26 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்

என் அப்பாவிடம் நான் வியந்து பார்த்து பிரமிக்கும் ஏராளமான குணாதிசயங்கள் உண்டு. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.
மார்க்ஸும் மாற்றி யோசிக்கும் அப்பாவும்:
பொதுத் தேர்வு ரிஸல்ட்டுக்காக காத்திருக்கும் பிள்ளைகளிடம், முதல் ராங்க் வாங்குவாயா? நூறு மதிப்பெண்கள் எடுப்பாயா? எனக் கேட்கும் அப்பாக்களைத் தானே பார்த்திருப்பீர்கள். ஆனால் என் அப்பாவோ, ரிஸல்ட் வருவதற்கு முன்தைய நாள், ‘ஒரு வேளை நீ fail ஆகி விட்டால், எப்படி எடுத்துக்கொள்வாய்?’ எனக் கேட்டு நச்சரித்தார்.
நான் நன்றாக எழுதியிருக்கேன். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகாது என்று கூறியும் ஏற்கவில்லை அவர். Fail ஆகி விட்டால் என்ன செய்வேன் எனத் தெளிவான பதில் கூறும் வரை விடவில்லை.
ரிஸலட் வந்தபின், அவர் ஏன் அப்படி விடாப்பிடியாக கேட்டார் என்பதை விளக்கினார். அவர் படித்துக்கொண்டிருந்த காலத்தில், அவர் நண்பன், ஒரு பாடத்தில் fail ஆகி தேர்ச்சி பெறாத காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டாராம். அவர் விடைத்தாளை யாரோ திட்டமிட்டு பணம் கொடுத்து மாற்றியிருக்கிறார் என்பது Revaluationல் தான் தெரியவந்த போது அவர் உயிருடன் இல்லை.
இதை மனத்தில் வைத்துக்கொண்டு தான், நான் மனதளவில் பக்குவமாக இருக்க வேண்டும் என்பதற்காக என் அப்பா என்னை அப்படிக் கேள்விக்கேட்டு நச்சரித்திருக்கிறார்.
சுயம்வரம்:
இந்த மாற்றி யோசி வழிமுறை என் திருமண விஷயத்திலும் என் அப்பாவால் பேஷாக கையாளப்பட்டது.
ஜாதகம் பார்த்தே பெண் பார்க்கும் படலங்கள் நடந்தன. ஆறேழு வரன்கள் பொருந்தி, மாப்பிள்ளையின் அம்மா அப்பா மட்டும் நேரில் வந்து பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கச் சொல்லி, ஏன் எதற்கு என்றும் காரணங்களை விவரிக்கச் சொன்னார்.
22வயதில் என் எதிர்பார்ப்புகள் அப்படி என்ன இருந்துவிட முடியம். மணமகன் தோற்றம்; அன்பாகப் பேசும் புகுந்த வீட்டினர்; என நான் யோசித்தால், அவர் என்ன கோணத்தில் எல்லாம் யோசித்து மடக்கினார் தெரியுமா?
அதில் ஒன்று மட்டும் என் மனத்தில் பசுமர்த்தாணியாக…
கனிவாகப் பேசிய பிள்ளை வீட்டார். வீடு சொத்துக்கள் பற்றி வெளிப்படையாக பேசினார்கள். வேலைக்குப் போவதும் போகாததும் என் விருப்பம் என்று கூடச் சொன்னார்கள். அந்த வரன் மேற்கொண்டு பேசுங்கள் என்றேன்.
‘உனக்குச் செட் ஆகாது!’ என தீர்க்கமாக மறுத்தார் என் தந்தை.
‘என்ன குறை கண்டுவிட்டீர்கள்!’ என நான் கேட்க,
‘உன் short temperednessக்கும் sensitivityக்கும் மணமகனின் தங்கையோடு (to be நாத்தனாரோடு) ஒத்துப்போக மாட்டாய் என முகத்திற்கு எதிரே சொல்லிவிட்டார்.
இதைவிட பெரிய insult வேண்டாம் என்று கப்சிப் என்றிருந்தேன். நான் இப்போது வாக்கப்பட்டிருப்பது இரண்டு நாத்தனார்களுக்கு!!
‘இந்த வரன் மட்டும் ஏன் ஓகே சொன்னாய்?’ என என் தந்தையை மடக்கினேன்.
‘இவர்கள் மாப்பிள்ளையின் அக்காக்கள். உன் சுபாவத்தைப் பக்குவமாக கையாள்வார்கள்!’ எனச் சிறிதும் தயங்காமல் பதிலளித்தார். And of course he is 100% right என்று சொல்லவும் வேண்டுமோ!
என்றும் மாணவன்:
உடல்நலம் குன்றிய தன் அம்மாவின் ஆசைக்காக 21வயதிலேயே திருமணம் செய்துகொண்டவர் என் அப்பா. அப்போது அவர் வெறும் Diploma Holder. ஆனால் குடும்பப் பொறுப்புகள் அவர் லட்சியப் பாதைக்கு ஒருபோதும் தடையாகவே இருந்திருக்கவில்லை.
BE படித்து முடித்து, பணியிலும் படிப்படியாக promotions பெற்று உயர் பதவியில் வசிக்கிறார்.
அதுவும் அவர் எப்போது MBA படிக்கத் தொடங்கினார் என்று தெரியுமா?
நான் B.com படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போது என் தங்கை 12ஆம் வகுப்பில் படித்துக் கொண்டருந்தாள். மூவரும் புக்கும் கையுமாக, வீட்டின் குறுக்கே நெடுக்கே நடந்துகொண்டே படிப்போம்;
Management related topics, சில எனக்கும் அப்பாவுக்கும் பொதுவாக இருக்கும். இருவரும் கலந்தாலோசித்து combined study செய்த அந்த நாட்கள் எனக்கு very very special.
அதுமட்டுமில்லை. பல மொழிகளில் சரளமாகப் பேசவும் எழுதவும் கற்றுக்கொண்டார் (இன்றளவும் கற்றுக்கொண்டிருக்கிறார்). பம்பாய், ஹைதராபாத், பெங்களூரு என எங்கு போனாலும் உள்ளூர் மக்களுடன் கதைக்கும் அவர் சம்பாஷனைகளை மெய்மறந்து ரசிப்பேன்.
பாஷை தெரியாத ஊருக்குச் செல்ல நேர்ந்தால், 30 நாட்களில் ….. பாஷை புத்தகம் வாங்கிவிடுவார்.
நான் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது, அவருக்கு ஜப்பான் சென்றுவரும் வாய்ப்பு கிட்டியது. கூடவே அம்மொழியைக் கற்கும் வாய்ப்பும். அவர் வகுப்புகளுக்கான கட்டணத்தை அலுவலகம் பார்த்துக்கொள்ள, எனக்கு அவர் பணம் கட்டி என்னையும் படிக்கவைத்தார்.
Japanese combined study செய்தது, டெல்லியிலும் பூனாவிலும், ஒரே வகுப்பில் ஒருவர் பின் ஒருவர் அமர்ந்து தேர்வு எழுதினது எல்லாம் நெஞ்சை விட்டு நீங்காத பசுமையான தருணங்கள்.
தற்போது, பேரன் கற்கும் Taekwondo மேல் மலர்ந்திருக்கும் ஈர்ப்பினால் Korean பயின்று வருகிறார்.
சிக்கனத்தின் சிகரம்:
பொதுவிலேயே எளிமையாக வாழ கற்றுக்கொடுக்கும் பண்புடையாவர் அவர். ஆனால் அந்த நாட்களில், அப்பா தன் வெளியூர் அலுவலக பயணங்களில் சிக்கனம் செய்து வந்த விதம் அசாதாரணமானது.
உணவு, உள்ளூர் பயணங்கள், தொலைபேசி அழைப்புகள் (long distance call) எனப் பல்வேறு செலவுகளுக்கான தினசரி perks தருவார்கள். ஆனால் அப்பாவோ அவற்றை தனக்கென முழுவதும் செலவழித்துக் கொள்ளாமல், மிச்சம் பிடித்து எங்களுக்காகச் சேமிப்பார்.
காய்ந்து போன ரொட்டியை உண்டும், பஸ்ஸிலும் கால்நடையாகவும் பயணித்தும், போனில் அழைத்துப்பேசாமல், அம்மாவுக்கு butter paperகளில்(as it weighs less than the paper) கடிதங்கள் எழுதியும் எனச் சிறுகச் சிறுக சேமித்தார். சில வருடங்களுக்கு முன், அம்மா அந்த butter paper love letters எல்லாம் எங்களிடம் காட்டி இவற்றைப் பகிர்ந்தார்.
என்னை விட்டால் அப்பா புராணம் பாடிக்கொண்டே இருப்பேன். ஒன்றே ஒன்றை மட்டும் பகிர்ந்துவிட்டு இப்பதிவை முடித்துக்கொள்கிறேன்.
புகுந்த வீட்டின் செல்லப்பிள்ளை:
எப்போதுமே பெண், தன் புகுந்த வீட்டாரோடு ஒருத்தியாக மாறுவதைத் தானே பார்த்திருப்பீர்கள். இங்கு என் அப்பாவும் அப்படித்தான். 21வயதி்ல் திருமணமாகிவிட்டது என்று கூறினேன் அல்லவா. அப்போது என் அம்மாவுடன் கூடப்பிறந்தவர்கள் cousins எல்லாருமே 10-15 வயது வாண்டுகளாம். அன்று ஒட்டிக்கொண்டவர்கள் தான். இன்றளவும், Athin, Athimber என வண்டுகளாக அவரைச் சுற்றிவரும் பாசப்பிணைப்புகள்.

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்


Please Comment Here