188 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
வீட்டை நூலகமாக மாற்றி அமைக்க விரும்பும் மகனின் எண்ணத்தை அறிந்த வாசுகி முதலில் திடுக்கிட்ட போதும், வீட்டின் பளிங்கு எந்தவிதத்திலும் குறையாது என ஹரி உத்திரவாதம் தர அரைமனத்தாகச் சம்மதித்தார். மாமியாரின் பதற்றத்தைக் கருத்தில் கொண்டு செயல்படுமாறு மகளுக்கு அறிவுறுத்தினார் நிர்மலா. சமூக அக்கறையுடன் செயல்படும் மருமகனின் எதிர்காலத் திட்டங்களை மெச்சினார் வரதன்.
இரண்டு நாட்களில் வரதனும் நிர்மலாவும் சென்னைக்குப் புறப்பட, மீதமிருந்த விடுப்பு நாட்களை வாசுகியுடன் சொந்த ஊரிலேயே செலவழிக்கத் தீர்மானித்தனர் புதுமணத் தம்பதிகள்.
உள்ளூரில் தான் பயின்று வந்த பள்ளிக்கூடம்; அரவிந்தனும் அவனும் சேர்ந்து படித்தக் கல்லூரி; முதல்முறை மீரா தன்னுடன் வந்தபோத அழைத்துச் செல்ல நினைத்த நீர்வீழ்ச்சி எனப் பெருமிதம் பொங்க தன் ராஜகுமாரிக்கு ஊர் சுற்றிக் காட்டினான் ஹரி.
ஆசைத்தீர அந்தப் பாரம்பரியம் ததும்பும் வீட்டினை உலா வந்தாள் மீரா. உள்ளம் நிறையும் வரை தன்னவனுக்குப் பார்த்துப் பார்த்துச் சமைத்து ஊட்டியும்விட்டாள்.
தோட்டத்தில் பூத்துக்குலுங்கிய முல்லைப்பூக்களை பறித்து மகிழ்ந்த மருமகளின் முகபாவனைகளை, திண்ணையில் கால்நீட்டி அமர்ந்த வண்ணம் ரசித்தார் வாசுகி. பூக்களை நேர்த்தியாகக் கட்டியவர், மருமகளுக்கு அன்பாய் தலைசீவி, அவள் கூந்தலில் முல்லை சரத்தைச் சூட்டி திருஷ்டி வழித்தார். பனித்த கண்களுடன் மாமியாரின் தோள் சாய்ந்து மீரா அழ, தன்னவள் கண்ட கனவு அது என அன்னையிடம் சொல்லிப் பூரித்தான் ஹரி. பாசத்திற்காக ஏங்கும் பாவையிடம் அகம் தொலைத்தார் வாசுகி.
மொட்டை மாடியை இணைத்த சுழல் படிக்கட்டுகளில் மான்போலத் துள்ளி ஏறி இறங்கி விளையாடினாள். காற்றில் கலந்த வேப்பமரத்தின் வாசம் கலந்த தென்றல் காற்றிலும், வளர்பிறை நிலவின் கீற்றொளியிலும் இளஞ்ஜோடிகள் ஒரு சில இரவுகளை தனிமையில் செலவிட்டனர்.
ஹரி, வீட்டை நூலகமாக மாற்றி அமைப்பது நல்ல திட்டமாகத் தோன்றினாலும், பாரம்பரியம் ததும்பும் அந்த வீட்டில் தன்னவனுடனே காலத்திற்கும் இருந்துவிடலாம் என்றும் தோன்றியது மீராவிற்கு. அவ்வீட்டை உயிராய் நேசிக்கும் வாசுகியின் உணர்வுகளையும் ஆத்மார்த்தமாக உணர்ந்தாள். அம்மாவின் அறிவுறையும் கண்முன் நிழலாடியது.
மேல்தளத்தில் உள்ள விசாலமான மொட்டை மாடியையும் இரண்டு அறைகளையும் தவிர்த்து மீதமிருக்கும் இடத்தை மட்டும் நூலகத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தன்னவனிடம் சில ஆலோசனைகள் பகிர்ந்தாள்.
தன் அன்னைக்காக யோசித்துத் திட்டங்கள் தீட்டும் தாரகையின் அன்பில் பூரித்துப் போனான் ஹரி.
நூலகம் தொடங்குவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய சட்ட ரீதியான சம்பிரதாயங்களை மாமன் மணிமாறனின் உதவியோடு செய்து வந்தனர். வீட்டை நூலகமாக மாற்றியமைக்க குறைந்தபட்சம் ஆறு மாதங்களாகும் என யூகித்த ஹரி, அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி, பணிகளை மணிமாறனில் பொறுப்பில் விட்டான்.
விடுப்பு நாட்கள் மின்னல் வேகத்தில் நகர, மூவரும் சென்னைக்குத் திரும்பினர். வாசலுக்கு ஓடி வந்த நிர்மலாவும் அவர் அண்ணியும் புதுமணத் தம்பதிகளுக்கு ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்துக் கொண்டனர்.
மீராவின் சொந்த பந்தங்களுடன் அளவளாவியபடி வடை, பாயசம் எனச் சம்பந்தி வீட்டினர் சமைத்திருந்த விருந்து உணவை உண்டு முடித்த வாசுகி, “பசங்கள சாயங்காலம் ஆறு மணியளவில் அழைச்சிட்டு வாங்க,” என நிர்மலாவிடம் கண்ணசைத்தார்.
நிர்மலாவும் புன்னகை முகமாகத் தலையசைக்க, ஹரியும் மீராவும் கவலை தோய்ந்த குரலில் வினவினர்.
“எல்லாம் காரணமாத்தான்,” நமுட்டாகச் சிரித்து, மருமகளின் கன்னத்தில் தட்டிப் புறப்பட்டார் வாசுகி.
மற்ற சொந்த பந்தங்களும் ஒவ்வொருவராய் கிளம்ப, இளையவர்களை இளைப்பாறச் சொல்லிவிட்டு அலுவல் வேலைகளைக் கவனிக்க நகர்ந்தார் வரதன். நண்பனாக பலமுறை மீராவின் வீட்டிற்கு வந்திருந்த போதும், இன்று மனைவி ஆனவளின் அறைக்குள் நுழைய, ‘என்னவள்’ வீற்றிருக்கும் இடமென காதலும் கர்வமும் முட்டிமோதியது ஹரிக்கு.
அலமாரியில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த தன் கதை புத்தகங்களை மெல்ல வருடினான்.
“எழுத்தாளரே! இன்னைக்கு இன்னும் ஒருமுறை கூட ஐலவ்யூ சொல்லவே இல்ல!” கீச்சுக்குரலில் புகார் வாசித்தபடி அவனுக்காகக் கொண்டு வந்திருந்த பால் பாயசத்தில் ஒரு ஸ்பூன் ஊட்டிவிட்டாள்.
“அடிப்போடி! எத்தனைமுறை சொல்லியாச்சு. இன்னமும் படபடன்னு கண்சிமிட்டுறியே!” அலுத்துக்கொண்டவன், வெள்ளி டம்ளரைப் பிடுங்கி அவளுக்கே பாயசத்தை ஊட்ட,
ஆனந்தமாய் மென்று விழுங்கியவள், “அது இருக்கட்டும், அத்தை எதுக்கு நம்மள சாயங்காலம் வரச் சொல்லி முன்னே கிளம்பினாங்க?” நெற்றி சுருக்கித் தீவிரமாக யோசித்தாள்.
வறுத்த முந்திரித் துண்டுகளுடன் இன்னொரு ஸ்பூன் பாயசத்தை அவள் வாயில் இட்டவன், தெரியவில்லை என உதட்டைப் பிதுக்கினான்.
“ஒரு வேளை நமக்கு ஏதாவது ஸ்பெஷல்லா ஏற்பாடு செய்யறாங்களோ?” குறும்பாய் கேட்டு கண்சிமிட்டினாள்.
மனையாளின் சிணுங்கல்கள் மனக்கண்ணில் விரிய, “வாய்தான்டி உனக்கு! பிராக்டிகல்ல ரொம்ப வீக்கு!” கன்னத்தில் குழிவிழ நமுட்டாகச் சிரித்தான் ஹரி.
மணாளனின் ஜாடை பேச்சில் வெட்கம் அப்பிக்கொண்டது பெண்ணவளுக்கு.
இமைகள் சிறகடிக்க முகம் சுருக்கி குழையும் பாவையின் நெற்றி முட்டி மீதமிருந்த பாயசத்தையும் அவளுக்கே ஊட்டிவிட்டான்.
மாலையில் ஜோடியாய் வந்த மகனையும் மருமகளையும் கதவருகில் நிற்கச் சொன்ன வாசுகி, “நிர்மலா, நீங்க ஆரத்தி எடுங்க,” என மஞ்சநீர் கரைசலை நீட்டினார்.
“அத்த! நீங்களே எடுங்க!” மீரா திடமாய் குறுக்கிட, தயங்கி நின்றார் வாசுகி.
“நாங்க நல்லா இருக்கணும்னு மனசுல நினைக்குறீங்க தானே!” மீரா இன்னும் திடமாய் கேட்க, ஆமென்று தலையை மட்டும் அசைத்தார் அவர்.
“அதுபோதும்! வேற எதையும் யோசிக்காம நீங்களே ஆரத்தி எடுங்க!” உறுதியாய் பேசும் தன்னவளை இமைக்காமல் பார்த்து நின்றான் ஹரி.
மகளின் பக்குவத்தை எண்ணி நெகிழ்ந்தார் நிர்மலா.
நிர்மலாவை மறுபக்கம் பிடித்துக்கொள்ளுமாறு வாசுகி சொல்ல, அன்னைமார்கள் இருவரும் நல்வாழ்த்துப் பாடிய வண்ணம் புதுமண தம்பதிகளை வரவேற்றனர்.
வீடு வாங்கிய அன்று தனியாக உள்ளே நுழைந்ததை நினைவுகூர்ந்து ஒருவரை ஒருவர் ஏறிட்டுக்கொண்ட ஹரியும் மீராவும் காலம் செய்யும் மேஜிக்கை எண்ணி புன்னகைத்தனர்.
மருமகளை விளக்கேற்றச் சொல்லி அழைத்தார் வாசுகி. பூஜை மேடையில் வாசுகி செய்திருந்த அலங்காரங்களைக் கண்ட மீராவின் கண்கள் பளபளத்தன. அவள் முதல் முதலில் வாங்கி வைத்திருந்த பித்தளை விளக்குகள் மையப்பகுதியில் ஜொலித்தன. பூஜை மேடையில், மாமனார் நிழற்படமாய் காட்சியளித்தார்.
தொண்டை அடைக்க, வாசுகியைக் கட்டியணைத்தாள் மீரா. மருமகளின் தலைகோதிவிட்டவர், “அழக்கூடாது கண்ணு! கடவுள் நாமத்த மனசுல சொல்லிண்டே விளக்கேத்து,” என்றார்.
தங்களுக்குள் நிகழ்ந்த மனஸ்தாபங்களை பெற்றோர் முன் காட்டிக்கொள்ள விரும்பாத மீரா, மௌனமாய் விளக்கேற்றினாள்.
இரவு உணவுக்குப் பின் வரதனும் நிர்மலாவும் புறப்பட்டனர். மீரா தன் துணிமணிகளை அலமாரியில் அடுக்க, அவளுக்கு உதவிக்கொண்டிருந்தான் ஹரி. பலநாள் தன்னவனுடன் செலவிட்ட அதே வீடு என்றபோதும், இன்று அவளுக்கும் வித்தியாசமாகவே தோன்றியது. அவர்களைத் தேடிவந்த வாசுகி,
“இதெல்லாம் செய்யத்தான் மீரா உங்கள சாயங்காலம் வரச் சொன்னேன்,” பேச்சுக்கொடுக்க, பக்கென்று சிரித்தான் ஹரி.
தன்னவனுக்குக் கண்களை உருட்டியபடி மீரா அசடுவழிய, அவன் கலகலத்துச் சிரித்து வெறுப்பேற்ற, இருவரின் பரிபாஷைகளைக் கண்டு குழம்பி நின்றார் வாசுகி.
அம்மாவின் அருகில் வந்தவன், “இல்லம்மா! உன் மருமகள் வேற என்னமோ எல்லாம் எதிர்பார்த்தா,” நீட்டி முழக்கிக் கண்சிமிட்டினான்.
‘மருமகள் எதிர்பார்த்த இனிப்பு செய்யவில்லையோ!’ என யோசித்த வெள்ளந்தி தாய்மனம், “பாயசம் தான்மா பண்ணலாம்னு நெனச்சேன். ஆனால் காலையில் அம்மா பால்பாயசம் செஞ்சிருந்ததுனால…” வாசுகி சொல்லி முடிப்பதற்குள், ஹரி பெருங்குரலில் விழுந்து விழுந்து சிரித்தான்.
“இருக்கட்டும் அத்தை! ஃப்ரூட் சாலடும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஸ்வீட்,” மீரா மழுப்ப, அவரும் நிம்மதி பெருமூச்சுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு நகர்ந்தார்.
பின்விளைவுகளை அறியாமல் நக்கல் செய்துகொண்டிருந்தவனின் பாடுதான் திண்டாட்டமானது. தனியாகக் கையில் சிக்கிய ராஜகுமாரனை கோபம் தீர காதலித்தாள் அவன் ராஜகுமாரி.
ஒரு மாதத்தில் அரவிந்தனும் அஞ்சலியும் பக்கத்து வீட்டில் குடியேற, வாரயிறுதிகள் நண்பர்களின் அரட்டையும், கும்மாளமாகவும் நகர்ந்தன.
ஏலக்காய் டீயுடனும் வெங்காய பகோடாவுடனும் மீரா நண்பர்களை உபசரிக்க, “என்னதான் இருந்தாலும் அரவிந்தனுக்கு நீ ரொம்ப ஸ்பெஷல் டி. நீ கல்யாணமாகி வந்ததுமே, உங்க பக்கத்துலேயே வந்துட்டான் பாரு!” வம்புசெய்தான் மகேஷ்.
“அவன் எனக்காக வந்திருக்கான்னு நினைக்கிறியா?” கழுத்தை நொடித்தபடி ஹரி அருகில் அமர்ந்துகொண்டவள், “அவனுக்கு எப்பவுமே ஹரிதான் ஃபர்ஸ்ட்!” எனத் தன்னவன் தோளில் இடித்தாள்.
“ஹரி இங்க தனியா இருந்தப்ப அரவிந்தன் ஒருநாள் கூடத் தங்கினது இல்ல. நீ கல்யாணமாகி வந்ததும் ஒரேடியா பக்கத்துல வந்துட்டான்,” தர்க்கம் செய்தான் மகேஷ்.
“அதே தான்டா நானும் சொல்றேன்! குடும்பம் நடத்துறேன்ற பேருல அவன் உயிர் நண்பன நான் டார்ச்சர் பண்ணாம பார்த்துக்க வந்திருக்கான்டா!” விளக்கம் சொல்ல, அனைவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
“ரொம்பச் சரியா சொன்ன மீரா!” என ஜோடிப்புறாக்கள் இருவருக்கும் இடையே வந்தமர்ந்த அரவிந்தன், அவர்கள் தோளினை சுற்றி வளைத்து,
“எனக்கு ஹரியை மிஞ்சின நண்பனும் இல்ல; உன் அளவுக்கு என் மனச வேற யாராலையும் சரியா புரிஞ்சுக்க முடியாதுடி!” பெருமிதம் பொங்க உரைத்தான்.
“அடேய்! ஒரு பேச்சுக்காவது என்னையும் உன் நண்பன்னு சொல்லுடா!” அழாத குறையாய் கெஞ்சினான் மகேஷ்.
விருட்டென எழுந்து மகேஷை அரவணைத்த அரவிந்தன் “நண்பா! சாப்பிடுற விஷயத்துல நீ என் ஜிகிரி தோஸ்த்டா,” என அன்பு ததும்ப நண்பன் வாயில் பகோடாவைத் திணித்தான்.
நண்பர்கள் நால்வரும் மனம்விட்டுச் சிரித்துப் பூரிக்க,
அரவிந்தனிடம், “அப்போ நானு?” மெல்லிய குரலில் கண்கள் சுருக்கிக் குழைந்தாள் அஞ்சலி.
காற்றென பறந்துசென்று மனையாளின் முகத்தைக் கையிலேந்திய அரவிந்தன், “நீ என் உயிரில் சரிபாதி அஞ்சலிமா!” யாசிக்கும் குரலில் பதில்கூற, நெகிழ்ச்சியில் காதலாய் ஏறிட்டாள் பெண்.
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்!” என நண்பர்கள் ஒருசேர கூக்குரலிட, அவ்விடமே காதலில் நிறைந்தது.
தொடர்ந்து வந்த வாரங்களில் ஹரியின் அடுத்த படைப்பு வெளியீட்டுக்குத் தயாரானது. ஸ்ரீராமிடமிருந்து முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள, வழக்கம்போல மீராவுடன் சென்றிருந்தான் ஹரி. காதலிக்கும் போதே மீரா ஒரு மிதப்பில் நெகிழ்வதைப் பார்த்துப் பழகியிருந்தவருக்கு, இன்று அவள் குறும்பு கூடியிருப்பதைக் காண வியப்பே இருக்கவில்லை. ஆனால் ஹரியும் அவளுடன் சேர்ந்து புத்தகத்தைத் தாலாட்டி சீராட்டி கொஞ்சியதும், திருமணமான ஜோர்ரெனத் தனக்குள் சிரித்துக்கொண்டார்.
‘அன்பின் ஆழம்’ தலைப்பை வருடி தன்னவனின் விரல் கோத்துக்கொண்டாள் பதுமை.
அது ஹரியின் சுயசரிதை! உறவாய், உயிராய் உருமாறி தன் எழுத்துப் பயணத்திற்கு உற்ற துணையாகத் தோள் கொடுத்து, தன் கனவை நிஜமாக்கி வரும் தன் நண்பர்கள் நால்வரின் தார்மீக ஆதரவைப் பற்றிய காவியம் அது.
முன் அட்டைப்படத்தில் ஐந்து நண்பர்கள் நீர்வீழ்ச்சியில் நனைந்து மகிழும் சித்திரம். நட்பிற்கு இலக்கணமாய் திகழும் ஐவரின் ஸ்பரிஸத்தில் திருப்தியடைந்த நீர்த்துளிகள், வற்றாது ஓடும் நதியுடன் சங்கமிப்பது போல வாசுகி வரைந்திருந்த ஓவியம் அது!
முதல் பக்கத்தில், ‘அப்பாவிற்குச் சமர்ப்பணம்’ என்ற எழுத்துக்கள்; பக்கங்களில் ஆங்காங்கே தென்பட்ட நண்பர்களின் பெயர்கள்; கடைசி பக்கத்தில் சிவப்பு சட்டை அணிந்திருக்கும் தன்னவனின் நிழற்படம்; என ஒவ்வொன்றையும் மீரா வருடி நெகிழ, தன்னவளின் பாவனைகளை ரசித்துக் கொண்டிருந்தான் ஹரி.
வெகு நேரமாக அமைதியாக அமர்ந்திருந்த ஸ்ரீராம் தொண்டையைச் செருமிக்கொண்டார். அசடுவழிந்தபடி விலகி அமர்ந்த ஹரி, நூலகம் திறப்பு விழா அன்று இப்புத்தகத்தை நண்பர்களுக்குத் தர விரும்பும் தன் ரகசிய எண்ணத்தைப் பகிர்ந்தான். அவரும் பிரதிகள் அதற்கு முன் தயாராகிவிடும் என உறுதியளித்தார். மற்ற விவரங்களைப் பேசி முடித்து வாகனத் தரிப்பிடத்திற்கு வந்த மீரா,
“எழுத்தாளரே! இதைத் தானே எனக்கே எனக்காக எழுதியிருக்கும் புத்தகம்ன்னு இத்தனை நாளா பிள்ட் அப் பண்ணிட்டு இருந்தீங்க?” வினவினாள்.
“உனக்கே உனக்காக எழுதினதுன்னு சொல்றேன்,” அழுத்திக்கூறி அவள் தலையில் செல்லமாக குட்டியவன், “இந்த ரெண்டு வார்த்தை மட்டும்தான் ‘அ’, ‘ஆ’ ல இருக்கா,” எனக் கடிந்தான்.
‘ம்ம்…எனக்கே எனக்கு…. ம்ம்….” தீவிரமாக யோசித்தவள், “அழகியிடம் ஆசைக்கொண்டேன்!” என்றாள்.
“ச்சீ போடி… வா கிளம்பலாம்,” வெட்கமும் கிண்டலும் கலந்த தோரணையில் வழிந்து சன்னியை உயிர்ப்பித்தான்.
“உங்க மிட்னைட் மசாலா தலைப்புகளோட இது எவ்வளவோ நல்லா இருக்கு எழுத்தாளரே!” உதட்டைச் சுழித்து, பின்னால் ஏறிக்கொண்டாள். தீவிர சிந்தனையில் முணுமுணுத்துக் கொண்டு வருபவளின் முகத்தை, கண்ணாடி வழி பார்த்து ரசித்த வண்ணம் அவனும் வண்டியைச் செலுத்தினான்.
இவர்கள் கண்ணாமூச்சி ஆட்டம் இப்படியே தொடர, திறப்பு விழா நாளும் நெருங்கியது. மாமியாரும் மருமகளும், பயணத்திற்குக் கட்டி எடுத்துச் செல்ல வேண்டிய உணவைச் சமைத்துக் கொண்டிருந்தனர். ஹரி சமையலறை பக்கம் வர, அவனை அழைத்த மீரா,
“ஹரி! கல்யாணமாகி ஆறு மாசமாச்சு… இன்னும் எதுவும் விசேஷம் இல்லையான்னு அத்தை என்கிட்ட கேக்குறாங்க டா,” அப்பாவியாக முகத்தைச் சுருக்க,
“நான் அப்படி எதுவுமே கேட்கலடா…” தூக்கிவாரிப் போட்டது வாசுகிக்கு.
தன்னவள் வம்புக்கு இழுக்கிறாள் என நொடியில் யூகித்தான் ஹரி.
“தலைப்ப சொல்லு! உன்னைக் காப்பத்தறேன்.” பாவை அவன் காதோரம் கிசுகிசுக்க, அவன் யூகம் ஊர்ஜிதமானது.
“தேவையில்ல போடி!” நமுட்டுச் சிரிப்புடன் அவள் வாய்மேல் செல்லமாக அடித்தவன்,
நீ அப்படியெல்லாம் கேட்டிருக்க மாட்டேன்னு எனக்குத் தெரியும் ‘ம்மா…. அப்படியே நீ கேட்டிருந்தாலும் தப்பில்ல…” என்றதும், குழப்பம் கப்பிய விழிகளுடன் முழித்தார் வாசுகி.
மனையாளின் முகத்தைக் கண்பார்க்க திடமாகப் பிடித்துக்கொண்டவன், “இங்க பாரும்மா! நான் ஐலவ்யூ சொல்றப்ப உன் மருமகள் கண்ணை எப்படி சிமிட்டுவான்னு…” எனச் செய்தே காட்டினான்.
தனிமையில் சொல்லும்போதே படபடக்கும் பேதையின் இமைகள், இன்று தன்னவன் மாமியார் முன்னால் அரங்கேற்ற, அவள் இதயமும் சேர்ந்து இரட்டிப்பு வேகத்தில் படபடத்தது.
“உன் மருமகளுக்கு வாய் மட்டும்தான் ‘ம்மா!” அன்னையிடம் பேசிக்கொண்டே தன்னவளைப் பார்வையால் ஊடுருவினான் அவன்.
அச்சமயம் அவர்கள் ஊருக்குப் புறப்பட தயாராகி விட்டார்களா எனக் கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வரும் அரவிந்தனைக் கண்ட வாசுகி,
“நல்ல சமயத்துல வந்த அரவிந்தா!’ பெருமூச்சுடன், காதல் பித்தேறியிருந்த மகன் மருமகளிடமிருந்து தப்பித்து ஓடினார் வாசுகி.
மாலை ஆறு மணியளவில் குடும்பத்துடன் கோவிலூருக்கு வந்து சேர்ந்தனர் நண்பர்கள். விழாவிற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கவனிக்க வேண்டுமென ஹரியும் மீராவும் இருவரின் பெற்றோரையும் மணிமாறன் வீட்டில் தங்கச்சொல்லி புறப்பட்டனர்.
நூலகமாக மாறியிருக்கும் வீட்டின் தோற்ற அமைப்பை எண்ணி வாசுகியின் மனம் கடந்து தவித்தது.
திறப்பு விழாவிற்கு, ஊள்ளூர் காப்பகத்திலிருந்து குழந்தைகளை அழைத்து வர திட்டமிட்டிருந்தனர் அரவிந்தனும் அஞ்சலியும். அவர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துமுடித்து தங்கள் வீட்டிற்குத் திரும்பினர்.
“அஞ்சலிம்மா!” தன் தோளில் தலைசாய்த்து படுத்திருந்தவளின் கேசத்தை வருடியபடி மென்மையாக அழைத்தான் அரவிந்தன்.
“ம்ம்…” என்றாள் பாவை மெல்லிய குரலில்.
“எந்த குழந்தைய தத்தெடுத்துக்கலாம்… நாள் ஓடிட்டே இருக்கு! மென்மையாக நினைவூட்டினான்.
“யாருமே வேண்டாம் அரவிந்த்ப்பா!” அவள் திடமாய் சொல்ல, தன்னை போலவே சிந்திக்கிறாளோ என்று அகம் மகிழ்ந்தவன், விருட்டென எழுந்து அமர்ந்து,
“எனக்கும் அப்படித்தான் தோணுது அஞ்சலிம்மா! நீ வருந்துவீயோன்னு நெனச்சுதான் இத்தனை நாளா என் விருப்பத்தைச் சொல்லல…” என்றான் புன்னகை முகமாய்.
அதைக் கேட்டு அதிர்ந்தவள், “நீங்க ஏன் வேண்டாம்னு சொல்றீங்க?” புருவங்களை வளைத்தாள்.
“அது, நம்ம எல்லா குழந்தைகளோடையுமே சரிசமா பழகியிருக்கோம். இப்போ ஒரு குழந்தைய மட்டும் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து அன்பு செலுத்தினா, மற்ற குழந்தைங்களுக்குப் பாரபட்சம் காட்டுறா மாதிரி தோணுது. அதான், இப்படியே கடைசி வரைக்கும் காப்பகத்துக்குப் போய், எல்லா குழந்தைங்க கிட்டயும் அன்பா பழகி நேசிக்கலாம்னு நினைக்குறேன்,” அவன் தெளிவான குரலில் பேச, பேதையின் கண்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. விம்மி அழுதுக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து ஓடினாள்.
ஜன்னல் கம்பிகளில் முகம் புதைத்து தேம்பி அழும் பேதையின் தோற்றத்தில் பதறியவன், “அஞ்சலிம்மா! நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா…ப்ளீஸ் அழாத… உன் விருப்பம்தான் என் விருப்பமும்டி!” இடைவிடாமல் கெஞ்சினான்.
அவன் மார்பில் தலைசாய்த்து இன்னும் உரக்க அழுதாள் அவள்.
“எதுவா இருந்தாலும் சொல்லு அஞ்சலி. ஐ ஆம் ரியலி சாரி,” என்றவனின் கசந்த குரலில் மனம் தாளாமல் கண்களைத் துடைத்துக்கொண்டவள்,
“நான் வேண்டாம்னு சொன்னதுக்கு அது காரணமில்ல!” எனத் தலைகுனிந்தாள்.
மனம்விட்டுப் பேசச் சொல்லி அவன் அவள் முகத்தை நிமிர்த்தி இறுகப் பிடித்துக்கொள்ள,
“உங்க அன்பு எனக்கே எனக்கு மட்டும்தான் இருக்கணும்; அதை என்னால யார் கூடவும் பங்கு போட்டுக்க முடியாது,” சொல்லிக்கொண்டே அவன் இடுப்பைச் சுற்றி கைகோத்து கெட்டியாக கட்டியணத்தவள், “நமக்கு நடுவுல வர, அந்தக் காத்துக்குக் கூட அனுமதி இல்ல!” என்றாள் காதல் பொங்க.
அவள் பதிலிலும் செயலிலும் மெய்சிலிர்த்து நின்றான் அரவிந்தன்.
“உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா அஞ்சலிம்மா!” அவள் காதோரம் கிசுகிசுத்தான்.
தன் உயிரானவனை விழிகள் உயர்த்தி நோக்கியவள், “ம்ம்… நீங்க சொன்னமாதிரியே நடக்குது… இருபத்து நாலு மணி நேரமும் என் அரவிந்த்ப்பா எனக்காக மட்டும் செலவிடணும்னு தோணுது… நான் ரொம்ப சுயநலவாதி ஆயிட்டேன்ல,” கேட்டவளின் கண்கள் மீண்டும் பளபளத்தது.
“ம்ஹூம்…அஞ்சலி பாப்பாவுக்கு இந்த அரவிந்தன் மேல அம்புட்டு ஆசைன்னு அர்த்தம் !” காதலாய் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
காலத்திற்கும் காப்பகம் சென்று சேவை செய்யலாம் என்ற தெளிந்த மனதோடு, தன்னவன் மார்பில் நிம்மதியாக விழி மூடி உறங்கினாள் அஞ்சலி.
“தூங்காம இன்னும் என்னடி பண்ணிட்டிருக்க?” கடிந்துகொண்டே மீரா அருகில் வந்தான் ஹரி.
“நாளைக்கு விழாவுக்கு வரவங்களுக்கு இந்தப் புத்தகத்த பரிசா கொடுக்க போறோம்ல… அதான் எல்லாத்தையும் கிஃப்ட் பேக் செய்துட்டு இருக்கேன்,” வேலையில் கவனம் சிதறாமல் பதில் சொன்னாள் மீரா.
காலையில் அவள் அம்மா எதிரே செய்த குறும்பு நினைவுக்கு வர, “இன்னும் ஒருமுறை முயற்சி செஞ்சு பார்க்கலாமா….” ராகமாய் இழுத்தான்.
அவள் அவன் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை.
“என்னைப் பாருடி…” ஹரி விடாமல் சீண்ட,
“ஒண்ணும் வேண்டாம்டா… என்னை வேலை செய்ய விடு,” கடுகடுத்தாள் பாவை.
தோள்பையில் ஒளித்துவைத்திருந்த பரிசை எடுத்துவந்து அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், “இந்தா இதையும் சேர்த்து பேக் பண்ணு… நாளைக்கு விழாவுல என் ராஜகுமாரிக்குக் கொடுக்கணும்,” என்றான் விஷமப் புன்னகையுடன்.
ஐந்நூறு பக்கங்கள் கொண்டிருந்த அந்த நோட்டுப்புத்தகத்தின் தலைப்பை கண்டவளின் கண்கள் குளமானது.
“அன்புடைய ஆதிக்கமே!” உரக்கப் படித்துப் பக்கங்களை கட்டை விரல் கொண்டு விசிறியவள், தன்னவனின் தோளினை வளைத்துக் கட்டி அணைத்தாள்.
“பிடிச்சிருக்கா!” தோள் சாய்ந்த பேதையின் உச்சந்தலையில் முத்தமிட்டான்.
“ம்ம்….” என அவன் கண்பார்க்க நிமிர்ந்தவள், “இப்போ மட்டும் எதுக்காக கொடுத்தீங்க எழுத்தாளரே!” செல்லம் கொஞ்சினாள்.
“நாளைக்கு விழாவுல கொடுக்கலாம்னு தான் நெனச்சேன். ஆனா நீ இப்படி எல்லார் முன்னாடியும் அழுவ… அப்புறம் அரவிந்தன் உன்னை ஓட்டுவான்… உனக்குக் கோபம் வரும்… நீ என்னை திட்டுவ… எதுக்கு இதெல்லாம்னு நெனச்சேன்…” அவன் படம் ஓட்ட, மனக்கண்ணில் மலர்ந்த காட்சிகளை எண்ணி கண்ணீரும் சிரிப்புமாக நெளிந்தாள் பேதை.
பேருவகையுடன் புத்தகத்தை மெல்லமாகப் புரட்டியவள், “அது என்ன ‘பாகம் 01’, அப்படின்னு எழுதியிருக்க, “ கேட்டுக்கொண்டே கடைசி பக்கத்தை அலசினாள்.
“நான் தான் சொன்னேனே… இது ஒரு தொடர் கதைன்னு… நம்ம நூலகத்தோட ஒவ்வொரு ஆண்டு விழாவுக்கும், உனக்கு ஒரு பாகம் பரிசு கொடுப்பேன்,” அவன் விளக்க, மங்கையின் இமைகள் பட்டாம்பூச்சிகளின் சிறகானது.
அதைக் கண்டுகொண்டவன், “பார்க்கலாம்… இந்தக் கண்சிமிட்டலுக்கு, எந்தப் பாகத்துல விடிவுகாலம் வருதுன்னு…” என அவள் மூக்கின் நுனியை வருடினான்.
“இது உங்க கண்களின் காந்த சக்தி செய்யற மாயம் எழுத்தாளரே… ஈரேழு ஜென்மத்திற்கும் தொடரும்…” பதில்கூறி,
“ஐ லவ் யூயூயூயூயூயூ எழுத்தாளரே!” எனச் செல்லம்கொஞ்சி, அவன் குழிவிழும் கன்னத்தை அழுத்திக் கிள்ளினாள்.
பஞ்ச பாண்டவ நண்பர்களின் உற்றார் உறவினரின் வருகையில் திறப்பு விழா களைகட்டியது. ஸ்ரீராமும் மனைவி, குழந்தையுடன் வந்திருந்தார். ஊர் தலைவர், பள்ளி நிர்வாகிகள், மற்றும் முக்கியப்பட்ட ஒரு சிலரையும் அழைத்திருந்தான் ஹரி.
அம்மாவைக் காரிலிரிந்து இறங்கவிடாமல் வழிமறித்த ஹரி, அவர் கண்களை தன் கரங்களால் மென்மையாக மூடினான். நூலகத்தின் பெயர்ப் பலகையைப் பார்க்க ஏதுவாய் அம்மாவை அழைத்து வந்து நிறுத்தினான்.
“வள்ளுவன் நூலகம்!” கண் திறந்து பெயர்ப் பலகையைப் பார்த்தவரின் மனத்தில் ஆனந்தமும், பயமும் அலைமோதியது.
திருக்குறள் மீதி அதீத பற்று கொண்டிருந்த தன் கணவர், அந்த வள்ளுவனின் வாசிகியைப் போலவே, தன்னையும் அன்பாய் அழைத்த பல தருணங்கள் அவர் மனத்தில் எதிரொலித்தது.
“அப்பா கனவை மெய்யாக்கிட்ட ஹரி. ரொம்ப சந்தோஷமா இருக்குடா,” பூரித்து மகனின் கன்னத்தில் திருஷ்டி வழித்தவர், “…ஆனால் இனிமே நம்ம இந்த வீட்டுல வந்து இருக்க முடியாதுல?” ஆதங்கத்துடன் கேட்டார்.
“உள்ள வந்து பாருங்க அத்தை!” இன்முகத்துடன் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே அழைத்து வந்த மீரா, அவரை ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றச் சொன்னாள்.
பல படித்தவர்கள் சுமங்கலி பெண்கள் இருக்க, தன்னை அழைக்கின்றாளே என்று தயக்கத்தில் அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தார் வாசுகி.
“நானா மீரா… வேண்டாமே!” வாசுகி கண்கள் சுருக்கிக் கெஞ்ச,
“இது உங்க கணவரோட ஆசை; உங்க மகனோட உழைப்பு… நீங்கதான் திறந்து வெக்கணும்!” கறாராக உரைத்தவள், “சீக்கிரம் அத்தை… உள்ளப்போய் குலாப் ஜாமுன் சாப்பிடணும்,” அவர் காதைக் கடித்தாள்.
மருமகளின் வெகுளித்தனத்தில் புன்னகைத்தவர், கணவரை மனத்தில் நினைத்துக்கொண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்.
அவர்களைத் தொடர்ந்து மற்ற விருந்தினரும் உள்ளே வந்தனர். நூலத்தின் வடிமைப்பைப் பிரமிப்பாய் பார்த்த வண்ணம் மகன், மருமகள் கைப்பிடித்து நடந்து வந்தார் வாசுகி.
முற்றத்திலும், அதைச் சுற்றியிருந்த இடத்திலும் ஆங்காங்கே மேஜைகளும், நாற்காலிகளும் போடப்பட்டிருந்தது. சுவற்றில் இருந்த ஓவியங்கள் எதுவும் விலக்கப்படவில்லை. சுவற்றையொட்டி பொருத்தப்பட்டிருந்த அலமாரிகளில் நேர்த்தியாக அடுக்க பட்டிருந்த புத்தகங்கள் கண்ணை பறித்தன. நான்கு அறைகளுக்கும் மேலிருந்த பெயர்ப் பலகைகளைக் கவனித்தார்.
“அலுவலகம்”, “பராமரிப்பு அறை”,”வகுப்பு அறை”, “கணினி அறை”, ஒவ்வொன்றாய் படித்தவருக்கு, இனி அங்கு வசிக்க முடியாது என்று புரிந்தது. மகனின் ஆசையை கருத்தில் கொண்டவர், தன் வருத்தத்தை மனத்தில் புதைத்தார்.
மாமியாரின் மனப்போராட்டங்களைக் கண்டுகொண்ட மீரா, அவரைத் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றாள்.
மருமகள் இனிப்பு சாப்பிட விரும்புகிறாள் என யோசித்தபடி பின்தொடர்ந்தவர் சமையலறையும், அதையொட்டி இருக்கும் பூஜை அறையும் அப்படியே இருப்பதைக் கண்டு ஸ்தம்பித்து நின்றார்.
ஒரு கிண்ணத்தில் இனிப்பு எடுத்துக்கொண்டவள், சமையலறை ஒட்டியிருந்த பின்வாசல் வழியே மாடிக்கு அழைத்துச் சென்றாள்.
மீரா மொட்டை மாடியின் இரண்டு அறைகளையும் திறந்து காட்ட, கட்டில், மெத்தை, பீரோ தொலைக்காட்சி பெட்டி என வீட்டிற்குத் தேவையான அத்தனை அத்தியாவசிய பொருள்களும் நேர்த்தியாக இருப்பதைக் கண்டு பேச்சற்று போனார் வாசுகி.
மாமியாரின் தோள்சுற்றி வளைத்தவள், “அத்தை! நாம நம்ம வீட்டுக்கு எப்போ வேணும்னாலும் வந்துட்டுப் போலாம். இந்த ரெண்டு ரூமும், நம்ம வந்தா தங்கிக்க, எல்லா வசதியும் செஞ்சிருக்கோம். சமையல்கட்டுல இருக்க பின் வாசல உபயோகிச்சுக்கலாம். மற்றபடி இது எப்பவுமே நம்ம வீடு!” என்று கண்சிமிட்டினாள்.
மீராவின் பாசத்தில் நெக்குருகியவர், பனித்த கண்களுடன் அவள் கன்னங்களை வருடி முத்தமிட்டார்.
“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தருவேன்- கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீஎனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா…”
தோழிகள் கடவுள் வாழ்த்துப் பாடி விழாவைச் செவ்வனே துவக்கிவைத்தனர்.
விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் சொல்லி உரையாடத் தொடங்கினான் ஹரி. சிறப்பு விருந்தினர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் அருமை பெருமைகளையும் எடுத்துச் சொன்னான். வாசுகியையும், மீராவையும் அழைத்து அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தான்.
நூலகத்தின் சிறப்பு அம்சங்களை விளக்கி, தன் மாமன் மணிமாறன் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்வார் என்றும் அறிவித்தான்.
தன்னவளயும் மூன்று நண்பர்களையும் மையப்பகுதிக்கு அழைத்து, தன் எழுத்துப்பயணத்தின் தூண்கள் என்று அறிமுகம் செய்துவைத்து, அதையொட்டி எழுதிய சுயசரிதம் என ‘அன்பின் ஆழம்’ புத்தகத்தின் பிரதிகளை நண்பர்கள் கையில் திணித்து அவர்களை ஆரத்தழுவினான். ஹரியின் அன்பில் மெய்சிலிர்த்து போனார்கள் கீதா, அரவிந்தன் & மகேஷ்.
அஞ்சலி, ரமேஷ், மைதிலி பற்றியும் தனித்தனியாக விளக்கியவன், ஸ்ரீராமின் தன்னலமற்ற பாசமும் ஈடுஇணையில்லாது எனக் கூறி, விருந்தினர் அனைவருக்கும் புத்தகத்தின் பிரதிகளை விநியோகித்தான் ஹரி.
காப்பகத்தில் இருந்து அழைத்து வந்திருந்த முப்பது குழந்தைகளுக்கும் சிறுவர் புத்தகங்களைக் காட்டியும், கதை சொல்லியும் அரவிந்தனும் அஞ்சலியும் உற்சாகமாய் வலம் வந்தனர். அஞ்சலியின் இடுப்பில் அட்டையாக ஏறிக்கொண்டிருந்த சஹானா, அஞ்சலிக்குப் போட்டியாகப் புத்தகத்தைப் புரட்டியும், அதிலிருந்து பொம்மைகளைச் சுட்டிக்காட்டியும் மழலையில் மொழிந்தாள்.
வீட்டின் பெரியவர்களும் குழந்தைகளுடன் அன்பாய் பேசிப்பழக, ஹரி அந்த காப்பகத்தின் உரிமையாளரிடம் குழந்தைகளை அடிக்கடி அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டான். பஞ்ச பாண்டவ நண்பர்கள் மாதத்திற்கு ஒருமுறை வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டனர்.
தன் ஆசை ஒவ்வொன்றையும் தனதாக்கி மெனக்கெடும் தன் நண்பர்களின் உற்சாகத்தை கண்டு நெகிழ்ந்தான் ஹரி. அவர்களின் நட்பை தந்த கடவுளுக்கு மனதார நன்றி கூறி பெருமூச்சுவிட்டான்.
“வாடா சாப்பிடலாம்!” அரவிந்தன் அழைக்க, அவனுடன் கைக்கோத்து நடந்தான் ஹரி.
ஒரு மேஜையை சுற்றி அரவிந்தன், அஞ்சலி, ஹரி, மீரா, நால்வரும் அமர்ந்தனர். ஓடி விளையாடும் குழந்தைகளையும், அளாவளாவிக் கொண்டிருந்த உறவுகளையும் பார்த்த வண்ணம் உணவை ருசித்தனர். அரவிந்தனும் மீராவும் மட்டும், இனிப்புப் பதார்த்தங்களையே உணவாய் அருந்திக் கொண்டிருந்தனர்.
“அங்க பாரு அரவிந்தா! அந்த ரெண்டு குழந்தைகளும் நம்மள மாதிரியே இனிப்பு மட்டும் சாப்பிடுறாங்கடா,” கைநீட்டி காட்டினாள் மீரா. நால்வரும் அச்சிறுவர்களை உன்னிப்பாய் கவனித்தனர்.
ஐந்து நிமிடங்கள் அவர்களின் பேச்சையும் குறும்பையும் கவனித்த அரவிந்தன், “இனிப்பு வேணும்னா நம்மள மாதிரி சாப்பிடுறாங்கன்னு சொல்லலாம்.… ஆனால் அந்த பையன நல்லா கவனி… எத்தனைமுறை அந்தப் பொண்ணு தலையில் கொட்டினாலும் அமைதியா இருக்கான் பாரு… ஸோ, அவங்க கண்டிப்பா உன்னையும் ஹரியும் மாதிரிதான்டி,” என்றான்.
கேட்டவளுக்கு, தன்னவன் எழுதிய புத்தகத்தின் தலைப்பு, ‘அன்புடைய ஆதிக்கமே!’ உடனே நினைவுக்கு வந்தது. “எழுத்தாளரே! இதைத்தான் பொருத்தமான தலைப்புன்னு சொன்னீங்களா!” கண்களை உருட்டினாள்.
“இப்போ தான் உனக்கு அது புரிஞ்சுதா? அறிவாளிப் பொண்டாட்டி,” சீண்டியவன், சீண்டிய வேகத்தில் உதைகளையும் வெகுமதியாகப் பெற்றான்.
“பாரு! பாரு! சொன்ன உடனே நிரூபிக்கற!” அரவிந்தன் வெற்றிப்புன்னகையுடன் கூக்குரலிட,
“இல்லடா! எனக்கென்னமோ அவங்க கடைசி வரைக்கும் நல்ல நண்பர்களா தான் இருப்பாங்கன்னு தோணுது!” தர்க்கம் செய்தாள் மீரா.
இவர்கள் வாதம் ஒரு முடிவே இல்லாமல் நீள, அதற்குள் சாப்பிட்டு முடித்து, கைக்கழுவி கொண்டு வந்த அஞ்சலி, அரவிந்தனிடம் ஒரு சிறிய காகிதத்தை நீட்டினாள்.
“இந்தாங்க பிடிங்க! அந்த ரெண்டு குழந்தகளோட பெயரும் வயசும். இன்னும் இருபது வருஷத்துல, அவங்க கல்யாணம் செஞ்சிகிட்டாங்களா, இல்ல நண்பர்களாகவே இருந்தாங்களான்னு தெரிஞ்சிடும். ஞாபகமா வந்து கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க!” செல்லமாக அதட்ட, அழகாய் அசடுவழிந்தனர் அரவிந்தனும் மீராவும்.
ஔவை இயற்றிய “நல்வழி” வெண்பாவுடன்,
ஓங்கார ரூபனை உளமார துதித்க – உறவுகள்
ஒன்று சேர்ந்து மனதார வாழ்த்த,
ஐயன் கண்ட கனவும் நனவானது இன்று!
ஏற்றமும் இறக்கமும் நிறைந்த வாழ்வின்,
எண்ணற்ற சவால்களை எதிர்கொள்ள – புத்தகங்கள்
ஊக்கம் தரும் என எழுத்தாளன்,
உண்மையை உரக்கச் சொன்னான் இன்று!
ஈகை குணம் கொண்டவள் அருகில் இருக்க,
இனி இவன் வாழ்வில் வெற்றிதான் என்றும்!
ஆயுள்வரை தொடரும் இவர்கள் தேவபந்தம் – பதில்சொல்கிறது
அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பின் ஆழம்!


Please Comment Here