80 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
ரயில்வே துறையில் பணியாற்றி வந்த தன் உறவினர் ஒருவரைத் தொடர்பு கொண்ட அரவிந்தன், ஐவரும் ஒன்றாக பயணம் செய்ய ஏதுவாகப் பயணச் சீட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான். அதற்காகத் தோழர்கள் இருவரும் ரயில் நிலையம் வரை செல்ல வேண்டியிருந்தது. தோழிகள் அந்நேரத்தில் சாந்தினி சௌக் சந்தையில் ஷாப்பிங்க் செய்ய திட்டமிட்டனர்.
“சரியா ஒரு மணிக்கு எல்லாம் வந்துடுங்க! லேட்டாக்கினா, உங்கள இங்கேயே விட்டுட்டு நாங்க ஊருக்குக் கிளம்பிடுவோம்,” அரவிந்தன் எச்சரிக்க,
தோள்பையைத் துழாவிக்கொண்டிருந்த மீரா, வெடுக்கென்று தலை நிமிர்த்தி, “ட்ரெயின்ன நிறுத்துவேன்னு வேணும்னா சொல்லு; அஞ்சலிய விட்டுட்டு நீயாவது ஊருக்குப் போகுறதாவது!” என்று உதட்டை சுழித்தாள்.
அரவிந்த அழகாய் அசடுவழிய, “அம்மா! நீங்களும் எங்களோட வாங்களேன்,” மெத்தையில் அமைதியாக அமர்ந்துகொண்டிருந்த வாசுகியிடம் பேச்சுக்கொடுத்தாள் மீரா.
‘இவளுக்கு எதுக்கு இந்த வீண்வேலை!’ ஹரி மனத்துக்குள் சிடுசிடுத்துக் கொள்ள, வாசுகியும் முட்டி வலியைக் காரணம் காட்டி செல்ல மறுத்தார்.
ஹரி நிம்மதி பெருமூச்சுவிட்டது தான் தாமதம். தோழியின் முகவாட்டத்தைக் கண்டுகொண்ட அரவிந்தன்,
“டெல்லி வரைக்கும் வந்துட்டு, அந்தச் சந்தையைப் பார்க்காம போனா எப்படி ஆன்ட்டி? நாங்களும் வேலை முடிச்சிட்டு அங்கே வந்துடறோம். அங்கேயே லன்ச் சாப்பிட்டுக்கலாம்,” என வாசுகியிடம் நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்தான்.
சந்தையில் அலைமோதும் மக்கள் கூட்டத்தைக் கண்டு வியந்தார் வாசுகி. இந்தியாவின் ஒட்டுமொத்த ஜனத்தொகையும் அங்கேதான் உள்ளது என்பது போல் தோன்றியது அவருக்கு. இவ்விடத்தில் தொலைந்துவிட்டால், வழி கேட்கக் கூட ஹிந்தியில் பேசத் தெரியாதே என அஞ்சியவர், இரு பெண்களுக்கும் இடையில் நடப்பதில் மிகவும் கவனமாக இருந்தார்.
“அம்மா! இந்த இடத்துக்குப் பேரு க்காரீ பாவ்லீ. இங்க கிடைக்காத உலர்ந்த பழம் வகைகளே இல்ல…” சுற்றுலா வழிகாட்டி போல விளக்கினாள் அஞ்சலி.
ஐந்து நிமிடத்தில், ஒரு கடைக்கு முன் வந்து நின்றனர் பெண்கள். முந்திரி, திராட்சை, பேரிச்சம்பழம் தாண்டி, உலர்ந்த பழங்களை பற்றி அதிகம் அறிந்திராத தோழிகள், இருபது, முப்பது கூடைகளில் குவித்து வைத்திருந்த பொருட்களைப் பற்றி கடைக்காரரிடம் ஹிந்தியில் கேட்டுக்கொண்டிருக்க,
“இது ஜாதிக்காய்; அது சாரப்பருப்பு; அது வாதுமை பழம்; அதோ அங்க பழுப்பு நிறத்துல சின்ன சின்னதா இருக்கே, அது ஆளி விதை; அது பக்கத்துல கொடிமுந்திரி,” தமிழ்ப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றாய் கை நீட்டி காட்டிய வாசுகி,“ எது எலும்புக்கு நல்லது, எது இதயத்திற்கு நல்லது, முகப்பொலிவுக்கு நல்லது என்றும் மூச்சுவிடாமல் விளக்கினார். தோழிகள் அவரையே கண்கொட்டாமல் பார்த்து நின்றனர்.
மருத்துவகுணம் பொருந்திய ஆறேழு பொருட்களை கலவையாய், ஒரு குறிப்பிட்ட அளவைக் கடைக்காரரிடம் கேட்கும்படி, வாசுகி மீராவிடம் சொன்னார். கிளிப்பிள்ளை போல, தோரணை மாறாமல் கடைக்காரரிடம் ஒப்பித்தவள்,
“இதெல்லாம் எதுக்கும்மா?” வாசுகியிடம் ஆர்வமாய் கேட்டாள்.
“இத லேசா வறுத்து, பொடியாக்கி, தினமும் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; ஹரிக்குச் செஞ்சித்தர,” வாசுகி காரணமும் சேர்த்துச் சொல்ல,
“நானும் இதே போல ஒரு செட்டு வாங்கிக்கவா ‘ம்மா?” தழைந்த குரலில் வினவினாள் மீரா.
தன் அன்பிற்காக ஏங்கும் மீராவின் தவிப்பு புரிந்த போதிலும் உணர்வுகளை மறைத்தவராக,
“மூணு செட்டு கட்டித் தரச்சொல்லு!” பதிலளித்து, அவற்றுக்கான பணத்தையும் அவரே முன்வந்து கொடுத்தார்.
கேட்டதும் மிட்டாய் வாங்கித் தந்துவிட்ட அன்னையைப் போல வாசுகியைக் கற்பனை செய்துகொண்ட மீராவுக்கு உச்சிகுளிர்ந்து போனது.
அந்த வீதிகளை ஒருமணி நேரம் சுற்றியவர்கள், பை நிறைய அணிக்கலண்கள், டெல்லி பயணத்தை நினைவூட்டும் காட்சி பொருட்கள்(souvenirs) என்று வாங்கிக்கொண்டு, துணிக்கடை ஒன்றில் நுழைந்தனர். காட்டன் சுடிதார்கள் வாங்கி முடித்த தோழிகள் புடைவைகள் பிரிவுக்கு நகர, தனக்கு அலுப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வாசுகி அவர்கள் பக்கத்திலேயே ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டார்.
“ஷாப்பிங் முடிஞ்சுதா? எங்க இருக்கீங்க?” அரவிந்தன் அலைபேசியில் அழைத்து வினவ,
“அரவிந்த்ப்பா! புடைவை பார்த்துட்டு இருக்கேன்! ஒண்ணொண்ணும் ஒவ்வொரு விதத்துல நல்லா இருக்கு… எத செலெக்ட் பண்ணறதுன்னு தெரியல… நீங்க வந்து செலெக்ட் பண்ணுங்க!” அஞ்சலி குழைய, ஐந்தாவது நிமிடம் அவன் கடையில் இருந்தான்.
கணவன் மனைவி இருவரும், புடைவை வாங்கும் சாக்கில் கொஞ்சிக் குலாவ, மீராவுக்கு ஏக்கம் கூடியது.
“இவங்க புடைவை வாங்கறதுக்குள்ள, நான் போய் ஸ்வீட்ஸ் வாங்கிட்டு வரேன்,” சாக்குச்சொல்லி நழுவினாள்.
“இன்னும் எவ்வளவு டி ஸ்வீட்ஸ் வாங்குவ? ஏற்கனவே எக்ஸ்ட்ரா ரெண்டு பை ஆயிடுத்து!” கடிந்தான் ஹரி.
‘என் மனப்போராட்டாம் புரியாமல் கோபப்படுகிறானே!’ என எரிச்சல் மேலோங்க, “நான் ஒண்ணும் எனக்காக கேக்குல. பாங்குல உனக்கு வாழ்த்து சொல்ல வரவங்களுக்கு எல்லாம் கொடுக்க,” எனச் சிடுசிடுத்தாள்.
தனக்காக யோசிக்கும் அவள் அன்பில் உருகிய ஹரி, தானும் துணைக்கு வருவதாக கூறி தழைந்து போனான்.
“மீரா! அன்னைக்கு போன அதே கடை, கண்டேவாலால வாங்கிக்க… அப்படியே நமக்கு, ஸோஹன் ஹல்வா மறக்காம வாங்கிட்டு வாடி!” அரவிந்தன் நினைவூட்ட,
“புடைவை செலெக்ட் பண்ண சொன்னா, காதலெல்லாம் அங்கதான் இருக்கு!” பொய்கோபம் கொண்ட அஞ்சலி அவன் காதினைத் திருகினாள்.
அவனும் பயந்தது போல சிணுங்க, இருவரையும் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தாள் மீரா.
தன் ஏக்கத்தை மறைத்து சாமர்த்தியமாக வெளியே வந்துவிட்டோம் என்று நினைத்த மீராவிற்கு, வாசுகி அனைத்தையும் கவனித்தார் என்று தெரியாது. அஞ்சலியைப் போல, மீராவிற்கும் ஆசைகள் இருக்கும் என்று வாசுகிக்குப் புரியாமல் இல்லை. தான் சொல்லும் பதிலால் அனைத்தும் மாறும் என்று தெரிந்திருந்தபோதும், சம்மதம் சொல்லமுடியாமல் தடுமாறினார் வாசுகி.
நடைபாதையில் கூட்டத்தோடு கூட்டமாக கலந்தனர் காதல் ஜோடிகள். அமைதியாக நடக்கும் தன்னவளின் விரல் கோத்தவன்,
“ஃபலூடா வாங்கித் தரட்டுமா?” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
“இப்போ தான் ஸ்வீட் சாப்பிடாதன்னு திட்டின…” தலையைத் தொங்கப்போட்டு முணுமுணுத்தாள் பேதை.
“என்ன செய்ய! ராஜகுமாரிக்கு, புடைவைத்தான் வாங்கித்தர முடியல… ஃபலூடாவாது வாங்கித் தரலாமேன்னு…!” காதலாய் மொழிய, ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றாள் மீரா.
“ரொம்ப யோசிக்காத!” என அவள் தலையில் செல்லமாகக் குட்டியவன், “இன்னுமும் உன் மனசுல இருக்கறத புரிஞ்சிக்க முடியேலேன்னா எப்படி?” புருவங்களை மேலும் கீழுமாக வளைத்துப் புன்னகைத்தான்.
ஆழ்மனதில் உள்ளதை படித்தவனின் அன்பில், வருத்தங்களை மறந்தாள் மீரா.
“எழுத்தாளரே! சாப்பிடலாம்… நேத்து மாதிரி, பரான்ட்டேவாலி கலீக்குப் (Paraanthewali Gali) போய் பராத்தா(Paratha) சாப்பிட்டு, க்யானில(Giani) ஃபலூடா(Falooda) சாப்பிடலாம்,” அன்புக்கட்டளையும் இட்டாள்.
இனிப்புகளை வாங்கியதும் அரவிந்தனை அழைத்து திட்டத்தைத் தெரிவித்தான். இட்லி, தோசை மட்டுமே சாப்பிட்டு பழகின வாசுகியும் கூடக் குறைகூறாமல் அனுசரித்து உண்டார்.
அது பாசத்தாலா, பசியாலா என்பது படைத்த அந்த ஆண்டவனுக்கு மட்டுமே தெரியும்!
கடைசி நிமிடம் வரை ஏதோவொரு வேலையில் பரபரப்பாக இருந்தவர்கள், ட்ரெயின் ஏறியதும், நீண்ட சோம்பல் முறித்து பெருமூச்சுவிட்டனர்.
வாரத்தின் நடுவில் இயங்கிய ரயில் என்பதால், அன்று அவ்வளவு கூட்டம் இல்லை. ஆறு பேருக்கான அந்தப் பகுதியில், இவர்கள் ஐவர் மட்டுமே பயணம் செய்தனர். அது முட்டிவலியோடு வந்த வாசுகிக்கு வசதியாகிப் போனது. அவர் ஒரு புறம் கால் நீட்டி அமர்ந்திருக்க, மீதமுள்ள இடத்தில் ஹரி அமர்ந்தான். மற்ற மூவரும் எதிரில் அமர்ந்தனர்.
சினிமா, விளையாட்டு, வங்கி சார்ந்த விஷயங்களை பேசி ஓய்ந்த நண்பர்களுக்கு இரவு எட்டு மணிக்கே கண்ணைக் கட்டியது. வாசுகி கீழ் தளத்தில் உறங்க, அதே பக்கத்தில், நடுவில் அஞ்சலியும், மேல் தளத்தில் அரவிந்தனும் படுத்துக்கொண்டனர்.
ஜன்னல்கள் சரியாகத் தாளிடப்பட்டிருக்கிறதா என்று சரி பார்த்துவிட்டு, விளக்குகளை அணைத்த ஹரி, “குட் நைட் மீரா!” என்றான்.
கைப்பேசியை முகமருகில் வைத்து தட்டிக்கொண்டிருந்தவளுக்கோ அவன் பேசியது காதில் விழவே இல்லை.
அவளைப் பிய்த்துத் தின்றுகொண்டிருந்தது அந்தக் குறுஞ்செய்தி. மறுநாள் இரவு வீட்டிற்கு வரும்போது, ஹரியையும் அழைத்து வருமாறு நிர்மலா அனுப்பியிருந்த குறுஞ்செய்தி அது. மீரா சம்மதிக்காத பட்சத்தில், தானே ஹரியிடம் நேரடியாகப் பேசப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
தந்தை சுமத்திய பழி ஹரியின் காதுகளுக்கு எட்டிவிடவே கூடாது என உறுதியாக இருந்தவள், அவர்கள் சந்திப்பை எப்படித் தவிர்ப்பது என்ற பலத்த யோசனையில் மூழ்கியிருந்தாள்.
“மீரா!!!” அவள் தோள் அசைத்து உலுக்கினான்.
“தூக்கம் வரல ஹரி!” என மழுப்பினாள்.
அவள் உள்ளத்தைப் படிப்பதில் பி.எச்.டி வாங்கியவனிடம் பொய் சொல்கிறாள் என்பதை மறந்திருந்தாள் மீரா. அருகில் அமர்ந்து அவள் இடது கை விரல்களை மென்மையாக நீவிவிட்டவன், “நீ தூங்கினதுக்கு அப்புறம் நான் போய் படுக்கறேன்,” என்றான்.
தன்னவனின் கரிசனத்தில் தோற்றுப்போனவளின் கண்கள் குளமாகின. “இவங்க எல்லாம் கடைசிவரைக்கும் நம்மள புரிஞ்சிக்கவே மாட்டாங்களா ஹரி?” கசந்த குரலில் பேசியபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.
“நாம என்ன பண்ணா இவங்களுக்கு நம்மள பிடிக்கும்னு எனக்கும் தெரியலடி,” விரக்தியில் பேசியவனின் விழிகள் ஆழ்ந்து உறங்கும் அன்னையைத் தழுவி மீண்டது.
“வேண்டாம்னு சொல்ல நம்மகிட்ட தேடி தேடி குறை கண்டுபிடிக்கறவங்க, கொஞ்சம் அவங்க பிடிவாதத்த இறக்கி வச்சிட்டு வேணும்னு நெனச்சாலே போதும் டா!” என்றவளின் மனக்கண்ணில் வெறுப்பை உமிழும் தந்தையின் உருவம் நிழலாடி கண்ணின் வழியே வழிந்தது.
நான்கு நாட்கள் பக்கத்திலிருந்து பழகியும் அம்மாவின் மனம் மாறாததை எண்ணி அழுகிறாள் என யோசித்தவன், “இந்த முறை அம்மா ஊருக்குப் போறதுக்குள்ள, இன்னும் திடமா பேசுறேன்டி,” நம்பிக்கையூட்டி, அவள் விழிநீரைத் துடைத்துவிட்டான்.
இன்னும் இறுக்கமாக அவன் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டவள், “எழுத்தாளரே! நீங்க வீண் பிடிவாதம் பிடிக்காம அந்த வீட்டுப்பத்திரத்தை என் மாமியார்கிட்ட கொடுத்தாலே போதும்… பேசணும்னு அவசியமில்ல,” வாசுகியின் மனத்தை வெல்லும் வழி கண்முன்னே இருக்கிறது என அழுத்தமாகக் கூறினாள்.
மாட்டேன் என்று மறுப்பாய் தலையசைத்தவன், “சண்டே வந்து உங்க அப்பாகிட்ட விருத காட்டுறேன். அவர் மனசு மாறுதான்னு பார்க்கலாம், என அவள் கன்னத்தை வருடி, “நிம்மதியா தூங்கு!” என்று நகர்ந்தான்.
இனி எங்கே நிம்மதியாக தூங்குவது என்று தோன்றியது மீராவிற்கு.
பல கவலைகளுடன் நித்திரை கொண்ட மீரா நடுஜாமத்தில் விழித்துக் கொண்டாள். இலக்கை நோக்கி நிற்காமல் ஓடும் ரயிலின் சலசலப்பு சப்தம்; பிடிக்கொடுக்காமல் பழகும் மாமியார் எதிரில்; தூக்கமும் விழிப்புமாக இருக்குமிடம் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். கண்கள் தன்னவனைத் தேட, அவன் நிம்மதியாக உறங்கி கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
“ஹரி! ஹரி! எழுந்திருடா!” எம்பி எம்பி, மேல் தளத்தில் படுத்திருக்கும் அவனை எழுப்ப முயன்றாள். ஐந்து நிமிடங்கள் அவனை ஓயாமல் தட்டியதில், வாசுகி புரண்டு படுத்தது தான் மிச்சம்.
“என்னடி வேணும் உனக்கு?” கண்களைக் கசக்கிக்கொண்டாவாறு எழுந்தவன் சிடுசிடுத்தான்.
“வாஷ்ரூம் போகணும்; கொஞ்சம் துணைக்கு வாடா!” என்றவளுடன், வணங்காமல் சென்று வந்தான். இவர்கள் பேச்சு கேட்ட வாசுகி முழித்து கொண்டாள். அவர்களை ஏற இறக்க பார்த்தாரேயொழிய எதுவும் பேசவில்லை. பத்து நிமிடத்தில் திரும்பி வந்தவர்களும் அமைதியாக உறங்கச் சென்றனர்.
கதிரவன் அதன் மென்கரங்களால் வருடி, ரயிலில் பயணிப்பவர்களை எழுப்பி கொண்டிருந்தது. “காபி! டீ! மசாலா சாயா!” கூக்குரலுக்கு, பதில்சொல்லும் வகையில், பயணிகளின் வயிறும் ரம்மியமாய் இசைத்தது. ஒருவர் பின் ஒருவராய் பல் துலக்கிவிட்டு வர, “ஹரி! என் கூடவா!” ப்ரெஷ்ஷும் பேஸ்டுமாக அவனெதிரில் நின்றாள் மீரா.
அன்றைய செய்தித்தாளில் மூழ்கியிருந்தவன், அதிலிருந்து தலைதூக்கி, “இப்போ என்ன பயம் மீரா? காலை வேளைதானே?” சலித்துக்கொண்டான்.
“நல்லா சொல்லுடா!” நண்பனுக்கு ஒத்தூதிய அரவிந்தன், மீராவைப் பார்வையால் வீழ்த்தி, “இவ சரியான தொட்டால்சிணுங்கிடா… ஊருக்கு வரப்பவும் இப்படித்தான் என்னை வா வான்னு தொல்லை செஞ்சா… தைரியமா இருக்குற அஞ்சலியையும் தனியா போகாதேன்னு தடுத்து அறிவுரை வேற,” புலம்பித் தீர்த்தான்.
பதிலுக்கு ஹரி அவள் அர்த்த ராத்திரியில் தன்னை எப்படி எழுப்பினாள் என்றும், தன் தூக்கம் அதனால் கலைந்தது என்றும் புகார் வாசிக்க, மீராவிற்குக் கோபம் தலைக்கேறியது.
“பாதுகாப்புக்காகத் தானே உங்களைக் கூப்பிட்டேன்… மாறி மாறி கேலி செய்யறீங்களே!” முகம் சுருக்கினாள் மீரா.
“பின்ன என்ன மீரா! ஓடுற ட்ரெயின்ல யாரு வந்து உன்னை தூக்கிட்டுப் போவாங்க?” தர்க்கம் செய்தான் ஹரி.
“எத்தனையோ ட்ரெயின்ல வாஷ்ரூம் கிட்ட நின்னுகிட்டு பொண்ணுங்கள கலாட்டா செய்யறவங்களையும், சிகரெட் பிடிச்சு கும்மாளம் அடிக்கிறவங்களையும் பார்த்திருக்கேன்; அதுமட்டும் இல்ல; சில வாஷ்ரூம் கதவுக்கு தாழ்ப்பாள் கூடச் சரியா இருக்காது. அதனால, எங்கப்பா என்னைத் தனியா விடவே மாட்டாரு தெரியுமா,” முகத்தை அப்பாவியாக வைத்து பேசியவள், தன்னையும் அறியாது அப்பாவை நினைத்துக்கொண்டாள்.
அரவிந்தன் திருமணத்திற்கு சென்றிருந்த போதும் ரயிலில் அவள் தன்னைத்தான் துணைக்கு அழைத்தாள் என நினைவுகூர்ந்த அரி, “சரி வா!” என மென்னகையுடன் எழுந்துகொண்டான்.
ஓய்வறையிலிருந்து பயண இருக்கைக்குத் திரும்பும் வழியில்தான், அவளுக்கு வாசுகி அவர்களுடன் பயணிப்பது நினைவுக்கு வந்தது.
“ஹரி! உன்னைத் தனியா அழைச்சிட்டு வந்து பேசறதுக்குத் தான் பயம் அது இதுன்னு நடிச்சேன்னு சொல்லிடுவாங்களா டா,” மீராவின் கற்பனை குதிரை ரயிலை காட்டிலும் வேகமாக ஓடியது.
அவள் முகபாவனைகளை ரசித்துச் சிரித்தவன், “யாருக்குத் தெரியும்! இப்படி ஒரு பயந்தாங்கொள்ளியைக் கல்யாணம் செஞ்சுக்காதன்னு சொன்னாலும் சொல்லுவாங்க,” எனக் கண்சிமிட்டி வம்பிழுத்தான்.
“மீராவுக்கு கராத்தே, குங்ஃபூ எல்லாம் கத்துக்கொடுக்குறேன்னு சொல்லி கன்வின்ஸ் பண்ணுங்க எழுத்தாளரே!” அவளும் சலிக்காமல் பதிலளித்தாள்.
தங்கள் காதலுக்கு விடாப்பிடியாக எதிர்ப்புத் தெரிவிக்கும் பெற்றோரின் குணம் பழகிவிட்டவர்களுக்கு, எதையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் வந்துவிட்டது போல…
ஆனால் வெள்ளந்தியாக மீரா தன் பயத்தை ஹரியிடம் சொன்ன அந்தத் தருணத்தில் தான், மீரா மேல் வாசுகிக்கு கொள்ளை அன்பு வந்தது என்று அவர்கள் மட்டும் அறிந்திருந்தால்!
சென்னைக்கு வந்தவர்கள், டாக்ஸி ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்குத் திரும்பினர். அஞ்சலியும், அரவிந்தனும் முதலில் இறங்கிக்கொள்ள, மீராவின் வீட்டு வாயிலில் வந்து நின்றது டாக்ஸி.
மகள் வருகையை எதிர்ப்பார்த்து வாசலிலேயே காத்திருந்தார் நிர்மலா. ஹரியிடம் ஏடாகூடமாகப் பேசி பிரச்சனை செய்துவிடுவாரோ என்ற பயம் மீராவின் முகத்தில் வழிந்தோடியது. இறுகிய முகத்துடன் வண்டியை நோக்கி வரும் அன்னையிடம், எதுவும் பேசிவிடாதே என்று விழி அசைவில் கெஞ்சினாள்.
மகளை லட்சியம் செய்யாமல் வாசுகி அமர்ந்திருந்த ஜன்னல் பக்கம் வந்தவர், “எப்படி இருக்கீங்க ‘ம்மா! உள்ள வாங்க!” அன்பாய் அழைத்தார்.
மகளை போன்றே தாயும் நற்குணம் படைத்தவள் என்று உடனே புரிந்துகொண்டார் வாசுகி. மீராவை நேசிக்க துவங்கிய வாசுகியின் மனம், அவளைச் சார்ந்தவர்களையும் நேசிக்க துவங்கியது. நற்சிந்தனைகள் மனத்தில் உதயமாக, கண்களும் நல்லதை மட்டுமே பார்த்தது.
“இல்ல இருக்கட்டும்!” தன்மையாக மறுத்தார். அதுவே பெரும் வியப்பைத் தந்தது ஹரிக்கும் மீராவுக்கும்.
“இன்னொரு நாள் அம்மாவை அழைச்சிட்டு வரேன் ஆன்டி!” இடைபுகுந்த ஹரி, புறப்படடுகிறோம் என மீராவுக்குக் கண்ணசைக்க, மீராவும் தப்பித்தேன் என்ற பெருமூச்சுடன் தலையசைத்தாள்.
“சரி தம்பி! ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க!” என்ற நிர்மலா, மகளை உள்ளே வரச்சொல்லி இறுகிய தோணியில் அழைத்தார்.
பதற்றத்துடன் பின்தொடர்ந்தவளிடம் அமைதியாக ஒரு பையை நீட்டியவர், “நீ சொன்னமாதிரி மாவு அரைச்சி வெச்சிருக்கேன். கொடுத்திட்டு வா!” என்றார்.
சொன்ன வேகத்தில் கொடுத்துவிட்டு வீட்டிற்குள் ஓடி வந்தவளின் கண்கள் குற்றவுணர்ச்சியில் ஈரமானது.
ஊருக்குப் புறப்படும் முன், ஹரிக்கு தேவையானதை செய்து வைக்க சொன்னது என்னமோ உண்மைதான். ஆனால் கிளம்பும்முன் அப்பாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், அம்மா, ஹரிக்கு உணவு சமைக்க அக்கறை காட்டியிருக்கமாட்டார் என்று நினைத்தாள் மீரா.
அம்மாவின் தோள்சுற்றி அவள் கெட்டியாக கட்டிக்கொள்ள, “கைய எடுடி! ஒருவாரமா பேசாம இப்போ வந்து கட்டிப்பிடிச்சா, எல்லாத்தையும் மறந்துடுவேன்னு நெனச்சியா?” எத்தனித்தார் நிர்மலா.
“ஸாரி ‘ம்மா! அப்பாமேல இருந்த கோபத்துல உன்கிட்டயும்…” மீரா தொடங்க,
“அப்பாமேல கோபப்படுறதும் தப்பு!” அதட்டினார் நிர்மலா.
இத்தனை நடந்தும், தந்தைக்கே பரிந்து பேசுகிறாரே என மீரா யோசிக்க, மகளுக்கு அறிவுரை சொல்ல, இதுவே சமயம் என நிர்மலாவும் சுதாரித்துக்கொண்டார்.
“அப்பா அப்படிக் கேட்டது தப்புதான். ஆனா அவருக்கு உண்மை காரணம் சொல்லாம, நீ இவ்வளவு பிடிவாதமா இருக்கறதுல யாருக்கு என்ன லாபம்னு சொல்லு…” கேட்டதும், சிந்திக்கத் தொடங்கினாள் மீரா.
மகளின் கன்னங்களை வருடியவர், “அப்பா ஊருக்குப் போயிருக்காரு. திங்கட்கிழமை காலையில தான் வருவாரு,” தகவல் சொன்னவர்,
“அப்பாகிட்ட வறட்டு பிடிவாதம் பிடிக்கிறது முக்கியமா; இல்ல உங்க காதல் கைக்கூடுறது முக்கியமான்னு நீயே யோசிச்சுப் பாரு!” முடிவை மகளிடமே விட்டார்.
“ஹரி! மீரா தான் உனக்கு ஏத்த பொண்ணு!” வீட்டிற்குள் நுழைந்த மறுகணமே வாசுகி தன் சம்மதத்தைச் சொன்னார்.
காண்பது கனவா, நிஜமா என்று குழம்பி நின்றான் ஹரி.
“நாளைக்கே என் மருமகள வீட்டுக்கு அழைச்சிட்டு வா. அப்படியே மணிமாறனுக்கு ஃபோன் போட்டுத்தா. அவனும் இதை கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவான்!” இத்தனை நாட்களாக இவரா மீராவை வெறுத்தார் என்பதுபோல அன்புக்கட்டளைகள் இட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் ஹரியின் முகத்திலோ அவர் எதிர்ப்பார்த்த எந்த மகிழ்ச்சியும் இல்லை.
கால்மணி நேரத்திற்கு முன்கூட மீராவிடம் முகம் பார்த்துப் பேசாதவர், இப்போது மருமகள் என்று உரிமை கொண்டாடுவது ஏன் என்று யோசித்தவன், வாசுகி மீராவின் வீட்டை கண்கொட்டாமல் பார்த்ததை நினைவுகூர்ந்தான்.
“அவங்க வீட்ட பார்த்ததும் நம்மளவிட வசதியானவங்கன்னு கணக்கு போட்டையா? இல்ல வீட்டுக்கு ஒரே பொண்ணு… சொத்தெல்லாம் அவளுக்கு தானேன்னு மனச மாத்திகிட்டயா?” விரக்தியில் பொருமினான்.
“வேண்டாம் ஹரி! வீணா வார்த்தையை விடாதடா!” மகனின் குத்தல் பேச்சில் துடிதுடித்துப் போனார் வாசுகி.
அப்போதும் ஹரியின் மனம் இளகவில்லை.
“நான் ஒண்ணும் தப்பா கேட்கலையே ‘ம்மா. உள்ளத தானே சொன்னேன்!” தர்க்கம் செய்தவன், “என் மீராவோட நற்குணம் தெரிஞ்சும், வீட்டுப்பத்திரத்த திருப்பி கொண்டுவந்தா தான் சம்மதம் சொல்வேன்னு சொன்ன… இப்போ என்ன இந்தத் திடீர் மனமாற்றம்…”குத்திக்காட்டி,
“ஒரு விஷயம் தெளிவா புரிஞ்சுக்கோ! இப்படியெல்லாம் பேசினா, நான் வீட்டுப் பத்திரத்த வாங்கிட்டு வந்துடுவேன்னு நினைக்காத!” தீர்மானமாய் சொன்னான்.
“வேண்டாம் ஹரி! அது உங்கபாடு! நான் அதுல தலையிடமாட்டேன்,” மென்மையாக மறுக்கும் தாயை இமைக்காமல் பார்த்தான் ஹரி.
அவர் மன உறுதியை கண்டறிய நினைத்தவன், “அதுமட்டுமில்ல! திங்கட்கிழமைலேந்து, நாங்க ஒரே இடத்துலதான் வேலை செய்யப்போறோம். அவதான் எனக்கு உயர் அதிகாரி… இப்போ மட்டுமில்ல… கல்யாணத்துக்கு அப்புறமும் அப்படித்தான்… எப்பவுமே அப்படித்தான்… இதை நான் கம்பீரமா சொல்லிப்பேன்… எங்க புரிதல உனக்கோ, வெளிவுலகத்துக்கோ நிரூபிக்க வேண்டிய அவசியமில்ல,” தங்கள் அன்பின் ஆழத்தை தெளிவுபடுத்தினான்.
“ம்ம்… அதையும் புரிஞ்சுகிட்டேன் ஹரி. எவ்வளவு உயர்பதவியில் இருந்தாலும், அவ அன்னைக்குச் சொன்னமாதிரி… மீரா கண்ணுக்கு நீதான் ஹீரோவா தெரியுற… அவ உன்மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கா…உன்னை எத்தனை உயர்வா பாக்குறா… எவ்வளவு ஒழுக்கமான பொண்ணு… எல்லாத்தையும் இந்த பயணத்துல பலமுறை கண்கூடா பார்த்தேன் டா!” ஆழ்மனத்திலிருந்து உரைத்தவர்,
அவள் விடுதியில் தனியாகத் தங்க பயந்தது; தன் கணவரின் நிழற்படத்தை ஹரியின் சட்டையில் வைத்தது; ரயிலில் ஹரியை பாதுகாப்புக்கு அழைத்தது; ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியவர், இத்தனை இளகிய மனம் படைத்தவள், அனைவரையும் தன் அன்பால் அரவணைப்பாளே தவிர, ஒருபோதும் அதிகாரம் செய்யமாட்டாள் எனப் புத்தி தெளிந்ததாகக் கூறி மகனை ஆச்சரியத்தில் தள்ளினார்.
அம்மா சிந்தித்துப் பேசுகிறார் என்று உணர்ந்தவன், “சரிம்மா. இன்னொரு விஷயத்தையும் கேட்டுட்டு அப்புறம் உன் முடிவைச் சொல்லும்மா!” என வீடு வாங்கியிருக்கும் விவரங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் விவரித்தான்.
“வீடு எங்க ரெண்டு பேர் பேருலையும் தான் இருக்கு. லோன் மட்டும் முழுசா மீரா பேருல எடுத்திருக்கோம். மாசாமாசம் கடன் தொகையை நான் கட்டுறேன்… இதுல எங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்ல. உனக்கும் தகவல் மட்டும்தான் கொடுக்கறேன்!” என்றான் கறாராக.
இருவரும் சேர்ந்து வீடு வாங்கியிருக்கிறார்கள் எனக் கேட்டவருக்குப் பிரமிப்பாக இருந்தது. உற்சாகம் இல்லாமல் வேலை செய்துகொண்டிருந்த மகனின் எழுதும் ஆசைக்கு ஊக்கமளித்தது மட்டுமில்லாமல் வீடு வாங்கும் அளவிற்கு அவன் தகுதியை உயர்த்தி இருக்கிறாளே என மீராவை எண்ணி பூரித்தார். தன் முடிவில் மாற்றமில்லை எனப் பனித்த கண்களுடன் தலையசைத்தார்.
அப்போதும் அம்மாவின் பதிலில் பிடிமானம் வரவில்லை அவனுக்கு. உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார் என்று தான் யோசிக்கத் தோன்றியது. அம்மாவின் நிலையற்ற புத்தியால், மீரா இனி ஒருபோதும் துன்பப்படக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தவன், திங்கட்கிழமை மாலை அழைத்து வருவதாகப் பதிலளித்தான்.
மகனுக்குத் தலையசைத்து நகர்ந்த போதிலும், காத்திருந்த இரண்டு நாட்களும் மீராவின் நினைவிலேயே கரைந்து இருந்தார் வாசுகி. மீரா செய்துவைத்திருந்த பொடிகளையும், ஊறுகாய்களையும் புசித்தவர் மனத்திலும் ஆழமாய் ஊறிப்போனாள் மீரா.
திங்கட்கிழமை வங்கிக்குப் புறப்பட்ட மகனின் வழியை மறித்தவர்,
“பர்மிஷன் போட்டு சீக்கிரமே என் மருமகளை அழைச்சிட்டு வாடா!” கண்கள் சுருக்கிக் கெஞ்ச, அம்மாவின் தவிப்பை ரகசியமாக ரசித்தான் ஹரி.
தாயை பாசமாக அரவணைத்தவன், “பர்மிஷன் எல்லாம் போடமுடியாது. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுவோம்,” மெல்லிய புன்னகையுடன் சொல்ல, அவரும் சிறுபிள்ளைபோல உம்மென்ற முகத்துடன் தலையசைத்தார்.
“அப்பா! உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்!” பத்து நாட்களுக்குப் பிறகு நேரில் காணும் தந்தையிடம் பேசினாள் மீரா.
“உண்மையைச் சொல்லு!” உறுமினார் வரதன்.
“இதை ஒருமுறை போட்டுப் பாருங்க ‘ப்பா! ஹரி எவ்வளவு நல்லவன்னு உங்களுக்குப் புரியும்!” தன்மையாகப் பேசியவள், டெல்லியிலிருந்து கொண்டுவந்த வீடியோ கேஸட்டைத் தந்தையிடம் நீட்டினாள்.
உள்ளதை உள்ளபடி சொல்லாமல் ஹரிபுராணம் பாடி சுற்றி வளைக்கிறாளே என்று எரிச்சலடைந்தவர், “கல்யாணம் செஞ்சுகிட்டீங்களா இல்லையான்னு சொல்லு?” எனச் சிடுசிடுத்தார்.
யாரோ ஒரு நண்பன் சொன்ன விஷயம் உண்மையா, பொய்யா என்று தெரிந்துகொள்ள மட்டும் ஆர்வம் காட்டும் இவரிடம் பேச என்ன இருக்கிறது எனக் கோபம் தலைக்கேறிய பெண்மான்,
“நான் இன்னைக்குப் பழையபடி பாங்குக்குப் போகப்போறேன்! ஹரி பக்கத்துல உட்கார்ந்து வேலை செய்யப்போறேன்! அழுத்தமாகச் சொன்னவள், “அரசாங்க வங்கி விதிமுறைகள் படி, கணவன் மனைவி ரெண்டு பேரும் ஒரே இடத்துல வேல செய்ய முடியுமான்னு நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க!” உறுமி, கேஸெட்டை மேஜையில் வைத்துவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
‘ரெண்டு பேரும் எப்படியோ போங்க !’ நம்பிக்கை இழந்தவராக நகர்ந்தார் நிர்மலா.
வாழ்க்கையே வெறுத்துப் போனவளாக மீரா சன்னியுடன் வாசலுக்கு வர, மாலையில் அவளை அம்மாவிடம் அழைத்துச் சென்று இன்பதிர்ச்சி தரப்போகும் மிதப்பில் அவளை நோக்கி நடந்துவந்தான் ஹரி.
பேசிப்பழகி பார்த்ததில் பித்தம் தெளிந்து,
மருமகள் என உறவாட விழைகிறது தாய் மனம்;
பிறர் பேச்சைக் கேட்டுப் பிதற்றி,
மகளுடன் பிளவை உண்டாக்கியது தந்தை குணம்.
பாசப் போராட்டத்தின் பனிப்போர் கரையுமா – பதில்சொல்லும்,
பதுமை பெரியவர்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்….


Please Comment Here