30 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
மாமனே உலகமென்று மலை போல நம்பியவள்,
மனம் கோணாமல் நடந்தானா- மறுத்துப் பேசி
மங்கை கண்ட கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தானா- தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில் அத்தியாயம் 2ல்…
ஏக்கமும் பதற்றமும் கலந்த உணர்வுகளுடன், வாடகை வண்டி ஒன்று ஏற்பாடு செய்துகொண்டு வீட்டிற்கு வந்தான் குணா. அவனை வரவேற்க யாரும் இல்லாதது வழக்கத்திற்கு மாறாக இருந்தது.
மூன்றாண்டுகளுக்கு முன் அவன் செய்த செயல்களும் வழக்கத்திற்கு மாறானவை தானே! அதற்கான விளைவுகளை அவன் சந்தித்துதானே ஆகவேண்டும்; பரிகாரங்களைத் தேடித்தானே ஆகவேண்டும்.
நிதர்சனத்தை ஏற்று பெருமூச்சுவிட்டவன், பெட்டிகளை இறக்கிவைத்த வண்டி ஓட்டுனருக்கு நன்றிகூறி பயணக்கட்டணத்தைச் செலுத்தினான்.
தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த கமலாம்மா அவனைப் பார்த்ததும்,
“குணா தம்பி! வந்துட்டீயா! உனக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்யா!” பூட்டப்பட்டிருந்த கதவைத் திறந்தபடி நலம் விசாரித்தாள்.
“அம்மா அப்பா எங்க கமலாம்மா?” தான் வரப்போவது தெரிவித்திருந்தும், அவர்கள் வீட்டில் இல்லாததை எண்ணி வருந்தினான்.
“வா டா ராசாத்தி!” மதுமிதாவை இருகைகளிலும் அள்ளிக்கொண்டு முத்தமிட்டவள்,
“அப்படியே நம்ம யமுனா பாப்பா சாயல்!” எனப் பூரித்தாள்.
மென்மையாகத் தலையசைத்து சிரித்தவன், “அம்மா எங்க கமலாம்மா?” மீண்டும் வினவினான்.
“முதல்ல குளிச்சிட்டு வந்து சாப்பிடு தம்பி! இட்லி செய்யறேன்!” என்று இடுப்பில் குழந்தையுடன் சமையல் அறைக்குள் சென்றவள்,
“பாப்பா இட்லி சாப்பிடுவா தானே?” உறுதி செய்துகொண்டாள்.
அன்புக்கட்டளைக்குப் பணிந்தவன், அவள் சொற்படி நடந்தான்.
கமலாம்மா அவனுக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து அவர்கள் வீட்டில் பணிபுரிந்து வந்தாள். பணிப்பெண் என்பதைத் தாண்டி வீட்டின் நலனுக்காக அயராது உழைத்தவளை வீட்டார் அளவுகடந்து நேசித்தனர்.
மதுமிதாவிற்கு ஊட்டிக்கொண்டே இட்லி சாம்பார் சாப்பிட்டு முடித்திருந்தான் குணா. ஆனால் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கிடைக்கவில்லை.
சாமர்த்தியமாக மற்ற விஷயங்களைப் பேசி நேரத்தைக் கடத்தியவள், அவர்கள் தங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகக் கூறி வீட்டிற்கும் புறப்பட்டாள்.
“அம்மாவும் அப்பாவும் அப்படி எங்கத்தான் போயிருக்காங்க கமலாம்மா?” பொறுமையிழந்து எகிறினான் குணா.
“அது தம்பி…அது…இன்னைக்கு நம்ம சுதா பாப்பாவோட நிச்சயதார்த்தம்.” உண்மையை உடைத்தாள்.
“சுதாவுக்கு நிச்சயதார்த்தமா? முன்னாலேயே சொல்லியிருந்தா நானும் அங்கே போயிருப்பேனே!” அவன் வருந்த,
“இல்ல தம்பி… நீ அங்க…அங்க வந்தா…யமுனா பாப்பா மாதிரி… ஏதாவது குழப்பம்…” மென்றுவிழுங்கி தலைகுனிந்து நின்றாள் கமலாம்மா.
“புரியுது கமலாம்மா! நீங்க பத்திரமா வீட்டுக்குப் போயிட்டு வாங்க!” நிதர்சனத்தைக் கிரகித்து மௌனம் காத்தான்.
காலி வீட்டை வலம் வந்தவன் மனம்மட்டும் வேதனையில் நிரம்பி வழிந்தது. நிசப்தம் சூழ்ந்த அவ்விடத்தில் மனசாட்சியின் கர்ஜனை மரணவேதனை தந்தது. மனவுளைச்சலில் துடிதுடித்தவனுக்கு, இரவோடு இரவாக ஊருக்குச் சென்றுவிடலாம் என்று கூடத் தோன்றியது.
உடலில் களைப்பும் கண்ணில் தூக்கமுமாக மதுமிதா அவன் கால்களைத் தழுவ, அவளைத் தூக்கிக்கொண்டு மார்போடு அணைத்தான். குழந்தைக்குத் தட்டிக்கொடுத்தபடி சோஃபாவில் அமர்ந்தவன், சுவற்றில் மாற்றிய குடும்பப் படத்தை வெறித்துப் பார்த்தான்.
மூன்றாண்டுகளுக்கு முன் எடுத்தது; அனைவரும் ஒன்றாக இருந்த கடைசி நாள்; நிழற்படத்தில் மட்டுமில்லை; நிஜத்திலும் உறைந்துதான் போய்விட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்…
“மா… மா… மாமா” காதோரம் பலமுறை கிசுகிசுத்தும் அவன் எழுந்த பாடில்லை. தொலைக்காட்சியில் செய்தியாளர் ஒருபுறம் இடைவிடாமல் வாசிக்க, மறுபுறம் சோஃபாவில் சயனித்த குணா ஓயாமல் குறட்டை விட்டுக்கொண்டிருந்தான்.
ஆழ்ந்த நித்திரையில் உறங்கும் மாமனை வைத்த கண் வாங்காமல் ரசித்தவள், அந்த அழகிய தருணத்தைக் கைபேசியில் சிறைசெய்ய விழைந்தாள்.
“எத்தனை முறை சொல்றது டி உனக்கு? தூங்கற பிள்ளையை ஃபோட்டோ எடுக்காதுன்னு!” கண்டித்த குணாவின் தாய் சாவித்ரி, யமுனாவிடமிருந்து கைபேசியைப் பிடுங்கினாள்.
தூங்கும் பிள்ளைகளைப் புகைப்படம் எடுத்தால் ஆயுசு குறையும் என்ற மூடநம்பிக்கையில் ஊறிப்போனவள் சாவித்ரி. அவையாவும் கட்டுக்கதைகளே என்று ஏட்டிக்குப் போட்டி தர்க்கம் செய்பவள் யமுனா.
“அட அத்த! அதெல்லாம் பிறந்த குழந்தைக்குத்தான் சொல்லுவாங்க; உங்க பையனுக்கு ஏழு கழுத வயசாயிடுத்து!” சொன்னவள், துயில் கொண்டிருப்பவனின் இடுப்பை நறுக்கென்று கிள்ளி,
“இத்தன சத்தத்திலும் எப்படித்தான் மாமா தூங்குற?” பற்களை நறநறத்தாள்.
“ஆ வலிக்குது டி!” இடுப்பைத் தேய்த்துக்கொண்டே எழுந்தவனின் விழிகள், சேட்டை செய்யும் அவள் முகத்தில் சிறையானது.
“நான் எங்க டி தூங்கினேன்…சும்மா கண்ண மூடிக்கிட்டே, நியூஸ் கேட்டுட்டு இருந்தேன்!” குறும்பாகச் சிரித்து மழுப்பினான் குணா.
“பொய்! பொய்! பொய்!” சண்டைக்கு வந்தவள் அத்தையிடமிருந்த கைபேசியைப் பற்றி,
“இப்படியெல்லாம் சொல்லி ஏமாத்துவன்னு தான் ஃபோட்டோ எடுத்தேன் பாரு!” கர்வப் புன்னகையுடன் உயர்த்திக் காட்டினாள்.
நீட்டும் அவள் கரம்பிடித்து தன்பக்கம் இழுக்க, அவனருகில் வந்து விழுந்தாள் யமுனா. அவளிடமிருந்து கைபேசியை வாங்கியவன்,
“என்னை ஃபோட்டோ எடுக்கறது இருக்கட்டும்…மாப்பிள்ளை ஃபோட்டோ எங்க அம்மு?” கேட்டு, அதிலுள்ள புகைப்படங்களை அலசினான்.
“ஊருக்கு வந்து பதினெட்டு மணி நேரமாகியும், என்னை நேருல வந்து பார்க்காதவங்களுக்கு எல்லாம் அவ்வளவு சுலபமா மாப்பிள்ளை தரிசனம் கிடைச்சிடாது மாமா!” செல்லம் கொஞ்சியவள், லாவகமாய்க் கைபேசியை கைப்பற்றினாள்.
“ஜெட் லேக் அம்மு; அதான் உன் கல்யாணத்துக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே வந்திருக்கேனே; அது போதாதா?” பதிலுக்குக் குழைந்து மங்கையைத் தன்வசப்படுத்தினான்.
“சரி வா! எனக்கு என்ன ஸ்பெஷலா வாங்கிட்டு வந்திருக்கன்னு காட்டு மாமா; சுதா கல்லூரியில் இருந்து வரத்துக்குள்ள, எனக்குத் தேவையானதை எடுத்துக்கிட்டு நான் கிளம்பறேன்!” அவனை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச் சென்றாள்.
இவர்கள் குறும்புகளுக்கு அளவேயில்லை என்பதுபோல புன்னகைத்து அங்கிருந்து நகர்ந்தாள் சாவித்ரி.
பெட்டியைத் திறந்து ஊரிலிருந்து வாங்கிவந்த பரிசுப்பொருட்களை அடுக்கினான். ஏதோ ஒரு சாக்குச் சொல்லி ஒவ்வொன்றையும் தட்டிக்கழித்தாள் பெண்.
அவளுக்கென்று பிரத்யேகமாக வாங்கிவந்த எம்.பி.3 பிளேயரில் மெல்லிசை ஒன்று ஒலிக்கவிட்டு அவள் காதுகளில் பொருத்தியவன்,
“கண்மூடி கேளு அம்மு! எப்படி இருக்குன்னு சொல்லு!” மென்மையிலும் மென்மையாகக் கேட்க,
அதை மறுகணமே அவன் கையில் நுழத்தியவள், “மாமா! எனக்கெல்லாம் டீ கடை மாதிரி, பாட்டைச் சத்தமா ஒலிக்கவிட்டுக் கேட்டாத்தான் பிடிக்கும்; இதையும் சுதாவுக்கே கொடு!” உதடு சுழித்து,
“எனக்குப் பிடிச்சா மாதிரி ஏதாவது வாங்கிட்டு வர தெரியுதா உனக்கு!” புலம்பினாள்.
பொருட்களை நேர்த்தியாக அடுக்கியவன் அவள் முகத்தை கையிலேந்தி, “வேறென்ன டி எதிர்பார்த்த?” தாழ்ந்த குரலில் கேட்டான்.
“மேக் அப் செட்! பெட்டியைத் திறந்தா அதுக்குள்ள நிறைய குட்டிக் குட்டிப் பெட்டிகள் இருக்குமே; சினிமா நடிகையெல்லாம் உடை நிறத்துக்கு இணையா போட்டுப்பாங்களே; அந்தமாதிரி ஏதாவது வாங்கிட்டு வந்திருப்பன்னு நெனச்சேன் மாமா!” குதூகலத்துடன் வர்ணிக்க,
அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தவன், “என் அம்மு இயற்கையிலேயே ரொம்ப அழகு; அதெல்லாம் அவளுக்குத் தேவையே இல்ல தெரியுமா!” என அவள் தாடையைக் குவித்து இனிமையாகப் பேசினான்.
அதற்கெல்லாம் வசப்படாதவளாய், “வாங்கிட்டு வராததுக்கு ஏதாவது சாக்குச் சொல்லு!” முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
சமாதானப்படுத்த முயன்றவன், உள்ளூரில் அவள் விரும்பும் அனைத்தையும் வாங்கித் தருவதாகச் சொல்ல, அவள் கோபமெல்லாம் காற்றில் பறந்தது.
“எது கேட்டாலும் வாங்கித் தரணும்!” உறுதிசெய்து கொண்டாள் யமுனா.
அமெரிக்க டாலரை இந்திய நாணயத்திற்கு மாற்றியதும், கடைகளுக்கு அழைத்துச் செல்வதாக அவன் சொல்ல, மகிழ்ச்சியில் மிதந்தவள், மாமன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, புள்ளிமான் எனத் துள்ளிக்குதித்து ஓடினாள்.
அவள் அன்பில் கரைந்தவன், கன்னத்தைத் தேய்த்துக்கொண்டே, கண்ணுக்கெட்டும் தூரம்வரை உள்ளம் நிறைந்தவளை விழிகளால் பருகினான்.
“சீக்கிரம் சாப்பிட்டு முடி மாமா! நீ லேட்டா கிளம்பிட்டு, அப்புறம் நான் கடையில நிறைய நேரம் எடுத்துக்கிட்டேன்னு குறைசொல்லாத!” உணவுத்தட்டைப் பிடுங்காத குறையாகப் புலம்பிக்கொண்டிருந்தாள்.
“அவனை நிம்மதியா சாப்பிடவிடு யமுனா! நீ செய்யற பணியாரமுன்னா, குணாவுக்கு ரொம்பப் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதா?” வலதுபுறத்தில் அமர்ந்திருந்த அவள் தந்தை, குணாவின் தாய்மாமன் மாணிக்கம் இடைபுகுந்தார்.
“குணா! சாயங்காலம் அஞ்சு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுங்க; மாப்பிள்ளை அவளுக்கு வாங்கி வெச்சிருக்க மோதிரத்தோட அளவு சரிபார்க்க நேரில் வரேன்னு சொல்லியிருக்காரு!” அத்தை மீனாட்சி நினைவூட்டினாள்.
“பார்ரா…மாப்பிள்ளை அம்முவைப் பார்க்க என்னவெல்லாம் சாக்கு சொல்லிட்டு வராருன்னு!” கண்ணில் குறும்பு வழிந்தோட சீண்டியவன், மாப்பிள்ளையின் புகைப்படத்தைக் காட்டும்படி வம்பிழுத்தான்.
அதை அலமாரியில் இருந்த எடுத்து வந்து குணாவிடம் உற்சாகமாய் நீட்டினாள் மீனாட்சி.
குணாவின் முகம் நொடியில் சுருங்கியது.
வயதில் முதிர்ந்தவனாய் யமுனாவின் அழகுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாதவனாய் தோன்ற,
“எங்க அத்தை இப்படியொரு மாப்பிள்ளையை பிடிச்சீங்க! மாப்பிள்ளைக்கும் நம்ம அம்முவுக்கும் வயசு வித்தியாசம் நிறைய இருக்கும் போலவே!” கேட்டேவிட்டான் குணா.
“எதையாவது சொல்லிக் குழப்பாதே குணா! நல்ல இடம்; நல்ல குடும்பம்!”
மகளுக்கு மூளைச்சலவை செய்து, அவளைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்த கஷ்டம் தனக்குத்தானே தெரியும் என்பதுபோல பதறினாள் மீனாட்சி.
“வயசு வித்தியாசம் ஓரளவுக்கு இருந்தால் தான், கணவன்-மனைவிக்குள்ள நல்லதொரு புரிதல் இருக்கும். இவ சின்னப் பொண்ணுன்னு மாப்பிள்ளையும் அக்கறையா பொறுப்பா பார்த்துப்பாரு!” மனைவிக்கு ஒத்தூதினார் மாணிக்கம்.
“அதுக்கில்ல மாமா…” குணா தொடங்க,
“எதுவும் சொல்லாத குணா!” தடுத்தவர், “யமுனாவுக்கு எது நல்லது கெட்டதுன்னு எங்களுக்குத் தெரியும்!” திட்டவட்டமாக மறுத்தார்.
தனக்கென்ன வந்துது என்று தோளினைக் குலுக்கி எழுந்தவன், ‘உங்ககிட்ட எதுக்கு வீண்பேச்சு! யமுனாவுக்கு இந்தக் கிழவனோட கல்யாணம் நடந்தாதானே!’ மனத்தில் அசைப்போட்டான்.
‘இவங்ககிட்ட பேசி ஏன் மாமா உன் நேரத்த வீணடிக்குற! இந்தக் கிழவனை, நான் கல்யாணம் செஞ்சுக்கிட்டா தானே!’’ சிந்தித்தவள் அவனைப் புறப்படுமாறு அழைத்தாள்.
வாசலில் குணா தன் காரை உயிர்ப்பிக்க, “மாமா! ஒரு நிமிஷம்! என் ஃபோன் மறந்துட்டேன்!” வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.
வாசற்கதவருகே வந்தவள், படார் படார் என்று தாழ்ப்பாளைத் தட்ட, விரைந்தோடி வந்த மீனாட்சி,
“எத்தனைமுறை சொல்றது டி! தாழ்ப்பாள் சத்தம் போடாதே! வீட்டுக்கு ஆகாதுன்ன! பெல் அடிச்சாதான் என்ன?” கொந்தளித்தாள்.
“பெல்னா டிங்க் டோங்க்னு அடிக்கணும்! நீங்க மாட்டி வெச்சிருக்க பெல் மூணு நிமிஷம் மூச்சுவிடாம பாட்டுப் பாடுது!” விதண்டாவாதம் செய்தவள், மேஜையிலிருந்த கைபேசியை எடுத்துக்கொண்டு சிட்டாகப் பறந்தாள்.
தாழ்ப்பாள் சத்தம் போடாமல் இருந்தால் மட்டும், அவள் செய்யவிருக்கும் செயல் குடும்பத்திற்கு நன்மையை விளைத்திடுமா என்ன?
கடைவீதிகளில் இரண்டு மணி நேரம் ஆசைத்தீரச் சுற்றி, தனக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டவள், தன் காதல் விவகாரத்தை ஒளிவுமறைவு இல்லாமல் மாமனிடம் சொல்ல ஆயத்தமானாள்.
“முருகர் கோவிலுக்குப் போகலாமா மா… மா… மாமா!” நமுட்டுச் சிரிப்புடன் குழைந்தாள்.
தனக்குக் காரியமாக வேண்டுமென்றால், அவ்வாறு அழைப்பாள் என்று நன்கு அறிந்தவன்,
“போலாம்! அதற்கு முன்னாடி, நான் உனக்கு வாங்கித்தர வேண்டிய சில பொருட்கள் இருக்கு அம்மு!” கண்சிமிட்டியவன், புடவை கடைக்கு அழைத்துச் சென்றான்.
அவனும் மனத்தில் ஒரு திட்டத்துடன் தானே வந்திருந்தான்.
நடக்காத திருமணத்திற்காக ஏற்கனவே அத்தனை புடவைகள் வாங்கி வைத்திருந்த நிலையில், இன்னும் ஒன்றா என்று பெருமூச்சுவிட்டவள், வேண்டாம் என்று மறுத்தாள்.
“இது அம்முவுக்கு மாமாவோட சீர்!”
அவள் மூக்கின் நுனியை கிள்ளி வாஞ்சையாகப் பேசியவன், வாடாமல்லி நிறத்தில் மிதமான வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவை ஒன்றைத் தேர்ந்தெடுத்தான்.
அவளும் மனநிறைவுடன் சரி என்று தலையசைத்தாள்.
நகைக்கடைக்கு அழைத்துச் சென்று தங்கச்சங்கிலி, வளையல்கள், ஜிமிக்கி வாங்கித்தந்தவன் கடைக்காரரிடம்,
“தம்பி! இந்த வடிவத்தில் தாலி காட்டுங்க!” என்றான்.
“மாமா! அதெல்லாம் ஏற்கனவே முறைப்படி வாங்கியாச்சு!” திடுக்கிட்டாள் யமுனா.
“நீ கொஞ்சம் பேசாம இரு! இதுவும் மாமன் சீர்!” அதிராத குரலில் அழுத்தமாகச் சொல்லி, திருமாங்கல்யமும் வாங்கிக்கொண்டான்.
அரைமணி நேரத்தில் கோவிலுக்கு வந்தவர்கள், அவரவரின் பிரார்த்தனையை இறைவன் சன்னிதானத்தில் இறக்கி வைத்தனர்.
யாருக்கு வரம் கொடுப்பது என்று முருகன் பாடு தான் திண்டாட்டமானது.
மனிதர்கள் நடமாட்டம் இல்லாத ஒரு மரத்தின் நிழலில் வந்தமர்ந்தனர்.
“மாமா! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்!” எச்சில் விழுங்கி, மெல்லத் தொடங்கினாள் பேதை.
அர்ச்சனை செய்த தேங்காய் மூடியைத் தரையில் அடித்துக்கொண்டே,
“ம்ம்…சொல்லு அம்மு!” எந்தவித அலட்டலும் இல்லாமல் கேட்டான்.
“மாமா! நான்…நான்…ஒருத்தரை காதலிக்கறேன்….” என்றதும்,
அவளைப் பார்வையால் சுட்டெரித்தான் குணா.
“அவர் பெயர் மதுசூதனன். அம்மா அப்பாவுக்குத் துளிக்கூட விருப்பமில்ல; அதனால வீட்டைவிட்டு ஓடிப் போகலாமுன்னு….!” பதற்றத்தில் அனைத்தையும் உளறினாள்.
மீண்டும் முறைத்தானே தவிர, முகத்தில் எந்தவித அதிர்ச்சியும் காட்டவில்லை. சட்டை பாக்கட்டிலிருந்து கைபேசியை எடுத்து உயிர்ப்பித்தவன்,
“இப்போ அனுப்பு டா!” திடமான குரலில் அஷ்வினுக்கு ஆணையிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
குறுஞ்செய்தி வந்ததும், கைபேசியை யமுனா முன் நீட்டினான்.
பாழடைந்த கட்டிடம் ஒன்றில், கைகள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தவனை புகைப்படத்தில் கண்டு அதிர்ந்தாள்.
“மது… மது…என்ன டா ஆச்சு உனக்கு…யாரு மாமா அவனைக் கடத்தி வெச்சிருக்காங்க… உனக்கு அவனைத் தெரியுமா மாமா…”
கைபேசியை அதிரடியாகத் திருப்பிக் கொண்டவன், “நான்தான் கடத்தி வெச்சிருக்கேன்!” என்று கடுதாசி ஒன்றை அவளிடம் தந்தான்.
அதை வாங்கிப் படித்தவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.
“ரெண்டு தட்டு தட்டினதுக்கே, நீயும் வேண்டாம் உன் உறவும் வேண்டாம்னு ஓடுறான்; அவனை நம்பி வீட்டைவிட்டு போகத் திட்டம் போடுறையா?” குணா ஏளனமாக வினவ, அவனைக் கேள்வியாய் நோக்கினாள் யமுனா.
“இங்க பாரு அம்மு! நீ அந்தக் கிழவனைக் கல்யாணம் செய்துக்கறத பார்க்கவோ, உன் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டவோ நான் ஊருலேந்து வரல.” என்று அவள் விரல்களைக் கோர்த்தவன்,
“என் அம்மு எனக்கு மட்டும்தான். நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்!” தன் திட்டத்தை அலட்டலே இல்லாமல் உரைத்தான்.
“ஏன் மாமா ஏதேதோ பேசுற? நாம என்ன அப்படியா பழகினோம்; நமக்கு ஜாதகம் பொருத்தம் இல்லேன்னு அத்தை சொன்னபோது கூட நீ பேசாமத்தானே இருந்த…திடீர்னு என்ன மாமா….”,
அவன் மேலிருந்த அதீத பாசத்தால், குரலைக் கூட உயர்த்திப் பேசமுடியவில்லை அவளால்.
“ம்ம்…” தலையசைத்தவன், “பெரியவங்களா பார்த்து கல்யாணம் செய்து வெச்சிடுவாங்கன்னு தான் நானும் பேசாம இருந்தேன்; என்னைக் கல்யாணம் செய்துக்கிட்டா உன் உயிருக்கு ஆபத்துன்னு ஏதேதோ காரணம் சொல்லி தட்டிக்கழிச்சிட்டாங்க….”,
அவன் முடிக்கும் முன், “என் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும், நீ என்னைக் கல்யாணம் செய்துக்க நினைக்கிறியா?” பரிதாபமாகக் கெஞ்சினாள்.
அவள் உணர்ச்சிப்பூர்வமான பேச்சுகள் எல்லாம் அவன் செவிகளுக்கு எட்டவே இல்லை.
“அந்தக் கோழை உன் சகவாசமே வேண்டாம்னு விட்டு ஓடிட்டான். இப்போ உன்னோட அப்பா பார்த்து வெச்சிருக்க கிழவனை கல்யாணம் செய்துக்கிட்டு, வாழ்நாள் முழுக்க பிடிக்காத வாழ்க்கையை வாழப்போறியா, இல்லை உயிரோட இருக்குற கொஞ்ச நாளுக்கு, உன்னை ராணியாட்டம் பார்த்துக்கறேன்னு சொல்ற என்னோட சந்தோஷமா குடும்பம் நடத்த போறியான்னு யோசி அம்மு!”
“எனக்கு மதுவை ரொம்பப் பிடிக்கும் மாமா; அவனுக்கும் அப்படித்தான்; ஏதோ பயத்துல…அவன்…ப்ளீஸ் எங்களை சேர்த்துவைங்க மாமா!” முடிவெடுத்துவிட்டு பேசுபனிடம் வீணாக மன்றாடினாள்.
“எனக்கும் அப்படித்தான் அம்முகுட்டி! உன்னையும் பிடிக்கும், உன் அப்பா பெயருல இருக்கும் நம்ம பாட்டன் காலத்துப் பூர்வீக இடமும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்!” என்றவன் அதை வரதட்சணை என்ற பெயரில் யமுனாவை மணந்துகொள்ளும் யாரோ ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லை என்றும் திடமாகக் கூறினான்.
“மாட்டேன்! இந்தக் கல்யாணத்திற்கு நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்!” என்று கதறியவள், மதுசூதனனின் அலைபேசிக்கு அழைத்தாள்.
இணைப்பு துண்டிக்கப்பட்டது என்று அறிந்தவளின் இதயமும் துடிக்க மறந்தது. வெளிறிய அவள் முகத்தை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் திருப்பியவன்,
“நான் சொல்றபடி நடந்துகிட்டா, அந்தக் கோழை நல்லபடியா நடமாடிக்கிட்டாவது இருப்பான்…இல்லேன்னா…” அவன் முடிக்கும் முன்,
வெடுக்கென்று எழுந்தவள், கண்களைத் துடைத்துக்கொண்டு வேகநடையிட்டாள்.
உயிராய் நேசித்த காதலன் பயந்தோடியதைக் காட்டிலும், நம்பிக்கையின் மொத்த உருவமாய் நினைத்த மாமன் குணம்கெட்டு நடப்பதுதான் அவள் மனத்தை வாட்டியெடுத்தது.
தெய்வத்தின் சன்னிதானத்தில் பேசிய ரகசியங்கள், அந்த செந்தில்நாதனின் செவிகளுக்கு எட்டாமல் போய்விடுமா என்ன.
அங்கிருந்து அவளை அஷ்வின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் குணா. அவள் மனநிலை என்னவென்று புரியாமல் அஷ்வின் திருதிருவென்று முழிக்க,
“நீங்களுமா அண்ணா மாமா கூடச் சேர்ந்துட்டு…” ஆதங்கத்தில் குமுறினாள் யமுனா.
“வேண்டாம் குணா! இது சரிவராதுன்னு நினைக்கறேன்!” அஷ்வின் எச்சரிக்க,
மாமன் மகளின் கன்னங்களை மென்மையாக வருடியவன், ”வேப்பிலை அடிச்சா எல்லாம் சரிவரும்!” கண்சிமிட்டி, வாங்கிவந்த பொருட்களை அவள் கையில் திணித்து மறுநாள் காலை ஒன்பது மணிக்கு முருகர் கோவிலில் திருமணம் என்றும் திட்டவட்டமாக அறிவித்தான்.
“மொத்த சொத்தையும் அபகரிக்க நினைக்குற நீ, எதுக்கு இதெல்லாம் மட்டும் வாங்கித் தர மாமா. நீ சும்மா கெட்டவன் மாதிரி நடிச்சு என்கிட்ட விளையாடுற தானே!” ஏதாவது பேரதிசயம் நிகழ்ந்துடாதா என்ற நப்பாசையில் கண்கள் அகல அவனைப் பார்த்தாள்.
“மொத்த சொத்தையும் என் பெயருல மாத்திக்க, இது மாமா செய்யும் முதலீடு அம்முகுட்டி!” நமுட்டுச் சிரிப்புடன் பேசினான்.
“ச்சீ…மனசுல வஞ்சனையோட என்னை அப்படிக் கூப்பிடாத!” விலகி நின்றாள் அவள்.
அவளிருக்கும் மனநிலையில் குணாவின் சொல்படி நடப்பாளா என்று அஷ்வின் கேள்வி எழுப்ப,
“அதெல்லாம் வேப்பிலை அடிக்குற விதத்துல அடிச்சா, மறுபேச்சு இல்லாம கழுத்தை நீட்டுவா!” இறுமாப்புடன் சொன்னவன், உயிரானவளின் தோளினை அரவணைத்து,
“வா அம்முகுட்டி! மாமா மனசுல என்ன இருக்குன்னு காட்டுறேன்!” அவளை வலுக்கட்டாயமாக அறைக்குள் இழுத்துச்சென்று தாளிட்டான்.
அறைக்கதவு சாற்றப்பட்ட ஐந்து நிமிடத்தில், பளார் என்று அறையும் சத்தம் வீடெங்கும் எதிரொலித்தது.
‘குணா! உனக்கு ஏண்டா இந்த விபரீத ஆசை!’ நண்பன் செயல்களுக்குத் தலையைக் கொடுத்துவிட்டு முழித்தவன் பெருமூச்சுவிட்டான்.
“ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்” அழைப்பு மணி ஒலிக்க, வாசலுக்கு வந்தாள் மீனாட்சி.
வாடாமல்லி நிறப் பட்டுப்புடவையில், கழுத்தில் தாலியுடன் குணா கைக்கோர்த்து தலைதாழ்த்தி நிற்கும் மகளைக் கண்டவள்,
“அண்ணி! உங்க பிள்ளை செஞ்சிருக்க வேலையைப் பாருங்க!” பெருங்குரலில் கர்ஜித்தாள்.
திருமணப் பத்திரிக்கைகளுக்கு மஞ்சள் தடவிக்கொண்டிருந்த சாவித்ரி, மனோகர், மாணிக்கம் பதற்றத்துடன் வாசலுக்கு ஓடி வந்தனர்.
“அம்மா…அது…” குணா தொடங்க, அவன் சட்டையைக் கொத்தாய் பிடித்து உலுக்கிய சாவித்ரி,
“என்ன காரியம் செஞ்சிருக்க குணா! இதுக்காகவா ஊருலேந்து வந்த!” ஒப்பாரி வைக்க,
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைக்கணும்னு எங்களுக்கு மட்டும் ஆசை இல்லையா குணா; ஜாதகம் சரியில்லேன்னு தானே…” மாணிக்கம் கசந்த குரலில் புலம்பி தங்கையைத் தேற்றினார்.
மகளின் உயிருக்கு ஆபத்து என்று ஜோசியர் சொன்னதை நினைவுகூர்ந்த தாய்மனம், பின்விளைவுகளை எண்ணி பதறியது.
“இவன்கிட்ட என்னங்க பேச்சு? அவன் கட்டின தாலியைக் கழட்டு யமுனா! நம்ம மாப்பிள்ளை வீட்டுல உண்மையைச் சொல்லிக்கலாம்!”
“வேண்டாம் மீனாட்சி! அப்படியெல்லாம் அவசரப்பட்டு செய்யாத மா!” குறுக்கிட்ட சாவித்ரி, ஜோசியரிடம் பரிகாரம் கேட்கலாம் என்று மறுயோசனை சொன்னாள்.
“உங்களுக்கு உங்க மகன்தானே ஒஸத்தி; என் பொண்ணு உயிர் பற்றி என்ன கவலை!” விசும்பியவளால், அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை.
“எங்களுக்கு குணா வேற, யமுனா வேற இல்லம்மா மீனாட்சி. சாவித்ரி சொன்னா மாதிரி கேட்டுத்தான் பார்ப்போமே!” புலம்புவதைக் காட்டிலும், தீர்வு காண்பதுதான் உத்தமம் என்றார் குணாவின் தந்தை மனோகர்.
பிள்ளைகள் செய்தது சரியா தவறா என்று அலசி ஆராய்ந்த பெரியவர்கள் ஜோசியர் சொற்படி நடக்கலாம் என்று ஒருமித்தமாக முடிவுக்கு வந்தனர்.
“அவங்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைச்சிட்டு வாங்க மா!” மாணிக்கம் பெண்களிடம் கூற,
ஜோசியர் சொல்வதின் அடிப்படையிலேயே கல்யாணத்தை அங்கீகரிப்பேன் என்று தீர்மானமாகச் சொன்ன மீனாட்சி, மகளை மட்டும் உள்ளே அழைத்தாள்.
“அந்த ஆண்டவனே வந்து சொன்னாலும் என் முடிவில் மாற்றமில்லை; ஆளுமையுடன் குறுக்கிட்ட குணா, இரண்டு வாரங்களில் யமுனாவை அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டுமென்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய, அவள் தன்னுடன் இருப்பது அவசியமென்றும் கூற,
“ஜோசியர் சொல்லாம என் மகளை உன்னோட அனுப்பமாட்டேன்!” மீனாட்சி திட்டவட்டமாக மறுத்தாள்.
“பெரியவங்க சொல்றத கேளு குணா! பிடிவாதம் பிடிக்காத டா!” கெஞ்சினாள் சாவித்ரி.
“நான் மாமா இருக்குற இடத்துல தான் இருப்பேன்!”
அதுவரை மௌனம் சாதித்த யமுனா வாய்திறந்து பேச, அனைவரும் அவளை ஆழமாகப் பார்த்தனர்.
பெண்மானை மெச்சுதலாக ஏறிட்டான் குணா.
“நீங்க உங்க ஜோசியர் கிட்ட பொறுமையா பரிகாரம் கேளுங்க அத்தை; நாங்க அதுவரைக்கும் அஷ்வின் வீட்டில் தங்கிக்கறோம்!” கம்பீரமாக உரைத்து, மங்கையின் கரம் கோர்த்து வெளியேறியவன்,
“மாமாவை விட்டுட்டு இருக்க மனசில்லையா என் அம்முகுட்டிக்கு!” முகத்தில் புன்னகை ததும்ப அவளை இறுக அணைத்து கிசுகிசுத்தான்.
மாமனை விழி உயர்த்திப் பார்த்து முறைத்தவள், “நடிகர் திலகத்துக்கு ஜோடியா வேஷம்போட வந்தாச்சு; அப்போ சரோஜாதேவி மாதிரி நடிச்சுதானே ஆகணும்!” பதிலடி கொடுத்துக் கண்சிமிட்டினாள்.
“வேஷமா!” புருவங்கள் உயர அவளைப் பார்வையால் விழுங்கியவன்,
“போடு போடு! நல்லா வேஷம்போடு! யாரு வேணாம்னு சொன்னா! இப்படியே நேர்மறையா சிந்திக்கப் பழகிக்க; அப்போ நடக்கறது எல்லாம் நல்லதுக்குன்னு தோணும்!”
“உங்க அறிவுரைக்கு நன்றி மிஸ்டர்.குணா! எனக்கு எப்பவுமே நல்லது மட்டும்தான் நடக்கும்!” கர்வப் புன்னகையில் உதட்டை வளைத்தவள், “இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!” சவால்விட்டு தலைநிமிர்ந்து முன்னே நடந்தாள்.
இன்று…
“மா…மா…மாமா!” சிணுங்கிய குழந்தை அவன் கன்னங்களை வருட, அதில் விழித்துக்கொண்டவனுக்கு மதுமிதாவின் முகத்தில் யமுனாவின் பிம்பம் தோன்றி மறைந்தது. இரவு முழுவதும் குழந்தையோடு அந்தச் சோஃபாவிலேயே உறங்கியதை உணர்ந்தான்.
‘இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!’ யமுனாவின் குரலில் சஞ்சரித்தவனின் சிந்தனையைக் கலைத்தது வாசற்கதவின் அழைப்புமணி.
“அம்மா! அப்பா! எப்படி இருக்கீங்க!” மூன்றாண்டுகளுக்கு பின் அவர்களை நேரில் பார்த்தவனின் மனம் நெகிழ்ந்தது. அவர்களின் பாசக்கரங்களில் தஞ்சம் புக ஏங்கியது.
“மெல்லமாகத் தலையசைத்த மனோகர் பட்டும்படாமல் பதிலளிக்க, சாவித்ரி சிலையாக நின்றாள்.
அச்சமயம் அவர்கள் அருகில் தத்தித்தாவி நடந்துவந்த மதுமிதா, பாட்டி வைத்திருந்த பளபளக்கும் பையை வருட, வெடுக்கென்று கழுத்தை நொடித்து நகர்ந்தாள் சாவித்ரி. எந்தப் பக்கம் சாய்வது என்று புரியாமல் மனோகரும் மௌனமாய் மனைவியைப் பின்தொடர்ந்தார்.
சாவித்ரியின் செயலில் தடுமாறி, தரையில் விழுந்த குழந்தையைத் தூக்கிக்கொண்ட குணாவின் முகத்தில் கோபம் பரவியது.
குழந்தையிடம் வெறுப்பைக் காட்டும் அன்னையைக் கண்கொட்டாமல் பார்த்து முறைத்தான்.
பெரியவர்கள் சொற்படி நடக்காமல், ஜோசியர் சொன்ன பரிகாரத்தையும் மதிக்காமல், குடும்பத்தில் பேரிழப்பு ஏற்படுத்தியதற்கு மகன் முகத்தில் வருத்தமும் இல்லை; மன்னிப்பு கேட்க மனமும் இல்லை என்று தோன்றியது சாவித்ரிக்கு.
தான் செய்தது எதுவுமே தவறில்லை என்று தீர்க்கமாய் நம்பியவனுக்கு, அவர்கள் துணையில்லாமல் தனித்து வாழமுடியும் என்ற வைராக்கியம் தலைக்கேறியது.
“இவங்க யாரோட தயவும் நமக்கு தேவையில்லை மதுகுட்டி; நாம நம்ம ஊருக்கே போகலாம்!” என்றவன், வேகமாகத் தன் அறையை நோக்கி நடந்தான்.
“மா… மா… மாமா!” அவன் கழுத்தை வளைத்து அணைத்த குழந்தையின் மழலை மொழியில் தன் யமுனாவைக் கண்டான்.
“நம்ம வாழ்க்கை நல்லபடியா தான் இருக்கு மதுகுட்டி! குழந்தையிடம் பேசியவன், தனக்குத்தானே நம்பிக்கை வார்த்தை சொல்லிக்கொண்டான்.
பரிகாரம் செய்யாத பிள்ளை மேல் பரிதாபம் கொள்வாளா – குலம்தழைக்க
பரிமளமாய் வந்தவளின் மென்சிரிப்பில் மயங்கிப்போவாளா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…


Please Comment Here