24 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்,
தாய் மனம் இளகியது இன்று!
தாயில்லா பிள்ளைக்குத் தேவை உறவுகளின் நேசம்,
தாயுமானவன் உணர்ந்தானா வாழ்க்கையின் நியதி – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில் அத்தியாயம் 03ல்…
பெற்றவர்களின் செய்கையில் கோபம் தலைக்கேறியவன், ஊருக்குத் திரும்ப தீர்மானித்து, அன்றைய தேதியில் புறப்படும் விமானங்களின் விவரங்களை மடிக்கணினியில் அலசினான்.
காலையிலிருந்து ஒன்றுமே சாப்பிடாத மதுமிதா, பால் பாட்டிலை எடுத்துவந்து, “மா…மா…மாமா!” என்று நீட்டினாள். குழந்தையின் பசியையும் ஆற்றாமல், சரியான நேரத்தில் மருந்துகளையும் புகட்டாத தன் அலட்சியத்தை நினைத்து நொந்துகொண்டான் குணா.
மடிக்கணினியை மூடிவைத்து, குழந்தையுடன் சமையலறைக்கு வந்தான். சமைப்பதில் மும்முரமாக இருந்த அன்னையைப் பொருட்படுத்தாது, அவளுக்கு ஒத்தாசையாய் வெண்டைக்காய் நறுக்கிக்கொண்டிருந்த கமலாம்மாவை அழைத்து,
“குழந்தைக்கு ஒரு டம்ளர் பால் கொட்டித்தாங்க. கொஞ்சம் வெதுவெதுப்பா இருக்கட்டும்; சக்கரை வேண்டாம்!” விவரங்களைச் சொல்லி பாட்டிலைக் கொடுத்தான்.
தனக்கும் பசி வயிற்றைக் கிள்ளியபோதும், வாய்விட்டு கேட்க அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தாய்க்கும் முன்வந்து பசியாற்ற விருப்பமில்லை.
வீம்புக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பவளை ஏறிட்டவனுக்கு, அங்கு நிற்கும் ஒவ்வொரு நொடியும், தீ மேல் நிற்பதுபோல தோன்றியது.
“கமலாம்மா! எங்களால யாருக்கும் தொந்தரவு வேண்டாம். நாங்க இப்பவே ஊருக்குக் கிளம்பறோம்.” அம்மாவின் காதில் விழுமாறு உரக்கச் சொல்லி, அங்கிருந்து நகர்ந்தான்.
குடும்ப விவகாரங்கள் தெரிந்தும், கமலாம்மா கண்டும் காணதவளாக அமைதி காக்க, அப்போதும் தாய்மனம் அசரவில்லை;
ஆனால் மகன் சொன்னதைக் கேட்டு சுதாரித்துக்கொண்ட மனோகர், கால்மணி நேரத்தில் மகனைத் தேடி வந்தார்.
மதுமிதாவைத் தோளில் சுமந்துகொண்டு, குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்றவன், தந்தையைப் பார்த்ததும் அவரிடமிருந்து பால் பாட்டிலை வாங்குவதற்குக் கையை நீட்டினான்.
அதைத் தர மறுத்தவர், “தாத்தாகிட்ட வா டா செல்லம்! அப்பா காபி குடிக்கட்டும்!” என்றதும் மதுமிதா மறுகணமே இளித்துக்கொண்டு அவரிடம் தாவினாள். குணாவும் மறுப்பு சொல்லாமல் அவளை விட்டான்.
மதுமிதா இயல்பிலேயே அனைவரிடமும் சுலபமாக ஒட்டிக்கொண்டு விடுவாள். அவளுக்கு வேற்றுமுகம், பழக்கமில்லாதவர்கள் என்றெல்லாம் எதுவும் இல்லை.
பாசத்தைப் பொழியும் எவரிடமும் சிரித்த முகத்தோடு ஐக்கியமாகிவிடும் அழகிய பதுமை அவள்.
முதல் முறையாக குழந்தையின் ஸ்பரிசத்தை உணர்ந்தவருக்கும் மெய்சிலிர்த்தது. மதுமிதாவின் பட்டான கேசத்தை வருடியவாறே மடியில் அமர்த்திக்கொண்டார். அவளும் தாத்தாவின் அரவணைப்பில் சொகுசாய் அமர்ந்து பால் பருகினாள்.
மகன் காபி குடித்து முடிக்கும்வரை காத்திருந்த மனோகர்,
“குணா! நீ இப்படிக் கோபப்பட்டு எடுத்தோம் கவுத்தோம்னு முடிவு எடுக்கறதுல யாருக்கும் எந்தவித பிரயோஜனமும் இல்ல; தப்பு செஞ்சது நீ!” அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.
“ஊரு உலகத்துல யாரும் செய்யாத தப்பையா நான் செஞ்சேன். எல்லாரும் ஏன் என்னைக் குற்றவாளி மாதிரியே பாக்குறீங்க?” எதிர்த்துப் பேசி கொந்தளித்தான்.
“பின்ன நீ செஞ்ச காரியத்திற்கு உன்னைப் பாராட்டி சீராட்டுவாங்களா டா! யமுனா மேல இருக்குற பிரியத்துல அவளைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு தானே மன்னிச்சு பரிகாரம் செய்யச் சொன்னோம். ஆனால் நீ அதை செய்யாம அலட்சியப்படுத்திட்டு அவளே இல்லாம ஆக்கிட்ட!” பிழைகளை நினைவூட்டினார்.
அவற்றை நினைத்துப் பார்த்தவனிடம் பதிலேதும் இல்லை.
மனோகருக்கும் நடந்து முடிந்ததைக் குத்திக்காட்டும் எண்ணமில்லை. மகனின் எதிர்காலத்தைத் திருத்தி அமைக்க மட்டுமே விரும்பினார்.
குணா தோளினை ஆறுதலாய் வருடியவர்,
“கொஞ்சம் நிதானமா யோசி குணா! அடுத்த வாரம் நடக்கவிருக்கும் மாநாடு, உன் லட்சியப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல். நீ செஞ்ச தப்புக்குப் பிராயச்சித்தம் தேடவும் இது ஒரு நல்ல வாய்ப்பு. பிடிவாதத்தைத் தள்ளி வெச்சிட்டு, முதல்ல அம்மாகிட்ட மன்னிப்பு கேளு!” பக்குவமாக அறிவுறுத்தினார்.
அவன் நிதானமாக யோசிக்க ஒரு நொடிதான் தேவைப்பட்டது.
“அப்பா! தயவுசெய்து எனக்கு எந்த அறிவுரையும் சொல்லாதீங்க. நான் யார் காலுலையும் விழமாட்டேன்; யாருக்கு இஷ்டம் இருக்கோ, அவங்க எங்களோட உறவாடட்டும்! அம்மா பெங்களூர் வந்து என் மதுமிதாவைப் பார்த்துக்கச் சொல்லுங்க! அப்போ நான் மாநாட்டுல கலந்துக்கறேன்.
இல்லேன்னா நாங்க இப்பவே ஊருக்குப் புறப்படுறோம். எனக்கு என் மகளைத் தவிர வேறெதுவும் முக்கியமில்ல.” தன் முடிவை உறுதியாகச் சொல்லி, மதுமிதாவை அவரிடமிருந்து வாங்கிக்கொண்டான்.
“ரெண்டு வருஷம் வளர்த்ததுக்கே என் மகள், என் மதுமிதான்னு தலையில் தூக்கிவெச்சுகிட்டு ஆடுறியே! இருபத்துநாலு வருஷமா பொத்திவளர்த்த நம்ம வீட்டுப் பெண்ணை, உன் பிடிவாதத்தால நாங்க இழந்துட்டு நிக்கறோம்.” ஒப்பிட்டுக் கர்ஜித்தவர்,
“என் மனைவி உன் மகளைப் பார்துக்கக் கண்டிப்பா வரமாட்டா! நீ உன் இஷ்டம்போல கிளம்பு!” தீர்மானமாகச் சொல்லி வெளியேறினார்.
தந்தை பேச்சில் ரோஷம் தலைக்கேற, இரண்டே விரல்களில் மடிக்கணினியைத் திறந்தவன், பயணச்சீட்டு வாங்க பல விமான நிறுவனங்களின் பட்டியல்களை அலசினான். அடுத்த ஐந்து நாட்களுக்கு அனைத்து விமானங்களும் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததை உணர்ந்தான்.
அழையா விருந்தாளியாக வீட்டில் இருப்பதைவிட, விடுதியில் தங்கலாம் என்று தோன்றியது. ஆனால் மதுமிதா விடுதியில் சரியான சாப்பாடு இல்லாமல் அல்லல்பட்டது நினைவுக்கு வர, அந்த யோசனையைக் கைவிட்டான். குழந்தையின் நலன்கருதி, சுயகௌரவத்தை விட்டொழித்து வீட்டிலேயே இருக்க முடிவுசெய்தான்.
மதுமிதாவிற்குத் தேவையான அனைத்தையும் தானே செய்தான். அவளைக் குளிக்கவைத்து உணவு ஊட்டுவது, விளையாடி கதை சொல்வது, மருத்துவ பயிற்சிகளைச் செய்வதென்று அன்றாட வேலைகளைத் தனியாளாகச் செய்தான். மாலை நேரங்களில் அருகிலிருந்த பூங்காவிற்கு அழைத்துச் சென்றான்.
மகனின் பொறுப்புணர்ச்சியைக் கவனித்த பெற்றோர் மனதளவில் பூரித்தாலும், யமுனாவின் உருவம் அவர்கள் கண்முன் வந்து வாட்டியெடுத்தது. குணாவிற்கும் தழைந்துபோக மனமில்லை. கமலாம்மா தான் இவர்கள் பனிப்போருக்கு இடையே அல்லாடினாள்.
கண்ணாமூச்சி ஆட்டம் முடிவேயில்லாமல் நீடிக்க, ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது.
மாநாட்டிற்காகக் கொண்டுவந்த கோப்புகளைப் பையில் வைத்தவனின் மனம் ஏக்கத்தில் கனத்தது. இரவுபகலாக உழைத்தது எல்லாம் வீண்போனதை என்ணி வருந்தினான்.
‘இனி உங்க வாழ்க்கை நல்லாயிருக்கான்னு பாருங்க மா…மா…மாமா!’ யமுனாவின் குரல் மனத்தில் எதிரொலிக்க, அவன் கண்கள் குளமானது.
ஆழ்ந்து உறங்கும் மதுமிதா அதை உணர்ந்தது போல, “மா…மா…மாமா” என்று முனங்கினாள்.
குழந்தையின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், “என் வாழ்க்கை நல்லாதான் இருக்கு அம்மு!” மனசாட்சியாய் வலம் வந்தவளுக்குக் கம்பீரமாகப் பதிலளித்தான்.
யமுனாவின் நினைவுகளில் தத்தளித்தவனுக்கு அஷ்வினிடம் மனம்விட்டு பேசினால் ஆறுதலாக இருக்குமென்று தோன்றியது. உறங்கும் குழந்தைக்குத் தட்டிக்கொடுத்தவன், கைபேசியுடன் மொட்டை மாடிக்குச் சென்றான். ஊருக்கு வந்து சேரும் நாள், நேரம் என விவரங்களைப் பகிர்ந்தான்.
“உன் பிடிவாதத்தை விட்டுட்டு அம்மாகிட்ட பேசு டா!” நண்பன் முடிவில் அதிருப்தி கொண்டான் அஷ்வின்.
“யாரு…இவங்ககிட்டயா!” ஏளனமாகச் சிரித்தவன், தினமும் பாசமாக நெருங்கும் குழந்தையின் முகம் பார்த்துச் சிரிக்கக்கூட மனமில்லாத கல்நெஞ்சம் படைத்தவர்கள் என்று தூற்றினான்.
“புரியுது குணா…ஆனா…”
“குணா…குணா…சீக்கிரம் வா டா இங்க!” பெருங்குரலில் சாவித்ரி அலற, அதில் பதறியவன் பாய்ந்தடித்து ஓடினான்.
இமைக்கும் நொடியில் அங்குச் சென்றவனின் கண்கள் சிவந்தது.
மதுமிதாவை மடியில் சாய்த்தபடி அவள் தலையைத் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தாள் சாவித்ரி.
“தம்பி…அது…பாப்பா…தூங்கி எழுந்து உன்னைத் தேடிட்டு வந்திருக்கா போல…. நான் அப்போதான் வீடு துடைத்து சுத்தம் செஞ்சேன்… ஈரத்தரையில வழுக்கி விழுந்துட்டா….” கமலாம்மா மென்றுவிழுங்க,
தான் குழந்தையைத் தனியாக விட்டுச்சென்றது தவறு என்று தெரிந்தபோதும்,
“இந்த வீட்டுல என் குழந்தைய ஐந்து நிமிஷம் தனியா விட்டுட்டுப் போக முடியுதா…மனுஷங்க மனசுல அவ்வளவு அழுக்கு…வீடு சுத்தம் செய்யறது ஒரு கேடா?” பழியை அவர்கள் மீது சுமத்தி, மதுமிதாவைத் தூக்க வந்தான்.
அனைவரும் வியக்கும் வண்ணம் குழந்தையைத் தர மறுத்தாள் சாவித்ரி.
தரையில் விழுந்த குழந்தையைத் தன்னையும் அறியாமல் பதறியடித்துத் தூக்கிய நொடியோ, பாதுகாப்பை உணர்ந்த மதுமிதா தன் பிஞ்சுக் கரங்களால் அவள் கழுத்தைச் சுற்றி வளைத்த தருணமோ, இல்லை குழந்தையின் கன்னத்தோடு கன்னம் உரசிய வேளையோ, சாவித்ரியின் வீம்பெல்லாம் சுக்குநூறாய் உடைந்தது.
“எனக்கும் பாசம் இருக்குடா! அக்கறையும் இருக்கு! மதுமிதா என் பேத்தி; எங்க யமுனா எங்களுக்காக விட்டுட்டுப் போயிருக்கா!” வாய்விட்டு கதறியவள், கண்களைத் துடைத்துக்கொண்டு,
“எங்களுக்கும் அவள் மேல உரிமை இருக்கு; நான் தர மாட்டேன்!” குழந்தையை மார்போடு சேர்த்து அணைத்தாள்.
உறைந்து நின்றவன் அருகில் வந்த மனோகர், “மன்னிப்பு கேட்க நீ அவ்வளவு யோசிச்ச! ஆனா அம்மாவைப் பாரு; அதுதான் பெற்றவளின் பாசம்! யார் மனசுல அழுக்கு இருக்குன்னு தெரியுதா இப்போ!” ஜாடைமாடையாக மகன் பிடிவாதத்தைச் சுட்டிக்காட்டினார்.
சாவித்ரி அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், “என்னோட பெங்களூர் வருவியா மா? வந்து மதுமிதாவைப் பார்த்துப்பியா மா?” தன்மையாகக் கேட்டு, குழந்தையின் தலையை வருடினான்.
“ம்ம்! வரேன் குணா!” மனதார சம்மதித்தவள், “முதல்ல குழந்தைக்கு நல்லெண்ணை தேய்க்கறேன். அடிப்பட்ட இடத்துல வீங்காம இருக்கும்!” தாய்மைக்கே உள்ள பரிதவிப்பில் பேசினாள்.
மன்னிப்பு கேட்காமல் தன் காரியத்திலேயே குறியாக இருக்கும் மகனின் சுயநலத்தை நினைத்து நொந்தார் மனோகர்.
மகன் விரிக்கும் பாச வலையில் மறுபடியும் விழுகிறாளே பைத்தியக்காரி என்று மனமுடைந்தவர், மனையாளுக்கு வலிகளைத் தாங்கும் வலிமையும் சேர்த்துக் கொடுக்கும்படி இறைவனிடம் பிரார்தித்தார்.
அங்கே நடந்த அத்தனை பேரதிசயங்களையும் துண்டிக்கப்படாத அழைப்பின் வாயிலாகக் கேட்ட அஷ்வின், நண்பன் வாழ்க்கையில் ஏற்படும் நல்லதொரு திருப்பத்தை எண்ணி நெகிழ்ந்தான்.
திங்கட்கிழமை மூவரும் பெங்களூருக்குக் கிளம்பினர். மதுமிதா சாப்பிடக்கூடிய, சாப்பிடக்கூடாத உணவு வகைகள், தினம்தோறும் உட்கொள்ளும் மருந்துகளின் விவரங்கள் என்று பட்டியலிடாதக் குறையாகப் பாடம் எடுத்த பின்னும் குழந்தையைப் பிரிய மனமே இல்லாமல்தான் மூன்று நாட்களும் மாநாட்டிற்குச் சென்று வந்தான் குணா.
பாட்டியின் அரவணைப்பில் பாதுகாப்பாய் விடுதியில் இருந்த மதுமிதா, அவள் சொல்லும் கதைகளுக்கு “மா…மா…மாமா!” என்று தித்திக்கும் குரலில் ஏட்டிக்குப் போட்டி மழலையில் மொழிந்தும், கைதட்டி ஆரவாரம் செய்தும் குதூகலத்துடன் பொழுதுகளைக் கழித்தாள்.
மாநாட்டில் அவன் விளக்கிய வேதகாலத்துக் கணிதத்தின் கணிப்பு முறைகளை அனைவரும் மெச்சினர். பாராட்டு விழாக்கள், தொலைக்காட்சி பேட்டிகள் என்று விழா இனிதே நிறைவடைந்தது. தன் உழைப்பிற்கு எதிர்பார்த்த அனுபவமும் அடையாளமும் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான் குணா.
இந்தியாவின் பிரபலமான கல்லூரி நிறுவனங்களின் சார்பாக வந்திருந்த அதிகாரிகள், அவனைத் தங்கள் கல்லூரிகளுக்கு வந்து சிறப்புரை ஆற்றும்படி அழைத்தனர்.
மதுமிதாவை ஊரூராக அலைக்கழிக்க விரும்பாதவன் அன்பாக மறுத்தான்.
நித்தியமும் வேலையென்று ஓயாமல் ஓடிக்கொண்டிருந்த குணா, உறங்கிக் கொண்டிருக்கும் தாரகையின் பக்கத்தில் இளைப்பாற, சாவித்ரி தன் மனத்தில் பூட்டிவைத்த ஐயங்களை கேட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்தாள்.
“குணா! குழந்தைக்கு ரெண்டு வயசாகுது. இன்னும் ஏன் சரியா பேச்சு வரல?” மனத்தை உறுத்திய முதல் கேள்வியை இறக்கிவைத்தாள்.
“டெவலெப்மென்டல் டிலே மா!”
“ஹான் அப்படினா!” அவன் ஆங்கிலத்தில் ஏதேதோ சொல்கிறானே என்று புரியாமல் விழித்தாள்.
அன்னையின் கரங்களை ஆறுதலாக வருடியவன், “அவளுக்கு எல்லாமே கொஞ்சம் தாமதமாக வரும். ஆறு மாதத்தில் ஒரு குழந்தை தவழ்ந்தால், இவள் பத்து மாதத்தில்தான் தவழுவா!” அவளுக்குப் புரியும்படி விளக்கினான்.
“அதான் அவளுக்குத் தினமும் அவ்வளவு மருந்து மாத்திரை கொடுக்கறியா!” கேட்டவளின் முகத்தில் கவலை வழிந்தோடியது.
“அவளுக்கு மன…” தொடங்கியவன், அஷ்வினின் அறிவுரைகளை நினைவுகூர்ந்து, “இல்லம்மா! ஸ்பீச் தெரபி, பேச்சு வர பயிற்சி கொடுக்கறேன்.” சமாளித்தான்.
“அப்போ அந்த மருந்து மாத்திரை எல்லாம் எதுக்கு?” விடாமல் கேட்டு நச்சரித்தாள் சாவித்ரி.
“பயப்படாதே மா! அதெல்லாம் ஊட்டச்சத்து மருந்து; எதிர்ப்புச்சக்தி வளர தேவையான வைட்டமின் போஷாக்குக்காக!” பொய்காரணங்களை அடுக்கினான்.
ஆழந்த சிந்தனையில் இடவலமாகத் தலையசைத்தவள், “நம்ம பாரம்பரிய உணவுகளில் இல்லாத ஊட்டச்சத்தா இந்த மருந்துகளில் இருக்கப்போகுது! அதெல்லாம் வேண்டாம்! நான் குழந்தைக்கு ஆரோக்கியமான சாப்பாடு சமைச்சுத்தரேன்.” அக்கறையாகப் பேசினாள்.
மென்னகையுடன் அவன் நகர,
“குணா! மதுகுட்டி அன்னைக்கு எவ்வளவு பலமா தரையில விழுந்தா தெரியுமா?” அவன் கைப்பிடித்து தடுத்தவள்,
“அவ கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல டா. அடிப்பட்ட இடத்தில் எண்ணெய் தேய்க்கறப்ப கூடச் சிரிச்சிக்கிட்டே இருந்தா!” குழந்தை வலி உணரவில்லையே என்று ஆதங்கத்துடன் பேசினாள்.
அன்னையின் கவலை வழிந்தோடும் கன்னங்களை வருடியவன், “அவளுக்கு வலி தெரியாது மா! அது அவளுக்கு ஆண்டவன் கொடுத்த அற்புத வரம்!” விரக்தியாகப் பேசியவன் மறுபக்கம் சென்று படுத்துக்கொண்டான்.
மகன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று உறுதியாக நம்பியவள், சமயம் பார்த்துப் பேச தீர்மானித்தாள். அப்போது மதுமிதா சிணுங்க, அவளைத் தூக்கி மார்போடு அணைத்துத் தட்டிக்கொடுத்தவள்,
“நீ என்னதான் பொத்தி பொத்தி வளர்த்தாலும், தாய் பாசத்துக்கு ஈடாகுமா. யமுனாவோட அரவணைப்பு இல்லாததுனால தான் குழந்தை ஏங்கி போயிருக்கா.” தனக்குத் தெரிந்த விளக்கத்தைச் சொல்ல,
அதைக் கேட்டவன் செருக்கு ஒரு கணத்தில் குலைந்தது.
“ரெண்டு வயசு குழந்தை மட்டும்தான் தாய் பாசத்துக்கு ஏங்குமா? முப்பது வயசு குழந்தைக்கு அந்த ஏக்கம் இருக்காதா?” இமைக்காமல் கேட்டவனின் கண்கள் பனித்தன.
கணப்பொழுதில் தடுமாறியவள் வலது கையை நீட்டி, அருகில் வரும்படி கண்ணசைத்தாள்.
தாய்பாசத்தில் தோற்றுப்போனவன் அன்னை மடியில் தலைசாய்த்தான்.
தோளில் உறங்கும் குழந்தையின் கன்னத்தோடு கன்னம் அழுத்தி, மடியில் படுத்திருக்கும் மகனின் தலையை மென்மையாக வருடினாள் சாவித்ரி.
“உன்னை நம்பி தானேடா எல்லாருடைய எதிர்ப்புகளையும் மீறி யமுனாவை அனுப்பி வெச்சேன். ஜோசியர் சொன்னா மாதிரி ரெண்டு வருஷம் பொறுமையா இருந்திருக்கலாமே.”
அவளுக்குப் பதில்சொல்ல முடியாமல் துடித்தான்.
“இப்பவாவது நான் சொல்றத கேட்கறியா!” மெல்லத் தொடங்கினாள்.
“ம்ம்…சொல்லுமா!”
“பெற்றவர்கள் செய்த பாவம் பிள்ளைகளைச் சேரும்னு சொல்லுவாங்க. நம்ம குழந்தைக்குத் தோஷம் ஏதாவது இருக்கான்னு குடும்ப ஜோசியர…” அவள் முடிக்கும்முன், கடும்கோபம் கொண்டு எழுந்தவன்,
“இதுக்குத்தான் நான் ஊருக்கு வர விரும்புறதே இல்ல! எப்பப்பாரு ஜோசியம், ஜாதகம்னு…மதுகுட்டிக்கு ஒண்ணுமில்ல!” எரிந்து விழ,
“சரி! சரி! சத்தம் போடாதே! குழந்தை முழிச்சிக்கப் போறா!” தழைந்து போனவள்,
“எனக்காக அத்தை மாமாகிட்ட பேசுடா; ஆயிரம்தான் இருந்தாலும் அவங்களுக்கும் குழந்தையைப் பார்க்கணும்னு ஆசை இருக்கும்ல!” மனஸ்தாபங்களை மறந்து உறவாடு என்றாள்.
“நீ புரிஞ்சுதான் பேசுறையா மா! பாசம் இருக்குறவங்க ஏன் இத்தனை நாளா எங்கள பார்க்க வரல?” பொங்கியவன், திட்டவட்டமாக மறுத்தான்.
குணா அமெரிக்கா புறப்படும் நாள் நெருங்க, சாவித்ரியின் மனவுளைச்சல் அதிகரித்தது. விடுமுறையை நீட்டிக்கச் சொல்லிக் கேட்க அவளுக்குத் துணிவில்லை.
மகன் வந்த நோக்கம் முடிந்தது; இனி யாருக்காகவும் எதற்காகவும் கவலைப்படமாட்டான் என்று மனைவிக்கு நிதர்சனத்தைப் புரியவைத்தார் மனோகர்.
பொருட்களைப் பெட்டியில் அடுக்கியவன் கண்களில் அந்த மஞ்சள் நிற பாவாடை தாவணி தென்பட்டது. அது யமுனா தன் தங்கை சுதாவிற்காகத் தைத்தது. அதை வருடியவனுக்கு, அமெரிக்காவில் யமுனா அவனுக்கு விடுத்த சவால் நினைவுக்கு வந்தது. உறங்க வந்தவனின் இமைகளுக்கு இடையே நின்ற பெண், வாஞ்சையாக வம்பிழுத்தாள்.
‘மாமா! நான் சொன்னா மாதிரியே நடக்குதா!’
அவள் நினைவிலிருந்து மீளமுடியாமல் தவித்தான் குணா.
அன்று…
“அட மாமா! அமெரிக்காவில் வாத்தியார் கூட கிளாஸ் கட் பண்ணலாமா!” மதியமே வீடு திரும்பியவனைக் குறும்பாகக் கேட்டு வழிமறித்தாள் யமுனா.
“எத்தனைமுறை சொல்றது! நான் வாத்தியார் இல்ல; ஐ ஆம் ய காலேஜ் ப்ரொஃபெஸர்!” அழுத்தமாகத் திருத்திச் சொல்லி நகர்ந்தான்.
“ப்ரொஃபெஸர்!!! இந்த பந்தாவுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல!” உதட்டைச் சுழித்தபடி, அவனைப் பின்தொடர்ந்தாள்.
‘ஒரு கேள்வி உன்னைக் கேட்கிறேன், நீ சொல் அன்பே!
உடல் உயிரை தள்ளி வாழுமா, நீ சொல் அன்பே…’
பாடல் ஆடியோ ஸிஸ்டத்தில் ஒலிக்க, அவளை ஏறிட்டவன்,
“மேடமுக்கு லவ் ஃபீலிங்கா…” அதட்டலாகக் கேட்டான்.
“ஏன் இருக்கக் கூடாதா?” எதிர்த்துப் பேசினாள்.
அந்தப் பாடலை நிறுத்தி வேறொரு பாடலை இசைக்கவிட்டான்.
‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு
சொன்னால் புரியுமா அது கொஞ்சி கொஞ்சி
பேசுறது கண்ணில் தெரியுமா…’
“அப்போ இந்தப் பாடலைக் கேட்டு ஃபீல் பண்ணு அம்மு!” குறுநகையுடன் அவள் கன்னத்தை வருடி கண்சிமிட்டினான்.
“பெரிய பொன்னுமணி மாமான்னு நெனப்பு! ஃபீலிங்ஸ் எல்லாம் தானா வரணும்; இப்படிக் கட்டாயப்படுத்தக் கூடாது!” தர்க்கம் செய்தவள், பலகாரத் தட்டுடன் அவனருகில் வந்து அமர்ந்தாள்.
“இன்னைக்குப் பணியாரத்துல புதுசா ஒண்ணு சேர்த்திருக்கேன்; கண்டுபிடி பார்க்கலாம்!” கேட்டுக்கொண்டே ஊட்டிவிட்டாள்.
“ம்ஹூம் தெரியலடி!” மென்று ருசித்தவனின் கண்கள் மட்டும் மடிக்கணினியை அகலவில்லை.
“நீ நேத்து சுக்கினின்னு ஏதோ வெள்ளரிக்காய் மாதிரி வாங்கினையே; அதைத் துருவி போட்டிருக்கேன் மாமா; நல்லாயிருக்கா!” வினவினாள்.
“ம்ம்…!”
அவன் அலட்சியத்தில் கடுப்பானவள், “ரெண்டு நிமிஷம் என் முகம்பார்த்து பேசேன்!” அவன் தலையை வலிய தன் பக்கம் திருப்பினாள்.
“இப்படித் தினமும் பணியாரம் செஞ்சே உங்க அப்பாகிட்ட வாங்கின பணத்தை எல்லாம் செலவழிச்சிடலாம்னு பாக்குறையா!” அதட்டினான் அவன்.
“பிணைக்கைதி மாதிரி என்னை இங்க கூட்டிட்டு வந்துட்டு, வேறென்ன செய்ணும்னு எதிர்பாக்குற!” கிண்ணத்தை மேஜையில் ஓங்கி வைத்துவிட்டு எழுந்தாள்.
“வேலைக்குப் போய் நாலு காசு சம்பாதி!”
“பாஷை தெரியாத ஊருக்குக் கடத்திட்டு வந்துட்டு இப்படியெல்லாம் கொடுமை படுத்துவியா!”
மல்லுக்கு நின்றவளின் கரம்பிடித்துத் தன்னருகில் சுண்டி இழுத்தவன்,
“ஆங்கிலம் ஒரு மொழிதான் அம்மு! எம்.ஏ தமிழ் பட்டதாரி, உன்கிட்ட அவங்களால ரெண்டு வார்த்தை சேர்த்தா மாதிரி தமிழில் பேசமுடியுமா?” அவள் பலத்தைச் சுட்டிக்காட்டினான்.
பெண்ணவள் தலைகுனிந்து சிந்திக்க, அவளை அரவணைத்து,
“நான் சொல்லப்போற வேலையில், நீ யார்கிட்டயும் பேசவேண்டாம்!” நம்பிக்கையும் ஊட்டினான்.
“அப்போ மனசுல ஏதோ வச்சுக்கிட்டுத்தான் பேசுற!” அவன் இடுப்பில் கிச்சுகிச்சு மூட்டி சீண்டியவள், விவரங்களைப் பகிருமாறு உரைத்தாள்.
“உனக்குப் பிடிச்ச தையல்கலை தான் இந்த ஊருல ஃபேஷன் டிசைனிங்ன்னு சொல்லி, அதுக்குக் கல்லூரியில் பாடமெல்லாம் நடத்துறாங்க!” என்றவன்,
வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் என்றும் கல்லுரிக்குச் சென்றுவர ரயில் சேவைகள் இருப்பதாகவும் மடிக்கணினியில் சுட்டிக்காட்டி விளக்கினான்.
“அடி ஆத்தி! பக்கத்துத் தெருவிற்கு நடந்துபோனாலே, வீட்டுக்குத் திரும்பி வர வழி தெரியல; இதுல நான் ட்ரெயின்ல போகணுமா…அதுவும் தனியாகவா!” முடியவே முடியாது என்றாள்.
“உனக்கு நான் சாய்ஸே கொடுக்கல! சொன்னத செய்!” அவன் குரலில் ஆளுமை ஓங்கியது.
“ஆனா இதுக்கெல்லாம் நிறைய செலவாகுமே மா…மா…மாமா; என் படிப்பில் உனக்கு அவ்வளவு அக்கறையா?” பணம் செலவிடுவதில் மகா கஞ்சன் என்று அறிந்தவள், செல்லம் கொஞ்சி அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.
கிள்ளும் அவள் விரல்களைத் தன் கையில் குவித்தவன், “ஆசையப் பாரு…உன் அப்பாகிட்ட விவரங்களைச் சொல்லி பணம் அனுப்பச் சொல்லு!” என்று படிவங்களைத் தந்தவனின் கண்ணில் கர்வம் மின்னியது.
“ஊருக்கு வரதுக்கு முன்னாடிதானே, பூர்விக இடத்தை மொத்தமா என் பேருல எழுதி வாங்கிட்ட. உடனே இவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட, அப்பா எங்க மாமா போவாரு!” துக்கம் தொண்டையை அடைத்தது அவளுக்கு.
“அதான் உனக்கு ஒரு பைசா செலவாகாம கல்யாணம் ஆயிடுத்தே. சத்திரம், சாப்பாடுன்னு மிச்சமான பணத்தை எல்லாம் கொடுக்கச் சொல்லு; நகைகளை பணமா மாற்றி தரச்சொல்லு.” வழியா இல்லை என அவள் நுனிமூக்கை வருடினான்.
பனித்த கண்களோடு மறுப்பாகத் தலையசைத்தாள் அவள்.
“ஏன்…அப்படியே எல்லாத்தையும் சுதா கல்யாணத்துக்குப் பயன்படுத்திக்கலாம்னு நினைக்குறாரா உங்க அப்பா!” ஏளனமாகக் கேட்டு நகர்ந்தவனின் பிடிவாதத்தில் அவள் சிந்தியக் கண்ணீர் எல்லாம் உலர்ந்து போனது.
ஏழ்கடல் தாண்டி இருக்கும் மகளின் நலன்கருதி மாணிக்கம் அவள் கேட்டப் பணத்தை அனுப்பிவைத்தார்.
யமுனாவும் கல்லூரியில் சேர்ந்தாள். ரயிலில் சென்று வர ஏதுவாய் குணா அவளுக்கு மாதாந்திர அனுமதிச்சீட்டு வாங்கித் தந்து, இரண்டு நாட்கள் அவளுடன் பயணமும் செய்து ஏறுமிடம், இறங்குமிடம் என அனைத்தையும் காட்டினான்.
வகுப்பில் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து ஒப்பேத்தினாள். அவளின் தனித்துவமான தையல்கலை திறமையை மெச்சிய ஆசிரியர்களும் சக மாணவர்களும் வெகு விரைவில் சகஜமாகப் பழக அவளும் உற்சாகத்துடன் பயின்று வந்தாள்.
இரண்டு மாதத்தில் முதல்நிலை பாடங்களைச் செவ்வனே முடித்திருந்தவள், அன்று மாலை வீடு திரும்பிய மாமனிடம் வெற்றிப் புன்னகையுடன் சான்றிதழ் ஒன்றை நீட்டினாள்.
“ம்ம்…வாழ்த்துகள் அம்மு!” இறுக்கமாகக் கூறி, சான்றிதழை முன்னும் பின்னுமாக அலசினான்.
“அதை கொஞ்சம் சிரிச்ச முகத்தோட சொன்னாதான் என்ன?” கழுத்தை நொடித்தாள்.
“நான் படின்னு சொல்றப்ப கண்ணைக் கசக்கின…இப்போ மட்டும் இளிச்சிட்டு நிக்குற!” இடித்துக்காட்டியவன்,
“உனக்கே பெருமையா இருக்கா இல்லையா?” கேள்வியும் எழுப்பினான்.
மாமனின் சட்டை பட்டனை வளைத்து செல்லம் கொஞ்சியவள்,
“இல்லன்னு யாரு சொன்னா. அப்பாகிட்ட பணம்கேட்டு தொந்தரவு செய்யாதன்னு தானே அழுதேன்!” என்று குழைந்தாள்.
தழைந்திருக்கும் அவள் முகத்தை நிமிர்த்தியவன், “அவர் என்னமோ கடன் வாங்கித் தந்தா மாதிரி சலிச்சிக்குற. உனக்குச் சேர வேண்டிய பணத்தைத் தானே கொடுத்தாரு!” நியாயப்படுத்தினான்.
“நல்லாவே கணக்குப் போடுறீங்க வா…த்தி…யார்!” கண்சிமிட்டி வம்பிழுத்தாள்.
“அப்படிக் கூப்பிடாதன்னு சொல்லிருக்கேன்ல!” அவன் அடிக்க கையோங்கும் முன் அங்கிருந்து ஓடினாள்.
தன் உயிரானவளின் பெயரைச் சான்றிதழில் வருடியபடி பெருமிதத்தோடு புன்னகைத்தான் குணா.
இரவு உணவுக்குப் பின் மடிக்கணினியில் சில வடிவங்களை காண்பித்து, அவளுக்குப் பிடித்த ஒன்றையும் தேர்ந்தெடுக்கச் சொன்னான்.
“எதுக்கு மாமா இதெல்லாம்!” குழப்பத்துடன் திரையை மேலும் கீழும் ஓட்டினாள்.
“இனி என் அம்மு ஒரு தொழிலதிபர். உன் பெயரில் தொழில் அட்டை அச்சடிக்கத்தான்!” பெருமையாகச் சொல்லி அவளை இறுக அணைத்தவன்,
“இது நிறைய இந்தியர்கள் வாழும் பகுதி அம்மு! பண்டிகை நாட்கள், சடங்குகளுக்கு, நம்ம ஊர் ஆடை அலங்காரங்கள் விரும்புவாங்க. வகுப்புக்குப் போயிட்டு வர மிச்ச நேரத்துல, தையல் வேலையை கவனி. நந்தினி அவங்களோட நண்பர்களிடம் உன்னை அறிமுகம் செய்துவைப்பாங்க. இந்த ஊரில்தான் ஃபேஷன் டிசைனிங் படிக்குறன்னு தெரிஞ்சா, நிறைய பேரு நம்பி ஆர்டர் கொடுப்பாங்க!” நீண்ட விளக்கம் தந்தான்.
தனக்குப் பிடித்தமான தையல் வேலையைச் செய்ய அவளுக்கும் விருப்பம்தான்.
சம்மதம் என்று அவன் தோளில் சாய்ந்து விரல் கோர்த்தவள், “அப்போ எனக்கு வரும் வருமானத்தில் அப்பாகிட்ட வாங்கின பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடலாமா மா…மா…மாமா!” யாசிக்கும் குரலில் வினவினாள்.
வெடுக்கென்று எழுந்தவன், “வருமானத்தில் ஒரு சென்ட் குறையாம எல்லாம் எனக்குக் கணக்குக் காட்டணும். ஒரு டாலர் அவருக்குப் போச்சுன்னு தெரிஞ்சுது…” விரல் நீட்டி எச்சரித்தான்.
கோபாக்கினியாகத் தன்னையே ஏறிடும் பெண்மானை பதிலுக்கு முறைத்தவன், “வீட்டைவிட்டு ஓடிப்போக நெனச்சவளுக்கு இப்போ மட்டும் அப்பா பாசம் பொத்திக்கிட்டு வருதா!” குத்தலாகப் பேசி நகர்ந்தான்.
எலியும் பூனையுமென பல நேரங்களிலும், நகமும் சதையுமென சில நேரங்களிலும் நாட்கள் ஓடின. நந்தினியின் உதவியோடு யமுனாவிற்கு நிறைய தையல் ஆர்டர்கள் வந்தன. அவளின் நேர்த்தியான வேலைப்பாட்டிற்குக் கிடைத்த பாராட்டுகளும் புகழாரங்களும் குணாவின் காதிலும் விழுந்தன.
அப்படியொரு நாள் வாடிக்கையாளரிடம் பேசிவிட்டு கதவை அடைத்து உள்ளே வந்தவளை வழிமறித்தவன்,
“வரவர மேடத்தை கையிலே பிடிக்க முடியறது இல்ல! ஹூம்…பணியாரம் சாப்பிட்டு ரெண்டு மாசம் ஆச்சு!” பார்வையை வேறுபக்கம் சுழலவிட்டு சீண்டினான்.
“யோவ் மாமா! நீ தானே நாலு காசு சம்பாதின்னு தொல்லை செய்யற!” அவன் புஜத்தில் நறுக்கென்று கிள்ளினாள்.
“என்னடி மரியாதை எல்லாம் குறையுது!” பதிலுக்கு அவள் தாடையை அழுந்த குவித்தவனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
“என் அம்மு பாஷை தெரியாத ஊருல படிக்கறது, வேலை செய்யறது எல்லாம் பார்க்க எவ்வளவு பெருமையா இருக்குத் தெரியுமா” நேசத்துடன் அவள் நெற்றியில் முட்டினான்.
“நிஜமாவா மாமா!” பூரித்தாள் பேதை.
“ம்ம்..” உதடு பிரிக்காது புன்னகைத்தான்.
“அப்போ நான் உன்கிட்ட ஒண்ணு காட்டுவேன்! கோபப்படமாட்டையே!”
அவன் சரி என்று தலையசைத்ததும் சிட்டென்று பறந்தாள்.
மஞ்சள் நிற பாவாடை தாவணி ஒன்றை விரித்து, ஆளுயுரத்துக்கு உயர்த்திக் காட்டி இடவலமாய் அசைந்தாடியவள்,
“நல்லா இருக்கா மா…மா…மாமா!” செல்லம் கொஞ்சினாள்.
“அருமையா இருக்கு அம்மு!” அதன் நுண்ணிய வேலைப்பாடுகளை ரசித்துப் பாராட்டினான்.
“சுதாவுக்காகத் தெச்சிருக்கேன் மாமா! என் கல்யாணத்தில் இந்த மாதிரி ட்ரெஸ் போட்டுக்கணும்னு ஆசைப்பட்டா!” அவள் சொன்னதுதான் தாமதம்; அவன் முகம் சுருங்கியது.
“உன்னோட அப்பாவுக்கு எதுவும் கொடுக்கக் கூடாதூன்னு சொன்னதுனால, இப்போ தங்கைக்குச் செஞ்சு சரிக்கட்ட பாக்குறையா!” அழுத்தமாகக் கேட்டு நகர்ந்தான்.
பிறந்த வீடு, பணம் என்ற பேச்செடுத்தாலே சண்டைக்கு வருகிறானே என்று எரிச்சல் கொண்டவள்,
“போ போ…பணம் காசு எல்லாம் பெருசு இல்லன்னு ஒரு நாள் புரிஞ்சுக்கிட்டு நீயே உன் கையால இதை சுதாவுக்குக் கொடுப்பப் பாரு…
…அப்போ இந்த யமுனா நெனப்பு வந்து கண்கலங்கி நிப்ப…ஆனா உன் கண்ணைத் துடைச்சுவிட யமுனா பக்கத்துல இருக்கமாட்டா!” விரக்தியில் சவால்விட்டு அறைக்குள் சென்று தாளிட்டாள்.
இன்று….
கண்கலங்கி நின்றான்!
மஞ்சள் நிற பாவாடை தாவணியை வருடியவன் கண்கலங்கித்தான் நின்றான்.
‘நானே இதை சுதாவுக்குக் கொடுக்கறேன் அம்மு! என் அம்முகிட்டத் தோற்பதில் எனக்கு எந்த வெட்கமும் இல்ல!’ தனக்குத்தானே முணுமுணுக்க,
“மா…மா…மாமா!” தூக்கம் கலைந்து மெத்தையில் அமர்ந்த மதுமிதா பிஞ்சுக் கரங்களை நீட்டி அவனிடம் தாவிக்கொண்டாள்.
தன் கன்னத்தில் வழிந்தோடும் நீர்வீழ்ச்சியில் கோலமிட்ட அந்தக் குட்டி விரல்களில் யமுனாவின் ஸ்பரிசத்தை உணர்ந்தான். மதுமிதாவின் கருவிழியில் யமுனாவின் உருவம் கண்டவன், குழந்தையை மார்போடு சேர்த்து இறுக அணைத்தான்.
அவளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்துமுடித்து ஹாலுக்கு வந்தவன், சாவித்ரியிடம், யமுனா தைத்தப் பாவாடை தாவணியைக் காட்டி அத்தை வீட்டிற்குச் சென்று வருவதாகக் கூறினான். அதைக் கேட்டவளுக்கு அளவில்லா சந்தோஷம்.
உள்ளத்தால் நெகிழ்ந்தவள், பூ, பழம், இனிப்புகள் கூடிய சீர் தட்டு செய்து அதைச் சுதாவிடம் கொடுக்கும்படி கூற, குணாவும் மறுப்பு சொல்லாமல் தலையசைத்தான்.
மகனையும், பேத்தியையும் சுமந்து செல்லும் காரை பார்த்தபடி முன்வாசலில் நின்றாள் சாவித்ரி. யமுனா திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபங்களுக்கு, சுதா திருமணத்தில் நல்லதொரு தீர்வு ஏற்பட வேண்டுமென்று பிரார்த்தித்தாள்.
மூத்தவள் வைத்த பந்தயத்தில் தோற்றவன்,
இளையவள் இதயத்தில் இடம்பிடிப்பானா -பூர்வீக
இடத்தைக் கேட்டு இம்சித்த மருமகனை,
மாமன் மனமிறங்கி மன்னிப்பாரா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…


Please Comment Here