17 hits
ஓம் ஸ்ரீ சாய்ராம்
பயணம் முடித்து வீடு திரும்பிய மாமன்,
பதுமை நிகழ்த்திய பாசப் போராட்டத்தில்,
பகை மறந்து அன்பாக உறவாடினானா – இல்லை
பங்கம் விளைவிக்கும் ஆவேசம் கொண்டானா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில் அத்தியாயம் 07ல்…
டெல்லி பயணம் முடித்து வீடு திரும்பியவன் “மதுகுட்டி! மதுகுட்டி” என்று ஆசையாக அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தான்.
“அவ இங்க இருந்தாதானே உன் குரல் கேட்டு ஓடி வருவா!” மகன் கண்களில் மின்னிய தவிப்பை ரசித்தபடி சொன்னவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு.
“என்னது வீட்டுல இல்லையா?” அவன் பதற,
“உன் பொண்ணு சரியான ஆள்மயக்கி டா! ரெண்டு நாளா சுதாவோட அவங்க வீட்டுல தான் முழுநேரமும் இருக்கா; பாட்டிகிட்ட தூங்க மட்டும்தான் வருவா!” பேத்தி புராணம் பாடினாள் சாவித்ரி.
“குழந்தையை வெளியாளுங்க கிட்ட விடாதேன்னு சொன்னேன்ல!” எரிந்து விழுந்தான் குணா.
“வெளியாளுங்களா!” ஏளனமாகச் சிரித்தவள், “சுதா நம்ம யமுனா கூடப்பிறந்தவ…கிட்டத்தட்ட மதுமிதாவுக்கு அம்மா மாதிரி!” உறவின் ஆழத்தை மகனுக்குப் புரியவைத்தாள்.
அதற்கெல்லாம் அசராதவன் வாசலை நோக்கி வேகநடையிட,
“நில்லுடா குணா! சுதாவே குழந்தையை அழைச்சிட்டு வந்திடுவா!” மகன் வேகத்திற்கு ஈடுகொடுத்துப் பின்னால் ஓடினாள் சாவித்ரி.
சுதா இருசக்கர வாகனத்தில் தான் வழக்கமாக வருவாள் என்று அறிந்தவன்,
“டூவீலர்ல அழைச்சிட்டு வந்தா குழந்தைக்கு டஸ்ட் அலர்ஜி ஆகும்னு தெரியாதா உங்களுக்கு!” குறைகூற,
மகன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கழுத்தை நொடித்தவள்,
“ஊர் உலகத்துலேயே நீ மட்டும்தான் அதிசயமா பிள்ளை பெத்தா மாதிரி பேசுற! விழுந்து எழுந்து வளர்ந்தால் தான் குழந்தைக்கு எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும்!” நிதானமாக அனுபவப்பாடம் எடுத்தாள்.
எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் நகர்ந்தான் குணா.
சாவித்ரியும் மகனை விடுவதாக இல்லை.
இரண்டு நாட்களாகச் சுதாவிடம் கண்கூடாகப் பார்த்தப் பொறுப்புணர்ச்சியைப் பற்றிப் பெருமையடித்தவள்,
“சுதாவுக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் மட்டும் அதிகமா இல்லேன்னா, அவளையே உனக்கு ரெண்டாம் தாரமா கல்யாணம் செய்து வெச்சிருப்பேன்!” மனத்தின் ஏக்கத்தை எடுத்துரைத்தாள்.
அம்மாவின் எண்ணோட்டத்தில் திடுக்கிட்டவன்,
“இப்போ எதுக்குப் புலம்புற! இனி என் வாழ்க்கையில் எல்லாமே மதுமிதா மட்டும்தான்; அவளுக்கும் அப்படித்தான். எங்களுக்கு நடுவுல யாரும் வரவேண்டாம்.” தீர்மானமாக உரைத்தான்.
“யாரும் வேண்டாம்னா என்னை ஏன் ஊருக்கு வந்து உன் மகளைப் பார்த்துக்கச் சொல்ற?” தர்க்கம் செய்தவள், ஒரு ஆண்மகன் காலத்திற்கும் பெண் குழந்தையைத் தனியாக வளர்ப்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என்று திட்டவட்டமாக வாதாடினாள்.
“ஒரு பாட்டியா, தாத்தாவா, சித்தியா என் குழந்தைகிட்ட தாராளமா உறவாடுங்க. ஆனா யாரும் என் யமுனா இருந்த இடத்தை நிரப்ப முயற்சி செய்யாதீங்க!” அழுத்தமாகக் கூறி புறப்பட்டான்.
மறுபடியும் மாமன் வீட்டிற்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதை எண்ணி நொந்தவன், என்ன நடந்தாலும் நிதானம் கடைப்பிடிக்க வேண்டுமென்று தனக்குத்தானே அறிவுறுத்திக் கொண்டான்.
வரவேற்பறையில் யாரும் இல்லாததைக் கவனித்தவனுக்கு மதுமிதாவின் சிணுங்கல்கள் மட்டும் தெள்ளத்தெளிவாகக் காதில் விழுந்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு குழந்தையின் முகத்தைத் தரிசிக்கும் ஆவலில், மழலைமொழி கேட்கும் திசை நோக்கி நடந்தான்.
“இப்போ மீன் மெல்ல மெல்ல மதுகுட்டி கை மேல ஏறி கழுத்துல கிச்சுகிச்சு மூட்டுதாம்!”
நீர் நிரம்பிய அகன்ற வாளி ஒன்றில் அமர்ந்திருக்கும் மதுமிதாவிடம் சொல்லிக்கொண்டே சோப்பை மெதுமெதுவாக நகர்த்தினான் கிஷோர்.
அதில் குதூகலம் அடைந்த குழந்தை கலகலவென்று சிரிக்க, கிஷோரின் மென்பேச்சையும் விளையாட்டையும் ரசித்த சுதாவின் முகம் நாணத்தில் சிவந்தது.
தன்னவளைப் பார்வையால் ஊடுருவியவன், “இப்போ மீன் அப்படியே மதுகுட்டி கழுத்துலேந்து குதிச்சு, சுதா சித்தியைக் கிச்சுகிச்சு மூட்டுமாம்!” அவன் கரங்கள் தன்னவளின் கழுத்தில் குறும்புகளைத் தொடர,
அச்சமயத்தில் அறைக்குள் நுழைந்த குணாவின் முகமும் சிவந்தது!
கோபத்தால்!!!
“சுதா! என்ன செய்யற?” வீடே அதிரும் அளவிற்கு உறுமினான்.
அதில் திடுக்கிட்டு எழுந்தவள், “மாமா…மாமா! பீச்சுக்குப் போயிட்டு வந்தோம்…குழந்தை உடம்பு முழுக்க ஒரே மண்ணு…அதான்…” திக்கித்திணறினாள்.
“நீங்க பார்க்கு பீச்சுன்னு ஊர்சுற்றி லவ் பண்ண, என் பொண்ணு என்ன விளையாட்டுப் பொம்மையா!” கடிந்துபேசி கிஷோரை முறைத்தவன், மதுமிதாவை வாளியில் இருந்து தூக்கிக்கொண்டான்.
வலதுபுறத்தில் இருந்த துண்டால் குழந்தையைப் போர்த்தியவனுக்கு, கிஷோர் சற்றுமுன் குழந்தையிடம் செய்த சிலுமிஷங்கள் கண்முன் வர, அவன் மேல் எரிச்சல் அதிகமானது.
குணாவின் மனநிலை அறியாதவள், “குழந்தையை விடுங்க மாமா! அவ இன்னும் குளிச்சு முடிக்கல!” என்று கையை நீட்டினாள்.
“நீங்க குளிக்க வெச்ச அழகத்தான் பார்த்தேனே!” ஏளனமாகச் சுட்டிக்காட்டி, அவர்களை வெளியே போகும்படி கர்ஜித்தான்.
இளஞ்ஜோடிகள் அமைதியாக நகர குழந்தையை இறக்கிவிட்டு முத்தமிட்டவன்,
“மன்னிச்சிரு டா மதுகுட்டி! அப்பா இனிமே உன்னவிட்டு எங்கேயும் போகமாட்டேன் செல்லம்!” என்றான்.
வாளியில் வெதுவெதுப்பான நீரை நிரப்பினான்.
குழந்தைக்கு உபயோகித்த சோப், குளிர்ந்த தண்ணீர், அசட்டுத்தனமான விளையாட்டு என்று அவர்கள் அலட்சியத்தைப் பற்றி முணுமுணுத்துக் கொண்டே அவளைக் குளிப்பாட்டினான்.
யார் குளிப்பாட்டினால் என்ன என்பதுபோல, மதுமிதா எவ்வித கவலையுமின்றி “மா…மா…மாமா” என்று ஆனந்தமாக நீராடினாள்.
பத்து நிமிடத்தில் குழந்தையுடன் வெளியே வந்தவனுக்குப் பிரச்சினையை வளர்க்க விருப்பமில்லை. அமைதியாக அவன் வாசலை நோக்கி நடக்க,
“உன் மனசுல என்னடா நெனச்சுகிட்டு இருக்க? ஒழுங்கா மாப்பிள்ளைகிட்ட மன்னிப்புக் கேளு!” வழிமறித்தாள் மீனாட்சி.
“மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க அத்தை! நான் இந்த வீட்டு மூத்த மருமகன்; அதை மறந்துடாதீங்க!” தன் உரிமையை நிலைநாட்டி,
“உங்க மாப்பிள்ளை யாரு என் மகளைக் குளிப்பாட்ட? அதான் கேள்வி கேட்டேன்!” என்றான் அதட்டலாக.
“உலகமகா ராணி இவ!” குழந்தையின் கன்னத்தில் இடித்தவள், “மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையைப் பெத்துட்டு உனக்கு இவ்வளவு தலைக்கனம் ஆகாதுடா!” மீனாட்சி கோபத்தில் வார்த்தையை விட்டாள்.
உறைந்து நின்றான் குணா.
“அது…மாமா…மதுமிதா அம்மாவைத் தெரியாம கடிச்சிட்டா!” சுதா மென்றுவிழுங்க,
மீனாட்சியின் வலது கை மணிக்கட்டைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மெல்லிய வெள்ளைத் துணியைக் கவனித்தவனின் உதடுகள் கர்வத்தில் வளைந்தது.
“என் பொண்ணு புத்திசாலி அத்தை! அவளுக்கு நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு தெரியும்!” பெருமிதத்துடன் குழந்தையின் கன்னத்தோடு கன்னம் உரசினான்.
“அப்படிச் சொல்லி இன்னும் எத்தனை நாளைக்கு ஊர ஏமாத்தப் போற! சுதா எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டா!” சலிக்காமல் வாதாடி அவனை மடக்கினாள் மீனாட்சி.
“ஓ! எங்களை வேவு பார்க்கத்தான் வீட்டுக்கு வந்தியா!” சுதாவைச் சுட்டெரிக்கும் பார்வையால் வீழ்த்தி மீனாட்சி பக்கம் திரும்பியவன்,
“இன்னும் உங்க பொண்ணோட கல்யாணம் முடியல! மூணு வாரத்துல என்ன வேணும்னாலும் நடக்கலாம்!” ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தான்.
பெண்ணின் திருமணம் என்றதும் மீனாட்சியின் சப்தநாடியும் அடங்கியது.
இறுமாப்புடன் வெளியேறும் மாமன் அருகே ஓடி வந்தாள் சுதா.
“மாமா! நான் வேவு பார்க்க எல்லாம் வரல; மதுமிதாவிற்கு அத்தை மருந்து கொடுக்கும்போது சொன்னதை, அம்மாகிட்ட சாதாரணமா சொன்னேன். கோபத்துல அம்மா அதை மிகைப்படுத்திப் பேசுறாங்க!” என்றவள்,
அவன் கைகளை இறுகப்பிடித்து, “யமுனா அக்கா இல்லாத குறை தீர்த்து, நீங்கதான் எங்களோட கல்யாணத்த முன்ன நின்னு நடத்தணும் மாமா!” கெஞ்சலாகக் கேட்டாள்.
கிஷோரும் சுதா சொல்வதற்கு எல்லாம் மௌனமாகத் தலையசைத்தான்.
‘சரியான தலையாட்டி பொம்மை!’ கிஷோரைப் பார்த்து நக்கலாகச் சிரித்தவன், சுதாவின் கன்னத்தில் மிருதுவாகத் தட்டிக்கொடுத்து, சம்மதம் என்று கண்சிமிட்டினான்.
பெண்மானின் வஞ்சகப் பேச்சை நம்பி தலையாட்டிவிட்டுப் போகும் இவனுக்கு, கடல் உள்வாங்குவது சுனாமியாகப் பொங்குவதற்கு என்பதை யார் சொல்லிப் புரியவைப்பது.
காரில் ஏறி அமர்ந்தவன், நண்பனிடம் பேசினால் மனபாரம் குறையும் என்று நினைத்தான்.
“பாட்டிய கடிக்கற! இரு! அஷ்வின் மாமாகிட்ட சொல்றேன்!” அருகில் அமர்ந்து கைதட்டும் மதுமிதாவிடம் கண்சிமிட்டி, அஷ்வினை அழைத்தான்.
“அஷ்வின்! இன்னைக்கு மாமா வீட்டுல….” குணா தொடங்கிய மறுகணமே,
“டேய்! உன்ன பேஷண்ட்டா(பொறுமயா) இருக்கச் சொன்னா, இப்படிப் பேஷண்ட்(நோயாளி) மாதிரி நடுஜாமத்துல ஃபோன் செஞ்சு தொல்லை செய்யறியே!”
அமெரிக்காவில் அதிகாலை என்று உணர்ந்தவன் அசடுவழிந்தானே தவிர, தொந்தரவு செய்கிறோம் என்ற தயக்கம் சிறிதுமின்றி மனத்திலிருந்த அத்தனையும் கொட்டித் தீர்த்தான்.
“டேய்! அமெரிக்காவில் தான்டா மற்றவங்களோட குழந்தையை யாரும் அநாவசியமா தொடமாட்டாங்க. நம்ம ஊருல இதெல்லாம் சகஜம் நண்பா!” அஷ்வின் சலித்துக்கொள்ள,
“நீதானே டா மதுமிதாவை யாரும் தேவையில்லாம தொட்டுப்பேச அனுமதிக்காதன்னு சொல்லுவ. வெவ்வேறு ஊரா இருந்தாலும் மனுஷங்க, மனசுல என்ன நெனச்சுகிட்டு பழகுறாங்கன்னு தெரியாதுல!” பெண் குழந்தை, அதுவும் வாய்பேச இயலாத நிலையில் என்று குணா வருந்த,
“புரியுது குணா! மனசப்போட்டு குழப்பிக்காத! இன்னும் கொஞ்சம் நாள்தானே!”
ஊருக்கு வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நண்பனின் உண்மை உணர்வுகளை மதித்துப் பேசினான்.
குழந்தை மீனாட்சியைக் கடித்தது பற்றியும் விளக்கினான்.
அதுவும் அவள் மூன்று நாட்களாக குணாவைப் பிரிந்திருந்த ஏக்கத்தில் செய்திருப்பாள் என்று மருத்துவரீதியாக விவரித்தான்.
நண்பனிடம் பேசியதில் லேசான மனதுடன் வீடு திரும்பினான் குணா.
சாவித்ரி நித்தியம் சுதாவைப் பற்றி பறைசாற்றினாலும் பொறுமையாகச் செவிசாய்த்தான் குணா. அவன் கல்லூரி வேலையாக வெளியே சென்ற போதெல்லாம், சுதா வீட்டிற்கு வந்து மதுமிதாவை அக்கறையாகக் கவனித்துக்கொண்டாள்.
சுதாவின் வேண்டுகோளுக்கு இணங்கி, கிஷோர் குணாவிடமிருந்து தள்ளியே இருந்தான்.
அன்று குணா முழுநேரமும் வீட்டில் இருந்தான். மதியம் ஒரு மணி ஆனதும், மதுமிதாவைப் பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக சாவித்ரியிடம் கூறிப் புறப்பட்டான்.
“இப்போதான் மதுமிதா முழுநேரம் பள்ளிக்குப் போறாளே டா!” சாவித்ரி நினைவூட்ட,
“என்னம்மா சொல்ற?” குழம்பினான் குணா.
சுதா உன்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்னு சொன்னாளே!” சாவித்ரி மென்றுவிழுங்க, அவளைப் புதிராகப் பார்த்தான் குணா.
பொறுமை ரேகைகள் மகன் முகத்திலிருந்து மெல்ல மெல்ல மறைய, சுதா அவனிடம் எதுவும் சொல்லவில்லை என்று புரிந்துகொண்டாள்.
“அது…குணா…பதட்டப்படாம கேளுடா!” பீடிகையுடன் தொடங்கினாள்.
“பள்ளிக்கூடத்தில் மதுமிதா ஒரு குழந்தையோட கையைக் கடிச்சிட்டா…”
‘மறுபடியுமா’ அவன் யோசிக்க,
மகனின் மௌனத்தைத் தனக்குச் சாதகமாக்கி, அனைத்தையும் விளக்கினாள் சாவித்ரி.
அந்தக் குழந்தையின் அம்மா, மதுமிதா மனநலம் சரியில்லாதவள் என்று குறைகூறி, இப்படிப்பட்ட குழந்தைகளை அவர்களுக்கென்ற பிரத்தியேகமான பள்ளியில்தான் சேர்க்கவேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறினாள்.
அதைக்கேட்டும் மகன் முகத்தில் மரண அமைதி.
ஆழ்ந்து சுவாசித்தவள் மிச்சத்தையும் சொன்னாள்.
என்ன செய்வதென்று புரியாமல் தானும் சுதாவும் தவிக்க, அங்கு வந்த வேறொரு குழந்தையின் தாய் இவர்களுக்காகப் பரிந்துப் பேசியதை விளக்கினாள்.
அப்பெண் மதுமிதாவின் நிலைமையை மருத்துவரீதியாக விளக்கி, மற்ற குழந்தைகளுடன் சகஜமாகப் பழகவிடுவது மிக அவசியம் என்றும் வாதாடி, குழந்தையை முழுநேரமும் அந்தப் பள்ளிக்கூடத்திலேயே விடச்சொன்னதையும் குறிப்பிட்டவள்,
“சுதா! இதைப்பற்றி உன்கிட்ட ஒண்ணுமே சொல்லலியா!” வினவினாள்.
அச்சமயம் சுதா வீட்டிற்குள் நுழைய,
“என்னடி சுதா! குணாகிட்ட பள்ளியில் நடந்த எதுவுமே சொல்லலியா?” அதிகாரமாகக் கேட்டுத் தப்பித்துக்கொள்ள முயன்றாள் சாவித்ரி.
குணாவின் பார்வை சுதாவின் பக்கம் திரும்பியது.
“அப்படிப் பார்க்காதீங்க மாமா! சொல்லக்கூடாதூன்னு இல்ல!” இமைகளைத் தாழ்த்தி,
“அன்னைக்கே அம்மா மதுகுட்டியைப் பற்றி பேசியதற்குக் கோபப்பட்டீங்க…” அவள் இழுக்க,
மீனாட்சி பெயர் அடிப்பட்டால், மற்ற விஷயங்களும் வெளியே வருமே என்று பதறியவன்,
“சரி சரி! விடு! இன்னும் பத்து நாட்கள் தானே!” தழைந்து போனான்.
பெண்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டு நகர்ந்தனர்.
சுதாவின் திருமண நாளும் வந்தது. மெஹந்தி விழாவிற்கு அக்கா தைத்த மஞ்சள் நிற பாவாடை தாவணியில் ஜொலித்தாள் திருமகள்.
அம்மாவின் ஸ்பரிசம் அதில் உணர்ந்தவள் போல, மதுமிதா அன்று சுதாவின் மடியைவிட்டு இறங்கவே இல்லை. தாவணியின் தலைப்பை இறுகப் பற்றிக்கொண்டு அவளுடனே ஐக்கியமானாள்.
அதைப் பார்த்தவன் குற்றவுணர்ச்சியில் குமுறினான். யமுனாவின் நினைவுகளைத் தந்து வாட்டியெடுத்தது அந்தப் புத்தாடை.
நடந்து முடிந்ததைப்பற்றி வருந்தி பிரயோஜனம் இல்லை என்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள முயற்சித்தாலும், திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் யமுனாவைப் பற்றி பரிதாபமாக விசாரிக்க, அவர்களுக்குப் பதில் சொல்லியே சலித்துப்போனான் குணா.
சாவித்ரி பேத்தியை இடுப்பில் சுமந்து கம்பீரமாக மண்டபத்தை வலம் வர, மீனாட்சி பேத்தி இருக்கும் பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை; வாங்கிய கடி அப்படி.
ஆண்கள் இருவரும் குணாவிடமிருந்து விலகியே இருந்தனர். அந்தப் பட்டியலில் கிஷோரும் சேர்ந்துகொண்டான் என்று தான் சொல்லவேண்டும்.
சுதா பாசமாக அழைத்த ஒரே காரணத்திற்காகத் திருமண வைபவத்தில் கலந்துகொண்டான் குணா. விழா செவ்வனே முடிந்து தம்பதிகள் புது வாழ்க்கையை நோக்கி நகர்ந்தனர்.
மதுமிதாவைத் தக்க சமயத்தில் அனுமதித்து, தேவையான பயிற்சிகளைத் தந்த பள்ளி மேலாளரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்தான் குணா.
மதுமிதாவை மடியில் அமர்த்தியபடி காரின் முன்சீட்டில் உட்கார்ந்ததும்,
“டேய் குணா! அங்க பாருடா!” கூக்குரலிட்டாள் சாவித்ரி.
“அதோ! அந்தப் பொண்ணுதான் நம்ம மதுகுட்டிக்காக அன்னைக்கு அப்படி வாதாடினா!” என்று பள்ளி வாசலை நோக்கி கைகாட்டினாள்.
ஏறக்குறைய மதுமிதா வயதில் இருக்கும் குழந்தையின் கைப்பிடித்து, பள்ளியை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் அவள்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஏற்ப காட்டன் சுடிதார், கூலிங்க் க்லாஸ் அணிந்து நிமிர்வாக நடந்தவளைப் பார்த்தாலே தைரியமான பெண் என்று கணிக்க முடிந்தது அவனுக்கு.
“வா டா! உனக்கு அறிமுகம் செய்து வைக்கறேன். நீயும் ஒரு வார்த்தை நன்றி சொல்லு! அவ பேரு…பேரு…” யோசித்த சாவித்ரி,
“பவின்னு நினைக்கறேன்!” என்றாள்.
“அதெல்லாம் வேண்டாம் மா! நேரமாகுது கிளம்பலாம்!” மறுத்தான் குணா.
“அதுக்கில்லடா! அவ பேசினத பார்த்தா, பெரிய டாக்டரா இருப்பான்னு தோணுது. நம்ம மதுகுட்டிக்கு என்னன்னு நீயும் ஒரு வார்த்தை கேட்கலாமே!” ஆலோசனை சொன்னவளை அனல்பார்வை பார்த்தான்.
“மதுகுட்டிக்கு ஒண்ணுமில்ல!” தீர்க்கமாகச் சொல்லி வண்டியைச் செலுத்தினான்.
அம்மா சொற்படி ஒருமுறை அவளை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால், பிற்காலத்தில் அவளிடம் தன் வாழ்க்கையைப் பணயம் வைக்க வேண்டிய அவசியம் வந்திருக்காதோ என்னமோ.
நாட்கள் நாழிகைகளாக, ஊருக்குப் புறப்படும் நாளும் வந்தது. ஆறு மாதம் தனியாக இருக்கப்போகும் கணவருக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாள் சாவித்ரி.
மாணிக்கம் குடும்பத்துடன் அங்கு வர, அண்ணன் குடும்பத்தை ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
தங்களை வழியனுப்ப வந்திருப்பதாக நினைத்து சாவித்ரி அளவளாவிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்த குணாவின் முகம்தான் வியர்த்தது.
“மாமா! எனக்கு சீர் கொடுக்காமலேயே ஊருக்குக் கிளம்புறியே!” சுதா ஒரு தினுசாய் குழைய, குணா திகைத்துப் போனான்.
“உனக்கில்லாத சீரா! நீ என்ன கேட்டாலும் குணா தருவான் டி ராசாத்தி!” அவள் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்தவள், மகனின் நிலைமை புரியாமல் குந்திதேவி போல வாக்கு கொடுத்தாள்.
“ஓ அப்படியா அத்தை!” ஏளனமாக உரைத்தவள்,
“மதுமிதாவை என்கிட்ட விட்டுட்டுப்போகச் சொல்லுங்க!” நேரடியாகக் கேட்டாள்.
“என்னடி சொல்ற?” உறுமினான் குணா.
“ஆமாம்! குழந்தையைத் தத்தெடுக்கத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்துட்டுதான் வந்திருக்கோம்!” என்று கிஷோர் ஆவணங்களை நீட்டினான்.
“என்ன மாப்பிள்ளை இது. மனவளர்ச்சி இல்லாத குழந்தையைத் தத்தெடுத்துக்க உங்களுக்கு என்ன தலையெழுத்தா?” அவர்கள் ரகசிய திட்டம் அறியாத மீனாட்சி பதற,
“நீங்க சும்மா இருங்க அத்தை! நாங்க தெளிவாதான் யோசிச்சிட்டு வந்திருக்கோம்!” கிஷோர் தீவிரக்குரலில் கூறித் தடுத்தான்.
‘இந்தத் தலையாட்டிப் பொம்மை இவ்வளவு வேலை செய்வானா!’ மனத்தில் அசைப்போட்டவன், நிதானம் கடைப்பிடி எனத் தனக்குத்தானே நினைவூட்டிக்கொண்டு,
“மதுமிதா என் குழந்தை; அப்பா நான் அவளுக்கு இருக்கேன் சுதா!” மென்மையாகப் பேசி அவள் கன்னத்தை வருடினான்.
“கையை எடுங்க மாமா! குழந்தைக்கு உங்ககிட்ட பாதுகாப்பு இல்ல! அதை நிரூபிக்கத் தேவையான எல்லா ஆதாரமும் வெச்சிருக்கேன்!” எகிறினாள் அவள்.
சித்தியின் குரல் கேட்டு, பல்லாங்குழி பலகையோடு வெளியே வந்தாள் மதுமிதா.
ஆனால் அவள் அவளாக இல்லை. குழந்தை எடுத்துவைத்த ஒவ்வொரு அடிக்கும், முகம், கை, கால் என வேகமாக சிவப்புக் கொப்பளங்கள் பரவ,
“மா…மா…மாமா!” என்று குணாவின் மடியில் விழுந்து சரிந்தாள், அவர்களின் தேவதை.
உலகமே நீ தான் என்று உருகும் அவன் பின்,
மா…மா…மாமா என்று செல்வாளா – தமக்கை
உதிரத்தில் உதித்தவளே என்று உறவாடும் அவளிடம்,
மறந்த அன்னை முகம் காண்பாளா – தேடுவோம்
உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்…


Please Comment Here