தின் நகலை ஹரி தன் தந்தையின் நிழற்படம் முன்வைத்தான். தன்னவன் கைகோத்து மனமுருகி பிரார்த்தித்தாள் மீரா.
“இன்னைக்கு ஆஃபிஸ் லீவு போட்டதுக்கு, வீட்டுல என்ன காரணம் சொல்லிட்டு வந்தடி?” ஒய்யாரமாகத் தரையில் கால் நீட்டி அமர்ந்துகொண்டவளிடம் வினவினான் ஹரி.
“ஒரு முக்கியமான விஷயமா ஹரியோட வெளிய போயிட்டு வரேன்னு சொன்னேன்,” அலட்டல் இல்லாமல் பதிலளித்தவளைப் புருவம் உயர்த்தி பார்த்தவன்,
“எங்க ஏதுன்னு கேட்கலையா?” என்றான்.
“இங்க வந்து உட்காருங்க எழுத்தாளரே!” என்று அவனை வலிய இழுத்தவள், “நீதான் அக்மார்க் பையன்னு அம்மாகிட்ட பேரு வாங்கிட்டயே,” வாஞ்சையாக அவன் கன்னங்களைக் கிள்ளினாள்.
“ஓ அப்படியா!” என அவள் நெற்றி முட்டியவன், “இன்னைக்குக் கொஞ்சம் அத்துமீறலாமா?” செவிகளில் கிசுசிசுக்க,
“ஹரி!!!” திடுக்கிட்டவள், இரண்டடி தள்ளி அமர்ந்தாள்.
பேந்தப்பேந்த முழிக்கும் தன்னவளைப் பார்வையால் விழுங்கி நமுட்டாகச் சிரித்தவன், “ஆசையப் பாரு! ஏதாவது சினிமா பார்த்துட்டு, அப்படியே வெளிய சாப்பிட்டு வரலாமான்னு கேட்க வந்தேன்டி,” என அவள் தலையில் செல்லமாக அடித்தான்.
அவன் இடும் நிபந்தனைகளுக்கு இதுவே அத்துமீறல் தானே என்று உதடு பிரிக்காமல் சிரித்தவள், “போகலாம்டா! அதுக்கு முன்னாடி கொஞ்சமா பால் பாயசம் மட்டும் பண்ணறேன்,” என எழுந்தாள்.
“ஸ்வீட் சாப்பிட ஏதாவது சாக்கு!” சலித்துக்கொண்டவன், புதுப் படங்களின் விவரங்களை அலச, முந்தைய வெள்ளிக்கிழமை வந்திருந்த செய்தித்தாளைப் புரட்டினான்.
வறுத்த முந்திரியும் ஏலக்காய் மணமும் நிரம்பிய பால் பாயசத்தை ருசித்துக் கொண்டிருந்தவனின் கைப்பேசி ஒலித்தது. ஸ்ரீராம் தான் அழைத்திருந்தார்.
அவனை நேரில் சந்தித்து ஒரு நற்செய்தி பகிர வேண்டுமென்றும், மீராவையும் உடன் அழைத்துவர வேண்டுமென்றும் புதிர்போட்டார் மனிதர்.
“நீயே ஏதோ மனசு வந்து அதிசயமா ரொமான்ஸ் பண்ணற. அதுக்குள்ள அவருக்கு மூக்கு வியர்த்துடுத்து,” கழுத்தை நொடித்தவள், சலிப்பாகச் செய்தித்தாளை மடித்தாள்.
ஸ்ரீராமைச் சந்தித்துவிட்டு அருகிலிருக்கும் திரையரங்குக்குச் செல்லலாம் என ஹரி மறுவழிச் சொல்ல, ‘நடக்கட்டும் பார்க்கலாம்!’ என்ற ரீதியில் உதட்டைச் சுழித்தாள் பேதை.
தன்னவளுடன் வெளியே செல்ல பரபரத்த ஹரி, ஸ்ரீராமிடம் புத்தகம் பதிப்பிக்கும் விஷயங்களைப் படபடவென்று பேச,
ஸ்ரீராம், “கூல் கூல் ஹரி! இத்தோட புத்தகம், தொடர்கதைகள்னு எட்டு கதைகள் பதிவிட்டாச்சு; கொஞ்சம் மூளைக்கு ஓய்வு கொடுத்திட்டு, பாராட்டுகளை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்க!” இதழோர புன்னகையுடன் தடுத்தார்.
உள்ளூரில் நடக்கும் போட்டிகள், தமிழ்ச் சங்கப் பாராட்டு விழாக்கள் என்று ஒவ்வொன்றிலும், ஹரிக்கு கிடைக்க வேண்டிய பெயரையும் புகழையும் அவனிடம் கொண்டு சேர்ப்பதில் ஸ்ரீராம் மிகுந்த அக்கறை காட்டினார். அடுத்து என்னவென்று ஹரியும் மீராவும் கண்களில் ஆர்வம் மின்ன காத்திருக்க, மேஜையில் வைத்திருந்த கடிதம் ஒன்றை மீராவிடம் நீட்டினார் ஸ்ரீராம்.
இடவலமாக உருண்டோடும் அவள் கண்மணிகளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் அவர். பேதையின் விழிகளில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. இருக்குமிடம் மறந்து தன்னவனை இறுக அணைத்தவள், “நீ சாதிச்சிட்ட டா ஹரி! உன் லட்சியத்தின் உச்சத்தைத் தொட்டுட்டடா!” என மறுகினாள்.
என்ன நடக்கிறது எனப் புரியாமல் ஹரி திருதிருவென முழிக்க,
“வாழ்த்துக்கள் ஹரி! தமிழ் மொழி சார்ந்த புத்தகங்கள் பிரிவுல, இந்த வருடத்திற்கான ‘’சாகித்ய அகாடமி விருது’ உங்க ‘தெவிட்டாத இன்பம்’ கதைக்கு அறிவிச்சிருக்காங்க,” ஸ்ரீராம் கூற, கேட்டவன் இன்பதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனான்.
தேசிய அளவில் தன் எழுத்துக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதை எண்ணி நெகிழ்ந்தான். எத்தனை உயர்ந்த விருது அது எனப் பூரித்தவனின் செவிகளில் அரவிந்தன் சொன்ன வார்த்தைகள் தான் மீண்டும் ரீங்காரமிட்டது.
‘அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு… நீ வெற்றியின் உச்சகட்டத்துக்குப் போறது உறுதி’, நினைவூட்டிக் கொண்டவன், மீராவின் கைவிரல்களில் தன் விரல்களை இறுகப் பின்னிக்கொண்டான்.
“வீடு, விருதுன்னு இத்தனை சந்தோஷத்தையும் ஒரே நாளுல கொடுக்க உன்னால மட்டும்தான் முடியும் மீரா,” என்றவனின் விழிகள் தன்னிச்சையாகப் பனித்தன.
அவள் பங்குக்கு இல்லையென்று மறுப்பாய் தலையசைத்து, அவன் கன்னத்தை வருடி, “இல்லடா! இதெல்லாம் உன்னுடைய உழைப்புக்குக் கிடைச்சிருக்கும் சன்மானம்,” என உருகியவள், ஹரியின் விழிநீரைத் துடைத்துவிட, அவன் மீராவின் கைவிரல்களைத் தன் மார்போடு குவித்துக்கொண்டு இல்லையென மறுப்பாகத் தலையசைக்க, காதலர்களின் பரிபாஷைகள் நீடித்துக் கொண்டே போனது.
தொண்டையைச் செருமிக்கொண்டு அவர்கள் கவனத்தை ஈர்த்த ஸ்ரீராம், “ஒரு பேச்சுக்குக் கூட ரெண்டு பேரும் என் பெயரைச் சொல்ல மாட்டேன்றீங்களே,” பொய்கோபம் கொண்டார். இருவரும் அழகாய் அசடுவழிந்தனர்.
“பதிப்பாளர்ன்ற உறவைத் தாண்டி, உடன் பிறவா சகோதரன் போல, என்மேல அன்பும், அக்கறையும் காட்டுற உங்க பாசத்தை எப்படி மறப்பேன் ஸ்ரீராம்,” ஆழ்மனத்திலிருந்து பேசினான் ஹரி.
அனைத்தும் ஹரியின் நற்குணத்திற்கும் திறமைக்கும் கிடைத்திருக்கும் சன்மானங்கள் எனப் பெருந்தன்மையுடன் வாழ்த்தினார் அவர்.
அங்கிருந்து தலைகால் புரியாத மகிழ்ச்சியில் விடைப்பெற்ற காதலர்கள் படம் பார்க்கும் எண்ணத்தை கைவிட்டனர். மதிய உணவை மட்டும் அருந்திவிட்டு, வீடு திரும்பினர்.
டெல்லியில் நடைபெறவிருக்கும் விழாவிற்குச் சென்று வர எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டியிருக்கும் எனக் கணக்கிட்டுக் கொண்டிருந்தான் ஹரி. டெல்லிக்குச் சென்றுவந்த பிறகு வங்கியில் சேர்ந்தால் விடுப்பு எடுப்பதில் பிரச்சனை இருக்காது என யோசித்த மீரா, அதைப்பற்றி ஆலோசனை கேட்டு மேலதிகாரிக்கு மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்குத் திடீரென்று ஒன்று புத்திக்கு உரைத்தது.
ஹரி புது வீட்டில் பால் காய்ச்சிய அன்றுதான் ஸ்ரீராம் முதன்முதலாக அழைத்துப் பேசினார் என்று நினைவூட்டி, இன்று ஹரி அந்த வீட்டிற்குச் சொந்தக்காரன் ஆகியிருக்கும் நன்னாளில், தேசிய விருது பற்றி பகிர்ந்திருக்கிறார் என ஒப்பிட்டு நெகிழ்ந்தாள்.
ஆமாம் என அவளுக்கு இணையாகப் பூரித்தவன், விழாவிற்குப் புறப்பட தோதான நாட்களை ஆராய, “அட! அந்த வாரத்தில் தானே என் ராஜகுமாரியோட பிறந்தநாளும் வருது!” பற்கள் மின்ன உரைத்தான்.
அவன் குரலில் பெண்ணவளுக்கும் வெட்கம் அப்பிக்கொண்டது.
மென்மையாக அவள் முகத்தை நிமிர்த்தியவன், “பிறந்தநாள் பரிசா, என் ராஜகுமாரிக்கு இந்த விருது வாங்கித்தரப் போறேன். உனக்குச் சந்தோஷம் தானே?” காதலாய் மொழிய,
இடவலமாகத் தலையசைத்தவள், “அன்னைக்கு என்கிட்ட ஐலவ்யூ சொல்லுவியா ஹரி!” ஏக்கம் ததும்ப வினவினாள்.
பதில் சொல்லமுடியாமல் தலைகுனிந்தவனுக்கு வரதனின் நினைவு வந்தது.
“மீரா! இந்த விருது பற்றி உன் அப்பாகிட்ட சொன்னால், அவர் மனசு மாற வாய்ப்பு இருக்கே,” தாழ்ந்த குரலில் கேட்டான்.
அவன் அப்பாவைச் சந்தித்தால் வீடு வாங்கிய விஷயத்தையும் சேர்த்து உளறிவிடுவானே எனத் தயங்கியவள்,
“அதெல்லாம் வேண்டாம் எழுத்தாளரே! அன்னைக்கு முழுக்க முழுக்க என்னோடவே இருங்க. அதுபோதும்,” இலகுவாகப் பேச்சைத் திசைதிருப்பினாள்.
அன்று மாலையே மீரா தன் பெற்றோரிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டாள். மறுகணமே ஹரியை அழைத்து வாழ்த்தினார் நிர்மலா. வரதனும் மனதளவில் பெருமிதம் கொண்டிருந்தாலும், மகளின் பிறந்தநாள் அன்றுதான் தன் சம்மதத்தைச் சொல்லவேண்டும் என்று உறுதியாக இருந்தவர், பட்டும்படாமல் தலையசைத்தார்.
நற்செய்தி கேட்டறிந்த வாசுகியும் மகனின் வளர்ச்சியை எண்ணி நெகிழ்ந்தார். ஹரி அவரையும் டெல்லிக்கு வருமாறு அழைக்க, மீரா வரும் பட்சத்தில் தனக்கு வர விருப்பமில்லை என்று முகத்திற்கே எதிரே மறுத்தார் அவர். விருதை கையில் பெற்றதும், அதை அனைவர் முன்னிலையிலும் தன்னவளுக்குச் சமர்ப்பிக்க விழைந்தவனுக்கு தன்னுடன் மீரா இருப்பதுதான் முக்கியம் எனத் தோன்றியது. எனவே அப்பேச்சை அப்படியே கத்தரித்தான்.
செய்தி கேட்ட நண்பர்கள் அவனை நேரில் சந்திக்க ஓடி வந்தனர். விருந்து, கொண்டாட்டம் என அவர்கள் பாணியில் ஒன்றுகூடி மகிழ்ந்தனர். அவர்களையும் டெல்லிக்கு வரும்படி ஹரி அன்பாய் அழைத்தான். குழந்தையுடன் அவ்வளவு தூரம் பயணம் செய்வது கடினம் எனத் தயங்கினாள் கீதா. மகேஷுக்கு வேலையில் நெருக்கடி இருந்ததால், விடுப்பு எடுக்க முடியவில்லை. அரவிந்தன் சம்மதம் சொல்ல,
“ஹரி! எனக்கும் வரணும்னு தான் ஆசை…அந்த சமயத்துலதான் பள்ளியில் நாங்க சுற்றுலா பயணம் போறோம்…” தயங்கினாள் அஞ்சலி.
அவள் சூழ்நிலையைப் புரிந்துகொண்டான் ஹரி. ஆண்களுடன் மட்டும் எப்படி அவ்வளவு தூரம் தனியாகச் செல்வது என்று தயங்கினாள் மீரா.
அரவிந்தன் திருமணத்திற்கு போன இடத்தில், ஒருநாளைக்குத் தனியாகத் தங்குவதற்கே யோசித்தவள், தன் பயத்தை ஹரியிடம் தெரிவித்தாள். துணைக்கு வாசுகியை அழைத்து வரும்படி அவள் ஹரியிடம் கூற, தன் அம்மாவின் மனநிலையை அறிந்திருந்தவன் தீர்மானமாய் முடியாது என்றான்.
அவள் அம்மா நிர்மலாவைத் துணைக்கு அழைத்து வரும்படி யோசனை சொன்னான். தன் தந்தையை மீறி, அம்மா வரமாட்டார் என்று உறுதியாய் அறிந்திருந்தவள், அது வேலைக்கு ஆகாது என்றாள்.
காதலர்களுக்கு இடையே தொடங்கிய பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறி, ஒரே வாரத்தில் மனஸ்தாபமாக உருவெடுத்திருந்தது.
அந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்திலிருந்து வந்தவள் வழக்கத்துக்கு மாறாக தானே சமைத்தாள். அதைக் கண்டு எரிச்சலடைந்தவன், எதுவும் பேசாமல் உடைமாற்றி கொண்டு வந்து உட்கார்ந்தான். அவனிடம் பருக ஏலக்காய் டீ கொடுத்தவள்,
“ப்ளீஸ் ஹரி! என் நிலைமைய புரிஞ்சுக்கோடா…” தொடங்கியதும்,
“நீ என் நிலைமைய புரிஞ்சுக்கோ மீரா… உங்க ரெண்டு பேரையும் ஒரே இடத்துல வெச்சு சமாளிக்குற என்பாடுதான் திண்டாட்டமாயிடும்!” எதார்த்தத்தை அழுத்திக்கூறினான்.
“எனக்கு மட்டும் உன்னைக் கஷ்டப்படுத்தணும்னு ஆசையா? என் பாதுகாப்புக்காகத் தானே கேக்குறேன்…” முணுமுணுத்தாள் அவள்.
“என்ன பெரிய பாதுகாப்பு… அதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா நானும், அரவிந்தனும் வரோமே…” குரலை உயர்த்தினான் ஹரி.
“வரைங்க… அவ்வளவுதான்! கூடவே தங்க முடியுமா?” சொல்லும்போதே அவள் விழிகளில் குபுகுபுவெனக் கண்ணீர் வழியத் தொடங்கியது.
பெருமூச்சுடன் அவள் முகத்தை ஏந்தியவன், “கொஞ்சம் நிதானமா சிந்திச்சு பாருடி. பாஷை தெரியாத இடத்துல அம்மாவுக்கே பாதுகாப்புக்கு ஒரு ஆளு தேவை… நீ என்னடான்னா அவங்கதான் வரணும்னு சொல்ற!” மென்மையிலும் மென்மையாகப் புரியவைத்தான்.
“அவங்க கூட இருந்தால் போதும் ஹரி. அதுவே எனக்குப் பாதுகாப்பா இருக்கும்,” மீரா விடாப்பிடியாக நிற்க, ஹரியின் பொறுமை எல்லையைக் கடந்தது.
“ஒரு உயர் பதவியில் இருக்குற பொண்ணு மாதிரியா பேசுற? எத்தனையோ பெண்கள் வெளிநாடுகளுக்கே தனியா போயிட்டு வராங்க… இங்க இருக்குற டெல்லில்லு போயிட்டு வர இவ்வளவு பயப்படற…” சிடுசிடுத்தான்.
கண்களை உருட்டி மௌனம் சாதித்துக் கடுப்பேத்தினாள் பேதை.
“என்ன முறைக்குற! உனக்கு இருக்குற வாயிக்கு உன்னை யாராவது நெருங்கத்தான் முடியுமா,” அவன் கேலி செய்ய, அதை ரசிக்கும் மனநிலையில் இல்லை அவள்.
“என்னை யாரோடையும் ஒப்பிட்டுப் பேசாத! எனக்குத் தனியா வர பயம். அவ்வளவுதான்!” தீர்மானமாகச் சொல்லி வாசலை நோக்கி நடந்தாள்.
“எனக்கும் இந்த விருது முக்கியமில்ல… நானும் போகல!” ஏட்டிக்குப் போட்டி சொன்னவன் சிலையாக அமர்ந்திருக்க, அதிர்ந்து நின்றாள் மீரா.
“என்ன அப்படி பாக்குற… நீயும் ஊருக்கு வா… இல்ல நானும் போகல…!” அவன் நிபந்தனையிட, மீண்டும் அனல் பார்வையைப் பரிசாகத் தந்துவிட்டு வாசலை நோக்கித் திரும்பினாள்.
“கண்டிப்பா இந்தமுறை உன் பின்னால வந்து சமாதானம் செய்ய மாட்டேன்டி. போகறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிக்கோ!” ஹரி உரக்கச் சொல்லி அவள் கவனத்தை ஈர்த்தான்.
அவனருகில் வேகமாக வந்தவள், “பின்னால வந்து சமாதானமும் படுத்தாத… ‘உன் கையால ஏலக்காய் டீ குடிச்சு எவ்வளவு நாளாச்சுன்னு’ மெசேஜ் அனுப்பி கெஞ்சவும் கெஞ்சாத!” சொடுக்குப் போட்டு சவால்விட்டு வெளியேறினாள்.
உதடுகள் அழைக்கமாட்டேன் என்று சொன்னதே தவிர, நொடிக்கு ஒருமுறை உள்ளம் அவள் பெயரை உச்சரித்துகொண்டே தான் இருந்தது. மீராவின் இளகிய சுபாவத்தை அசைபோட்டவனுக்கு, அவள் வீண்பிடிவாதம் பிடிக்கவில்லை என்று புரிந்தது. மனம் மாறுவதற்குள் தன் மாமன் மணிமாறனை அழைத்தான். மீராவின் பயத்தை எடுத்துச்சொல்லி, வாசுகியிடம் பேசம்படி கேட்டுக்கொண்டான்.
“எனக்கு மட்டும் என் பையன் விருது வாங்கறத பார்க்கக்கூடாதுன்னு வேண்டுதலா… அவளும் வரது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கல…” அண்ணனிடம் புகார் வாசித்தார் வாசுகி.
‘பைத்தியக்காரி! உன்னை வான்னு அன்பா அழைக்கறதே மீராதானே,’ மனத்தில் நினைத்தவர்,
“புரிஞ்சுக்கோ வாசுகி. உன்மேல பாசம் இருக்கறுதுனால தானே ஹரி உன்னை விடாம வரச்சொல்லி கூப்பிடறான். யாரோ ஒரு பொண்ணுக்காக நீ உன் மகனை விட்டுக்கொடுக்கலாமா,” தங்கை மேல் அக்கறை உள்ளவராக, சாமர்த்தியமாகப் பேசிக் குழப்பினார் மணிமாறன்.
வாசுகி சிந்திக்கத் தொடங்க, மணிமாறனே மேலும் மூளைச்சலவை செய்தார்.
“ஒருவாரம் அவளோட பேசிப்பழகினா ஒருவேளை உனக்கு அவளை பிடிச்சுப்போகலாம்…” தொடங்கியவரை பார்வையால் வீழ்த்தினார் வாசுகி.
அதில் தடுமாறியவர், “ முறைக்காதே! பிடிக்கலாம்னு தான் சொன்னேன்,” மழுப்பி, “அந்தவொரு வாரத்துல பிடிக்கலன்னு சொல்ல சரியான ஒரு காரணம் கிடைச்சா போதும்; அதை நம்ம ஹரிகிட்ட எடுத்துச் சொல்லி புரியவைக்கலாம்,” எனத் தூண்டிவிட்டார்.
“ஒண்ணு என்ன… நூறு கண்டுபிடிப்பேன்,” கழுத்தை நொடித்த வாசுகி, ஊருக்குச் செல்ல தீர்மானித்தார்.
மீராவுடன் நேரடியாகப் பேசிப்பழகினால், தங்கையின் மனம் மாறும் என உறுதியாக நம்பியவர், அவர் ஊருக்கு வர சம்மதித்திருப்பதைப் பற்றி மட்டும் ஹரியிடம் பகிர்ந்தார்.
‘சமாதானம் செய்யாதே; குறுஞ்செய்தி அனுப்பாதே;’ என்று ஜம்பமாய் சொல்லிவிட்டு வந்தவளின் கண்கள் மட்டும் நொடிக்கு ஒருமுறை வாசலையும், கைப்பேசியையும் பார்த்துக்கொண்டே தான் இருந்தது.
ஒவ்வொரு முறையும் வீண்பிடிவாதம் பிடித்து அவனைத் தொல்லை செய்கிறேனே எனப் புத்தி தெளிந்தவள் அஞ்சலியின் உதவியை நாடினாள்.
“ப்ளீஸ் அஞ்சலி! புரிஞ்சிக்கோ! எனக்கு ஹோட்டல்ல தனியா தங்குற அளவுக்கு எல்லாம் தைரியமில்ல…” விட்டால் அழுதுவிடுவாள் என்ற ரீதியில் ஒரு மணி நேரமாக ஏதேதோ சொல்லிக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் மீரா.
“வாய்தான் மீரா உனக்கு!” அவள் கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளிச் சிரித்தாள் அஞ்சலி.
தன் இயலாமையை எண்ணி மீரா தலைகுனிய, அஞ்சலிக்கும் அதற்குமேல் அவளை வெறுப்பேற்ற மனமில்லை.
“சரி வரேன்! கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படித்தான் என்னைத் துணைக்குக் கூப்பிடுவையா?” குறும்பு செய்து வம்பிழுத்தாள் அஞ்சலி.
அவள் சம்மதத்தில் உச்சிகுளிர்ந்து போன மீராவின் குறும்புத்தனம் உயிர்பெற்றது.
“டீச்சர்! நான் சொன்னத நீங்க சரியா கவனிக்கல; தனியா இருக்கத்தான் பயம்னு சொன்னேன். கல்யாணமானா ஹரிதான் என் பக்கத்துலேயே இருப்பானே,” வாயடித்துக் கண்சிமிட்டினாள்.
“அது சரி! நீ ரொம்ப தெளிவாதான் இருக்கம்மா; நான்தான் உன்னை அப்பாவின்னு தப்பா நெனச்சிட்டேன்,” கைகளைக் கூப்பி சரணாகதியானாள் அஞ்சலி.
தன்னவனுக்கு இன்பதிர்ச்சி தர நினைத்த மீரா, “நம்ம நாலு பேருக்குமான டிக்கெட்டை அரவிந்தனே வாங்கி ஹரிகிட்ட தரட்டும்;” மழுப்பி, லேசான மனதுடன் வீடு திரும்பினாள்.
ஒரு வாரம் மனைவியை பிரிந்து எப்படி இருப்பது என்று ஏங்கிக்கொண்டிருந்த அரவிந்தனுக்கு, லாட்டரி பரிசு வென்றதுபோல உணர்வு. தோழியின் வேண்டுகோளுக்கு இணங்கி, மறுநாள் மதிய உணவு நேர இடைவேளையில் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்து வருவதாக ஹரியிடம் பொத்தாம் பொதுவாகப் பேச்சுக் கொடுத்தான் அரவிந்தன். அம்மா வருவதைப் பற்றி மீராவிடம் ஜாடைமாடையாகச் சொல்ல விழைந்தவனின் இதழ்கள் மெலிதாய் விரிந்தன.
“சரி அரவிந்தா! மீராவுக்கு ஃபோன் செஞ்சு, அவளுக்கு பிறந்தநாளை ட்ரெய்ன்ல மாமியாரோட கொண்டாடணுமா, இல்லை டெல்லிக்குப் போய் என்னோட மட்டும் தனியா கொண்டாடணுமான்னு கேளு; அதுக்கு ஏத்தா மாதிரி, டிக்கெட் புக் பண்ணு!” என்று சொல்லி கண்சிமிட்டினான்.
நண்பனை ஆழமாய் பார்த்த அரவிந்தன், “எலியும் பூனையுமா இருக்கறவங்கள ஒண்ணா அழைச்சிட்டு வரதே பெரிய விஷயம்; இதுல பிறந்தநாள் கொண்டாட்டம் வேற கேக்குதா? ரொம்ப தேறிட்ட டா ஹரி!” அவன் தோள்களில் தட்டி மெச்சினான்.
கன்னத்தில் குழிவிழச் சிரித்து மழுப்பியவன், பேசாமல் நகர்ந்தான்.
நண்பன் சொன்னது போலவே மீராவை அழைத்து கேட்டான். வாசுகியும் தங்களுடன் வருவதை அறிந்தவளுக்கு, துக்கம் தொண்டையை அடைத்தது. தனக்காக யோசித்திருக்கும் ஹரி மீது காதல் பல்கிப் பெருகியது. மாமியாருடன் பிறந்தநாள் கொண்டாட தயார் என்று பதில் சொன்னவள்,
“அரவிந்தா! அப்படியே டிக்கெட்டை ஹரிகிட்ட கொடுத்து, பயணிகள் விவரம் எல்லாம் சரி பார்க்கச் சொல்லு!” நண்பனை அதிகாரம் செய்தாள்.
“நல்லா வேலை வாங்குறீங்கடி ரெண்டுபேரும்!” பொய்யாகச் சலித்துக் கொண்டவன், சரி என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தான்.
இரண்டு மணி நேரத்தில், வங்கிக்குத் திரும்பியவன், ஹரியிடம் பயணச்சீட்டை கொடுத்து சரிப்பார்க்கச் சொன்னான். அஞ்சலி பெயரைக் கண்ட ஹரிக்குப் பெரும் வியப்பு.
தன்னவளைப் பார்க்க வீட்டிற்குக் காற்றாய் பறந்தான் ஹரி. அவன் வருகைக்காக அத்தனை நேரம் பால்கனியில் தவம் கிடந்தவள், முன்வாசலில் ஹரியின் உருவம் தெரிந்ததும், சமையலறையை நோக்கி விரைந்தோடினாள்.
மாடியேறி வந்தவனை இதமான ஏலக்காய் வாசம் காதலாய் வரவேற்றது. நேராகச் சமையலறைக்கு விரைந்தவன், அடுப்பை உற்றுப்பார்த்து நிற்கும் பேதையின் பின்புறம் நின்று,
“யாரோ ஏலக்காய் டீ போட்டுத் தர வரமாட்டேன்னு சொன்னீங்க!” அவள் காதில் கிசுகிசுத்தான்.
இரண்டு நாட்களுக்கு பின் அவன் குரல் கேட்டவளுக்கும் அத்தனை பூரிப்பு.
“யாரோ, அம்மாவ ஊருக்கு அழைச்சிட்டு வர மாட்டேன்னு சொன்னீங்க!” ஓரப்பார்வையில் கொன்றாள் பாவை.
கன்னத்தில் குழிவிழச் சிரித்துக்கொண்டே அவளை தன் பக்கம் திருப்பியவன், “அஞ்சலிய நீதானே வர சொல்லி கட்டாயப்படுத்தின!” என மடக்கினான்.
அடுப்பின் தீயை அணைத்தவள், அவன் முகம் பார்க்க முடியாமல், தலைதாழ்த்தி பேசினாள்.
“மன்னிச்சிரு ஹரி,” தொடங்கியவளின் வாயைப் பொத்தியவன்,
“நீயும் என்கிட்ட மட்டும்தானே, உன் உணர்வுகளை வெளிப்படையா பகிர்ந்துக்க முடியும்,” அவள் செய்தது தவறில்லை என்று உணர்த்தியவன்,
“இந்த விருத வாங்குறப்ப நீ என் கூட இருக்கணும் மீரா. விருதைக் கையில வாங்கின அடுத்தநொடி, மேடையிலேந்து நான் பாக்குற முதல் முகம் உன்னோடதா இருக்கணும்னு ஆசைபடுறேன்…” சொன்னவனை கண்சிமிட்டாமல் ஆழமாகப் பார்த்தாள் மீரா.
“இவங்க எல்லாரும் இன்னைக்குக் கோவப்பட்டு நாளைக்கு நம்மள புரிஞ்சுப்பாங்க; ஆனால் நம்ம லட்சியத்துடைய வெற்றியைக் குறிக்கும் இந்த தருணம் ஒருமுறை தான் வரும்; அப்போ நீ என்கூட இல்லாம எப்படி?” தாழ்ந்த குரலில் கேட்டவனின் அன்பில் கரைந்தாள்.
“நீ இந்த அளவுக்கு யோசிக்கறத புரிஞ்கிக்காம, ஒரே நொடியில் வரலன்னு சொல்லிட்டேன்டா…“ மனம்நொந்தவள், “ஐலவ்யூ ஹரி!” எனப் பனித்த கண்களுடன் மறுகினாள்.
“நானும் உனக்குத் திருப்பிச் சொல்ற நாள் சீக்கிரம் வரும் மீரா,” அவள் விழிநீரைத் துடைத்துவிட்டு வரவேற்பறைக்கு நகர்ந்தான்.
‘எத்தனை நற்குணம் படைத்தவன் இவன்!’ மனத்தில் நினைத்தவள், இனி ஒருபோதும் அவன் மனம்கோணுமாறு நடந்துகொள்ளக்கூடாது என்று ரகசிய தீர்மானம் செய்துகொண்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் ஊருக்குப் புறப்படும் நாளும் நெருங்கியது.
“இது எதுக்குடா!” ஹரி பெட்டியில் எடுத்துவைத்த சிவப்புச் சட்டையைக் கைப்பற்றினாள்.
“விருது வாங்குறப்ப போட்டுக்கத்தான்!” அலட்டலே இல்லாமல் அவன் பதில்சொல்ல, சட்டையை மார்போடு சேர்த்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டவள்,
“ப்ளீஸ் ஹரி! அது எவ்வளவு பிரம்மாண்டமான விழா தெரியுமா!” என்றவள் வேறு நல்ல சட்டை அணிந்துகொள்ளுமாறு கெஞ்சினாள்.
மறுத்துப் பேசியவனின் வாதம் வழக்கம்போல செல்லாக்காசாக, அவள் தேர்ந்தெடுத்து கொடுத்த வேறு சட்டையை அணிய ஒப்புக்கொண்டான். எதற்கும் சட்டை தன்னிடமே இருக்கட்டும் என உதட்டைச் சுழித்தவள் அதை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு ஓடி வர, வாசற்கதவு மணி ஒலித்தது.
வாசலில் வாசுகியைக் கண்டு மிரண்டவள், “உள்ள வாங்க ‘ம்மா!” சட்டையைப் பின்னால் மறைத்துக் கொண்டு அசடுவழிந்தாள்.
“என் மகன் வீட்டுக்குள்ள என்னை வரச்சொல்ல நீ யாரு?” சிடுசிடுத்து உள்ளே நுழைந்தார் வாசுகி. பின்னால் நின்றுகொண்டிருந்த மணிமாறன் மீராவிடம் கண்ஜாடையில் மன்னிப்புக் கேட்டார்.
ரயில் நிலையத்தில் சந்திக்கலாம் எனக் கூறி, மீரா தன் பொருட்களை எடுத்துக்கொண்டு அமைதியாக நகர்ந்தாள்.
“என்னால முட்டி வலியோட ட்ரெயின்ல வர முடியாது ஹரி. பிளேன்ல அழைச்சிட்டுப் போகுறதுன்னா நான் வரேன்,” வாசுகி வம்புசெய்ய,
“என்னம்மா இது! வந்ததும் வராததுமா பிரச்சனை பண்ணற,” கடிந்தான் ஹரி.
இதையே நூல் பிடித்துப் பிரச்சனையை வளர்க்கலாம் என வாசுகி மனத்தில் எண்ண, அதற்குள் மீரா முந்திக்கொண்டாள்.
“ஹரி கீழே வா! நான் உன்கிட்ட பேசணும்!” திடமாகச் சொல்லி, வாசுகி பக்கம் திரும்பியவள்,
“அம்மா! நம்ம டெல்லியில் சந்திக்கலாம்!” கூறிவிட்டுப் புறப்பட்டாள்.
வாசுகியிடம் சொன்னதிலேயே மீராவின் மனநிலையைப் புரிந்துகொண்டான் ஹரி.
“அவங்க வேணும்னே பிரச்சனை பண்ணனும்னு பேசுறாங்க மீரா,” வாசலுக்கு வந்தவன் தலையைச் சிலுப்பிக்கொள்ள,
“தெரியும் ஹரி!” இடைபுகுந்தவள், “ஆனால் அவங்களோட வாதம் செய்ய இது நேரமில்ல; எனக்கு அவங்க டெல்லிக்கு வரணும்; உனக்கு நான் வரணும்; அவங்கள பிளேன்லயே அழைச்சிட்டு வாடா, பார்த்துக்கலாம்!” தெளிவாகப் பேசினாள்.
“அதான், உனக்குத் துணைக்கு அஞ்சலி வராளே!” ஹரி தர்க்கம் செய்ய,
“நீ விருது வாங்குறத பார்க்க அவ்வளவு தூரம் ஆசையா வந்தவங்கள திரும்பிப் போகச் சொல்லுவியா?” சிந்திக்கச் சொன்னாள்.
“உன் பிறந்தநாள்…” ஹரி ஏக்கத்துடன் கேட்க,
அவன் கன்னத்தை வருடியவள், “பிறந்தநாள் அடுத்த வருஷம் வரும்; நீ விருது வாங்கும் தருணம் ஒருமுறை தான் வரும்!” நிதர்சனத்தைச் சொல்லி வாயடைத்தாள்.
என்னவளின் அன்பைப் பெற்றவளுக்குப் புரியவைக்க வான்தேவதை யாராவது தரை இறங்கி வரமாட்டார்களா என ஏக்கத்துடன் இருள் படர்ந்திருந்த அந்த வானத்தையே கண்கொட்டாமல் பார்த்து நின்றான் ஹரி.
மீராவின் பிறந்தநாள் அன்று…
காலையிலிருந்து மகளுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூடக் கூறாமல் மௌனமே உருவாய் இருந்தவர், அவளை எப்படி இன்பதிர்ச்சியில் ஆழ்த்தப் போகிறார் எனக் காண ஆவலாகக் காத்திருந்தார் நிர்மலா.
டெல்லிக்குப் புறப்படத் தயாராகி பெட்டியுடன் வந்த மீரா, “அப்பா, ஹரியோடு…” தொடங்கியதும்,
“போயிட்டு வந்துடுவியா… அப்படியே போகுற எண்ணமா?” குத்தலாய் கேட்க,
“அப்பா!!!!”
“என்னங்க…என்ன பேசுறீங்க?” இரு பெண்களுக்கும் தூக்கிவாரிப் போட்டது.
பதறும் மனையாள் பக்கம் திரும்பியவர், “உனக்குத் தெரியாதுல ‘ம்மா… இவளுக்கும் அவனுக்கும் கல்யாணமாகி ஒரு மாசமாயிடுத்து. ரெஜிஸ்டர் மேரேஜ் செஞ்சிகிட்டாங்க. நேத்துதான் என் நண்பன் சரவணன் சொன்னான்,” ஏளனமாக உரைக்க, ஸ்தம்பித்துப் போனார் நிர்மலா.
தாங்கள் வீட்டைப் பதிவுசெய்யச் சென்ற அன்று, தந்தைக்குத் தெரிந்த யாரோ அவர்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பார்த்து, தவறான தகவல் கொடுத்திருக்கிறார்கள் என்று உடனே புரிந்து கொண்டாள் மீரா.
ஏதோ ஒரு நண்பன் சொல்லும் வார்த்தையில் வைத்திருக்கும் நம்பிக்கையை, பெற்ற மகள், தன்னிடம் வைக்கவில்லையே என்ற ஆதங்கம் மேலோங்க, உண்மையைச் சொல்ல விடாமல் தடுத்தது அவள் தன்மானம்.
“ஆமாம் ‘ப்பா! கல்யாணம் செஞ்சிகிட்டோம்; இப்போ நாங்க ஹனிமூன் போயிட்டு வரோம். உங்க டாக்டர் நண்பர் யாராவது வந்து, உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கான்னு கூடிய சீக்கிரம் சொல்லுவாரு!” கொச்சையாகப் பதிலுரைத்தாள்.
“மீரா! அப்பாகிட்ட இப்படியா மரியாதை குறைவா பேசுவ,” நிர்மலா கண்டிக்க,
“என்னையே ஏன்ம்மா தப்பு சொல்ற,” மனம்நொந்தவள், “இவர் சம்மதம் சொல்ற வரை என்கிட்ட தன் காதலைக் கூடச் சொல்லக்கூடாதுன்னு பொறுமையா காத்துக்கிட்டு இருக்கான் ‘ம்மா என் ஹரி… அவனை ஏன்தான் இவருக்குப் பிடிக்கலையோ,” கதறியவளுக்கு மேலும் பேசக் கூட நா எழவில்லை.
ஹரியின் குணமறிந்த நிர்மலாவுக்கும் மீரா சொல்வது சரியெனப்பட்டது.
“அப்போ எதுக்காக அங்க போனீங்கன்னு அப்பாகிட்ட சொல்லு,” மகளின் தோளினை வருடினார்.
தன்மானம் தலைக்கேறியிருந்த பெண்மான் கண்களைத் துடைத்துக்கொண்டு, “அதையும் எங்கள ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல பார்த்ததா போட்டுக்கொடுத்தாரே… அவர் ந..ண்..ப..ர்..” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்திச்சொல்லி,
“அவரையே கேட்டுத் தெரிஞ்சிக்கச் சொல்லு!” உறுமி பெட்டியுடன் வாசலுக்கு நகர்ந்தாள்.
பெற்றவர்கள் பேதலித்து நிற்க, ஆழ்ந்து சுவாசித்துத் தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட மீரா, அவர்கள் பக்கம் திரும்பினாள்.
“நாங்க எந்தத் தப்பும் பண்ணல ‘ப்பா; செய்யவும் மாட்டோம்; என் ஹரி செய்ய விடவும் மாட்டான்;” தீர்க்கமாய் சொல்லி பெருமூச்செறிந்தவள்,
“ஹரிக்கு இது முக்கியமான தருணம். நான் கண்டிப்பா அவன் பக்கத்துல இருக்கணும்,” தன்மையாகப் பேசி, கவலைகளை மனத்தில் புதைத்துக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.
சம்மதம் சொல்ல நினைத்தவர்,
சந்தேகம் கொண்டு பழிசுமத்தியது தான் சரியா – இல்லை
தன்மானம் கொண்ட பெண்மனம்,
தந்தை மனம்நோக தர்க்கம் செய்ததுதான் தவறா – பதில்சொல்லும்,
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here