90 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
மகள் வெறும் வயிற்றுடன் வங்கிக்குப் புறப்பட்டதில் பரிதவித்துப் போயிருந்தார் வரதன்.
மகளை அழைத்துப் பேசிவிடவா? வங்கிக்கு உணவு எடுத்துச் செல்லவா? அரவிந்தனிடன் எச்சரிக்கவா? என இடைவிடாமல் யோசனைகள் கேட்டு மனையாளை நச்சரித்துக் கொண்டிருந்தார்.
“ஒண்ணு மூஞ்சிய தூக்கி வச்சுகிட்டு முருங்க மறத்துல ஏறி உட்கார வேண்டியது… இல்ல இப்படிக் கண்மூடித்தனமா கொஞ்ச வேண்டியது… உங்களுக்கு சமநிலையாவே நடந்துக்க தெரியாதா?” இடித்துக்காட்டிய நிர்மலா, “அவளா வந்து சொல்ற வரைக்கும், நீங்க எதுவும் கேட்கக்கூடாது. அது எத்தனை நாள், எத்தனை வருஷமானாலும் சரி!” கட்டளையிட்டு நகர்ந்தார்.
“அவ பிடிக்கிறது பிடிவாதம்னா… அப்போ நீ செய்யறது என்ன?” முணுமுணுத்தவரை சட்டைக் கூடச் செய்யவில்லை அவர் சரிபாதி.
மகளின் சிந்தையிலேயே மிதந்தவருக்கு அலுவலகத்திற்குச் செல்லத் தோணவில்லை. கைப்பேசியில் ஊழியரைத் தொடர்பு கொண்டு அன்றைய வேலைகளை விவரித்தார். வரதன் கையொப்பமிட்ட காசோலை ஒன்று உடனடியாக வேண்டுமென்றார் அவர்.
காசோலையைப் பெற்றுக்கொள்ள வீட்டிற்கு வந்த ஊழியர் வரதனிடம் சில கோப்புகளைத் தந்துவிட்டுப் புறப்பட்டார். அவற்றை சரிபார்த்துவிட்டு அலமாரியில் பத்திரப்படுத்தியவருக்கு அன்று ஹரி தந்த வீட்டுப்பத்திரம், அவன் தனக்காக எழுதிய கடிதம் எல்லாம் தென்பட்டது.
‘உங்களுக்கு எப்போ எங்க காதல ஏத்துக்கணும்னு தோணுதோ, அப்போ இந்த கடிதத்த பிரிச்சு படிங்க’ ஹரி அன்று சொன்னது நினைவுக்கு வர, இதழோர சிரிப்புடன் கோப்பைகளுடன் சோஃபாவில் வந்தமர்ந்தார்.
ஹரி எழுதியிருந்த கடிதத்தைப் படித்தவருக்கு, கண்களில் வெள்ளப் பெருக்கெடுத்து தொண்டை அடைத்தது.
“நிர்… நிர்ம…!” மனைவியின் பெயரைக்கூட முழுமையாக உச்சரிக்க முடியாத அளவிற்கு மூச்சடைத்தது.
பதறியடித்து ஓடிவந்த தர்மபத்தினி, “பொறுமையா பேசுங்க… இழுத்து மூச்சு விடுங்க….” கவலையுடன் அவர் நெஞ்சை நீவி விட்டார்.
மனையாளின் கரத்தைப் பற்றிக்கொண்டு பயப்பட வேண்டாம் என நம்பிக்கையூட்டி நிமிர்ந்து அமர்ந்தவர், கடித்தத்தை தந்தார்.
அன்புள்ள மாமா!
எங்க காதலுக்குச் சம்மதம் சொல்ல நெனச்சதுக்கு அப்புறம்தான் இந்த கடிதத்த பிரிச்சு படிக்கறீங்கன்னு நம்பறேன். அதனால, ‘அங்கிள்”ன்னு கூப்பிடாம, உரிமையா உங்கள மாமான்னு கூப்பிடறேன். ஒருவேளை கோபத்துல பிரிச்சு இருந்தாலும் பரவாயில்ல. ப்ளீஸ், கிழிச்சு போடறதுக்கு முன்னால, ஒரு தடவ முழுசா படிச்சிடுங்க.
நம்ம முதல் சந்திப்புல நீங்க என்னை பிடிக்கலன்னு சொன்னப்போது ஒரு அப்பாவா உங்க பொண்ணுக்குச் சிறப்பான வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு நினைக்குறீங்கன்னு தான் எடுத்துக்கிட்டேன். அதான் எனக்கு மீராவ ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தும், உங்க எதிர்பார்ப்பு நியாயமானதுன்னு நானே ஒதுங்கிக்க முடிவு செஞ்சேன்.
ஆனால், ‘விட்டுடலாம், இதெல்லாம் சரியா வராது!’ன்னு, நான் சொன்னதுக்கு அப்புறமும் அவ செஞ்சதெல்லாம் பார்த்துப் பதறிப்போனேன். அவ என்னை எந்த அளவுக்கு விரும்புறான்னு புரிஞ்சுது.
என் எழுத்துத்திறன் மேல, எனக்கே நம்பிக்கை இல்லாதபோது, ‘உன்னால முடியும் ஹரி’ன்னு அத்தனை உறுதியா சண்டைபோடுறா. எங்க அப்பா என்மேல வெச்ச அதே நம்பிக்கைய மீரா பிடிவாதத்துல உணருறேன்.
அதுமட்டுமில்ல! எனக்காக அவளுக்குப் பிடிச்ச பாங்க் வேலையைக் கூட விடத்துணிஞ்சிட்டா. இவ்வளவு ஏன், உங்ககிட்டயே பேசாம இருக்காளே!
என்மேல கண்மூடித்தனமான அன்பும், நம்பிக்கையும் கொண்டவளுக்காக எழுதணும்னு தோணுது; அதே சமயத்துல, நீங்க எதிர்பார்க்குற மாதிரி உங்க பொண்ண நல்லா பார்த்துப்பேன்னு சொல்லணும்னு தோணுது.
ஆனால் நிதர்சனம் என்னன்னா, இன்னைய தேதியில என்னால வாயால சொல்ல மட்டும்தான் முடியும்…
இன்னும் சரியா ஒரு வருஷத்துல, கண்டிப்பா மீராவுக்கு ஏத்தவனா, நான் என்னை உயர்த்திப்பேன். ஆனால் இன்னைக்கே அவமேல எனக்கு இருக்குற அன்பு ஆழமானதுன்னு நிரூபிக்கணும்னு நினைக்கறேன். அதுக்காகத்தான் இந்த கடிதத்தோட ஒரு பத்திரம் இணச்சிருக்கேன்.
என் அப்பா எனக்காக கொடுத்திருக்கும் வீட்டை மீரா பேருல மாற்றி எழுதிருக்கேன். கடன் தொகைக்கு சூரிட்டியா வீட்டுப் பத்திரம் கொடுத்திருக்கேன்னு மீரா நெனச்சிட்டு இருக்கா; ஆனா இந்த வீடு அவளுக்குத்தான்; அவளுக்கு மட்டும்தான்.
அது அவ என் மனைவியா வந்தாலும் சரி, இல்ல தோழியாவே இருந்தாலும் சரி. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.
அவ என்மேல வெச்சிருக்க அதீத அன்புக்கு, எத கொடுத்தும் ஈடுகட்ட முடியாது. என்னால முடிஞ்ச வழியில, என் அன்பை வெளிப்படுத்திருக்கேன்.
அவளோட அன்புக்கு அடிமையான இந்த மனசு, பதிலுக்கு அள்ள அள்ள குறையாத அன்பை அவளுக்கு வாழ்நாள் முழுக்க கொடுக்கணும்னு ஏங்கித் தவிக்குது;
ஆனால் இதெல்லாம் உங்க சம்மதம் இல்லாம சாத்தியமே இல்ல.
நம்பி உங்க பொண்ணை எனக்குக் கல்யாணம் செய்துகொடுங்க மாமா, ப்ளீஸ்….
உங்கள் சம்மதம் எதிர்பார்த்துக் காத்திருக்கும்,
ஹரி.
கடிதத்தைப் படித்து மடித்து இறுக கண்மூடி பெருமூச்சுவிட்டார் நிர்மலா.
“இத்தனை நல்லவனை வரதட்சணைன்ற பேருல நம்ம பொண்ணோட சேமிப்பை எல்லாம் ஏப்பம் விடுறான்னு எத்தனை அவமானப்படுத்தி இருக்கேன்,” தலையில் அடித்துக்கொண்டு நொந்துகொண்ட வரதன், “ஹரிகிட்ட மன்னிப்புக் கேட்கவாவது உடனே பேசணும் மா,” என்றார் கெஞ்சலாக.
நிர்மலாவுக்கும் அதுதான் சரியென்று பட்டது.
வரதன் பேராவலுடன் மகளை அழைக்க, விருட்டென கைப்பேசியை பிடுங்கி அணைத்த நிர்மலா, “நான் உங்கள மன்னிப்புக் கேட்க சொன்னது ஹரிகிட்ட… உங்க பொண்ணுகிட்ட இல்ல!” என்றார் அழுத்தமாக.
மனையாளின் எண்ணம் புரியாமல் முழித்தார் வரதன்.
“நாம ஹரியோட அம்மாவை சந்திச்சு சம்பந்தம் பேசிட்டு வரலாம். எப்படியும் உங்க பொண்ணு அங்க போயிட்டுத்தான் வருவா… அவங்க வாயால நம்ம முடிவை தெரிஞ்சுண்டா ரொம்ப சந்தோஷப்படுவா,” திட்டத்தை விவரித்தார் நிர்மலா.
“நீ சொல்றத எல்லாம் பார்த்தா பொண்ணுக்குத் தண்டனை கொடுக்கிற மாதிரி இல்லையே… பரிசு கொடுக்கிற மாதிரியில்ல இருக்குது!” வரதன் நமுட்டாகச் சிரிக்க,
“இத்தனை நாளா பொறுமையா காத்துக்கிட்டு இருந்தவளுக்கு நம்ம சொல்ற சம்மதம் பரிசு… ஆனால் அவ வாய்விட்டு உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டதுக்கு அப்புறம்தான் நீங்க அவகிட்ட முகம் கொடுத்து பேசணும்!” நிர்மலாவிடம் அதே மனவுறுதி.
“இது வேறையா!” சலித்துக்கொண்டார் வரதன்.
தனிமையில் வீட்டை வலம் வந்த வாசுகியின் மனமோ மகன் மருமகளிடையே நடந்த வாக்குவாதத்தைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்தது.
‘மீரா சண்டை போடுறதே, ஹரி அவளோட அப்பாகிட்ட அவமானப்பட்டு நிற்க கூடாதுன்னு தானே! இப்பேர்ப்பட்ட பொண்ணுக்காக நான் அவளோட அம்மா அப்பாகிட்ட சம்பந்தம் பேசினால் என்ன…” என யோசித்தார்.
புறப்படத் தயாராகி வந்தவர், கணவரின் நிழற்படம் முன் கண்மூடி நின்றார். தடைகளை நீக்கி பிள்ளைகளை விரைவில் திருமண பந்தத்தில் இணைக்குமாறு வாசுகி மனமுருகி வேண்ட, வாசற்கதவு மணி ஒலித்தது.
பட்டுச் சேலை மயில்கண் வேட்டி சட்டையில் ஜோடியாய் நிற்கும் தம்பதியரின் தரிசனத்தில் ஸ்தம்பித்துப்போனார் வாசுகி.
“வாங்க! வாங்க! உள்ள வாங்க!” இருவரையும் வாய்கொள்ளா புன்னகையுடன் வரவேற்றார்.
மென்சிரிப்பும் தலையசைப்புமாக உள்ளே வந்தனர் நிர்மலாவும் வரதனும்.
பையில் வைத்திருந்த பொருட்களை தாம்பாளத்தில் நேர்த்தியாக அடுக்கி, தட்டைச் சேர்த்துப் பிடிக்குமாறு கணவரிடம் கண்ணசைத்தார் நிர்மலா.
“எங்க பொண்ண உங்க மருமகளா ஏத்துப்பீங்களா மா?” தழைந்த குரலில் கேட்டு, மனையாளுடன் இணைந்து தாம்பூலத்தை வாசுகியிடம் நீட்டினார்.
“நீங்க இதை சொல்லணும்னு தானே இத்தனை நாளா காத்துக்கிட்டு இருக்கேன்!” நெகிழ்ச்சியில் குளமான கண்களை வேகவேகமாக முந்தானையில் துடைத்துக்கொண்டு தாம்பூலத்தைப் பெற்றுக்கொண்டார் வாசுகி.
இனிப்புடன் தொடங்குவோம் எனக் கூறிக்கொண்டே வாசுகி சமையலறைக்குள் பறக்க, அவரைப் பின்தொடர்ந்தார் நிர்மலா.
சோஃபாவில் அமர்ந்த வரதனின் விழிகள் வீட்டை அலசியது.
‘காதலிக்காகத் தன்னிடம் இருந்த ஒரே வீட்டையும் எழுதிக்கொடுத்துவிட்டு, மற்றொரு வீட்டை தன் சொந்த உழைப்பில் வாங்கித்தர நினைப்பவனை என்னவென்று சொல்ல!’ மனத்தில் பூரித்தார்.
ஷோகேசில் நிரம்பி வழிந்த கோப்பைகளுக்கும், விருதுகளுக்கும் நடுவில் தாரகையாய் மின்னிய மீராபாயின் சிலையைக் கவனித்தவருக்கு, ஹரி தன் மகள் மீராவுக்கு அவன் வாழ்க்கையில் கொடுக்கும் ஸ்தானத்தைப் பறைசாற்ற, மெய்சிலிர்த்துப் போனார்.
தேனும் பாலும் நிறைந்த மாம்பழம் மில்க்ஷேக்கை அழகிய கண்ணாடி குவளைகளில் பரிமாறி, நாற்காலியில் அமர்ந்த வாசுகி, “ஒரு வாரத்துக்கு முன்னாடி சம்மதம் சொன்னதுனால, நான் செஞ்சது எல்லாம் சரியாகிடாது!” அடிமனத்திலிருந்து மன்னிப்பை யாசித்தார்.
“எல்லாத்துக்கும் காலம் வரணும். நம்ம பசங்களுக்கு இப்போதான் அது வந்திருக்குன்னு நெனச்சுப்போம்,” குற்றவுணர்ச்சியில் தத்தளித்த இருவரின் மனவோட்டத்தையும் இயல்பாகத் திசைதிருப்பினார் நிர்மலா.
“நம்ம பசங்களுக்கு இருக்குற பொறுமையும் நம்பிக்கையும் யாருக்கும் வராது,” வரதன் மெச்ச, பெண்கள் இருவரும் ஆமோதிப்பாய் தலையசைத்தனர்.
வரதன் தான் கொண்டுவந்த பையிலிருந்து பத்திரங்களை எடுத்து,
“இந்தாங்க மா! என் கையாலேயே பத்திரத்த திருப்பிக் கொடுத்துட்டேன்னு என் மாப்பிள்ளை கிட்ட சொல்லுங்க,” பூரிப்பு மின்ன வாசுகியிடம் நீட்டினார்.
“எனக்கு எல்லாம் தெரியும்! அது உங்க பாடு, உங்க மருமகன் பாடு!”, இன்முகத்துடன் மறுத்தார் வாசுகி.
‘வீட்டை மீராவின் பெயருக்கு மாற்றி எழுதியதில் இவருக்கும் உடன்பாடா!’ பிரமித்த வரதன்,
“இல்லம்மா! மீரா உங்க வீட்டுக்கு மருமகளா வரதுக்கு முன்னாடியே இந்த வீட்ட அவளுக்குக் கொடுக்க நினைக்கிறது உங்க பெருந்தன்மையை காட்டுறது. நீங்க இதை செஞ்சுதான் உங்க அன்பை வெளிப்படுத்தணும்னு இல்ல. வீட்டுப்பத்திரம் உங்ககிட்டயே இருக்கட்டும்,” பத்திரத்தை மேஜையில் வைத்து எழுந்தவர், வாசுகியின் குழம்பிய முகத்தை கவனிக்க மறந்தார்.
வாசுகியின் உள்ளுணர்வை நிர்மலாவும் உணரவில்லை. மௌனச்சிலையாக அமர்ந்திருக்கும் வாசுகியின் தோளில் வாஞ்சையாக வருடியவர், “உங்க பானியில் சொல்லணும்னா… உங்களுக்கு ஆச்சு; உங்க மருமகளுக்கு ஆச்சு!” கோர்வையாகப் பேசிப் புன்னகைத்தார்.
முழுவிவரமும் தெரியாமல் வார்த்தைகளை விட்டுவிடக்கூடாது எனச் சுதாரித்துக்கொண்ட வாசுகி சம்பிரதாய சிரிப்போடு மழுப்பினார்.
பிள்ளைகளிடம் நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு இரவு உணவுக்குத் தங்கள் வீட்டிற்கு வருமாறு கனிவுடன் அழைத்துப் புறப்பட்டனர் வரதனும் நிர்மலாவும்.
“உன் மாமனார பார்க்க போகல?” தன் வீட்டைக் கடந்து பறக்கும் சன்னியின் வேகத்தில் ஆச்சரியமடைந்தவள், வண்டியைச் செலுத்தும் தன்னவனின் செவிகளில் கிசுகிசுத்தாள்.
தேவையற்ற பயங்களைச் சுமந்துகொண்டு தன்னிடம் ஊடல் கொண்டுள்ள பெண்ணின் உள்ளத்தை உணர்ந்து, விட்டுக்கொடுக்க விழைந்தவன் நேராக அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
சிலையாக நின்ற தன் ராஜகுமாரியின் தோள்சுற்றி வளைத்து, அவள் உம்மென்ற முகமருகே தலைதாழ்த்தியவன், “எப்படியும் உன்னோட அப்பாவ பார்த்து பேசினதுக்கு அப்புறம், என்னோட சண்டைபோட்டு பேசாம இருப்ப… அதுக்குள்ள உன் கையால ஒரு கப் ஏலக்காய் டீ குடிக்கலாமேன்னு தான்…” நெற்றி முட்டி நமுட்டாகச் சிரித்தான்.
“வா! டீயில உப்ப அள்ளிக்கொட்டுறேன். அப்பவாவது உனக்குச் சூடு சுரணை ஏதாவது வருதான்னு பார்க்கலாம்!” கடுகடுத்து நகர்ந்தாள்.
அவள் கையை பிடித்துத் தன் பக்கம் திருப்பினான். வாடிய அவள் முகத்தை மென்மையாக கையிலேந்தியவன், “உனக்காக எத்தனை அவமானங்கள் வேணும்னாலும் தாங்குவேன் மீரா,” யாசிக்கும் குரலில் நினைவூட்டி, பிள்ளையார் சிலை முன் அழைத்துச் சென்றான்.
“ஆனால் இந்தமுறை அப்படி எதுவும் நடக்காம இருக்க, ஏதாவது மேஜிக் செய்யச்சொல்லி உன் பிள்ளையார் கிட்ட வேண்டிக்கோ!” அடிமனத்திலிருந்து உருகினான்.
அவன் முகம் பார்க்க முடியாமல் மாடியேறினாள் பேதை.
வாசற்கதவு திறந்திருக்க, உரிமையோடு உள்ளே நுழைந்தவளின் கண்களில் தென்பட்டது அந்தத் தாம்பூலத் தட்டு. அதில் பிடித்து வைத்திருந்த மஞ்சள் பிள்ளையாரை பார்த்ததும், அவளுக்குத் தன் அம்மாவின் உருவம் கண்முன் வந்தது. அருகிலிருந்த வீட்டுப்பத்திரம் அவள் யூகங்களை உறுதிப்படுத்தியது. பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்று குதூகலமானவள்,
“ஹரி! நீ சொன்ன மேஜிக் நடந்திருத்துடா! நீ சொன்ன மேஜிக் நடந்திருத்து!” கதற, அவளருகே ஓடி வந்தான் அவன்.
ஹரியும் அவற்றை எல்லாம் கண்டு மகிழ்ந்து அவளைத் தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான்.
“நான் எப்போ வீட்டைக் காலி செஞ்சி கொடுக்கணும்னு சொல்லு மீரா?” குறுக்கிட்ட வாசுகியின் குரலில் திடுக்கிட்டனர் இருவரும்.
“என்ன அத்தை சொல்றீங்க?” பதறியவள் வாசுகியின் முகத்தை வாஞ்சையாக வருட,
“என்னைத் தொடாதே!” எத்தனித்தவர் “இப்படித் தேனொழுக பேசித்தானே, எங்க வீட்டை உன் பேருக்கு மாத்தி எழுதிக்கிட்ட!” ஒருமணி நேரமாக தேக்கிவைத்திருந்த கோபத்தை வார்த்தைகளாக கக்கினார்.
“அப்பா உங்க மனசு சங்கடப்படுத்துற மாதிரி ஏதாவது சொன்னாரா அத்தை? அவர் சார்புல நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்,” கண்ணீர் கோர்த்துக் கொண்டது அவள் விழிகளில்.
அம்மாவின் குற்றச்சாட்டு; மேஜை மேலிருந்த வீட்டுப் பத்திரம்; வரதன் வந்து போயிருப்பது எல்லாவற்றையும் இணைத்து யோசித்த ஹரிக்குப் பிரச்சனை என்னவென்று புலப்பட்டது.
“அம்மா! மீராவுக்கு எதுவுமே தெரியாது…” தொடங்க,
“போதும் நிறுத்துடா! என்னை நம்ப வெச்சு கழுத்தறுத்துட்டல்ல,” உறுமியவருக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
மீரா முன் அழது விடக்கூடாது என்று வைராக்கியம் மேலோங்க, “என்னை எப்போ முதியோர் இல்லத்துல சேர்க்கப் போறேன்னு சொல்லு.ரெடியா இருக்கேன்,” சொல்லி அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக்கொண்டார்.
“என்ன செஞ்ச ஹரி!” அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் குழப்பத்தில் தத்தளித்த பாவை.
“அது…அது… உன்னோட அப்பா நான் எழுதின கடிதத்த படிச்சிட்டாரு மீரா!” ஹரியின் குரல் தழுதழுத்தது.
“அப்படி என்னதான் எழுதி வச்சிருக்கடா!” நிபந்தனையிடும் அவன் சுபாவம் அறிந்தவளுக்கு எரிச்சல் மண்டியது.
“அது… அது… எங்க வீட்ட உன் பேருல மாற்றி எழுதிட்டேன்… உன்மேல எனக்கு இருக்குற அன்பின் ஆழத்த நிரூபிக்க…” அவள் கண்பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலையைத் தொங்கப்போட்டான்.
“உனக்கு என்ன பைத்தியமாடா! அத்தை என் அன்பை பணத்தால எடை போடாக்கூடாதுன்னு சொல்லிட்டு, இப்போ நீ என்ன செஞ்சி வெச்சிருக்க ஹரி!” குத்திக்காட்டினாள்.
அவனிடம் பதிலேதும் இல்லை.
“யாரோட உழைப்ப யாருக்குத் தர?” ஆவேசமாய் பொங்கியவள், “வீட்டை உன் பேருக்கு மாத்திட்டு வந்து என்கிட்ட பேசு!” தீர்மானமாய் சொல்லி நகர்ந்தாள்.
அவள் ஆதங்கத்தை புரிந்துகொண்டு, “ஒரு நிமிஷம் மீரா!” மென்மையாக அழைத்தான்.
முகம் காட்டாமல் நின்ற இடத்தில் நின்றாள் பேதை.
“இந்தப் பிரச்சனையை நாளைக்குச் சாயங்காலத்துக்குள்ள தீர்த்து வெக்கறேன்… இங்க நடந்த எதையுமே, உங்க வீட்டுல சொல்லாதடி… ப்ளீஸ்! எனக்காக இத மட்டும் செய்வியா?” சூழ்நிலை கைதியாய் கெஞ்சினான்.
கண்ணீர் மல்க ஓடிவந்து வாடிய அவன் கன்னங்களை வருடியவள், “இது நம்ம வீட்டுப் பிரச்சனை ஹரி. அப்பா அம்மாகிட்ட எதுவும் சொல்லமாட்டேன் டா!” தங்கள் உறவின் ஆழத்தை வலியுறுத்திப் புறப்பட்டாள்.
பிறர் மனம் நோகடிக்க தெரியாதவன் செய்த பிழைதான் என்னவோ?
பிடித்தவள் பெயரில் பத்திரத்தை மாற்றியதுதான் சரியா –மருமகளை
பெற்ற பிள்ளையாக நேசித்தவளிடம் சொல்லாமல் விட்டதுதான் தவறா?
பத்து மாதம் கருவில் சுமந்தவளின் பயத்தை போக்குவானா–இல்லை
பக்கபலமாய் நின்று சுகதுக்கம் சுமப்பவளின் சொற்படி நடப்பானா–பதில்சொல்லும்
அவன் அவர்கள் மீது வைத்திருக்கும் அன்பின் ஆழம்…


Please Comment Here