73 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
அப்பாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிடும் பக்குவத்துடன் வீடு திரும்பியவளின் சுயத்தை உசுப்பேற்றியது அந்த கேஸெட். காலையில் வைத்துவிட்டுப்போன அதே இடத்தில் இருந்தது. இம்மியளவும் இடத்தைவிட்டு நகரவில்லை.
இவ்வளவு பிடிவாதம் கொண்ட பெற்றோரிடம் நான் மட்டும் ஏன் தழைந்து போகவேண்டும் என ரோஷம் ஜிவ்வென்று ஏற, ஹரி போதித்த அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறந்தது.
வாசுகியின் மனமாற்றத்தை அறிந்த நண்பர்கள், அதை கொண்டாடும் விதமாக மறுநாளே அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டனர். நண்பர்களின் அலப்பறைகளில் வீடே திருவிழா கோலம் பூண்டது.
தொடர்ந்து வந்த நாட்களிலும் காலை மாலை என இருவேளையும் வாசுகியுடன் கொஞ்சிக் குலாவினாள் மீரா. காலையில் வாசுகி அவளுக்குப் பிடித்தமான உணவு வகைகளைச் சமைத்து காத்திருப்பதும், மாலையில் மீரா மூவருக்குமான ஏலக்காய் டீ தயாரிப்பதுமாகப் பாசத்தைப் பரிமாறிக்கொண்டனர்.
கிட்டதட்ட திருமணமாகி புகுந்து வீட்டில் வாழ்வது போல மகிழ்ச்சியில் மிதந்தவளுக்கு, வீடு திரும்பியதும் எல்லாம் கனவுபோல மறைந்து போய்விடும். தந்தை மகளின் பிடிவாத குணத்தில் வெறுத்துப் போயிருந்த நிர்மலாவும், அவர்கள் விஷயத்தில் தலையிடவில்லை.
ஹரி தந்த அவகாசம் நெருங்க வியாழக்கிழமையும் உதித்தது.
“ஹரியோட அம்மாவே மனசு மாறி எங்க காதலுக்குச் சம்மதம் சொல்லிட்டாங்க. அப்பாகிட்ட அந்த கேஸெட்ட ஒருமுறை போட்டுப் பார்க்கச் சொல்லேன்,” வங்கிக்குப் புறப்படும் வழியில் நிர்மலாவிடம் கேட்டுப்பார்த்தாள்.
“யார் சம்மதம் சொன்னாலும் சொல்லாட்டாலும் எனக்கு என் புருஷன் சம்மதம்தான் முக்கியம்!” தீர்க்கமாக மறுத்தார்.
அம்மாவும் முரடு பிடிப்பதாக எரிச்சல் கொண்டவள், “உங்களுக்கு என் வாழக்கை மேல உண்மையிலேயே அக்கறை இருந்தா, இன்னைக்கு மதியம் டி.வில ஹரியோட இன்டர்வியூ வரும். முடிஞ்சா அதையாவது பாருங்க!” கடுகடுத்து, தான் அந்த நிகழ்ச்சியை ஹரியோடு சேர்ந்து அவன் வீட்டில் இருந்தபடி பார்த்துவிட்டு இரவுதான் வரப்போவதாகவும் கூடுதல் தகவல் சொல்லி விறுவிறுவென வெளியேறினாள்.
மதியம் மகள் சொன்ன நேரம் நெருங்க நெருங்க, நிர்மலாவிற்கும் அந்த நிகழ்ச்சியை பார்க்கவேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அவர் பொறுமையைச் சோதிக்க, அன்று மதிய உணவு அருந்த வந்த வரதன், மீதமுள்ள அலுவல் வேலைகளை வீட்டிலிருந்தபடி செய்யப்போவதாகச் சொல்லி சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.
பத்து நிமிடங்கள் அறையின் குறுக்கு நெடுக்கும் நடந்து தவித்த நிர்மலா, ஏதோவொரு உத்வேகத்தில் தொலக்காட்சியை உயிர்ப்பித்தார். நேர்காணல் ஏற்கனவே தொடங்கியிருக்க, ஹரியைத் திரையில் கண்ட வரதன் மனைவியை முறைக்க,
“உங்களுக்கு வேண்டாம்னா பார்க்காதீங்க!” அழுத்திக்கூறி தொப்பென்று சோஃபாவில் அமர்ந்துகொண்டார்.
வரதன் தன் பொருட்களை எடுத்துக்கொண்டு நகர, தொலைக்காட்சியின் ஒலியை கூட்டினார் நிர்மலா.
“ஓ.கே மிஸ்டர். ஹரி! இத்தனை நேர்மறை சிந்தனைகள் நிறைந்த கற்பனை கதைகள் கொடுத்திருக்கும் நீங்க, உங்களுக்கு வரப்போகும் மனைவிய பற்றி கூட நிறைய கற்பனை செஞ்சு வச்சிருப்பீங்கன்னு நினைக்கறேன்!” குறும்பாய் கேட்டவர், “சொல்லுங்க! வருங்கால மனைவிய பற்றின உங்க எதிர்ப்பார்ப்புகள் என்னென்ன?” என்றார்.
கன்னத்தில் குழிவிழச் சிரித்தவன், “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுத்து!” என்றான் சிறிதும் தயக்கமின்றி.
வெடுக்கென்று திரும்பிய வரதன், மனையாளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தபடி அவர் அருகில் அமர்ந்துகொண்டார்.
‘இதையா பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாய்!’ தன் வளர்ப்பை எண்ணி நொந்துகொண்டார் நிர்மலா.
“கல்யாணம் ஆயிடுத்தா! எப்போ? எங்க? உங்க மனைவி பேரு என்ன?” பேட்டியாளர் கேள்விகளை அடுக்க,
அப்போதும் உதடு பிரிக்காமல் சிரித்து மழுப்பியவன், “கெட்டி மேளம் கொட்ட அக்ஷதை மழைக்கு நடுவில் தாலி கட்டுறது தான் கல்யாணம்னா… அப்போ, எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகல!” புதிர்போட்டான்.
“மோதிரம் மாற்றி… பதிவு திருமணம்…” அவர் பட்டியலிட்ட அனைத்திற்கும் இல்லை இல்லை என்று மறுப்பாகத் தலையசைத்துப் புன்னகைத்தான் ஹரி.
“லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பா…” சமீபத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தில், இளைஞர்கள் பின்பற்றுவதை போலவா, வினவினார் பேட்டியாளர் பேராவலுடன்.
“அப்படியெல்லாம் சொல்லி, எங்க உறவ கொச்சைப்படுத்தாதீங்க!” கொந்தளித்த ஹரி, நொடியில் இருக்கும் இடத்தை உணர்ந்தான்.
பல ஆயிரம் நேயர்கள் பார்க்கவிருக்கும் நிகழ்ச்சியில், சுற்றிவளைத்துப் பேசுவது தவறு எனச் சுதாரித்துக்கொண்டவன், தளர்ந்த குரலில்,
“மன்னிச்சிருங்க! எது சரி தவறுன்னு விவாதிக்க நான் விருபம்புல. இது என் தனிப்பட்ட கருத்து. எனக்கு நம்ம முன்னோர்கள் வகுத்த கலாச்சாரத்திலும், பழக்கவழக்கங்களிலும் நிறைய நம்பிக்கை உண்டு,” தெளிவுபடுத்தினான்.
“உங்க காதலின்னு சிம்பிளா சொல்லலாமே!” குறுக்கிட்டார் பேட்டியாளர்.
“அவ எனக்கு ஐலவ்யூ சொல்லி பிரபோஸ் பண்ணியிருந்தா, அப்படி சிம்பிளா காதலின்னு அறிமுகப்படுத்தியிருப்பேன்,” சிம்பிள் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னவன்,
“அவ என்கிட்ட வந்து… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம் ஹரி… நீ எழுதறதுல மட்டும் கவனம் செலுத்து… நான் குடும்பப் பொறுப்புகள பார்த்துக்கறேன்… நீ உலகம் போற்றும் எழுத்தாளனா வளர்ந்து, இந்த ராஜகுமாரிய அன்பா பார்ததுப்பன்னு என்மேல அதீத நம்பிக்கை வெச்சு பேசினவள, நான் எப்படி சிம்பிளா காதலின்னு சொல்லமுடியும்?” மனம் திறந்து பேசியவனை, ஆழமாய் பார்த்தார் பேட்டியாளர்.
அவர்கள் அன்பின் ஆழத்தை உணர்ந்தவர், “எதிர்காலத்தைப் பற்றி இவ்வளவு தெளிவா யோசிச்சிருக்க உங்க மனைவிய நீங்க ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கல… பெற்றோர் சம்மதம்… ஜாதி…மதம்… அப்படி ஏதாவது…” நிகழ்ச்சியின் சுவாரசியத்தைக் கூட்ட துருவித்துருவிக் கேட்டார்.
“ச்சே! ச்சே! அதெல்லாம் ஒண்ணுமே இல்ல… எங்க ரெண்டு பேரோட பெற்றோரும் எப்பவுமே எங்க நன்னலம் கருதித்தான் எந்த முடிவையுமே எடுப்பாங்க…சொல்லப்போனா… எங்க உறவைப் பற்றி தெரிஞ்சியிருந்தும், நாங்க பேசிப்பழக தடை சொன்னதே இல்ல!” அவர் கற்பனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
“உங்க மனைவியும் இங்க வந்திருக்காங்களா?” கேட்டவர், அவனுடன் வந்தவர்களை ஏறிட,
“மறுபடியும் மன்னிக்கவும்! என் லட்சியம் நிறைவேறும்வரை அவளைக் காதலிக்கக் கூட மாட்டேன்னு சொல்லிருக்கேன்… அதனால….”
அவன் சொல்லி முடிப்பதற்குள், “அதனால என்ன… இப்போ இந்த உலகத்துக்கு முன்னாடி உங்க காதல கம்பீரமா அவங்களுக்குச் சொல்லுங்க,” உற்சாகமாய் யோசனை சொன்னார்.
“ம்ஹூம்!” மென்மையாய் தலையசைத்தவன், “இத்தனை நாளா பொறுமையா காத்துக்கிட்டு இருக்கறவளுக்கு, அவ கண்ண பார்த்து சொல்லணும்னு ஆசைப்படறேன்… அவகிட்ட மட்டும் சொல்லணும்… நான் சொல்றது அவளுக்கு மட்டும்தான் கேட்கணும்…” வார்த்தைக்கு வார்த்தை, அவன் குரல் சரிய, அதில் அவன் காதலின் வலிமையை உணர்ந்தவர் அமைதியானார்.
இத்தனை பக்குவமாக யோசித்து காதலிப்பவர்கள், திருமணம் பந்தத்தில் இணைந்த பிறகு கட்டாயம் அவர்கள் சேனலுக்குப் பேட்டி கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டவர், “மிஸ்டர். ஹரி! எழுதும்போது மட்டுமில்ல… பேசும்போதும் ரொம்ப கருத்தூன்றி பேசுறீங்க!” மெச்சி, “உங்க கற்பனை கதைகளை விட, உங்க காதல் கதை ரொம்ப சுவையாகவும் சுவாரசியமாகவும் இருக்கு!” என்றும் மனதார பாராட்டினார்.
பார்வையாளர்களுக்கு இது மற்றொரு எபிசோடாக இருந்தபோதும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு, பல விடைதெரியா கேள்விகளுக்குப் பதிலாக விளங்கியது.
ஹரி பேசியதை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த வரதன் கண்ணிலும் ஈரம்.
“மீரா சொன்னது உண்மைதான் நிர்மலா. ஹரியோட நற்குணம், அவன் பேசின ஒவ்வொரு வார்த்தையிலும் விளங்குது; எத்தனையோ முறை அவமானப்படுத்தி பேசியும், அவன் யார பற்றியும் குறைகூறாம, எவ்வளவு பக்குவமா பேசியிருக்கான்…” உணர்ச்சிவசப்பட்டவர்,
“மீரா வீட்டுக்கு வந்ததும் மன்னிப்புக் கேட்டு என் சம்மதத்தைச் சொல்றேன்,” என்றார் மனமுருகி.
“வேண்டாம்! மன்னிப்புக் கேட்காதீங்க!” திடமாய் தடைவிதிக்கும் மனைவியை ஆழமாய் பார்த்தார் வரதன்.
“நீங்க பேசினது தப்புதான்! அதுக்காக அப்பான்னு கூடப் பார்க்காம அவ இவ்வளவு பிடிவாதமா இருக்கறது எனக்குச் சுத்தமா பிடிக்கல… விட்டுக்கொடுத்துப்போக அவளுக்கும் தெரியணும்,” என்றார் தீவிரக்குரலில்.
“ஆனா அன்னைக்கு என்ன நடந்துதுன்னு நான் வாய்விட்டுக் கேட்டால்தானே அவ சொல்லுவா… ஹரி கிட்டயே நேரடியா பேசட்டுமா?” யோசனை கேட்டார்.
அதற்கும் மறுப்பாய் தலையசைத்தவர், “இந்தப் பிரச்சனை ஹரி காதுக்கு போயிருந்தா, கண்டிப்பா உங்ககிட்ட தன்மையா பேசச்சொல்லி அவளுக்கு அறிவுரை சொல்லிருப்பான். ஆனா உங்க பொண்ணு ஹரிகிட்டயும், தலையிடாதன்னு பிடிவாதம் பிடிச்சிருப்பா… அதனால, நம்ம அரவிந்தன்கிட்ட பேசலாம்,” என்றார்.
சிந்தித்துப் பேசும் மனைவிக்குச் செவிசாய்த்தார் வரதன்.
ஹரியின் பேட்டியை நேரிலேயே பார்த்திருந்தபோதும், இன்று தன்னவன் பேசுவதை திரையில் கண்டதும் மெய்சிலிர்த்துப் போனாள் மீரா. தன்னையும் மறந்தவளாக அவன் தோளில் தலைசாய்த்தாள். ஹரியும் அவளை ஆதுரமாய் அணைத்து தலைசாய்க்க, அவர்களுக்குத் தனிமையை கொடுக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார் வாசுகி.
“என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா ஹரி?” என்றவளின் குரல் சரிந்தது.
“இது என்ன கேள்வி!” தலையில் செல்லமாக முட்டினான் அவன்.
காதலின் பிடியில் தத்தளித்தவளின் விழிநீர் அவன் தோள்பட்டையை நனைக்க, அதில் பதறியடித்து நிமிர்ந்து உட்கார்ந்தவன், “என்னடி ஆச்சு உனக்கு?” என்றான் அவள் முகத்தைத் தாங்கிப்பிடித்து.
“இவ்வளவு காதலோட நீ ஒருமுறை கூட என்கிட்ட பேசினதே இல்லையே ஹரி!” தேம்பியவளின் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.
பதுமையின் விழிகளை மென்மையாகத் துடைத்துவிட்டவன், “இது மட்டுமில்ல மீரா. இன்னும் நிறைய பேசணும்னு ஆசை. அப்படிப் பேச நினைக்கும் போதெல்லாம் உன் அப்பாவுக்குக் கொடுத்த வாக்கு நினைவுக்கு வரும்டி,” வருத்தத்துடன் தலைகுனிய,
‘இவ்வளவு நற்குணம் கொண்டவனை ஏன்தான் அப்பா புரிஞ்சிக்க மாட்டேன்றாரோ!’ மனத்தில் குமுறியவள் மௌனத்தில் கரைந்தாள்.
“என்னை உங்க அப்பா அவமானப்படுத்தி பேசிடக்கூடாதுன்னு தான் நாங்க சந்திக்காம இருக்குறதுக்கு மெனக்கடறன்னு புரியுதுடி,” நான்கு நாட்கள் அவகாசம் கொடுத்தும் தட்டிக்கழிக்கும் அவளிடம் மெல்லமாகப் பேச்சுக் கொடுத்தான் ஹரி.
‘நான் மனசுல நினைக்கிறத அப்படியே சொல்றானே!” எண்ணியவளின் விழிகள் விரிந்த விதத்திலேயே அவன் உள்ளத்தைப் படித்தான் அவன்.
அவள் கன்னங்களை மென்மையாக வருடியவன், “ஆனால் இப்போ அது முக்கியமில்ல. நீதான் எனக்கு எல்லாமே மீரா. நம்ம சீக்கிரம் வாழ்க்கையில ஒண்ணு சேரணும்… சொல்பேச்சு கேளுடி…ப்ளீஸ்,” அடிமனத்திலிருந்து கெஞ்சினான்.
அவன் உருகியதில் ஆடித்தான் போனாள் அவள். என்றாலும் கண்டும் காணாதவள் போல நிமிர்ந்து அமர்ந்தவள், “எழுத்தாளரே! நீங்க எனக்கே எனக்காக எழுதற புத்தகத்துல, அன்னைக்கு அம்மா நம்ம காதலுக்குச் சம்மதம் சொன்ன மகிழ்ச்சியான தருணம் மட்டும்தான் இருக்கணும் ஆசைப்பட்டேன். அதான் டைம் கேட்டேன்,” சாமர்த்தியமாகப் பேச்சைத் திசைதிருப்பினாள்.
அவனும் ரசனையாகத் தலையைச் சிலுப்பிக்கொண்டு புன்னகைக்க,
“அதுக்குன்னு நான் அன்னைக்கு அம்மா தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதத பற்றியெல்லாம் அதிகமா எழுதிடாதீங்க,” உதட்டைப் பிதுக்கி குழைந்தாள்.
புத்தகம் என்றதும் நினைவு வந்தவனாக, “சரி! நான் உனக்கு எழுதுற கதையின் தலைப்பு என்னன்னு சொல்லு பார்க்கலாம்,” குறும்பாகக் கண்சிமிட்டினான்.
“ம்ம்..ம்…” ஆழமாய் யோசித்தவள், “க்ளூ கொடுடா!” எனச் சிணுங்கினாள்.
“முதல் வார்த்தை ‘அ’ ல தொடங்கும், இரண்டாவது வார்த்தை ‘ஆ’ ல தொடங்கும்,” அவன் அதே துப்பு தந்து கடுப்பேற்ற,
“வேற ஏதாவது க்ளூ கொடுங்க எழுத்தாளரே!” அவன் கன்னத்தைக் கிள்ளி செல்லம் கொஞ்சினாள்.
“இப்போ நான் உனக்கு சொன்ன அறிவுரையில் அதோட பொருள் இருக்கு,” என்றான்.
அந்தரத்தைப் பார்த்த வண்ணம் பலமாகச் சிந்தித்தவள், “அனைத்தும் ஆனவளே!” என்றாள்.
கன்னத்தில் குழிவிழ நமுட்டாகச் சிரித்தவன், “அருமையான தலைப்பு. ஆனால் அது இல்ல… உனக்கே உனக்குன்னு இன்னும் பொருத்தமான தலைப்பு,” என்றதும் பேதையின் முகம் சுருங்கியது. அவனையே சொல்லச் சொல்லி நச்சரித்தாள்.
“ம்ஹூம்! நீ கரெக்டா சொல்ற அன்னைக்குத் தான் அந்தப் புத்தகத்தை உன்கிட்ட கொடுப்பேன்,” என்றான் கண்களில் குறும்பு மின்ன.
“இதுவேறையா…” பெருமூச்சுவிட்டவள், “எழுத்தாளரே! கல்யாணம் ஆகட்டும்… நிபந்தனைகள் போடக்கூடாதுன்னு ஒரு நிபந்தனை போடறேன் பாருங்க!” பொய்கோபத்துடன் கண்களை உருட்டினாள்.
‘என் மீராவுக்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு!’ அன்று இரவு அவளை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவன், அவளுக்காக எழுதி வந்த நோட்டுப் புத்தகத்தின் முன்அட்டையை வருடினான்.
நாள் முழுக்க சேர்ந்து இருந்தபோதும், மனமே இல்லாமல் சன்னியில் பறந்தவளின் நினைவிலும் தன்னவன் மட்டுமே நிறைந்திருந்தான். தாங்கள் விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்று அவன் சொன்ன வார்த்தைகளில் கலந்திருந்த ஏக்கத்தையும், வலியையும் அசைப்போட்டவளுக்கு அம்மா சொன்ன அறிவுரை நினைவுக்கு வந்தது.
‘நீ முதல்ல, இப்படித் தொட்டதுக்கெல்லாம் கோபப்படாம ஹரி சொல்படி நட; அதுபோதும்.’ நினைவுக்கூர்ந்து தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
முத்தான மாப்பிள்ளை எனத் தெளிந்துவிட்டார் தந்தை;
முந்திக்கொண்டு பேசவேண்டாம் எனத் தடைவிதிக்கிறாள் தாய்;
மண நாளை எண்ணி தவம் கிடக்கிறான் தலைவன்;
மனத்தில் ஊசலாடி தவிக்கிறாள் தலைவி;
அக்கப்போரில் முதல் அடி வைக்கப்போவது யார் – பதில்சொல்லும்
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here